முனைவர் சி. சேதுராமன்,
தமிழாய்வுத்துறைத் தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.),
புதுக்கோட்டை.
Malar.s[email protected]

 
எந்தமிழ்த் தாய்பெற் றெடுத்த கவிமகனே
எல்லோரின் உள்ளத்தில் எழுகின்ற கவிச்சுடரே!
எங்கே எங்கள் கவிக்கோ? என்றிங்கு
எந்தமிழர் எல்லாரும் ஏங்கிப் புலம்புகின்றார்
ஏந்தலே! கவியரங்கில் கவிபாடி எம்மை மகிழ்வித்தாய்!
எழில் நிறைந்த கவிதைகளில் ஏழையரைப் பாடி வைத்தாய்!
ஏற்றமிகு சிலம்பின்கதை இருநாற்சொல்லில் இயம்பினாயே!
பால்வீதி படைத்து பலர் நெஞ்சைக் கவர்ந்தாயே!
சிலேடைக் கவிதைகளால் எம்சிந்தை குளிர்வித்த சீமானே!
பாலைநிலா படைத்து பலர் மனத்திலும் குடிபுகுந்தாய்!
விதைபோல் விழுந்தவன் என்று கவிபாடி இன்று
விதையாக மாறிவிட்டாய்!
நேயர் விருப்பத்தை நிறைவு செய்த நேயனே!
கண்ணீரில் தவிக்கவிட்ட எங்கள் கவிக்கோவே!
கவியுலகில் புதுமையினைப் புகுத்திட்ட பாவலனே!
கற்பனையின் ஊற்றே! கலைவளர் நற்கவிச்சுடரே!
கவிதை அரங்குகளை கவிபெறச் செய்தாயே!
உம்கவிதை வாங்குதற்கோ எமன் உன்னை அழைத்திட்டான்?
அருந்தமிழின் மீது அருங்காதல் கொண்டவனே!
அழகுதமிழ்க் கவிதைகளை அள்ளி அள்ளித் தந்தவனே!
அருந்தமிழர் நெஞ்சங்களில் அழகாய் அமர்ந்தவனே!
அனைவரும் உன்கவிதை கேட்பதற்குத் தவிக்கின்றோம்
அன்பார்ந்த தமிழினிலே அருமருந்தாய்க் கவிபடைக்க
அப்துல் ரகுமானே எப்போது வருவாய் நீ?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க