பெருவை பார்த்தசாரதி
===================

unnamed (3)

கண்ணில் காணும் காட்சிகள் தோறும்
எண்ணம் தரும் எழுத்துகளொவ் ஒன்றையும்
வண்ணம் கலையாத இயற்கை எழிலையும்
திண்ண முடன் திளைத்து நோக்கினால்..

காட்டா றாயெழுமுன் எண்ணங்கள்!..அவை
கனிந்து காதலாய்க் கசிந்துருகிப் படிந்திடுமே.
கன்னலெனும் தமிழி லருங் கவிதையாக..அக்
கவிதைக்குகந்த கருவுக்குப் பஞ்சமில்லை மகனே..!

பாயில் படுத்துக் கொண்டே கவியெழுத
பரந்து விரிந்த வானத்தைப் பாரதிலுன்
பட்டுப் போன்ற எண்ணச்சிறகு விரியும்
படபட வெனச் சிறகடிக்குமுன் சிந்தனைகள்..!

மின்னலின் ஒலியுன் மூளையில் புகும்
பின்னலாய் மேகம் போடும் தாளம்
சன்னமாயுன் காதில் விழும் இனிமையாய்
பின்னதி லெழும் பிரியமான பாவொன்று..!

மண்மீதில் மலை பார்க்கின் பனிமூட்டமாம்
வண்ணப் பூப்போலதில் விண்மீன் கூட்டமாம்
விண்ணிலெழும் மேகம் போடும் தாளமதை
பண்ணிசையாய்த் தொடுக்குமாம் விரிந்தவானம்..!

என் எண்ணமுழுதும் விண்ணை நோக்க
விண்ணிலிருந்து வந்ததுவோர் இசை நாதமந்த
இசைக்குழுவில் இடம் பெற்றவர் எத்துணைபேர்.?
ஆசையுடன் வினவுகிறேன் வெண்ணிலவே..!

வானத்தினழகு மேடையில் சூரியனின் சுடர்விளக்கும்
மின்னலின் மேளத்தோடு மேகம்போட்ட தாளமும்
ஜதிஸ்வரம் பாடும் மழையின் ராகமுமிணைந்து
ஸ்வரங்கள் ஏழில்பல சுகங்களைத் தரும்..!

வான்மேடையில் நிகழும் அழகிப் போட்டியில்
பூனைநடை பயிலும் வெண்ணிலவு…கார்
வண்ணமேகம் போடும் தாளமுடன் சேர்ந்தால்
உன்னழகு கூடிகவி உவமைக்குப் புகழ்சேர்க்கும்..!
==================================================================

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு::“மேகம் போடும் தாளம்”

நன்றி கவிதைமணி வெளியீடு::06-05-17

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *