
ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
ராதை உடல்சுமந்து காதல்கூத் தாடுகிறார்
கீதை வரிகள் மறந்து….கிரேசி மோகன்….!
பவள சங்கரி
விழித்தெழுக என் தேசம் – நூல் மதிப்புரை
குறிப்பிடத்தக்க அறிவியல் தமிழ் கட்டுரை வல்லுநர்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கக்கூடியவர் பெருமதிப்பிற்குரிய ஜெயபாரதன் அவர்கள். நம் வல்லமை (www.vallamai.com) இணைய இதழில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து தம் படைப்புகளை சிறப்பாக வழங்கிக் கொண்டிருப்பவர். ஓய்வில்லாத அவர்தம் உழைப்பைக் கண்டு எப்போதும் எனக்கு ஆச்சரியமும், சிறு பொறாமை கூட உண்டு. பல்வேறு சேவைகளையும் அமைதியாகச் செய்து கொண்டிருப்பவர். குறிப்பிட்டு சொல்லும்படியான அற்புதமான பல நூல்களை எழுதிக் குவித்துக்கொண்டிருப்பவர். நாட்டுப் பற்றும், சமூக நலனில் அதீத ஈடுபாடும் கொண்ட நயமிகு நல்லோர் இவர்தம் படைப்புகள் அனைத்தும் மனித நேயம் சார்ந்தவையாகவே இருப்பதைக் கண்டிருக்கிறேன். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என அனைத்துத் தளங்களிலும் சரளமாக இயங்கிக்கொண்டிருக்கும் சிறந்ததொரு முற்போக்கு இலக்கியவாதி. தனக்கு நியாயம் என்று பட்டதை துணிவாக உரத்துச் சொல்லக்கூடிய நேர்மையாளர்.
“விழித்தெழுக என் தேசம்” என்ற தலைப்பைப் பார்த்தவுடன் இந்நூலின் போக்கை எளிதாக உணரக்கூடும். பிறந்த தாய் நாட்டின் மீதும், மொழியின் மீதும், மக்கள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கையும், அன்பும், முன்னேற்றத்தின் எதிர்பார்ப்பும் கொண்டிருப்பவர்.
‘எங்கள் பாரத தேசம்’ என்ற இந்த ஒரு கவிதையே ஒரு பானை சோற்றின் ஒரு சோற்றுப் பதமாகக் காணமுடிகின்றது.
“ஒன்று எங்கள் தேசமே
ஒருமைப் பாடெமது மோகமே
உதவி செய்தல் வேதமே
உண்மை தேடலெம் தாகமே
கண்ணியம் எமது பண்பியல்”
இசைநயமும், அழகிய சொல் வளமும் ஒருங்கே அமையப்பெற்ற படைப்புகள்.
தாம் பிறந்த மண்ணை மட்டுமா வாழ்த்தி வணங்கி அமைகிறார்? வாழ்ந்து கொண்டிருக்கும் கனடா நாட்டு மண்ணின் மீதும் அவர் கொண்டிருக்கும் மதிப்பும், பற்றும் கனடா தேசிய கீதத்தை நமது தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளதின் மூலமும், தனிப்பட்ட கவிதை இயற்றியுள்ளதன் மூலமும் அறிய முடிகின்றது.
இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகள், பீட்டில்ஸ் இசைக்கீதங்கள், கலீல் ஜிப்ரான் கவிதைகள் என அனைத்து மொழிபெயர்ப்புகளும் என் மனம் கவர்ந்தவை.
போதி மரம் தேடி – கண்டறிந்து கவிமூலம் நம்மையும் அங்கே அழைத்துச்செல்லும் வல்லமையும் பெற்றவர்!
எளியோரும் அறிவியல் அற்புதங்களிலும் அதிசயித்து நிற்கும் வகையில் மிக எளிய சொற்கள் மூலம் அழகுக் கவிகள் புனைந்திருக்கும் கவிஞர் இவர்போல் இன்னொருவர் உண்டா என்பதே ஐயம்தான்.
இத்தகைய பற்பல பெருமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஐயா அவர்கள் இன்னும் பல்லாண்டு நம்முடன் வாழ்ந்து மேலும் பல நல்ல படைப்புகள் வழங்குவார் என்று நம்புவோமாக. அவருக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான உடல் நிலையையும் இறையருள் வழங்க வேண்டும் என்று உளமார பிரார்த்தனை செய்கிறோம்.
அன்புடன்
பவள சங்கரி
நிர்வாக ஆசிரியர், வல்லமை இணைய இதழ்.
பவள சங்கரி
தலையங்கம்
ராஜஸ்தானில் 31 மலைகள் முற்றிலும் மாயமாகி உள்ளன!
ராஜஸ்தானில் உள்ள ஆரவல்லி மலைத் தொடர்ச்சியில் உள்ள 31 மலைகள் முற்றிலுமாக மாயமானது குறித்து உச்சநீதி மன்றம் அதிர்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. நீதிபதியின் பார்வைக்கு வைக்கப்பட்ட மத்திய அதிகாரமளித்தல் குழுவின் அறிக்கை ஆரவல்லி மலைத் தொடரின் 31 மலைகள் காணாமல் போய் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. ராஜஸ்தான் அரசாங்கம் இதற்கான தமது பங்காக ரூ 5000 கோடி பெற்றுள்ள செய்தியும் இந்த அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது. பல இலட்சம் மக்கள் உயிரைக் கருத்தில் கொண்டு 115.34 ஹெக்டேர் பரப்பளவில் வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முறைகேடான இந்த செயல்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. மக்களின் உயிருக்குப் பாதுகாப்பாக இயற்கை அரணாக நிமிர்ந்து நிற்கும் 20% மலைப்பகுதியை வெட்டி எடுத்துள்ளதில் அரசுக்கும் பங்கு இருப்பது என்பது மிகுந்த வேதனையளிக்கும் விசயம். தில்லியில் மாசு அதிகமாகி அச்சுறுத்தும் நிலைமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் அரசு தன் 5000 கோடி வருமானத்திற்காக தில்லி வாழ் மக்களின் உயிரைப் பணயம் வைத்திருப்பது முறையற்ற செயல் என்ற உச்சநீதி மன்றத்தின் இடைநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது. ராஜஸ்தான் அரசு இதை மிகச்சாதாரணமாக கையாண்ட காரணத்தால்தான் உச்சநீதி மன்றம் தலையிட வேண்டியதாகியுள்ளது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுரங்கப் பணிகளுக்கு உடனடி தடை விதித்ததோடு அதைப்பற்றிய முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யும்படி ராஜஸ்தான் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அரசே நாட்டின் இயற்கைச் செல்வங்களை கொள்ளையடிப்பதற்கு துணை போவதும் அதற்கு தமது பங்கினைப் பெறுவதும் மிக மோசமான முன்னுதாரணமாகவே காணமுடிகின்றது. ராஜஸ்தான் மாநிலம் இயற்கை வைரங்கள் நிறைந்த பகுதி என்பது நாம் அறிந்ததே. அடுத்ததாக இந்த மலைத்தொடர் தாது வளங்கள் நிறைந்ததா என்பது பற்றி எந்த விதமான ஆய்வும் செய்யாமல் அரசு அனுமதி அளித்திருப்பது அரசின் செயல்பாட்டையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
முனைவர் ஆ.சந்திரன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
தூயநெஞ்சக் கல்லூரி
திருப்பத்தூர், வேலூர்
“ஏய் ஒன்னத்தான்” என்ற சப்தம் பொதுமக்கள் புழங்கும் இடத்தில் எழுகிறது. அந்தச் சப்தம் வந்த திசையை நோக்கி சிலர் திரும்பிப் பார்க்கின்றனர். அந்தச் சப்தத்திற்கான பொருள் அது யாரையோ நோக்கி விளிப்பதாக அமைகிறது. அது அதை எழுப்பியவருக்கும் அது யாரை நோக்கி விளிக்கப்பட்டாதோ அவருக்கும் இடையிலான உறவாக அமைகின்றது. அந்த அமைப்பு எதிர் எதிர் தன்மை கொண்டதாக அமைகின்றது. அதாவது, சப்தத்தை எழுப்பியவன் தன்னிலையில் நிற்பதால் அவன் நான் என்றும் அவனது எதிரில் இருக்கும் ஒருவனை நோக்கிதாக விளித்தல் அமைவதால் அவன் நீ என்றுமாக நான் x நீ என்ற நிலையில் அவ்விருவரும் தொடர்பு கொள்ளுகின்றனர். இது உரையாடலுக்கான தொடக்க நிலையாகும். இதன் அடுத்த நகர்வாக “மச்சான் நீ எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாளாச்சி!. நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? உங்க வீட்டல எல்லாரும் நல்லா இருக்காங்கலா? எங்க வீட்டில எல்லாம் நன்றாக இருக்கோம்” என்பன போன்ற வாக்கியங்களாய் அவ்வுரையாடல் நீளலாம். இந்த உரையாடல் இருவருக்கு இடையில் நான் x நீ என்ற எதிர் எதிர் தளங்களில் தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கும். அவர்கள் சந்திப்பு முற்று பெறும்வரை. இவ்வாறே இலக்கியங்களிலும் இடம் பெறும் உரையாடல் அல்லது கூற்று என்பதும் நான் x நீ என்ற எதிர்வுகளாய் அமையும். இது இலக்கியத்தில் ஒரு உத்தியாகவே அமைகிறது.
இக்கூற்று முறை அதாவது ஒருவா் மற்றொருவரோடு உரையாடுவது என்ற தன்மை சங்க அகப்பாடல்கள் முதல் (சான்றாக தோழி கூற்று, தலைவி கூற்று, தலைவன் கூற்று, செவிலி கூற்று, கண்டோர் கூற்று முதலானவற்றைக் கூறலாம்.) தற்கால கவிதைகள் வரை தொடர்ந்து இயங்கிவரும் உத்தியாக உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையிலான ஆய்வுகளில் தமிழவன், முத்தையன், சண்முக விமல்குமார், சந்திரன், போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முயற்சியின் தொடர்ச்சியாய் அதை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் பெருமாள் முருகனின் “மயானத்தில் நிற்கும் மரங்கள்” எனும் கவிதை தொகுப்பில் உள்ள மொழிதல் கோட்பாட்டுச் சிந்தனைகளை ஆராய முற்படுகிறது இக்கட்டுரை.
நான் x நீ இருமை எதிர்வும் இன்மைப் பொருளும்
“ஆசிரியன் தன் மொழிக்குள் (authorial speech) இன்னொருவரின் மொழியைப் போலச் செய்தலின் (parody) மூலம் வைத்திருக்க முடியும். அவ்வாறு கவிஞனின் சொந்த மொழியும் போலச் செய்தல் மொழியும் ஒன்றுக்குள் ஒன்று இருக்க முடியும். அதாவது ஓா் ஆசிரியனின் மொழிக்குள் எப்போதும் இன்னோர் ஆசிரியனின் மொழி இருக்க முடியும். இந்தத் தர்க்கத்தின் மூலம் ஓா் ஆசிரியன் தன் மொழிச் செயல்பாட்டுத் தருணத்தின் (அதாவது படைக்கும்போது) இன்னோர் ஆசிரியனுடன் ஓர் உரையாடலில் (கூற்றில்) இருக்கிறான் என்று அர்த்தம்” (ப. 20, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) என்று படைப்பாளரின் மனோநிலையில் படைப்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்று விளக்குகிறார். அதாவது ஒவ்வொரு படைப்புக்குள்ளும் ஒருவா் உரையாடுகிறார் என்பதே அதன் அர்த்தம். உரையாடுதல் என்பது இருவா் பங்கெடுக்கும் செயலாகும். அதில் நான் x நீ அல்லது A x B என்கிற இருமை எதிர்வு அமைப்பு செயல்படும். அந்த வகையில் “மயானத்தில் நிற்கும் மரங்கள்” எனும் கவிதை தொகுப்பிலும் ஏராளமான நான் x நீ என்கிற எதிர்வு நேரடியாக வெளிப்பட்டும் வெளிபடாமலும் வந்திருக்கின்றன.
“நீ என் கால் நக்கி
உன் உழைப்பு என் உடல் வளர்த்தி
உன் பொருள் என் பிச்சை
உன் பெண்டு என் தினவுக்கு
வேத வாசகம் வேத வாசகம்
கருமத்தைச் செய் பலன் பாராதே” (பக். 24)
“உன் சுட்டுவிரல் தொடுதலே
மாறுதலின் தொடக்கம்
என் துயரப் படிவுகளிடையே
நகைஅதிர்வுகள் எழும்பின
……………………………….
சொல்லடங்கிய மொழி
உன் இமையேறிப் புதைந்தது
பின்னெழும் நிலவொளி துலக்கிக் காட்டும்
கோபுர அழகென உருவு தோன்றிற்று
நீ மூட்டிய கனலில்
அனைத்தையும் வளர்த்துவிட்ட
ஒளி சூழ்ந்த அக்கணமே
உண்மையிலும் உண்மை
பின்
எனதென்று எதுவுமில்லை என்னிடத்தில் (பக்.55)
“கேள்விகளின் நாற்றத்தை உணர்த்த வேண்டாம்
என் கண்ணீர் நனைத்த உன் துணிகளை
எங்கும் பத்திரப்படுத்தாதே” (பக். 63)
“எங்கும் பறந்துவிடாமல்
என்னைப் பிடித்து வைத்துக்கொள்ள
விரும்புகிறாய் நீ
என் இதயத்தின் எல்லா அறைகளிலும்
நீயே நிரம்பி இருக்க வேண்டும்
என்னும் விருப்பத்தை நானறிவேன்
என் சட்டைக் காலரில்
நீ மாட்டிவிட்ட கொக்கிகள்
எப்போதும் இழுத்த வண்ணமிருக்கின்றன
எங்கும் நான் தங்கிவிடாமல்
உன்னை நோக்கி விரட்டியபடி
உன் கரிய விழிகள் கூடவே வருகின்றன
உன் கண்ணீர்த் துளிகளின் வாசம் நிரம்பிய
கைக்குட்டையை
என் பையில் வைத்து ஏன் அனுப்புகிறாய்
உன்னைப் போல் எனக்கு
உணர்த்த முடியாமலிருக்கலாம்
நம்பிக்கையூட்டும் வெறும் சொற்களையும்
நான் உதிர்க்கவில்லை
விட்டுவிடு அனைத்தையும்
உன்னிலன்றி நிலைபடாதது என் மனம்” (பக். 71)
எனும் கவிதைகளில் நான், நீ, என், உன், என்பன வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த நான் x நீ என்பது சில கவிதைகளில் இருக்கமாகவும் இன்னும் சிலவற்றில் சற்று இடவெளியுடனும் வரும் தன்மையில் சிறு மாறுபாட்டைக் கொண்டுள்ளது என்பது மேற்கண்ட கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இது இவ்வாறிருக்க சில கவிதைகளில் நான், நீ வெளிப்படாமலும் வருகின்றன.
இன்னும் சிலவற்றில் நான் என்பதும் சிலவற்றில் நீ என்பதும் மட்டும் வெளிப்படையாக இல்லாமல் வரும் தன்மையிலும் கவிதைகள் உள்ளன.
என்னைப் பற்றிய
தீர்மானமே
எனக்குள் இல்லை
அவனைப் பற்றி நான்
என்ன சொல்லவது (பக். 21)
என்ற கவிதையில் நான் (என்) என்பது வெளிப்படையாக உள்ளது. ஆனால் இக்கவிதையில் நீ என்பது அவ்வாறு வெளிப்படையாக இல்லை. அவன் என்ற மூன்றாவது நபரைப் பற்றிய கருத்தை இக்கவிதைசொல்லி யாரிடம் கூறுகிறார். எதிரே இருக்கும் நபரிடமா? அல்லது தன்னுடைய நெஞ்சிடமா? என்பது வாசகனைப் பொருத்து அமையும். ஏனெனில் இந்தக் கவிதைசொல்லியின் குரலைக் கேட்பவர் எதிரே இருப்பவரா? அல்லது நெஞ்சமா (சங்க அகப்பாடல் தலைவன் செலவழுங்கல் போல) என்பதைப் பொருத்து நீ என்பது தீர்மானிக்கப்படும். என்றாலும் இக்கவிதையில் நீ என்ற அமைப்பு வெளிப்படாத நிலையில் கமுக்கமாக உள்ளது என்பது மட்டும் உண்மை.
இவ்வாறே சில கவிதைகளில் நான் x நீ என்ற இரு அமைப்புகளும் கமுக்கமாக வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுறைந்து காணப்படுவதும் உண்டு.
“நிகழ் உறவு” என்ற தலைப்பிலான கவிதை இத்தகைய அமைப்பைக் கொண்ட கவிதைக்குச் சான்றாகக் கூறலாம்.
“இருந்தும்
முன்னோக்கிப் பரவும்
ஓயாத அலைகள்
முட்களை வாரி வரும்
காற்றுக் காலம்
மூச்சில் அறையும்
சூனியப் புகைகள்
மூட்டத்தினூடே
கழுத்துக்கு நீளும்
கையொடிருந்த விரல்கள்
நகர்ந்து ஓடும்
நெருங்கி நடந்த தோள்கள்
உயர்ந்தும் தாழ்ந்தும்
முறித்தும் முறிந்தும்
தெரியும்
ராஜபாட்டையில் அல்ல
இடிபாடுகளுக்கிடையே தான்
தொடரும் பயணம்”
இந்தக் கவிதையில் நான் x நீ என்பது வெளிப்படையாக இல்லை. ஆனால், கவிதையின் கடைசியில் இடம்பெற்றுள்ள “தொடரும் பயணம்” என்னும் வரிகள் தன்னுடைய பயணம் இடிபாடுகளுக்கிடையே நடப்பதாகக் கவிதைசொல்லி கூறுவதாக உணர முடிகிறது. இது கவிதைசொல்லியின் குரலில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது யாருடைய பயணம்? என்ற வினாவிற்குத் தன்னுடைய பயணம் என்பது விளக்கமாகப் பெறப்படுகின்றது. தன்னுடைய பயணத்தைப் பற்றிக் கவிதையில் வரும் நான் யாரிடம் கூறுகிறது? என்று கேட்டால் அது நிச்சயம் எதிரில் இருக்கும் நபரான நீயிடம்தான் கூறுகிறது என்பது பெறப்படும்.
இவ்வாறு கவிதையில் நான் என்பதும் நீ என்பதும் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் வருவதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் காணமுடிகின்றது.
இதில் “நான் என்பது கவிஞன் குரலல்ல; இது கவிதையில் வருபவனின் குரல்; கவிஞன் வேறு, கவிதையில் வருபவன் (narrator) வேறு. இந்த narrator-ஐ கவிதையின் சூத்திரதாரி என்றும் கருதலாம். நாடகத்தில் சூத்திரதாரி, நாடக ஆசிரியனிலிருந்து வேறானவனாய் மேடையில் தோன்றுவான். கவிதையின் சூத்திரதாரி தனியாய்த் தோன்றாததால் கவிஞனாகக் கருதும் பிழையைப் பலா் செய்வதுண்டு” (ப. 63, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) என்று தமிழவன் கூறுகிறார். இந்த ’நான்’ கவிதைசொல்லி என்றும் அழைக்கப்படுகிறது என்றும் கூறுகிறார். மேலும் ’நீ’ பற்றி ஆராயும் தமிழவன் “நான் கவிஞனாகிய நான் அல்ல எனில் ’நீ’யும் கவிஞனின் காதலி அல்ல. அல்லது கவிஞனுக்கு முன் நிற்கும் ’நீ’ அல்ல. சூத்திரதாரிக்கான ஒரு எதிர்வு அதாவது கற்பிதமான மாயா சூத்திரதாரி. இப்போது நான் x நீ என்ற மொழி எதிர்வு இன்னொரு கருத்தியல் எதிர்வு ஜோடியான சூத்திரதாரி x மாயாசூத்திரதாரி என்பதற்கு வளர்கிறது (ப. 64, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) என்றும் கூறுகிறார். இப்பண்பு கவிதையிலும் எதிர்வுகளைக் கொண்டுள்ளதை அறியமுடிகிறது.
“தொடரும் பயணம்” என்று முடியும் மேலே கண்ட கவிதை வளமை x வறுமை என்ற இரு எதிர்வுகளைக் கொண்டு அமைவதைப் பார்க்கலாம். தான் நடப்பது ராஜபாட்டையில் அல்ல இடிபாடுகளுக்கிடையே என்று கூறுவதும், முட்களை வாரிவரும் ஓயாத அலைகள், காற்றுக்காலம், மூச்சில் அறையும் சூனியப் புகைகள், நீளும் கையொடிருந்த விரல்கள், நகர்ந்து ஓடும் நெருங்கி நடந்த தோள்கள்” போன்ற குறிப்புகள் இதனை நன்கு உணர்த்துகின்றன. அத்துடன் இந்தக் கவிதையின் நான் என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு குரலாகவும் நீ என்பது அதற்கு நேர் எதிரான ஆதிக்கச் சமுகத்தையும் குறிக்கிறது. அதாவது இக்கவிதையில் வரும் ராஜபாட்டை X இடிபாடு எதிர்வுகள் இதைப் புலப்படுத்துகிறது. அத்துடன், இது வளமை X வறுமை என்ற இரு அர்தத்தளங்களைக் கவிதைக்குள் புதைத்து வைத்துள்ளது.
இதன் தொடர்ச்சி பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இயக்கவியல் விதி பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், ஏமாற்றம் ஒன்று இங்கு இருப்புகொண்டுள்ளது. அது நேற்று போல் இன்றும் தொடர்கிறது என்கிற வறுமையின் மாறத் தத்துவத்தைப் பிரதிபலித்து நிற்கின்றன சில கவிதைகள். சான்றாகப் பின்வரும் கவிதைகளைக் கூறலாம்.
“…………………
மேடும் பள்ளமும்
இறக்கமும் ஏற்றமும்
நிமிர்வும் துவள்வும்
பாதைகளில்
……………….” (பக் 31)
“இந்த வருசம்
இன்றைக்கு முதல்
நானும் தங்கச்சியும்
போன வருசம்
இதே தருணம்
அண்ணனும் நானும்” (ப. 36)
“வெட்டுப்பட்ட கால்களை
இழுத்து நகர்கிறது காலை
எப்படியோ தீய்கிறது பகல்
வெறுமை மாரடித்துக்
கதறிப் பற்றுகிறது மாலை
மணலாய்ச் சிதறிய மனசோடு
அழைப்பு மணிக்காய் எழுந்தோடிக்
கண்ணெரியக் கழிகிறது இரவு
நீயற்ற நாட்கள்
ஏதோ போகிறது பொருளற்று” (ப. 66)
என்ற கவிதை வரிகளில் மேடு X பள்ளம், இறக்கம் X ஏற்றம், நிமிர்வு X துவள்வு, கடந்தகாலம் X நிகழ்காலம், காலை X மாலை, இரவு X பகல் போன்ற இருமை எதிர்வுகளைக் கொண்டுள்ளன. இவை வெளிப்படையாக அமைந்து கவிதையை நகர்த்துகின்றன. இது ஒருபுறமிருக்க இந்தக் கவிதைகளில் ஒட்டுமொத்தமாக ஒரு சோகக் குரல் ஒலிப்பதைப் பார்க்க முடிகின்றது. அது தனிமனிதன் X சமூகம் என்ற எதிர்தளத்தில் நிற்கிறது. இந்த எதிர்எதிர் தளங்கள் தனக்குள் புதைத்துவைத்துள்ள இன்பம் X துன்பம் என்ற இரு இன்மை எதிர்வுகளை வெளியிடுகின்றன. துன்பம் என்ற ஒன்றைப் பற்றிக் கொண்டு காலை X மாலை, பகல் X இரவு, கடந்தகால X நிகழ்கால என்ற கால எல்லையில் விரிகின்றது. அது தனிமனிதன் X சமூகம் என்ற எதிர்வில் வெளிப்படையாகவும், பூடகமாகவும் அமைகின்றது என்பதைக் கவிதைசொல்லியின் குரலின் வழி நாம் அறியமுடிகின்றது.
பொதுவாகக் கவிதைகளில் “இந்த இருமை எதிர்வு இரண்டு வகையில் அமையும் என்கிறார் தமிழவன். அவை : 1. வெளிப்பட்டும் நிற்கும் இருமை எதிர்வு, 2. வெளிப்படாமல் பூடமாக நிற்கும் இருமை எதிர்வு (ப. 86, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) ஆகும். இந்த இருவகையான எதிர்வுகளை இந்தக் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் காணமுடிகின்றன.
“காற்று கொண்டு வருகிறது உன்விரல்களின் மிருதுவான தொடுதலை”(ப.68) எனத் தொடங்குகிறது “நிறைநினைவு” என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். இக்கவிதை காதல் ரசத்தைச் சாறுபிழிந்து தருவதாய் உள்ளது.
“இரவின் மௌனத்தில் காதலியின் அருகிருப்பைக் காதலன் உணர்கிறான். அப்போது அவனுக்கு அந்த மௌனத்திலும் காதலியின் கடந்தகால நினைவு மயக்க நிலையில் வெளிப்படுகின்றது. அத்துடன் அது தெளிவாக உள்ளது”. அதாவது, மயக்கம் x தெளிவு என்ற எதிர்வுகளில் அமைந்துள்ள கவிதை பிரிவின் நினைவைக் காட்சிப்படுத்துவதாக உள்ளது. மௌனத்தின் அமைதியைக் குலைத்து, மனதில் ஆரவாரத்தைத் தூசு தட்டி எழுப்பிவிடுகிறது. அமைதியாக இருந்த அவனுடைய மனம் இப்பொழுது கலவரத்தில் மூழ்கிப் போகிறது. இக்கவிதையில் ஆனந்தம் x துன்பம், அமைதி x ஆரவாரம், மௌனம் x பேச்சு என்ற இருமை எதிர்வுகள் பின்னிப் பிணைந்து கவிதையாய் வடிவம் பெற்றுள்ளது.
“இரைச்சல்களின் நடுவே
தலைகுனிந்து மௌனமாய் நான்
உறவு சொற்கள் அமுக்கும் பிசாசுகளாகின்றன
கோத்து நடந்த விரல்கள் குரவலைகள தடவுகின்றன
செத்தொழிந்த எல்லா மனிதர்களுக்குமான அழுகை
என்தலையில் கொட்டுகிறது” (ப.69)
என்ற கவிதை ஆடம்பரத்தின் ஆரவாரங்கள் நடுவே அமைதியாய் இடம் தெரியாமல் வாழ்க்கையைக் கழிக்கும் நிலையை விவரிக்கிறது. பணம் இருந்தால் முகம் தெரியாதவர்களும் கை்ககுலுக்கி உறவினர் ஆவதும், பணம் வசதி உயர்பதவி என்ற ஏதும் இல்லாமல் ஒரு வேளை நல்ல பண்புகள் மட்டும் ஒருவன் கொண்டிருந்தால், அவனை உதவாக்கறை என்றோ பிழைக்கத் தெரியாதவன் என்றோ இந்தச் சமூகம் தூற்றும். நெருங்கிய உறவுகள் கூட விலகிச் செல்லும். கைவிரைல்கள் கூட அவனை நேசிக்க மறுக்கும் சூழுலுக்குத் தள்ளப்படுவான். தனிமை வாட்டி எடுக்கும். யாரும் இல்லை என்ற சோகம் மெனியைத் திருகும். இத்தகைய சூழுல் ஒருவனுக்கு நேரும் என்றால் அவனுக்கு எல்லாமும் துயரமாய்ப் போகும். அது “அழுகை தலையில் புரண்டோடுவது” போல் அது அமையும்.
அத்தகைய சோகமான தனிமைத் துயரைக் காட்சிபடுத்தும் கவிதையாக இக்கவிதை அமைகின்றது. இக்கவிதை இரைச்சல் x அமைதி, உறவு x பகை, இணைவு x பிரிவு என்ற அர்த்தத்தளங்களை இன்மை நிலையில் பூடகமாய் வாசகனின் மனதில் தன்னுடைய சோகத்தினை இறக்கி வைத்துவிட்டுச் செல்லுகின்றது கவிதைசொல்லி.
துணை நின்றவை
முனைவர் அ.மோகனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி, மதுரை
தமிழ்மொழி செம்மொழியாக உலக அரங்கில் ஏற்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தவை சங்கக் கவிதைகள். பாட்டும் தொகையுமாக அமைந்த இவை காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளுக்கு உட்பட்டுப் பயணித்து வந்துள்ளன. அவை தொகுக்கப்பட்ட முறைமை, பேசும் பொருள், கவிதையாக்கம், அழகியல், தொல்லியல், மானிடவியல், சமூகவியல் எனப் பன்முகப்பட்ட வாசிப்பு முறைகளில் ஊடாடியுள்ளன. இப்பின்புலத்தில் சங்கப் பெண்கவிதைகள் என்கிற சக்திஜோதியின் நூல் கவனத்திற்குரியதாகின்றது. இந்நூலுக்குள் பயணிப்பதற்கு முன்னதாகச் சக்திஜோதி இன்று தமிழ்ச்சூழலுக்குக் கையளித்துள்ள ஆய்வு முறையின் பின்புலம் குறித்த சில தகவல்களைப் பதிவு செய்வது அவசியம். அப்போதுதான் இன்றைய தமிழ் ஆய்வுப்பரப்பிற்குள் சக்திஜோதியின் இந்நூலுக்குரிய இடம் மற்றும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.
1970ல் அமெரிக்க பெண்ணிய ஆய்வாளர் ஏலெயின் ஷொவால்டர் Gynocriticism என்கிற புதிய இலக்கிய விமர்சனக் கோட்பாட்டை உருவாக்கினார். இதனை ஓர் இயக்கமாகவே அங்கு முன்னெடுத்தனர். Gynocriticism என்பது குறித்து ஷொவால் கூறுவது, a female framework for the analysis of women’s literature to develop new models based on the study of female experience rather than to adapt male models and theories – சுருக்கமாகக் கூறினால் பெண் எழுத்துக்களைப் பெண்களே வாசித்தல். அதற்கான பெண்மைய ஆய்வு முறையினை உருவாக்குதல் என்பது. ஷொவால்டர் தொடங்கிவைத்த இந்தப் புதிய ஆய்வுமுறைமையின் தொடர்ச்சியாக ஜூடித் பெட்டர்லி, பேட்ரிசியா மேயர் உள்ளிட்ட பெண் பேராசிரியர்கள் தங்கள் ஆய்வுகளைத் தகவமைத்தனர். ஷொவால்டர் இரண்டு நிலைகளில் பெண்மைய திறனாய்வாளர்களை வகைப்படுத்தியுள்ளார். ஒன்று The women a reader or feminist critique, இரண்டாவது The women as writer or Gynocritics ஒரு பெண் வாசகராக, பெண்ணிய விமர்சகராக இருத்தல், ஒரு பெண் புனைவாளராகவும் அதே நேரம் பெண்நிலைப்பட்ட விமர்சகராகவும் இருத்தல். சக்தி ஜோதியின் இவ்வாய்வு இரண்டாம் நிலையில் அமைகின்றது. கவித்துவ ஆற்றலுடைய ஒரு பெண் இதுவரை சங்கக் கவிதைகளை வாசிப்பதற்காகக் காலங்காலமாக உருவாக்கி வைத்த வாய்பாட்டு முறைமைகளைப் பின்தள்ளி அந்தப் பெண் எழுத்துக்களை வாசிப்பதற்கான ஒரு புதிய சட்டகத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னரும் சங்க இலக்கியத்தின் திணை, துறை, கூற்றுகளின் நம்பகத்தன்மை மீதான ஆய்வுகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வ.சுப.மாணிக்கத்தின் ‘சங்க நெறி’, கமில்ஸ்வலபிலின் The Smile of Muruga, Tamil Literature, அம்மன்கிளி முருகதாஸின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும், குளோரியா சுந்தரமதியின் பகுப்பாய்வுநெறி நோக்கில் சங்க இலக்கியம், அ.மங்கை அவர்களின் நக்கண்ணையின் விழைவுரை தற்சமயம் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள சுஜா சுயம்புவின் தமிழ்த் தொகுப்பு மரபு எட்டுத் தொகை பனுவல்கள் உள்ளிட்ட ஆய்வுகள் சங்க இலக்கியத்தின் திணை, துறை மரபின் பொருத்தப்பாடுகளை ஆராய்ந்து அவற்றின் பொருத்தமற்ற தன்மைகளைக் கண்டுகாட்டியுள்ளன.
சங்கப் பெண் கவிஞர்கள் எனும்போது உ.வே.சாமிநாதையர், பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை (பாட்டும் தொகையும்), ந.சஞ்சீவி (சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை), ந.முருகேசபாண்டியன் (அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில், சங்கப் பெண்பாற்புலவர்கள்) உள்ளிட்டோரால் முன்வைக்கப்பட்ட பெண்பாற்புலவர்களின் பட்டியல்களை விடுத்துத் தாயம்மாள் அறவாணன் அவர்களின் மகடூஉ முன்னிலை நூல் அளித்துள்ள பட்டியலைச் சக்திஜோதி இந்நூலிற்கான மூல ஆதாரமாகக் கொண்டுள்ள முறைமையினை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது.
இம்முறையினைத்தான் Gynocriticismத்தின் அடிப்படையாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. சங்கப் பாடல்களில் உள்ள பெண்மொழியினைப்புரிந்து கைக்கொள்ள பெண்நிலைப்பட்ட தரவுகளைக் ஆதாரமாக்குதல். இந்த நூலை வாசிக்கும்போது தவிர்க்க இயலாமல் ஜூடித் பெட்டர்லியின் Provisions: A reader from 19th century American women (1781 – 1914) (1965 இல் இந்நூல் வெளியானது) பேட்ரிசியா மேயரின் The Female Imagination: A Literary and psychological investigation of women’s writing ((1975) வெளியானது.) என்ற இரண்டு நூல்களும் நினைவிற்கு வந்தன. அமைப்பிலும் பேசும்பொருளிலும் வியக்கத்தக்க ஒப்புமைகளை இவை கொண்டிருந்தன. பெண்எழுத்துகள் குறித்து பெட்ரிசியா மேயரின் இரண்டு கருத்துகள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன.
Women writing directly about their lives in letters, journals, autobiographies or indirectly in that concealed form of auto biography we call fiction demonstrate that the experience of women has long been the same, that female likenesses are more fundamental than female (1975:17)
Women’s writing could not be considered in isolation from the social, economic, and political facts that dictate much of women’s condition. Subsequent critics have agreed. (1975:18)
படைப்பு சார்ந்த புலமையென்பது பெண்கள் வகைப்பட்டதாக மாறுகையில் அதன் தன்மையானது சமூகத்தின் கூட்டு மனசாட்சியாக வெளிப்படும். ஆண்களின் படைப்புகளில் பெண்களை எழுதிப்பார்க்க முனைவது பல சமயங்களில் வலிந்து வெளிப்படையாகத் தெரியும். பெண்கள் தங்களைப் பற்றித் தாங்களே எழுதும்பொழுது சமூகத்தின் ஊடுபாவு தோற்றம் அசலானதாகவும் அழுத்தமானதாகவும் உருவாகும். – சக்திஜோதி (ப.19)
மேற்குறித்த இரண்டு கருத்துகளின் பிழிவாகத்தான் சக்தி ஜோதியின் இக்கருத்து உள்ளது. மேலும் அமைப்பு முறையில் நோக்கும்போது சக்தி ஜோதி சங்கப் பெண்பாற்புலவர்களின் பாடலடிகளை ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்பாகத் தந்திருக்கின்றார். சான்றாக இந்நூலிலுள்ள முதல் கட்டுரை ‘நிலந்தொட்டு புகாஅர்’ என்பது வெள்ளிவீதியாரின் பாடல் அடி. அவர்குறித்த கட்டுரைக்கான தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூடித் பெட்டர்லியின் Provisions: A reader from 19th century American women (1781 – 1914) நூலிலும் அமெரிக்கப் புனைகதையாளர்களின் புகழ்பெற்ற தொடர்கள், அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளில் பேசிய தொடர்கள் ஆகியன ஒவ்வொரு கட்டுரைக்கும் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சான்றாக Maria W. Stewart (1803 – 1879) குறித்த கட்டுரைக்கு Why sit ye here and die? என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர் பெண்ணிய சமூகத்தளத்தில் வினையாற்றிய முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வடி ப்ராங்ளின் அவையில் செப்டம்பர் 21, 1832இல் அவர் ஆற்றிய சொற்பொழிவின் தலைப்பு.
1970களில் தொடங்கிய gynocritic விமர்சனமுறை தமிழ் ஆய்வுப்பரப்பில் சக்திஜோதியின் மூலம் கால்பாவியுள்ளது என்றே கருதலாம். ஆராய்ச்சி மரபில் இவ்வகைமையில் இந்நூலினை அடையாளங்காண முடிகின்றது. சங்கப் பெண்கவிதைகள் என்ற இந்நூலைப் பொறுத்தவரைக் கீழ்க்கண்ட நிலைகளில் இதன்தன்மைகளைப் புரிந்துகொள்ள இயலுகின்றது.
இவர் கையாண்டுள்ள மொழிநடையின் இயல்புத்தன்மைக்குச் சான்றாக ஒரு பகுதி வருமாறு: அஞ்சியத்தை மகள் நாகையார் குறித்த கட்டுரையில்,
“ஆண் பெண் இருவருக்குமான வாழ்வின் முதல் சந்திப்பிலேயே கணவனாகப் போகிறவனை இனியவன் என்று பெரும்பாலும் பெண் நம்பத் தொடங்கிவிடுகிறாள். அவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைப்பதற்கு முன்பாகவே அவனே “தன்னுடைய ஆண்” என நினைக்கிறாள். மேலும் அவன்தான் இவ்வுலகின் மிகச்சிறந்த ஆண் என்றும், அவனுடைய நெஞ்சில்தன் ஒருத்திக்கு மட்டுமே இடம் இருப்பதாகவும், தன்னால் மட்டுமே அவனை அரவணைத்துப் போகமுடியுமெனவும் நம்புகிறாள். இந்நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஒரு பெண் அவளுடைய ஆணுடன் கூடி வாழத் தொடங்குகிறாள்.” (ப.58)
தமிழ் அகமரபின் கைகோளுள் ஒன்றான களவு வாழ்வில் ஈடுபடும் பெண்ணுடைய நிலையினை இதைவிட எளிமையாக அழுத்தத்துடன் கூற இயலாது என்றே நினைக்கிறேன். இக்கட்டுரையில் ஹங்கேரிய கவிஞன் மிக்லோஷ் ராட்நோட்டி எழுதிய என் மனைவியைப் பற்றிய ஒரு எளிய பாடல் என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. இக்கவிதை எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அஞ்சியத்தை மகள் நாகையாரின் அகநானூற்றுப் பாடல் ‘முடவு முதிர் பலவின் குடமருள் பெரும்பழம்’ விளக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில் கவிஞர்குறித்த குறிப்புடன் இப்பாடல் மூலம் தெரியவருகின்ற சில புதுமையானசெய்திகளையும் தொகுத்தளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அள்ளூர் நன்முல்லையார் குறித்த கட்டுரையின் இறுதியில் அள்ளூர் என்கிற ஊர் குறித்த குறிப்புகள் அள்ளூர்கல்வெட்டு மற்றும் திருநெல்வேலிக் கோயில் கல்வெட்டிலும் காணப்படுவதையும் சக்தி ஜோதி சுட்டியுள்ளார்.
முதல் பதினைந்து கட்டுரைகளுள் அஞ்சில் அஞ்சியார் குறித்த கட்டுரை குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறுகின்றது. நற்றிணையின் 90ஆவது பாடல் இக்கவிஞர் பாடியது. இவ்வொரு பாடல் மட்டுமே இவர் பாடியுள்ளார். இப்பாடலின் பொருளைப் பூப்பெய்திய பெண்ணொருத்திக்கு ஊஞ்சல் விளையாட்டு மறுக்கப்பட்ட நிலையையும் அதனால் அவள் உற்ற துயரத்தையும் மொழிவதாக சக்திஜோதி கட்டமைத்துள்ளார். இப்பாடலுக்கு உரைகாரர்கள் அளித்துள்ள திணை, துறை குறிப்புகளிலும் விளக்கத்திலும் உள்ள சிக்கலினால் அவற்றை விடுத்துப் பாடலை மட்டும் தான் அணுகியதாகச் சக்திஜோதியே குறித்துள்ளார்.
எட்டுத்தொகையுள் ஒன்றான நற்றிணைக்குப் பிற தொகைநூல்களைப் போல பழைய உரையோ பெயரறியாத உரையோ இல்லை. அவ்வாறே பிற தொகை நூல்களைப் போன்ற திணைப்பகுப்பு குறிப்பும் இல்லை. நூலைத் தொகுப்பித்தது பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி என்கிற ஒரு குறிப்பு மட்டும் நற்றிணையின் இறுதிச் சுவடி மூலம் கிடைக்கின்றது. 1914இல் இதற்கு உரையெழுதிய பின்னத்தூர் நாராயண சாமி ஐயரே திணைப்பகுப்பையும் துறைக்குறிப்பையும் எழுதியிருக்கிறார். குறைந்த பட்ச காலப்பழமையாக கி.பி. ஒன்று என்பதைச் சங்க இலக்கியத்தின் காலமாகக் கொண்டாலும் சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் நற்றிணை திணைப்பகுப்பு செய்யப்படாமலேயே வழங்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. (2016:55) இந்த நற்றிணையில் இடம்பெற்றுள்ள அஞ்சில் அஞ்சியாரின் 90ஆவது பாடலுக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வழங்கிய திணை மருதம் துறை தோழி தலைமகளுக்குரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயின்மறுத்தது, பரத்தையிற்பிரிந்த தலைமகனால் விடுக்கப்பட்டு வாயில் வேண்டிவந்த பாணன் கேட்பத் தோழி தலைமகளை நோக்கி நின் காதலன் முயங்கும் பரத்தையருள் பெண்டன்மையறியாப் பெதும்பைப் பருவத்தாளொருத்தி ஊசலாடாது அழுது நிற்பதை ஆற்றுவித்து, மீட்டும் ஆடச்செய்யாத அவனது அவை பயனுடையதன்று; அவளழுதூடினமையின் இங்கு வந்தான்போலுமென வெகுண்டு கூறாநிற்பது. ஆனால் இந்தப் பாடலுக்குள் இத்துறைக்குறிப்பிற்கான எந்த ஒரு ஏதுவும் இல்லை. அப்பாடலில் காட்டப்படுவது எல்லாம் விழாக்களால் ஓசை பெற்ற மூதூர்; வறுமையற்ற நிலையில் இடையறாது துணி துவைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் புலைத்தி. அவள் தந்த கஞ்சியிட்டு உலர்த்திய பூத்தொழிலை உடைய ஆடையை அணிந்த இளைய பெண். மூதூர், வேந்தன் ஆகிய சொற்கள் இப்பாடலை மருதத்திணைக்கு உரியதாக அடையாளங்காட்டுகின்றன. ஆனால் அவ்விளைய பெண் பரத்தை என்பதற்கு எந்த அகச்சான்றும் இல்லை. இப்பின்புலத்தில் சக்தி ஜோதி இப்பாடலுக்கு அளித்துள்ள விளக்கம் விதந்து சுட்டத்தக்கது. அப்பகுதி வருமாறு,
இன்றைக்கும் கிராமப்புறங்களில் ஒருவழக்கம் இருக்கிறது. ஒருபெண், பூப்படைந்தவுடன் அவ்வூரின் உடைவெளுப்பவள் அளிக்கும் மாற்றுடையை அணிந்து கொண்டு வீட்டின் புறத்தில் சில காலம் ஒதுங்கியிருக்க வேண்டும். இதைப்பற்றி சசிகலாபாபு தனதுகவிதை ஒன்றில்,
வண்ணாத்தி கொடுத்த சேலையுடுத்தி
நல்லெண்ணையும் பச்சைமுட்டையும்
கலந்த சுவாசத்துடன்
அவள் முதல் மூக்குத்திப் பெற்றாள்.
இவரது இந்தக் கவிதைமூலம் வண்ணார் மாற்றுடை என்கிற இப்பழக்கம் தற்போதும் சில இடங்களில் தொடர்வதாக உணரமுடிகின்றது. அஞ்சில் அஞ்சியாரின் நற்றிணைப் பாடலில் அதுவரை சிறுமியாகக் குழந்தைமை நிறைந்தவளாக விளையாடிய இளமகள் முதல் பூப்பின் தினத்தில் அல்லது அதற்கடுத்த சில தினங்களில் தன்னுடைய விளையாட்டை விட்டு வெளியேறிதற்காக வருந்திய ஒரு பெண் எழுதிய வரிகளாக இந்தப் பாடல் அமைந்திருக்கலாம். முதல்நாள் வரைவிளையாடிய நினைவில் விளையாட ஓடிவருகிற சின்னவளை அங்கிருக்கும் பெரியவர்கள் கடிந்து சொல்லியிருக்கலாம். அல்லது அவளே கூட இனிமேல் இவ்வாறெல்லாம் விளையாடக்கூடாது எனஅந்த வீட்டின் பெரியவர்கள் சொன்னது நினைவுக்கு வந்து விசும்பியபடி நகர்ந்திருக்கலாம். இந்தக்காட்சியைப்பார்த்த ஒருவர் இந்தப்பாடலை எழுதியிருக்கலாம். (ப.78)
இப்பாடலுக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் எழுதியுள்ள உரை,
கூத்தயர்கின்ற விழாவின் ஒலியையுடைய இம்மூதூரின்கண்ணே ஆடைகளை ஆராய்ந்து கழுவுந்தன்மையிற் பெரிதும் தன் கை ஒழியாத வறுமையில்லாத ஆடையொலிப்பவள் இரவிலே தோய்த்த சோற்றின் கஞ்சியிட்டுப் புலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று; கரிய பனைநாரினாலே திரித்த கயிற்றைப் பிணித்துத் தொங்கவிட்ட வூசலிலேறிப் பூப்போல் உண்கண்களையுடைய தன் ஆயத்தார் அதனை ஆட்டவுந் தான் ஆடாளாய் அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் – அழுது மீளுகின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெண்தன்மையிற் குறைவுபட்ட சிலவாய வளைகளை யணிந்த பரத்தையாகிய பெதும்பைப் பருவத்தாள் ஓரிளமகளை;(1914:120)
மேலும் உரையின் இறுதிப்பகுதியில் பதவுரையாக நல்கூர்பெண்டு – பெண்தன்மையில்லாள். பெண்தன்மை, நாணமுதலியன. மாக்கள் – பாணன் முதலானோர். இப்பாடலில் இடம்பெற்றுள்ள நல்கூர் என்ற சொல்லுக்கு ‘வறுமைபட்ட’, ‘ஏழ்மையையுடைய’ என்பதே பொருளாக உள்ளது. குறுந்தொகை பாடலொன்றில் இச்சொல்லானது இப்பொருண்மையிலேயே வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அகராதி லெக்சிகனும் இப்பொருளையே தருகின்றது. ஆனால் நற்றிணையின் உரைகாரரே பெண்தன்மையில் குறைவுபட்ட அல்லது வறுமைபட்ட என்று பொருள்படுத்துகின்றார். பிறகு இது வாயில் வேண்டிவந்த பாணனுக்குத் தலைவி கூறிய மறுமொழி என்று துறையைக் கட்டமைக்கிறார். வறுமைபட்ட பெண் பரத்தையாக அல்லது பரத்தையின் மகளாகவே இருக்க வேண்டும் என்கிற உரைகாரரின் நோக்கு மேட்டிமைத்தனம் வாய்ந்ததாகவே உள்ளது. இந்நிலையில் நடைமுறையில் உள்ள சடங்கினைக் காட்டி சக்திஜோதி இக்கவிதையினை விளக்கியுள்ளது இப்பாடலை புதிய நோக்கில் அணுக உதவுகின்றது.
பொன்முடியாரின் ஈன்றுபுறந்தருதல் என்தலைக் கடனே என்ற பாடல், காவற்பெண்டு எழுதிய புலியிருந்து போகிய கல்லளை போல ஈன்றவயிறோ இதுவே தோன்றுவன்மாதோ போர்க்களத்தானே என்ற பாடல் இவ்விரண்டு பாடல்கள் குறித்த பதிவுகள் சிந்தனைக்குரியவை. பொன் முடியார் ஆணா பெண்ணா என்கிறவிவாதம் நடந்துள்ளதாகக் குறித்துள்ளார். அது குறித்து விளக்கியிருக்கலாம். ச.வையாபுரிப்பிள்ளை பாட்டும் தொகையும் நூலில் உள்ள பெண்பாற் புலவர்கள் பட்டியலில் இவர்பெயர் இடம்பெறவில்லை. உ.வே.சா.வின் பதிப்பிலும் பாடினோர் வரலாற்றில் பெண் என்று குறிக்கவில்லை. மகடூஉ முன்னிலை நூலில் பெண்பாற்புலவராகக் குறிக்கப்பட்டிருக்கலாம். வீரம், மறம் என்றெல்லாம் புனைந்துரைக்கப்படுகின்ற போர் குறித்த பெண்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது குறித்த சக்திஜோதியின் கருத்துகள் கவனம் பெறத்தக்கவை. ஏனென்றால் பெண்ணை இச்சமுதாயம் தொடர்ச்சியாக ஒரு சார்புயிராகவே கட்டமைத்து வந்துள்ளது. இந்த நூலிலும் அக்கருத்து பரக்க பேசப்பட்டுள்ளது. பெண் என்பவள் எப்போதும் யாருக்காகவேனும் காத்திருப்பவளாகவே இருப்பது. இந்த நிலையில் போர் என்பது எத்தகு மனநிலையினைப் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இதில் பொன்முடியாரின் பாடலைப் பொறுத்தவரை முதலடிக்கு இவர் அளித்திருக்கும் விளக்கமே அப்பாடலின் முழுக்கருத்தையும் கூறிவிடுகிறது. என் தலைக்கடன் என்பது ஒரு பெண்ணிற்கு வாரிசினை உருவாக்கித்தருவதே பெருங்கடனாக இருப்பதனை உணர்த்துகிறது. தந்தை, கொல்லன், வேந்தனுக்கெல்லாம் தலைக்கடன் என்றில்லாமல் பொதுவாகக் கடன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்கிறார். பெண்ணை மையமிட்டே சமூகம் இயங்கியிருக்கின்றது. எனவே பெருமித உணர்வில் இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது. பிறிதொரு நிலையிலான பெருமிதத்தை காவற்பெண்டின் பாடல் உணர்த்துகின்றது. குறிப்பாகத் தன் உடலைக் கொண்டாடுதல் என்று சக்திஜோதி அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. போர், அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புகள் பெண்களுக்குத் துன்பத்தைத் தருகின்றவையாக இருப்பினும் அதனை அவள் ஏற்றுக்கொள்ளவும் கொண்டாடவும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்கிற கருத்தினை சக்திஜோதி வலிமையாக முன்வைக்கிறார். இது குறித்துமேலும் விவாதிக்க வேண்டிய தேவையுள்ளது.
இறுதியாக வைத்துள்ள ஔவையார் குறித்த கட்டுரை இந்நூலிற்கு மகுடம். இருப்பதிலேயே பெரிய கட்டுரை. கிரேக்கப் பெண்கவிஞர் சாப்போவின் கவிதைகள், ஹீப்ரு மொழிக்கவிஞர் தெபோரா, சமஸ்கிருத மொழியில் கல்வியறிவு பெற்ற பெண்களான கேலா, முத்கலானி, சுலபா, அபாலா…,தேரிகாதை பாடிய சியாமா, உத்தரா, வட்டேசி சிம்ஹா, காதா சப்த சதியில் இருக்கன்ற ரோஹா, ரேவா, நாதா எனத் தொன்மை மொழிகள், மதங்கள் சார்ந்த பல பெண்பாற்புலவர்களின் கவிதைகளையும் கருத்துக்களையும் எடுத்துக்காட்டி ஔவையின் முட்டுவேன் கொல் தாக்குவென் கொல் கவிதையை இவர் விவரித்திருக்கும் முறை சக்திஜோதியின் பரந்துபட்ட வாசிப்பினைக் காட்டுகின்றது.
இதை தன்னுடைய முதல் உரைநூல் என்று சக்திஜோதி குறித்துள்ளார். இந்த ஆய்வுப் பரப்பில் இவர் இன்னும் பயணிக்க வேண்டும். அதற்கான தேவை உள்ளது. பேட்ரிசியா மேயர் தன்னுடைய நூல் குறித்த கூறியுள்ள முடிவு இந்நூலுக்கும் பொருந்துகின்றது.
This book is an investigation of some possibilities – not a history of women’s writing; indeed, explicitly anti historical in orientation, but an examination of the ways the life of the imagination emerges in the work of women writing prose directly as women. (1975:18)
துணை நூல்கள்
1914 நற்றிணை மூலமும் உரையும், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (உ.ஆ.), சைவ வித்யாநுபாலனயந்திரசாலை, சென்னை.
1965 Provisions: A reader from 19th century American women (1781 – 1914), Judith fetterly, Indiana university press, Bloomington
1975 The Female Imagination: A Literary and psychological investigation of women’s writing, Patricia Meyer Spacks, Newyork.
2016 தமிழ்த் தொகுப்பு மரபு எட்டுத் தொகை பனுவல்கள், சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம், சென்னை
2017 சங்கப் பெண்கவிதைகள், சக்திஜோதி, சந்தியா பதிப்பகம், சென்னை
முனைவர் சே.கல்பனா
உதவிப்பேராசிரியர்
தமிழியல்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தமிழ் சூழலில் இடையறவு படாமல் வாசிக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்ட/ செய்யப்படும் பிரதியாக விளங்குவது திருக்குறள். இடைக்காலமாகிய 9 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்ப் பனுவல்களுக்கு உரைகள் பல தோன்றின. இடைக்காலத்தை உரையெனும் கயிற்றால் பிணிக்கப்பட்ட காலம் என்பர் வ.சுப. மாணிக்கனார். திருக்குறளுக்கு எழுந்த முதலுரை/கிடைத்த உரை மணக்குடவர் உரை. இருப்பினும் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் பல பதிப்புகளைக் கண்டதும் மிகுதியாக வாசிக்கப்பட்டதும், உரைக்கே பல உரை தோன்றியதும் பரிமேலழகர் உரை. பரிமேலழகருக்கு முந்தைய உரையாளர்கள் ஒவ்வொரு அதிகாரத்துள்ளும் குறள் வைப்புமுறையைத் தங்கள் வாசிப்புக்குத் தக மாற்றி வாசித்திருந்தாலும் இன்று நாம் பரிமேலழகர் குறள் வைப்பு முறையினையே பின்பற்றுகின்றோம்.
ஆய்வுலகில் புதிய புதிய முறைமைகளைப் பயன்படுத்தும் இற்றை நாட்களில் பழம் பிரதிகளை மறு வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அந்நிலையில் பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு உரையெழுதிய பரிதியாரைப் பற்றிய உரையாடல் அவசியமாகின்றது.
பரிதியின் உரையில் இலக்கணச் செறிவோ, இலக்கிய நுட்பமோ இருப்பதைப் பார்க்க முடியாது. ஆனாலும் இவர் உரையினை வாசிக்கப் புகும் வாசகன் அவ்வுரையில் ஒரு எளிமைத் தன்மை இருப்பதை உணரலாம். பரிதியார் வைதீகப் பின்னணியில் சைவ சமயம் சார்ந்த கருத்தாடலைக் குறள் விளக்கத்திற்குப் பயன்படுத்துகின்றார். இவரது உரை பொழிப்புரை போன்றோ விளக்கவுரை போன்றோ அமையாமல் குறள் கருத்தினையறிந்து கொண்டு தம் விருப்பத்திற்கேற்ப, மிகுத்தும் குறைத்தும் பொருள் கூறுகின்றார். மேலும் சில குறள்களுக்கு விளக்கம் தரும்போது ஒற்றை வரியிலும், சில குறள்களுக்குப் புராணக் கதைகளை மேற்கோளாகவும், பிரசங்கம் போலவும், காணப்படுகிறது. சில இடங்களில் குறளுக்கும் பொருளுக்கும் தொடர்பு இல்லாத நிலையிலும் உள்ளது. வடசொற்களும், வழக்குச் சொற்களும் மிகுந்து காணப்படுகின்றன. குறளையும் இவரது உரையையும் ஒற்றுமைப்படுத்தி அறிந்து கொள்ளுதல் ஒரு கயிற்றலாகிய பாலத்தில் காவிரியைக் கடக்க நினைத்தலை ஒக்கும் என்பர் ச.தண்டபாணி தேசிகர். இவரது உரையில் பாலின் தொடக்கத்தில் விளக்கவுரையோ, இயல் பிரிப்புப் பற்றிய ஆராய்ச்சியோ இல்லை. அதிகார முறை வைப்பைத் தொடர்ப்புபடுத்திக் காட்டல், ஒரே அதிகாரத்திற்குள் குறட்பாக்களைப் பொருள் நோக்கிப் பிரித்து அமைத்தல் ஆகிய முறைகளும் இல்லை.
பெயர் விளக்கம்
பருதியார், பரிதியார் என இவர் அழைக்கப்பெறுகின்றார். பரிதி பருதி இரண்டுமே வட்டதைக் குறித்து ஞாயிற்றைக் குறிக்கும் பெயர்கள். பரிதியார் என்னும் பெயர் பாடலின் எதுகை நோக்கி பருதியார் என வழங்கப்பட்டது எனலாம்.
பரிதியார் என்னும் பெயரினைக் கொண்டு இவர் ஊர் தஞ்சைக்கு அருகில் உள்ள திருப்பரிதி நியமமாகயிருக்கலாம் என மு.வை. அரவிந்தன் கருதுகின்றார். இக்கோயில் பாடல் பெற்ற தலமாக அமைந்துள்ளது. திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் இவ்வூரைப் பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதி நியமம் எனக் குறிப்பிடுகின்றார்.
பரிதியார் உரை – பதிப்பு
1812 – இல் திருக்குறள் மூலநூல் அச்சேற்றப்படுகின்றது. அதன் பிறகு பரிமேலழகர் உரையுடன் பலமுறை அச்சேற்றப்பட்டது. பரிதியின் உரை 1935- இல் பதிப்பிக்கப்பட்டதாக ச.தண்டபாணி தேசிகரும் 1938- இல் பதிப்பிக்கப்பட்டதாக ச.மெய்ப்பன் வள்ளுவம் இதழிலும் குறிப்பிடுகின்றனர். பதிப்பித்தவர் துடிசைகிழார் என்னும் குறிப்பும் காணப்பெறுகிறது. பதிப்பினைத் துடிசைகிழார் கிருஷ்ண விலாச பிரஸ், கோயம்புத்தூரில் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பு மறைமலையடிகள் நூலகத்தில் 14 அதிகாரத்துக்கு மட்டும் கிடைத்துள்ளது. இப் பதிப்பில் பரிதியாரின் குறள் வைப்பினைப் பின்பற்றி, மணக்குடவர், பரிமேலழகர் வைப்பு முறைகளின் எண்ணைக் குறிப்பிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முகப்புப் பக்கத்தில் திருக்குறள் – பரிதியுரை By துடியைகிழார் என்றும் கிருஷ்ண விலாசபிரஸ், கோயம்புத்தூர் என்ற குறிப்பு மட்டும் காணப்படுகின்றது. ஆண்டு பற்றிய எந்த குறிப்பும் குறிப்பிடப்படவில்லை.
இதன் பிறகு பரிதியார் உரை தனித்துப் பதிப்பிக்கப்பட்டாதாகத் தெரியவில்லை. 1951- இல் திருக்குறள் பழைய உரைகள் தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்ட போது பரிதியின் உரையும் தொகுக்கப்பட்டுள்ளது.
ச.தண்பாணி தேசிகர் 1951 – இல் தொகுத்த திருக்குறள் உரைவளம் பதிப்பு முன்னுரையில்,
இப்பதிப்பு வெளிவர ஒப்புநோக்கக் கிடைத்த ஏடுகள் பல செய்யாமற் செய்த உதவியையுடைய ஏடு தேடித் தந்த இன்றமிழ்ப் பெருமக்களை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.
இங்ஙனம் ஏடுகள் அளித்துத் தமிழாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் அடியேன் செய்யும் கைமாறு யாதுளது என்று குறிப்பிடுகின்றார்.
இதனைத் தொடர்ந்து 1963 – இல் கோவை இராம கிருஷ்ணா மடம் வெளியிட்ட திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு என்னும் தொகுப்பிலும், 1969 – இல் திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்டுள்ள திருக்குறள் உரைக்கொத்திலும் பரிதியின் உரை தொகுத்து பதிப்பிக்கப் பட்டுள்ளது. ச. தண்டபானி தேசிகர் 1981 – இல் மீண்டும் மதுரைப் பதிப்பகத்தின் வழி திருக்குறள் உரைக் களஞ்சியம் என்னும் தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளார்.
காலம்
பரிதியாரின் காலத்தைச் சில அகப் புறச் சான்றுகளின் வழி அறியலாம். கி.பி. 13 – ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த விசய கண்ட கோபாலன் என்னும் தெலுங்கு சோழனின் 22 – ஆம் ஆட்சியாண்டில் கி.பி (1271) கிடைத்த கல்வெட்டு ஒன்று வண் துவரப் பெருமாளான பரிமேலழகிய பெருமாள் தாதன் என்னும் பெயரைக் குறிப்பிடுகின்றது. இப்பெயர் பரிமேலழகரையே குறிக்கிறது என்பர். பெருந்தொகைப் பாடல் ஒன்று,
செவ்வி முப்பாலுக்கு
ஒர்உரை யின்றி ஒன்பது சென்றும்
ஐயுற வாக நையுறு காலை
குறட்பாத் தமிழ்மனு நூலிற்கு
விழுபொருள் தோன்ற விரித்தினிது உரைத்தனன்
பரிமேலழகன் எனப் பெயர் படைத்துத்
தரைமேல் உதித்த தலைமை யோனே
எனக் குறிப்பிடுவதால், பரிமேலழகருக்கு முன் ஒன்பது உரையாசிரியர்கள் இருந்துள்ளனர் என்பதும் அவர்களுள் பரிதியாரும் ஒருவர் என்பதும் தெளிவாகின்றது. அத்துடன் தனிப்பாடலும் பரிமேலழகருக்கு முன் பரிதியாரைக் குறிப்பிடுகின்றது. மேலும்,
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள (223)
என்ற குறளுக்கு யான் வறியவன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், இவை இரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே என்று விளக்கம் கூறிய பின்னர், பரிமேலழகர் இனி இலனென்னும் எவ்வம் உரையாமை என்பதற்கு அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையில் கொடுத்தல் எனவும் உரைப்பார் உளர் என மணக்குடவர் மற்றும் பரிதியின் உரைகளை எடுத்துக்காட்டுவர். அதே போல்
நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்
பகையும் உளவோ பிற (304)
என்னும் குறளுக்கு முகத்தில் சிரிப்பும் மனத்தில் களிப்பும் கொல்லுகின்ற சினத்திலும் எனப் பரிதியார் உரையைப் பின்பற்றி பரிமேலழகர் முகத்தின்கண் நகையும், மனத்தின்கண் உவகையும் கொன்று கொண்டு எழுகின்ற சினம் என உரைக்கின்றார்.
பரிதியார் அவருக்கு முன் வாழ்ந்த காலிங்கரின் உரையைச் சில குறளில் அப்படியே எடுத்து ஆண்டுள்ளார். ஒழுக்காறாக் கொள்க(616), கொடுப்பது அழுக்கறுப்பான்(163), அவ்வித்து அழுக்காறு(167),பல்லார் முனிய(191),நயனிலன்(193) நயன்சாரா(194) அதேபோல குறள் வைப்பு முறையிலும் காலிங்கரும் பரிதியும் பெரிதும் ஒத்துக்காணப்படுகின்றனர்.
புறப்பொருள் வெண்பா மாலையில் குறிப்பிடப்படும் எண்வகை மாலையினையும், ஆண்டாள் குறிப்பிடும் மார்கழி நீராடலையும் பரிதியார் தமது உரையினில் குறிப்பிடுவதால் அவர்களுக்குப் பின் வாழ்ந்தவர் என அறியமுடிகின்றது
பரிமேலழகருக்கு முன் ஒன்பது உரையாசிரியர்கள் இருந்துள்ளனர் என்பதும், பரிமேலழர் உரையில் பரிதியார் உரையை எடுத்துக்காட்டியும் அவர் உரையைப் பின்பற்றி உரை எழுதியுள்ளமையிலிருந்தும் பரிதியார் அவருக்கு முன் வாழ்ந்த காலிங்கரின் உரையை பின்பற்றுவதாலும். ஐயனாரிதனார், ஆண்டாள் பாடல்களில் காணப்படும் எட்டுவகை மாலை மார்கழி தீர்த்தம், பற்றி பரிதியார் உரையில் குறிப்பிடுவதில் இருந்தும், பரிதியார் கி.பி 13 – ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கருதலாம். எனவே பரிதியாரின் காலம் பரிமேலழகருக்கு காலத்திற்கு முன், அதாவது 13 – ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கொள்ளலாம்.
சமயம்
பரிதியார் சைவ சமயம் சார்ந்தவர் என்பதற்கு இவரது உரையிலேயே பல சான்றுகள் உள்ளன. கடவுள் வாழ்த்தில் கற்றதனாலாய என்னும் குறளுரையில் நற்றாள் என்பதற்குச் சிவன் ஸ்ரீபாதம் என்று பொருள் உரைக்கின்றார். மலர் மிசை ஏகினான் என்பதற்கு, பக்தசனங்களிட்ட புஷ்பத்தின் மேல் எழுந்தருளியிருக்கும் சிவன் ஸ்ரீபாதம் எனவும் இறைவன் பொருள் சேர் புகழ் என்பதற்குச் சிவகீர்த்தி என்றும் அறவாழி அந்தணன் என்பதற்கு, தன்மம் என்னும் சமுத்திரமாகவுள்ள பரமேசுவரன் என்றும் பொருள் கூறுகின்றார். கோளிற் பொறியில் குணமிலவே (9) என்னும் குறளில் எண்குணத்தான் என்பதற்கு எட்டுகுணமாவன அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாம மின்மை, கோத்திரமின்மை, அவா வின்மை, அழியா இயல்பு எனச் சைவ சமயச் சார்பாக விளக்கம் தருகின்றார்.
வாய்மை அதிகாரத்தில் உள்ள பொய்யாமை அன்ன என்னும் குறளில்(269) எல்லா அறமும் தரும் என்பதற்குச் சிவபுண்ணியம் எல்லாம் உண்டாம் என்கிறார்.
பொருட்பாலில் முறைசெய்து என்னும குறளுரையில்(388) மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்பதற்கு உலகத்தை இரட்சிக்கின்ற பரமேஸ்வரன் என்று எண்ணப்படும் என்றும் யான் எனது(310) என்னும் குறளுரையில் துறந்தார் என்பதற்கு, தொண்ணூற்றாறு தத்துவத்தையும் உடலோடே துறந்தார் என்றும் பொருள் கொள்கிறார்.
உரையில் மணிப்பிரவாளம் நடை
மலர்மிசை (3) – பக்த சனங்களிட்ட புஷ்பத்தின்மேல் எழுந்தருளி இருக்கும் சிவன் ஸ்ரீபாதத்தை மனசிலே பற்ற வைத்தார் பூமியின் கண் சகல பாக்கியமும் அனுபவிப்பார்.
வீழ்நாள் படாஅமை(35) – அவமே நாட்போகாமல் தன்மமே செய்க. அது இனிமேல் சென்மமே இல்லாமல் சென்ம வழியை அடைக்கும் கல்.
புகழ்புரிந்(59) – இன்னாள் பதிவிரதை என்று சொல்லும் சொல் பெறாத மடவாரை மனையாளாகவும் உடையான். தன்னை வேண்டார் முன்னே இன்னார் ரிஷபம் போல திரிகிறான் என்று ஏசுதற்கு இடமாவான்.
இடிப்பாரை(447) – அடிச்சுப் புத்தி சொல்லுகின்ற பெரியோரையல்லாமல் தன் விபரீத புத்தியினாலே மிகுந்த மன்னவன், கெடுப்பார் இல்லாத போதும் தானே கெடுவான்.
இருநோக்கு(1091) – இரண்டு பார்வை உண்டு நாயகிக்கு ஒரு பார்வை விரகம் தரும். ஒரு பார்வை விரகத்துக்கு மருந்தாகிய அமுதப் பார்வை கொடுக்கும்.
உரையில் வழக்குச் சொல்
நானாபதார்த்தம்(52),வேணும்(116) கனவிலும் பிறவாது(139) எப்படி என்றால்(140)வயிறு வளர்ப்பது(183) சுட்டுப்போடும்(202),பூமிவெட்டுகிற பேரையும் தாங்கும்(151) தன்ஆன்மா ஈடேறப் பார்பானை(268) சுட்டசோறு, மண்ணினால் பண்ணின பொம்மை(407) சிரிக்கச் சொல்லிக் கெடுக்காமல், அடிச்சு புத்தி சொல்லுகின்ற பேர்(447)
கதையுடன் கூடிய உரை
பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பொருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு(58)
பர்த்தாவும் பூலோகமும் இவன் பதிவிரதை என்னும் மனமகிழ்ந்த கற்பினால் பெறுவள், தேவர்கள் செய்யும் சிறப்பை. இதற்கு ஒப்புமையாகக் கண்ணகியாளைக் கண்டு கொள்க.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு(269)
தலையெழுத்து முடிந்துவர அப்போது கூற்றுவனையும் வெல்லலாம். தவத்திற் பெரியர்க்கு அதற்கு நந்திகேசுவர தேவனையும் மார்கண்டேயனையும் கண்டு கொள்க.
யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற(300)
ஆத்மாவைச் சென்னத்திலே தள்ளாமல் திருவடியிலே சேர்ப்பது சத்தியவாக்கியம் அன்றி, வெறொன்று கண்டிலேம்; அசத்தியம் சொன்ன தரும்புத்திரன் நரகங்கண்டான் சத்தியம் சொன்ன அரிச்சந்திரன் ஸ்ரீ பரமேஸ்வரன் பாதம் கண்டு சிவலோகம் சேர்ந்தான்.
பிரசங்கம் போன்ற உரை
நோயெல்லாம் நோய்செய்தார் மேலாவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்(326)
ஒருவருக்குத் தான் செய்த விதனம், பின்பு தனக்கு வருகின்ற படியினாலே ஒருவருக்கும் தாங்கள் விதனஞ் செய்யார். அஃது எப்படி என்றால், பிரம்மராட்சதன் ஒரு ராசாவின் மகளைப் பற்றி நின்று சந்தியாவதனம் செய்ய ஆற்றங்கரையிலே வந்து நின்றளவில், பிராமணப் பிள்ளையின் பிள்ளை வாசிக்கிறவனுக்கு அன்றையிற் பாடம் இந்தக் குறள் ஆகையால் அவன் முகசுத்தி பண்ண வந்தான். இதைப் பிரம்மராட்சதன் கேட்டுத் தானொரு பிராமணவடிவாய், இந்தப் பிள்ளை வாய்பாடத்தை இரண்டு பிரகாரங் கேட்டு , நாம் இராசாவின் மகளை நோய் செய்தோமே, நமக்கு அந்த விதனம் பிறகே வரும் என்று பயப்பட்டு, இந்தப் பிள்ளை முன்னிலையாக இராச குமாரத்தியை விட்டுப்போச்சு .
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு அதுவிளிந் தற்றே(332)
சந்தையிற் கூட்டம் நாலுபேரும் ஆறுபேரும் வந்து சந்தையில் காரியங்கண்டு மீண்டும் போவார்கள். அப்படி அல்ல செல்வம் எப்படி என்றால், கூத்தாடல் பார்க்க நாலு பேரும் ஆறுபேரும் வந்து கூத்துக்கண்டு, கூத்துக் குலைந்த போது ஒருகாலே பிரிந்து ஒடுவார்கள். அதற்கு ஒக்குமே செல்வத்தின் கூட்டம், எப்படி என்றால் இவன் செய்த புண்ணியத்திற்குத் தக்கதாக இலட்சுமி இருப்பாள், இவன் தவசு மாறி இலட்சுமி போன பின்பு அக்கினி, கள்ளார், இராசா, ஆறு இவையிற்றினாலே செல்வம்போம், இஃது அறிந்து உள்ளபோதே தன்மம் செய்வான் என்றவாறு?
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
நல்லோரும் நல்லோரும் மனப்பூரணமாகக் கூடியிருந்து. பிரிகிறபோது ஒருவரை ஒருவர் அனவரதகாலமும் நினைத்திருப்பர்.அதுபோல,கற்கும்போது பிரியத்துடனே கற்க, கற்றுவிட்டால் கற்ற கல்வியை மறவாது அதிகரிக்க.
குறளினும் சுருங்கியபொருள்
ஏரி னூழார்அ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்
உழவர் ஏருழார் ; மேகம் மழை பெய்யாவிடில்
அகனமர்ந்து செய்யா ளுரையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்(82)
மனமகிழ்ந்து விருந்து செய்வானிடத்தில் லட்சுமி உறையும்
உறங்கு வதுகோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு(339)
நித்திரை போல மரணம் விழிப்பது போல பிறப்பு
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்(907)
நாயகர் வாராக்காலும் நித்திரை இல்லை ; வந்தாலும் கலவியினால் நித்திரை இல்லை.
சமூக நிலை
பொறை ஒருங்கு(733(கேடறிய(736)ஆங்கமை(740) என்னும் குறள்களில் வேந்து, இறை என்னும் சொல்லுக்குப் பிற உரையாசிரியர்கள் அரசன், வேந்தன், காவலன் என்று உரையெழுத பரிதியார் நாட்டாமைகாரண் என்றே எழுதுகிறார்.
தெய்வம் தொழாஅள்(55) இதற்குக் குலதெய்வம் கும்பிட்டாள் தன் பர்த்தாவை தெய்யவமென்று தொழுதபடியால் அவள் சொல்ல மழைபொழியும் மார்கழித் தீர்த்தம், மகா தீர்தம் ஆடல் என்றும் யாண்டுச்சென் றியாண்டும்(895) என்பதற்கு எங்கு சென்றாலும் எனப் பிற உரையாசிரியர்கள் உரையெழுத எந்த தேசத்தில் போய் பல தீர்த்தம் ஆடினாலும் என உரை வரைகின்றார்.
வறியார்க்கொன்(221) இதற்கு வறியார்க்குக் கொடுப்பதே கொடை மற்றெல்லாம் வட்டிக்குக் கொடுப்பதை ஒக்கும் என்றும் உள்ளத்தா லுள்ளலுந்த தீதே(282) என்னும் குறளுக்குத் தவஞ்செய்வார்க்குப் பக்தர்கள் இரங்கிக் கொடுக்கும் பொருள் அன்றியிலே ஒரு திருப்பணி போலே காட்டி வாங்குதல். தன்னுயிர் நீப்பினும்(237) என்பதற்குத் தன்னுயிர் துறக்கும் காலமாகினும் இது பிழைக்கும் என்று ஆடு, கோழி, பன்றியினைப் பிராத்தனைச் செய்வான் என்றும் விளக்கமளிக்கிறார்.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து (738)
என்னும் குறளுக்கு விளைவு என்பதற்கு விளைவுடமை என மணக்குடவரும், பரிப்பெருமாளும்
பொருளுரைக்க, விளைநுகர் பொருளெனக் காலிங்கரும் பரிமேலழகர் விளைச்சல் என்றும் கூறப் பரிதியார் பதினாறு தானிய விளைவு என்று கூறுகின்றார் நெல், புல், வருகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இருசி, எள்ளு, கொள்ளு, பயறு, உளுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை சந்தை குறித்த செய்தி பதிவுசெய்கிறார். பரிதியார் தாம் வாழும் காலத்து நடைமுறைகளில் இருந்த சில பழக்கவழக்கங்களைத் தமது குறள் விளக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளார்.
குறள் வைப்புமுறை
பரிதியார் பால் குறித்த விளக்கங்களோ, குறள் வைப்புமுறை குறித்த ஆராய்ச்சியோ செய்யவில்லை. அதிகாரத்திற்கு விளக்கம் சுருங்கிய வடிவில் கூறுகிறார். 36 அதிகாரங்களுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்திற்கு விளக்கம் கூறுகையில் யாதொரு காரியமும் பதறாமல் விசாரித்துச் செய்யவேணும் எனக் கூறுவது, மணக்குடவரும் பரிமேலழகரும் அமைச்சர் முதலாயினரை ஆராய்ந்து தெளிதல் என்று கூறும் விளக்கத்தினும் செய்யும் வினையை ஆராய்ந்து செய்யவேண்டும் எனக் கூறுவது சிறப்புடையதாக உள்ளது.
குறள் வைப்பு முறையில் உரையாசிரியர்கள் பலரும் முதற் குறளில் 22 அதிகாரங்களிலும், இறுதிக் குறளில் ஒன்பது அதிகாரங்களிலும் ஒன்றுபடுகின்றனர். சிலருக்குத் தொடக்கக் குறளாக அமைந்தது பிறருக்கு முடிவாவும், பிறர் முடிவாகக் கொண்ட குறள் மற்றவருக்குத் தொடக்கமாகவும் அமைந்துள்ள தன்மையினைக் காணமுடிகின்றது. முதற்குறளில் பரிதியும் காலிங்கரும் பெரும்பான்மை ஒத்துச் செல்கின்றனர்.
பாடவேறுபாடு
பரிதியார் பிறர் கொண்ட மூலப்பாடத்திலிருந்து 21 குறட்பாக்களில் 22 இடங்களில் வேறுபடுகின்றார்.
பாடவேறுபாட்டுக்கான காரணம்
பரிதியார் – பரிமேலழகர்
1.துப்பாற்குத், துப்பார்க்குத்(12)
2.கணமேனும், கணமேயுங்(29)
3.தீண்டில், தீண்டல்(65)
4.சொற்கேட்கில், சொற்கேட்டல்(65)
5.இமைப்பிற்கெடும், நினைக்கப்படும்(169)
6.நன்மையும்நீங்கும், நன்மையின் நீங்கும் (194)
7.நல்லார் எனினும், நல்லாறு எனினும்(222)
8.ஆகும், ஆளும்(251)
9.கொள்வேம், கள்வேம்(282)
10.தனத்தொடு, தவத்தொடு(295)
11.அனைய, அனையர்(310)
12.இன்னாசெய்யாமை, மாணாசெய்யாமை(317)
13.நலன், இலன்(314)
14.செவிக்குணர்வு, செவிக்குணவு(412)
15.செவியுணர்வின், செவியுணவின்(413)
16.கேள்வியஃதில்லார், கேள்வி அல்லார்(419)
17.கைதீமை, கலந்தீமை(1000)
18.தானைக் ண்டன்ன, தானைக்கொண்டன்ன(1082)
19.பேரமர்க்கட்பட்டு ,பேரமர்க்கட்டு(1083)
20.விழியுமென், விளியுமென்(1209)
21.அழியின்மை ,அளியின்மை(1209)
22.நோவேல் அவரைக், நோவேம் இவர்தம்(1236)
மேற்கண்ட பட்டியலில் பாடம் வேறுபாடு, மூலபாடத்தில் சில எழுத்துகளை மட்டும் மாற்றி உள்ளார் (‘ர்’ ‘ற்’ ’ங்’ ‘ம்’), அதுபோலவே ஒரே பொருளைத் தரக்கூடிய நிகரன் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் இமைப்பிற்’ நினைக்கப்படும்) எனவும் ஒரூஉ நடைகேற்ற பாடம் ‘மனத்தொடு’ ‘தனத்தொடு’ எனவும் அமைந்துள்ளதைக் காணலாம்.
நயமுடைய பாடம்
கொள்வேம் எனப் பாடங் கொண்டு திருப்பணி போலே காட்டி வாங்குதல் எனப் பொருள் விளக்கம் செய்கின்றார். இவ்விளக்கம் உலகியலுக்கு ஒதத்தாகக் காணப்படுகின்றது. அதுபோல நல்லார், தனத்தொடு, கேள்வியல்லாதில்லார் எனக் கொள்ளும் பாடங்களும் நயமுடையதாக இருக்கின்றது.
பொருந்தாப் பாடம்
அனைய, நலன், கைதீமை, தானைக்கண்டன்ன எனப் பாடங்கொண்டு உரையெழுதும் இடங்கள் பொருத்த முடையதாக அமையவில்லை.
உரைவேறுபாடு
பரிதியார் 25 இடங்களில் பிற உரையாசிரியர்கள் உரையிலிருந்து வேறுபடுகின்றார்.
உரை வேறுபடுவதற்கான காரணங்களாக,
எனப் பேரா. இரா. சாராங்கபாணி பட்டியலைக் கொடுக்கிறார். இதனடிப்படையில் பரிதியார் உரையை நோக்குழி,
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி(506)
இக்குறளில் அற்றார் என்பதற்கு ஒழுக்கம் அற்றார் என மணக்குடவர் உரையெழுதுகின்றார். பரிதியார் பொருளும் கிளையும் கல்வியும் அற்றாரை என விளக்கமாகப் பொருளுரைக்கின்றார்.
மணக்குடவர் கூறும் ஒழுக்கம் அற்றார் என்பதில் ஒழுக்கம், நற்குணம், நற்செயல் அனைத்தும் பொது சொல். ஆனால் பிரிதியார் கூறும் விளக்கம் பொருளற்றார் வறுமையாலும், கிளையற்றார் உலகில் ஒரு பற்றுக்கோடும் இல்லாமையானும் கல்வியற்றார் அறியாமையினாலும் தீய செயல்கள் செய்வாராகலின் அவரை நம்பாதே என்று கூறுவது மணக்குடவர் உரையினும் சிறப்புடையது.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்(969)
என்னும் குறளுக்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர்,பரிமேலழகர் ஆகியோர் ஒரு மயிர் நீங்கினால் கவரிமான் உயிர் விடும் என்ற ஒரே கருத்தைக் கூறுகின்றனர். பரிதியார் ஒரு மயிர் சிக்கினாலே என்று பொருள் கொள்கின்றார். மயிர் திரள்களில் ஒன்று சிக்கிய மாத்திரத்திலேயே உயிர் விடும் கவரிமான். தன் வாழ்க்கையில் மனத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்படுமாயின் உயிர்விடுவர் சான்றோர் என்பதைக் குறிப்பிட மயிர்ச்சிக்கலைக் கூறுகின்றார் .இக்க்ருத்து பிற உரையாசியரினும் வேறுபட்டு நுட்பமாக உள்ளது.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்(69) என்னும் குறளுக்கு, தான் பெற்ற காலத்தினும் மகிழும் என மணக்குடவரும் மற்றிவனைத் தான் முன்னம் ஈன்றெடுத்த அப்பொழுதினும் பெரிதும் மனமகிழும் எனக் காலிங்கரும் யாதும் அறியாத பெண்டிரும் மகிழ்வர் எனப் பரிப்பெருமாளும் தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மனம்மகிழும் எனப் பரிமேழகரும் பொருளுரைக்க ஈன்ற காலத்தில் ஆண்பிள்ளை என்று சொல்லக் கேட்ட மகிழ்ச்சியிலும் எனப் பரிதியார் பொருள் உரைக்கின்றார்.
பிறர் கூறா விளக்கங்கள் பரிதி உரையில் மட்டும் காணப்படுபவை
மனத்தது மாசாக மாண்டார் நீராடி(278) – மார்கழி தீர்த்தம், மகா தீர்த்தம்
நாளது ஒன்றுபோற் காட்டி(334) – ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று தோன்றும் நாள்
எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்(435) நெருப்பின் முன்னர் வைக்கோற் போர் பட்டது போலவும், தூறு போலவும் கெடும்.
கண்டு கேட்டு உண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்(1101) – விளக்குக் கண்டு அழிந்த விட்டிலும், யாழ் கேட்டு அழிந்த அசுணமும், இரை கண்டு அழிந்த மீனும், சென்பக மணம் உண்டு அழிந்த வண்டும், மெய்யின்பம் கண்டு அழிந்த யானையும் ஒவ்வொரு புலனால் அழிந்தன.
உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால்(1106) – தென்றற் கொடுமையாலும் சந்திரன் கொடுமையாலும் வற்றின சரீரத்தை நாயகி தீண்டச் தளிர்கையினாலே
சிறப்பான உரைப் பகுதி
ஆண்மை(148) – சமர்களத்தில் வெட்டி மீண்டு வருகின்ற ஆண்மையல்ல, பிறர்மனை நோக்காமை இருத்தலே ஆண்மை.
வன்மை(153) – வன்மையாவது மலையின் உச்சியின் மேலே ஒரு கல்லை ஏற்றுதல் கடுகிலே கடலை அடக்குதல் முதலியன.
பயன்மரம்(216) – பயன்படு மாமரம், பலாமரம், பனைமரம்
துறந்தார்(310) – தொண்ணூற்றாறு த்த்துவத்தையும் உடலோடு இருக்கையிலே புளியம்பழம் ஓடும் போலே துறந்தார்.
எழுபிறப்பு(62) – தேவர், மனிதர், மிருகம், ஊர்வன, நீர்வாழ்வன, பட்சி, தாவரம்
கோட்டுப்பூ (1313) – செண்பகப் பூ, பாதிரிப்பூ, புன்னைப்பூச் சூடினும்.
பொருந்தா உரைகள் போல் தோன்றுவன
பீலீபெய் சாக்காடும் அச்சிறும் பண்டம்
சாம மிகுத்துப் பெயின்(475)
இக்குறள் வலியறிதல் அதிகாரத்தில் மாற்றானின் வலியறிதலைப் பற்றி பேசுகின்றது அதனை அதிகார விளக்கத்தில் வலியறிதலாவது மாற்றான் சத்துவத்தை அறியவேண்டுமெனப் பரிதியாரும் பிற உரையாசிரியர்களும் பொருளுரைக்கின்றனர். இக்குறளுக்கு எளியவர் என்று பலரோடு பகை கொள்வான் தான் வலியனேயாயினும் பலர் தொக்கவழி வலியழியும் () என்று பொருள்படும்படிப் பரிமேலழகர் கூற, பரிதியார் நொய்ய பீலியாகிலும் கனமாக ஏற்றினால் வண்டி அச்சு முறியும்; அதுபோலப் பெலமில்லாதார் பலர் கூடினாலும் சத்துவமாம்; ஆகையால் அரசன் வீரராகாத பேரையும் கனம்பெறக் கூட்டிக் கொள்ளுவான் என அரசன் வலிமையில்லாதவர்களையும் தன் படையில் சேர்த்துக்கொள்ளவான் எனப் பொருள்பட உரையெழுதுகின்றார்.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு (432)
வேண்டும் வழி பொருள் கொடாமையும் நன்மையினீங்கிய மானமும் அளவிறந்த வுவகையும் அரசனுக்கு குற்றம் எனப் பரிமேலழகர் உரைக்க பரிதி குற்றம் என்றதும் தன் பேரிலே வராமல் அழகு உண்டாக நடப்பானாகில், இறையென்று சொல்லப்பட்ட சிவனும் இவனைப் பிரியமாக மனத்துக்குள்ளே கண்டிருப்பர் என விளக்கும் உரையில் இறையென்று சொல்லப்படும் சிவனும் இவனைப் பிரியமாக மனத்துள்ளே கண்டிருப்பார் என்று கூறுவது பொருத்தமாக அமையவில்லை.
நுனிக்கொம்ப ரேரினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும்(476)
அடிப்பனையில் நின்று மரத்தில் பழம் பறிக்காமல் நுனிக்கொம்பிலே ஏறினார் போல, கெட்ட புத்தியை எண்ணாமல் உறுதியான காரியத்தை விசாரிக்கில் அக்காரியம் பலிக்கும் எனப் பரிதியார் கொள்ளும் உரையில் கிளையில்லாத பனையைக் காட்டி உரை வகுத்தமை பொருந்தாது.
தும்மச் செறுப்ப வழுதா ணுமருள்ள
லெம்மை மறைத்திரோ வென்று(1318)
தும்மல் உண்டாகக் கண்ட நாயகி அழுதாள்; உமது நாயகி வாழ்த்தத் தும்முவ தன்றி இவள் வாழ்த்துத் தும்ம ஒண்ணாது என்று ஊடினாள். செறுப்ப என்பதற்று உண்டாக என்னும் பரிதியின் பொருள் எம்மை மறைத்திரோ என்னும் வரும் தொடரோடு இயையவில்லை. அதற்கு அடக்க என்னும் பொருளே பொருந்தும்.
பொருள்கோடல்
பரிதியார் திருக்குறளைப் புரிந்துகொள்ளுவதற்கு /பொருள் கொள்வதற்கு அடிப்படையாக சைவசமயத்தையும, புராணகதைகளையும், வழக்கில் பயன்பாட்டில் இருக்க கூடிய கதைகளையும் உவமைகளையும், வழக்குச் சொற்களையும கொண்டு, குறளின் கருத்தினை அறிந்து கொண்டு மேற்சொன்னவைகளை அடிப்படையாகக் கொண்டு பொருள்விளக்கம் செய்கின்றார்.
நிறைவாக
பரிதியாரின் உரையைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது,
முறையில் உரைவரைகிறார்.
உசாத்துணை
-மேகலா இராமமூர்த்தி
மக்கள் வாழ்வை அறம்செறிந்த, பொருள்பொதிந்த, இன்பம் நிறைந்த வாழ்வாக மாற்ற வழிகாட்டும் ஒப்பற்ற நூல் நாலடியார் என்பதற்கு இத்துணை வாரங்கள் நாம் கற்றறிந்த நாலடியார் செய்யுட்களே அங்கை நெல்லியென சான்று பகர்பவை.
நானூறு பாடல்களில் நயமிகு கருத்துக்களை வகுத்தும் தொகுத்தும் சொன்ன நாலடியாரில் நாம் இதுவரை பயின்ற பாடல்கள் பல. அவற்றில் சிலவற்றை ஒருமுறை மீள்பார்வை செய்து இத்தொடரை நிறைவுசெய்வது சிறப்பாயிருக்குமென எண்ணுகின்றேன்.
அம்மனிதன் இங்குதான் நின்றான், இருந்தான், கிடந்தான், தன் சுற்றம் அலற இப்போது உலகவாழ்வை நீத்துச் சென்றான் என்று சொல்லும்வண்ணம், புல்லின்மேல் நீர்த்துளியாய், விரைந்து மறைந்தழியும் மானுட வாழ்வில், நாளை செய்குவம் என்று எந்த நல்லறத்தையும் ஒத்திப்போடாமல் இன்றே அதுவும் இன்னே செய்துமுடித்தலே நன்று.
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை – இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால். (நாலடி – 29)
மாந்தர்கள் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி, பால் வேறுபாடின்றி, நரை திரை மூப்பு பிணி சாக்காடு என்பவற்றிற்கு உட்பட்டே ஆகவேண்டும். ஆகலின், அழியக்கூடிய யாக்கை மீதும், நிலையிலா எழில்கொண்ட காரிகையர் மீதும் பற்றுக் கொள்வதை ஒழிப்பதே அறிவுடைமையாகும்.
கீழ்மக்கள் அறிவற்றவகையில் தம்மை ஏதேனும் தகாதசொல் சொல்லிவிட்டாலும் மேன்மக்கள் அதற்காகச் சினந்து வன்மொழிகளால் அவர்களைத் திருப்பித் திட்டமாட்டார்கள் என்று மேன்மக்களின் அருங்குணத்தைப் போற்றும் நாலடி, அதற்குக் காட்டும் சான்று நினைந்தின்புறத்தக்கது.
கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. (நாலடி – 70)
நல்ல நாள் கேட்டறிந்து, அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டித் திருமணம்செய்து தன் காவலிற் புகுந்த மெல்லியளான அன்புடை மனையாட்டியும் அகத்திலிருக்க, ஒருவன் அயலான் மனைவியை அடையக் கருதும் பிறன்மனை நயத்தல் அறனில் இழிசெயலாகும்.
பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க – மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. (நாலடி – 86)
கைம்மாறு செய்யவியலா வறிஞர்க்கு உதவுவதே ஒரு நல்லாண்மகனின் கடமையாகும்; அஃதே உண்மையான ஈகையும் ஆகும். அதைவிடுத்துப் பதிலுதவி செய்யும் தகுதிபடைத்தார்க்கு உதவிடுதல் ’விளக்கமான கடன்’ என்னும் பெயருடைத்தேயன்றி அஃது ஈகையாகாது.
ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் – ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து. (நாலடி – 98)
ஊழ்க்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட நாலடியின் ஆசிரியர்கள், பண்டை வினைகளின் பலனை ஒருவன் இப்பிறவியில் அனுபவித்தே தீரவேண்டும். பல பசுக்களின் இடையில் விடப்பட்டாலும் இளைய ஆன்கன்றானது தன் தாயினைத் தேடித் தெரிந்தடைதலைப்போலத் தொன்று தொட்டுவரும் பழவினைகளும் தன்னைச் செய்த உரிமையாளனைத் தப்பாமல் தேடியடையும் தன்மையுடையவை என்கின்றனர்.
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு. (நாலடி – 101)
அழியா விழுச்செல்வமாகிய கல்வி கரையற்றது; ஆனால் மானுட வாழ்க்கையோ குறுகியது. இக்குறுகிய வாணாளில் நல்லனவற்றைக் கற்று அல்லனவற்றைத் தள்ளுதல் வேண்டும் என்பதை அழகிய உவமை வாயிலாய் விளக்குகின்றது நாலடி.
கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. (நாலடி – 135)
பிறருடைய அந்தரங்கக் கருத்துக்களைக் கேட்டலிற் செவிடனாய், அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன் நோக்குதலிற் குருடனாய், தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில் ஊமையனாய் ஒருவன் ஒழுகுவானாயின், அவனே மேன்மையுடைய மனிதனாவான். அவனுக்கு வேறாரும் அறமுரைக்கத் தேவையில்லை!
பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு. (நாலடி – 158)
எப்படிப்பட்டவரின் கேண்மை நன்று? எவருடையது தீது? என்பதற்கு நாலடி நவிலும் விளக்கமிது!
யானையை ஒத்த இயல்புடையாரது நட்பை நீக்கி, நாயை ஒத்த இயல்புடையாரது கேண்மையைத் தழுவிக் கொள்ளுதல் வேண்டும்; ஏனெனில், யானை பலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையே குற்றங்கண்டு கொல்லும்; ஆனால் நாயோ தன்னை வளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல் தன் உடம்பில் உருவி நிற்கும்போதினும் அவன்பால் கொண்ட அன்பால் வால்குழைத்து நிற்கும். எனவே பிழைபாராட்டாத இயல்புகொண்ட பண்பாளரையே அறிந்து நட்புச் செய்தல் வேண்டும்.
யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய். (நாலடி – 213)
”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்னும் புறநானூற்றுப் புலவர் பூங்குன்றனாரின் பொன்மொழியையே சற்று விரிவாக்கி நாலடியின் ஆசிரியர்கள் மொழிந்த நற்பாட்டு இது!
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான். (நாலடி – 248)
ஆதலால், நம் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் நாமே காரணம் என்பதையறிந்து பொறுப்போடு நடந்துகொண்டால் வெற்றி நிச்சயம்.
ஒருவன் ஒரு நூலைக் குறித்து அவையிலே பேசப்புகுமுன் பொழிப்புரை அகலவுரை நுட்பவுரை எச்சவுரை என்னும் நால்வகையுரைகளாலும் அந்நூலை ஆராய்ந்து தெரி(ளி)ந்து, அதன் விரிந்த பொருட்பெருக்கை அவையில் விளக்கிக் காட்டவேண்டும். அவ்வாறில்லையேல் அஃது உரையாகா!
பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் – பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு (நாலடி – 319)
பொன்னாற் செய்த கலத்தில் உணவூட்டிப் பாதுகாத்தாலும் நாயானது பிறர் எறியும் எச்சிற்சோற்றுக்குக் கண்ணிமையாமல் விழித்துக்கொண்டு காத்துக் கிடக்கும். அத்தன்மையாக, பெருமைக்குரியவனாகப் போற்றினாலும் கீழ்மக்கள் செய்யும் செயல்கள் அந்நிலைமைக்கு மாறாகவும் வேறாகவுமே இருக்கும். இதனை நாம் உணர்ந்து அவர்களைத் திருத்தும் வீண்முயற்சியில் நம்மை வருத்திக்கொள்ளாதிருத்தலே நன்று.
பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும் – அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யுங்
கருமங்கள் வேறு படும். (நாலடி – 345)
குடும்ப விளக்காய் அகத்துக்கு ஒளியூட்டும் இல்லாள் இல்லாத இல்லம் சிறவாது. அது கண்கொண்டு பார்த்தற்கியலாததொரு கொடிய காடாகும்.
மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம் – விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு. (நாலடி – 361)
ஆகவே, ஒழுக்கமிகு மனையாளைக் காத்தோம்பி, கள்ளமனமும் பொருள்நோக்கமும் கொண்ட விலைமகளிரைவிட்டு விலகியிருப்பதே போற்றத்தக்க நல்லாண்மை என்கின்றது நாலடியார்.
இவ்வாறு நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நற்கருத்துக்களின் கருவூலமாய்த் திகழ்கின்ற நாலடி எனும் நூலடியொற்றி நாம் வாழ்ந்தால் நம் வாழ்வு வளம்பெறும் என்பது திண்ணம்.
[முற்றும்]
*****
துணைநூல்:
1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
=======================
திருச்சி புலவர் இராமமூர்த்தி
————————————————–
நம் நாட்டு வயல்களில் எரு விட்டு, நெல்நாற்றை நட்டு , நீர்பாய்ச்சி வளர்க்கிறோம். அந்த நாற்றுக்களில் பால் பிடித்து உயர்ந்து ,நெல் காய்த்து முற்றிக் கதிர்கள் பெருத்து விளங்கும். பால் பிடித்த காலத்தில் நெற்பயிர் தலை நிமிர்ந்து நிற்கும். நெல் முற்ற, முற்றப் பெரிய கதிர்கள் உருவாகும். அப்போது நெற்கதிரின் கனம் தாங்காமல் பயிரே தலை சாய்ந்துத் தரையை நோக்கும்.இதனைத் திரைப்படங்களில்,
‘’பச்சை வண்ணச் சேலைக்கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா!
பருவம் கொண்ட பெண்ணைப் போல நாணம் என்ன சொல்லம்மா!’’
என்று கண்ணதாசனும்,
‘’வளர்ந்து விட்ட பருவப்பெண்போல் உனக்கு வெக்கமா ? – தலை
வளைந்து சும்மா பாக்குறியே தரையின் பக்கமா, – உன்னை
வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா ?’’
என்று மருதகாசியும் பாடுகிறார்கள்.
வயலில் நீர் பாய்ச்சுவதற்காகச் சிறுவாய்க்கால்களை மண்வெட்டியால் உருவாக்குவார்கள்! அதன் இருமருங்கிலும் மண்ணை அணைத்து வரப்புக்களை அமைப்பார்கள்! உயர்ந்து வளர்ந்த நெற்கதிர்கள் நடு வரப்பில் தலை சாய்த்துக் கிடக்கும். பாத்தி பிரித்தாலும் பயிர்கள் பாசத்துடன் ஒன்றையொன்று தழுவிக் கிடக்கும் காட்சியைச் சேக்கிழார் பெருமான் பார்க்கிறார். அவர்,
‘’மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி ‘’
நிற்கின்றன என்கிறார். அந்தக் காட்சி சேக்கிழார் திருவுள்ளத்தில் , வேறோர் அழகிய காட்சியை நினைவுக்கு கொண்டு வருகின்றது. சிறந்த சிவனடியார்கள் ஒருவரை ஒருவர் காணும்போது, சிவபக்தி மேலிடச் சிவனடியார்களையம் சிவனென்றே எண்ணித் தலைதாழ்ந்து வணங்குகிறார்கள். அந்தக் காட்சியை இந்த நெற்பயிர்கள் நினைவூட்டுகின்றன.
நெல் நாற்று முளைத்து வளரும்போது பச்சைப் பாம்பு சூல் கொண்டது போல் இடையில் பருத்து நுனியில் சிறுத்துக் காணப்படும். அதுவே மேலும் வளர்ந்து முற்றாத கருக்காயுடன் இருந்தால், கீழானவர் சிறிது செல்வம் பெற்றால் எவ்வாறு தலை நிமிர்ந்து நிற்பாரோ அவ்வாறு நிற்கும், பின்னர் மேலும் வளர்ந்து தேர்ந்தெடுத்த நூற்கல்வியுடையார் எவ்வாறு தலை வணங்கி நிற்பாரோ, அவ்வாறு தலைவணங்கிப் பயன்தரும்’’ என்று திருத்தக்க தேவர் சிந்தாமணியில் கூறுகிறார்! இதனைச்
‘’சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருவிருந் தூன்றி மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைச்சிக் காய்த்தவே!’’
என்று கூறுகிறார். இவ்வாறு திருத்தக்க தேவர் பொதுவாகக் கூறிய உவமையை சேக்கிழார் மேலும் செழுமைப் படுத்துகிறார்! கல்விசேர் மாந்தர் கடவுளை மறுப்பவரானால் , சரியாகி விடுமா? கற்றதனால் ஆய பயன் இறைவன் நற்றாள் தொழுவதல்லவா? ஆகவே கற்றவர் கடவுளின் சிறப்பையும் அறிந்தவர் ஆதல் வேண்டும். கதங்காத்துக் கற்றடங்கியவனே , அறத்தை நிலை நாட்டுவான். கல்லாதவரும் கடவுளின் உயர்வை உணர்ந்தால் கற்றவரைவிடச் சற்று விரைவாகக் கடவுளின் அருகே செல்வர்!ஆகவே இறைப்பற்றில் நிலைத்தவர் எங்கும் இறைவனையே காண்பர்! கற்றவரின் பரிபக்குவம் கடவுள் நிலையைக் காட்டிவிடும். இதனையறிந்த சேக்கிழார் பெருந்தகை, விளைந்த நெல் வளைந்து வீழ்வதைச் சிவனடியாரின் பணிவைக் காட்டும் எடுத்துக் காடாகக் காண்கிறார். அதனால்
‘’ பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள்‘’ என்றால்அங்கேயே தலையினால் வணங்குவர் என்கிறார். அவ்வணக்கத்துக்குக் காரணம் அவர்கள் கல்விகற்றதன் பயனாகக் கடவுள் நெறியைக் கற்றமைதான். அவர்களே வித்தகர். விளைந்த நெல்லும், முதிர்ந்த அறிவினரும் வளைந்து வணங்குவது, இருவகையும் முற்றிப் பக்குவம் பெற்றதால்தான்!
அக்காலத்தில் திருஞான சம்பந்தர் திருவையாற்றில் வழிபாடு செய்து கொண்டிருந்தார்.அப்போதுஅருகில் உள்ள திருப்பூந்துருத்திக்கு திருநாவுக்கரசர் வருவதாகக் கேள்வியுற்றார். உடனே திருப்பூந்துருத்தி நோக்கிக் கிளம்பினார். அவர், இறைவன் அளித்த சிவிகையில் ஏறி விரைந்தார். திருப்பூந்துருத்தியை நெருங்கியவுடன்மிகுந்த ஆவலுடன், சிவிகை சுமந்து வந்தோரிடம் , ‘’எங்குற்றார் அப்பர்!’’ என்று கேட்டார். உடனே விடைவந்தது! ‘’ உங்கள் சிவிகையைச் சுமந்து வரும் பேறு பெற்ற அடியேன் இங்குற்றேன்!’’ என்ற குரல் சிவிகை சுமப்பவருள் ஒருவராக நடந்து வந்த அப்பரடிகளிடமிருந்து வந்தது! துணுக்குற்றுக் கீழிறங்கிய ஞானசம்பந்தர் அப்பரடிகளின் முன்னே தலைதாழ்த்தி வணங்கினார்! இருவரும் பக்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்கள், ஆதலால் எதிரெதிரே கண்டு வணக்கினர்! இதனையே சேக்கிழார் பெருந்தகை,
‘’பத்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்
தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்குமாபோல் ‘’
என்று பாடினார். தேவாரமும் ‘’தலையே நீ வணங்காய்!’’ என்றும், ‘’ வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை.’’ என்றும் பாடுகின்றன! வயலின் நெற்பயிர்கள் தலை சாய்த்து வணங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம், வயலில் விளைந்து கதிர் முதிர்ந்தமையால், அதாவது முழுப்பக்குவம் பெற்றமையே ஆகும். அவை ஞானம் முற்றிய சிவனடியார்கள் போலத் தமக்குள் தலைவணங்கிக் கிடக்கின்றன! ஆகவே முற்றிய ஞானம் பெற்ற அடியார்கள் போல, நெல்லும் கதிர்முற்றிப் பக்குவம் பெற்ற நிலையில் தலை சாய்த்து வணங்குகின்றன! இனி முழுப்பாடலையும் ஒருமுறை படிப்போம்.
‘’பக்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாமன்பர்
தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்குமாபோல்
மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கிமற்றை
வித்தகர் தன்மைபோல விளைந்தன சாலி எல்லாம்!’’
தமிழிலக்கிய நயமும், சைவ சமயப் புலமையும் ஒருசேர விளங்கும் சேக்கிழார் பெருந்தகை இயற்றிய பற்பல பாடல்களுள் இதுவும் ஒன்று!
==============================================================

‘’மற்கடக்(குரங்குக்) குட்டியே, மாதா ரமணரை
நிற்க அனுமதிப்பாய் நின்னுள்ளே -வர்கத்தின்
பேதங்கள் போகும் பிறவிப் பிணிதீரும்
மோதுங்கள் அண்ணா மலை’’….!
வந்த மனக்குரங்கு வாயுள்ளே வாத்ஸல்யம்
நந்த குமாரன் நவனீதம் -தந்தது:
முற்றும் துறக்க முனிவனாய் மாறலாம்
கற்ற களவை மற….கிரேசி மோகன்…!
பவள சங்கரி
ஒருவரின் பலதரப்பட்ட குணநலன்கள் ஒன்றையொன்று தாமே தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றன. கலைவாணர் என்.எசு. கிருட்டிணன் மிகச்சிறந்த நகைச்சுவையாளர் மட்டுமல்ல. ஆகச்சிறந்த சீர்த்திருத்தவாதியும் கூட. அவர்தம் கருத்துகளை வாயளவில் பேசித் திரிபவராக மட்டும் இல்லை. அப்படியே வாழ்ந்தும் காட்டிய நல்லார்.
ஒரு முறை இவர்தம் நகைச்சுவை கலையுணர்வில் மயங்கிய மகாராசா ஒருவர் அவரை அழைத்து விருந்துபச்சாரம் செய்து மகிழ்வித்ததோடு அவர்தம் திறன்களில் உச்சி குளிர்ந்து அதற்கு வெகுமதியாக, தம்முடைய மாளிகைகளில் ஒன்றை பரிசாகக் கொடுத்திருக்கிறார். கலைவாணர் சர்வ சாதாரணமாக அதை மறுத்திருக்கிறார். மகாராசர் பல முறை கட்டாயப்படுத்திய பின்பும் இந்த மனிதர் மறுத்துவிட்டதோடு அதற்காக அவர் சொன்ன காரணம்தான் உச்சம்… ஆம், அவர் சொன்னது, “என் வருங்காலச் சந்ததியினர் இத்தனை பெரிய சொத்தை வைத்துக்கொண்டு உழைக்காமல் உட்கார்ந்து உண்ணும் சோம்பேறி நிலைக்குத் தள்ளப்பட்டு விடக்கூடும். அதனால் இவ்வளவு பெரிய சொத்தெல்லாம் என் சந்ததியினருக்குத் தேவையில்லை. அவர்கள் உழைத்து வாழவேண்டும். தனக்கானதைத் தானே உழைத்து பெறட்டும்” என்றிருக்கிறார். ஆனால் இத்தகைய சீர்திருத்தவாதி நம் மனங்களில் அதிகபட்சம் ஒரு நகைச்சுவையாளராக மட்டுமே நிலைத்திருக்கிறார் என்பதே உண்மை!
-மேகலா இராமமூர்த்தி
மெழுகுவர்த்தியும் அழகான குழந்தையும் ஒருவரை ஒருவர் நோக்கி மௌனமாய்ப் பேசிக்கொள்ளும் இதமான காட்சியை நிழற்படமெடுத்து வந்திருப்பவர் திரு. வாசகன் பாலசூரியன். இந்தப் படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் திருமதி சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!
”ஒளியிலே தெரிவது தேவதையா?” என்று பாடத்தோன்றும் இந்தக் குழந்தையின் சுந்தர முகத்தில் ஏதோ சிந்தனைப் பின்னலும் இருக்கவே செய்கின்றது. பிஞ்சின் நெஞ்சில் நிழலாடும் எண்ணத்துக்குக் கவிவண்ணங் கூட்டி வாசகர்க்குக் காட்ட கவிஞர் பெருமக்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
*****
”நங்காய்! எதிர்காலத்துக்கு ஒளியூட்டும் கல்வியில் கவனம் செலுத்தாது சித்தத்தைச் சிற்றொளியில் வைக்கலாமா? ஆழ்ந்து படி…வெற்றியைப் பிடி” என்று சிறுமியின் நல்வாழ்வுக்கு நம்பிக்கையொளி ஊட்டுகின்றார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா.
பெதும்பைப் பெண்ணே!
ஊடுருவிப் பார்க்கின்றாய் ஒளிரும் சுவாலைதனை
தேடுவது எதையென்று தெரியவில்லையோ உனக்கு?
புத்தகத்தின் முன்னிருந்து சித்தத்தைச் சிற்றொளியில்
வைத்துள்ளாய் நீ அங்குன் வாழ்வினொளி காண்பாயோ?
கற்பதனாலுன்றனுக்குக் கடுகளவும் தோல்விவரப்
போவதில்லை ஆதலினால் பொழுதினை நீ வீணாக்கி
உற்றுப்பார்க்காது உருகும் மெழுகுதனை
சற்றேயுன் புத்தகத்தில் தலைகுனிந்து கவனம் வை.
வாழ்வினொளி காண வை கவனம் கற்பதிலே
தாழ்வில்லையென்றும் தலை குனிந்து கற்பவர்க்கு
வீட்டில் விளக்கின்றி வீதிக்குச் சென்றங்கே
தெருவிளக்கிற் கற்றுத் தேறிப் பரீட்சையிலே
மேதாவிகளானோர் மிகுபலபேர் உள்ளார்கள்
ஆதலினால் நங்காய் ஆழ்ந்து படி புத்தகத்தை
மீதி விளைவதெல்லாம் வெற்றியன்றி வேறில்லை.
*****
”மரணப் படுக்கையில் அன்னை; கள்ளுக்கடையில் அப்பன்; அழுகின்ற மெழுவர்த்தி ஒளியில் படித்து நான் யாரைக் காப்பாற்ற?” என்று வேதனையில் வெ(து)ம்பும் சிறுமியைக் காண்கிறோம் திரு. சி. ஜெயபாரதனின் கவிதையில்.
அழுதிடும் மெழுகுவர்த்தி!
எங்கள் வாழ்வே இருளானது!
மங்கிப் போன விளக்கு!
ஒருத்தி
ஊதியமும் இல்லை!
மரணப் படுக்கையில்
தாய்! கையில்
மருந்து வாங்கப் போன
காசை
பறித்துக் கொண்டு
கள்ளுக் கடைக்குப் போனது
அப்பன்!
நாளைக்குத் தேர்வு!
மங்கிய தெரு விளக்கும்
மின்னலில் அணைந்தது!
கடன் வாங்கிய
மெழுகு வர்த்தி யானது
அழுது, அழுது
மெலிந்தது!
நான் படித்து பட்டம் வாங்கி
யாரைக் காப்பாற்ற?
தாயையா ?
குடித்து விட்டு வாசலில்
வசை புராணம் பாடும்
அப்பனையா?
*****
”கலைமகளும் அலைமகளும் மலைமகளும் மகிழ்ந்தருள, வாழ்விலின்பம் வழியட்டும், துன்பங்கள் ஒழியட்டும்” என்று சிறுமிக்கு வாழ்த்துப்பா பாடுகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.
வாழ்க வளமுடன்…
கன்னித் தமிழனைத்தும் கலைமகளும் உனக்கருள்க!
எண்ணிய செல்வங்களை அலைமகளும் உனக்களிக்க!
இன்னலில்லாப் பெருவாழ்வை மலைமகளும் மனமுவக்க!
இன்னபிற நன்மைகளைப் பெறுவதற்குநீ முயல்க!
அணையாத விளக்காக அன்பெங்கும் ஊற்றெடுக்க!
துணையாகச் சொந்தங்கள் எப்போதும் உடனிருக்க!
அணிகலனாய் நற்பண்பை இறுதிவரைநீ சுமக்க!
இணைந்திருக்கும் நட்புகள் எப்போதுமுனை சூழ்க!
மடைதிறந்த வெள்ளமென வாழ்விலின்பம் பொங்க!
இடைத்தோன்றும் துன்பமெலாம் தவிடு பொடியாக!
அடையத் துடிக்கும் இலக்கனைத்தும்நீ தொடுக!
தடையேதும் இல்லாத தனிப்பாதைநீ பெறுக!
*****
சிறுமிக்கு இனிய வாழ்த்துக்களையும், அவள் எதிர்காலத்துக்கு வளஞ்சேர்க்கும் நல்ல அறிவுரைகளையும் தம் பாக்களில் அள்ளி வழங்கியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையை நாம் அறிந்துகொள்ளும் நேரமிது!
வாழ்த்துங்கள்!
வறுமையின் ஆட்சி வீட்டினிலே
வரவினை மிஞ்சிடும் செலவினமே,
பொறுமையின் வடிவிலே பெண்ணவள்தான்
போதையின் பிடியில் ஆண்மகன்தான்,
சிறுவராய்ப் பிள்ளைகள் சிரமத்திலே
சீர்பெறக் கவனம் படிப்பினிலே,
குறுகிய குடிசையில் விளக்கொளியில்
கற்றிடும் குலமகள் வாழ்த்துவீரே…!
”வறுமையின் ஆட்சியைப் பொறுமையோடு சகிக்கும் தாய் ஒருபுறம்; அதுபற்றிய சிந்தனையேயின்றி போதையின் பாதையில் போகும் பொறுப்பற்ற தந்தை மறுபுறம்; இவர்கட்கு நடுவில் சிறிய விளக்கொளியில் சீரிய எதிர்காலத்துக்காகக் கல்விகற்கும் குலமகள் இவள்; இவளை வாழ்த்துங்கள்!” என்று ஈரநன்மொழி கூறும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

“அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
காட்டிய கேசவ் கவி”….!
“ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,
மால்பிறப்பு பாகவத மாச்சு”….கிரேசி மோகன்….!
பசு பறந்து கொசுவானது….இந்த கொசு கடிக்காது, மடிப்பாலை மாலவர் மீது சுரக்கிறது….சபாஷ் கேசவ்….!
அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
மந்தா கினியாக மாடு்பால் -தந்திட:
மாட்டினார் மன்னராய், மாடுகள் மேய்ப்பவர்,
காட்டிய கேசவ் கவி”….!
மந்தாகினி -ஆகாஸகங்கை….!
“பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலர்;
ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
கோவிந்தன் கொண்டார் குளிப்பு”….கிரேசி மோகன்….!
இந்த வார வல்லமையாளர் விருது!
இந்த வார வல்லமையாளராக சமூகப் போராளி ‘தரனா பர்க்’ என்னும் அமெரிக்கப் பெண்மணியை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
உலகம் முழுவதிலும் நானும் (‘மி டூ’) என்னும் பெண்கள் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது. சமூக ஊடகங்கள் வளர்ச்சியாலும், அவற்றை மொபைல் போன்களில் பார்த்து பதில் அளிப்பது பெருகிவருவதாலும் இந்த அதிவேகப் பரவல். ஹேஷ் டேக் (HashTag) போன்றவை ஏற்படுவதன் முன்னரே இந்த இயக்கத்தை 2006-லேயே தொடங்கியவர் தரனா பர்க் (Tarana Burke) என்னும் சமூகப் போராளி. பாலியல் வன்முறைகள், கொடுமைகள், அத்துமீறல்களை வெளிப்படையாகச் சொல்லாமல் உள்ளேயே மறுகி இருந்த பெண்கள் திரைப்பட, அரசியல் உலகங்களில் தமக்கு நிகழ்ந்த பாலியல் துன்பங்களை அம்பலப்படுத்தி வருகின்றனர், #MeToo என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் அலிஷா மிலானோ என்னும் நடிகை உருவாக்கியதில் இருந்து பலரும் பயன்படுத்திவருகின்றனர்.
மும்பை திரையுலகத்தில் தனுஸ்ரீ தத்தா என்னும் நடிகை இந்த மிடூ இயக்கத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்திரை உலகத்திலும் இந்த இயக்கத்தின் தாக்கம் தெரிகிறது.
https://www.reuters.com/article/us-india-harassment-actress/actress-who-helped-trigger-indias-metoo-movement-inspired-by-god-idUSKCN1MQ127
https://en.wikipedia.org/wiki/Me_Too_movement
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )