Month: March 2020

  • படக்கவிதைப் போட்டி – 250

    படக்கவிதைப் போட்டி – 250

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (22.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 249-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 249-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. முகம்மது ரபியின் இந்த ஒளிப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ”கள்ளமில்லா மழலையின் பார்வைநம்
    உள்ளம் கொள்ளை கொண்டாலும்
    இன்மைத் துன்பம் இல்லா நிலையை
    என்று அடைந்திடும் இவர் வாழ்க்கை?” என்றொரு வினா முள்ளாய்த் தைக்கின்றது நம் மனத்தை!

    நெஞ்சைத் தொடும் இப்படத்திற்குப் பொருத்தமாய் வரைந்த கவிதைகளோடு காத்திருக்கும் கவிஞர்களை வரவேற்போம் வாழ்த்துக்களோடு!  

    ”பெற்ற தாயினும் உற்ற துணை பிள்ளைக்கு வேறில்லை” என்று தாயின் பெருமையைப் புகல்(ழ்)கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உயர் துணை…

    பிள்ளை யதற்குப் பாதுகாப்புப்
    பெற்ற தாய்போல் வேறில்லை,
    அள்ளிக் கொடுக்க இலாதபோதும்
    அன்பது உண்டே அளவிலாதே,
    கள்ளம் கபடம் தாய்மையிலிலை
    காட்டு வழியிலும் பயமில்லை,
    உள்ளம் நிறைந்த அன்போடே
    உயர்ந்த துணையே தாய்தானே…!

    *****

    ”பிற்காலத்தை எண்ணிக் கலங்காதே குழவியே! பொற்காலம் உனதென்று பொங்கி நகை!” என்று மழலைக்கு நம்பிக்கையூட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    முழங்கையில் தளிர் மழலை
    முன்னேற்றப் பாதைக் காணும்
    வண்ண முக்காடிட்ட முகத்தழகி

    பின்னோக்கிக் காணும் அவள் குழவி
    எவரேனும் தொடர்கிறாரோ
    என்றொரு பார்வையா?
    பிற்காலம் எப்படியோ
    என்கின்ற பிரமிப்பா?

    பொற்காலம் உனதுதான்
    பொங்கிநகைப் புதுப் பொலிவே!
    கிஞ்சித்தும் தளராதே
    எழும்பி நில் கடலலையே!!

    *****

    ”நோய் வந்தபோதும் சேயைத் தீண்டத் தயங்காது அன்புபாராட்டி உயிர்காக்கும் உறவுக்குப் பெயர்தான் தாய்” என்று தாய்மையின் தன்னலமற்ற சிறப்பைக் கவிதையில் உணர்த்துகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    கொஞ்சிப் பேசி
    அள்ளி அணைத்த
    கரங்கள் யாவும்
    தீயாய்ப் பரவி வரும்
    தொற்று நோய் வந்ததென்று
    என்னைத் தீண்ட மறுத்ததே!
    வயிற்றில் சுமந்து
    உயிர் தந்தவள்
    அல்லும் பகலும் போராடி
    நோய்கொண்டு போக முயன்ற
    எனதுயிரை மீட்டுத் தந்தவள்
    தாய் என்னும் வரம் தந்த
    தெய்வக் குழந்தை நான்என்று
    என்னைச் சுமக்கத் தயங்கவில்லையே!
    வேண்டிப் பெற்ற உறவு இது
    இல்லை என்றாலும்
    உயிர் உள்ளவரை என்றும் நம்மை
    தொடர்ந்து வரும் உறவு இது!
    முகத்தை மூடியே நீ வந்து நின்றாலும்
    கண்களை மூடி ஊரே சொல்லும்
    முத்தாய் மூன்றெழுத்தில்
    நீ “அம்மா” என்று!

    *****

    தாயின் தகைமையைப் பொருள்பொதிந்த கவிதை வரிகளில் உணர்த்தியிருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!  

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    நேர்கொண்ட பார்வை!

    அன்னையர்குலப் பெண் தெய்வமென
    ஆலயந்தனிலே வைப்பதாய்ச் சொல்லிப்
    புழக்கடைத் தனிலே பூட்டிடுவார் – பெண்ணைக்
    கிணற்றுத் தவளை ஆக்கிடுவார்!

    முரட்டு உலகி(னி)ன்று காப்பதாய்ச் சொல்லி
    இருட்டு வாழ்க்கை தந்திடுவார் – மூடர்
    குருட்டுத்தனம் பல செய்திடுவார் – அவற்றைப்
    புனிதம் என்றே காட்டிடுவார்!

    கைவளை அழகென்று சொல்லிப் – பெண்ணுக்குக்
    கைவிலங் கிட்டே முடக்கிடுவார்!
    கொடியவர் பார்வைப் பழுதென்று கூறி
    முக்காட்டிட்டு அவர்திறம் மூடிடுவார்!

    தாயினத்தைத் துரத்தும் கயமைகளை – உன்
    பார்வைத் தீயால் பொசுக்கிவிட
    முண்டாசுக் கவிஞனின் வாரிசென
    நேர்கொண்ட பார்வைக் காட்டிடுவாய்!

    ”முரட்டு உலகினின்று பெண்ணைக் காப்பதாய்ச் சொல்லி, இருட்டு வாழ்க்கையில் அவளைத் தள்ளிடும் குருட்டு உலகினின்று அவளை மீட்டிட, முண்டாசுக் கவிஞனின் வாரிசாய் நேர்கொண்ட பார்வை காட்டிடு!” என்று கனிமழலைக்கு நன்மொழி நவின்றிடும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 72 (தன்னை)

    சேக்கிழார் பாடல் நயம் – 72 (தன்னை)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்
    துன்னிய யாவையும் தூய்மை செய்வது
    பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
    இன்ன தன்மையது இது வாங்கு நீ என

    திருநீலகண்டராகிய குயவரிடம் இறைவன் ஒரு சிவயோகியாக வந்தார். அவரை அடியார் வரவேற்று இல்லத்தில் உபசரித்தார். அவரிடம் ‘’யாது காரியமாக வந்தீர்கள்! உங்களுக்கு யான் செய்யத்தக்கது யாது?’’ என்று கேட்டார். சிவயோகியார் தாம் கொண்டு வந்த பிச்சைப் பாத்திரமாகிய திருவோட்டைக்  கொடுத்து, ‘’நம்பியே,  நின்பால் தந்த இவ்வோட்டை உரியவாறு பாதுகாத்து யாம் வேண்டும்போது திருப்பித் தருக’’ என்றார்.

    அப்போது தாம் தந்த திருவோட்டின் சிறப்பைச்  சிவயோகியார் கூறினார். இறைவன் தம் திருக்கரத்தில் ஏந்தியிருந்த ஓடு, பிரமனின் ஐந்தாம் தலையைக்  கிள்ளி எடுத்த போது, அவர் கரத்தில் ஒட்டிக் கொண்ட ஓடு என்று புராணம் கூறுகிறது. இறைவனைப் போலத் தாமும் ஐந்து தலையைக் கொண்டவன் ஆகவே சிவனுக்கு இணையானவன் என்று தற்பெருமை கொண்ட பிரமனின் ஐந்தாம் சிரத்தை, இறைவன் கொய்தார். அப்போது அவர் கரத்தில் அத்தலை திருவோடாக விளங்கியது. படைப்புக் கடவுளின் பெருமை மிக்க சிரம் தனிச் சிறப்புக் கொண்டது. அதனை ஏந்திய சிவபெருமானின் திருவுருவம் கண்டியூரிலும், ஈர ஓடு எனப் பெற்ற  ஈரோட்டிலும் கோயில் கொண்டது. கபாலத்தைக் கையில் ஏந்திய சிவபிரான் திருமயிலைக் கபாலீச்சுரத்திலும்  கோயில் கொண்டுள்ளார். அந்தத்  திருவோட்டையே   திருநீல கண்டரிடம்  இறைவன் கொடுத்தார். அப்போது அத்திருவோட்டின் சிறப்பை, ‘’தனக்கு ஒப்பாக வேறொன்றுமில்லாதது; தனதிடத்தினுள்ளே பொருந்திய பொருள்கள்எல்லாவற்றையும் சுத்தமாக்குவது; பொன்னையும் மணியையும்விட மிகக் காக்க வேண்டுவது; இத்தகைய தன்மையுடையது; இதனை வாங்குவாயாக!’’  என்று கூறினார்.

    தனக்குவமை  இல்லாதானாகிய சிவபிரானைச் சேர்ந்த பொருள்கள் யாவும் இணையற்றவை! ஆதலால் அத்திருவோடும் இணையற்றது, இதனைச் சேக்கிழார், ‘’தன்னை  ஒப்பு அரியது!’’ என்று பாடுகிறார். இந்தத் திருவோட்டின் உட்பரப்பு இறைவனின்  அதிகார எல்லையாகி எங்கும் விரிந்தது. தலம் – இப்பாத்திரத்தில் பலியை இடும் இயைபு உள்ள பரப்பு. அதிகார எல்லை என்பர் இக்காலத்தார். அந்தப் பரப்பு இவ்வுலகமேயன்றி எல்லா வுலகமுஞ் சென்று விரிந்தது என்பது இதன் தத்துவமாம். ‘’இதன் தலத்துள் துன்னிய எதனையும் தூய்மை செய்வது‘’ என்று அதனைப் புகழ்ந்தார். துன்னிய பொருள்கள் தூய்மையற்றவையேயாயினும் அவற்றை யெல்லாம் சுத்தமாக்குவது. யாவையும் – எல்லாவற்றையும். உயிர்கள் தமது கன்மங்களை எல்லாம் தன்வசமாக ஒப்புவித்துத் தனக்கே அர்ப்பணம் செய்தபோது இறைவன் அவற்றைப் புனிதமாக்கி அவ்வுயிர்களை ஈடேற்றுவன் என்பது சாத்திரம். இதனையே திருக்கோயில் தோறும் உள்ள பலிபீடங்கள் உணர்த்துகின்றன. உயிர்கள் இறைவன் பரமாகச் செய்யும் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் தன்மையே அவனது பலிப்பாத்திரம் எனப்படும். ஆகவே உயிர்களின் பாசமலங்களைப் போக்கி அவற்றைத் தூய்மை செய்வதே பலிபீடம்! அப்பலிகளை ஈர்க்கும் பாத்திரமே திருவோடு.

    இதனைப் பொன்னையும் மணியையும் பார்க்கிலும் அதிகமாகப் பாராட்டிக் காக்க வேண்டும்.“ ஓடும் செம்பொனு மொக்கவே நோக்குவார்“களும், “புல்லோடுங் கல்லோடும் பொன்னோடு மணியோடுஞ் சொல்லோடும் வேறுபாடிலாநிலைமை துணிந்திருந்த நல்லோர்“களும் ஆகிய அடியார்கள் விரும்பிக் கையிற் கொள்வது இவ்வோடேயாம்.

    “ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து
    தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து”

    என்ற திருவாசகமும்  காண்க. போற்றுதலை  வழிபடுதல் எனக் கொண்டு பொன்னும் மணியும் கொண்டு இதனைப் பூசிக்க வேண்டுவது என்றுரைப்பாருமுண்டு. இதனைக் கேட்ட நாயனார் இவ்வோட்டினைப் பெற்று “மனையில் ஓர் மருங்கு காப்புறும் எல்லையில் வைத்து“ வந்தனர் (376) என்றதால், போற்றல் என்பதற்குக் காப்பாற்றல் என்றுபொருள் கொள்ளுதலே சிறந்ததாம். துன்னிய  எதனையும் தூய்மை செய்வது; ஆதலின் ஒப்பரியது; ஆதலின் போற்ற வேண்டுவது எனக் காரண காரியமாகத் தொடர்ந்து பொருள் கொள்க. இவையனைத்தையும் தொகுத்து, ‘’இன்ன தன்மையது! இது வாங்குக‘’ என்று திருவோட்டை வழங்கினார். இங்கே வாங்கி வைத்துத் திருப்பித் தருக  என்று முன்பு சொன்னதைச் சுருக்கி.’’வாங்குக’’ என்று சொன்னதன் விரிவு, உன்னால் வாங்க மட்டுமே முடியும், மீண்டும் திருப்பித்தர இயலாது என்ற எதிர்கால நிகழ்ச்சியைப் புலப்படுத்துகிறது!

    “பிச்சைய தேற்றான் பிரமன் றலைதன்னிற்
    பிச்சைய தேற்றான் பிரியா வறஞ் செய்யப்
    பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
    பிச்சைய தேற்றான் பிரமன்பர மாகவே“

    என்ற திருமந்திரச் செய்யுள் திருவோட்டின் சிறப்பை உணர்த்துகிறது. திருவோடு என்ற சொல்லுக்கு  வேறு பொருளும் உண்டு. நம் உடம்பு ஒரு குடம் போன்றது என்று சித்தர்பாடல் கூறுகிறது.

    ‘’நந்தவ  னத்திலோர்  ஆண்டி – அவன்
     நாலாறு  மாதமாய்க்  குயவனை வேண்டி!
    கொண்டுவந்   தானொரு  தோண்டி – அதைக்
    கூத்தாடிக்  கூத்தாடிப்  போட்டுடைத்   தாண்டி!’’

    என்ற இந்தப் பாடல் நாலாறு (அதாவது 4+6 = 10)  மாதத்தில் பிரமனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதாவது உடம்பைப் பெற்றான் மனிதன்! ஆனால் அதைப் பல்வேறு கூத்துக்கள் ஆடி இறுதியில் போட்டு உடைத்தான்! வீணான ஆட்டம் ஆடி. உயிருடன் உள்ள  உடம்பை இழந்தான். இதிலும் ‘ஓடு’ மதிப்பு மிக்கது என்பதைப் புரிந்து கொள்கிறோம்!

    இறைவனே தம் திருக்கரத்தில் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது; பொன்னினும்  பொருளினும் உயர்ந்தது; போற்றப் பட வேண்டியது. இவ்வாறு இறைவன் சிவயோகியாய் வந்து கூறிய பின்னரும் அதனைத் தொலைத்தார்   என்பது,  இப்பாடல் காட்டும் பொருள்.நம் வாழ்க்கையில் பொருள் மிகுந்து விட்டால், தேவையான நற்பொருளை அதாவது வாழ்க்கையைத் திருநீலகண்டர் போல்  தொலைத்து விடுவோம் என்று பாடிய சேக்கிழாரின் பாடல் நயம் போற்றுதற்குரியது!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-125

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-125

    நாங்குநேரி வாசஸ்ரீ

    125. நெஞ்சோடு கிளத்தல்

    குறள் 1241

    நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கு மருந்து

    மனசே! நேசத்தால வளந்த இந்த நோயப் போக்குத மருந்து எதையாச்சும் ரோசன பண்ணி சொல்ல மாட்டியோ?

    குறள் 1242

    காத லவரிலர் ஆகநீ நோவது
    பேதமை வாழியென் நெஞ்சு

    அவுக நம்ம நேசத்த மதிச்சு வராதப்போ மனசே! நீ மட்டும் அவுகள நெனச்சு சங்கடப்படுதது உன் புத்திகெட்டதனம்.

    குறள் 1243

    இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
    பைதல்நோய் செய்தார்கண் இல்

    பிரிஞ்சிபோயி இரக்கமில்லாம இருக்க அவுகளப்பத்தி மனசே! நீ இங்ஙன இருந்துக்கிட்டு வெசனப்படுததால பிரயோசனம் ஒண்ணுமில்ல.

    குறள் 1244

    கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
    தின்னும் அவர்க்காணல் உற்று

    மனசே! நீ அவுகளக் காணப் போவுதப்போ கண்ணையும் கூட்டிக்கிட்டுப்போ. ஏம்னா அவுகளக் காணிக்கச்சொல்லி என்னயப் புடுங்கித் தின்னுதுவ.

    குறள் 1245

    செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
    உற்றால் உறாஅ தவர்

    மனசே! நான் ஆசப்பட்டு இருந்தாலும் என்னய நேசிக்காத அவுகள என்னய வெறுக்காகனு நெனச்சி கைவுட ஏலுமா?

    குறள் 1246

    கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
    பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு

    கோவப்படுத சமயம் கூடிஇருந்து சமாதானம் செய்யுத காதலரக் கண்டா ஒருதடவைக்கூட பிணங்காம இருக்க நீ இப்பம் அவுக மேல காட்டுத கோவம் பொய்தானே?

    குறள் 1247

    காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
    யானோ பொறேனிவ் விரண்டு

    நல்ல மனசே! ஒண்ணு நேசிக்கத உட்டுப்போடு. இல்லன்னா சொல்லக் கூசுத வெக்கத்த உட்டுப்போடு. ரெண்டையும் ஒரேசமயத்துல சமாளிக்க என்னால ஏலல.

    குறள் 1248

    பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
    பின்செல்வாய் பேதையென் நெஞ்சு

    இரக்கமில்லாம உட்டுப்போட்டு போயிட்டகளேனு நெனைக்க நேரம் அவுக பின்னாலயேயும் போவுத எம்மனசு கூறுகெட்டது.

    குறள் 1249

    உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
    யாருழைச் சேறியென் நெஞ்சு

    மனசே! நேசிக்கவரு உனக்குள்ளார இருக்கையில வெளியில யார்கிட்டத் தேடிக்கிட்டு சுத்திக்கிட்டுக் கெடக்க.

    குறள் 1250

    துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
    இன்னும் இழத்தும் கவின்

    சேராம பிரிஞ்சு போன நேசிக்கவர மனசுல வச்சிருக்கதால மேல மேல மேனி நொந்து மெலிஞ்சு அழகு கொறஞ்சுக்கிட்டே வருது. ..

    Share
  • ஆரோக்கியவதியான ஹெய்சல்

    ஆரோக்கியவதியான ஹெய்சல்

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

     ஆரோக்கியவதியான ஹெய்சல்

    “மேடம் வெளில போயிருக்காங்க.”

    வாட்ச்மேன் கூறினார். அவருடைய குரலிலும் பார்வையிலும் ஒரு அலட்சியம் தெரிந்தது. ஃப்ளாட்டில் குடியிருப்பவர்களை குறித்தோ பார்க்க வருபவர்களை குறித்தோ யோசிப்பது தேவையில்லாதது தன்னுடைய காவல் வேலையை தவிர நான் மற்ற எதையும் எண்ணத் தேவையில்லை என்ற உணர்வில் பாதி நரைத்த மீசை, மீசைக்கு கீழ் உதடுகளில் புகையிலை கரையுடன் நின்றான்.

    என்ன? ஆனா நான் போன் செய்தபோது சாவிய இங்கே கொடுக்கிறேன் என்று சொன்னாங்களே என்று தயக்கத்துடன் கூறினான்.

    ”ஆனா இங்க தரலையே ……..” வாட்ச்மேன் உதட்டைப்  பிதுக்கினார்.

    உள்ளிருந்து பொங்கி வருகின்ற கெட்ட வார்த்தைகள் வெளியில் வராமல் அடக்க மிகவும் சிரமப்பட்டான்.

    மெசேஜ் ஏதாவது!………..

    நோ.

    ஜேம்ஸ் திரும்பி நடந்தான். அதற்குள் ஹெய்சல் தனது இருசக்கர வாகனத்தில் வந்தாள்.

    சாரி சாரி சாவிய எப்பவும் போல பேக்ல போட்டுட்டு ஆபீஸ்க்கு போயிட்டேன் அதுக்கப்புறம் தான் ஞாபகம் வந்துச்சு ஸ்கூட்டியிலிருந்து இறங்குவதற்கு முன் கூறினாள்.

    ஜேம்ஸ் அவளை பின்தொடர்ந்தான். பிளாட் நான்காவது மாடியில். லிஃப்டில் போகும்போது ஜேம்ஸிடம் அவனுடைய புதிய திருமண வாழ்க்கை அனுபவத்தை பற்றி கேட்டதற்கு அவன் மௌனமாக தலையை மட்டும் ஆட்டினான். லிப்ட் மிகவும் மெதுவாக செல்வதாக அவனுக்குத் தோன்றியது. இதற்கு முன்பு இந்த லிப்ட் ஒரு முத்தத்தை முடிப்பதற்கு கூட இடம் கொடுக்காது இருந்தது. அந்த உணர்வில் ஜேம்ஸ் ஹெய்சலின் முகத்தை பார்த்தான். அவளும் ஏதோ நினைவில் இருந்தாள்.

    லிஃப்ப்ட் ல இருந்து இறங்கி ஹெய்சல் கையில் இருந்த பேக்கில் இருந்து சாவியை வெளியில் எடுத்தாள். கதவை திறந்த பிறகு முதலில் அவனை உள்ளே செல்ல அனுமதித்தாள்.

    ஜேம்ஸ் கடந்து சென்றது ஏற்கனவே பழக்கமான காட்சிகளுக்குள்தான். .அழுக்கு படிந்த ஆடைகளும், வீசி எறியப்பட்ட சிகரெட் துண்டுகளும், கரிந்த தீப்பெட்டிக்குச்சிகளும்,  சமீபத்திய இதழ்களும், வர்ணங்கள் முழுமை அடையாத பெயிண்டுங்குகளும்   அடங்கிய ஒரு கொளேஷ் அ ஆக வரவேற்பறை. ஒரு சுவரில் சணல் நார்களால் ஆன அலங்காரப் பொருட்களும், ஹிட்லர் வேடமணிந்த சாப்ளினும் அதுக்குக் கீழே டெரகோட்டா சிலைகளும்.

    லைட்டரின் சத்தம் கேட்டு ஜேம்ஸ் திரும்பிப் பார்த்தபோது ஹெய்சல் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டிருந்தாள்.  ஃப்ளாட்டுகளுக்கிடயில்  ஒரு குழந்தை சிவப்பு நிற மூன்று சக்கர சைக்கிள் ஓட்டி நகர்ந்து சென்றது. ஹெய்சல் கதவைச் சாத்தினாள். ஜெயிம்ஸ் புத்தகச் சல்ஃபிற்கு அருகில் சென்றான்.

    பல நாட்டினுடையவும் பல காலத்தினுடையவும் எழுத்தாளர்கள் ஒதுங்கியிருந்து ஜேம்ஸை வரவேற்றார்கள்.  அவர்களைப் பற்றி எல்லாம் இதே அறையில் மூன்றில் சேயரிலும் கீழுமாக உட்கார்ந்து இருவரும் நிறைய விமர்சித்திருக்கிறார்கள். அதற்கிடையில் பிராண்டி கலந்த காபி எவ்வளவு கொடுத்திருப்போம் என்பதற்கும் எவ்வளவு சிகரெட்டுகளை ஊதித் தள்ளினோம் என்பதற்கும் அளவில்லை. ’ஒரு சந்தோஷமான மரணம்’ என்ற புத்தகத்தின் மேல் அட்டையில் அல்பேர்கம்யூ சிகரெட் ஊதுவது அவர்களுக்கு எப்போதும் தூண்டுதலாக இருந்தது.

    ”உனக்கு சிகரெட் வேண்டுமா?” என்று ஹெய்சல் கேட்டாள் ”நிறுத்திட்டே ஜேம்ஸ் கூறினான்.

    ”ஓஹோ……….. ஹெய்சல் அற்புதம் கலந்த குரலில் சத்தமாக கூறினாள். அவள் ஊதின புகை வளையங்களுக்கு அப்புறம் நின்றுகொண்டு ஜேம்ஸ் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தான்.

    ”என்னோடதுங்கறதுக்காக எடுக்காமல் இருக்க வேண்டாம்…. வேணும்னா……….” ஹெய்சல் கூறினாள்.

    அந்த நேரத்தில் ஜேம்ஸின் கையிலிருந்து சித்தாந்த புத்தகம் உண்மையில் ஹெய்சல் வாங்கியது. முதல் தாளின் மேல் பாகத்தில் அவளின் கையொப்பம் இருந்தது. வாங்கின தேதியும். ஜேம்ஸ் தான் வாங்குகிற புத்தகங்களில் கையொப்பத்திற்கு பதிலாக தெளிவாக தனது பெயரை எழுதுவது தான் வழக்கம் அதுக்கு கீழே எங்கிருந்து வாங்கினோம் என்ற இடப்பெயரையும் எழுதுவான். அவனின் நினைவுகள் ஒவ்வொரு இடத்தோடு சம்பந்தப்பட்டவை.  ஹெய்சலினுடையது காலத்தோடு.

    புத்தகங்களைக் கண்டெடுத்த உடன் ஜேம்ஸின் வேலை பாதி முடிந்தது. அதையும் எடுத்துக் கொண்டு தனது ஆடைகளை தேடுவதற்காக அவன் படுக்கை அறைக்குப் போனான். தானும் ஹெய்சலும் ஒருவரோடு ஒருவர் இணைந்த சேர்க்கையினுடைய மணமும் சூடும் அதற்குள் இருக்கிறது என்று அவனுக்த் தோன்றியது. சுவற்றில் பெரிய கண்ணாடியிலிருந்து பிரதிபிம்பம் அவனை உற்று நோக்கியது.

    இரண்டு கப் காபியும். ஒரு ஷாப்பிங் பேகுமாக ஹெய்சல் வந்தது கண்ணாடியில் தெரிந்தது. ஷாப்பிங் பேகையும் ஒரு கப் காப்பியையும் அவள் ஜேம்ஸிற்கு நேராக நீட்டினாள். இரண்டையும் அவள் நிராகரிக்கவில்லை. காப்பியில் எப்போதும் போல அவள் கொஞ்சம் பிராண்டி கலந்திருந்தாள். பிராண்டி கலந்த காப்பி அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

    ”காபி இனியும் கொஞ்சம்  வேணுமா?” என்று ஹெய்சல் கேட்டாள்.

    “போதும்!” ஜேம்ஸ் கப்பை திருப்பிக் கொடுத்துவிட்டு ஷாப்பிங் பேகில் இருந்து துணிகள் எடுத்துவைத்துக் கொண்டிருந்தான். ஹெய்சல் காலியான கப்புகளுடன் வெளியில் போனாள்.

    தன்னுடைய சில ஆடைகள் ஹெய்சல் தேர்ந்தெடுத்தவை என்பதை அவன் நினைவு கூர்ந்தான். கருமையான நிறஙகளில் குறுக்கும் நெடுக்கும் வரைபோட்ட சட்டைகளில் அவளுக்கு விருப்பம் அதிகம்.  பாத்திக் பிரிண்ட் இட்டவையிலும்.

    ஜேம்ஸ் ஒரு சட்டையை எடுத்து விரித்துப் பார்த்தான். அதன் நிறம் மங்கி இருந்தது. ஒரு வருடம் முன்பு சென்னையில் சென்றபோது பாண்டிபஜாரில் வாங்கியது. அப்போது ஹெய்சலும் உடன் இருந்தாள். அதை நினைக்கவே அதன் தொடர்ச்சியாக ஒரு மாலை நேர மெரினா பீச்சும், இரண்டு செவலைக்குதிரைகளும் ஜேம்ஸின் மனதில் தெளிந்தது. ஏராளமான பட்டங்கள் பறக்கின்ற வானத்தின் கீழ் அவனையும் ஹெய்சலையும் சுமந்து குதிரைகள் ஓடிக் கொண்டிருந்தன. பீச் முழுவதும் சிரிப்பு முழங்கியது.

    நீ போன பின்னே நான் கொஞ்சம் குண்டாயிட்ட்னோன்னு ஒரு சந்தேகம். கையில் சிகரெட்டுடன் படுக்கை அறையின் கதவருகே நின்று கொண்டு சொன்னாள்.

    ஜேம்ஸிற்கு  அவளது உடலை கவனிக்க வேண்டியதாயிற்று. அவன் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கவே அவள் அவனை நோக்கி மெதுவாக நடந்தாள்.  நடப்பதற்கிடையில் சிகரெட்டை ஒருமுறை இழுத்து ஊதிவிட்டு மீதி பாகத்தை எங்கே என்று பார்க்காமல் வீசிவிட்டு மேலாடையின் பட்டன்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு தன்னுடைய சலனத்தை நாடகீயமாக்கினாள். ஜேம்ஸ் சலனமற்றுப்  பார்த்துக்கொண்டிருந்தான். ஹெய்சல் அவனுக்கு மிகவும் அருகில் வந்தாள் அவளுடைய மூச்சுக்காற்று தன் முகத்தை சுட்டுவிடும் என்று பயந்தான். அவன் ஏதோ கூற வாயைத் திறப்பதற்குள் அவனுடைய உதடுகளை தனது சுண்டுவிரலால் மூடினாள். ஷாப்பிங் பேக் தனது பிடியிலிருந்து நழுவி தரையில் விழுவதை அவனால் தடுக்க முடியவில்லை. பிறகு இரு கைகளால் ஆவேசத்தோடு அவன் ஹெய்சலை உடலோடு சேர்த்து அணைத்தான்.

    அப்போது அவள் சொன்னாள். ”எனக்கு இதுதான் தெரிய வேண்டி இருந்தது. இனி உனக்கு போகலாம். நான் சாவியை வாட்ச்மேன் கிட்ட குடுக்காமல் விட்டது இதற்காக மட்டும்தான்.”

    ஜேம்ஸிற்கு ஒரு புயல் காற்றில் சிக்கியது போல் இருந்தது. ஹெய்சல்….. ஹெய்சல்……. என்று நிர்கதியாக அழைக்கிற அவனை தன் உடலிலிருந்தும், படுக்கை அறையிலிருந்தும் வெளியில் தள்ளினாள்.

    நான்காவது மாடியில் குடியிருப்புகளுக்கிடையில் வராந்தாவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென ஏதோ விழுவதைப்போல  ஒருவன் தன் முன்னால் விழுவதைக்கண்டு பயந்து விட்டான்.  அடுத்த விநாடி ஒரு ஷாப்பிங் பேகும் அவன் முன்னால் வந்து விழுந்தது. பேகிலிருந்து புத்தகங்களும் ஆடைகளும் சிதறின.

    ஃப்ளாட்டின்  கதவை சத்தமாக இழுத்து அடைத்து விட்டு அவள் புறம் திரும்பி நின்றாள். பிறகு இந்த உலகிலேயே மிகவும் ஆரோக்கியவதியானப்  பெண்  தானே தான் என்ற கர்வத்துடன் அவள் சத்தமாக சிரிக்கத் தொடங்கினாள்.


    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-15

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-15

    தி. இரா. மீனா      

    காவுதி மாச்சய்யா

    கல்யாண் நகரத்தில் சரணர்களோடு சேர்ந்து சிவ வழிபாட்டில் காலம் கழித்து வந்தவர். ”கல்யாணத திரிபுராந்தக லிங்கதல்லி காவுதி மாச்சய்யா ஹேளிது தடவண்ணிரண்ணா” என்பது இவரது முத்திரையாகும்.

    “தன்னுடல் தனக்குச் சுமையானானபின்
    தான் சுமக்கப் போவதென்ன?
    கிடைத்த அறிவு மறைந்த பின்னர்
    தான் நினைப்பதெதனை?
    இதனால் திரிபுராந்தக இலிங்கத்தில்
    காவுதி மாச்சய்யன் சொன்னது உண்மையென்பீர் “

    “சரணர் பொருள் சேர்த்து உடலிருக்கும் போதே
    குருலிங்கம் ஜங்கமத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும்
    இதுவே நல்ல பக்திக்கு அடையாளம்
    தனக்குப் பின்பான செல்வம் வாரிசுகளுக்கெனில்
    அது ஒழுக்கத்திற்குக் கேடு.
    இதையறிந்து கல்யாணத திரிபுராந்தக இலிங்கத்தில்
    காவுதி மாச்சய்யன் சொன்னதைக் கேட்டு உண்மையென்பீர்”

    குப்த மஞ்சண்ணா 

    வைணவ சமயத்தைச் சேர்ந்த இவர் பசவேசரின் கருத்துக்களால் கவரப்பட்டு சிவ சாரணராக மாறியவர்.முதலில் இரகசியமாக சிவனை வழிபட்டு பின்பு அனுபவ மண்டபத்தில் எல்லோருடனும் இணைந்தவர். கல்யாணில் வாழ்ந்து சிவபக்தியை முழுவதுமாக வெளிப்படுத்தியவர். ”நாராயணப் பிரிய ராமநாதா” என்பது இவரது முத்திரையாகும். வைணவத்திலிருந்து மாறியவரென்பதால் இவர் வசனங்களில் சில கருத்துக்கள் அது தொடர்புடையதாக வெளிப் படுகின்றன.உலக அனுபவம் சார்ந்ததாக வசனங்கள் அமைகின்றன.

    “ஆன்மபலத்தால் போராடினேன் என்பவனுக்கு
    உண்மைத் தத்துவத்தின் பொருள் புரியுமா?
    வேதம் சாத்திரம் ஆகமமறிந்தவனுக்கு
    விவாதம் செய்யும் நிலயெதற்கு?
    மலரும் மணமும் போல
    தீயும் காற்றும் போல
    பாலும் நீரும் போல
    நாராயணப் பிரியன் இராமநாதனுள் இரண்டறக் கலந்தவன்
    தன்னுளுள்ள மெய்ஞ்ஞானத்தை வெளிப்படுத்த வேண்டும் “

     “புகழுக்கு உலகைப் பயன்படுத்துவது பக்தியா?
    நிந்தனைகளுக்கு முனிவர்கள் அஞ்சுவாரோ?
    புகழுக்காகச் செய்பவர்கள் பக்தர்களா?
    இச்சைக்குப்  பேசுவது பற்றற்றவனாக்குமா?
    இவற்றின் நெருக்கம்  உங்களுக்கேன்?
    நாராயணப்பிரியன் இராமநாதன் உங்களைச் சிறிதும் விரும்பான்”

    “பூவில் மணம் ,கனியில் சுவை
    பெண்ணின் ஆசையென்பன
    பருவம் சார்ந்தன்றி விருப்பம் சார்ந்ததல்ல.
    தன்னையறிவதற்கு முன்பு இலிங்க வசப்பட வேண்டும்
    பொன் பொம்மையை உருக்கிய பின்பு
    வடிவத்தை மீண்டும் பெறமுடியுமா?
    நாராயணப் பிரியனே இராமநாதனே “

    குருபுரத மல்லையா

    சிவபக்தியின் மேன்மை வசனங்களில் வெளி்ப்படுகின்றன. ”குருபுரத மல்லையா “என்பது இவரது முத்திரையாகும்.

     “நேரத்திற்கொரு மாதிரி சிந்திக்கும் மனதைக் கண்டு,
    தினமும் ஒரு வகையாகும்  உடல் கண்டு பயமெழுகிறது.
    நொடியில் விதவிதமாக மனம் நினைக்கிறது.
    உன்னை நினைக்க விடாமல் மனம் பகையாகிறது
    குருவே குருபுரத மல்லையனே”

    குருசித்ததேவா

    “சங்கண பசவேஸ்வரா“ என்பது இவரது முத்திரையாகும். தத்துவ விளக்கமாகவே இவர் வசனங்கள் அமைகின்றன.

    “உடலில் இலிங்கமணிந்து சரணரெனச் சொல்லி
    சிவவணக்கத்தின் பாதை தவறி
    உலகோர் வணங்கும் தெய்வங்கள் முன் இலிங்கத்தோடு
    விழுந்து சரண் வேண்டுகிறவனின் பிறவி நீக்கி
    நரகம் தப்பாமல் தந்து இழிபிறவி தந்து பிரளயமும்
    தருவான் காண் சங்கண பசவேஸ்வரன்”

    குகேஸ்வரய்யா 

    “குகேஸ்வர பிரிய நிராளலிங்க“ இவரது முத்திரையாகும்.

    “சிவசிவ என்று வெறுமனே உச்சரித்தால் பிறவியொழியும்
    என்னும் அறிவற்றவரின் பேச்சைக் கேட்கக் கூடாது
    இருளான வீட்டில் வெளிச்சத்தை நினைத்தால் அது வருமா?
    காமக்காய்ச்சலின் போது அரம்பையை நினைப்பின் நீங்குமா?
    இத்தகைய மனித ஆடுகளின் பேச்சு
    நகைப்பையே தரும் நம் குகையீசப்பிரிய நிராளலிங்கனுக்கு”

    கொக்கவ்வா

    சாம்பிராணி போடுவது இவரது தொழிலாகும். அதனால் ”சாம்பிராணி போடும் கொக்கவ்வா” என்ற பெயரும் இவருக்குண்டு. சிவன் மீது கொண்ட பக்தியால் திருமண வாழ்வையொதுக்கி நோன்பை ஏற்றுகல்யாண் நகருக்கு வந்தவர். “நாஸ்தி நாதா” என்பது இவரது முத்திரையாகும். இலிங்கம்—அங்கம் சமநிலை, ஆண் பெண் சமத்துவம் ஆகியவை வசனங்களில் இடம் பெறுகின்றன. காயகம் சார்ந்த சொற்கள் வெளிப்படுகின்றன.

    “மோகம் கொண்ட ஆண் பெண் கை பற்றினால்
    அது அவனுடைமையென நினைக்க வேண்டும்
    பெண் மோகம் கொண்டு ஆணின் கைபற்றினால்
    அது என்னவென்றறிய வேண்டும்
    இந்த இரண்டின் வேற்றுமையும் நீக்கி
    மகிழ்ந்தால் நாஸ்திநாதன் நிறைவுடையவானாவான்”

    “முலை தோன்றினால் பெண்ணென்பர்
    மீசை முளைத்தால் ஆணென்பர்
    இவ்விரண்டின் அறிவு
    ஆணோ பெண்ணோ நாஸ்திநாதனே”

    கோணி மாரய்யா

    கோணியை அணிந்து பசு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டவர். ”கேட்டேஸ்வரலிங்கா “இவரது முத்திரையாகும். காயகம் சார்ந்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

    “வாள் குத்திய பின்பு
    வாள்முனை குத்தியது எனச் சொல்வது மூடரின் இயல்பு
    அறிவை உள்வாங்கும் மனதுக்கு மறதி என்றேனுமுண்டா?
    உறுதி ஏற்பட்ட பின்னர்
    அதன் செயல்பாடு மறைவதில்லை
    சரணமெனச் சொல்லி பிச்சையெடுத்து பிறருக்குக்  கொடுக்கும்
    சரணருக்கு குழப்பமில்லை ; துன்பமில்லை
    கேட்டேஸ்வர இலிங்கத்தின் அடியவரானதால்”

                                        [தொடரும்]

    Share
  • சதுக்க பூதம்

    சதுக்க பூதம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    யுகம் யுகமாய் மண்ணில் கிடக்கின் பாதச் சுவடுகள்
    புனிதர்களும் புத்தர்களும் வாழ்ந்து கடந்த பூமியிது
    மிருகங்கள் மனிதர்கள் தடம் மாறிப் பெயர்ந்தனர்
    கடல்பரப்பு அவ்வப்போது சத்தியம் மீறியது
    மலையும் குன்றும் ஓர் நாள் உருவம் சிறுத்தன
    எரிமலைகள் ஆங்காங்கே முடியாமல் கக்கின
    மரங்களும் பறவைகளும் ஏதுமறியாமல் இயங்கின
    தத்துவம் சொன்னோர் தவறியே போயினர்
    மதமே பெரிதென்றோர் மாண்டே தொலைந்தனர்
    காலமும் நில்லாது – காற்றும் நில்லாது
    வாழ்ந்தவனின் ரேகை எங்குமே நிற்கவில்லை
    சென்றவனின் சாம்பல் கண்ணில் தெரியவில்லை
    நிலம் மட்டும் நின்றது, வானோடு துணையாக
    எல்லாமே மாயையிங்கு நாம் என்ன விலக்கா என்ன
    காலம் சதுக்க பூதம், கற்றுணர்ந்தோர் ஞானியிங்கு

    Share
  • குறளின் கதிர்களாய்…(292)

    குறளின் கதிர்களாய்…(292)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(292)

    செயற்பால செய்யா திவறியான் செல்வ
    முயற்பால தன்றிக் கெடும்.

           – திருக்குறள் –437 (குற்றங்கடிதல்)

    புதுக் கவிதையில்...

    செல்வத்தால் செய்யத்தகுந்த
    நற்செயல்களைச் செய்யாமல்,
    பற்றதன் மீது கொண்டு
    சேமித்து வைப்பவன் செல்வம்
    உய்வகையின்றிக்
    கெட்டழியும்…!

    குறும்பாவில்...

    செல்வத்தால் செய்துகொள்ளவேண்டிய நற்செயல்களைச்
    செய்யாமல் அதன்மீது பற்றுள்ளம்கொண்டோன் செல்வம்,
    நிலைக்கும் தன்மையின்றி அழிந்திடும்…!

    மரபுக் கவிதையில்...

    சேர்த்து வைத்த செல்வத்தால்
         செய்திட வேண்டிய நற்செயல்கள்
    பார்த்துச் செலவு செய்யாமல்
       பற்றதன் மேலே கொண்டவன்தான்
    சேர்த்த செல்வ மெல்லாமே
      சென்றிடு மவனைக் கைவிட்டே,
    பார்த்தி டதுதான் நிலைக்காதே
      பயனே யிலாது கெட்டழியுமே…!

    லிமரைக்கூ..

    செல்வத்தால் செய்திடு நல்லதே,   
    அதுவன்றி அதன்மீது பற்றுளோன் செல்வம்
    நிலைக்காதே கெட்டழிய வல்லதே…!

    கிராமிய பாணியில்...

    நல்லதுசெய் நல்லதுசெய்
    செல்வத்தால நல்லதுசெய்..

    செய்யவேண்டிய நல்லதெல்லாம்
    சேத்துவச்ச செல்வத்தால
    செய்யாம அதுமேல
    ஆசவச்சவன் செல்வமெல்லாம்
    அவங்கிட்ட நெலைக்காம
    கெட்டழிஞ்சி போவுமே..

    அதால
    நல்லதுசெய் நல்லதுசெய்
    செல்வத்தால நல்லதுசெய்…!

    Share
  • அவலநிலை போக்குதற்கு ஆண்டவனே வழிகாட்டு!

    அவலநிலை போக்குதற்கு ஆண்டவனே வழிகாட்டு!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா,
    மெல்பேண்ஸ்திரேலியா

    கட்டி அணைத்தோம்
    கைகுலுக்கி மகிழ்வடைந்தோம்
    இட்டமுடன் உணவுகளை
    எடுத்துண்டு இன்புற்றோம்
    கட்டி அணைத்தவரை
    கைகுலுக்கி நின்றவரை
    எட்டவே நில்லென்று
    எச்சரிக்கை செய்கின்றோம்!

    கைதந்தால் ஓடுகிறோம்
    கால்பட்டால் பதறுகிறோம்
    முன்னின்று மூச்சுவிட்டால்
    பின்னோக்கி ஓடுகிறோம்
    தும்மல்வந்து விட்டாலே
    துடிதுடித்து நிற்கின்றோம்
    கொரனோவின் வில்லத்தனம்
    அளவின்றிப் போகிறதே!

    கொரனோவின் பரவலினால்
    கொள்கலங்கள் தடையாச்சு
    கடையெல்லாம் சனக்கூட்டம்
    பொருள்தேடி அலைகிறது
    கல்விகற்கும் மாணவர்கள்
    கதிகலங்கி நிற்கின்றார்
    மெள்ளமெள்ள கொரனோவும்
    பள்ளிநோக்கிப் பார்க்கிறது!

    வெளிநாட்டுப் பிரயாணம்
    அத்தனைக்கும் வேட்டுவைத்து
    உள்நாட்டு விழாவனைத்தும்
    ஓரங்கட்டும் நிலையாச்சு
    யாருக்கு வருமென்று
    தெரியாத மாயமதாய்
    பாருக்குள் கொரனோவும்
    பாய்ந்துவிடத் துடிக்கிறது!

    மக்கள்கூடும் இடத்தினிலே
    தன்மதிப்பைக் காட்டுதற்கு
    கொரனோவும் ஆவலுடன்
    கொடியெடுத்து நிற்கிறது
    வீட்டுக்குள் இருந்துவிட்டால்
    வில்லனிடம் தப்பிடலாம்
    என்கின்ற அறிவுரையால்
    எல்லோரும் முடங்கிவிட்டார்!

    ஆலையெலாம் மூடிவிட
    ஆலயங்கள் அடங்கிவிட
    அரக்கனென கொரனோவும்
    ஆர்ப்பரித்து எழுந்துவிட
    ஆர்வருவார் இடர்களைய
    என்றேங்கும் அகிலமக்கள்
    அவலநிலை போக்குதற்கு
    ஆண்டவனே வழிகாட்டு ! 

    Share
  • இந்திய முஸ்லீம்களின் கதி என்ன?

    இந்திய முஸ்லீம்களின் கதி என்ன?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இன்று அமெரிக்காவிலிருந்து மைசூரில் எங்கள் பக்கத்து வீட்டு நண்பரை தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தேன்.  இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கொரோனோவைரஸின் நிலைமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.  அதன் பிறகு என்னுடைய அடுத்த புத்தகம் வியட்நாம் பற்றி என்றும் அங்கு எத்தனை உயிர்கள் – அமெரிக்கர்களும் வியட்நாமியர்களும் – அமெரிக்க ஜனாதிபதிகளின் ‘ஈகோ’வால் பலியாகின என்பதை அறிந்து என் மனம் என்ன பாடுபட்டது என்பது பற்றியும் அவரிடம் கூறினேன். அமெரிக்காவும் தாலிபானும் சமாதானம் பற்றி நடத்தும் பேச்சுவார்த்தை பற்றியும் கூறிவிட்டு ஆஃப்கானிஸ்தானில் என்றாவது அமைதி வருமா என்று கேட்டேன். அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆஃப்கானிஸ்தானில் எப்போதும் அமைதி நிலவும் சாத்தியமே இல்லை என்றார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் எனக்கு ஒப்புதலாக இல்லை. இந்தியத் துணைக்கண்டம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் ஆஃப்கானிஸ்தான் இந்தியாவின் அண்டை நாடாக இருந்திருக்கும், ஆஃப்கானிஸ்தானின் பிரச்சினைகள் இந்தியாவையும் ஓரளவு பாதித்திருக்கும் என்றேன்.  அதற்கு அவர் எதுவும் கூறாமல், ‘இந்தியத் துணைக்கண்டம் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிக்கப்பட்டபோது முஸ்லீம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும், காந்திஜியும் நேருவும் செய்த தவறுகளால் இப்போது நாம் கஷ்டப்படுகிறோம் என்றார்.  எனக்குத் திகீர் என்றது.

    அவர் எங்கள் அடுத்த வீட்டு நண்பராக இருபது வருடங்களுக்கு மேல் இருந்துவருகிறார். ராணுவத்தில் பணிபுரிந்திருப்பதால் எல்லாச் சட்டங்களையும் விதிகளையும் தவறாமல் பின்பற்றுவார். ஒரு முறை நான் இஸ்ரேலில் கிடைத்த கத்தரிக் காய்களை அங்கிருந்து நம் சுங்கத் துறைக்குத் தெரியாமல் கொண்டுவந்துவிட்டேன் என்று பெருமையாகக் கூறியபோது, ‘இப்படித்தான் நம் இந்தியர்கள் வெளிநாடுகளில் எல்லா விதிகளையும் பின்பற்றுகிறார்கள், இந்தியாவில் அதே இந்தியர்கள் விதிகளைப் பின்பற்றுவதில்லை’ என்றார். அன்றிலிருந்து இந்தியாவிற்குள் கொண்டுவரக் கூடாத எந்தப் பொருளையும் நான் கொண்டுவருவதில்லை. நாங்கள் மைசூரில் இல்லாதபோது எங்கள் வீட்டில் என்ன பிரச்சினை என்றாலும் உடனேயே கவனிப்பார். ஒரு முறை எங்கள் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் வாட்ச்மேன் மரத்திலிருந்து விழுந்து காயமுற்றபோது உடனேயே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதோடு மருத்துவமனையில் முன் பணம் கட்டச் சொன்னபோது ஆயிரம் ரூபாயைக் கட்டியதோடு அதை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேயில்லை.

    இவருக்கு பி.ஜே.பி.யிடமும் அதன் தலைவர்களிடமும் அபிமானம் உண்டு என்று எனக்கு நன்றாகத் தெரியும்.  அரசியலைப் பொறுத்தவரை அவரும் நானும் இரு துருவங்கள்.  அதனால் அரசியலைப் பற்றி அவரிடம் எதுவும் பேசுவதில்லை. அவர் பி.ஜே.பி. தலைவர்களை வெகுவாக ஆதரித்து காங்கிரஸ் தலைவர்களைக் கடுமையாகச் சாடும்போது என்னால் சும்மா இருக்க முடியாது. ஏதாவது நான் கூறப்போய் அது மனஸ்தாபத்தில் முடிந்துவிடக் கூடாதே என்பதால்தான் இந்த முன்னெச்சரிக்கை.  இன்றும், நேருவும் காந்திஜியும் செய்த தவறால் இந்தியா மதச்சார்பற்ற நாடாக ஆகிவிட்டது, அப்போதே இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த முஸ்லீம்கள அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும், அப்படிச் செய்திருந்தால் இன்று நாம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்காது, இந்தியா ஒரு இந்து நாடாக இருந்திருக்கும் என்றபோது என் உணர்ச்சிகள் எதையும் காட்டிக்கொள்ளமல் பேசாமல் இருந்துவிட்டேன்.

    பிரிவினை சமயத்தில் காங்கிரஸ் கட்சி முடிக்காமல் விட்ட வேலையை நாங்கள் இன்று நிறைவேற்றிவைக்கிறோம் என்று மோதியும் அமித் ஷாவும் பேசுவதுபோல் அல்லவா இவரும் பேசுகிறார். நினைக்க, நினைக்க ஆயாசமாக இருக்கிறது. எப்போது இவரைப் போன்றவர்களைக்கூட பி.ஜே.பி.யால் மூளைச்சலவை செய்ய முடிந்தது?  இந்தியாவில் எத்தனை இனங்கள், எத்தனை மதங்கள், எத்தனை மொழிகள் என்று இந்தியாவின் பன்மைத்துவம்தான் இந்தியாவுக்கே பலம் என்று இவர் போன்றவர்களுக்குப் புரியவில்லையா? இந்தியாவில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர்களுக்கே உரிய ஒரு கலாச்சாரம் நம் இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கின்றதே.  இதை இவர்கள் உணரவில்லையா?

    இந்தியர்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை இல்லை என்றே வைத்துக்கொள்ளுவோம்.  ‘இந்தியாவில் நாம் முதலில் எல்லோரும் இந்துக்களாகத்தன் இருந்தோம்.  பிறகு முஸ்லீம் அரசர்கள் இந்தியா மீது படையெடுத்து நம்மில் ஒரு சிலரை முஸ்லீம்களாக மாற்றிவிட்டார்கள். அதனால் எல்லோரும் இப்போது இந்து மதத்திற்கு வந்துவிடுங்கள்’ என்று பி.ஜே.பி. தலைவர்கள் கூறுவது எந்த நியாயத்தில் சேர்த்தி? எத்தனை பழங்குடி மக்களை இந்து மதத்திற்குள் கொண்டுவந்திருக்கிறோம். இன்றைய முஸ்லீம்கள் அனைவரும் அன்றைய முஸ்லீம் அரசர்களால் மதம் மாற்றப்பட்டார்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம். பல நூற்றாண்டுகளாக அந்த மதப் பழக்க வழக்கங்களுக்குப் பழக்கப்பட்டவர்களை இன்று மறுபடி மதம் மாறச் சொன்னால் அது அவர்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்?  பல நூற்றாண்டுகளக இந்திய மண்ணில் பிறந்து இந்திய மண்ணில் வாழ்ந்தவர்களை இடம் பெயரச் சொன்னால் அது அவர்களால் முடியுமா?

    தென்னிந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களை வட இந்தியாவுக்கு அப்பால் இருக்குக் பாகிஸ்தானில் குடியேறச் சொன்னால் அது அவர்களால் முடியுமா? என்னுடைய கல்லூரித் தோழி ஒருத்தி முஸ்லீம். சில பழக்கங்களைத் தவிர அவளுக்கும் எனக்கும் எந்தப் பெரிய வேற்றுமையும் இருந்ததில்லை. அவளைப் போன்றவர்களைப் பாகிஸ்தானில் குடியேறுங்கள் என்றால் அவள் குடும்பத்தாரால் முடிந்திருக்காது. அவளுடைய மதம் இஸ்லாம் என்பதைத் தவிர அவள் குடும்பம் ஒரு தமிழ்க் குடும்பம். அந்தத் தமிழ்க் குடும்பத்தை எப்படி இடம் பெயரச் சொல்லியிருக்க முடியும்? தென்னிந்தியாவில் வாழும் எல்லா முஸ்லீம்களுக்கும் இரு பொருந்தும்.

    கிறிஸ்தவர்களுக்கு நிறைய நாடுகள் இருக்கின்றன, முஸ்லீம்களுக்கு நிறைய நாடுகள் இருக்கின்றன, இந்துக்களுக்குத்தான் இந்தியாவை விட்டால் வேறு நாடு கிடையாது, அதனால் இங்கு இந்துக்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு என்கிறார்கள் பி.ஜே.பி. தலைவர்கள். முஸ்லீம்களுக்குப் பல நாடுகள் இருந்தாலும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லீம்களுக்கு இந்தியா ஒன்றுதான் அவர்களுடைய நாடு.  இதை விட்டு அவர்கள் எல்லோரும் எங்கு செல்வார்கள்?  உண்மையான இறைபக்தி உள்ளவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற மதங்களையோ மற்ற மதத்தவர்களையோ நிந்திப்பதல்லை, குறைதுப் பேசுவதில்லை.  அப்படிச் செய்தால் அவர்களுடைய இறைபக்திக்கே அது களங்கம் ஏற்படுத்தும்.  எல்லா மதங்களும் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று கற்பிக்கும்போது ‘என் மதம்தான் பெரியது, என் கடவுள்தான் பெரியவர் என்று சொல்வது எப்படிப்பட்ட அறியாமை! சிந்தித்துச் செயல்பட்டால் இந்த அறியாமை என்ற இருள் நம்மை விட்டு விலகிவிடும்.


    பின் குறிப்பு:

    முன் ஒரு வல்லமை இதழில் ‘இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு’ என்ற கட்டுரையில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராரிசியராக இருந்து ஓய்வு பெற்று சிகாகோவிலேயே வசிக்கும் எங்கள் முஸ்லீம் நண்பர் ஒருவருக்கு இந்தியத் தூதரகம் விசா கொடுக்க மறுத்ததை எழுதியிருந்தேன். அவருக்கு இப்போது விசா கிடைத்திருக்கிறது.  தூதரகத்தின் இந்த மன மாற்றத்திற்கு ஒரு காரணம் என்னைப்போல் அவருடைய வேறு சில நண்பர்களும் ஊடகங்களில் எழுதியது. மற்றொரு காரணமும் உண்டு. இந்தியாவில் குடிமகனாக இருப்பதற்கு தந்தை பற்றிய ஆவணங்கள் கேட்பதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது. பல மாநில அரசுகள் இந்தத் தகவலை சேகரிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றன. மத்திய அரசும் இந்த ஆவணங்கள் தேவையில்லை என்று பின்வாங்கி இருக்கிறது. இதனால் இந்தியத் தூதரகங்களும் விசா கொடுப்பதற்கு விதிகளைத் தளர்த்தி இருக்கின்றன. எப்படி இருந்தாலும் நண்பருக்கு விசா கிடைத்ததில் மகிழ்ச்சி.  இவரைப் போலவே இந்தியாவிலேயே இருக்கும் முஸ்லீம்களுகு ஆவணங்கள் கேட்காமலேயே குடியுரிமை கொடுப்பார்கள் என்று நம்பலாம் என்று தோன்றுகிறது.

    Share
  • ஒரு சதம் மட்டும் பத்தாது (A Century is not enough) – சவுரவ் கங்குலியின் சுயசரிதம்!

    ஒரு சதம் மட்டும் பத்தாது (A Century is not enough) – சவுரவ் கங்குலியின் சுயசரிதம்!

    சாமிநாதன் ராம்பிரகாஷ்

    சவுரவ் கங்குலி! கிட்டத்தட்ட 2008ஆம் ஆண்டே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். ஆனால் இன்றளவும் அவரை மறக்காத ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.

    “சச்சினின் சுயசரிதம் அவரின் வளர்ச்சியைப் பேசும். தோனியின் சுயசரிதம் அவரின் முன்னேற்றத்தை மட்டுமே பேசும். ஆனால் கங்குலியின் சரிதமோ, ஒட்டுமொத்த இந்திய அணியின் முன்னேற்றத்தையும் பேசும்“ – வீரேந்திர சேவாக்.

    “கங்குலி என்பது சாதாரண பெயர் அல்ல, அது ஒரு சென்சேஷன்! “ – கபில்தேவ்.

    “கங்குலி போன்ற ஓர், உயிர்ப்பான வெற்றியை மட்டுமே தேடும் கேப்டன் உங்கள் எதிரணியில் இருந்தால் அவரை மதித்தே ஆவதைத் தவிர வேறு வழியில்லை” – ஸ்டீவ் வாக்.

    “இங்கு இன்னொரு சச்சின் கூட வரலாம் ஆனால் ஒரே ஒரு கங்குலி தான்” – சச்சின் டெண்டுல்கர்.

    இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 1992ஆம் ஆண்டிலேயே இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றார். ஆனால் கங்குலிக்கு வாய்ப்பு குறைவாகவே அமைந்தது. அதையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்திய அணியும் தோல்வியுற்றது. கங்குலி அணியில் இருந்து நீக்கப்பெற்றார் .

    அதன் பிறகு 1996ஆம் ஆண்டு தான் இங்கிலாந்துத் தொடரில் மீண்டும் அணியில் இடம் பெற்றார் . அந்த இடைப்பட்ட ஆண்டுகளை அவர் விவரித்த விதம், நேர்மறையான அணுகுமுறை, சாவல்களை எதிர்கொண்டது, ஏமாற்றம் அடைந்தது என அனைத்துமே வாழ்க்கைப் பாடமாக அமைந்துள்ளது.

    சாதாரணமாகவே கங்குலி எதற்கும் அஞ்சாமல் பேசுபவர், அதுவும் அவருடைய சுய சரிதம்… அவருக்கே உரிய தொனியில், கம்பீரத்துடன் அவரே நமக்கு அருகில் அமர்ந்து பேசுவது போல அமைந்துள்ளது. மைதானங்களை வர்ணிப்பது, வீரர்களுடனான உரையாடல், சொற்போர்கள் எனப் புத்தகம் மிகவும் சுவாரஸ்யமாக நகர்கிறது.

    இங்கிலாந்துத் தொடரில் சதங்களை அடித்தாலும், இந்திய அணியில் அவரின் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவர் பட்ட பாடுகள், பந்துவீச்சால் தப்பிய தருணங்கள், விமர்சனங்கள், நெருக்கடிகள் என அவரே கூறி இருப்பது ஒரு புது வித அனுபவம்.

    “நான் விளையாடும் போது, எனது இடம் நிரந்தரமா என்கிற கேள்வி ஓடிக்கொண்டே இருக்கும். அது சில நேரங்களில் எனது ஆட்டத்தையும் பாதித்தது. எனவே நான் கேப்டன் ஆனவுடன் எனது அணியின் புதிய வீரர்களுக்கு அத்தகைய உறுதியை அளித்தேன். அதன் விளைவாக, எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் வெற்றியும் பெற்றனர் “ – கங்குலி.

    இதைப் போன்ற எண்ணற்ற சுவாரசிய தகவல்களை இப்புத்தகத்தில் அடுக்கியுள்ளார். தசரா துர்கா பூஜை சமயத்தில் அவரின் ஓய்வு அறிவிப்பு வெளிவந்தது. அதை அவர் விவரித்த விதம் கவித்துவம்.

    கிரிக்கெட் பிடித்தால் கங்குலியை ரசிக்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை!

    இப்புத்தகத்தை எனது பிறந்த நாள் பரிசாக அளித்த என் மனைவிக்கும் தம்பிக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை!  மட்டற்ற மகிழ்ச்சி!!

    Share
  • அரங்கம் -15.03.2020

    அரங்கம் -15.03.2020

    1. ஹென்ரிக் இப்சன் குறித்த அறிமுகம்
    2. அவரது படைப்புகள் குறித்த காணொளி
    3. "A Doll's House" நாடகத்தின் சில காட்சிகள் திரையிடல்
    4. கருத்து பரிமாறல்
    Share
  • காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியில்

    காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியில்

    அண்ணாகண்ணன்

    காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா & பயிலரங்கில், 16.03.2020 அன்று, நிறைவுப் பேருரை ஆற்றுகிறேன். வாய்ப்புள்ளோர் வருக.

    Share
  • சிலம்பொலி பரப்பிய செம்மல்!

    சிலம்பொலி பரப்பிய செம்மல்!

    -மேகலா இராமமூர்த்தி

    ”நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று சிலம்பின் பெருமையைப் புலப்படுத்தினார் மகாகவி பாரதி.

    சிலப்பதிகாரத்தை நினைக்கும்போதே இரண்டு சான்றோர்களின் பெயர்களும் உடனே நம் நினைவுக்கு வரும். அவர்களில் ஒருவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள். மற்றொருவர், சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள். இவ்விருவரில் இரண்டாமவரான சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ்க்கையையும் தமிழுக்கு அவர் ஆற்றியிருக்கும் அரும்பணிகளையும் கருதுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    தம்முடைய 22ஆம் அகவை தொடங்கி தாம் மண்ணுலகை விட்டகன்ற 91ஆம் அகவை வரை தமிழுக்காகத் தளராமல் உழைத்தவர்  செல்லப்பனார்.  நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் 1928ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 24-ஆம் நாள் சுப்பராயன், பழனியம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் அவர். கணிதத்தில் பட்டம்பெற்றுக் கணித ஆசிரியராகத் தமது பணியைத் தொடங்கியவர், தமிழிலக்கியங்கள்மீது கொண்ட தணியாத காதலால், தமிழில் முனைவர்ப் பட்டம் பெற்றார்.

    கவிதையைப் பற்றிக் குறிப்பிடும் ஆங்கிலக் கவிஞரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் , “Poetry is the spontaneous overflow of powerful feelings” என்பார். ”மடைதிறந்த வெள்ளமென உள்ளத்து உணர்வுகளைச் சொற்களில் பாய்ச்சுவதே கவிதை” என்று கவிதைக்கு வேர்ட்ஸ்வொர்த் வகுத்தளித்த இலக்கணத்தைத் தம் சொற்பொழிவுகளிலும் சாத்தியமாக்கிக் காட்டியவர் செல்லப்பனார்.

    சிலப்பதிகாரம் எனும் தலைப்பில் 1953ஆம் ஆண்டு இராசிபுரம் இலக்கிய மன்ற விழாவில் செல்லப்பனார் ஆற்றிய பொழிவைக் கேட்டுப் பெரிதுவந்த சிறந்த தமிழறிஞரும் வழக்குரைஞரும் தம் பேச்சுத்திறத்தால் ’சொல்லின் செல்வர்’ எனும் பட்டம் பெற்றவருமான  ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் ’சிலம்பொலி’ என்னும் சிறப்புப் பெயரை செல்லப்பனாருக்குச் சூட்டி மகிழ்ந்தார்.

    சிலப்பதிகாரம் பற்றி முழுமையாய் ஆய்வுசெய்து ’சிலம்பொலி’ என்னும் தலைப்பில் 1975இல் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டார் செல்லப்பனார்.

    சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் இந்நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில்,

    ”கண்ணகி காப்பியம் தமிழினத்தின் தேசியச் சொத்து. அதை மக்கள் மத்தியில் பரப்ப அயராது பாடுபட்டுவரும் சிலம்பொலி செல்லப்பனாருக்கு என் வாழ்த்துகள். அன்பிலும் பண்பிலும் சிறந்தவராதலால் சிலம்பு பற்றிய இவரது பேச்சிலும் எழுத்திலும் அவை எதிரொலிக்கின்றன” என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கின்றார்.

    கலைஞர் கருணாநிதி அவர்கள் அளித்த பாராட்டுரையில்,

    “அவர் இந்நூலை வெளியிட்ட பிறகு சிலம்பொலி செல்லப்பனாக ஆனவர் அல்லர்; அவர் சிலம்பொலி செல்லப்பனாகவே இருந்த காரணத்தால்தான் அவர் எழுதிய நூலுக்குச் சிலம்பொலி என்ற பெயர் வந்திருக்கிறது. இந்த நல்ல எழுத்தாளர், நல்ல ஆற்றலாளர், நல்ல தமிழ் வல்லுநர் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

    இளங்கோ அடிகள் அருளிய சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும்,  சிலப்பதிகாரச் சிந்தனைகள், பெருங்குணத்துக் கண்ணகி ஆகியவை சிலம்பு குறித்துச் செல்லப்பனார் எழுதிய பிற நூல்களாகும்.

    மணிமேகலை தெளிவுரை என்ற தலைப்பில் மணிமேகலைக் காப்பியம் முழுமைக்கும் அருமையானதொரு தெளிவுரையை எழுதி வெளியிட்டுள்ள செல்லப்பனார், நல்ல குறுந்தொகையில் நானிலம், மலர்நீட்டம் (திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள்), காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும், பெருங்கதை ஆராய்ச்சி, நெஞ்சை அள்ளும் சீறா (நான்கு தொகுதிகள்), மூன்றும் நான்கும் (திரிகடுகம் , நான்மணிக்கடிகை தெளிவுரை) உள்ளிட்ட ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.

    1990-ஆம் ஆண்டு வடசென்னைத் தமிழ் வளர்ச்சிப் பேரவையின் சார்பில் பத்துப்பாட்டு நூல்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் 18 கூட்டங்களில் தொடர் சொற்பொழிவுகளாக நிகழ்த்தியுள்ளார். இத்தொடர் சொற்பொழிவுகளிலிருந்து பத்துப்பாட்டு பற்றிய பேச்சுக்கள் தனியே தொகுக்கப்பட்டு, ‘சங்க இலக்கியத் தேன்’ என்ற தலைப்பில் மூன்று அரிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த நூலுக்குப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அளித்துள்ள ஆய்வுரையில்,

    “இந்த நூலை முற்றும் படித்துச் சுவைத்த நான், சிலம்பொலியாரின் தேமதுர நயம் காட்டும் உரையை அவர் நிகழ்த்திக் கேட்பதுபோலவே உணர்ந்து மகிழ்ந்தேன். சுருங்கச் சொல்வதெனில், இவ்விரிவுரை ஒவ்வொன்றும், கொற்கை வெண்முத்துகளைத் தங்கத் தாம்பாளத்தில் கொட்டிவைத்துப் பரிசளித்தது போன்றும், இனிய மாதுளையின் செந்நிற மணிகளை வெள்ளித் தட்டில் நிரப்பி உண்ணத் தந்தது போன்றும் உளம் மகிழ்வித்தது.

    இந்நூலைப் படித்தபோது, பல கல் தொலைவு பயணம் செய்து மேடையேறி உரையாற்ற முற்படும் புலவனுக்கு நறுமண முல்லையால் தொடுத்ததொரு மாலை அணிவித்தது போன்றும், கடுங்கோடையின் வெப்பத்தால் களைப்புற்ற ஒருவனுக்குக் குளிர் இளநீரில் நுங்கினைப் பெய்துவைத்துத் தேனும் கலந்து பருகிடத் தந்தது போன்றும் உணர்ந்தேன்; உவகையுற்றேன்.

    சிலம்பொலி செல்லப்பன் சொலல்வல்லன்; சோர்விலன்; அஞ்சான் என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்.” என்று குறிப்பிட்டுச் சிலம்பொலி செல்லப்பனாரைப் பெரிதும் புகழ்கின்றார்.

    சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமண்டபத்தில் மணிமேகலை என்ற தலைப்பில் பதினெட்டு பொழிவுகளைப் பதினெட்டு மாதங்கள் தொடர் சொற்பொழிவுகளாக நிகழ்த்தியிருக்கின்றார் செல்லப்பனார்.

    ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி குறித்து, வடசென்னைத் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் ஓராண்டுக் காலம் பதினைந்து பொழிவுகள் நடாத்தியிருக்கின்றார்.

    இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், கந்தபுராணம் திருவிளையாடற்புராணம் போன்ற புராண நூல்களையுமே அறிஞர் பெருமக்கள் தொடர் பொழிவுகளாக நிகழ்த்திவந்த அன்றைய காலச்சூழலில், ஐம்பெருங்காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், கிறித்தவ இலக்கியமான தேம்பாவணி, இசுலாமிய இலக்கியமான சீறாப்புராணம், புலவர் குழந்தையின் இராவண காவியம், பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் போன்றவற்றையெல்லாம் தொடர்சொற்பொழிவுகளாகச் செல்லப்பனார் ஆற்றியிருப்பது, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அவருடைய இலக்கிய ஈடுபாட்டையும், மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத இலக்கியச் செல்வங்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதில் அவருக்கிருந்த அளவற்ற ஆர்வத்தையும் அங்கை நெல்லியெனப் புலப்படுத்துவன.

    இவையல்லாது நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு பேருரையாற்றிய பெருந்தகையாளர் சிலம்பொலி செல்லப்பனார். சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு ஆகிய மூன்று மாநாடுகளின் சிறப்பு மலர்களைத் தயாரிக்கும் பொறுப்பினை ஏற்று அப்பணிகளைச் செவ்வனே செய்து முடித்த செம்மல் அவர்.

    பிற அறிஞர்களின் நூல்களுக்குச் சிலம்பொலியார் எழுதிய ஆய்வு அணிந்துரைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆயிரத்துக்கு மேற்பட்டதாகும். தமிழகத்தில் இவரிடம் அணிந்துரை வாங்காத நூலாசிரியர்களே மிகவும் குறைவு என்று சொல்லிவிடலாம்.

    மன்னராட்சி காலத்தில் போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாராட்டிப் பரணி பாடுவார்கள்.

    ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
    மானவனுக்கு வகுப்பது பரணி (இலக்கண விளக்கம்: 839)

    அதுபோல் ஆயிரம் நூல்களுக்குமேல் அணிந்துரை வழங்கிச் சாதனை படைத்துள்ள செல்லப்பனார் மீதும் நாம் புதியதோர் பரணி பாடலாம்.

    இவ் அணிந்துரைகள் ’சிலம்பொலியார் அணிந்துரைகள்’ எனும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. செய்திக் கருவூலமாக, கருத்துக் களஞ்சியமாக இவை திகழ்கின்றன எனில் மிகையில்லை.

    சான்றாக, குழந்தைக் கவிஞர் என்று போற்றப்பட்ட அழ. வள்ளியப்பா அவர்கள் எழுதிய ’சிரிக்கும் பூக்கள்’ எனும் குழந்தைகளுக்கான கவிதை நூலுக்கு செல்லப்பனார் எழுதிய அணிந்துரையின் ஒரு பகுதியினைக் காண்போம்.

    ”குழந்தை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதுவரவு. அவ்வாறாயின், தமிழில் இதற்கு முன்னர்க் குழந்தை இலக்கியம் இருந்ததில்லையா? தொல்காப்பியம் ‘பிசி’ என்னும் ஓர் இலக்கிய வகையைக் குறிப்பிடுகிறது.

    ’பிசி’ என்பது விடுகதை. விடுகதை சிறுவர்களுக்குரியது. எனவே, சங்க காலத்திற்கு முன்பிருந்தே குழந்தைப் பாடல்கள் இருந்தன என்பர் ஆய்வாளர். விடுகதைகள் குழந்தைகட்கு விருப்பமூட்டுவன என்றாலும் அவை குழந்தைகட்கே உரியன என்று கூறமுடியாது.

    கிபி 12-ஆம் நூற்றாண்டளவில் ஔவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நூல்களையும், அதிவீரராம பாண்டியர் வெற்றிவேற்கை எனும் நூலையும் பாடியுள்ளனர். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய உலகநாதர் உலகநீதியைப் பாடினார். இவை குழந்தைகட்குக் கற்பித்து வரப்படுகின்றன என்றாலும், இன்று நாம் கண்டுவரும் குழந்தை இலக்கிய வகையில் இவை அடங்குமெனக் கூறுதற்கில்லை.

    குழந்தைகட்கே உரிய, குழந்தைகள் பாடியும் ஆடியும் பயன்கொள்ளத்தக்க கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தாம் எழுந்தன. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் கி.பி. 1901-இல் குழந்தைகட்கெனத் தனித்த கவிதைகளை எழுதினார். அவர் ஆசிரியராயிருந்தமையால், மேனாட்டில் இருந்ததுபோன்ற தனித்த குழந்தைக் கவிதைகள் தமிழில் இல்லையென்ற குறையை உணர்ந்து, அக்குறை நீங்கும்வண்ணம் அருமையான பாடல்களை இயற்றினார்.

    இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்துதான் பாடநூல்கள் அல்லாத குழந்தைகட்கென்றே தனியாக எழுதப்பட்ட பாடல் நூல்கள் வெளிவரலாயின. இவ்வகையில் முன்னோடியாக விளங்கியவர் அழ. வள்ளியப்பா அவர்களே!

    அவர் எழுதிய குழந்தைக் கவிதைகள் அடங்கிய ’மலரும் உள்ளம்’ முதற்றொகுதி 1954இல் வெளிவந்தது. 1961இல் ’மலரும் உள்ளம்’ இரண்டாந்தொகுதி வெளிவந்தது. இன்று நூற்றுக்கணக்கானோர் அவர் நடையைத் தம் நடையாகவும், அவர் உத்தியைத் தம் உத்தியாகவும் கைக்கொண்டு கவிதைகள் எழுதிவருகின்றனர்.

    ஊரென்றால் ’உறையூர்’, பூவென்றால் ’தாமரை’ என்பதுபோல, குழந்தைக் கவிஞர் என்றாலே அஃது ’அழ. வள்ளியப்பா’வைக் குறிப்பதாகவே அமைந்துவிட்டது. கவிமணி குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டார். ஆனால் முளைத்து வளர்ந்துள்ள குழந்தைக் கவிதையெனும் ஆலின் அடிமரமாகவும், ஆணிவேராகவும் இருப்பவர் அழ. வள்ளியப்பாவே ஆவார்.”

    இவ்வாறு குழந்தை இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, அதில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பங்கு என்று ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாக நீண்டு செல்கின்றது, மலரும் உள்ளம் நூலுக்குச் செல்லப்பனார் வழங்கியிருக்கும் அணிந்துரை.

    இந்த அணிந்துரைத் தொகுதிகள், தமிழக அரசின் சிறந்த அணிந்துரை இலக்கிய நூல்களாகத் தெரிவு செய்யப்பட்டுப் பரிசு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    பட்டங்கள் பல செல்லப்பனாரின் புலமைக்குச் சான்றாய் அவரை வந்தடைந்தன. செந்தமிழ் அருவி, செந்தமிழ்க் களஞ்சியம், குறள்நெறிக் காவலர், இலக்கியச் செல்வர், சிந்தனைச் செல்வர், தமிழ்நலக் காவலர் என்பன அவற்றில் சில. பாவேந்தர் விருது, கம்பர் விருது, கலைஞர் விருது, தமிழ் வாகைச்செம்மல் விருது, தமிழ்ச் சான்றோர் விருது என ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் அன்னாருக்கு வழங்கப்பட்டமையால் பெருமையுற்றன.

    தமிழில் எந்தத் தலைப்பில் பேசச் சொன்னாலும் எவ்விதக் குறிப்புகளும் கையில் இல்லாமல், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், நெடுநேரம் திறம்படப் பேசுவதில் வல்லவர் செல்லப்பனார். தமிழகத்தில் மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஐக்கிய அரபு நாடுகள் எனப் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்துத் தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பி மகாகவி பாரதியின் கனவை நனவாக்கிய பெருமகனார் அவர்.

    தமிழைப் பிழையின்றி எழுதவேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வமும் கவனமும் கொண்டவரான செல்லப்பனார், தினமணி நாளேட்டில் ஏதேனும் சொற்குற்றம் கண்டவிடத்தும், பொருட்குற்றம் கண்டவிடத்தும், நக்கீரராய் மாறி, தொலைபேசியில் அப்பத்திரிகையின் ஆசிரியர்களை அழைத்து, அதனைச் சுட்டிக்காட்டித் திருத்தும் மாண்பாளர் என்பதைத் தினமணி, அவரது மறைவையொட்டி வெளியிட்ட இரங்கற் கட்டுரையில், நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கின்றது.

    சிலம்பைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பும் நோக்கத்துடன் ‘சிலப்பதிகார அறக்கட்டளை’ என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார் செல்லப்பனார். சிலப்பதிகார மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் முதலியவற்றை நடத்துவது, சிலப்பதிகாரத்தின் புகழைப் பரப்புவோர்க்கு ஆண்டுதோறும் ‘இளங்கோ விருது’ வழங்கிச் சிறப்பிப்பது போன்றவை இவ் அறக்கட்டளையின் முக்கியச் செயற்பாடுகள் ஆகும்.

    தரமிகு பேச்சாலும் திறமிகு எழுத்தாலும் அன்னைத் தமிழுக்கு அணிசெய்த உயர்தமிழரான சிலம்பொலி செல்லப்பனாரையும் அவருடைய அருந்தமிழ்ப் பணிகளையும் என்றும் போற்றுதல் நம் கடன்.

    *****

    http://silambolichellappan.com/page4.php

    https://ta.wikipedia.org/wiki/சிலம்பொலி_செல்லப்பன்

    https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/ 2019/apr/07/ இந்த-வாரம்-கலாரசிகன் -3128451.html

    http://www.tamilvu.org/library/nationalized/pdf/82-a.zhavalliyappa/seerikkumpookkal.pdf

    Share