-மேகலா இராமமூர்த்தி

”நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று சிலம்பின் பெருமையைப் புலப்படுத்தினார் மகாகவி பாரதி.

சிலப்பதிகாரத்தை நினைக்கும்போதே இரண்டு சான்றோர்களின் பெயர்களும் உடனே நம் நினைவுக்கு வரும். அவர்களில் ஒருவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள். மற்றொருவர், சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள். இவ்விருவரில் இரண்டாமவரான சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ்க்கையையும் தமிழுக்கு அவர் ஆற்றியிருக்கும் அரும்பணிகளையும் கருதுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தம்முடைய 22ஆம் அகவை தொடங்கி தாம் மண்ணுலகை விட்டகன்ற 91ஆம் அகவை வரை தமிழுக்காகத் தளராமல் உழைத்தவர்  செல்லப்பனார்.  நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் 1928ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 24-ஆம் நாள் சுப்பராயன், பழனியம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் அவர். கணிதத்தில் பட்டம்பெற்றுக் கணித ஆசிரியராகத் தமது பணியைத் தொடங்கியவர், தமிழிலக்கியங்கள்மீது கொண்ட தணியாத காதலால், தமிழில் முனைவர்ப் பட்டம் பெற்றார்.

கவிதையைப் பற்றிக் குறிப்பிடும் ஆங்கிலக் கவிஞரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் , “Poetry is the spontaneous overflow of powerful feelings” என்பார். ”மடைதிறந்த வெள்ளமென உள்ளத்து உணர்வுகளைச் சொற்களில் பாய்ச்சுவதே கவிதை” என்று கவிதைக்கு வேர்ட்ஸ்வொர்த் வகுத்தளித்த இலக்கணத்தைத் தம் சொற்பொழிவுகளிலும் சாத்தியமாக்கிக் காட்டியவர் செல்லப்பனார்.

சிலப்பதிகாரம் எனும் தலைப்பில் 1953ஆம் ஆண்டு இராசிபுரம் இலக்கிய மன்ற விழாவில் செல்லப்பனார் ஆற்றிய பொழிவைக் கேட்டுப் பெரிதுவந்த சிறந்த தமிழறிஞரும் வழக்குரைஞரும் தம் பேச்சுத்திறத்தால் ’சொல்லின் செல்வர்’ எனும் பட்டம் பெற்றவருமான  ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் ’சிலம்பொலி’ என்னும் சிறப்புப் பெயரை செல்லப்பனாருக்குச் சூட்டி மகிழ்ந்தார்.

சிலப்பதிகாரம் பற்றி முழுமையாய் ஆய்வுசெய்து ’சிலம்பொலி’ என்னும் தலைப்பில் 1975இல் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டார் செல்லப்பனார்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் இந்நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில்,

”கண்ணகி காப்பியம் தமிழினத்தின் தேசியச் சொத்து. அதை மக்கள் மத்தியில் பரப்ப அயராது பாடுபட்டுவரும் சிலம்பொலி செல்லப்பனாருக்கு என் வாழ்த்துகள். அன்பிலும் பண்பிலும் சிறந்தவராதலால் சிலம்பு பற்றிய இவரது பேச்சிலும் எழுத்திலும் அவை எதிரொலிக்கின்றன” என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கின்றார்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் அளித்த பாராட்டுரையில்,

“அவர் இந்நூலை வெளியிட்ட பிறகு சிலம்பொலி செல்லப்பனாக ஆனவர் அல்லர்; அவர் சிலம்பொலி செல்லப்பனாகவே இருந்த காரணத்தால்தான் அவர் எழுதிய நூலுக்குச் சிலம்பொலி என்ற பெயர் வந்திருக்கிறது. இந்த நல்ல எழுத்தாளர், நல்ல ஆற்றலாளர், நல்ல தமிழ் வல்லுநர் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இளங்கோ அடிகள் அருளிய சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும்,  சிலப்பதிகாரச் சிந்தனைகள், பெருங்குணத்துக் கண்ணகி ஆகியவை சிலம்பு குறித்துச் செல்லப்பனார் எழுதிய பிற நூல்களாகும்.

மணிமேகலை தெளிவுரை என்ற தலைப்பில் மணிமேகலைக் காப்பியம் முழுமைக்கும் அருமையானதொரு தெளிவுரையை எழுதி வெளியிட்டுள்ள செல்லப்பனார், நல்ல குறுந்தொகையில் நானிலம், மலர்நீட்டம் (திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள்), காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும், பெருங்கதை ஆராய்ச்சி, நெஞ்சை அள்ளும் சீறா (நான்கு தொகுதிகள்), மூன்றும் நான்கும் (திரிகடுகம் , நான்மணிக்கடிகை தெளிவுரை) உள்ளிட்ட ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.

1990-ஆம் ஆண்டு வடசென்னைத் தமிழ் வளர்ச்சிப் பேரவையின் சார்பில் பத்துப்பாட்டு நூல்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் 18 கூட்டங்களில் தொடர் சொற்பொழிவுகளாக நிகழ்த்தியுள்ளார். இத்தொடர் சொற்பொழிவுகளிலிருந்து பத்துப்பாட்டு பற்றிய பேச்சுக்கள் தனியே தொகுக்கப்பட்டு, ‘சங்க இலக்கியத் தேன்’ என்ற தலைப்பில் மூன்று அரிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நூலுக்குப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அளித்துள்ள ஆய்வுரையில்,

“இந்த நூலை முற்றும் படித்துச் சுவைத்த நான், சிலம்பொலியாரின் தேமதுர நயம் காட்டும் உரையை அவர் நிகழ்த்திக் கேட்பதுபோலவே உணர்ந்து மகிழ்ந்தேன். சுருங்கச் சொல்வதெனில், இவ்விரிவுரை ஒவ்வொன்றும், கொற்கை வெண்முத்துகளைத் தங்கத் தாம்பாளத்தில் கொட்டிவைத்துப் பரிசளித்தது போன்றும், இனிய மாதுளையின் செந்நிற மணிகளை வெள்ளித் தட்டில் நிரப்பி உண்ணத் தந்தது போன்றும் உளம் மகிழ்வித்தது.

இந்நூலைப் படித்தபோது, பல கல் தொலைவு பயணம் செய்து மேடையேறி உரையாற்ற முற்படும் புலவனுக்கு நறுமண முல்லையால் தொடுத்ததொரு மாலை அணிவித்தது போன்றும், கடுங்கோடையின் வெப்பத்தால் களைப்புற்ற ஒருவனுக்குக் குளிர் இளநீரில் நுங்கினைப் பெய்துவைத்துத் தேனும் கலந்து பருகிடத் தந்தது போன்றும் உணர்ந்தேன்; உவகையுற்றேன்.

சிலம்பொலி செல்லப்பன் சொலல்வல்லன்; சோர்விலன்; அஞ்சான் என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்.” என்று குறிப்பிட்டுச் சிலம்பொலி செல்லப்பனாரைப் பெரிதும் புகழ்கின்றார்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமண்டபத்தில் மணிமேகலை என்ற தலைப்பில் பதினெட்டு பொழிவுகளைப் பதினெட்டு மாதங்கள் தொடர் சொற்பொழிவுகளாக நிகழ்த்தியிருக்கின்றார் செல்லப்பனார்.

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி குறித்து, வடசென்னைத் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் ஓராண்டுக் காலம் பதினைந்து பொழிவுகள் நடாத்தியிருக்கின்றார்.

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், கந்தபுராணம் திருவிளையாடற்புராணம் போன்ற புராண நூல்களையுமே அறிஞர் பெருமக்கள் தொடர் பொழிவுகளாக நிகழ்த்திவந்த அன்றைய காலச்சூழலில், ஐம்பெருங்காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், கிறித்தவ இலக்கியமான தேம்பாவணி, இசுலாமிய இலக்கியமான சீறாப்புராணம், புலவர் குழந்தையின் இராவண காவியம், பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் போன்றவற்றையெல்லாம் தொடர்சொற்பொழிவுகளாகச் செல்லப்பனார் ஆற்றியிருப்பது, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அவருடைய இலக்கிய ஈடுபாட்டையும், மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத இலக்கியச் செல்வங்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதில் அவருக்கிருந்த அளவற்ற ஆர்வத்தையும் அங்கை நெல்லியெனப் புலப்படுத்துவன.

இவையல்லாது நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு பேருரையாற்றிய பெருந்தகையாளர் சிலம்பொலி செல்லப்பனார். சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு ஆகிய மூன்று மாநாடுகளின் சிறப்பு மலர்களைத் தயாரிக்கும் பொறுப்பினை ஏற்று அப்பணிகளைச் செவ்வனே செய்து முடித்த செம்மல் அவர்.

பிற அறிஞர்களின் நூல்களுக்குச் சிலம்பொலியார் எழுதிய ஆய்வு அணிந்துரைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆயிரத்துக்கு மேற்பட்டதாகும். தமிழகத்தில் இவரிடம் அணிந்துரை வாங்காத நூலாசிரியர்களே மிகவும் குறைவு என்று சொல்லிவிடலாம்.

மன்னராட்சி காலத்தில் போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாராட்டிப் பரணி பாடுவார்கள்.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி (இலக்கண விளக்கம்: 839)

அதுபோல் ஆயிரம் நூல்களுக்குமேல் அணிந்துரை வழங்கிச் சாதனை படைத்துள்ள செல்லப்பனார் மீதும் நாம் புதியதோர் பரணி பாடலாம்.

இவ் அணிந்துரைகள் ’சிலம்பொலியார் அணிந்துரைகள்’ எனும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. செய்திக் கருவூலமாக, கருத்துக் களஞ்சியமாக இவை திகழ்கின்றன எனில் மிகையில்லை.

சான்றாக, குழந்தைக் கவிஞர் என்று போற்றப்பட்ட அழ. வள்ளியப்பா அவர்கள் எழுதிய ’சிரிக்கும் பூக்கள்’ எனும் குழந்தைகளுக்கான கவிதை நூலுக்கு செல்லப்பனார் எழுதிய அணிந்துரையின் ஒரு பகுதியினைக் காண்போம்.

”குழந்தை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதுவரவு. அவ்வாறாயின், தமிழில் இதற்கு முன்னர்க் குழந்தை இலக்கியம் இருந்ததில்லையா? தொல்காப்பியம் ‘பிசி’ என்னும் ஓர் இலக்கிய வகையைக் குறிப்பிடுகிறது.

’பிசி’ என்பது விடுகதை. விடுகதை சிறுவர்களுக்குரியது. எனவே, சங்க காலத்திற்கு முன்பிருந்தே குழந்தைப் பாடல்கள் இருந்தன என்பர் ஆய்வாளர். விடுகதைகள் குழந்தைகட்கு விருப்பமூட்டுவன என்றாலும் அவை குழந்தைகட்கே உரியன என்று கூறமுடியாது.

கிபி 12-ஆம் நூற்றாண்டளவில் ஔவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நூல்களையும், அதிவீரராம பாண்டியர் வெற்றிவேற்கை எனும் நூலையும் பாடியுள்ளனர். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய உலகநாதர் உலகநீதியைப் பாடினார். இவை குழந்தைகட்குக் கற்பித்து வரப்படுகின்றன என்றாலும், இன்று நாம் கண்டுவரும் குழந்தை இலக்கிய வகையில் இவை அடங்குமெனக் கூறுதற்கில்லை.

குழந்தைகட்கே உரிய, குழந்தைகள் பாடியும் ஆடியும் பயன்கொள்ளத்தக்க கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தாம் எழுந்தன. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் கி.பி. 1901-இல் குழந்தைகட்கெனத் தனித்த கவிதைகளை எழுதினார். அவர் ஆசிரியராயிருந்தமையால், மேனாட்டில் இருந்ததுபோன்ற தனித்த குழந்தைக் கவிதைகள் தமிழில் இல்லையென்ற குறையை உணர்ந்து, அக்குறை நீங்கும்வண்ணம் அருமையான பாடல்களை இயற்றினார்.

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்துதான் பாடநூல்கள் அல்லாத குழந்தைகட்கென்றே தனியாக எழுதப்பட்ட பாடல் நூல்கள் வெளிவரலாயின. இவ்வகையில் முன்னோடியாக விளங்கியவர் அழ. வள்ளியப்பா அவர்களே!

அவர் எழுதிய குழந்தைக் கவிதைகள் அடங்கிய ’மலரும் உள்ளம்’ முதற்றொகுதி 1954இல் வெளிவந்தது. 1961இல் ’மலரும் உள்ளம்’ இரண்டாந்தொகுதி வெளிவந்தது. இன்று நூற்றுக்கணக்கானோர் அவர் நடையைத் தம் நடையாகவும், அவர் உத்தியைத் தம் உத்தியாகவும் கைக்கொண்டு கவிதைகள் எழுதிவருகின்றனர்.

ஊரென்றால் ’உறையூர்’, பூவென்றால் ’தாமரை’ என்பதுபோல, குழந்தைக் கவிஞர் என்றாலே அஃது ’அழ. வள்ளியப்பா’வைக் குறிப்பதாகவே அமைந்துவிட்டது. கவிமணி குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டார். ஆனால் முளைத்து வளர்ந்துள்ள குழந்தைக் கவிதையெனும் ஆலின் அடிமரமாகவும், ஆணிவேராகவும் இருப்பவர் அழ. வள்ளியப்பாவே ஆவார்.”

இவ்வாறு குழந்தை இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, அதில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பங்கு என்று ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாக நீண்டு செல்கின்றது, மலரும் உள்ளம் நூலுக்குச் செல்லப்பனார் வழங்கியிருக்கும் அணிந்துரை.

இந்த அணிந்துரைத் தொகுதிகள், தமிழக அரசின் சிறந்த அணிந்துரை இலக்கிய நூல்களாகத் தெரிவு செய்யப்பட்டுப் பரிசு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டங்கள் பல செல்லப்பனாரின் புலமைக்குச் சான்றாய் அவரை வந்தடைந்தன. செந்தமிழ் அருவி, செந்தமிழ்க் களஞ்சியம், குறள்நெறிக் காவலர், இலக்கியச் செல்வர், சிந்தனைச் செல்வர், தமிழ்நலக் காவலர் என்பன அவற்றில் சில. பாவேந்தர் விருது, கம்பர் விருது, கலைஞர் விருது, தமிழ் வாகைச்செம்மல் விருது, தமிழ்ச் சான்றோர் விருது என ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் அன்னாருக்கு வழங்கப்பட்டமையால் பெருமையுற்றன.

தமிழில் எந்தத் தலைப்பில் பேசச் சொன்னாலும் எவ்விதக் குறிப்புகளும் கையில் இல்லாமல், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், நெடுநேரம் திறம்படப் பேசுவதில் வல்லவர் செல்லப்பனார். தமிழகத்தில் மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஐக்கிய அரபு நாடுகள் எனப் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்துத் தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பி மகாகவி பாரதியின் கனவை நனவாக்கிய பெருமகனார் அவர்.

தமிழைப் பிழையின்றி எழுதவேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வமும் கவனமும் கொண்டவரான செல்லப்பனார், தினமணி நாளேட்டில் ஏதேனும் சொற்குற்றம் கண்டவிடத்தும், பொருட்குற்றம் கண்டவிடத்தும், நக்கீரராய் மாறி, தொலைபேசியில் அப்பத்திரிகையின் ஆசிரியர்களை அழைத்து, அதனைச் சுட்டிக்காட்டித் திருத்தும் மாண்பாளர் என்பதைத் தினமணி, அவரது மறைவையொட்டி வெளியிட்ட இரங்கற் கட்டுரையில், நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கின்றது.

சிலம்பைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பும் நோக்கத்துடன் ‘சிலப்பதிகார அறக்கட்டளை’ என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார் செல்லப்பனார். சிலப்பதிகார மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் முதலியவற்றை நடத்துவது, சிலப்பதிகாரத்தின் புகழைப் பரப்புவோர்க்கு ஆண்டுதோறும் ‘இளங்கோ விருது’ வழங்கிச் சிறப்பிப்பது போன்றவை இவ் அறக்கட்டளையின் முக்கியச் செயற்பாடுகள் ஆகும்.

தரமிகு பேச்சாலும் திறமிகு எழுத்தாலும் அன்னைத் தமிழுக்கு அணிசெய்த உயர்தமிழரான சிலம்பொலி செல்லப்பனாரையும் அவருடைய அருந்தமிழ்ப் பணிகளையும் என்றும் போற்றுதல் நம் கடன்.

*****

http://silambolichellappan.com/page4.php

https://ta.wikipedia.org/wiki/சிலம்பொலி_செல்லப்பன்

https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/ 2019/apr/07/ இந்த-வாரம்-கலாரசிகன் -3128451.html

http://www.tamilvu.org/library/nationalized/pdf/82-a.zhavalliyappa/seerikkumpookkal.pdf

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிலம்பொலி பரப்பிய செம்மல்!

  1. சிலம்பொலி பரப்பிய செம்மல் என்னும் கட்டுரை கண்டேன். எல்லாருடைய பாராட்டுக்கும் தகுதியானவர் சிலம்பொலியார். இருப்பினும் சிலம்பு என்றால் நினைவுக்கு வரும் ம.பொசி யின் பார்வை வேறு. இவருடைய பார்வை வேறு. முன்னவர் சிலம்பைச் சிறைச்சாலையில் கற்றவர். அடிப்படை கல்வி கிட்டாதவர்.சிலம்பொலியார் கணிதத்திலிருந்து தமிழுக்கு வந்தவர். கடும் முயற்சி கொண்டவர். அவர் சிலம்பொலியார் என அழைக்கப்படுவதுபொருத்தமே. சீறாவைத் தந்தவர் என்று அழைப்பதே எனக்குப் பிடித்தமானது. இந்தச் சிநதனைக்கு வழிவகுத்து கட்டுரை ;இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *