பசுமரத்தாணி
பாஸ்கர் சேஷாத்ரி
நான் கிட்டத்தட்ட ஆறு வயதில் அந்தப் பள்ளியில் சேர்ந்தேன். அறுபதுகளின் ஆரம்பத்தில் மயிலாப்பூரில் தொடக்கப் பள்ளிகள் பெரிதாக இல்லை. அப்போது கூட இந்த கான்வென்ட் மோகம் உண்டு. இருந்த சில பள்ளிகளில் இது தான் குறைவான கட்டணம். மாசம் பத்து ருபாய். அப்போதைய அதன் பெயர், மாண்டிசோரி ஸ்கூல். சோலையப்பன் தெரு பிரபலமாக இது ஒரு காரணம். அந்தக் காலத்திலேயே சறுக்கு மரம், சீசா போன்ற விளையாட்டு விஷயங்களும் உண்டு . இடமும் கொஞ்சம் பெரிது. நிறையக் கூரை வேய்ந்த இடம். கொஞ்சம் கொஞ்சமாய்ச் செலவு செய்து, நார்க்கூரை செய்தார்கள் . அப்போது அது தான் பிரபலம், குறைந்த கட்டணம் .
மிஸ் டீச்சர்களின் ஆதிக்கம் ஆரம்பித்த காலம். எந்த வசதியான குழந்தை கூட பயப்படும் இடம் ஸ்கூல் டீச்சர் தான்- எல்லோரையும் அங்கு அப்போது துரத்தியது ஆங்கில மோகம்தான் . மாண்டிசோரி என்றால் ஒரு கௌரவம். ஒரு அரை நிஜார். ஏதோ ஒரு சட்டை. என்னவோ ஒரு படிப்பு. வீட்டை விட்டுத் துரத்த, இந்தப் பள்ளி ஓர் உபாயம். படிப்பெல்லாம் ஒரு சாக்கு. இரு பாலர்க்கும் பொதுவான பள்ளி. அந்தப் பள்ளியின் மகிமை சில வருடங்களுக்குப் பின், நான் வேறு பள்ளியில் சேர்ந்த பின் தான் தெரிந்தது.
எல்லாம் விளையாட்டுக் காலங்கள். எப்படித்தான் இந்த விளையாட்டுகள் எல்லாம் ஒரு பொதுவான விஷயமாய் இருந்தன என்ற ஆச்சரியம் பல வருடங்களுக்குப் பின் வந்தது. சுதந்திர உலகம் எல்லோரையும் ஒரு சிருஷ்டிகர்த்தாவாக மாற்றி வருகிறது. இதில் பெரிதான இடம், பள்ளிகளுக்கு உண்டு. எந்த மக்கு மாணவனுக்கும் ஒரு பள்ளியின் நினைவுகள் இனிமை தான். எனக்கும்தான். ஒரு புகார் கிடையாது. ஒரு விவகாரம் கிடையாது. எல்லாம் இனிமையான நாட்கள்.
அஞ்சு வருஷ படிப்பு.பள்ளி மாறும்போது கூட வேதனை எதுவும் பற்றிக்கொள்ளவில்லை. ஆனால் நினைவுகள் பின்னாளில் தொற்றி அதற்கு உருவம் கொடுத்துச் சலனம் கொடுத்தது. சீருடை எல்லாம் பின்னால் தான் வந்தது. யாரையும் கூட்டிச் செல்ல எந்த வாகனமும் இல்லை . இரண்டு சைக்கிள் வந்தால் அதிகம் . பணக்காரக் குழந்தைகள் மிஞ்சிப் போனால் கை ரிக்க்ஷாவில் வரும்
வாழ்வில் எல்லாவற்றையும் கைகோர்த்து ரசித்த காலங்கள் அவை. முப்பது வருடங்களுக்குப் பின், குமுதம் பத்திரிகையில் பரிசு கிடைத்த என் கவிதைக்கு பின் புலம் இந்த நினைவுதான் .இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளியை மூடப் போகிறார்கள் என்ற செய்தி அறிந்த போது கொஞ்சம் வயிறு பிசைந்தது. நேரில் போய்ப் பார்த்தேன் வகுப்பறைகள் கொஞ்சம் தான் மாறிப் போய் இருந்தன ..
.சரோஜாவும் ஆஷாவும் ராம்சாயும் பாச்சாவும் என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தக் கண்களோடு வந்துவிட்டேன்.
—