அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (22.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

3 thoughts on “படக்கவிதைப் போட்டி – 250

 1. படக்கவிதை போட்டி எண் – 250

  கடலினை நோக்கிக்
  காண்பதென்ன காரிகையே
  நீலவானும் கடல் நீரும்
  ஓர் வண்ணம் என்றொருராய்வா
  படகுகள் ஒன்றும் காணோம்
  மிதந்து வருமென எதிர்பார்ப்பா
  கப்பல்களும் ஆடி வரும்
  காட்சி காண கண்விரிப்பா
  கரை மீது அடிக்கும் அலை
  காணக்காண குதூகலிப்பா
  ஆதவனும் சந்திரனும்
  எங்கேயெனப் பரிதவிப்பா
  அவர்களும் தம் கடமைச் செய்ய
  சென்று விட்ட புன்சிரிப்பா
  மனதில் எழும் எண்ணங்களை
  மடை திறந்துக் கொட்டிவிடு
  திறம்படவே பதிலைச் சொல்
  திரும்பி நில் தேவதையே!!!

  சுதா மாதவன்

 2. காத்திருக்கிறாள்…

  கண்கள் காட்டிய பாதையிலே
  கருத்து மிணைந்த காதலிலே
  அண்மையில் வந்த மணநாளும்
  அப்புறம் தள்ளிப் போனதுவே,
  எண்ணம் பெரிதாய்ப் பணிக்காக
  எங்கோ சென்றவன் வரவில்லை,
  கண்ணில் நீருடன் காத்திருக்கிறாள்
  கடலலை தன்னைத் தூதனுப்பியே…!

  செண்பக ஜெகதீசன்…

 3. திடங்கொண்டுப் போராடு

  ஆர்ப்பரிக்கும் அலைபோலே
  பேரிரைச்சல் போட்டாலும்
  ஆழ்கடலின் அமைதியினை
  அடிமனதில் தேக்கிவைப்பாய்

  கார்குழலி என்றுனையே
  காதற்சிறை வைத்தாலும்
  பார்ப்புகழும் சாதனைகள்
  பலநூறு படைத்திடுவாய்

  காலமெலாம் அறியாமைக்
  காரிருளுள் வைத்தாலும்
  ஞானஒளிக் கதிரவனாய்
  புதுவிடியல் காட்டிடுவாய்

  மென்மையான மலரென்று
  மங்கையுன்னைச் சொன்னாலும்
  திண்மையான உள்ளத்திலே
  திடங்கொண்டுப் போராடிடுவாய்

Leave a Reply

Your email address will not be published.