நாங்குநேரி வாசஸ்ரீ

126. நிறையழிதல்

குறள் 1251

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு

வெக்கம் ங்குத தாப்பாளக் கொண்டிருக்க அடக்கம் ங்குத கதவ காதல்நோய் ங்குத கோடாலி பொளந்து போடுது.

குறள் 1252

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

நேசம் ங்குத நோய் இரக்கங்கெட்டது. ஏம்னா அது நடுச்சாமத்துலயும் என் நெஞ்சத்த தண்டிச்சு வேல வாங்குது.

குறள் 1253

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்

என் நேசத்த நான் ஒளிச்சுக்கிட நெனப்பேன். ஆனா அது எனக்குத் தெரியாம தும்மல் கணக்கா தன்பாட்டுல வெளிய வந்துக்கிடும்.

குறள் 1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்

நான் இப்பம்வரை மன அடக்கம் உள்ளவனு நெனைப்பு வச்சிக்கிட்டிருந்தேன். ஆனா என் நேசம் நான் ஒளிக்கதயும் மீறி சபையில வெளிப்பட்டு நிக்கு.

குறள் 1255

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று

தன்னயப் பிரிஞ்சு போனவுக பொறத்தால போவாம நிக்குத மன அடக்கம் நேசம் வச்சவுகளுக்கு இல்ல.

குறள் 1256

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்

வெறுத்து ஒதுங்கிப் போனவுக பொறத்தால போவவைக்குத நிலைய உண்டாக்குத இந்த காதல் நோயோட தன்ம தான் என்ன?

குறள் 1257

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்

நேசம் வச்சவுக காதல்நோயால நாம ஆசப்படுததச் செய்யுத நேரம் வெக்கம் ங்குத கொணத்த அறிஞ்சிக்கிடாமலே இருப்போம்.

குறள் 1258

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை

நம்மளோட பெண்மைங்குத மனக்கோட்டைய நொறுக்குத ஆயுதமா இருக்குதது மனசத் களவாண்டு பல மாயம் செய்யுததுல தெறமையா இருக்க காதலர் பம்மிக்கிட்டுபேசுத பேச்சுதானே? .

குறள் 1259

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

பிணங்கணும்னு நெனச்சிதான் போனேன். ஆனா எம் மனசு என்னய உட்டுப்போட்டு அவுககிட்ட போனபொறவு இனி ஏலாது ங்குத நெனப்புல தழுவிக்கிட்டேன்.

குறள் 1260

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்

கொழுப்ப தீக்குள்ளார இட்டா அது உருகிப்போவுததுகணக்கா மனசக் கொண்டவுகளுக்கு சேந்து இருந்த பொறவு பிணங்கி நிக்கணும்ங்குத உறுதி இருக்குமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *