Month: November 2020

  • சின்னான் என்கிற செங்குதக் கொண்டைக்குருவி

    சின்னான் என்கிற செங்குதக் கொண்டைக்குருவி

    சின்னான் (செம்புழைக் கொண்டைக்குருவி; Red-vented Bulbul, Pycnonotus cafer), மரங்களில் அடையும் பறவைகளுள் ஒன்றாகும். இது கொண்டைக்குருவி, கொண்டைக்கிளாறு போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    செம்மீசைக் கொண்டைக்குருவி, செங்குதக் கொண்டைக்குருவி என இரு வகைகள் உண்டு. இவற்றுள் செங்குதக் கொண்டைக்குருவி என்று அழைக்கப்படும் சின்னானின் கொண்டை சற்றே சிறியது. இதைச் சமவெளிகளிலும் வீடுகளுக்கு அருகிலும் சிறு குன்றங்களிலும் காணலாம். இவ்விருவகைக் குருவிகளுக்கும் கொண்டை கருத்து, உடல் கபில நிறத்தில் இருக்கும்; வாலடி இரத்தச் சிவப்பாக இருக்கும். உற்சாகமான குரலில் பரபரப்புடன் இவை கூவும். செங்குதக் கொண்டைக்குருவியை நம் வீட்டருகே அடிக்கடி காண்கிறேன். இன்று காலையில் நம் வீட்டுக் கொய்யா மரத்தில் அமர்ந்த சின்னான் பாடுவதைக் கேளுங்கள்.

     

    முகப்புப் படத்துக்கும் விவரங்களுக்கும் நன்றி: விக்கிப்பீடியா

    Photo By J.M.Garg – சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=2994302

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • மகன் தந்தைக்கு ஆற்றுக்கும் உதவி……..? (சிறுகதை)

    மகன் தந்தைக்கு ஆற்றுக்கும் உதவி……..? (சிறுகதை)

    வளவ. துரையன்

    காத்தவராயன் நேற்றிரவு காலமானார். எந்தக் காத்தவராயன் என்று கேட்பீர்கள்? நீங்கள் கேட்பதும் ஒருவகையில் நியாயம்தான். அற்பிசம்பாளையத்தில் மூன்று காத்தவராயன்கள் இருந்தனர். முதலாமவர் கால்நொண்டிக் காத்தவராயன். இவரைச் சிலபேர் இவர் காதில் விழாமல் களவாணிக் காத்தவராயன் என்றும் சொல்வர். எந்த வீட்டில் மாங்காய்கள் காய்த்திருக்கின்றன? எங்குத் தேங்காய்கள் பறிக்கலாம்?. எந்த வீட்டுத் தோட்டத்தில் எலுமிச்சை காய்த்துக் குலுங்குகிறது? என்பதெல்லாம் தெரிந்து யாரும் அறியாவண்ணம் திருடுவதில் வல்லவர். அப்படித் தென்னை மரம் ஏறும்போதுதான் வீட்டுச் சொந்தக்காரர் வந்துவிட அவசரத்தில்  இறங்கக் கீழே விழுந்து கால் முறிந்து கால்நொண்டிக் காத்தவராயன் ஆனார்.

    இரண்டாமவர் கடுவனூர் காத்தவராயன்; இவர் மூதாதையர் யாரோ கடுவனூரிலிருந்து இங்கு வந்து குடியேற அவர் குடும்பத்திற்கே கடுவனூர் பட்டப் பெயராக வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. மூன்றாமவர்தான் இப்பொழுது காலமான கல்லுவீட்டுக் காத்தவராயன். முதன் முதல் அந்த ஐயப்பன் கோயில் தெருவிலேயே கல் வீடு கட்டியவர் அவர் என்பதால் அப்பெயர் வந்தது. அப்படி வாழ்ந்தவர் அவர். ஆனால் போனமாதம் கூட அவர் சொன்னார். ”ஆமாம் அந்தக் காலத்தில் அனுமாரு கூடக் கடலைத் தாண்டினாராம். இப்ப ஒரு வாழைப்பழத்துக்குப் பிச்சை எடுக்கராரு”.

    காலை மணி ஏழாகி விட்டது. வாசலில் இருந்து பார்க்கும்போதே காத்தவராயனைக் கூடத்தில் பெஞ்ச் ஒன்றில் கிடத்தி இருப்பது தெரிந்தது. அவரைச் சுற்றி ஆறேழு பெண்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நேற்று இரவிலிருந்து தொடங்கி அவர்கள் அழுது முடித்து விட்டனர். இளையமகன் சீனுதான் உள்ளுக்கும் வெளிப்பக்கத்துக்கும் வந்து போய்க்கொண்டிருந்தான். அவன் வெளியில் வந்த போது, பல்லக்குக் கட்ட வந்தவர்கள், “ஏங்க வேலய ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டது, நாட்டாமை சுப்பிரமணியக் கவுண்டர் காதில் விழுந்தது.

    அவரே பதில் சொன்னார், ”யார்ரா இவன், பல்லக்குக் கட்டிக் காக்கக் கூடாதில்ல; பெரிய புள்ளயும் செங்கல்பட்டுலக் குடுத்திருக்கற பொண்ணும் வரணும்ல; அப்படிப் போயி ஒக்காரு; நானே கூப்பிடறேன்;” ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் தனஞ்செயன். ”அவனுவளுக்கு அவங்க வேலய முடிச்சுட்டுப் போலாம்முன்னு நெனப்பு” என்றார். தெருவெங்கும் அவரவர் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டு வாசலுக்கு வந்து உட்கார்ந்த அடுத்தத் தெரு கம்சலா, சும்மா இருக்காமல் அந்த வீட்டுப் பவுனாம்பாளின் வாயைக் கிளறினாள். “ஏன் ஆயா; இன்னும் யாரு வரணும்னு இப்படிக் காத்திருக்காங்க” அது போதாதா பவுனாம்பாளுக்கு. அவள் ஆரம்பித்து விட்டாள்.

    “ஆமாண்டி நீ சொல்லுவ; ஒனக்கென்னா தெரியும்? நீ அசலூர்லேந்து வந்து வாக்கப்பட்டவ; பெரியமவனப் படிக்க வச்சு வக்கீலாக்கி மெட்ராசுல ஒக்கார வச்சிருக்காரு. அவன் பொண்டாட்டி காலேசுல வாத்தியாரு. ரெண்டு புள்ளங்க அவனுக்கு; அவன் தங்கச்சியைச் செங்கல்பட்டுல ஒரு டாக்டருக்குக் குடுத்திருக்கு. அவங்கள்ளாம் வரவேணாமா?” “அப்படியா ஆயா? இங்க இருக்கவருக்கு மேல ஒரு அண்ணாரும், கீழ ஒரு தங்கச்சியும் இருக்காங்களா?” ”ஆமாண்டி, அவங்கள்ளாம் ரொம்பவே நல்லா இருக்காங்க. சீனுதான் பாவம்; அப்பாருக்காக நெலத்தைப் பாத்துக்கிட்டான். வேலக்கே போகல. இவனுக்கும் ரெண்டு புள்ளங்கதான். ஒருத்தன் இப்பதான் வாத்தியார் வேலைக்குப் போயிருக்கான். மத்தவன் வளவனூர்லக் கடை வச்சிருக்கான்”.

    சீனு வெளியே வந்தவன் நாற்காலியில் உட்கார்ந்தான். ”ஏண்டா, எங்க வராங்களாம்? கேட்டியா?” என்று கேட்டார் நாட்டாமை. “இப்ப கேக்கல மாமா; இந்தாங்க நீங்களே கேளுங்க” என்று கூறிய சீனு தன் கைப்பேசியில் அண்ணன் காமராசின் எண்ணைப் போட்டுக் கொடுத்தான். அவர், ”என்னா ராசு எங்க வரீங்க?” “இதோ வந்துட்டன் மாமா; பாண்டிச்சேரியில நுழைஞ்சிட்டோம்” “ஏம்பா இவ்ளோ நேரம்?” “இல்ல மாமா அப்படியே செங்கல்பட்டு வந்து ராசாத்தியையும் கூட்டுக்கிட்டு வரேன்; அதான்” ”சரி, சீக்கிரம் வந்து சேருங்க; இன்னிக்கு செவ்வாக் கெழமை; பன்னண்டு ஒண்னரை குளிகன்; அதுக்குள்ள எடுக்கணும்” என்று பேசி முடித்து விட்டார்.

    தனஞ்செயன் “என்னா சொல்றாங்க” என்று கேட்டார். “ம்….வழியிலத் தங்கச்சியையும் கூட்டுக்கிட்டு வரானாம். அதான் இவ்ளோ நேரம் ஆடுயிடுச்சாம்” என்றார் நாட்டாமை. “ஏங்க ராத்திரி பத்து மணிக்கு உசிரு போன ஒடனேயே மொதல்ல அவனுக்குதான் தகவல் சொன்னோம்; ஒடனே கெளம்பியிருந்தா விடியறதுக்குள்ள வந்திருக்கலாம்” என்று சொல்லிய ஊர்த் தலைவர் சீனுவைப் பார்த்தார்.

    அவனோ தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போலத் தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்தான். நாட்டாமையின் குரலே கொஞ்சம் உச்சக்கட்டம்தான். பவுனாம்பாளின் காதிலும் அது விழுந்தது. அவள் ஆரம்பித்து விட்டாள்.

    “ஏண்டி கம்சலா கேட்டியா கதையை. தங்கச்சி ஊட்டுக்குப் போயி சீராடிட்டு வரான் போலிருக்கு. என்னாடா அங்கத் தம்பி தனியா இருப்பானே ராப்பொணம் காத்துக்கிட்டுன்னு நெனப்பு இருந்தா கோழி கூவறதுக்கு முன்ன வந்திருக்க வேணாம்” அதற்குக் கம்சலா, “அவங்களுக்கு உள்ள என்னா இருக்குதோ யாரு கண்டா?” என்றாள். “என்னா இருக்குது? வசதிதான் காரணம். ரெண்டு காசு சேந்ததுமே அப்பாரு, அம்மாக்காரி யாருமே வாணாம். அவங்கள்ளாம் நகரத்து வாசியா ஆகியாட்டாங்க இல்ல”

    “அதுக்காக சொந்தம்லாம் உட்டுப் போயிடுமா?” ”அட போடி இவளே; ஆறு மாசம் முன்னாடி காயலா கெடந்து செத்துப் போனாளே ராக்காயி, அதாண்டி சீனுவோட அம்மா அவ கண்ணால தண்ணி உட்டுக் கதைகதையா சொல்லியிருக்கா. அங்க போனாலே பெரியவன் ரெண்டு பேரையும் வேலைக்காரனாதான் நடத்துவானாம். அவன் தங்கச்சி அதுக்கு மேல; அவ ஆசையா ஆயான்னு வர்றப் புள்ளயக் கூட சேர உடமாட்டாளாம்.அப்பறம் ஏன் இவங்க போனாங்கன்னு கேப்ப? எல்லாம் பேரப்புள்ளங்க மேல இருக்கற ஆசைதான்”

    வாசலில் பெரிய கார் ஒன்று வந்து நின்றது. நான்கு பெரியவர்களும் நான்கு சிறுவர்களும் இறங்கியது தெரிந்தது. காமராசு தூக்கவே முடியாமல் பெரிய மாலையைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனான். அவன் தங்கை காரை உட்டு இறங்கியதுமே, ”அப்பா என்னை நடுத்தெருவுல உட்டுட்டுப் போயிட்டியே?” என்று பெருங்குரலெடுத்துக் கத்திக் கொண்டு உள்ளே போனாள். சிறுவர்களும் காமராசுவின் மனைவியும், டாக்டர் மருமகனும் சென்றனர். சிறிதுநேரம் உள்ளே அழுகையாக இருந்தது. அதற்குள் பல்லக்குக் காரர்கள் வந்துவிட நாட்டாமை ”ஆரம்பிங்கடா’ என்று உத்தரவிட்டார்.

    உள்ளிருந்து ஒருவர் ஒருவராக வெளியே வர ஆரம்பித்தனர். முதலில் வந்த டாக்டர் தனியாக இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டனர். காமராசுவின் மனைவி மட்டும் உள்ளேயே இருந்தாள். காமராசும் அவன் தங்கையும் வந்தனர். காமராசு சீனுவுக்கும் நாட்டாண்மைக்கும் நடுவில் உட்கார்ந்து கொள்ள, அவன் தங்கை ராசாத்தி பக்கத்து வீட்டுப் பவுனாம்பாளைப் பார்க்கச் சென்றாள். சற்று நேரம் கழித்து அவளும் அங்கே வந்து திண்ணையில் உட்கார்ந்தாள்.

    “எத்தினி நாளு கெடந்தாரு?” என்று பொதுவாகக் கேட்டான் காமராசு. தனஞ்செயன் உடனே  ”படுத்த படுக்கையாக் கெடந்தது என்னமோ நாலு நாளுதான். ஆனா ஒரு பத்துப் பதினைஞ்சு நாளாவே அவருக்கு சொகமில்ல” என்றார். “அவ்ளோ சீரியஸ்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் வந்து கண்டுக்கிட்டுப் போயிருப்பேன்ல” என்றான் அவன் பதிலுக்கு. சீனு மௌனமாக இருந்தான். நாட்டாண்மைக்குத்தான் தாங்க முடியவில்லை. “ஏம்பா, இந்தப் பத்து நாள்ல ஒங்கிட்ட ஆறு முறை சொல்லியாச்சு; நானே நாலு தடவ போட்டுப் பேசினேன். நீ ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கிட்டுத்தானே இருந்த” என்று அவர் உரக்கப் பேச எல்லார் கவனமும் இங்கே திரும்பியது.

    காமராசுவிற்கு ”ஏண்டா கேட்டோம்” என்றாகி விட்டது. ஏதாவது பேச வேண்டுமே என்று சீனு பக்கம் திரும்பி, மெதுவாக “எப்படா உசிரு போச்சு” என்றான். சீனு, ”பத்து மாசம் இருக்கும்ணே” என்றான். எல்லாரும் சீனுவைப் பார்த்தனர். ”என்னாடா சொல்ற” “ஆமாண்ணே; அப்பாரு செத்துப் போயிப் பத்து மாசம் ஆகியிருக்கும்ணே” காமராசு நாட்டாண்மை பக்கம் திரும்பி “என்னாங்க இவன் பேசறான்?” என்றான். “சீனு என்னா ஒடம்பு சரியா இல்லியா?” என்றார் நாட்டாண்மை. இல்லீங்க; எனக்கு ஒண்ணுமில்ல;  நான் உண்மையத்தான் சொல்றேன். அவரு எப்ப செத்துப் போனார் தெரியுமா?” என்று கேட்டு சும்மா இருந்தான்.

    யாரும் ஒன்றும் புரியாமல் இருக்க சீனு எழுந்திருந்தான். அவன் குரல் உச்சமாக எழுந்தது. “நாட்டாமை ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா? இதே எடத்துல, நீங்க. தலைவரு, அப்பறம் இன்னும் ஆறேழு பெரிய மனுஷங்கள்ளாம் வந்திருந்தீங்க; அன்னிக்குதான் இவரு அதான் எங்கண்ணன், சொத்தைப் பிரிக்கணும்னு ஒத்தக் கால்ல இருந்தாரு. சரின்னு அப்பாருவும் ஒத்துக்கிட்டுத்தான் ஒங்கள எல்லாம் வரவழைச்சாரு; அப்பக் கூட எனக்கு இந்த ஊட்டத் தர்றதால நெலத்தைக் கொஞ்சம் கொறச்சிக்கணும்னு இவரு ஒரே பிடிவாதமாகத்தான் இருந்தாரு.

    ஊட்டை வச்சுக்கிட்டு அவன் என்னா செய்யப்போறான்? நெலமா இருந்தாலும் அவனுக்கு ஏதாவது வருமானம் வரும். ராசு நீ வேணா ஊட்டை எடுத்துக்க. நெலத்தைக் கொறைச்சுக்கன்னு அப்பாரு சொன்னாரு. அதுக்கு இவரு எனக்கு எதுக்கு இந்த ஊடு? மெட்ராசுல பெரிய ஊடு கட்டப் போறேன்; பாகம் பிரிச்சு ஒடனேயே நெலத்த விக்கப்போறேன்னு சொன்னாரு. அப்பாருக்கு அப்பதான் விஷயம் புரிஞ்சிருக்கு. நெலத்தை மட்டும் விக்காதடா; நான் கெஞ்சிக் கேட்டுக்கறேன்னாரு. இவரு அதை நீ சொல்லாதன்னாரு. அப்படியே பேச்சு அதிகமாச்சு. நீங்களும் எவ்வளவோ தடுத்துப் பாத்தீங்க.

    ஒரு சமயத்துல அப்பாரு, ஊடு கட்ட நான் வேணாப் பணம் தரேன்னாரு.  இவரு ஒடனே என்னா செஞ்சாரு ஞாபகம் இருக்காருங்களா? ஓடிப் போயி காருலேந்து எடுத்தாந்த மூணோ இல்ல நாலோ ரூபாக் கட்டுகளை அப்பாரு மேலியே போட்டாரு; நீ எனக்குப் பணம் தரியா? எங்கிட்ட இல்லாதப் பணமா? ஒங்க சங்காத்தமே வாணாம்னுதான நான் எல்லாத்தையும் உட்டுட்டுப் போறேன்னாரு. அந்த சொல்லைக் கேட்டதுமே அப்பாரு உசிரு போயிடுச்சு. ஊரு ஜனங்க மத்தியில இவ்ளோ அவமானமா போயிடுச்சேன்னு அவரு ஒண்ணுமே பேசாம உள்ளப் போயிப் படுத்துக்கிட்டாரு”

    இதெல்லாம் காதில் விழுந்ததும் அவன் தங்கை ராசாத்தி வேகமாக எழுந்து வந்தாள். சத்தமாக, ”என்னாண்ணே, நீ பாட்டுக்கு பெரியண்ணனைப் பேசிக்கிட்டே போற?” என்று கேட்டாள். சீனு, ”வாடியம்மா என் தங்கச்சி ராசாத்தி; அப்பாரைப் பொதைக்க மாட்டாங்கம்மா; எரிக்கத்தான் போறாங்க தெரியும்ல” என்றான். எல்லாரும் சீனுவை வியப்புடன் பார்த்தனர். காமராசு தலை நிமிரவே இல்லை. ”என்னா சொல்ற சீனு?” என்றார் ஊர்த்தலைவர். பல்லக்கு வேலையை முடித்துவிட்டவர்கள் தொலைவில் நின்று வேடிக்கை பார்த்தனர். மேளச் சத்தமும் ஓய்ந்து விட்டது. வாசலில் ஒரு பெஞ்ச் கொண்டுவது போடப்பட்டது.

    சீனு ஊர்த்தலைவரைப் பார்த்தான். “இல்லீங்கய்யா, ராசாத்திக்குத் தெரியும்; பாகம் பிரிச்சப் பத்தாவது நாளு இவ வந்தா. சரி அப்பாரு எப்படி இருக்காருன்னுப் பாக்க வந்திருக்கான்னு நெனச்சா, அம்மாக்கிட்டப் போயி ரகசியமா, ”அம்மா, எனக்கு அந்த ரெட்டைவடம் சங்கிலியைக் குடு”ன்னு கேக்கறா. அம்மா, “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ போயி ஒங்கப்பாருகிட்டக் கேட்டுக்கன்னு சொல்லிட்டாங்க; நேர அப்பாருக்கிட்ட வந்தா. நானும் அப்ப கிட்ட இருக்கேன். அப்பா நல்லாவே சொல்லிட்டாங்க.

    ”ராசாத்தி, ஒனக்கு எல்லாம் வேணும்ற அளவுக்குச் செஞ்சாச்சு; அறுபது பவுனு போட்டுதான் கட்டிக் குடுத்தது. வெள்ளி சாமான்லாம் நம்ம சாதி சனங்க இவ்ளோ வாங்கியே தரமாட்டாங்கன்னு ஊரே அதிசயித்துப் போச்சு. இன்னும் மிக்சி, கிரைண்டர், மரக்கட்டிலு, மேசை, நாற்காலி, பிரிட்ஜு, மரபீரோன்னு எல்லாம் ஒரு கொறையுமில்லாம செஞ்சாச்சு; அப்பறம் ஒன் புருசன் கிளினிக்கு வைக்கப் போறார்னு ரெண்டு லட்சம் பணம் குடுத்தேன். கல்யாணத்துலப் பெரிய வண்டி வாங்கித் தரலன்னு அப்பதான் கேட்ட நீ. அதையும் வாங்கிக் குடுத்தேன். இப்ப இதைக் கேக்காத” “ஏம்பா அம்மா சங்கிலி எனக்குக் குடுக்கக்கூடாதா? அதை நீ என்னா செய்யப்போற?”

    ”என்னாவோ செஞ்சுட்டுப் போறேன்; ஆனா ஒனக்கு மட்டும் கெடையாது. இது நிச்சயம்னு சொல்லிட்டாரு. அதைக் கேட்டதும் இவ சாமி வந்தமாதிரி ஒரு ஆட்டம் ஆடினா. அப்பா அம்மான்னு ஒரு மரியாதை இல்லாம என்னா பேச்சுப் பேசினா தெரியுமா? கடைசில என்னா சொல்லிட்டுப் போனா தெரியுமா? அந்தச் சங்கிலியை ஒன்னோடயே போட்டுப் பொதைச்சுக்கன்னு சொல்லிட்டுப் போனா; இல்லன்னு சொல்லச்சொல்லுங்க பாப்போம்” ராசாத்தி பேசாமல் நின்று கொண்டிருந்தாள். சீனு தொடர்ந்தான். ”அந்த சொல்லுக் கேட்டப் பத்தாம் நாளு எங்கம்மா நெஞ்சு வலி வந்து போயிட்டாங்க” சொன்னவன் அழுதுவிடுவான் போல இருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான்.

    காமராசு எழுந்து வந்தான். “சரிடா, நீ இப்ப என்னா செய்யணும்னு சொல்ற? நாங்கள்ளாம் இல்லன்னு ஆயிடுமா? நான் கொள்ளி வைக்கத்தான் வந்திருக்கன்; தெரியும்ல” சற்று நேரம் சும்மா இருந்த சீனு, ”அண்ணே! ஊர்ப்பெரியவங்க இருக்காங்க; அவங்க சொல்லுவாங்க” என்று மெதுவாகச் சொல்ல, காமராசு தலைவரையும், நாட்டாமையையும் மாறி மாறிப் பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    நாட்டாமை உரக்கக் கூறினார். “ராசு, சீனு சொன்னதெல்லாம் எங்கக்கிட்ட ஒன் அப்பாரே பல தடவை சொல்லியிருக்காரு. அதெல்லாம் உடு; நம்ம வழக்கம் தாயிக்குத்தான் தலப்புள்ள; அப்பாருக்கு எளையவன்தான்; சீனு கொள்ளி வச்சாதான் ஒன் அப்பாரு நெஞ்சு வேகும். இஷ்டமிருந்தா இருங்க; இல்லன்னா சுடுகாட்டுப் பக்கமா கெழக்கப் பாத்து உழுந்து கும்பிட்டுப் போங்க” என்றார்.

    பல்லக்கு கிளம்பி விட்டது. ஊர்வலம் புறப்பட்டு விட்டது.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 19

    பரிமேலழகர் உரைத்திறன் – 19

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ஒருமுறை சொல்வதே உரைக்கழகு!

    முன்னுரை

    ‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்பார் நம்மாழ்வார். அதனைச் சற்று மாற்றி ‘இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன்’ என்று வைத்துக் கொண்டால் இந்தக் கட்டுரையின் சாரம் நன்கு விளங்கும். ‘சுருங்கச் சொல்லல்’ என்பது நூலுக்கு ஓதப்பட்ட பத்து அழகுகளில் ஒன்று. ‘கூறியது கூறல்’ என்பது நூலுக்கு இருக்கக் கூடாது என விலக்கப்பட்ட குற்றங்கள் பத்தினுள் ஒன்று. அழகையும் குற்றத்தையும் திசைகளைப்போலப் பத்தாக வைத்த பாங்கு எண்ணத்தக்கது. பரிமேலழகர் தம் உரையில் ஒருமுறை கூறியதை மறுமுறை கூறுவதில்லை. அவ்வாறு கூற வேண்டிய நிலை ஏற்படின் முன்பே கூறப்பட்டது என வாளாச் சுட்டிச் சென்றுவிடுகிறார். இதனால் நினைவாற்றல் உள்ளவர்க்கே என்பதும் அத்தகையோரே நூல்பயிலத் தகுதியானவர் என்பதும் அவற்கே அந்நூற்பயிற்சி பயன்படும் என்பதும் பெறப்படும். ஒவ்வொரு முறையும் முன்னர்க் கூறியதையே பின்னரும் எடுத்தோதுவது கற்பாருக்குச் சலிப்பை ஏற்படுத்துவதுடன் நூலுள் அல்லது உரையுள் இருக்கக் கூடாத குற்றங்களைத் தெரிந்தே செய்வது போலாகிவிடும் என்று அவர் கருதியிருக்கலாம். கூறியது கூறலாகிய குற்றம் தவிர்க்கும் பரிமேலழகரின் உரைத்திறனை முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை தொடர்கிறது.

    உழைப்பவர்க்கன்றி உரை புரியாது

    உத்திவகை முப்பத்திரண்டு எனப்படுவது போலப் புத்திவகையும் பல உள. மண்புத்தி, மரபுத்தி, கல்புத்தி, மூங்கில் புத்தி, எண்ணெய் புத்தி என்று ஐந்து வகையாகப் பகுப்பர். (வடநூலார் இதனை முறையே மிருத்து புத்தி, தாரு புத்தி, சிலா புத்தி, வேணுபுத்தி, தைலபுத்தி என்பர்). பிறவகை புத்திகளை விரிப்பின் பெருகும். தைலமாகிய எண்ணெய் நீர்ப்பரப்பில் ஒரு துளி வீழினும் அப்பரப்பு முழுவதையும் பரவ எத்தனிப்பதைப்போல ஒரு கருத்தினை ஒருமுறை செவிமடுப்பின் அது தொடர்பான அத்தனைப் பொருண்மைகளையும் உள்வாங்கும் ஆற்றலுடையாரைத் ‘தைலபுத்தி உடையவர்’ என்பது வழக்கு. பரிமேலழகர் உரை தைலபுத்தி உடையார்க்கே செய்யப்பட்டது என்பது அதனை ஒருமுறை நோக்குவார்க்கும் புலப்படும் உண்மையாகும்.

    ‘அழுக்காறு’ – பொருள் வரையறை

    அறத்துப்பால் பதினேழாவது அதிகாரத் தலைப்பு ‘அழுக்காறாமை’ என்பதாகும். திருவள்ளுவர் இருக்கக்கூடாத பண்புகளை எதிர்மறையில் சுட்டுவார். வெஃகாமை, புறங்கூறாமை, வெகுளாமை என்பன போல. இருக்க வேண்டிய பண்புகளை உடன்பாட்டில் வைத்துக் கூறுவார். ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை என்பன போல. ‘அழுக்காறு’ என்பது இருக்கக்கூடாத பண்பாதலின் அதனை எதிர்மறையில் வைத்து ‘அழுக்காறாமை’ என்று கூறுகிறார். அதிகாரத் தலைப்பிற்குப் பொருள் கூறும் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    ‘அழுக்காறு’ என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் மேலே உரைத்தாம். அச்சொல் பின் ‘அழுக்காற்றைச் செய்யாமை’ என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று ’அழுக்காறாமை’ என நின்றது.

    மேலே சொன்ன விளக்கத்தால் இரண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று, ‘அழுக்காறு’ என்பது ஒருசொல் என்பதும் ‘அழுக்கு + அறு’ என இதனை இரண்டு சொல்லாக நோக்கக் கூடாது என்பதுமாகியன சொல்லுக்கான புறநிலை விளக்கம். இரண்டு, அதற்கான பொருள் இதற்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்பதனால் கூறியது கூறலாக இங்குப் பதிவிடவில்லை என்னும் பொருள்நிலை விளக்கம்.

    “அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்” (35)

    என்பது அறத்துப்பால் முப்பத்தைந்தாவது குறட்பா. இந்தக் குறட்பாவில் பயின்றுள்ளள ‘அழுக்காறு’ என்ற சொல்லுக்குத்தான் பிறர் ஆக்கம் பொறாமை (பிறருடைய வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமை – அடைப்பிற்குள் இருப்பன கட்டுரையாளர் கருத்து) என்று உரைப்பொருள் தந்திருக்கிறார். பிறர் ஆக்கம் பொறாமை என்னும் மூன்று சொற்களைக் கூட மீளவும் சுட்டுதல் உரைக்கட்டுமானத்தைப் பாதிக்கும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். கருதி ‘அதற்குப் பொருள் மேலே உரைத்தாம்’ என 125 குறட்பாக்களுக்கு முன்னால் தான் எழுதிய உரைப்பொருளை நோக்கிய பயணத்திற்கு முன்னோக்கப் பணிக்கிறார். பரிமேலழகரின் படிப்பும் பணியும் ஓலைச்சுவடிகளில் நிகழ்ந்திருக்கிறது என்பதைக் கருத்திற் கொண்டால் அவருடைய அளப்பரிய நினைவாற்றல் புலப்படக் கூடும்.

    ஏழாவது அதிகாரமும் எழுபிறப்பு உண்மையும்

    இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது பாசுரம். இந்த ஏழு பிறவியைத் திருவள்ளுவர் நட்போடு பொருத்திப் பார்த்திருக்கிறார். ‘செய்ந்நன்றி’ என்பதன் பொருள் செய்பவனுக்கு ஆகாது செய்யப்பட்டவனுக்கு ஆகிவரும். அதாவது உதவியைப் பெற்றுக் கொண்டவன் என்றைக்கும் அதனை மறக்காமல் இருப்பதே செய்ந்நன்றி. இதனை ‘உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து’ என்று பின்னும் ஓதுவார் திருவள்ளுவர். நல்லோர், ஒருவன் இப்பிறவியில் தனக்கு உதவி செய்தவனுடைய நட்பினை எழுபிறப்பிலும் எண்ணிப் பார்ப்பர்’ என்ற கருத்தினைச் சொல்லுகிற குறட்பா,

    “எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமம் துடைத்தவர் நட்பு” (107)

    என்று அமைகிறது. இந்தக் குறட்பாவில் சொல்லப்பட்டிருக்கும் ‘எழுபிறப்பு’ என்பதற்குப் பரிமேலழகர் உரை விளக்கம் சொல்லாமல் அதற்கு முன்னதிகாரங்களில் உள்ள ஒரு குறட்பாவிற்குத் தான் சொல்லிச் சென்ற பொருள் நோக்கிக் கற்பாரை ஆற்றுப்படுத்துகிறார்.

    “எழுமை என்றது வினைப்பயன் தொடரும் எழுபிறப்பினை. அது வளையாபதியுட் கண்டது. ‘எழுவகைப் பிறப்பு மேலே (62) உரைத்தாம்”

    என அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்திற்குக் கற்பார் கவனத்தைக் கொண்டு செல்கிறார். பிறப்பு ஏழாவன,

    “ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
    நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் — சீரிய
    பந்தம் ஆம் தேவர் பதினாறு அயன்படைத்த
    அந்தமில்சீர்த் தாவரம் நாலைந்து”

    என்னும் வெண்பா அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தில் காணப்படுகிறது. 107 ஆவது குறட்பா பொருள் விளக்கத்திற்காக அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தைக் காட்டிச் செல்கிறார். அது மட்டுமன்று. இந்த வெண்பாவின் எழுபிறவி பற்றிய உள்ளடக்கம் வளையாபதி என்னும் காப்பியத்தில் அடங்கியுள்ளது என்பதையும் (107) குறளுரையில் சுட்டுகிறார்.

    அளவைகள் ‘ஆறும்’ பொருந்தும் ஆறும்

    மெய்யுணர்தல் அதிகாரத்தில் உள்ள குறட்பா ஒன்றிற்குப் பரிமேலழகர் விளக்கம் எழுதுகிறார். இது துறவறவியல் சார்ந்ததாதலின் சமயக் கொள்கைகள் சார்ந்த நுட்பமான பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வதிகாரத்தில் உள்ள ஒரு குறள்,

    “ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (357)

    என்று அமைந்திருக்கிறது. உயிர்களின் நிலையாமை நோக்கி அவற்றின் மீது வைத்த பற்றினைத் துறந்த ஒருவன் பரம்பொருள் ஒன்றே அழியாதது என்பதை உணர்ந்தால் அவனுக்குப் பிறப்பு தொடராது” என்பது இக்குறட்பாவிற்கான எளிய இயல்பான பொருள். குறட்பாவிலுள்ள ‘உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின்’ என்னும் தொடருக்குப் பரிமேலழகர்,

    “அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் தெளிய ஆராய்ந்து அதனால் முதற்பொருளை உணருமாயின் அவனுக்கு மாறிப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டா”

    என்று பொழிப்புரை எழுதிச் சுருக்கமான விளக்கவுரையில்,

    “அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம்”

    என இன்னும் சுருங்கிய தொடரைக் கையாள்கிறார். இந்தக் குறட்பாவில் கண்ட ‘அளவைகள்’ என்பன தனக்குத் துணையாகும் அறங்களை அறிகின்ற அளவுகோல்கள். ‘இதனைச் செய்ய இயலும்’, ‘இதனைச் செய்ய இயலாது’ என்று வரையறுத்துக் கொள்வதற்குப் ‘பொருந்தும் ஆறு’ என்று பெயர். இவற்றையெல்லாம் இந்தக் குறட்பாவிற்கும் பொருத்தியுரைக்கும் பரிமேலழகர் விளக்கத்தை இன்னொரு முறை பதிவிடாமல் தான் ஏற்கனவே பதிவிட்ட குறட்பாவுக்குக் கற்பாரை வழி நடத்துகிறார்.

    “நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
    தேரினும் அஃதே துணை” (242)

    இந்தக் குறட்பாவுக்கு “அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் நன்றான நெறியிலே நின்று நமக்குத் துணையாம் அறம் யாது என ஆராய்ந்து அருளுடையராக, ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றாலும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே பிறிதில்லை” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் மேற்கண்ட அளவைகள் பற்றியும் பொருந்தும் ஆறு பற்றியும் பின்வருமாறு விளக்கிக் காட்டுகிறார்.

    அளவைகளாவன,

    “பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும் கருத்தா மொழியாகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும் இங்ஙனம் அன்றாயின் இது கூடாதென்று உணரும் அருத்தாபத்தியும் உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி ஆறென்பாரும் உளர். இவையும் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து.

    பொருந்தும் ஆறாவன,

    “இது கூடும் இது கூடாது எனத் தன் கண்ணே தோன்றுவது“

    இவ்வளவு விளக்கங்களையும் திருக்குறளில் ‘அளவைகள் மற்றும் பொருந்தும் ஆறு’ என வருகிற இடங்களில் எல்லாம் ஒவ்வொரு முறையும் சொன்னால் என்ன ஆகும்? உரைச் செறிவு குறையும், கற்பார் உள்ளம் சலிப்படையும். எனவேதான் பரிமேலழகர் தானும் உரைக்குற்றத்தில் சிக்காமல் உரையின் செறிவும் குன்றாமல், கற்பாருக்குக் கைகாட்டியாய் விளங்க நிற்கிறார். கற்பார்தம்  நினைவாற்றலையும் அவ்வப்போது சோதித்துக் கொள்கிறார்.

    எஞ்சாமையும் நீங்காமையும் ஏழுக்கும் உண்டு

    ‘இறைமாட்சி’ என்னும் அதிகாரப் பொருண்மையாக அரசர்க்கு அங்கம், அவனது மாட்சி, மாட்சியும் பயனும் என மூன்றாகப் பகுத்துக் கொள்கிறார் பரிமேலழகர். இவற்றுள் அரசனது மாட்சியை நான்கு குறட்பாக்களில் அடக்கிக் காட்டும் பரிமேலழகர் அவற்றுள் இரண்டு பாட்டினை பொருண்மையால் ஓர் அலகாகக் கொள்வதைக் காணமுடிகிறது. அவ்விரண்டு பாடல்கள் வருமாறு,

    “அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” (382)

    “தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலன்ஆள் பவர்க்கு” (383)

    இவ்விரண்டு பாடல்களினாலும் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை என்னும் ஏழு பண்புகளும் மன்னனிடத்து இயல்பாகவே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை வள்ளுவர் பதிவு செய்கிறார்.  இப்பொருண்மையை,

    “அரசனுக்கு இயல்பாவது திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல்” (382)  “நிலத்தினை ஆளும் திருவுடையார்க்கு அக்காரியங்களில் (அரச காரியங்களில்) விரைவுடைமையும் அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும் ஆண்மையுடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா” (383)

    என்னும் பரிமேலழகரின் பொழிப்புரைகளால் அறியலாம். அரசனுக்கு இருக்கவேண்டிய இந்த ஏழு பண்புகளையும் தனித்தனிக் குறட்பாக்களில் பதிவு செய்தமைக்குக் குறள் யாப்பே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது கட்டுரையாளர் அனுமானம். மேலும் ‘ஏழு’ என்னும் தொகைக்கான விரியைத் திருக்குறள் யாண்டும் கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு பாடல்களிலும் சொல்லப்பட்ட பண்புகள் மன்னனிடத்து இடையறாது நிற்க வேண்டும் என்பதுதான் மூலப்பொருள்.

    ‘அஞ்சாமை’ முதலிய நான்கு பண்புகளும் எஞ்சாது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘எஞ்சாமை’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் எழுதியிருக்கும் பரிமேலழகர் அடுத்த குறட்பாவில் ‘தூங்காமை’ முதலிய பண்புகளும் நீங்காது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘நீங்கா’ என்பதற்கு விளக்கம் எழுதவில்லை. ஆனால்,

    “நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

    என்று எழுதிவிடுகிறார். பல குறட்பாக்களை முன்நோக்கி உரையெழுதிய பரிமேலழகர் இங்கே முந்தைய குறட்பாவினை (382) நோக்கி இரண்டையும் ஓரலகாகக் கருதுமாறு உரையெழுதுகிறார். முதலில் முதற்குறட்பாவில்,

    “உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார் ‘எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு” என்றார்.”

    என்று எழுதிய விளக்கத்தை அடுத்த குறட்பாவில் பயிலும் ‘நீங்கா’ என்பதற்கும் பொருத்திக் கொள்க என்று சுருக்கிக் கொள்கிறார். இதனால், இந்த ஏழு பண்புகளுக்கும்,

    “உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும்” என்று (382) எழுதிய உரை பொருந்தும் என்பது பெறப்படும். பரிமேலழகர் உரையால்,

    1. உயிர்க் குணங்கள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும்
    2. சொல்லப்பட்ட ஏழு குணங்களும் ஒரே நேரத்தில் இடையறாது இருத்தல் வேண்டும்.
    3. அதனால்தான் ‘எஞ்சாமை’ என்ற சொல்லையும் ‘நீங்கா’ என்ற சொல்லையும் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.

    இவ்வளவு பொருள் விளக்கங்களையும்,

    “நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

    என்னும் ஆறு சொற்களில் பதித்துக் காட்டும் பரிமேலழகர் உரைத்திறனை எப்படிப் புகழ்வது?

    எப்படிக் கொடுப்பது?

    ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியின் சாரம் படைப்பிலக்கியத்தில் பதிவு செய்யப்படுகிறபோது அதன் மதிப்பும் பாதுகாப்பும் கூடிவிடுகிறது.

    “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கும் நெறி” (477)

    என்னும் குறட்பா ‘வலியறிதல்’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகையாற்றலில் பெருமையின் பகுதியாக இருப்பது பொருள். பொருளைப் பிறர்க்கு ஈவது அறத்துப்பாலில் ஈகையெனும் அறமாகக் கருதப்படினும் பொருட்பாலில் அரசனுக்குரிய வலிமைகளுள் ஒன்றின் பகுதியாகக் கருதப்படுகிறது. அறத்துப்பாலில் ‘வறியார்க்கொன்றீவதே ஈகை’ என்பது பொருந்தும். பொருட்பாலில் அதற்கு நோக்கமும் வரையறையும் உண்டு. அதனைக் கூறுகிறது இந்தப் பாடல்.

    “ஈயும் நெறியானே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்!”

    என்னும் பரிமேலழகரின் பொழிப்புரையால் இந்தப் பாடல் அரசநீதி செலுத்தும் மன்னன் பொருளைப் பயன்படுத்தும் நெறி பற்றிக் கூறுவதாகக் கருதப்படும். ‘அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கு ஈயும் நெறியான் என உரைகண்ட பரிமேலழகர் அந்த நெறியை இங்கே விளக்காது தான் முன்பே விளக்கிய இன்னொரு குறட்பாவின் விளக்கவுரையைச் சுட்டுகிறார்.

    “ஈயும் நெறி மேல் இறைமாட்சியுள் ‘வகுத்தலும் வல்லதரசு’ (385) என்புழி உரைத்தாம்”

    என்று எழுதுகிறார். அந்தப் பாட்டின் விளக்கவுரையில் “காத்த வகுத்தலாவது,

    1. கடவுளர் அந்தணர் வறியோர் என்ற இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்
    2. யானை, குதிரை, படை, நாடு, அரண் என்ற இவற்றிற்கும் பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும் தன்னிற் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட்பொருட்டாகவும்
    3. மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும் ஐம்புலன்களால் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க

    என ஈதலின் நெறி பற்றி விளக்கும் பரிமேலழகர், பொருட்பாலில் ஈதலின் தன்மையை அறத்துப்பாலினின்றும் முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதை அறியலாம். ‘வறியார்க்கு’ என்னும் அறத்துப்பாலின் வரையறை இங்கே முற்றிலும் நீங்கி அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள் நோக்கத்தை முன்னெடுப்பதையே இந்தக் குறட்பாவில் பரிமேலழகர் விளக்குகிறார். இந்த விளக்கத்தைத்தான் ‘ஆற்றின் அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கும் பொருத்திக் கொள்ளச் சொல்கிறார். ஒரு நூறு குறட்பாக்கள் கடந்து உரையெழுதினாலும் எந்தக் குறட்பாவில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருளை உரைத்தோம் என்பதைத் தம் நினைவுப் பேழையில் இருந்து எடுத்தளிக்கும் அழகரின் ஆற்றல் சொல்லுந்தரமன்று!

    உடன் நிகழ்ச்சியும் உண்டு

    ‘காலமறிதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு பாட்டு. காலமும் இடமும் அறிந்து ஒரு செயலை நன்கு திட்டமிட்டுச் செயல்படுகிற ஒருவன்  இவ்வுலகத்தையே ஆள நினைத்தாலும் அது கைகூடும் என்னும் பொதுவான கருத்தைச் சொல்வது போல் அமைந்திருக்கிறது.

    “ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
    கருதி இடத்தாற் செயின்” (484)

    “ஒருவன் ஞாலம் முழுதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது ஒருவன் கையகத்ததாம் அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்”

    என்று இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் தொடர்ந்து எழுதிய விளக்கவுரையில்,

    ‘இடத்தான்’ என்பதற்கு மேல் ‘கருவியான்’ என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’

    என்று எழுதிக் காட்டுகிறார்.

    இந்தப் பாடடில் உள்ள உரைநுட்பம்

    முந்தைய பாட்டில் ‘கருவியால்’ என மூன்றாம் வேற்றுமை ‘ஆன்’ உருபு பயின்று வந்திருக்கிறது. இந்த ‘ஆன்’ என்னும் உருபு கருவிப் பொருள் தருவதாக இருந்தாலும் இந்த இடத்தில் அது ‘ஒடு’ உருபின் உடனிகழ்ச்சிப் பொருளைத் தருவதாகக் கொள்கிறார். கொண்டு, ‘கருவிகளுடனே’ என்று உரையெழுதுகிறார்.

    “கருவிகளாவன – மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். ‘அவை உளவாய வழியும் காலம் வேண்டும்’ என்பது அறிவித்தற்குக் ‘கருவியான்’ என்றான்.”

    என்னும் அழகர் விளக்கம் கருவிகள் இன்னின்ன எனப் பட்டியலிடுகிறது. அறிவு, ஆண்மை, பெருமை என்பன மூவகை ஆற்றல். சாம, பேத, தான, தண்டம் என்பன நால்வகை உபாயம். காலத்தால் வினையாற்றினும் இந்தக் கருவிகளோடு வினையாற்ற வேண்டும் என்பது கருத்து. அதாவது இந்தக் ‘கருவிகளால்’ வினையாற்றாமல் ‘கருவிகளோடு’ வினையாற்ற வேண்டுமாம். இவ்வாறாகவே பின்னால் வரும் ‘இடத்தான்’ என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ‘மேல் கருவியான் என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’ எனச் சுருக்கம் காட்டுகிறார். இதனால் ‘இடத்தாற்செயின்’ என்பதற்கு ‘இடத்தினால் செய்’ என்னாது ‘இடத்தோடு’ என்பது பொருளாம்.

    ‘கருவியான் செய்’ என்பதற்குக் ‘கருவியோடு செய்’ என உரை கண்டதால் முன்னுள்ள வலியறிதல் என்னும் அதிகாரத்தோடும் ‘இடத்தான் செய்’ என்பதற்கு ‘இடத்தொடு செய்’ என உரைகண்டதால் பின்னுள்ள இடனறிதல் என்னும் அதிகாரத்தோடும் இயைத்து சிங்கநோக்காகக் ‘காலமறிதல்’ என்னும் இவ்வதிகார அமைப்பு முறை நுட்பம் உணர்த்தினார் என்க.

    நிறைவுரை

    ‘இதற்கான பொருள் அங்கே உரைக்கப்பட்டது’ என்பதை ‘உரைத்தாம்’ என்றும், ‘அங்கே உரைத்ததைப்போல இங்கேயும் பொருள் கொள்க’ என்பதை ‘உரைத்தாங்கு உரைக்க’ என்றும் தெளிவுபடுத்துகிறார் பரிமேலழகர். ஒருசில இடங்களில் மட்டும் முந்தைய அதிகாரத்தின் பெயர் சுட்டும் பரிமேலழகர் பெரும்பாலான இடங்களில் அதிகாரப் பெயரையும் சுட்டுவதில்லை. குறட்பா எண்ணையும் குறிப்பதில்லை. ‘உரைக்குற்றம் வந்துவிடக் கூடாது’ என்னும் பொறுப்புணர்வும், ‘கற்றுணர வல்லார்க்கே அரிய இலக்கிய உரைகள் கைவரபெறும்’ என்னும் கல்விக் கொள்கையும் ஒருங்கே கொண்ட உரையாசிரியர்களுள் பரிமேலழகர் தனித்து நிற்கிறார். ‘உழைத்தால் உயரலாம்’ என்பது பழமொழி! இலக்கியத்தைப் பொருத்தவரையில் ‘உழைக்காதவர்க்கு உரை புரியாது’ என்பது புதுமொழி!

    (தொடரும்…)

    Share
  • Janaki Neelamani’s Leo library

    Janaki Neelamani’s Leo library

    Seshadri Baskar

    K.P. Neelamani was a famous tamil writer in those days and my friends including myself used to frequent him since he was operating a small library on Mandaveli street . We used to pick the books often and had a very friendly association for a long time.

    He was too friendly and was very much affectionate when all of us were in our mid twenties . After his demise his wife Janaki Neelamani started handling this library work and she has her set of customers who still remember her and make it to pick the books regularly.

    Its a small place of less than hundred square feet and Maami fondly being called by everyone used to make it at sharp nine in the morning everyday (of course there was a break for some months during the covid times) to meet the customers.

    Leo library is the name of the Lending unit and she charges a nominal sum of Rs Hundred as Membership fee unlike others who charges five hundred and above. She lends only Tamil books and if any body is interested can reach the library at 9444542733.

    In the noon after a break she opens the library and its open till seven depending upon the footfall. Maami is such a affectionate person and when I met her this morning she was too kind to speak recollecting our frequent visits in those days and surprisingly. she even said our membership number was hundred.

    Few newspapers years back had done story on this Leo Library and she was too happy show all those accolades she has won. At this elderly age (must be above seventy), she is too active and energetic and I wish our friends to support her and become a member. We have to learn a lot from her in life for all the grit and energy level.

    When I said, I want become a member and pay afresh she flatly refused and said that I am already a member. What more. she did a fresh membership card and remembered to mention the number as 100 . You know we all had paid just Ten Rupees thirty years back and she still regard all of us are esteemed Members even today. What a integrity and High Ethics it is to adore. My Respects Maami .

    The library is near Mandaveli Market opposite to CC Bank .

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 23 (முது பெண்டிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 23 (முது பெண்டிர்)

    ச. கண்மணி கணேசன் (ப. நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகப்பாடல்களில் முதுசெம் பெண்டிர், முதுவாய்ப் பெண்டிர் என இருதிறத்துப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் முதுபெண்டிர் பற்றியதாக மட்டுமே இக்கட்டுரை அமைகிறது.

    இல்லறப் பெண்டிர்

    முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்றுச் ‘செம்முது பெண்டிர்’ (நற்.- 288) எனவும்; ‘முதுசெம் பெண்டிர்’ (அகம்.- 86) எனவும் அழைக்கப்படுன்றனர். இது கற்பு நெறியில் வழுவாமல் நிற்பவர் என்னும் பொருள்படுகிறது. கற்பின் அடையாளம்  ஆகிய அருந்ததியைச் செம்மீன் என அழைப்பது போன்று; இங்கும் கற்பொழுக்கம் தொடர்பாகவே செம்மை எனும் அடைமொழி பயின்று வருகிறது.

    முதுபெண்டு ஆன தலைவி

    அகப்பாடல்களில் தலைவி தலைமைப் பாத்திரமாக அமைகிறாள். ஆனால் அவள் இல்லற ஒழுக்கத்தில் நிலைத்திருந்து கருவுயிர்த்த பிறகு முதுபெண்டு என்று பெயர் பெறுவதைத் தலைவன் கூற்றாகப் ‘புதல்வன்’ பற்றிய  கட்டுரையில் கண்டோம்.

    “புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித்
    திதலை அல்குல் முதுபெண்டாகித்
    துஞ்சுதியோ மெல் அஞ்சில் ஓதி எனப்” (நற்.- 370)

    பாராட்டும் தலைவன் பேச்சில் மகிழ்ச்சி, பெருமிதம், கேலி போன்றவற்றை மட்டுமே உணர முடிகிறது. முதுபெண்டு ஆவதற்கு உரிய தகுதி இல்லற நெறி நின்று புதல்வனைப் பெறுதல் என்றும் புரிகிறது.

    பண்டைத் தமிழகத்தில் மங்கைப் பருவத்துப் பெண் மணம் புரிந்து மகவைப் பெற்று விட்டாலே முதுபெண்டு ஆகிவிடுகிறாள் என்று புரிகிறது.

    தான் முதுபெண்டாகி விட்டதால் தலைவன் தன்னை விடுத்துப் பிற பெண்களை நாடுவதாகத் தெரிந்தும் பிற இல்லறக் கடமைகளைச் செய்வதில் தன் கவனத்தைத் திருப்பும் தலைவி ஒருத்தியைக் காண்கிறோம். கணவனின் புறத்தொழுக்கம் மனச்சோர்வு அளிப்பினும் அச்சோர்விற்குள் ஆழ்ந்துவிடவோ; யார் வாயிலாகவும் ஆறுதல் கேட்கவோ அவள் விரும்பவில்லை. ஒரு எருமைக் காரானின் செயல் மூலம் தன் மனதைப் புரிய வைக்கிறாள்.

    “இருமருப்பு எருமை ஈன்றணிக் காரான்
    உழவன் யாத்த குழவியின் அகலாது
    பாஅல் பைம்பயிர் ஆரும்” (குறு.-325)

    எனும் வருணனையில்; ஈன்று அணிமை உடைய எருமைக்காரான் இடம் பெறுகிறது. அதன் கன்றை உழவன் கட்டிப் போட்டுச் சென்று விட்டான். எருமை மேயச் செல்ல வேண்டும்; ஆனால் கன்றைப் பிரிந்து தூரமாகச் செல்ல விரும்பாமல் தான்  இருக்கும் இடத்தில் உள்ள;  பால்பிடித்த பருவத்துக் கதிர்கள் உள்ள பயிரையே மேய்கிறது. பல நுட்பமான பொருட்களை உள்ளடக்கிய உவமை இது.

    அகன்று செல்லாமல் இருந்த இடத்திலேயே  எருமைக்  காரான் பசியாற இயலும். பால் பிடித்த கதிர்களைக் கூட உணவாகக் கொள்ள இயலும். அதனால் ஏற்படும்  இழப்பிற்கு யாரும் கவலைப்படவில்லை. எருமைக்காரானை யாரும் விரட்டவில்லை. அந்த அளவிற்கு வளமான நன்செய் உள்ள நாடு என்பது; இங்கு  செல்வம் மிகுந்த மனைவாழ்க்கையைக்  குறிக்கிறது. இல்லறக் கடமைகளுக்கு இச்சூழல் மிகவும் ஏற்றது.

    கன்றின் அருகிருக்கும் காரானுக்கு தன் தாய்மைப் பிணைப்பே முதற்கடமை ஆகிறது; தலைவிக்கும் பெற்ற மகவைப் பேணுவதே முதற்கடமை ஆகிறது.

    உழவன் கன்றைப் பாதுகாப்பு கருதிக் கட்டிப் போட்டுள்ளான்; குடும்பம் என்ற அமைப்பு தலைவிக்கும் அவளது மகவுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்கிறது.

    தலைவனின் புறத்தொழுக்கம் பற்றிய கவலை மனதை அரித்தாலும்; அதை முதன்மைப்படுத்தத் தலைவி விரும்பவில்லை. தன்னை ஆற்றுவதாக எண்ணிப் பேச்செடுத்த தோழியை;

    “துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி” (மேலது)

    எனத் தடை போடுகிறாள். துன்பத்திற்கு இடையில் தலைவன் ஒழுக்கம் பற்றிப் பேசுவது மேலும் துன்பத்தை மட்டுமே கொடுக்க வல்லது என்பது அவள் கருத்து. அதுமட்டுமல்ல;

    “திருமனைப் பல கடம் பூண்ட
    பெருமுது பெண்டிரேம் ஆகிய எமக்கே” (மேலது)

    எனத் தனது தகுதிப்பாட்டையும் நிலைநிறுத்துகிறாள். திருமணம் என்ற பந்தத்திற்கு உரிய கடமைகள் பல. குழந்தை வளர்ப்பு, மூத்தோர் பேணல், விருந்து புறந்தரல், மனை பேணல், அன்றாடக் கடமைகள், கிளை தாங்கல் என எத்தனையோ பொறுப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் ஆற்ற வேண்டிய தான் ஒரு பெருமுது பெண்டாகி விட்டமையைத் தன் வாயாலேயே கூறுகிறாள்.

    சிறுபாத்திரத் தகுதி பெறும் முதுபெண்டிர்

    தலைவன் வாயில் வேண்டித் தோழியிடம்  பேசும் போது; அவனது திருமண நாள் நிகழ்வுகளும் அப்போது முதுசெம் பெண்டிர் வாழ்த்தியதும் நினைவூட்டப் படுகின்றன. முன்னர் நிகழ்ந்ததை நினைத்துப் பார்க்கும் இவ்வுத்திக்கு மேலைநாட்டு இலக்கியக் கொள்கை பின்னோக்கு உத்தி (flashback) என்று பெயர் கொடுக்கிறது. இருபதாம் நூற்றாண்டு இலக்கியக் கொள்கையாகக் கருதப்படும் இவ்வுத்தி நம் தொகைநூலில் இடம் பெறுவதைப் பெருமைக்கு உரியதாகக் கொள்ளலாம்.

    “உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
    பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
    முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
    புதல்வர்ப் பயந்த திதலை அவ்வயிற்று
    வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
    கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
    பெற்றோர்ப் பெட்கும் பிணையை ஆகென
    நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
    பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
    வதுவை நன்மணம்” (அகம்.- 86)

    நடந்த முறையைத் தோழியிடம் கூறுகிறான்.

    தனக்கும் தலைவிக்கும் நடந்த திருமணம்; அதில் மங்கல நீராட்டு ஒரு முக்கியச் சடங்கு. தலைக்கு மேல் தாங்கிய குடத்தை உடையவராகவும்; புதிய மண்டையில்; அதாவது  சுடுமண்ணாலான வட்டமான கலத்தில் அச்சடங்கிற்குரிய சுண்ணம், பூ, நெல் முதலிய பிற பல மங்கலப் பொருட்களை ஏந்தியவராகவும் முதுபெண்டிர் நின்று இருந்தனர். முன்னர் நீருள் சொரிய வேண்டியவை இவை; பின்னர்  சொரிய வேண்டியவை இவை என்று தம்முள் பேசிக் கொண்டே வரிசையாகக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் மக்களைப் பெற்ற வாழ்வரசிகள் நால்வர் திதலை அவ்வயிற்றை உடையவராய்; அணிகலன்கள் அணிந்தவராய்த்  தலைவியை நீராட்டி வாழ்த்தினராம்.

    இன்றும் நல்ல காரியம் நடக்குமிடத்தில் காலமாற்றத்தைக் காரணம் காட்டி ‘ஸ்டைல்’ என்ற பெயரில் காதணி, கழுத்தணி இல்லாமல் பெண்கள் முன்னின்றால் ‘காது மூளி கழுத்து மூளியாக நிற்கக் கூடாதென முந்தைய தலைமுறையைச் சேர்ந்தோர் விலக்குவது வழக்கமே.

    மகப்பேறால் ஏற்பட்ட திதலை (stretch marks) மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. அம்மகளிர் மட்டுமே தலைவியை நீராட்டும் தகுதி உடையவர் எனக் கருதப்பட்டனர்.  ‘புதல்வர்ப் பயந்த’ சிறப்பினை உடைய நால்வர் என்று விதந்தோதி இருப்பினும்; அவர்கள்  கற்புநெறி வழுவா முதுசெம் பெண்டிருடன் இருக்கும் சூழல் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

    ‘பொதுசெய் கம்பலை’ என்ற தொடருக்கு உரையாசிரியரிடம் விளக்கம் இல்லை. மங்கல நிகழ்ச்சியின் போது இன்று போடப்படும் குலவை என்று பொருள்  கொள்ளலாமோ?!

    ‘கற்பு நெறியிலிருந்து வழுவாமல் இல்லறத்திற்கு நலன் விளைக்கும் செயல்களுக்கு உதவி; உன்னை மனைவியாகப் பெற்றவன் மனம் நிறையும் படியாக; என்றும் அவனைப் பிணைந்திருக்கக் கடவாய்’ என்று முதுசெம் பெண்டிர் வாழ்த்தி மங்கல நீராட்டியதால்; அந்நீரில் கலந்திருந்த அலரியும் நெல்லும் தலைவியின் கூந்தலில் ஆங்காங்கு சிக்கிச் சேர்ந்து தோன்றினவாம். தொடர்ந்து முதலிரவு வரை தலைவன் பின்னோக்கி நினைக்கிறான்; பேசுகிறான்.

    அன்னைக்குத் துணை ஆகும் முதுபெண்டிர்

    நுதல் பசந்திருந்த மகளின் நோய் பற்றி அறியக் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் கேட்கிறாள் அன்னை. அவளைப் பொறுத்தவரை மகள் இன்னும் அறியாப் பருவத்தினள். தனித்துக் கேட்டறிய ஒருப்படாத மனத்தினளாய்; அக்கம்பக்கத்தில் இருந்த செம்முது பெண்டிரை உடன் வைத்துக் கொண்டு; நெல்லைச் சுளகில் போட்டு; மகளை அதன் முன்னர் நிறுத்தி; அவள் செய்யும் முன்னேற்பாட்டில் முதுபெண்டிர் இடம் பெற்றுள்ளனர். இங்கே அவர்கள் பேசவில்லை.

    “நன்னுதல் பரந்த பசலை கண்டு அன்னை
    செம்முது பெண்டிரொடு நென்முன் நிறீஇக்
    கட்டிற் கேட்கும் ஆயின்” (நற்.- 288)

    எனத் தோழியும் தலைவியும் தம்முள் பேசிக் கொள்கின்றனர்.

    உரையாசிரியர் ‘செம்முது பெண்டிர்’ கட்டுவிச்சியைக் குறிக்கிறது என்கிறார். ஆனால் அப்பொருள் பொருந்தவில்லை. கட்டுவிச்சி தொகை இலக்கியத்தில்  ‘முதுவாய்ப் பெண்டெ’னக் குறிக்கப் படுகிறாள். அத்துடன் ‘செம்-‘ என்னும் அடைமொழிக்குரிய விளக்கத்தைக் கட்டுரையின் முற்பகுதியில் கண்டோம். எனவே ‘செம்முது பெண்டிர்’ கற்பு நெறி வழுவாது; புதல்வர்ப் பயந்து இல்லறம் நடத்தும் மங்கலப் பெண்டிராகிய வாழ்வரசிகள் ஆவர்.

    முடிவுரை

    முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்றுச் ‘செம்முது பெண்டிர்’ எனவும்; ‘முதுசெம் பெண்டிர்’ எனவும் அழைக்கப்படுவது கற்பு நெறியில் வழுவாமல் நிற்கும் புதல்வர்ப்  பயந்த  பெண்டிர் என்பதைக் குறிக்கிறது.  மங்கைப் பருவத்துப் பெண் மணம் புரிந்து மகவைப் பெற்று விட்டாலே முதுபெண்டு ஆகிவிடுகிறாள்.  தலைவன் வாயில் வேண்டித் தோழியிடம்  பேசும் போது; முதுபெண்டிர் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர். உரையாசிரியர் ‘செம்முது பெண்டிர்’ கட்டுவிச்சியைக் குறிக்கிறது என்று  சொல்லும்  பொருள் பொருந்தவில்லை.

    Share
  • சரசுவதி பண்டாரம் எனும் நூலகம்

    சரசுவதி பண்டாரம் எனும் நூலகம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பண்டு கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக, ஆடல் இசைக் கலைக் கூடங்களாக மட்டுமே இருக்கவில்லை அவை இலவச உண்டு உறையும் வேதக் கல்வி நடுவமாகவும் ஆயுர்வேத மருத்துவச் சாலையாகவும் விளங்கின. அத்தோடு நூலகங்களும் கோவில்களைச் சார்ந்து இயங்கின.

    வேதக் கல்வியொடு நில்லாமல் இலக்கியக் காவியம், தொன்மமாம் புராணம், வரலாறு, இலக்கணம், தெய்வியல் கூறும் மீமாம்சம் போன்றனவும் கற்பிக்கப்பட்டன. இவை அல்லாமல் ஆயுர் வேத மருத்துவம், சோதிடம் போன்ற சிறப்பு புலக் கல்வியும் கற்பிக்கப்பட்டன. இதனால் இவற்றுக்கான நூல் தேவை இயல்பாகவே எழுந்தது. மேலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வோர் எல்லா இடங்களுக்கும் நூல்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தாலும், குறிப்பாக வெள்ள காலத்தில் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தாலும் இந்நூல்கள் கிடைத்தற்கரிய காரணத்தாலும் இவற்றை எழுதிப் பேண வேண்டிய கட்டாயத் தேவையும் ஏற்பட்டது. அதனால் உண்டானது தான் சரசுவதி பண்டாரம் (bandaram) என்னும் ஓலைச் சுவடி நூலகம். பல்வேறு புலங்களுக்கான நூல்களை ஓலையில் எழுதுவதற்கென்றே அன்னாளில் தனியே ஆள்கள் இருந்தனர். இவர்கள் தவசக் கூலி, ஆடை (புடைவை) முதல், நெல், ஆண்டு காசிற்கும் அமர்த்திக் கொள்ளப்பட்டனர். விருப்பமுள்ள யாரும் கட்டணம் செலுத்தி இந்த ஏடுகளைப் படியெடுக்கலாம், ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் சில ஊர்களில் இத்தகு நூலகங்கள் செயற்பட்டதற்கான கல்வெட்டுகள் சில கோவில்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றுக்கு வேந்தர்கள், மன்னர்கள், அரையர்கள் அல்லாமல் சில தனியாரும் கொடை ஈந்து பேணி வந்துள்ளனர்.

    நாட்டைக் காப்பதோடு அறம் காப்பதும் (தர்ம ரக்ஷ்ணம்) ஆட்சியாளர் கடமை என்பதால் இவ்வாறு மதக் கல்விக்கும் அதைச் சார்ந்த கல்விக்கும் அன்றைய ஆட்சியாளர் தாராளமாக நன்கொடை ஈந்தனர். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றே தோன்றுகின்றது. படைச் செலவு, நிருவாக செலவு தவிர இப்படி மதம் வளர்த்துக் காக்க வேதக் கல்விக்கு செலவு செய்திராவிட்டால் அந்த பணத்தை வேறு ஒன்றுக்கும் செலவிட்டிருக்க மாட்டார். அப் பணத்தை அவர் தம் கருவூலத்திலேயே சேகரித்து வைத்திருந்திருப்பார். ஏனென்றால் முடியாட்சி என்பது மக்களாட்சி போல் மக்கள் நலஅரசு (welfare state) அன்று. இக்கால் மக்கள் வரிப்பணம்! மக்கள் வரிப்பணம்! என்று கூப்பாடு போடுவோர் ஒரு வேந்தன் இன்னொரு வேந்தன் மீது போர் தொடுத்து வென்று அவனிடம் உள்ள வரிப்பணத்தை எல்லாம் கொள்ளையிடும் போது மட்டும் மக்கள் வரி பணம் கொள்ளை போனதே என்று புலம்பாமல் வென்ற வேந்தனின் வெற்றிச் சிறப்பை பாடத் தொடங்குகின்றனர்.  ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? எனவே இன்றைய மக்களாட்சியின் மக்கள்நலக் கருத்தை கொண்டு போய் பண்டைய அரச செயற்பாடுகளில் திணிப்பது அறியாமையின் உச்சம் ஆகும்.

    இக்காலத்தில் சிலர் வேதக் கல்விக்கு இப்படி செலவு செய்ததை கடுமையாகச் சாடி எழுதி தம் அறிவின்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.  அது அவர்களின் வேதநெறி மீதான வெறுப்பின் வெளிப்பாடே ஆகும். வேதக் கல்வி தான் இப்படி என்றில்லை புத்த விகாரையிலும், சமண பள்ளியிலும், மதரஸாக்களிலும் கூட மதக் கல்வி தான் புகட்டப்பட்டன என்பதை கூர்ந்து நோக்கினால் இந்த அறிவின்மை புலனாகும். திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றில் பயிற்சி கொடுப்பதும் மதக் கல்வியை சார்ந்தது தான். இன்று நமக்குள்ள மதம் சாரா பொதுக் கல்வி என்பது ஐரோப்பியரால் அறிமுகமானது. இக்கால பொதுக் கல்வியை பழைய கல்வி முறையோடு ஒப்பிட்டு பார்ப்பது வரலாற்றை புரிந்து கொள்ள உதவாது மாறாக அதில் குற்றமே மேலெழும்பி நிற்கும். இராசராசன், இராசேந்திரன் ஆட்சியைக் குறை கூறுவோர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

    மேற்கண்ட நூலகத் தேவைக்கான செய்திகளை நோக்க பல்லவர் கோவில் வழிபாட்டை ஒட்டி வேதக் கல்வியொடு பிற புலக் கல்வி, ஆயுர்வேத மருத்துவம் ஆகியன ஒருங்கே வளர்க்கப்பட வேண்டும் என்பதாலேயே சதுர்வேதி மங்கலம் என்ற பிராமணக் குடியேற்ற ஊர்களை ஆங்காங்கே ஆற்றை அண்டி அமைந்தனர் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. கோவிலை நம்பி 3-4 பிராமணப் பூசகர் மட்டுமே வாழ்ந்திருக்க வில்லை மாறாக கோவிலைச் சார்ந்த இந்த கல்வி வினைகளிலும் பிராமணர் ஈடுபட்டிருந்ததால் தான் கோவில் ஊர்களில் கோவிலையும் குளத்தையும் சுற்றி 30 – 40 பிராமண வீடுகள் இருக்கக் காண முடிகின்றது.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் திருப்பணியார அறைக்கு பக்கத்து அறையில் உள்ள 7 வரி சிதைந்த கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ பாலபள்ளி நீலகண்ட நாயக்கர் செய்வித்த இந்த ஸரஸ்வதி பண்டாரத்துக்கு ஸேஷமான இத்[திருமண்]
    2. [டபத்து] இவர் உகந்தருளுவித்து திருப்ரதிஷ்டை பண்ணித் திருவாராதநங் கொண்டருளுகிற ஹயக்ரீவ நாயனாற்கும் [சரஸ்வதி]
    3. [தே]விக்கும் ஸ்ரீ வேதவ்யாஸ பகவானுக்கும் திருவாராதனத்துக்கும் அமுதுபடி சாத்துபடி உள்ளிட்ட விஞ்சனங்களுக்[கும் உட]
    4. [லா]க நூறாயிரங்காசு ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கவும் இதில் பொலிசை கொண்டு இவ்விடங்களுக்கு திருவாராதனமும்
    5. அமுதுபடி சாத்துபடிகளுக்கு வேண்டுவன திருக்கொட்டகாரத்திலே ப_ _ தாக விட்டு நடத்திப் பண்ணவேணு [மென்று]
    6. சொல்லுகையாலே, இப்படியே பெருமாள் திருப்பள்ளி அறையில் பே[ரருளாள]ன் திவ்யஸிம்ஹாஸனத்து நாச்சியாரொ_ _ _ _
    7. இதுக்கு ஜீயரும் திருப்பதி ஸ்ரீ வைஷணவரும் _ _ ண்ணப்ப _ _ _ _ (முழுமை பெறவில்லை)

    சரசுவதி பண்டாரம் – ஓலைச் சுவடி நூலகம்; ஸேஷமான – சிறப்பு வாய்ந்த; திருவாராதனம் – கடவுள் பூசை; அமுதுபடி- திருச்சோறு படையல்; சாத்துபடி – தெய்வச் சிலை அலங்காரம்; விஞ்சனம் – சமையலுக்கான பண்டம்; உடலாக – நிபந்தனையுடன் இட்ட முதல்; ஸ்ரீ பண்டாரம் – கோயில் கருவூலம்; ஒடுக்கு – பணம் செலுத்து, pay; பொலிசை – வட்டி; திருக்கொட்டாரம் – கோவிலில் பொருள் வைக்கும் அறை,  store room.

    விளக்கம்:  இதில் நாயக்கர், ஜீயர் ஆகிய சொல்லாட்சி இடம் பெறுவதை வைத்து இக்கல்வெட்டு விசயநகர ஆட்சியின் 15-16 ம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம். பால பள்ளியை ஆளும் நீலகண்ட நாயக்கர் இந்த ஓலைச் சுவடி நூலகத்தை முன்பு ஒருபோது ஏற்படுத்தினார். அந்த நூலகமாம் சரசுவதி பண்டாரம் அமைந்த சிறப்பு வாய்ந்த இந்த திருமண்டபத்தில் இவர் விரும்பி நிறுவி பூசனை செய்யப்பட்டு வரும் பரிமுகப் பெருமாளான ஹயக்ரீவர், நாமகளாம் சரசுவதி தேவி, வேத வியாச பெருமான் ஆகியோரது சிலைகளுக்கு பூசனை ஆற்றவும் திருச்சோறு படையல், அலங்காரம் உள்ளிட்ட சமையல் பொருள்களுக்கென்றே முதல் பணமாக நூறாயிரம் (1 லட்சம்) காசினை கோயில் கருவூலத்தில் இவர் செலுத்தினார். இக்காசினைக் கொண்டு வட்டி பெற்று அந்த வட்டிப் பணத்தில் சிலைகளுக்கு அன்றாட பூசனை, திருச்சோறு படையல், அலங்காரம் ஆகியவற்றுக்கு தேவைப்படும் பொருளை கோவிலின் பொருள் வைக்கும் அறையில் வாங்கி வைத்து இதனை நடத்தி வரவேண்டும் என்று சொல்லுவதாலும், அதே போல் பெருமாளின் பள்ளிஅறையில் இறைவனை தெய்வ சிம்மாசனத்தில் நாச்சியாரொடு எழுந்தருளிவிக்க வேண்டுமாய் ஜீயரும் திருப்பதி வைணவர்களும் விண்ணப்பம் செய்தபடியால் என்பதோடு கல்வெட்டு சிதைந்து விட்டது. எனவே முழுச் செய்தியை அறிய முடியவில்லை.

    இதற்கு முன்பே சுந்தர பாண்டியன் காலத்தில் இக்கோவிலில் சரசுவதி பண்டாரம் செயற்பட்டு வந்தது. ஆனால் அது இசுலாமியப் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டதால் மீண்டும் விசயநகர ஆட்சியில் நீலகண்ட நாயக்கரால் சரசுவதி பண்டாரம் தொடங்கப்பட்டு செயற்பட்டது போலும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – தொகுதி 24, பக். 297 (A.R. No. 130 of 1938-39), இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்  துறை வெளியீடு.

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் சேரன்மாதேவி தெய்வீசுரமுடையார் கோவில் 8 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் கோனேரின்மை கொண்டான் சேரவன் மஹாதேவி சதுர்வேதி மங்கலத்து
    2. ஸபையாற்கு. தங்களூர் சீமித்துவார்பதி அப்பன் கோயிலில் கைச்சிக்கு வாச்சபாண்டிய பிரம்மாதிராயர்
    3. தன்மமான ஸரஸ்வதி பண்டாரத்துக்கு நாலாவது முதல் கண்ணாறு விளையும் நிலத்திலே பசானப்
    4. பண்டத்துடனே முதற்காலத்திலே இரண்டுமா நிலம் முதலடங்க இறையிலியாகக் குடுத்த
    5. இந்நிலம் இரண்டுமாவுக்கும் எப்பேற்பட்ட சர்வ உபாதிகளும் உட்பட தவிர்த்து சந்திராதித்த வரை செல்ல
    6. இறையிலியாகக் குடுத்து வரியிலார் கணக்கிலும் கழிக்கச் சொன்னோம் சந்திராதித்தவற் செல்லக்
    7. கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுக்கவும். பாற்க யாண்டு நாள் 377. இவை விக்கிரம பாண்டியக்
    8. காலிங்கராயன் எழுத்து. இவை வரந்தரும் பெருமாள் எழுத்து.

    கண்ணாறு – சிறு வாய்க்கால்; பசானப் பண்டம் – சித்திரையில் அறுவடை ஆகும் விளைச்சல்; இரண்டு மா- ; உபாதி – கடமை எனும் வரி இனம்; பாற்க யாண்டு.

    விளக்கம்: இது 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு. சேரன் மாதேவி சதுர்வேதி மங்கலத்து சபையோருக்கு அரச அதிகாரிகளான விக்கிரம பாண்டிய காளிங்கராயனும், வரந்தரும் பெருமாளும் வழங்கிய ஆணை ஓலையில் “உமது ஊரில் உள்ள மித்துவார்பதி அப்பன் கோவிலில் பிராமண அதிகாரியான கைச்சிக்கு வாச்ச பாண்டிய பிரம்மாதிராயர் அறக்கொடையாக ஏற்படுத்திய சரசுவதி பண்டாரத்திற்கு ஊரில் நாலாவதாக உள்ள கால்வாயின் முதல் சிறுவாய்க்காலை அண்டி அமைந்த நிலத்தில் விளைந்த சித்திரை விளைச்சலோடு அந்த இரண்டுமா அளவு நிலம் முன்பு நூலகத்திற்கு இறையிலியாகக் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு மா நிலத்திற்கு எல்லா வகை வரியும் தவிர்த்து நிலவும் ஞாயிறும் உள்ள வரை இறையிலியாகவே வரியிலார் கணக்கு புத்தகத்தில் எழுதி கழிக்க சொன்னோம். இது நிலவும் ஞாயிரும் உள்ள வரை செல்வதாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க” என்று கூறி உள்ளனர்.

    நூலக நிலத்திற்கு வரிகட்ட வேண்டும் என்று சபையோர் கூறியிருக்க வேண்டும் அதனால் நூலக பொறுப்பாளர் இந்த அரச அதிகாரிகளைச் சந்தித்து இந்நிலத்திற்கு வரி எதையும் விதிக்கக் கூடாது என்று ஊர் சபையோருக்கு கூறுவது போல புதுஆணை ஒன்றை பெற்றுவந்தனர் என்று தெரிகின்றது. இந்த கல்வெட்டு கோவிலில் இடம் பெறுவதற்கும் இந்த நூலகப் பொறுப்பாள பிராமணரே காரணம் என்பதை அறிஞர் புரிந்து எளிதில் கொள்வர்.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (பொ.ஆ. 300 – 1800), பக்.286. ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம். (ARIEp 1916 SL No 695).

    தென்னார்காடு மாவட்டம் சிதம்பரம் நடராசர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு வடக்கே வட கோபுரத்திற்கு அருகே உள்ள மண்டபத்தில் உள்ள 6 வரி சிதைந்த கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரத்துக்கு பல க்ரந்தங்கள் பார்க்கவும் எழுதவும் அவிழ்த்து…தேவர்…ஞானஸமுத்ரதேவர் … ற்ற … க்கு உள்வரி யெழுதிக் கொ[டு*]த் … ன திஸ்யாகத்துக்கும் வ்ய…ப்பிக்கவும் வாசிக்கவும் காரம்பிச் செட்டுச் சொக்கத் தே … ழகந்த . றத்து ஸுப்ரமண்யன்.  புளிங்குறுபட் … …

    2.ருமாள். வங்கிப்புறத்து வினாயகபட்டன். காஞ்சிகுறி திருவெண்காவுடையா …பொத்தகங்கள் அவிழ் … … றை வித்யாபதி பட்டர்.  தி…சறை முதலியார். இந்…ற மங்க … …கோம[ட]த்து திருவானைக்காவுடையார். எழுதும் பேர்க்கு கோமடத்து மண்டலபுருசஷன்வங்கிபுறத்துத் திருநம் … ஆழ்வார்.

    3.குரோவி திருவலஞ்சுழி உடையார்.வினாயகதேவர் நொரட்டூர் வெள்ளைப்பிள்ளை. காஞ்சி …நிர்த்தராஜன் ஆழ்வான். திருவல…கு குண்டூர்த் திருவம்பல … க்கன் …புராணத்துக்கு முப்ரால் பெரியதேவர். ஜோதிஷ ஸாஸ்த்ரத்துக்கு குரோவி ஆயத்[ராஜ]ன். ஆகப் பேர் இருபதுக்கு எழுதின ஏவற் தீட்டுப்படி அனைத்துலகுங் கொண்டருளிய … … ணி … ஒன் … னூற்று அறுவரும்.

    4. வில்லவதரையன் ஓலை தென்னவன் ப்ரஹ்ம……க்ரம சோழ ப்ரஹ்மராயரும் ஜயதுங்கப் பல்லவரையரும் குருகுலத்தரையரும் உடையார் திருச்சிற்றம்பலமுடையார்…ண்காணி செய்வார்களும் … ஞ் செய்வார்களும் சாமுதாயஞ் செய்வார்களும் கோயில்னாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக்கூறு செய்வார்களும் பண்டாரப் பொத்தகமுடையார்களும் கணக்கரும் … [கண்]டுவிடு தந்ததாவது இரா[ஜாதிராஜ] … … மேல்பக்கத்து ஸரஸ்வதி பண்டாரத்துடனே

    5. சேர தேவர் ஸு[வாமி]தேவர் செய்வித்த…ஸரஸ்வதி பண்டாரஞ் செய்விக்குமிடத்து முன்[பத்]தை ஸரஸ்வதி பண்டாரத்தில் எழுதிக்கிடக்கிற க்ரந்தங்கள் இப … … யச் ..[செ] … து இதுக் … ன்று போதுகிற பேர்ரிட்டும் முன்பு தேவை செய்து போதுகிறபடிகளிலே நின்று தேவை செய்து போதக்கடவார்களாகவும் இப்பண்டாரத்து …ங் … … ரிக க்ரந்தங்கள் …. க்ரந்தங்கள் இ…லெ இந்த க்ரந்தங்கள்

    6. எழுதி சேர்க்கவேண்டுகையில் … … த்துடனே சேர் … கவு[ம்] வேண்டும் இடம்பெற வகுத்து … காணியே பண்டாரத்தி … ழுதின … … இருக்கு … னவும் இப்பண்டாரத்தில் இக் க்ரந்தங்கள் எழுத[ப்] பேர் பத்து முன்பத்தைப் பண்டாரத்தில் உள்ள க்ரந்தங்கள் தேஸா[ந்த்ர]ங்களினின்றும் … வி … க்கவும் இ … … டியாலே பண்டார … …1

     1continuation lost

    க்ரந்தம் – நூல்; அவிழ்த்துக் கட்டு – ஏட்டைப் பிரித்துக் கட்டு; உள்வரி – அந்தராயம்; ஜோதிஷ – ஜோதிடம்; ஏவற் தீட்டு – ஆணை ஓலை; சாமுதாயம் செய்வார் – ஊர்ப் பொது நிர்வாகம் செய்பவர்; திருமாளிகைக்கூறு – கோயில் உட்புறமாக உள்ள கட்டடங்கள், மண்டபம், சுற்றுக் கோயில்கள் ஆகியனவற்றில் வேலை செய்து தம் பங்கைப் பெறும் அர்ச்சகர்; பொத்தகம் – நூலக வரிப் புத்தகம்; போதுகிறபடி – போகிறபடி; நின்று – இருந்து; தேசாந்திரம் – வெவ்வேறு இடம்.

    விளக்கம்:  நூலகத்திற்கு பல நூல்களைப் பார்த்திடவும், எழுதிடவும், நூல்களைப் பிரித்துக் கட்டவும் ஞானசமுத்திர தேவர் எழுதிக் கொடுத்த உள்வரி விவரம் யாதெனில் திஸ்யாகம், வாசிப்பு ஆகியவற்றிற்காக சொக்கத் தே _ _ _ , சுப்ரமணியன், புளிங்குறு பட்டன், _ _ _ பெருமாள், வங்கிப்புறத்து வினாயக பட்டன், காஞ்சிக்குறி திருவெண்காவுடையான் ஆகியோரும் நூல்களைப் பிரித்துக் கட்ட _ _ றை வித்யாபதி பட்டர், தி_ _ _ சறை முதலியார், _ _ _, கோமடத்து திருவானக்காவுடையான் ஆகியோரும் ஏடுஎழுதும் பொறுப்பிற்கு கோமடத்து மண்டல புருஷன், வங்கிபுறத்து திருநம்_ _ _ஆழ்வான், குரோவி திருவலஞ்சுழி உடையார், _ _ வினாயக தேவர், நொரட்டூர் வெள்ளைப் பிள்ளை, காஞ்சி _ _ _ நிர்த்தராஜன் ஆழ்வான், திருவம்பல_ _க்கன் ஆகியோரும் _ _ _ புராணத்திற்கு முப்ரால் பெரியதேவர், ஜோதிடத்திற்கு குரோவி ஆயத்ராஜன் ஆகியோர் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆக இந்த இருபது பேருக்கு கையெழுத்திட்ட ஓலை ஆவணப்படி  அனைத்துலகுங் கொண்டருளிய (சடவர்மன் சுந்தர பாண்டியன் என உய்த்துணரப்பட்டுள்ளது) மேலும் தெளிவாக அறியமுடியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது.

    வில்லவத்தரையன் விடுத்த ஓலைஆவணம் யாதெனில் தென்னவன் பிரம்ம_ _ _,  (வி)க்ரம சோழ பிரம்மராயரும், ஜயதுங்க பல்லவரையரும், குருகுலத்து அரையரும், உடையார் திருச்சிற்றபலமுடையார் (இறைவன் நடராஜன்) _ _ _ கங்காணி செய்பவர்களுக்கும், கோயில் நிர்வாகம் (ஸ்ரீகாரியம்) செய்பவர்களுக்கும், ஊர்ப் பொது நிர்வாகம் செய்பவர்களுக்கும், தமக்கான பங்கைப் பெறும் கோயில் உட்பிரிவு அர்ச்சகர்களுக்கும், நூலக வரிப்புத்தகம் பேணுபவருக்கும், கணக்கருக்கும் வழிகாட்டுதல் தந்தது யாதெனில் இராஜாதிராஜன் _ _ _ அமைந்த மேல்பக்கத்து நூலகத்துடன் சேர்த்து விரிவாக்கிடும் போது வேந்தரின் அரசகுரு எழுதிய நூல்களை நூலகத்தை ஏற்படுத்தும் போது முன்னம் நூலகத்தில் எழுதிவைத்துள்ள நூல்களோடு சேர்க்க வேண்டும்.

    முன்னர் எவ்வாறு தேவையானவற்றை செய்து கொண்டு போகிறபடியிலேயே இருந்தனரோ அப்படியே இப்போதும் தேவையானவற்றை செய்யக் கடவார்களாக. இந்த நூல்களை எழுதிச் சேர்க்கின்ற போது அவற்றுடன் அரசகுருவின் நூல்களும் அதில் இடம்பெறச் செய்து (தெளிவில்லாதபடி சிதைந்துள்ளது). இந்த நூல் களஞ்சியத்தில் இந்நூல்களை எழுதப் பத்து பேரை அமர்த்தி முன்பு இருந்தது போல வெவ்வேறு இடங்களில் இருந்து நூல்களைக் கொண்டு வந்து இப்படியாக நூலகத்தை நடத்திச் செல்ல வேண்டும். (இதன் மேல் தொடர்ச்சி விடுபட்டுள்ளதால் கல்வெட்டின் முழு விவரத்தை அறிய முடியவில்லை).

    பார்வை நூல்:  (A.R. B. 168 of 1961-62), இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை.

    தென்னார்காடு மாவட்டம் சிதம்பரம் நடராசர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு வடக்கே மேற்கு கோபுர அடுக்குகளுக்கு அருகே உள்ள மண்டபத்தில் உள்ள 8 வரி கல்வெட்டு. நடுப்பகுதி கட்டடத்தில் மறைந்துள்ளது.
    1. ஸ்வஸ்தி ஸ்ரீ த்ரிபுவனச் சக்ர.. ருவையாறுடையானும் மதுராந்தக… …நும் ஆளுடையார் கோ… த் திருமாளிகைக்கூறு தில்லைஅம்பலப் பல்லவரையனும் ஸ்ரீகாரியஞ் செய்வார்க்ளும் ஸாமுதாயஞ் செய்வார்களும் கோயில்நாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக்கூறு செய்வார்களும் செய்யத் திருவாய்மொழி … கோயிலில் இராசா[தி]ரா… மாளிகை மேலைத் திருமாளிகையில் ஸுப்ரமண்யப் பிள்ளையார் எழுந்தருளி இருக்கிற இடத்துக்கு வடக்காக … … …

    2. ச் செய்த ஸரஸ்வதி பண்… …உடையார் ஸ்வாமி தேவர் எழுதிவித்தனவாய்ப் புகுந்த பொத்தகங்களும் இவ் … [பெ] … ஸித்தாந்தாகரமும் உள்ளிட்டன எழுதின பொத்தகங்களும் நின்பை ஆட்கொண்டான் பட்டனும் கௌதமன் உய்யக் கொண்டான் பட்டனும் கோ … பட்டனும் தபஸ்ஸிவக …சம்பந்தன் …ணலூர் கிழவன் திருஞானசம்பந்தன் திருச்சிற்றம்பலமுடையானும் அவிழ்த்துக் கட்டவும் …ஜீர்ண்ணத்தவை …

    3. எழுதவும் இவையும் ஆளுடை … ம் … ன் இலைச்சினை … ணிய … இவனும் புல்லூருடையா[ன்] திருநீலகண்டன் மெய்காப்பானாய் இ … பல .. கோக்கவும் இவர்களுக்குக் கொற்றுக்கும் புடவை முதலுக்கும் இவர்களில் நின்பை ஆட்கொண்டான் பட்டனுக்கும் கௌதமன் உய்யக் கொ…னுக்கு … … நாள் ஒன்றுக்கு நெல்லு தூணியும் ஆட்டைக்கு காசு நாலும் …லிக்கு… [உய்]யக்கொண்டான் பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு … பதக்கும் ஆட்

    4. ட்டைக்கு காசு இரண்டும் அலஞ்… …டைவானுக்கும் பேர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுத் தூணியும் ஆட்டைக்குக் காசு நாலும் இராமபட்டனுக்கு நாள். ஒன்றுக்கு நெல் முக்குறுணி நானாழியும் ஆட்டைக்குக் காசு மூன்றரையும் புல்லூருடையான் திருநீலகண்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப் பதக்கு நானாழியும் … … க வந்த நெல்லுங் காசும் பெறவும் பெறுமிடத்து உடையார் த்ரிபு[வன] வீரஈஸ்வரமுடையார் கோயில் திருமலையில் [பெ]ரிய நாயனாரையும் நாச்-

    5. சியாரையும் எழுந்தரு[ளுவி]த்த வி…[ள] நாட்டு [வடநா]லூரான குலோத்துங்க சோழ அரசூர் நிலம் இருபத்தெழே இரண்டுமா அரைக்காணி முந்திரிகையும் இறையிலியாய் வருகிறபடி தவிர்ந்து பழம்படியே காணியாய் விஸ்வாதிகவிவேக மங்கலமென்னும் பேராகவும் இன்நிலம் ஆளுடையார்க்கு அந்தரா … தேவதான இறையிலியாக இடவும் இன்னிலத்துக்கு முன்பு முதல் … ண்டு வருகிறபடியே எண்ணூற்றொருபதின் கல நெல்லு கொண்ட முதலும் இன் நெல்லில் மூன்று.

    6. கூறிட்ட ஒரு கூற்றில்… …றவும் திருநாள் … க்கங்களில் இ … கரி … ப் பெறவும் இப்படி … இத்திருமாளிகையி[ல்] ஸுப்ரமண்யப் பிள்ளையார் … உடைப்பற்றக் கல்வெட்டவும் விக்கிரமசோழன் திருமாளிகைத் திருக்கை ஒட்டியில் க்ரந்தங்களிலும் தமிழ்களிலும் எழுதவேண்டுவன இவர்களில் வேண்டுவார் [பு]க்கு எழுதி ஒக்கப் பார்த்து இவை இ ஸரஸ்வதி பண்டாரத்துக்கும் கோயிலில் திருக்கை ஒட்டிக்கு முதலாக ஒடுக்கவும் செய்யக் கடவதாக வே[ண்டு]மென்று … …  ஸ்வாமிதேவர்

    7. செய்தமையில் இப்படிக்…ம் இப்படி செய்யவும் ஆரி[யன்] இராமபட்டன் …றை கைத் தீ … ளுக்குள்ளும் புகக்கடவனாகவும் பண்ணுவது எழுதினான் தி …

    ராஜெந்த்ர தே.. ….வேளான் என்றும் இப்படி திருவாய் மொழிந்தருளினார் … … இவை வீராடராய னெழுத்தென்றும் [சீ]த்தாராயனெழுத்தென்றும் இவை விசயராய னெழுத்தென்றும் இவை அங்கராய னெழுத்தென்றும் இவை தொண்டைமா னெழுத்தென்றும் ப்ரஸாத –

    8. ஞ் செய்தருளின செய்யும்படி கல்வெட்… …1

     1 Build in (புதிய கட்டடம் மறைத்துள்ளது)

    திருக்கை ஓட்டி – கோயிலில் திருமுறை ஓதுவார் மண்டபம்; சுவாமி தேவர் – அரச குரு; புகுந்த – வந்த; ஒக்க பார்த்து – ஒப்பிட்டு பார்த்து; கொற்று – தவசமாக பெறும் கூலி, daily wages received as grains; தீட்டு – எழுதிக் கொடுத்த ஓலை; பண்டாரக் கண்காணி – நூலக அதிகாரி; புடவை – ஆடை, துணி; சாமுதாயம் செய்வார் – ஊர்ப்பொது நிர்வாகம் செய்வார்; பிரசாதம் செய்தருளினபடி – அரசாணைப்படி; ஜீர்ண்ண – அழிந்து, சிதைந்த

    விளக்கம்:  திரிபுவனச் சக்கரவத்திகள் எனத் தொடங்கி கல்வெட்டு சிதைந்துள்ளதால் வேந்தனின் பெயர், ஆட்சி ஆண்டு அறியமுடிவில்லை. திருவையாறுடையனும் மதுராந்தக_ _நும், ஆளுடையார் கோமடத் திருமாளிகைக்கூறு தில்லை அம்பலப் பல்லவரைனும், கோயில் திருப்பணி செய்பவரும், ஊர்ப்பொது நிர்வாகம் செய்பவரும், கோயில் தலைமை ஏற்றிருப்பவரும், தமக்கான பங்கைப் பெறும் கோயில் உட்பிரிவு அர்ச்சகர்களுக்கும், கோயிலில் இராசாதிராசன் மாளிகை அமைந்த மேற்கு திருமாளிகையில் சுப்பிரமணிய பிள்ளையார் கோயில் இருக்கிற இடத்திற்கு வடக்காக ஏற்படுத்திய நூலகத்தில் வேந்தரின் அரசகுருவானவர் எழுதியது என்று வந்து சேர்ந்த நூல்களும், இவ்வாறு வந்து சேர்ந்த நூல்களில் சித்தாந்தாகாரம் உள்ளிட்டவையான நூல்களை நின்பை ஆட்கொண்டான்  பட்டனும், கௌதமன் உய்யக் கொண்டான் பட்டனும், கோ_ _ _ பட்டனும், தபஸ்ஸிவக _ _ சம்பந்தன், _ _ ணலூர் கிழவன் திருஞானசம்பந்தன் திருச்சிற்றப்பலமுடையான் ஆகியோர் பிரித்துக் கட்டுவதற்கும் அழிந்து சிதைந்த நூல்களை  எழுதுவதற்கும் அத்தோடு ஆளுடை_ _ _ம், இலைச்சினை_ _ _ ணியன், புல்லூருடையான் திருநீலகண்டன் நூலகத்திற்கு மெய்க்காப்பானாய் இருந்து பல நூல்களை கோர்க்க வேண்டும், இவர்களுடைய தவசக் கூலிக்கும், ஆடை முதலுக்கும் செய்யவேண்டியது யாதெனில் இவருள் நின்பை ஆட்கொண்டான் பட்டனுக்கும் கௌதமன் உய்யக் கொண்டானுக்கும் நாள் ஒன்றுக்கு தூணி அளவு நெல்லும் ஆண்டிற்கு நாலு காசும், உய்யக் கொண்டான் பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்கு அளவும் ஆண்டிற்கு காசு இரண்டும் பெறக்கடவதாக.

    _ _ _ ஆள் ஒருவர்க்கு நாள் ஒன்றுக்கு தூணி அளவு நெல்லும் ஆண்டிற்கு நாலு காசும் தரவேண்டும். இராம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு முக்குறுணி நானாழி நெல்லும் ஆண்டிற்கு காசு மூன்றரையும் தரப்படவேண்டும். புல்லூருடையான் திருநீலகண்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்கு நானாழி தரப்படவேண்டும். _ _ _ வந்த நெல்லையும் காசையும் பெற்று அப்படி வந்தவற்றை உடையார் திரிபுவன வீர ஈசுவரமுடையார் கோயில் இறைவனையும் இறைவியையும் எழுந்தருளச் செய்து வி_ _ளநாட்டு வடநாலூரான குலோத்துங்க சோழ அரசூர் நிலம் இருபத்தேழே இரண்டுமா அரைக்காணி முந்திரிகையும் இறையிலியாக வருவதை கருத்தில் கொள்ளாமல் தவிர்த்து பழையபடியே காணியாய் விஸ்வாதிகவிவேக மங்கலமென்னும் பெயராலேயே இந்நிலம் இறைவர்க்கு அந்தராயமாக தேவதான இறையிலியாக கொடுக்க இன்னிலத்திற்கு முன்னம் வருகிறபடியே 810 கல நெல்லைப் பெறும் போது இதில் மூன்றில் ஒரு பங்கை _ _ _. கோயிலில் சுப்பிரமணிய பிள்ளையார் உரிமை பெற கல்வெட்டாக வெட்டுவதற்கும் விக்கிரம சோழன் திருமாளிகையில் அமைந்த திருமறை ஓதுவார் மண்டபத்தில் சமஸ்கிருத நூல்களிலிருந்தும் தமிழ் விளக்க நூல்களிருந்தும் எழுத வேண்டியவற்றை எழுதக்கொள்ள விரும்புவோர் வந்து எழுதிக்கொள்ள, ஒத்துப் பார்த்து படியெடுக்க நூலகத்திற்கும் கோயில் திருமுறை ஓதுவார் மண்டபத்திற்கும் முதலாக கட்டணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசகுரு முன்ஏற்பாடு செய்ததால் அதன்படியே செய்ய ஆரியன் இராம பட்டனுக்கு ஆணைஓலை எழுதினான் இராசேந்திர தேவ வேளான். இதை வழிமொழிந்தார் _ _ _. இவை விராடராயன், சீத்தாராயன், விசயராயன், அங்கராயன், தொண்டைமான் ஆகியோரால் அரசாணைப்படுத்தியபடியே செய்யுமாறு கல்வெட்டு வடிக்கக்கடவது.

    பார்வை நூல்:  (A.R. B. 169 of 1961-62), இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை.

    சிதம்பரம் கோவில் இரு கல்வெட்டுகளின் மைப்படியை தந்த இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் மைசூர்க் கிளை தொல்லெழுத் துறைக்கும், கல்வெட்டை படித்து சரிபார்த்துத் தந்த திரு. இராஜகோபால் சுப்பையாவிற்கும் நன்றிகள் பல.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 30

    கதை வடிவில் பழமொழி நானூறு – 30

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 61

    கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
    அற்ற முடிப்போன் அறிவுடையான் – உற்றியம்பும்
    நீத்தநீர்ச் சேர்ப்ப! ‘இளையோனே ஆயினும்
    மூத்தோனே ஆடு மகன்’.

    பழமொழி –  ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’

    கான்பால் பாபியின் பையன் ஷுப்கருக்கு இன்னிக்கு பாராட்டு விழா. நானே ஆட்டோ பிடிச்சு கிளம்பி வந்துட்டேன். உள்ளுக்குள்ள இருக்கற  நீ இன்னும் கிளம்பலையே. உனக்குத் தெரியாதா? கேட்டுக் கொண்டே வருகிறாள் என் தோழி வசுதா. நானூறு வீடுகள் கொண்ட எங்கள் சொசைட்டியில் முன்பு குடியிருந்தவள் அவள்.

    ஆமாம்.. நேற்றைக்கு துர்கா பூசையிலேயே எல்லாரும் இதைப்பற்றி அலசிட்டாங்க. உனக்குத்தான் தெரியுமே நம்ம சொசையிட்டியில ரெண்டு குரூப் இருக்குனு. அதில நம்ம கமலா ஆன்ட்டி குரூப் நேற்றைக்கு பயங்கரமா விமர்சனம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என்னை அவசரப்படுத்தியவள் வம்பு கேட்க உள்ளே வந்து உட்கார்ந்து விட்டாள்.

    பூசை ஏற்பாடு அமக்களமா இருந்துச்சு. பத்துநாட்கள் நடக்கற பூசையில நேத்தைக்குத்தானே முதல் நாள். நம்ம சொசைட்டி பிரசிடெண்ட் ஏற்பாடாச்சே. என ஆரம்பித்து நான் அவளை அந்நிகழ்வுக்கே அழைத்துச் சென்றேன்.

    துர்கா மாதாவுக்கு இன்னிக்கு அணிவித்திருக்கிற உடை முதல் ஆபரணம் வரை எல்லாம் எங்க குடும்பச் செலவு. மாதா அருளால என் மனைவி போட்டிருக்கிறத விட அதிக விலையில அவளுக்கு வாங்கி அணிவிச்சிருக்கேன். பெருமையாக ஆரம்பித்தார். சொசைட்டி பிரசிடெண்ட் கௌரவ் தோபால்.

    இந்தத் தடவை துர்கா பூஜா பந்தலோட தீம் பசுமைங்கறதால பச்சைக்கலரிலேயே அலங்காரங்களப் பண்ணச் சொன்னேன்.  நம்ம சொசையிட்டி பொதுக்கூடமே உருமாறி இருக்கறத நீங்க கவனிச்சிருப்பீங்க. வெளியிலேந்து பார்த்தா ஏதோ ஒரு மர பொந்துக்குள்ள நுழையற மாதிரி  பெரிய ஆல மர வடிவத்தைச் செய்து வாயிலை மறைத்திருக்காங்க. உள்ள நுழைந்தவுடனே சுவர்கள் முழுக்க பறவை உருவங்களும் அவைகளோட கூடுகளையும் வச்சிருக்காங்க. தரையில் பல விலங்கு உருவங்கள். மொத்தத்துல ஒரு காட்டுக்குள்ள துர்கா நிக்கற மாதிரி இருக்கு.

    பூசை முடிஞ்சு ஷுப்கர் தீச்சட்டியப் புடிச்சு முதலில தனுசி நடனத்தை ஆரம்பிச்சான். அவன் ஆடி முடிச்சவொடனே அவன் நண்பன் பபுலு கிட்ட குடுத்துட்டான். அதுக்கப்புறம்தான் கமலா ஆன்ட்டி குரூப் வம்புபேச ஆரம்பிச்சிட்டாங்க. ஷுப்கர் ஆடி முடிச்சு தீச்சட்டிய என் பேத்தி கையிலதான் குடுத்திருக்கணும். அவளும் அவ தோழிகளும் ரொம்ப நேரமா துர்கா மாதா ஆசி வாங்க காத்திருக்காங்க. சின்ன பிள்ளைங்க போய் படிக்க வேணாமா. இவங்க எப்ப தனுசி ஆட உடுவாங்கனு காத்துக்கிட்டா நிக்க முடியும். சரி அதுதான் போகட்டும். குறைந்த பட்சம் சங்கு ஊதறதுக்காவது விட்டிருக்கணும்.அதையும் ஷுப்கர் அம்மா கான்பால் வாங்கி கையில வச்சிக்கிட்டாங்க. என்னவோ இந்த பூசையே இவங்களுக்காகப் பண்ணற மாதிரி குடும்பமே இப்படி முன்னால நின்னா எப்படி.

    பாரு பத்ராஜி குடும்பம் எவ்ளோ நேரம் காத்துக்கிட்டு நிக்கறாங்க. அவங்க பெங்காலி இல்லையா. அவங்களுக்குதானே இந்தப் பூசை முக்கியம். இதுலயும் பீஹாரி, பஞ்சாபி எல்லாரும் முன்னால வந்துட்டா நல்லாவா இருக்கு. அடுத்து வர சத் பூஜா இதுல எல்லாம் அவங்க செய்துக்க வேண்டியது தானேன்னு ஆரம்பிச்சதுதான் தாமதம். பிரசிடெண்ட் மைக் எடுத்து அமைதினு சொல்ற வரை எல்லாரும் கூடிப்பேச ஆரம்பிச்சிட்டாங்க.

    அப்பறமாதான் தோபால்ஜி ஒருவழியா எல்லாருக்கும் விளக்கிச் சொன்னார். கான்பால் அவர்களின் பையனான ஷுப்கர் தன் நண்பர்கள் உதவியோட உங்க எல்லார் பிளாக்கோட மொட்டைமாடிகளிலும், உங்க ஒவ்வொரு வீட்டு பால்கனியிலயும் செடிகள் வைக்க முயற்சி செஞ்சான். அப்ப எவ்வளவு பாடுபட்டிருப்பான். இப்ப பாக்கறதுக்கு நம்ம சொசைட்டியே நல்லா இருக்கு. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மையத்திலிருந்து அவனோட இந்தச் சேவையைப் பாராட்டி பரிசு கொடுத்தாங்க. அந்தப் பணம் பத்தாயிரத்தையும் அவன் சொசைட்டியின் நலத்துக்கே கொடுத்துட்டான். அதைப் பாராட்டிதான் நாளைக்குவிழா எடுக்கப்போறோம். எல்லாரும் அவசியம் கலந்துக்கணும்.

    அப்டின்னு அவர் உரையை முடிச்சவொடனே பாக்கணுமே கமலா ஆன்ட்டி குரூப்ல எல்லார் முகத்திலயும் எள்ளும் கொள்ளும் வெடிச்சுச்சு.

    இவங்களப் பத்தி தெரியாதா என்ன. நாளைக்கே இவங்க பேத்தி பன்னிரண்டாம் வகுப்பில் தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேல மதிப்பெண் எடுத்தான்னா சொசையிட்டி சார்புல பரிசுத்தொகை குடுப்பாங்கல்ல. அப்ப இந்த பிரசிடெண்ட்ட உட்டா வேற ஆள் இல்லனு முகஸ்துதி பாடுவாங்க.

    பாவம் அந்த ஷுப்கர் எத்தன வருசமா பாடுபட்டான். அவனுக்கு இந்த மரியாதை கம்மி தான். ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’னு பழமொழியே இருக்கே. இறுதி வரையும் ஏற்றதை முடித்துக் காணும் தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும் அப்டிங்கறதுதான் அதோட பொருள்.

    அம்மா மதுரை நகர் சங்கப் புலவியே… கிளம்பலாமா என வசுதாவைக் கலாய்த்துக்கொண்டே விழாவிற்குச் செல்ல வீட்டைப் பூட்டுகிறேன். .

    பாடல் 62

    நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
    காட்டிக் களைதும் எனவேண்டா – ஓட்டி
    இடம்பட்ட கண்ணாய்! ‘இறக்கும்மை யாட்டை
    உடம்படுத்து வெளவுண்டார் இல்’.

    ‘இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்’

    அவன் நம்ம சோலிக்கு சரிப்பட்டு வரமாட்டாம்னு சொல்லிக்கிட்டே கெடக்கேன். செவி குடுத்து கேக்கானான்னு பாரு. ஏல…. போக்கத்தவனே. நான் இங்ஙன கெடையா கெடந்து கத்திக்கிட்டு கெடக்கேன். நீ உம்பாட்டுக்கு போய்க்கிட்டே இருந்தா எப்டி. ஏல…..செத்த நில்லு… என் ராசாப்பய நான் சொன்னா கேளு அய்யா……  ஆத்தா எப்பமும் உன் நல்லதுக்குத் தான் சொல்லுவேனாம். கத்த ஆரம்பிச்ச ஆச்சி.. கோவத்த அடக்கிக்கிட்டு குழைந்து பேசறாங்க.

    கொஞ்ச நேரமா நான் என் எதிர்வீட்ட கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஆச்சிக்கு வயல் வயக்காடு இதுதான் மொத்த வாழ்க்கையும். அவ மகன் சோலையப்பனும் விவசாயம் தான் பாக்கறான். நல்ல நாணயமான பையன். கல்லூரி வரைக்கும் படிச்சுட்டு திரும்பவும் விவசாயத்துக்கே வந்துட்டாம்னு ஆச்சிதான் அப்பப்ப பொலம்பும். அவங்களுக்கு என்ன பிரச்சினையோ. நாம நம்ம பொழைப்பப் பாப்போம். தீர்மானத்துடன் எழுந்து குளிக்கப் போனேன். குளிச்சிட்டு வந்த பெறகும் ஆச்சி தனக்குத்தானே பேசிக்கிட்டு என் வீட்டுப்பக்கத்துல இருக்கற வைக்கல்படைப்ப ஒழுங்கு படுத்திக்கிட்டு நிக்கறாங்க. பாவம்னு நினைச்சு என்ன ஆச்சினு கேக்கறேன்.

    ஒண்ணுமில்ல ராசா. இப்பம் கொரோனாவால பிள்ளைகளெல்லாம் பள்ளிக்கூடம் போகறதில்ல. எப்டி வெரட்டி உட்டாலும் கேக்காம வைக்கல்படைப்பு மேல ஏறி ஏறி குதிச்சு உருளுதுங்க. அதான் வைக்கல் பூராவும் சிதறிக்கிடக்கு. ஒழுங்கு படுத்துக்கிட்டு நிக்குதேம். அவள் முடித்துவிட்டாள். சரி. காலையில என்ன பிரச்சினைனு சொல்ல விருப்பமில்ல போலன்னு நினைச்சு திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்.

    யய்யா… . சோலிகெடக்கோ. ஆமா உனக்கு ஆயிரம் சோலி கெடக்கும். பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்குடுக்கணுமா இல்லையா. நீ போய்வானு சொல்லறாங்க. நான் கிராமப்புற பள்ளியில் வேலைபாக்கறதால பாடங்களப் பதிவு பண்ணி வாட்ஸஅப்ல அனுப்பிக்கிட்டு இருக்கேன். ஏற்கனவே தொலைக்காட்சி வழி கல்வி கற்பிப்பதற்காக பதிவு செஞ்சு அனுப்பிட்டோமே. அதெல்லாம் சொன்னா இந்த ஆச்சிக்குப் புரியாது.இருந்தாலும் பள்ளிக்கூட வாத்தியார்னு எம்மேல இவங்களுக்கு ரொம்ப மரியாதை. அதுமட்டுமில்லாம தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்னு ஒரு பரிவும் தான். அப்பப்ப சொந்தத்துல பொண்ணுகிண்ணு இருக்கா. பாக்கட்டுமான்னு கேப்பாங்க.

    எனக்கு இப்ப வேற சோலி எதுவுமில்ல. உங்களுக்கு ஏதும் உதவி வேணுமா.., ஆரம்பித்தேன். ஒண்ணுமில்ல. கொழக்கட்ட அவிச்சேன். சூடா ரெண்டு வந்து சாப்பிடுனு அழைப்பு விடுக்கிறாங்க. சரினு சொல்லி வீட்டுக்குள்ள போனேன்.

    கருப்பட்டி, தேங்காய், பாசிபருப்பு எல்லாம் சேந்த பூரணம். நல்லாயிருக்கா. இந்த இன்னும் ரெண்டு போட்டுக்கோ. பனங்கிழங்கு அவிச்சு வச்சிருக்கேன் நாலு எடுத்துக்கிட்டு போ. எம்மவன்தான் புத்திகெட்டு விருட்டுனு சாப்புடாம போயிட்டான். நீயும் எம்புள்ளமாதிரிதான் சாப்புடு. உபசரிக்கிறாள்.

    சாப்பிட்டுக்கொண்டே என்ன பிரச்சினைனு கேக்கறேன். ஒண்ணுமில்ல. அவன்கூட கல்லூரியில படிச்ச புள்ள ஒருத்தனுக்கு வேலை வேணும்னு சொன்னான். நானும் நம்ம மில்லுல வேலை வாங்கித் தரப்போறாம்னு நினைச்சு சரின்னுட்டேன். இப்பந்தான் தெரியுது. இவன் அவன கூடமாட ஒத்தாசைக்கு வச்சிக்கிடப் போறானாம். அந்தப் பிள்ளை வயக்காட்டுச் சோலிக்கு ஒத்துவருவாம்னு எனக்குத் தோணல. மெல்லிசா உடம்புல கதியே இல்ல. ஏதும் உக்காந்து பாக்குத வேலைக்குதான் அவன் லாயக்கு படுவான். அதச் சொன்னா இவனுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வருது. இவன்தான் ஊருக்கு உபகாரியாச்சே. காலையில நீ பாத்துக்கிட்டு இருந்தயில்ல. எப்டி முறுக்கிக்கிட்டு போனான்.

    கவலைப்படாதீங்க ஆச்சி.  உங்க மவன்கிட்ட நான் பேசிப்பாக்கறேன். அப்போதைக்கு அவளைச் சமாதானப்படுத்தினேன். மதியம் பார்க்கும்போது சோலையப்பனுடன் அந்த நண்பனும் வந்திருந்தான். சன்னல் வழியா அவன் உருவத்தைப் பார்த்தபோது  காலையில ஆச்சி சொன்னது நினைவுக்கு வருது

    முறத்த உசத்தி புடிச்சிக்கிட்டு காத்து வீசுத திசையில போரடிச்ச நெல்லை தூத்துவிட்டோம்னா உமி எப்டி பறக்குமோ அப்டி அந்தப் பயலும் நல்ல காத்துல திசை தெரியாம பறந்துடுவாம். கதியத்த பய…  உண்மதான். எவ்வளவு ஒல்லியா இருக்கான் இந்தப் பையன். இதுதான் சந்தர்ப்பம். சோலையப்பன் சீக்கிரமா சாப்பிட்டு எழுந்தரிச்சிட்டான். அந்தப்பையன் இன்னும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கான். ஆச்சியோட குரல் கேக்குது.

    சோத்த அளஞ்சுக்கிட்டே இருக்காதப்பா நல்லா அள்ளி வாயில போடு. இளம்பிள்ளை. நாலு வகைய அள்ளிவச்சு வஞ்சகமில்லாம முழுங்கணும். அப்பந்தான் உடம்பு தேறும்.

    நான் சோலையப்பனை வெளியே அழைத்துப் பேச ஆரம்பித்தேன். நீங்க உங்க நண்பனுக்கு ஏற்ற ஏதாவது அலுவலக வேலைக்கு டிரை பண்ணச் சொல்லலாமே. எதுக்குத் தேவையில்லாம இங்க கூட்டிக்கிட்டு வந்து….. நான் முடிப்பதற்குள் அவன் ஆரம்பித்தான்.

    இல்ல அண்ணே. அவனுக்கு அப்பா கிடையாது. என்னய மாதிரிதான். சொத்து சொகமும் ரொம்ப இல்ல. சம்பாதிச்சே ஆகணும்னு நிலைமை. விவசாயம் பழகிக்கிட்டாம்னா சொந்தக்கால்ல நிக்கலாம்னு நினைச்சிருப்பான் போல. அதான் எங்கிட்ட உதவி கேட்டான். எனக்கும் தெரியும் அவனுக்கு உடல் உழைப்பு ஒத்துவராதுனு. ஆனா மொதல்ல சேத்துக்கிட்டு பிறகு மெதுமெதுவா புரிய வைக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள என் ஆத்தா கத்தி ஊரைக்கூட்டுது.

    உங்க ஆத்தா சொல்றது நியாயம்தான். ‘இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்’ னு பழமொழியே இருக்கே. நான் ஆரம்பிச்சேன். ஆட்டோட இரத்தத்த சமைக்கணும்னு நினைக்கறவங்க அதுகிட்ட பேசி சம்மதிக்க வச்ச பிறகா சாப்பிடுவாங்க. அதுமாதிரிதான் உன் நண்பனச் சேத்துக்கிட்டு அவனுக்கு தகுதியில்லைனு தெரியப்படுத்தி பிறகு விலக்கறத விட மொதலிலேயே நீக்கிடலாமே. சோலையப்பன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான். நல்ல முடிவு எடுப்பான்னு நம்பி நானும் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குள் போனேன்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(328)

    குறளின் கதிர்களாய்…(328)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(328)

    கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
    யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.

    – திருக்குறள் – 130 (அடக்கமுடைமை)

    புதுக் கவிதையில்...

    கற்கவேண்டியவற்றைக் கற்று
    மனதினில்
    கோபம் பிறக்காமல் காத்து,
    அடக்கமாக வாழும்
    ஆற்றல் உடையவனை
    அடைந்திடும் காலம்பார்த்து
    அறக்கடவுளும்
    அவன் வழியில் நுழைந்து
    அவனுக்காகக் காத்திருக்கும்…!

    குறும்பாவில்...

    கல்வி கற்று சினம்காத்து
    அடக்கமுடன் வாழ்வபனிடம் சென்றடைய
    அறம் அவன்வழியில் காத்திருக்கும்…!

    மரபுக் கவிதையில்...

    கல்வியைக் கற்றுத் தேர்ச்சிபெற்றே
    கடுஞ்சினம் நெஞ்சில் வந்திடாமல்
    நல்வழி அடக்கம் தனைப்பேணி
    நலமுடன் வாழும் வகைதெரிந்த
    நல்லவன் தனது நிலையறிந்து
    நாடியே அவனைச் சேர்ந்திடவே
    நல்லறத் தேவதை காத்திருந்தே
    நாடிடும் அவன்தன் வழியினையே…!

    லிமரைக்கூ..

    கல்வியுடன் சினமிலா அடக்கம்
    கொண்டொருவன் வாழ்ந்தால் அவனை நாடி
    அறமதும் அவன்வழி நடக்கும்…!

    கிராமிய பாணியில்...

    வேணும் வேணும் அடக்கம் வேணும்
    வாழ்க்கயில ஒசந்திருக்க
    வேணும் வேணும் அடக்கம் வேணும்..

    படிக்கவேண்டியதெல்லாம் படிச்சி
    மனசுல கோவமே வராமப் பாத்து
    அடக்கத்தோட வாழத் தெரிஞ்சவன
    அறக்கடவுளும் தேடி
    அவன் வழியில காத்திருக்குமே..

    அதால
    வேணும் வேணும் அடக்கம் வேணும்
    வாழ்க்கயில ஒசந்திருக்க
    வேணும் வேணும் அடக்கம் வேணும்…!

    Share
  • சேவடி தொழுது நின்றால் தெரிசனம் தருவான் கந்தன்!

    சேவடி தொழுது நின்றால் தெரிசனம் தருவான் கந்தன்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    வேலினைக் கையில் ஏந்தி
    வெற்றியைத் தந்த கந்தன்
    மூலமாய் நின்ற மூர்த்தி
    பொறியிலே வந்த கந்தன்
    கார்த்திகைப் பெண்கள் ஏந்த
    கந்தனாய் ஆன தெய்வம்
    கலியுகம் காக்க என்றும்
    கருணையாய் நிற்கும் தெய்வம்!

    ஆணவம் அழித்த கந்தன்
    அகவிருள் அகற்றும் கந்தன்
    பேணிடும் அடியார்க் கெல்லாம்
    பேரருள் ஈயும் கந்தன்
    நாமெலாம் விரும்பி நிற்கும்
    நல்லையில் உறையும் கந்தன்
    சேவடி தொழுது நின்றால்
    தெரிசனம் தருவான் கந்தன்!

    சூரரை வதைத்த கந்தன்
    சூழ்ச்சியை அறுக்கும் கந்தன்
    மாயிருள் மாயை போக
    வந்தனன் ஒளியாய் கந்தன்
    ஆழமாம் பிறவி நோயை
    அகற்றிட மருந்தாய் நிற்கும்
    வேலுடை கந்தன் பாதம்
    பற்றுவார் வீடு காண்பார்!

    Share
  • முத்தைத்தரு பாடல் – சுதா மாதவன் குரலில்

    முத்தைத்தரு பாடல் – சுதா மாதவன் குரலில்

    அருணகிரிநாதர் அருளிய ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ பாடலைச் சுதா மாதவன் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என்முகம் பாரய்யா, சண்முகனே!

    என்முகம் பாரய்யா, சண்முகனே!

    என்முகம் பாரய்யா, சண்முகனே – தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற திருமதி சுப்புலட்சுமி மோகன் அவர்களின் உருக்கமான பாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 285

    படக்கவிதைப் போட்டி – 285

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (22.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21 | வேதா கோபாலன்

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21 | வேதா கோபாலன்

    திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இன்று குருப்பெயர்ச்சி.. உங்க ராசிக்கான பலன்களைப் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இழப்பு (சிறுகதை)

    இழப்பு (சிறுகதை)

    வசுராஜ்

    நான் தான் ஜானகி. இந்தத்  திண்ணையில் உட்கார்ந்து இரண்டு மாமாங்கம் ஆறது. இது  திருச்சி பக்கத்திலுள்ள அழகான கிராமம்.  கல்யாணமானதிலிருந்து  30  வருஷம் இங்கு தானிருந்தேன். அப்புறம் பிள்ளைகளோடும் பெண்களோடும் இப்ப வரை இருந்துண்டிருக்கேன். ரொம்ப நாட்களுக்கப்புறம் குடும்பத்தோடு  சொந்தக்காரா  கல்யாணத்துக்கு இங்க வந்திருக்கோம். இரட்டை வரிசை வீடுகளும் கம்பீரமான  கோபுரமும் மனதுக்கு இதமாய் இருக்கு. எல்லார் வீட்டு வாசலிலும் பெரிது பெரிதாய்க் கோலம். புள்ளி வைத்த கோலம்,  தாமரை இதழ்கள் விரியும் இழைக் கோலம், மணைக்கோலம் எனப் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கு. கண் பார்வை தான் கொஞ்சம் மங்கிண்டு வருது. முன்னாடின்னா கோவில் வாசல்ல யாராவது வந்தால் கூட யாருன்னு கரெக்டாத் தெரியும். இப்ப நாலு ஆத்துக்கு முன்னாடி வந்தாத் தான் யாருன்னு தெரியறது.

    பொண்ணோட பேரன் ஆதர்ஷ் பெங்களூரிலிருந்து வந்திருக்கான்.  குழந்தையோட அம்மா அதான் என் பேத்தி அவனுக்குச் சாப்பாடு ஊட்ட அவன் பின்னாலேயே ஓடிண்டிருக்கா. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எல்லாம் கிடைக்கிறது. அதனால் அருமை தெரியலை. குழந்தைக்குன்னு தனியா வாட்டர் பாட்டில் வாங்கறா. அதையும் கொதிக்க வைச்சுக் குடுக்கறா. சாப்பிட புதுசு புதுசா ஏதேதோ குடுக்கறா. ஒரு பெரிய பெட்டி நிறைய குழந்தைக்கு மட்டுமே என்னென்னவோ எடுத்துண்டு வந்திருக்கா. எல்லாரும் ஒண்ணே ஒண்ணு  பெத்துக்கறா. அதைப் பொத்திப் பொத்தி  வளக்கறா. அதுல தப்பில்லையே. எங்க காலம் மாதிரிப் பெத்தது பாதியைப் பறி குடுக்கற நிலை இப்ப இல்லை.

    நானும் 6 பெத்து அதுல இரண்டைப் பறி குடுத்தேன். முதல் பெண் நன்றாய் இருந்தாள். இரண்டாவது புள்ளை பிறக்கும் போதே ரொம்ப நோஞ்சானாகப் பிறந்து ஒரே வாரத்தில் புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேர்ந்து விட்டது. மத்ததெல்லாம் பார்க்க என்னைப் போல் சுமாராய் இருந்தாலும் ஆரோக்கியமாய் இருந்தது. அந்தக் கடைசிப் புள்ளை தாசரதி தான் கொள்ளை அழகு. கிட்டத்தட்ட இந்தக் கொள்ளுப்பேரன் ஆதர்ஷ் மாதிரி இருப்பான். பிறந்த போது கிருஷ்ண  விக்ரகம் மாதிரி இருந்தான். கொழு கொழுன்னு தான் 10 மாசம் வரை இருந்தான். யார் கண் பட்டுதோ திடீர்னு ஒரு காய்ச்சல் வந்தது. பக்கத்து டவுண் திருச்சில உள்ள அரசாங்க  ஆஸ்பத்தரில கொண்டு போய்க் காட்டினோம். அங்க குழந்தையை அட்மிட் பண்ணச் சொல்லிட்டா.  குழந்தை கூட ஒருத்தர் தான் இருக்க முடியும்கறதால நான் மட்டும் இருந்தேன். இவர் ஆத்துக்கும் ஆஸ்புத்தரிக்கும் அலைஞ்சுண்டிருந்தார். மத்த குழந்தைகளை எச்சுமு  அம்மங்கா தான் பாத்துண்டிருந்தா.

    குழந்தைக்குக் காய்ச்சல் முதல்ல அனலா அடிச்சது. அப்புறம் 2 நாள்ல கொஞ்சம் குறைய ஆரம்பிச்சது. ரொம்ப பலகீனமாக இருந்ததால டிரிப்ஸ் ஏத்தினா. அரசாங்க ஆஸ்பத்திரி என்பதால டாக்டருக்குப் படிக்கறவா கூட வந்து வந்து பார்ப்பா. எல்லாருக்கும் குழந்தையை ரொம்ப பிடிச்சுப்  போயிட்டதால தினமும் வந்து பார்த்துட்டுப் போவா. குழந்தையைக் கொஞ்சுவா. துவண்டு போன குழந்தை அவாளைப் பார்த்து சிரிச்சான். குழந்தை சிரிக்க ஆரம்பிச்சதும் எங்களுக்கும் நம்பிக்கை வந்துடுத்து. “இந்த டிரிப்ஸ் முடிஞ்சதும் இதோட நிறுத்திடலாம். இனிமேல் கஞ்சி குடுக்கலாம்”னு  நர்ஸ் சொன்னா. அதை சொல்ல மறந்துட்டேனே,  குழந்தைக்குக் காய்ச்சலோட வயித்துப்போக்கும் இருந்தது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சுண்டு வந்தது. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டா.

    அதுனால இவர் ஆத்துக்குப் போயிட்டுக் காலையில குழந்தைக்கும் எனக்கும் உடுத்திக்கத் துணியும்  பணமும் எடுத்துண்டு வரேன்னு இந்தக் கிராமத்துக்கு வந்தார். இந்தக் கிராமத்துல தான் அப்ப நாங்க  இருந்தோம். நான் மறுநாள் ஊருக்குப் போகப் போறோம்னு பக்கத்து பெட் மாமி கிட்ட சொல்லிண்டிருந்தேன்.  அவா பெண்ணுக்குக் கீழ விழுந்து தலையில அடிபட்டு அவாளும்  10 நாளா ஆஸ்பத்திரில இருந்தா. பாவம் பொண்ணு பொழைச்சதே பெருசு என்றார்கள். அவாத்து மாமா தான் எங்களுக்கு நல்ல உதவியாய் இருந்தார். அந்தக் குழந்தைக்கு சீக்கிரம் சரியாகணும்னு வேண்டிண்டேன். அந்த மாமி “நீங்க இருந்தது எனக்கு எங்க அக்கா கூட இருக்கற மாதிரி இருந்தது. நீங்க போயிட்டா எனக்குக் கஷ்டமாய் இருக்கும். உங்க குழந்தைக்கு சரியாகி ஆத்துக்குப் போயிட்டா நல்லது தானே” என்று சொல்லிக்கொண்டிருந்த போதே, “அய்யோ குழந்தை!” எனக் கத்தினாள். நான் அவா பொண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தால் என் குழந்தைக்குக் கையும் காலும் உதறிக் கொண்டிருந்தது.  ஓடிப் போய் நர்சைக் கூப்பிட்டாள் அந்த மாமி. நான் குழந்தையை அழுத்திப் பிடிச்சுண்டே “தாசரதி தாசரதி” எனக் கூப்பிட்டுப் பார்த்தேன். குழந்தை முழியே வித்தியாசமாய் இருந்தது.

    நர்ஸ் வந்து டிரிப்ஸை நிறுத்தினாள். அப்ப இருந்த டாக்டர் வந்தார். அவரைப் பார்த்தால் படிச்சுண்டிருப்பவர் போல இருந்தது. அவர் நர்ஸ் கிட்ட ஜன்னி வந்திருக்கு என ஏதோ மெதுவாய் சொல்லிண்டிருந்தார். நான் எல்லாத் தெய்வங்களையும் கெஞ்சிண்டிருந்தேன் 10 நிமிஷம் என்னென்னவோ பண்ணிப் பார்த்தார். எந்தத் தெய்வத்துக்கும் நான் கேட்டது காதுல விழலை போல. குழந்தையின் அசைவு கொஞ்சம் கொஞ்சமாய் நின்றுவிட்டது.   டாக்டர் “என்னால எதுவும் பண்ண முடியலை. எனக்கே ரொம்பக் கஷ்டமாயிருக்கு”ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். நர்ஸ் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். எனக்குக் கொஞ்ச நேரம் உலகமே நின்னுட்ட மாதிரி இருந்தது.

    “கடவுளே! எனக்குத் தைரியத்தைக் கொடு. அவன் உயிரைத்தான் கொடுக்கல” என்று வேண்டிக்கொண்டேன். அடுத்தது என்ன பண்ணணும்னு யோசிச்சேன். எப்படியும் உடனே ஊருக்குப் போயிடணும்னு முடிவு பண்ணினேன். பக்கத்து பெட் மாமாவும் மாமியும் குழந்தையைப் பார்த்து அழுது கொண்டிருந்தார்கள். நான் மாமா கிட்ட “ஒரு டாக்ஸி பிடிச்சுண்டு வர முடியுமா?” ன்னு கேட்டேன். அப்பெல்லாம் இந்த மாதிரி ஆம்புலன்ஸ் வசதி இருந்த மாதிரித் தெரியலை. ஏற்கெனவே இந்த மாதிரி ஒருத்தர் முந்தின நாள் செத்துப் போன போது ஆஸ்பத்திரில எதுவும் ஏற்பாடு பண்ண மாட்டோம்னு சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் தான் அவரிடம் டாக்ஸி பத்திக் கேட்டேன் அவர் தயங்கினார். செத்துப் போன குழந்தையை எப்படி டாக்ஸியில் ஏத்துவான்னு யோசிச்சார் போல. நான் சொன்னேன், “குழந்தை உயிரோட இல்லைன்னு டாக்ஸிக்காரர் கிட்ட சொல்லாதீங்கோ. நான் குழந்தை தூங்கற மாதிரி வைச்சுக்கறேன்”னு சொன்னேன். அவர் பிரமித்துப் போய்ப் பார்த்தார். மாமி தான் உடனே சுதாரிச்சுண்டு “டாக்ஸி பிடிச்சுண்டு வந்துட்டு நீங்களும் கூடப் போயிட்டு வாங்கோ”ன்னு சொன்னா. மாமா போய் டாக்ஸி கொண்டு வந்துட்டார். நான் இறுக்கமான முகத்துடன் குழந்தையுடன் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். மாமா முன்னாடி உட்கார்ந்து கொண்டார். டிரைவர் சின்னப் பையனாய்த் தெரிந்தான்.

    “என்னம்மா, குழந்தைக்கு?” ன்னு கேட்டான். மாமா “ஜுரம். இப்ப பரவாயில்லை. மருந்து கொடுத்தது நன்னாத் தூங்கறான்” னு சொன்னார். “தூங்கறான்”னு சொல்லும் போது அவர் குரல் தழுதழுத்தது. குழந்தை மடியில் சில்லென்று இருந்தான். நான் கண்ணை மூடிக்கொண்டு “தெய்வமே! இந்தக் குழந்தையை எனக்குக் கொடுக்காமல் இருந்திருக்கலாம்” என்று மருகிக்கொண்டிருந்தேன். “இவ்வளவு அழகான குழந்தை, எனக்குக் கொடுத்தது தப்புன்னு நினைச்சயா? மத்த குழந்தைகள் மாதிரி இதுவும் சுமாராய் இருந்தால் என்னிடம் இருந்திருக்குமோ?” என நினைத்துக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டேன். டிரைவர் ஏதோ பேசிக்கொண்டு வந்தான். மாமாவும் கேட்பது போல் நடித்துக் கொண்டிருந்தார். ½ மணி நேரப் பயணம் மிக நீண்டதாகத்  தெரிந்தது.

    வீட்டு வாசலுக்கு வந்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை. குழந்தை கனத்த மாதிரி இருந்தது. மாமா போய்க் கதவைத் தட்டினார். நான் குழந்தையுடன் இறங்கினேன். எங்க ஆத்துக்காரர் வந்து கதவைத் திறந்ததும் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்தது அழுகையாய் வெடித்தது. என்னால் அதற்கு மேல் அடக்கவே முடியவில்லை. கதறிவிட்டேன். என் அழுகைச் சத்தம் கேட்டு எதிர்த்தாத்து மாமி, பக்கத்து ஆத்து பானு எல்லாரும் வந்துட்டா. அழுகையோடே டிரைவருக்குப் பணம் கொடுக்கச் சொன்னேன். அம்மங்கா வந்து பார்த்து விட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள். என் ஆத்துக்காரர் பித்துப் பிடிச்சாப்புல நின்னுண்டிருந்தார். அவருக்கு நடப்பதெல்லாம் நிஜமா, கனவான்னு தெரியலை.

    அம்மங்கா வந்து பணம் கொடுத்தாள். டிரைவர் கண் கலங்க நின்றார். கூட வந்த மாமா, என் ஆத்துக்காரரிடம் “மாமா, பகவான் கருணையே இல்லாமல் குழந்தையை எடுத்துண்டுட்டார். மாமி இடிதாங்கி மாதிரி உக்காண்டு வந்தா” என்றார் அழுதுகொண்டே. என் ஆத்துக்காரர் அப்போது தான் உணர்வு வந்தவராய்க் குழந்தையை வாங்கி நெஞ்சோடு சேர்த்துண்டு அழ ஆரம்பிச்சார். டிரைவரிடம் “மன்னிச்சுடுப்பா. எனக்கு வேற வழி தெரியலை” என்றேன் அழுதுண்டே. அவன் சொன்னான் “இந்தக் குழந்தையைப் பார்த்தால் தெய்வக் குழந்தை மாதிரி இருக்கு. இவ்வளவு நேரம் துக்கத்தை அடக்கிட்டு வந்த உங்களைப் பார்த்தால் தெய்வத்தைப் பார்த்த மாதிரி இருக்கு. உங்க கிட்டக் காசு வாங்கக் கூடாது. பெட்ரோலுக்கு மட்டும் வாங்கிக்கறேன்” என்று சொல்லி மீதியை வைத்துவிட்டுப் போனான்.  மாமாவும் அழுதுகொண்டே கிளம்பினார்.

    அப்புறம் ஊரே வந்து அழுதுவிட்டுப் போனது. அவனைத் தூக்கிண்டு போகும் போது எங்கள் குடும்பத்தின் கதறல் அந்த எமனுக்கே கேட்டிருக்கும். நாளாக ஆக, இந்தக் குழந்தைகளையாவது  ஆயுசோட வைத்திரு என்று பிரார்த்தனை பண்ணினேன். பகவானும் இரக்கப்பட்டு இப்போது வரை என் குழந்தைகள், பேரன், பேத்தி எல்லாரையும் நன்னா வச்சிருக்கான். பேத்தியின் குழந்தை முக ஜாடை என் தாசரதி மாதிரி இருக்கறதால இன்னிக்குப் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து உங்க கிட்ட புலம்பிட்டேன். எல்லாரும் ஷேமமா இருக்கப் பெருமாளைப் பிரார்த்திச்சுக்கறேன்.

    ஆதர்ஷ் ஓடி வந்து மடியில் உட்கார்ந்தான். “தாசரதி” என அணைத்துக்கொண்டேன்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 43

    பழகத் தெரிய வேணும் – 43

    நிர்மலா ராகவன்

    குழந்தைகளுக்குச் சுதந்திரம் எதற்கு?

    “அந்தப் பையனைப் பார்! எவ்வளவு சமர்த்தாக தனக்கு வேண்டும் என்கிறதைத் தானே கேட்டு வாங்கிக்கிறான்!”

    உணவுக்கடையொன்றில் அடுத்த மேசையிலிருந்த சிறுவனைக் காட்டி, தன் பேத்தியின் சாமர்த்தியம் இன்மையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. பெண்ணுக்குச் சுமார் எட்டு வயதிருக்கும்.

    நானும் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். தனக்கு என்ன வேண்டும் என்று அவள் சொல்வதற்கே அவளுடன் வந்திருந்த அம்மாவும் பாட்டியும் அனுமதிக்கவில்லை. `இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்!’ என்று அவர்களே தீர்மானித்து, ஒவ்வொரு பிடியின்போதும், ஏதாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார்கள்.

    விருப்பப்படி சாப்பிடுவதற்குக்கூட விடாது, அவளுடைய சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டால், புதிய இடத்தில் எதைச் செய்யத்தான் அவளுக்குத் துணிச்சல் எழும்?

    எப்படி யோசிப்பது என்று கற்றுக்கொடுப்பதைவிட்டு, `இப்படித்தான் யோசிக்கவேண்டும்!’ என்றா கட்டாயப்படுத்துவார்கள்?

    `சிறு வயதிலிருந்தே இவனுக்குச் சுயமாக எதுவும் செய்துகொள்ளத் தெரியாது! நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம்!’ என்று சலித்துக்கொள்ளும் பெற்றோர் தம்மீதுதான் தவறு என்று உணர்வதில்லை.

    இப்போக்கைத்தான், `சொல்லிக்கொடுத்த வார்த்தையும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாட்களுக்கு வரும்?’ என்று மறைமுகமாகக் கண்டிக்கிறார்கள்.

    `வெளியே போறியா? முகக் கவசம் எடுத்துண்டு போ!’ தற்போது அடிக்கடி கேட்கும் வாசகம். அப்போது எழும் எரிச்சலில், `பெரியவர்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது?’ என்று ஏறுமாறாக நடக்கத்தான் தோன்றும்.

    சொல்வதைவிட செய்துகாட்டுவதுதான் பயனளிக்கும்.

    `உன்னால் முடியும்!’ என்று நம்பினால், சிறுவர்களும் அதை நம்பிவிடுவார்கள்.

    கதை

    இரண்டு வயதாக இருந்தபோது, என் பேரனை குழந்தைகளுக்கான `ஜிம்’மிற்கு அழைத்துப் போயிருந்தேன். அங்கு நான்கடி உயரத்தில் ஏணியைப்போன்ற ஒரு சாதனம். ஆனால், படிகள் கிடையாது. இரு பக்கமும் கால் விரல்களை மட்டும் சிறு பள்ளத்தில் பதித்துக்கொண்டு ஏறவேண்டும்.

    பயத்தால் குழந்தையின் கண்கள் விரிந்தன.

    “ஏறு. விழமாட்டே. நான் பிடிச்சுக்கறேன்!” என்று தைரியம் அளித்து, அவன் உடலைச்சுற்றி ஒரு கையைப் போட்டு இறுக்கி, இன்னொரு கையால், “இப்போ இங்கே கால் வைக்கணும்,’ என்று காட்டி, ஒவ்வொரு அடியாகப் பழக்கினேன். ஏறி முடித்ததும், பாராட்டு.

    அடுத்த முறை நான் அவனைப் பிடித்துக்கொள்ளப்போக, “எனக்குத் தெரியும்,” என்று என் கையை விலக்கினான்.

    ஓரிரு முறை செய்துகாட்டி, மேற்பார்வை மட்டும் பார்த்தால் சிறுவர்களின் தைரியம் பெருகுகிறது. புதிய காரியங்களில் ஈடுபடும் துணிச்சல் வரும்.

    இது புரிந்துதான் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தம் குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே சிறு, சிறு வேலைகளைக் கொடுத்துப் பழக்குகிறார்கள்.

    சமையலறையில், வேகவைத்த உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகியவைகளின் தோலை உரிப்பது என்று ஆரம்பித்து, பெண் குழந்தைகள் சிறுகச் சிறுக சமையல் கற்றுக்கொள்கிறார்கள்.

    எந்த வேலையையும், `இப்படிச் செய்!’ என்று அதிகாரமாகக் கூறுவதைவிட, `நான் இப்படிப் பண்ணுவேன். நீ உன் சௌகரிப்படி செய்!’ என்று விட்டுக்கொடுத்தால், நம்மைப்போலவே செய்வார்கள்! நம்மீது மதிப்பும் பெருகும்.

    குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள்போல் `நார்மலாக’ இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. (நம்மில் எத்தனை பேர் அப்படி இருக்கிறோம்?).

    தம் விளையாட்டுச் சாமான்களை தரை பூராவும் பரப்புவது அவர்களுக்குப் பிடித்தமான சமாசாரம்.

    `குப்பை போடாதே!’ என்று கண்டிப்பதைவிட்டு, `இந்த ஓரமா வெச்சுக்கோ,’ என்று ஒரு மூலையை ஒழித்துக்கொடுக்கலாம்.

    சில தாய்மார்கள் உடனுக்குடனே அந்த விளையாட்டுச் சாமான்களைத் திரட்டி வைத்துவிடுவார்கள். சொல்வதைக் கேட்காவிட்டால் தண்டனை. தாயை எதிர்க்கவும் முடியாத நிலையில், அவளிடம் அன்பைவிட அச்சம்தான் அதிகமாக எழும்.

    சிறுவயதில் எல்லாவற்றிற்கும் பயந்து வளர்பவன் முரடனாகிறான் — `நான் பெற்ற பயம் இவ்வையகமும் அடைக!’ என்பதுபோல். இல்லையேல், பயந்தாங்கொள்ளியாக ஆகிறான்.

    குழந்தைகளை அஞ்சவோ, அழவோ வைத்தால் ஒருவருடைய பலம் கூடிவிடுவது போன்ற உணர்வு ஏற்படலாம். அதற்காக சுயநலம் கொண்டவர்களாக ஆகலாமா?

    மகிழ்ச்சியாக வளரும் குழந்தைகளே நல்லவர்களாக வளர்கிறார்கள்.

    சுதந்திரத்திற்கு வயதில்லை

    ஒரு குழந்தையைத் புத்திசாலியாகவும் தைரியசாலியாகவும் வளர்ப்பது வளர்க்கிறவர்களுக்கும் உற்சாகமானதாக இருக்கும். அவர்களும் கூடவே வளர்வார்கள்.

    “உனக்கு இப்போ ஹார்லிக்ஸ் வேணுமா, மைலோ வேணுமா?” ஒன்றரை வயதானதும், என் குழந்தைகளைக் கேட்பேன். “இப்போ என்ன குடிக்கப்போறே?”

    நான் சொல்வது புரியாது, குழந்தை விழிக்கும்.

    “இது வெள்ளையா இருக்கு, பாரு! இன்னொண்ணு ப்ரௌன்,” என்று சந்தடி சாக்கில் வண்ண பேதத்தையும் சொல்லிக்கொடுப்பேன்.

    சற்று யோசித்துவிட்டு, “இது. இல்லை, இது!” என்று ஏதாவது ஒன்றைக் காலை வேளையில் குடிக்கத் தேர்ந்தெடுப்பார்கள்.

    ஒரு முறை, வெள்ளையான பானத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள் என் பன்னிரண்டு வயது மகள்.

    அவளுடைய தம்பி கால்களை உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். ஏனெனில், அவனுடைய தேர்வு மதிக்கப்படவில்லை.

    அவளைத் திட்டுவதுபோல் பாவனை செய்துவிட்டு, “இதிலேயே கொஞ்சம் மைலோ கலந்து கொண்டுவா!” என்றேன், ரகசியக்குரலில்.

    “சகிக்காது,” என்றாள். ஆனாலும் அப்படியே செய்தாள்.

    குழந்தை மகிழ்ச்சியுடன் குடித்தான். அவனைப் பொறுத்தவரை, காலையில் குடிக்க அவன் தேர்ந்தெடுத்தது கோக்கோ கலராக இருக்கும். அந்த வயதில், ருசியைப்பற்றிய அக்கறையோ, அறிவோ கிடையாது.

    என் மகளுக்கு ஒரு வயதானபோது, இதே வளர்ப்பு முறையை நான் கையாண்டேன்.

    அதைப் பார்த்த என் தாய், “இது என்ன, பெரிய மனுஷி? இதுகிட்ட கேக்கறே?” என்றாள்.

    “சுயமா யோசிக்க கத்துக் குடுக்கறேன்,” என்றேன். அவர்கள் சம்பந்தப்பட்ட சமாசாரங்களுக்கு அவர்கள்தாம் பொறுப்பு என்று மறைமுகமாக உணர்த்துவதாகத்தான் நான் நினைத்தேன்.

    ஆனால் அம்மாவோ, “ஒன் குழந்தைகளுக்குப் பைத்தியம்தான் பிடிக்கப்போறது!” என்றாள்!

    `அன்பு’ என்ற பெயரில் எட்டு வயதானபின்னும் தன் மகளைத் தூக்கி வைத்துக்கொள்ளும் தாய் அறிவதில்லை, அவளுக்குத் தீங்கு இழைக்கிறோம் என்று.

    பதினோரு மாதங்களே ஆன என் மகளின் கையைப் பிடித்து நான் தெருவில் நடந்தபோது, இந்தியாவில் பெண்கள் சிரித்தார்கள், ஏதோ பெரிய வேடிக்கையைக் கண்டுவிட்டதுபோல்.

    “இது ரொம்ப அநியாயம்!” என்று அவர்கள் சொல்லிக்கொண்டு போனது கேட்டது.

    நான் `கொடுமைப்படுத்துவதை’ பொறுக்கமுடியாத ஒருவர், “தூக்கிக்குங்கம்மா,” என்று சிபாரிசு செய்தார்.

    நடக்க ஆரம்பித்ததுமே, குழந்தைகள் ஓடுவார்கள். அடிக்கடி விழுந்தாலும், அடுத்த முறையும் ஓடுவார்கள். பதட்டப்படாது, `இதுதான் அவர்கள் பொழுதுபோக்கு!’ என்று விடவேண்டியதுதான்

    தாய் இரக்கம் காட்டும்போதுதான் சுயபரிதாபம் எழுகிறது. கவனிக்காததுபோல் இருந்தால் கீழே விழுந்தாலும், தாமே எழுந்துவிடுவார்கள்.

    எல்லா வயதிலும் `வீழ்ச்சி’ என்று ஒன்று இருக்கிறது. அப்போது அயர்ந்துபோய், கீழேயே கிடக்க வேண்டாம், மீண்டும் எழ வேண்டும் என்ற பாடத்தைச் சிறுவயதிலேயே புகட்டலாமே!

    Share