சேவடி தொழுது நின்றால் தெரிசனம் தருவான் கந்தன்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா 

வேலினைக் கையில் ஏந்தி
வெற்றியைத் தந்த கந்தன்
மூலமாய் நின்ற மூர்த்தி
பொறியிலே வந்த கந்தன்
கார்த்திகைப் பெண்கள் ஏந்த
கந்தனாய் ஆன தெய்வம்
கலியுகம் காக்க என்றும்
கருணையாய் நிற்கும் தெய்வம்!

ஆணவம் அழித்த கந்தன்
அகவிருள் அகற்றும் கந்தன்
பேணிடும் அடியார்க் கெல்லாம்
பேரருள் ஈயும் கந்தன்
நாமெலாம் விரும்பி நிற்கும்
நல்லையில் உறையும் கந்தன்
சேவடி தொழுது நின்றால்
தெரிசனம் தருவான் கந்தன்!

சூரரை வதைத்த கந்தன்
சூழ்ச்சியை அறுக்கும் கந்தன்
மாயிருள் மாயை போக
வந்தனன் ஒளியாய் கந்தன்
ஆழமாம் பிறவி நோயை
அகற்றிட மருந்தாய் நிற்கும்
வேலுடை கந்தன் பாதம்
பற்றுவார் வீடு காண்பார்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க