குறளின் கதிர்களாய்…(328)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(328)
கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.
– திருக்குறள் – 130 (அடக்கமுடைமை)
புதுக் கவிதையில்...
கற்கவேண்டியவற்றைக் கற்று
மனதினில்
கோபம் பிறக்காமல் காத்து,
அடக்கமாக வாழும்
ஆற்றல் உடையவனை
அடைந்திடும் காலம்பார்த்து
அறக்கடவுளும்
அவன் வழியில் நுழைந்து
அவனுக்காகக் காத்திருக்கும்…!
குறும்பாவில்...
கல்வி கற்று சினம்காத்து
அடக்கமுடன் வாழ்வபனிடம் சென்றடைய
அறம் அவன்வழியில் காத்திருக்கும்…!
மரபுக் கவிதையில்...
கல்வியைக் கற்றுத் தேர்ச்சிபெற்றே
கடுஞ்சினம் நெஞ்சில் வந்திடாமல்
நல்வழி அடக்கம் தனைப்பேணி
நலமுடன் வாழும் வகைதெரிந்த
நல்லவன் தனது நிலையறிந்து
நாடியே அவனைச் சேர்ந்திடவே
நல்லறத் தேவதை காத்திருந்தே
நாடிடும் அவன்தன் வழியினையே…!
லிமரைக்கூ..
கல்வியுடன் சினமிலா அடக்கம்
கொண்டொருவன் வாழ்ந்தால் அவனை நாடி
அறமதும் அவன்வழி நடக்கும்…!
கிராமிய பாணியில்...
வேணும் வேணும் அடக்கம் வேணும்
வாழ்க்கயில ஒசந்திருக்க
வேணும் வேணும் அடக்கம் வேணும்..
படிக்கவேண்டியதெல்லாம் படிச்சி
மனசுல கோவமே வராமப் பாத்து
அடக்கத்தோட வாழத் தெரிஞ்சவன
அறக்கடவுளும் தேடி
அவன் வழியில காத்திருக்குமே..
அதால
வேணும் வேணும் அடக்கம் வேணும்
வாழ்க்கயில ஒசந்திருக்க
வேணும் வேணும் அடக்கம் வேணும்…!