நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 61

கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
அற்ற முடிப்போன் அறிவுடையான் – உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப! ‘இளையோனே ஆயினும்
மூத்தோனே ஆடு மகன்’.

பழமொழி –  ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’

கான்பால் பாபியின் பையன் ஷுப்கருக்கு இன்னிக்கு பாராட்டு விழா. நானே ஆட்டோ பிடிச்சு கிளம்பி வந்துட்டேன். உள்ளுக்குள்ள இருக்கற  நீ இன்னும் கிளம்பலையே. உனக்குத் தெரியாதா? கேட்டுக் கொண்டே வருகிறாள் என் தோழி வசுதா. நானூறு வீடுகள் கொண்ட எங்கள் சொசைட்டியில் முன்பு குடியிருந்தவள் அவள்.

ஆமாம்.. நேற்றைக்கு துர்கா பூசையிலேயே எல்லாரும் இதைப்பற்றி அலசிட்டாங்க. உனக்குத்தான் தெரியுமே நம்ம சொசையிட்டியில ரெண்டு குரூப் இருக்குனு. அதில நம்ம கமலா ஆன்ட்டி குரூப் நேற்றைக்கு பயங்கரமா விமர்சனம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என்னை அவசரப்படுத்தியவள் வம்பு கேட்க உள்ளே வந்து உட்கார்ந்து விட்டாள்.

பூசை ஏற்பாடு அமக்களமா இருந்துச்சு. பத்துநாட்கள் நடக்கற பூசையில நேத்தைக்குத்தானே முதல் நாள். நம்ம சொசைட்டி பிரசிடெண்ட் ஏற்பாடாச்சே. என ஆரம்பித்து நான் அவளை அந்நிகழ்வுக்கே அழைத்துச் சென்றேன்.

துர்கா மாதாவுக்கு இன்னிக்கு அணிவித்திருக்கிற உடை முதல் ஆபரணம் வரை எல்லாம் எங்க குடும்பச் செலவு. மாதா அருளால என் மனைவி போட்டிருக்கிறத விட அதிக விலையில அவளுக்கு வாங்கி அணிவிச்சிருக்கேன். பெருமையாக ஆரம்பித்தார். சொசைட்டி பிரசிடெண்ட் கௌரவ் தோபால்.

இந்தத் தடவை துர்கா பூஜா பந்தலோட தீம் பசுமைங்கறதால பச்சைக்கலரிலேயே அலங்காரங்களப் பண்ணச் சொன்னேன்.  நம்ம சொசையிட்டி பொதுக்கூடமே உருமாறி இருக்கறத நீங்க கவனிச்சிருப்பீங்க. வெளியிலேந்து பார்த்தா ஏதோ ஒரு மர பொந்துக்குள்ள நுழையற மாதிரி  பெரிய ஆல மர வடிவத்தைச் செய்து வாயிலை மறைத்திருக்காங்க. உள்ள நுழைந்தவுடனே சுவர்கள் முழுக்க பறவை உருவங்களும் அவைகளோட கூடுகளையும் வச்சிருக்காங்க. தரையில் பல விலங்கு உருவங்கள். மொத்தத்துல ஒரு காட்டுக்குள்ள துர்கா நிக்கற மாதிரி இருக்கு.

பூசை முடிஞ்சு ஷுப்கர் தீச்சட்டியப் புடிச்சு முதலில தனுசி நடனத்தை ஆரம்பிச்சான். அவன் ஆடி முடிச்சவொடனே அவன் நண்பன் பபுலு கிட்ட குடுத்துட்டான். அதுக்கப்புறம்தான் கமலா ஆன்ட்டி குரூப் வம்புபேச ஆரம்பிச்சிட்டாங்க. ஷுப்கர் ஆடி முடிச்சு தீச்சட்டிய என் பேத்தி கையிலதான் குடுத்திருக்கணும். அவளும் அவ தோழிகளும் ரொம்ப நேரமா துர்கா மாதா ஆசி வாங்க காத்திருக்காங்க. சின்ன பிள்ளைங்க போய் படிக்க வேணாமா. இவங்க எப்ப தனுசி ஆட உடுவாங்கனு காத்துக்கிட்டா நிக்க முடியும். சரி அதுதான் போகட்டும். குறைந்த பட்சம் சங்கு ஊதறதுக்காவது விட்டிருக்கணும்.அதையும் ஷுப்கர் அம்மா கான்பால் வாங்கி கையில வச்சிக்கிட்டாங்க. என்னவோ இந்த பூசையே இவங்களுக்காகப் பண்ணற மாதிரி குடும்பமே இப்படி முன்னால நின்னா எப்படி.

பாரு பத்ராஜி குடும்பம் எவ்ளோ நேரம் காத்துக்கிட்டு நிக்கறாங்க. அவங்க பெங்காலி இல்லையா. அவங்களுக்குதானே இந்தப் பூசை முக்கியம். இதுலயும் பீஹாரி, பஞ்சாபி எல்லாரும் முன்னால வந்துட்டா நல்லாவா இருக்கு. அடுத்து வர சத் பூஜா இதுல எல்லாம் அவங்க செய்துக்க வேண்டியது தானேன்னு ஆரம்பிச்சதுதான் தாமதம். பிரசிடெண்ட் மைக் எடுத்து அமைதினு சொல்ற வரை எல்லாரும் கூடிப்பேச ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பறமாதான் தோபால்ஜி ஒருவழியா எல்லாருக்கும் விளக்கிச் சொன்னார். கான்பால் அவர்களின் பையனான ஷுப்கர் தன் நண்பர்கள் உதவியோட உங்க எல்லார் பிளாக்கோட மொட்டைமாடிகளிலும், உங்க ஒவ்வொரு வீட்டு பால்கனியிலயும் செடிகள் வைக்க முயற்சி செஞ்சான். அப்ப எவ்வளவு பாடுபட்டிருப்பான். இப்ப பாக்கறதுக்கு நம்ம சொசைட்டியே நல்லா இருக்கு. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மையத்திலிருந்து அவனோட இந்தச் சேவையைப் பாராட்டி பரிசு கொடுத்தாங்க. அந்தப் பணம் பத்தாயிரத்தையும் அவன் சொசைட்டியின் நலத்துக்கே கொடுத்துட்டான். அதைப் பாராட்டிதான் நாளைக்குவிழா எடுக்கப்போறோம். எல்லாரும் அவசியம் கலந்துக்கணும்.

அப்டின்னு அவர் உரையை முடிச்சவொடனே பாக்கணுமே கமலா ஆன்ட்டி குரூப்ல எல்லார் முகத்திலயும் எள்ளும் கொள்ளும் வெடிச்சுச்சு.

இவங்களப் பத்தி தெரியாதா என்ன. நாளைக்கே இவங்க பேத்தி பன்னிரண்டாம் வகுப்பில் தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேல மதிப்பெண் எடுத்தான்னா சொசையிட்டி சார்புல பரிசுத்தொகை குடுப்பாங்கல்ல. அப்ப இந்த பிரசிடெண்ட்ட உட்டா வேற ஆள் இல்லனு முகஸ்துதி பாடுவாங்க.

பாவம் அந்த ஷுப்கர் எத்தன வருசமா பாடுபட்டான். அவனுக்கு இந்த மரியாதை கம்மி தான். ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’னு பழமொழியே இருக்கே. இறுதி வரையும் ஏற்றதை முடித்துக் காணும் தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும் அப்டிங்கறதுதான் அதோட பொருள்.

அம்மா மதுரை நகர் சங்கப் புலவியே… கிளம்பலாமா என வசுதாவைக் கலாய்த்துக்கொண்டே விழாவிற்குச் செல்ல வீட்டைப் பூட்டுகிறேன். .

பாடல் 62

நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
காட்டிக் களைதும் எனவேண்டா – ஓட்டி
இடம்பட்ட கண்ணாய்! ‘இறக்கும்மை யாட்டை
உடம்படுத்து வெளவுண்டார் இல்’.

‘இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்’

அவன் நம்ம சோலிக்கு சரிப்பட்டு வரமாட்டாம்னு சொல்லிக்கிட்டே கெடக்கேன். செவி குடுத்து கேக்கானான்னு பாரு. ஏல…. போக்கத்தவனே. நான் இங்ஙன கெடையா கெடந்து கத்திக்கிட்டு கெடக்கேன். நீ உம்பாட்டுக்கு போய்க்கிட்டே இருந்தா எப்டி. ஏல…..செத்த நில்லு… என் ராசாப்பய நான் சொன்னா கேளு அய்யா……  ஆத்தா எப்பமும் உன் நல்லதுக்குத் தான் சொல்லுவேனாம். கத்த ஆரம்பிச்ச ஆச்சி.. கோவத்த அடக்கிக்கிட்டு குழைந்து பேசறாங்க.

கொஞ்ச நேரமா நான் என் எதிர்வீட்ட கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஆச்சிக்கு வயல் வயக்காடு இதுதான் மொத்த வாழ்க்கையும். அவ மகன் சோலையப்பனும் விவசாயம் தான் பாக்கறான். நல்ல நாணயமான பையன். கல்லூரி வரைக்கும் படிச்சுட்டு திரும்பவும் விவசாயத்துக்கே வந்துட்டாம்னு ஆச்சிதான் அப்பப்ப பொலம்பும். அவங்களுக்கு என்ன பிரச்சினையோ. நாம நம்ம பொழைப்பப் பாப்போம். தீர்மானத்துடன் எழுந்து குளிக்கப் போனேன். குளிச்சிட்டு வந்த பெறகும் ஆச்சி தனக்குத்தானே பேசிக்கிட்டு என் வீட்டுப்பக்கத்துல இருக்கற வைக்கல்படைப்ப ஒழுங்கு படுத்திக்கிட்டு நிக்கறாங்க. பாவம்னு நினைச்சு என்ன ஆச்சினு கேக்கறேன்.

ஒண்ணுமில்ல ராசா. இப்பம் கொரோனாவால பிள்ளைகளெல்லாம் பள்ளிக்கூடம் போகறதில்ல. எப்டி வெரட்டி உட்டாலும் கேக்காம வைக்கல்படைப்பு மேல ஏறி ஏறி குதிச்சு உருளுதுங்க. அதான் வைக்கல் பூராவும் சிதறிக்கிடக்கு. ஒழுங்கு படுத்துக்கிட்டு நிக்குதேம். அவள் முடித்துவிட்டாள். சரி. காலையில என்ன பிரச்சினைனு சொல்ல விருப்பமில்ல போலன்னு நினைச்சு திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்.

யய்யா… . சோலிகெடக்கோ. ஆமா உனக்கு ஆயிரம் சோலி கெடக்கும். பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்குடுக்கணுமா இல்லையா. நீ போய்வானு சொல்லறாங்க. நான் கிராமப்புற பள்ளியில் வேலைபாக்கறதால பாடங்களப் பதிவு பண்ணி வாட்ஸஅப்ல அனுப்பிக்கிட்டு இருக்கேன். ஏற்கனவே தொலைக்காட்சி வழி கல்வி கற்பிப்பதற்காக பதிவு செஞ்சு அனுப்பிட்டோமே. அதெல்லாம் சொன்னா இந்த ஆச்சிக்குப் புரியாது.இருந்தாலும் பள்ளிக்கூட வாத்தியார்னு எம்மேல இவங்களுக்கு ரொம்ப மரியாதை. அதுமட்டுமில்லாம தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்னு ஒரு பரிவும் தான். அப்பப்ப சொந்தத்துல பொண்ணுகிண்ணு இருக்கா. பாக்கட்டுமான்னு கேப்பாங்க.

எனக்கு இப்ப வேற சோலி எதுவுமில்ல. உங்களுக்கு ஏதும் உதவி வேணுமா.., ஆரம்பித்தேன். ஒண்ணுமில்ல. கொழக்கட்ட அவிச்சேன். சூடா ரெண்டு வந்து சாப்பிடுனு அழைப்பு விடுக்கிறாங்க. சரினு சொல்லி வீட்டுக்குள்ள போனேன்.

கருப்பட்டி, தேங்காய், பாசிபருப்பு எல்லாம் சேந்த பூரணம். நல்லாயிருக்கா. இந்த இன்னும் ரெண்டு போட்டுக்கோ. பனங்கிழங்கு அவிச்சு வச்சிருக்கேன் நாலு எடுத்துக்கிட்டு போ. எம்மவன்தான் புத்திகெட்டு விருட்டுனு சாப்புடாம போயிட்டான். நீயும் எம்புள்ளமாதிரிதான் சாப்புடு. உபசரிக்கிறாள்.

சாப்பிட்டுக்கொண்டே என்ன பிரச்சினைனு கேக்கறேன். ஒண்ணுமில்ல. அவன்கூட கல்லூரியில படிச்ச புள்ள ஒருத்தனுக்கு வேலை வேணும்னு சொன்னான். நானும் நம்ம மில்லுல வேலை வாங்கித் தரப்போறாம்னு நினைச்சு சரின்னுட்டேன். இப்பந்தான் தெரியுது. இவன் அவன கூடமாட ஒத்தாசைக்கு வச்சிக்கிடப் போறானாம். அந்தப் பிள்ளை வயக்காட்டுச் சோலிக்கு ஒத்துவருவாம்னு எனக்குத் தோணல. மெல்லிசா உடம்புல கதியே இல்ல. ஏதும் உக்காந்து பாக்குத வேலைக்குதான் அவன் லாயக்கு படுவான். அதச் சொன்னா இவனுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வருது. இவன்தான் ஊருக்கு உபகாரியாச்சே. காலையில நீ பாத்துக்கிட்டு இருந்தயில்ல. எப்டி முறுக்கிக்கிட்டு போனான்.

கவலைப்படாதீங்க ஆச்சி.  உங்க மவன்கிட்ட நான் பேசிப்பாக்கறேன். அப்போதைக்கு அவளைச் சமாதானப்படுத்தினேன். மதியம் பார்க்கும்போது சோலையப்பனுடன் அந்த நண்பனும் வந்திருந்தான். சன்னல் வழியா அவன் உருவத்தைப் பார்த்தபோது  காலையில ஆச்சி சொன்னது நினைவுக்கு வருது

முறத்த உசத்தி புடிச்சிக்கிட்டு காத்து வீசுத திசையில போரடிச்ச நெல்லை தூத்துவிட்டோம்னா உமி எப்டி பறக்குமோ அப்டி அந்தப் பயலும் நல்ல காத்துல திசை தெரியாம பறந்துடுவாம். கதியத்த பய…  உண்மதான். எவ்வளவு ஒல்லியா இருக்கான் இந்தப் பையன். இதுதான் சந்தர்ப்பம். சோலையப்பன் சீக்கிரமா சாப்பிட்டு எழுந்தரிச்சிட்டான். அந்தப்பையன் இன்னும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கான். ஆச்சியோட குரல் கேக்குது.

சோத்த அளஞ்சுக்கிட்டே இருக்காதப்பா நல்லா அள்ளி வாயில போடு. இளம்பிள்ளை. நாலு வகைய அள்ளிவச்சு வஞ்சகமில்லாம முழுங்கணும். அப்பந்தான் உடம்பு தேறும்.

நான் சோலையப்பனை வெளியே அழைத்துப் பேச ஆரம்பித்தேன். நீங்க உங்க நண்பனுக்கு ஏற்ற ஏதாவது அலுவலக வேலைக்கு டிரை பண்ணச் சொல்லலாமே. எதுக்குத் தேவையில்லாம இங்க கூட்டிக்கிட்டு வந்து….. நான் முடிப்பதற்குள் அவன் ஆரம்பித்தான்.

இல்ல அண்ணே. அவனுக்கு அப்பா கிடையாது. என்னய மாதிரிதான். சொத்து சொகமும் ரொம்ப இல்ல. சம்பாதிச்சே ஆகணும்னு நிலைமை. விவசாயம் பழகிக்கிட்டாம்னா சொந்தக்கால்ல நிக்கலாம்னு நினைச்சிருப்பான் போல. அதான் எங்கிட்ட உதவி கேட்டான். எனக்கும் தெரியும் அவனுக்கு உடல் உழைப்பு ஒத்துவராதுனு. ஆனா மொதல்ல சேத்துக்கிட்டு பிறகு மெதுமெதுவா புரிய வைக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள என் ஆத்தா கத்தி ஊரைக்கூட்டுது.

உங்க ஆத்தா சொல்றது நியாயம்தான். ‘இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்’ னு பழமொழியே இருக்கே. நான் ஆரம்பிச்சேன். ஆட்டோட இரத்தத்த சமைக்கணும்னு நினைக்கறவங்க அதுகிட்ட பேசி சம்மதிக்க வச்ச பிறகா சாப்பிடுவாங்க. அதுமாதிரிதான் உன் நண்பனச் சேத்துக்கிட்டு அவனுக்கு தகுதியில்லைனு தெரியப்படுத்தி பிறகு விலக்கறத விட மொதலிலேயே நீக்கிடலாமே. சோலையப்பன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான். நல்ல முடிவு எடுப்பான்னு நம்பி நானும் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குள் போனேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.