அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 23 (முது பெண்டிர்)

0

ச. கண்மணி கணேசன் (ப. நி.),
முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

அகப்பாடல்களில் முதுசெம் பெண்டிர், முதுவாய்ப் பெண்டிர் என இருதிறத்துப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் முதுபெண்டிர் பற்றியதாக மட்டுமே இக்கட்டுரை அமைகிறது.

இல்லறப் பெண்டிர்

முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்றுச் ‘செம்முது பெண்டிர்’ (நற்.- 288) எனவும்; ‘முதுசெம் பெண்டிர்’ (அகம்.- 86) எனவும் அழைக்கப்படுன்றனர். இது கற்பு நெறியில் வழுவாமல் நிற்பவர் என்னும் பொருள்படுகிறது. கற்பின் அடையாளம்  ஆகிய அருந்ததியைச் செம்மீன் என அழைப்பது போன்று; இங்கும் கற்பொழுக்கம் தொடர்பாகவே செம்மை எனும் அடைமொழி பயின்று வருகிறது.

முதுபெண்டு ஆன தலைவி

அகப்பாடல்களில் தலைவி தலைமைப் பாத்திரமாக அமைகிறாள். ஆனால் அவள் இல்லற ஒழுக்கத்தில் நிலைத்திருந்து கருவுயிர்த்த பிறகு முதுபெண்டு என்று பெயர் பெறுவதைத் தலைவன் கூற்றாகப் ‘புதல்வன்’ பற்றிய  கட்டுரையில் கண்டோம்.

“புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித்
திதலை அல்குல் முதுபெண்டாகித்
துஞ்சுதியோ மெல் அஞ்சில் ஓதி எனப்” (நற்.- 370)

பாராட்டும் தலைவன் பேச்சில் மகிழ்ச்சி, பெருமிதம், கேலி போன்றவற்றை மட்டுமே உணர முடிகிறது. முதுபெண்டு ஆவதற்கு உரிய தகுதி இல்லற நெறி நின்று புதல்வனைப் பெறுதல் என்றும் புரிகிறது.

பண்டைத் தமிழகத்தில் மங்கைப் பருவத்துப் பெண் மணம் புரிந்து மகவைப் பெற்று விட்டாலே முதுபெண்டு ஆகிவிடுகிறாள் என்று புரிகிறது.

தான் முதுபெண்டாகி விட்டதால் தலைவன் தன்னை விடுத்துப் பிற பெண்களை நாடுவதாகத் தெரிந்தும் பிற இல்லறக் கடமைகளைச் செய்வதில் தன் கவனத்தைத் திருப்பும் தலைவி ஒருத்தியைக் காண்கிறோம். கணவனின் புறத்தொழுக்கம் மனச்சோர்வு அளிப்பினும் அச்சோர்விற்குள் ஆழ்ந்துவிடவோ; யார் வாயிலாகவும் ஆறுதல் கேட்கவோ அவள் விரும்பவில்லை. ஒரு எருமைக் காரானின் செயல் மூலம் தன் மனதைப் புரிய வைக்கிறாள்.

“இருமருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம்பயிர் ஆரும்” (குறு.-325)

எனும் வருணனையில்; ஈன்று அணிமை உடைய எருமைக்காரான் இடம் பெறுகிறது. அதன் கன்றை உழவன் கட்டிப் போட்டுச் சென்று விட்டான். எருமை மேயச் செல்ல வேண்டும்; ஆனால் கன்றைப் பிரிந்து தூரமாகச் செல்ல விரும்பாமல் தான்  இருக்கும் இடத்தில் உள்ள;  பால்பிடித்த பருவத்துக் கதிர்கள் உள்ள பயிரையே மேய்கிறது. பல நுட்பமான பொருட்களை உள்ளடக்கிய உவமை இது.

அகன்று செல்லாமல் இருந்த இடத்திலேயே  எருமைக்  காரான் பசியாற இயலும். பால் பிடித்த கதிர்களைக் கூட உணவாகக் கொள்ள இயலும். அதனால் ஏற்படும்  இழப்பிற்கு யாரும் கவலைப்படவில்லை. எருமைக்காரானை யாரும் விரட்டவில்லை. அந்த அளவிற்கு வளமான நன்செய் உள்ள நாடு என்பது; இங்கு  செல்வம் மிகுந்த மனைவாழ்க்கையைக்  குறிக்கிறது. இல்லறக் கடமைகளுக்கு இச்சூழல் மிகவும் ஏற்றது.

கன்றின் அருகிருக்கும் காரானுக்கு தன் தாய்மைப் பிணைப்பே முதற்கடமை ஆகிறது; தலைவிக்கும் பெற்ற மகவைப் பேணுவதே முதற்கடமை ஆகிறது.

உழவன் கன்றைப் பாதுகாப்பு கருதிக் கட்டிப் போட்டுள்ளான்; குடும்பம் என்ற அமைப்பு தலைவிக்கும் அவளது மகவுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்கிறது.

தலைவனின் புறத்தொழுக்கம் பற்றிய கவலை மனதை அரித்தாலும்; அதை முதன்மைப்படுத்தத் தலைவி விரும்பவில்லை. தன்னை ஆற்றுவதாக எண்ணிப் பேச்செடுத்த தோழியை;

“துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி” (மேலது)

எனத் தடை போடுகிறாள். துன்பத்திற்கு இடையில் தலைவன் ஒழுக்கம் பற்றிப் பேசுவது மேலும் துன்பத்தை மட்டுமே கொடுக்க வல்லது என்பது அவள் கருத்து. அதுமட்டுமல்ல;

“திருமனைப் பல கடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய எமக்கே” (மேலது)

எனத் தனது தகுதிப்பாட்டையும் நிலைநிறுத்துகிறாள். திருமணம் என்ற பந்தத்திற்கு உரிய கடமைகள் பல. குழந்தை வளர்ப்பு, மூத்தோர் பேணல், விருந்து புறந்தரல், மனை பேணல், அன்றாடக் கடமைகள், கிளை தாங்கல் என எத்தனையோ பொறுப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் ஆற்ற வேண்டிய தான் ஒரு பெருமுது பெண்டாகி விட்டமையைத் தன் வாயாலேயே கூறுகிறாள்.

சிறுபாத்திரத் தகுதி பெறும் முதுபெண்டிர்

தலைவன் வாயில் வேண்டித் தோழியிடம்  பேசும் போது; அவனது திருமண நாள் நிகழ்வுகளும் அப்போது முதுசெம் பெண்டிர் வாழ்த்தியதும் நினைவூட்டப் படுகின்றன. முன்னர் நிகழ்ந்ததை நினைத்துப் பார்க்கும் இவ்வுத்திக்கு மேலைநாட்டு இலக்கியக் கொள்கை பின்னோக்கு உத்தி (flashback) என்று பெயர் கொடுக்கிறது. இருபதாம் நூற்றாண்டு இலக்கியக் கொள்கையாகக் கருதப்படும் இவ்வுத்தி நம் தொகைநூலில் இடம் பெறுவதைப் பெருமைக்கு உரியதாகக் கொள்ளலாம்.

“உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வர்ப் பயந்த திதலை அவ்வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோர்ப் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம்” (அகம்.- 86)

நடந்த முறையைத் தோழியிடம் கூறுகிறான்.

தனக்கும் தலைவிக்கும் நடந்த திருமணம்; அதில் மங்கல நீராட்டு ஒரு முக்கியச் சடங்கு. தலைக்கு மேல் தாங்கிய குடத்தை உடையவராகவும்; புதிய மண்டையில்; அதாவது  சுடுமண்ணாலான வட்டமான கலத்தில் அச்சடங்கிற்குரிய சுண்ணம், பூ, நெல் முதலிய பிற பல மங்கலப் பொருட்களை ஏந்தியவராகவும் முதுபெண்டிர் நின்று இருந்தனர். முன்னர் நீருள் சொரிய வேண்டியவை இவை; பின்னர்  சொரிய வேண்டியவை இவை என்று தம்முள் பேசிக் கொண்டே வரிசையாகக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் மக்களைப் பெற்ற வாழ்வரசிகள் நால்வர் திதலை அவ்வயிற்றை உடையவராய்; அணிகலன்கள் அணிந்தவராய்த்  தலைவியை நீராட்டி வாழ்த்தினராம்.

இன்றும் நல்ல காரியம் நடக்குமிடத்தில் காலமாற்றத்தைக் காரணம் காட்டி ‘ஸ்டைல்’ என்ற பெயரில் காதணி, கழுத்தணி இல்லாமல் பெண்கள் முன்னின்றால் ‘காது மூளி கழுத்து மூளியாக நிற்கக் கூடாதென முந்தைய தலைமுறையைச் சேர்ந்தோர் விலக்குவது வழக்கமே.

மகப்பேறால் ஏற்பட்ட திதலை (stretch marks) மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. அம்மகளிர் மட்டுமே தலைவியை நீராட்டும் தகுதி உடையவர் எனக் கருதப்பட்டனர்.  ‘புதல்வர்ப் பயந்த’ சிறப்பினை உடைய நால்வர் என்று விதந்தோதி இருப்பினும்; அவர்கள்  கற்புநெறி வழுவா முதுசெம் பெண்டிருடன் இருக்கும் சூழல் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

‘பொதுசெய் கம்பலை’ என்ற தொடருக்கு உரையாசிரியரிடம் விளக்கம் இல்லை. மங்கல நிகழ்ச்சியின் போது இன்று போடப்படும் குலவை என்று பொருள்  கொள்ளலாமோ?!

‘கற்பு நெறியிலிருந்து வழுவாமல் இல்லறத்திற்கு நலன் விளைக்கும் செயல்களுக்கு உதவி; உன்னை மனைவியாகப் பெற்றவன் மனம் நிறையும் படியாக; என்றும் அவனைப் பிணைந்திருக்கக் கடவாய்’ என்று முதுசெம் பெண்டிர் வாழ்த்தி மங்கல நீராட்டியதால்; அந்நீரில் கலந்திருந்த அலரியும் நெல்லும் தலைவியின் கூந்தலில் ஆங்காங்கு சிக்கிச் சேர்ந்து தோன்றினவாம். தொடர்ந்து முதலிரவு வரை தலைவன் பின்னோக்கி நினைக்கிறான்; பேசுகிறான்.

அன்னைக்குத் துணை ஆகும் முதுபெண்டிர்

நுதல் பசந்திருந்த மகளின் நோய் பற்றி அறியக் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் கேட்கிறாள் அன்னை. அவளைப் பொறுத்தவரை மகள் இன்னும் அறியாப் பருவத்தினள். தனித்துக் கேட்டறிய ஒருப்படாத மனத்தினளாய்; அக்கம்பக்கத்தில் இருந்த செம்முது பெண்டிரை உடன் வைத்துக் கொண்டு; நெல்லைச் சுளகில் போட்டு; மகளை அதன் முன்னர் நிறுத்தி; அவள் செய்யும் முன்னேற்பாட்டில் முதுபெண்டிர் இடம் பெற்றுள்ளனர். இங்கே அவர்கள் பேசவில்லை.

“நன்னுதல் பரந்த பசலை கண்டு அன்னை
செம்முது பெண்டிரொடு நென்முன் நிறீஇக்
கட்டிற் கேட்கும் ஆயின்” (நற்.- 288)

எனத் தோழியும் தலைவியும் தம்முள் பேசிக் கொள்கின்றனர்.

உரையாசிரியர் ‘செம்முது பெண்டிர்’ கட்டுவிச்சியைக் குறிக்கிறது என்கிறார். ஆனால் அப்பொருள் பொருந்தவில்லை. கட்டுவிச்சி தொகை இலக்கியத்தில்  ‘முதுவாய்ப் பெண்டெ’னக் குறிக்கப் படுகிறாள். அத்துடன் ‘செம்-‘ என்னும் அடைமொழிக்குரிய விளக்கத்தைக் கட்டுரையின் முற்பகுதியில் கண்டோம். எனவே ‘செம்முது பெண்டிர்’ கற்பு நெறி வழுவாது; புதல்வர்ப் பயந்து இல்லறம் நடத்தும் மங்கலப் பெண்டிராகிய வாழ்வரசிகள் ஆவர்.

முடிவுரை

முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்றுச் ‘செம்முது பெண்டிர்’ எனவும்; ‘முதுசெம் பெண்டிர்’ எனவும் அழைக்கப்படுவது கற்பு நெறியில் வழுவாமல் நிற்கும் புதல்வர்ப்  பயந்த  பெண்டிர் என்பதைக் குறிக்கிறது.  மங்கைப் பருவத்துப் பெண் மணம் புரிந்து மகவைப் பெற்று விட்டாலே முதுபெண்டு ஆகிவிடுகிறாள்.  தலைவன் வாயில் வேண்டித் தோழியிடம்  பேசும் போது; முதுபெண்டிர் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர். உரையாசிரியர் ‘செம்முது பெண்டிர்’ கட்டுவிச்சியைக் குறிக்கிறது என்று  சொல்லும்  பொருள் பொருந்தவில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *