புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

ஒருமுறை சொல்வதே உரைக்கழகு!

முன்னுரை

‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்பார் நம்மாழ்வார். அதனைச் சற்று மாற்றி ‘இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன்’ என்று வைத்துக் கொண்டால் இந்தக் கட்டுரையின் சாரம் நன்கு விளங்கும். ‘சுருங்கச் சொல்லல்’ என்பது நூலுக்கு ஓதப்பட்ட பத்து அழகுகளில் ஒன்று. ‘கூறியது கூறல்’ என்பது நூலுக்கு இருக்கக் கூடாது என விலக்கப்பட்ட குற்றங்கள் பத்தினுள் ஒன்று. அழகையும் குற்றத்தையும் திசைகளைப்போலப் பத்தாக வைத்த பாங்கு எண்ணத்தக்கது. பரிமேலழகர் தம் உரையில் ஒருமுறை கூறியதை மறுமுறை கூறுவதில்லை. அவ்வாறு கூற வேண்டிய நிலை ஏற்படின் முன்பே கூறப்பட்டது என வாளாச் சுட்டிச் சென்றுவிடுகிறார். இதனால் நினைவாற்றல் உள்ளவர்க்கே என்பதும் அத்தகையோரே நூல்பயிலத் தகுதியானவர் என்பதும் அவற்கே அந்நூற்பயிற்சி பயன்படும் என்பதும் பெறப்படும். ஒவ்வொரு முறையும் முன்னர்க் கூறியதையே பின்னரும் எடுத்தோதுவது கற்பாருக்குச் சலிப்பை ஏற்படுத்துவதுடன் நூலுள் அல்லது உரையுள் இருக்கக் கூடாத குற்றங்களைத் தெரிந்தே செய்வது போலாகிவிடும் என்று அவர் கருதியிருக்கலாம். கூறியது கூறலாகிய குற்றம் தவிர்க்கும் பரிமேலழகரின் உரைத்திறனை முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை தொடர்கிறது.

உழைப்பவர்க்கன்றி உரை புரியாது

உத்திவகை முப்பத்திரண்டு எனப்படுவது போலப் புத்திவகையும் பல உள. மண்புத்தி, மரபுத்தி, கல்புத்தி, மூங்கில் புத்தி, எண்ணெய் புத்தி என்று ஐந்து வகையாகப் பகுப்பர். (வடநூலார் இதனை முறையே மிருத்து புத்தி, தாரு புத்தி, சிலா புத்தி, வேணுபுத்தி, தைலபுத்தி என்பர்). பிறவகை புத்திகளை விரிப்பின் பெருகும். தைலமாகிய எண்ணெய் நீர்ப்பரப்பில் ஒரு துளி வீழினும் அப்பரப்பு முழுவதையும் பரவ எத்தனிப்பதைப்போல ஒரு கருத்தினை ஒருமுறை செவிமடுப்பின் அது தொடர்பான அத்தனைப் பொருண்மைகளையும் உள்வாங்கும் ஆற்றலுடையாரைத் ‘தைலபுத்தி உடையவர்’ என்பது வழக்கு. பரிமேலழகர் உரை தைலபுத்தி உடையார்க்கே செய்யப்பட்டது என்பது அதனை ஒருமுறை நோக்குவார்க்கும் புலப்படும் உண்மையாகும்.

‘அழுக்காறு’ – பொருள் வரையறை

அறத்துப்பால் பதினேழாவது அதிகாரத் தலைப்பு ‘அழுக்காறாமை’ என்பதாகும். திருவள்ளுவர் இருக்கக்கூடாத பண்புகளை எதிர்மறையில் சுட்டுவார். வெஃகாமை, புறங்கூறாமை, வெகுளாமை என்பன போல. இருக்க வேண்டிய பண்புகளை உடன்பாட்டில் வைத்துக் கூறுவார். ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை என்பன போல. ‘அழுக்காறு’ என்பது இருக்கக்கூடாத பண்பாதலின் அதனை எதிர்மறையில் வைத்து ‘அழுக்காறாமை’ என்று கூறுகிறார். அதிகாரத் தலைப்பிற்குப் பொருள் கூறும் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

‘அழுக்காறு’ என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் மேலே உரைத்தாம். அச்சொல் பின் ‘அழுக்காற்றைச் செய்யாமை’ என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று ’அழுக்காறாமை’ என நின்றது.

மேலே சொன்ன விளக்கத்தால் இரண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று, ‘அழுக்காறு’ என்பது ஒருசொல் என்பதும் ‘அழுக்கு + அறு’ என இதனை இரண்டு சொல்லாக நோக்கக் கூடாது என்பதுமாகியன சொல்லுக்கான புறநிலை விளக்கம். இரண்டு, அதற்கான பொருள் இதற்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்பதனால் கூறியது கூறலாக இங்குப் பதிவிடவில்லை என்னும் பொருள்நிலை விளக்கம்.

“அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்” (35)

என்பது அறத்துப்பால் முப்பத்தைந்தாவது குறட்பா. இந்தக் குறட்பாவில் பயின்றுள்ளள ‘அழுக்காறு’ என்ற சொல்லுக்குத்தான் பிறர் ஆக்கம் பொறாமை (பிறருடைய வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமை – அடைப்பிற்குள் இருப்பன கட்டுரையாளர் கருத்து) என்று உரைப்பொருள் தந்திருக்கிறார். பிறர் ஆக்கம் பொறாமை என்னும் மூன்று சொற்களைக் கூட மீளவும் சுட்டுதல் உரைக்கட்டுமானத்தைப் பாதிக்கும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். கருதி ‘அதற்குப் பொருள் மேலே உரைத்தாம்’ என 125 குறட்பாக்களுக்கு முன்னால் தான் எழுதிய உரைப்பொருளை நோக்கிய பயணத்திற்கு முன்னோக்கப் பணிக்கிறார். பரிமேலழகரின் படிப்பும் பணியும் ஓலைச்சுவடிகளில் நிகழ்ந்திருக்கிறது என்பதைக் கருத்திற் கொண்டால் அவருடைய அளப்பரிய நினைவாற்றல் புலப்படக் கூடும்.

ஏழாவது அதிகாரமும் எழுபிறப்பு உண்மையும்

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது பாசுரம். இந்த ஏழு பிறவியைத் திருவள்ளுவர் நட்போடு பொருத்திப் பார்த்திருக்கிறார். ‘செய்ந்நன்றி’ என்பதன் பொருள் செய்பவனுக்கு ஆகாது செய்யப்பட்டவனுக்கு ஆகிவரும். அதாவது உதவியைப் பெற்றுக் கொண்டவன் என்றைக்கும் அதனை மறக்காமல் இருப்பதே செய்ந்நன்றி. இதனை ‘உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து’ என்று பின்னும் ஓதுவார் திருவள்ளுவர். நல்லோர், ஒருவன் இப்பிறவியில் தனக்கு உதவி செய்தவனுடைய நட்பினை எழுபிறப்பிலும் எண்ணிப் பார்ப்பர்’ என்ற கருத்தினைச் சொல்லுகிற குறட்பா,

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு” (107)

என்று அமைகிறது. இந்தக் குறட்பாவில் சொல்லப்பட்டிருக்கும் ‘எழுபிறப்பு’ என்பதற்குப் பரிமேலழகர் உரை விளக்கம் சொல்லாமல் அதற்கு முன்னதிகாரங்களில் உள்ள ஒரு குறட்பாவிற்குத் தான் சொல்லிச் சென்ற பொருள் நோக்கிக் கற்பாரை ஆற்றுப்படுத்துகிறார்.

“எழுமை என்றது வினைப்பயன் தொடரும் எழுபிறப்பினை. அது வளையாபதியுட் கண்டது. ‘எழுவகைப் பிறப்பு மேலே (62) உரைத்தாம்”

என அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்திற்குக் கற்பார் கவனத்தைக் கொண்டு செல்கிறார். பிறப்பு ஏழாவன,

“ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் — சீரிய
பந்தம் ஆம் தேவர் பதினாறு அயன்படைத்த
அந்தமில்சீர்த் தாவரம் நாலைந்து”

என்னும் வெண்பா அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தில் காணப்படுகிறது. 107 ஆவது குறட்பா பொருள் விளக்கத்திற்காக அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தைக் காட்டிச் செல்கிறார். அது மட்டுமன்று. இந்த வெண்பாவின் எழுபிறவி பற்றிய உள்ளடக்கம் வளையாபதி என்னும் காப்பியத்தில் அடங்கியுள்ளது என்பதையும் (107) குறளுரையில் சுட்டுகிறார்.

அளவைகள் ‘ஆறும்’ பொருந்தும் ஆறும்

மெய்யுணர்தல் அதிகாரத்தில் உள்ள குறட்பா ஒன்றிற்குப் பரிமேலழகர் விளக்கம் எழுதுகிறார். இது துறவறவியல் சார்ந்ததாதலின் சமயக் கொள்கைகள் சார்ந்த நுட்பமான பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வதிகாரத்தில் உள்ள ஒரு குறள்,

“ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (357)

என்று அமைந்திருக்கிறது. உயிர்களின் நிலையாமை நோக்கி அவற்றின் மீது வைத்த பற்றினைத் துறந்த ஒருவன் பரம்பொருள் ஒன்றே அழியாதது என்பதை உணர்ந்தால் அவனுக்குப் பிறப்பு தொடராது” என்பது இக்குறட்பாவிற்கான எளிய இயல்பான பொருள். குறட்பாவிலுள்ள ‘உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின்’ என்னும் தொடருக்குப் பரிமேலழகர்,

“அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் தெளிய ஆராய்ந்து அதனால் முதற்பொருளை உணருமாயின் அவனுக்கு மாறிப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டா”

என்று பொழிப்புரை எழுதிச் சுருக்கமான விளக்கவுரையில்,

“அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம்”

என இன்னும் சுருங்கிய தொடரைக் கையாள்கிறார். இந்தக் குறட்பாவில் கண்ட ‘அளவைகள்’ என்பன தனக்குத் துணையாகும் அறங்களை அறிகின்ற அளவுகோல்கள். ‘இதனைச் செய்ய இயலும்’, ‘இதனைச் செய்ய இயலாது’ என்று வரையறுத்துக் கொள்வதற்குப் ‘பொருந்தும் ஆறு’ என்று பெயர். இவற்றையெல்லாம் இந்தக் குறட்பாவிற்கும் பொருத்தியுரைக்கும் பரிமேலழகர் விளக்கத்தை இன்னொரு முறை பதிவிடாமல் தான் ஏற்கனவே பதிவிட்ட குறட்பாவுக்குக் கற்பாரை வழி நடத்துகிறார்.

“நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை” (242)

இந்தக் குறட்பாவுக்கு “அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் நன்றான நெறியிலே நின்று நமக்குத் துணையாம் அறம் யாது என ஆராய்ந்து அருளுடையராக, ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றாலும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே பிறிதில்லை” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் மேற்கண்ட அளவைகள் பற்றியும் பொருந்தும் ஆறு பற்றியும் பின்வருமாறு விளக்கிக் காட்டுகிறார்.

அளவைகளாவன,

“பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும் கருத்தா மொழியாகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும் இங்ஙனம் அன்றாயின் இது கூடாதென்று உணரும் அருத்தாபத்தியும் உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி ஆறென்பாரும் உளர். இவையும் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து.

பொருந்தும் ஆறாவன,

“இது கூடும் இது கூடாது எனத் தன் கண்ணே தோன்றுவது“

இவ்வளவு விளக்கங்களையும் திருக்குறளில் ‘அளவைகள் மற்றும் பொருந்தும் ஆறு’ என வருகிற இடங்களில் எல்லாம் ஒவ்வொரு முறையும் சொன்னால் என்ன ஆகும்? உரைச் செறிவு குறையும், கற்பார் உள்ளம் சலிப்படையும். எனவேதான் பரிமேலழகர் தானும் உரைக்குற்றத்தில் சிக்காமல் உரையின் செறிவும் குன்றாமல், கற்பாருக்குக் கைகாட்டியாய் விளங்க நிற்கிறார். கற்பார்தம்  நினைவாற்றலையும் அவ்வப்போது சோதித்துக் கொள்கிறார்.

எஞ்சாமையும் நீங்காமையும் ஏழுக்கும் உண்டு

‘இறைமாட்சி’ என்னும் அதிகாரப் பொருண்மையாக அரசர்க்கு அங்கம், அவனது மாட்சி, மாட்சியும் பயனும் என மூன்றாகப் பகுத்துக் கொள்கிறார் பரிமேலழகர். இவற்றுள் அரசனது மாட்சியை நான்கு குறட்பாக்களில் அடக்கிக் காட்டும் பரிமேலழகர் அவற்றுள் இரண்டு பாட்டினை பொருண்மையால் ஓர் அலகாகக் கொள்வதைக் காணமுடிகிறது. அவ்விரண்டு பாடல்கள் வருமாறு,

“அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” (382)

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு” (383)

இவ்விரண்டு பாடல்களினாலும் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை என்னும் ஏழு பண்புகளும் மன்னனிடத்து இயல்பாகவே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை வள்ளுவர் பதிவு செய்கிறார்.  இப்பொருண்மையை,

“அரசனுக்கு இயல்பாவது திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல்” (382)  “நிலத்தினை ஆளும் திருவுடையார்க்கு அக்காரியங்களில் (அரச காரியங்களில்) விரைவுடைமையும் அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும் ஆண்மையுடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா” (383)

என்னும் பரிமேலழகரின் பொழிப்புரைகளால் அறியலாம். அரசனுக்கு இருக்கவேண்டிய இந்த ஏழு பண்புகளையும் தனித்தனிக் குறட்பாக்களில் பதிவு செய்தமைக்குக் குறள் யாப்பே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது கட்டுரையாளர் அனுமானம். மேலும் ‘ஏழு’ என்னும் தொகைக்கான விரியைத் திருக்குறள் யாண்டும் கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு பாடல்களிலும் சொல்லப்பட்ட பண்புகள் மன்னனிடத்து இடையறாது நிற்க வேண்டும் என்பதுதான் மூலப்பொருள்.

‘அஞ்சாமை’ முதலிய நான்கு பண்புகளும் எஞ்சாது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘எஞ்சாமை’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் எழுதியிருக்கும் பரிமேலழகர் அடுத்த குறட்பாவில் ‘தூங்காமை’ முதலிய பண்புகளும் நீங்காது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘நீங்கா’ என்பதற்கு விளக்கம் எழுதவில்லை. ஆனால்,

“நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

என்று எழுதிவிடுகிறார். பல குறட்பாக்களை முன்நோக்கி உரையெழுதிய பரிமேலழகர் இங்கே முந்தைய குறட்பாவினை (382) நோக்கி இரண்டையும் ஓரலகாகக் கருதுமாறு உரையெழுதுகிறார். முதலில் முதற்குறட்பாவில்,

“உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார் ‘எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு” என்றார்.”

என்று எழுதிய விளக்கத்தை அடுத்த குறட்பாவில் பயிலும் ‘நீங்கா’ என்பதற்கும் பொருத்திக் கொள்க என்று சுருக்கிக் கொள்கிறார். இதனால், இந்த ஏழு பண்புகளுக்கும்,

“உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும்” என்று (382) எழுதிய உரை பொருந்தும் என்பது பெறப்படும். பரிமேலழகர் உரையால்,

  1. உயிர்க் குணங்கள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும்
  2. சொல்லப்பட்ட ஏழு குணங்களும் ஒரே நேரத்தில் இடையறாது இருத்தல் வேண்டும்.
  3. அதனால்தான் ‘எஞ்சாமை’ என்ற சொல்லையும் ‘நீங்கா’ என்ற சொல்லையும் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.

இவ்வளவு பொருள் விளக்கங்களையும்,

“நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

என்னும் ஆறு சொற்களில் பதித்துக் காட்டும் பரிமேலழகர் உரைத்திறனை எப்படிப் புகழ்வது?

எப்படிக் கொடுப்பது?

‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியின் சாரம் படைப்பிலக்கியத்தில் பதிவு செய்யப்படுகிறபோது அதன் மதிப்பும் பாதுகாப்பும் கூடிவிடுகிறது.

“ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி” (477)

என்னும் குறட்பா ‘வலியறிதல்’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகையாற்றலில் பெருமையின் பகுதியாக இருப்பது பொருள். பொருளைப் பிறர்க்கு ஈவது அறத்துப்பாலில் ஈகையெனும் அறமாகக் கருதப்படினும் பொருட்பாலில் அரசனுக்குரிய வலிமைகளுள் ஒன்றின் பகுதியாகக் கருதப்படுகிறது. அறத்துப்பாலில் ‘வறியார்க்கொன்றீவதே ஈகை’ என்பது பொருந்தும். பொருட்பாலில் அதற்கு நோக்கமும் வரையறையும் உண்டு. அதனைக் கூறுகிறது இந்தப் பாடல்.

“ஈயும் நெறியானே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்!”

என்னும் பரிமேலழகரின் பொழிப்புரையால் இந்தப் பாடல் அரசநீதி செலுத்தும் மன்னன் பொருளைப் பயன்படுத்தும் நெறி பற்றிக் கூறுவதாகக் கருதப்படும். ‘அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கு ஈயும் நெறியான் என உரைகண்ட பரிமேலழகர் அந்த நெறியை இங்கே விளக்காது தான் முன்பே விளக்கிய இன்னொரு குறட்பாவின் விளக்கவுரையைச் சுட்டுகிறார்.

“ஈயும் நெறி மேல் இறைமாட்சியுள் ‘வகுத்தலும் வல்லதரசு’ (385) என்புழி உரைத்தாம்”

என்று எழுதுகிறார். அந்தப் பாட்டின் விளக்கவுரையில் “காத்த வகுத்தலாவது,

  1. கடவுளர் அந்தணர் வறியோர் என்ற இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்
  2. யானை, குதிரை, படை, நாடு, அரண் என்ற இவற்றிற்கும் பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும் தன்னிற் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட்பொருட்டாகவும்
  3. மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும் ஐம்புலன்களால் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க

என ஈதலின் நெறி பற்றி விளக்கும் பரிமேலழகர், பொருட்பாலில் ஈதலின் தன்மையை அறத்துப்பாலினின்றும் முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதை அறியலாம். ‘வறியார்க்கு’ என்னும் அறத்துப்பாலின் வரையறை இங்கே முற்றிலும் நீங்கி அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள் நோக்கத்தை முன்னெடுப்பதையே இந்தக் குறட்பாவில் பரிமேலழகர் விளக்குகிறார். இந்த விளக்கத்தைத்தான் ‘ஆற்றின் அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கும் பொருத்திக் கொள்ளச் சொல்கிறார். ஒரு நூறு குறட்பாக்கள் கடந்து உரையெழுதினாலும் எந்தக் குறட்பாவில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருளை உரைத்தோம் என்பதைத் தம் நினைவுப் பேழையில் இருந்து எடுத்தளிக்கும் அழகரின் ஆற்றல் சொல்லுந்தரமன்று!

உடன் நிகழ்ச்சியும் உண்டு

‘காலமறிதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு பாட்டு. காலமும் இடமும் அறிந்து ஒரு செயலை நன்கு திட்டமிட்டுச் செயல்படுகிற ஒருவன்  இவ்வுலகத்தையே ஆள நினைத்தாலும் அது கைகூடும் என்னும் பொதுவான கருத்தைச் சொல்வது போல் அமைந்திருக்கிறது.

“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்” (484)

“ஒருவன் ஞாலம் முழுதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது ஒருவன் கையகத்ததாம் அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்”

என்று இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் தொடர்ந்து எழுதிய விளக்கவுரையில்,

‘இடத்தான்’ என்பதற்கு மேல் ‘கருவியான்’ என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’

என்று எழுதிக் காட்டுகிறார்.

இந்தப் பாடடில் உள்ள உரைநுட்பம்

முந்தைய பாட்டில் ‘கருவியால்’ என மூன்றாம் வேற்றுமை ‘ஆன்’ உருபு பயின்று வந்திருக்கிறது. இந்த ‘ஆன்’ என்னும் உருபு கருவிப் பொருள் தருவதாக இருந்தாலும் இந்த இடத்தில் அது ‘ஒடு’ உருபின் உடனிகழ்ச்சிப் பொருளைத் தருவதாகக் கொள்கிறார். கொண்டு, ‘கருவிகளுடனே’ என்று உரையெழுதுகிறார்.

“கருவிகளாவன – மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். ‘அவை உளவாய வழியும் காலம் வேண்டும்’ என்பது அறிவித்தற்குக் ‘கருவியான்’ என்றான்.”

என்னும் அழகர் விளக்கம் கருவிகள் இன்னின்ன எனப் பட்டியலிடுகிறது. அறிவு, ஆண்மை, பெருமை என்பன மூவகை ஆற்றல். சாம, பேத, தான, தண்டம் என்பன நால்வகை உபாயம். காலத்தால் வினையாற்றினும் இந்தக் கருவிகளோடு வினையாற்ற வேண்டும் என்பது கருத்து. அதாவது இந்தக் ‘கருவிகளால்’ வினையாற்றாமல் ‘கருவிகளோடு’ வினையாற்ற வேண்டுமாம். இவ்வாறாகவே பின்னால் வரும் ‘இடத்தான்’ என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ‘மேல் கருவியான் என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’ எனச் சுருக்கம் காட்டுகிறார். இதனால் ‘இடத்தாற்செயின்’ என்பதற்கு ‘இடத்தினால் செய்’ என்னாது ‘இடத்தோடு’ என்பது பொருளாம்.

‘கருவியான் செய்’ என்பதற்குக் ‘கருவியோடு செய்’ என உரை கண்டதால் முன்னுள்ள வலியறிதல் என்னும் அதிகாரத்தோடும் ‘இடத்தான் செய்’ என்பதற்கு ‘இடத்தொடு செய்’ என உரைகண்டதால் பின்னுள்ள இடனறிதல் என்னும் அதிகாரத்தோடும் இயைத்து சிங்கநோக்காகக் ‘காலமறிதல்’ என்னும் இவ்வதிகார அமைப்பு முறை நுட்பம் உணர்த்தினார் என்க.

நிறைவுரை

‘இதற்கான பொருள் அங்கே உரைக்கப்பட்டது’ என்பதை ‘உரைத்தாம்’ என்றும், ‘அங்கே உரைத்ததைப்போல இங்கேயும் பொருள் கொள்க’ என்பதை ‘உரைத்தாங்கு உரைக்க’ என்றும் தெளிவுபடுத்துகிறார் பரிமேலழகர். ஒருசில இடங்களில் மட்டும் முந்தைய அதிகாரத்தின் பெயர் சுட்டும் பரிமேலழகர் பெரும்பாலான இடங்களில் அதிகாரப் பெயரையும் சுட்டுவதில்லை. குறட்பா எண்ணையும் குறிப்பதில்லை. ‘உரைக்குற்றம் வந்துவிடக் கூடாது’ என்னும் பொறுப்புணர்வும், ‘கற்றுணர வல்லார்க்கே அரிய இலக்கிய உரைகள் கைவரபெறும்’ என்னும் கல்விக் கொள்கையும் ஒருங்கே கொண்ட உரையாசிரியர்களுள் பரிமேலழகர் தனித்து நிற்கிறார். ‘உழைத்தால் உயரலாம்’ என்பது பழமொழி! இலக்கியத்தைப் பொருத்தவரையில் ‘உழைக்காதவர்க்கு உரை புரியாது’ என்பது புதுமொழி!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *