குறளின் கதிர்களாய்…(57)

-செண்பக ஜெகதீசன்

வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. (திருக்குறள்:678-வினைசெயல்வகை)

புதுக் கவிதையில்…

யானையை வைத்து
யானை பிடித்திடல்போல்,
செயலொன்றை வைத்து
செயல் முடித்திடல்,
ஜெயம்தரும் வாழ்விலே…!

குறும்பாவில்…

யானைபிடிக்க யானை வேண்டும்,
செயல்முடிக்க
செயல் வேண்டும் துணையாய்…!

மரபுக் கவிதையில்…

கட்டுப் பாடுகள் ஏதுமின்றி
  காட்டில் திரியும் யானைதனைத்
தொட்டுப் பிடிக்க இயலாதே
  துணையாய் யானை ஒன்றின்றி,
வெட்டிய குழியில் வீழ்த்திடினும்
  வேண்டும் மீட்டிட யானையொன்று,
சட்டெனச் செயலை முடித்திடவொரு
  செயலை வைத்தே ஜெயிக்கலாமே…!

லிமரைக்கூ…

யானையைக் கூடவைத்து யானையைப் பிடி,
செயலது ஒன்றை வைத்து
செயல்முடித்தல் வெற்றிபெற முதலாம் படி…!

கிராமிய பாணியில்…

யானவேணும் யானவேணும்
யானபுடிக்க யானவேணும்,
காட்டுயானய அடக்கிப்புடிக்கக்
கூடவொரு யானவேணும்..

வாழ்க்கக்கதயும் இதுபோலத்தான்,
ஒருசெயல வச்சித்தான்
வேறசெயல் முடிக்கவேணும்-
யானயவச்சி யானபுடிக்காப்புல…!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *