கவிதையும் கற்பனையும்!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதபி
கற்பனை என்னும் கவின்விதை போட்டு
அற்புதம் நிகழ்த்தும் அருமலர்ப் பூத்துச்
சொற்பதம் யாவும் சுந்தரக் கனியாம்
கற்பதே ஈண்டுக் கவிதையாய்க் கனியும்!
காதலி காட்டும் கயல்விழி போதை
ஆதவன் கதிரின் ஆளுமைப் பாதை
மாதுளம் பழமாய் மனம்விழும் சொற்கள்
பாதையைக் காட்டும் பயணமைற் கற்கள்!
வானகம் இடிக்க வண்ணமயில் ஆட்டம்
கானகக் குயிலின் காற்றிசைப் பாட்டும்
தேனெனக் கவிதைத் தீஞ்சுவை தூண்டும்
கானமாய்ச் சிறக்கக் கற்பனை வேண்டும்!