உனக்கென்ன குறைச்சல்.. கவிஞர் வாலி வி.குமார் எம்.எஸ்.விஸ்வநாதன்
கவிஞர் காவிரி மைந்தன்
உனக்கென்ன குறைச்சல்..
கடந்த காலமோ திரும்புவதில்லை..
நிகழ்காலமோ விரும்புவதில்லை..
எதிர்காலமோ அரும்புவதில்லை..
இதுதானே அறுபதின் நிலை..
வெள்ளிவிழா திரைப்படத்தில் வாலி + விஸ்வநாதன் கூட்டணியில் விளைந்த விளைச்சல்! ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என இளமைக்குப் பரிந்து வரிகள் தந்த கவிஞர், முதுமைக்கும் கவிஞர் வாலி தந்திருக்கும் முத்தான வரிகள் – இப்பாடலிலா பிறப்பில் தொடங்கி இறப்பில் அடங்கும் இவ் வாழ்க்கையில் இடையே நடக்கும் பருவ மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்தே வரும்!
‘காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்’ என்னும் பழமொழி இன்றைய இளைஞர்தாம் நாளைய முதியவர்களாக உருமாறப் போகிறார்கள் என்பதை உள்ளடக்கியதன்றோ? உறவுகளுக்குள் உள்ள பாசப் பிணைப்புகள் முழுமையாக இருக்கும் பட்சத்தில் முதியவர்கள், புறக்கணிக்கப்பட மாட்டார்கள். 60 வயதுக்கு மேல் அவர்களும் குழந்தைகளாகவே மாறிவிடுகின்றனர். அவர்களை அனுசரித்து ஆதரித்து வாழ வே்டிய இளையவர்கள், அதற்கான பக்குவம் பெறாமல் பரபரப்பு வாழ்க்கையையே பெரிதாகக் கருதி, ஓடிக்கொண்டிருக்கும் அவலங்கள் நம்மைச்சுற்றி நாளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன!
சகோதரத்துவம், பெரியோரைப் பேணுதல் இவை எல்லாம் வாழ்க்கையில் முக்கியமானவை என்பதை மறந்து மனம்போன போக்கிலே நாகரீக உலகம் நடைபோட்டுவருகிறது என்றாலும் வயதில் மூப்படையும்போது உணரத்தான் செய்கிறார்கள்.
‘தலைமுறை இடைவெளி’ என்று தலையங்கம் எழுதிட ஏராளம் இருந்தாலும் உறவுக்குள் ஏற்படும் பரிதவிப்பினை பாசத்தை – கவிஞர் தன் தத்துவ சிந்தனையால் புடம்போட்ட தங்கம்போன்ற வார்த்தைகளை வழங்கி உருவாக்கியிருக்கிறார். இப்பாடலை தன் தனித்துவக்குரலால் வழங்கி மெருகேற்றியிருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் வி.குமார்! இப்பாடலை இதயத்தின்மீது தவழவிடுங்கள்! சுமையான வாழ்க்கை கூட சுகமாக மாறக்கூடும்!
உனக்கென்ன குறைச்சல்.. நீயொரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை!
https://www.youtube.com/watch?v=DcgjJZgrUdk
உனக்கென்ன குறைச்சல் – நீயொரு ராஜா..
வந்தால் வரட்டும் முதுமை!
தனக்குத்தானே துணையென நினைத்தால்
உலகத்தில் ஏது தனிமை?
கடந்த காலமோ திரும்புவதில்லை..
நிகழ்காலமோ விரும்புவதில்லை..
எதிர்காலமோ அரும்புவதில்லை..
இதுதானே அறுபதின் நிலை..
எதையோ தேடும் இதயம்
அதற்கு இன்பம்தானே பாலம்
அந்த நினைவே இன்று போதும் – உன்
தனிமை யாவும் தீரும்