குறளின் கதிர்களாய்…(58)

-செண்பக ஜெகதீசன்

 

அங்கணத்து ளுக்க வமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல். (திருக்குறள்-720:அவையறிதல்)

images

புதுக் கவிதையில்…

தம் அறிவில் குறைந்தோர்
அவையில் பேசுதல்,
அழிவுதரா அமுதத்தை
அழுக்குச் சாக்கடையில்
ஊற்றுதல் ஒப்பதே…!

குறும்பாவில்…

அமுதத்தை அழுக்கிடத்தில் கொட்டுதல்
போன்றதே, தம்மில்
அறிவுகுறைந்தோர் அவையில் பேசுதல்…!

மரபுக் கவிதையில்…

என்றும் இறப்பே இல்லாத
    இனிய வாழ்வைத் தந்திடுமாம்
தின்னும் அமரர் அமுததுவே,
    தேடிக் கிடைத்ததைத் தின்னாமல்
பன்றி மேயும் சாக்கடையில்
    பாழாய்ப் போக ஊற்றுதலும்,
குன்றிய அறிவுடைக் கூட்டமதில்
    கற்றதைச் சொல்வதும் ஒன்றன்றோ…!

லிமரைக்கூ…

அமுதத்தைச் சாக்கடையில் ஊற்றுதல் வீண்,
அதுபோல் பயனிலாச் செயலே
அறிவில்லார் அவையினில் பேசிடுதல் காண்…!

கிராமிய பாணியில்…

ஊத்தாத ஊத்தாத
சாக்கடக்குள்ள ஊத்தாத,
சாவத்தராத அமுர்தத்த
அழுக்குச்
சாக்கடக்குள்ள ஊத்தாத..

அதுபோல
பேசாத பேசாத
படிச்சதெல்லாம் பேசாத,
படிப்புகொறஞ்ச சபயிலத்தான்
பேசாத பேசாத..

அதும்இதும் ஒண்ணேதான்,
அதுனால
பேசாத பேசாத
அந்தசபயில பேசாத…!

 

Share

Comments

2 responses to “குறளின் கதிர்களாய்…(58)”

  1. அமீர்

    மரபுக்கவிதையில் மிக அருமையாக வந்துள்ளது.

  2. Shenbaga jagatheesan

    அன்பு நண்பர் அமீர் அவர்களின் கருத்துரைக்கு,
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *