Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • நலம்தரும் நவராத்திரி

    நலம்தரும் நவராத்திரி

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

    தாயினைத் தெய்வமாக வணங்கும் முறை எமது பாரம்பரியமானதாகும். அதனால்தான்” அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று அன்னைக்கு முதலிடம் அளித்திருப்பதைக் காண்கின்றோம்.” தாய்ச் சொல்லைத் தட்டாதே” என்கின்றோம். பூமியைய் தாய் என்கின்றோம். பொறுமையைத் தாய் என்கின்றோம். கருணையைத் தாய் என்கின்றோம். நதிகளையும் பெண்மையின் நிலையில் கண்டு தாய் என்றே போற்றி நிற்கின்றோம்.

    உலகிலே உயர்ந்து நிற்பது எதுவென்றால், அது தாய்மைதான். தாய்மைக்கு ஈடாக எதுவுமே இல்லை எனலாம். இதனால்தான் தாய்மையைத் தெய்வத்துக்கு ஒப்பிட்டு, சக்தி வழிபாடே தொடங்கியது எனலாம். உலக இயக்கத்துக்கு சக்தியே முதன்மையானது. சக்தி இல்லாவிட்டால் உலக இயக்கமே அற்றுவிடும். இந்த அடிப்படையில் சக்தியை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதே நவராத்திரி ஆகும்.

    சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. ஆனால் சக்திக்கு ஒன்பது ராத்திரிகள். அதுதான் நவராத்திரி. அனைத்து இயக்கங்களுக்கும் ஆதார சக்தியாக அம்பிகை விளங்குவதால் ஒன்பது ராத்திரிகள் அமைந்துவிட்டன என்றுதான் எண்ண முடிகிறது.

    நவராத்திரி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுது – பாரத காலம்இராமாயண காலம் வந்து நிற்கிறது. நீண்ட காலமாகவே நவராத்திரி கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

    நவராத்திரி என்பது வருஷத்தில் நான்கு முறை வருவதைக் காண்கிறோம். தைமாதத்தில் வருவது மஹா நவராத்திரிபங்குனியில் வருவது வஸந்த நவராத்திரிஆனியில் வருவது ஆஷாட நவராத்திரிபுரட்டாசியில் வருவது சாரதா நவராத்திரி. இந்த சாரதா நவராத்திரியையே இந்தியாவில் தமிழகத்திலும் இலங்கையிலும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பது நோக்கத்தக்கதாகும்.

    நவம் என்றால் ஒன்பது என்பது எண்ணிக்கையாகும். அது எண்ணிக்கை மட்டுமல்ல – புத்துணர்ச்சி என்னும் கருத்தும் இதில் அடங்கி நிற்கிறது எனலாம். கலைகளைப் போற்றி நின்று கொண்டாடும் வழிபாட்டு விழாவாக நவராத்திரி அமைகிறது எனலாம். கலைகளை முன்னிறுத்தி அனுட்டிக்கும் பொழுது அங்கு புத்துணர்வு மேலிடுவது இயல்பான ஒன்றல்லவாஇதனால் நவராத்திரி புத்துணர்வினை நல்கி புதுத்தெம்பு பெருகி வாழ்வில் மகிழ்வினை நல்கிட உதவும் விரதமாய், கொண்டாட்டமாய் அமைகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    எங்களின் சமயம் எங்களுடன் இணைந்தே வருகிறது. ஆனபடியால்தான் வளர்ந்துகொண்டே வருகிறதே அல்லாமல் தளர்வுண்டு போகாதிருக்கிறது எனலாம். காரணம் சமயத்தை வாழ்வியல் ஆக்கிக்கொண்டதே முக்கிய நிலை எனலாம். கடவுளையே உறவு முறையில் அழைத்து கடவுளுக்கே குடும்பமும் வைத்து வாழ்வியயோடு இணைத்து நிற்கும் சமயத்தை உலகில் எங்குமே காண முடியாது. அதனால் வாழ்வுக்கு வாழ்வியலுக்கு எவை எல்லாம் இன்றியமையாதனவோ அவற்றையெல்லாம் இறையுடன் இணைத்து அவற்றுக்குப் பெருமையும் பெறுமதியும் காட்டி நிற்பதுதான் எங்கள் சமயத்தின் உன்னதம் எனலாம்.

    அந்த வகையில் நலம் தரும் நவராத்திரியும் வந்து அமைகிறது. வாழ்வினில் செம்மையாக வாழ எவையெல்லாம் எமக்குத் தேவை என்பதைத் தொட்டு நிற்பதுதான் நலம் தரும் நவராத்திரி.

    ஆரோக்கியம் வேண்டும். பொருள் வேண்டும். நல்லறிவு வேண்டும். ஆரோக்கியம் என்னும் பொழுது வீரம் வருகிறது. பொருள் என்னும் பொழுது செல்வம் வருகிறது. அறிவு எனும் பொழுது கல்வி வருகிறது. கல்வியும் செல்வமும் வீரமும் வேண்டிப் பிரார்த்தித்து நிற்பதுதான் நவராத்திரியாய் மலர்கிறது. வீரத்துடனும்  செல்வத்துடனும் அறிவு அதாவது கல்வியானது இணைய வேண்டும். அப்படி இணைந்தால்தான் வீரமும் செல்வமும் ஒழுங்கான முறையில் பயனை அளிக்கும். அப்படி அமையும் பொழுது அங்கே வெற்றி என்னும் வெளிச்சம் பிரகாசமாய் வந்து நிற்கும். இதுதான் உண்மை. இதுதான் நிச்சயம். இதனை உணர்த்துவதாய் அமைவதுதான் நவராத்திரி. இந்த வெற்றியையே விஜயதசமி என்று கொண்டாடி மகிழ்கிறோம்..

    வீரத்தைத் துர்க்கையாகவும்செல்வத்தை இலக்குமியாகவும்கல்வியை சரஸ்வதியாகவும் எங்கள் சமயம் காட்டுகிறது. இங்கே காட்டப்படும் மூன்றுமே பெண்களாய் அதாவது சக்தியாய் இருப்பது நோக்கத்தக்கதாகும்.

    பெண்மை என்றால் தாய்மை. பெண்மை என்றால் பொறுமை. பெண்மை அடங்கினால் மென்மை. பெண்மை பொங்கினால் வெம்மை. பெண்மைக்குள்ளே எல்லாமே அடக்கம். பெண்மைதான் இயக்கம். அதனால்தான் கல்வியைசெல்வத்தைவீரத்தை வழங்கும் கடவுளர்களாகப் பெண்மை உருவாக்கப்பபட்டது. கல்வியைசெல்வத்தைவீரத்தை இலகுவாகப் பெற்றுவிட முடியாது. முயற்சி வேண்டும். அதற்கு அளவில்லாப் பொறுமை வேண்டும். விடாத துணிவு வேண்டும். இவை அத்தனையும் பெண்மை என்னும் சக்தியிடம்தான் நிறைவுற்று இருக்கிறது. எனவேதான் முச்சக்திகளை மூன்று முக்கிய வாழ்வியல் முறைகளுக்கும் தெய்வமாக்கினார்கள் எங்கள் முன்னோர்கள்.

    அறிவுடன் செல்வமும் வீரமும் இணைந்து நின்றால் நிச்சயம் அங்கே வெற்றிதான். அறிவினை விட்ட செல்வமோவீரமோ வெற்றி என்னும் இலக்கினை அடையாது. பயனற்றே போய்விடும். இதனையே புராணங்கள் காட்டி நிற்கின்றன.

    வாரணம் பொருத மார்பு – வரையினை எடுத்த தோள்கள் – சங்கரன் கொடுத்த வாள்அத்தனையும் இருந்தும் மாவீரன் என்னும் பெயர்பெற்ற செல்வாக்குடன் திகழ்ந்த இராவணன் ஏன் வீழ்ந்தான்படைபலம் நிறைந்துஅரண்மனைச் செல்வாக்குடன் அரசாட்சியில் இருந்த துரியோதனன் ஏன் வீழ்ந்தான்உரமும்  வரமும் பெற்ற சூரன் ஏன் வீழ்ந்தான்அறிவுடன் செல்வமும் வீரமும் அணையாது நின்றதே காரணம் என்று காப்பியங்கள் புராணங்கள் காட்டி நிற்கின்றன.

    இறைச் சக்தியால் நாமெல்லாம் இயங்குகிறோம். இறைச்சக்தியே எமக்கு இயக்கச் சக்தியாகும். அந்தச் சக்தியே அறிவை, செல்வத்தை, ஆற்றலை அளிக்கிறது. அந்த அளவிட முடியாத சக்தி அளித்த ஆற்றலை அந்தச் சக்தியின் ஆசியுடன் வாழ்வில் கையாண்டால் வாழ்க்கை வளமாகும். வாழ்க்கை வையத்துள் வசந்தமாக அமையும். இப்படி வாழ்வியலோடு இணைந்த சக்தியாய் அமைவதுதான் நவராத்திரி ஆகும்.

    கோவிலுக்குப் போய் கொண்டாடாமல் கோயிலுக்குப் போய் வழிபடாமல், வீட்டிலேயே இருந்து பாடிப் பரவி கைக்கொள்ளும் நிலையில் நவராத்திரி அமைந்திருக்கிறது.

    கும்பம் வைத்து, கொலு வைத்து, கூடியிருந்து மலைமகளைஅலைமகளை, கலைமகளைப், பாடிப் பரவும் விழாவாக நவராத்திரி அமையப் பெற்றிருக்கிறது.

    ஏனைய விரதங்களைப் போல் அல்லாமல், நவராத்திரி விரதம் கலைகளின் சங்கமமாய் அமைந்திருக்கிறது என்பதால் அனைவராலும் தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது எனலாம்.

    நவராத்திரியில் கொலு வைப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். கொலு வைத்தல் என்பது அழகுக்கோ அல்லது ஆடம்பரத்துக்கோ அல்ல. அந்தக் கொலு கூட வாழ்வியலின் தத்துவமேயாகும். ஒன்பது படிகள் வைத்துக் கொலு அமைக்கப்படுகிறது. ஒன்பது என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. அதிலும் அர்த்தம் நிறைந்திருக்கிறது. முதற்படியில் ஓரறிவு உயிரினப் பொம்மைகள்இரண்டாவது படியில் இரண்டறிவு உயிரினப் பொம்மைகள் மூன்றாவது, நான்காவதுஐந்தாவது படியில் அந்த எண்ணிக்கை சார்ந்த உயிரின அடையாளங்கள்,  ஆறாவது படியில் மனித உருவப் பொம்மைகள், ஏழாவது படியில் மனிதனுக்கு அப்பாற்பட்ட ரிஷிகளின் பொம்மைகள்எட்டாவது படியில் தேவர்கள்நவக்கிரகங்கள்ஒன்பதாவது படியில் இறைவனது பொம்மைகள் என்று கொலு வைப்பது வழக்கமாகும். இங்கு கொலு வைக்கப்பட்ட முறையான உயிர்களின் வளர்ச்சி நிலையினைக் காட்டுவதாக அமைகிறது எனலாம். மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில்  காட்டிய “புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி, கல்லாய், மனிதராய், முனிவராய் தேவராய்…. ” என்பது நினைவுக்கு வருகிறதல்லவா?

    வணங்கும் கோவில்வாழும் வீடுகற்கும் பள்ளிக்கூடம், தொழில்புரியும் தொழிற்கூடம்பணிமனைகள்அத்தனையும் கொண்டாடி மகிழும் விழாவாக விளங்குவது நவராத்திரி ஒன்றே எனலாம். பக்தியுடன் கூடிய பாட்டும் பக்தியுடன் கூடிய நடனங்களும்பக்தியுடன் கூடிய ஒன்று கூடலும் இணையும் நிலை காணப்படுவதால் நலம் தரும் நவராத்திரி என்பது பொருத்தமாய் அமைகிறது அல்லவா?

    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும்
    தளர்வு அறியா மனம் தரும் நெஞ்சில் வஞ்சம்
    இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும்
    அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள்
    அபிராமி கடைக் கண்களே!

    Share
  • முழுவாழ்வில் நானிருப்பேன்!

    முழுவாழ்வில் நானிருப்பேன்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண்ஆஸ்திரேலியா

    விழுந்தால் விதையாவேன்
    எழுந்தால் மரமாவேன்
    வளைந்தால் வில்லாவேன்
    நிமிர்ந்தால் கணையாவேன் 

    பிடித்தால் காலாவேன்
    எடுத்தால் கோலாவேன்
    வலித்தால் துடுப்பாவேன்
    மாக்கடலில் படகாவேன் 

    காவலில் கதவாவேன் 
    கடும்வெயில் நிழலாவேன்
    முதுமையில்  துணையாவேன்   
    முழுவாழ்வில் நானிருப்பேன் 

    Share
  • வாழ்த்தும் மனமே வாழும்!

    வாழ்த்தும் மனமே வாழும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    இறைத்த கிணறு ஊறும்
    இறையாக் கிணறு  நாறும்
    நடக்கும் கால்கள் வலுக்கும்
    நடவாக் கால்கள் முடக்கும்
    படிக்கும் காலம் சிறக்கும்
    படியாக் காலம் இழக்கும்!

    உழைக்கும் கரங்கள் வலுக்கும்
    உழையாக் கரங்கள் படுக்கும்
    கொடுக்கும் குணமே சிறக்கும்
    கொடுக்கா குணமே குறுக்கும்
    தாழ்த்தும் தலையே நிமிரும்
    தாழாத் தலையே குனியும்
    வாழ்த்தும் மனமே வாழும்
    வாழா மனமே வீழும்!

    Share
  • பக்குவம் வாழ்வே!

    பக்குவம் வாழ்வே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஸ்திரேலியா

     அணைத்தால் இன்பம்
         அளித்தால் பேரின்பம்
      பொறுத்தால் விடிவு
         பொங்கினால் முடிவு
      வெறுத்தால் காரிருள்
          விரும்பினால் வெளிச்சம்
      நிலைத்தால் நிம்மதி
          குலைத்தால் பாதாளம்!

      சுமந்தால் சுகம்
         அமைந்தால் ஆனந்தம்
      பிறந்தால் மகிழ்வு
         பிரிந்தால் கலக்கம்
      தேடினால் செல்வம்
         வாடினால் முடக்கம்
      ஓடினால் உவகை
          ஓய்ந்தால் படுக்கை!

      ஆசை ஆபத்து
          அவசரம் பேராபத்து
      தேடல் சிறப்பு
          தெரிவு நல்மதிப்பு
      கோபம் அழிப்பு
         குரோதம் நெருப்பு
      பாவம் படுகுழி
         பக்குவம் வாழ்வே!  

    Share
  • பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

    பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    மெல்பேண், ஸ்திரேலியா

    நாலும் தெரியாது இரண்டும் தெரியாது 
    காலம் பறிபோகும் கணக்கும் புரியாது 
    ஆழந் தெரியாது அகலம் விளங்காது
    காலை விடும்வேளை கணக்கு மழிந்துவிடும்

    உறவும் தெரியாது பகையும் தெரியாது
    வரவும் தெரியாது செலவும் புரியாது
    குறைவும் தெரியாது நிறைவும் தெரியாது
    முடிவு வரும்வேளை முழுதும் இருளாகும்

    பக்தி உணராது புத்தி தெளியாது
    சக்தி எதுவென்று சலனம் மிகுவாகும்
    சித்தம் நிலைகுலைந்து செய்கை சிதைந்தோட
    கத்தி முனையாகக் காலன் வருவானே

    பிறந்த பிறப்பை பேறாய் எண்ணு
    குறைந்த செயலைக் குழியிட்டு மூடு
    நிறைந்த மனத்தை நித்தமும் தேடு
    பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

    Share
  • யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் தேர்த் திருவிழா

    யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் தேர்த் திருவிழா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    நல்லூரான் தேரிழுக்க நாடெல்லாம் வந்திருக்கும்
    எல்லையில்லா மகிழ்வுடனே எல்லோரும் வடம்பிடிப்பார்
    அல்லலினை அகற்றென்றே அடியார்கள் வேண்டிடுவார்
    நல்லநிலை அகன்றதனால் நாட்டுமக்கள் கலங்குகிறார்!

    தேரென்று சொன்னாலே ஊர்முழுக்கக் கூடிநிற்கும்
    யார்யாரோ வருவார்கள் தேரிழுத்துத் தரிசிப்பார்
    ஊர்முழுக்க ஆவலுடன் ஒன்றுகூடி வந்துநின்று
    தேரிழுக்க முடியாமல் திணறுகிறார் இவ்வருடம்!

    காவடிகள் வீதியெலாம் கணக்கின்றி வந்துவிடும்
    காளையரும் கன்னியரும் களிப்புடனே குவிந்திடுவார்
    குழந்தைகளின் குதூகலத்தால் கோவில்வீதி களைகட்டும்
    கோவில்வீதி கட்டுப்பாட்டில் தேரோட்டம் நிகழ்கிறதே!

    வாய்கட்டு கைகட்டு வயிற்றையும் கட்டென்றார்
    வாழ்வெல்லாம் சுகமாக வாழ்ந்திடலாம் எனவுரைத்தார்
    எதையுமே கேட்காது எப்படியோ நாம்நடந்தோம்
    வாய்கட்டி கைகட்டி வகையறியா நிற்கின்றோம்!

    தேரேறி வருங்குமரா திருவருளைத் தந்திடுவாய்
    ஊரெல்லாம் உனையணுகி உவந்தேற்ற விரும்புகிறார்
    பேரரக்கர் தருந்துயரை வேரோடு அழித்தவனே
    பேதலிக்கும் அடியவரைப் பேணிடுவாய் முருகையா!

    நல்லூரான் தேர்காண நாளெண்ணிப் பலரிருந்தார்
    நல்லூரில் பண்ணிசைக்கப் பலபேர்கள் காத்திருந்தார்
    அத்தனையும் நிறைவேறாது ஆக்கிவிட்ட  காலமதை
    அகற்றிடுவாய் முருகையா அடிபணிந்து இறைஞ்சுகிறோம்!

    Share
  • விபுலானந்த அடிகளாரின் பன்முகப் பரிமாணங்கள்

    விபுலானந்த அடிகளாரின் பன்முகப் பரிமாணங்கள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    விபுலானந்த அடிகளார் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் ஐம்பத்து ஐந்து வருடங்கள் மட்டுமே. ஆனால் இக்காலக் கட்டத்துக்குள் அவரின் வாழ்வானது மூன்றுவித அனுபவங்களைக் கொண்டதாக அமைகிறது. ஈழத்தில் பிறந்த அடிகளார், இந்தியாவில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவும் தமிழ் நாடாகிய தென்னிந்தியாவிலும் தமிழ் பேசாத வட இந்தியாவிலும் இருக்கின்ற சூழலும் அடிகளாருக்கு ஏற்படுகிறது. இதனால் மூன்று விதமான சூழலும் அங்கே கிடைத்த அனுபவங்களும் அடிகளாரின் பணிகளில் சிந்தனைகளில் செயற்பாடுகளிலெல்லாம் பல தாக்கங்களுக்குக் காலாகவும் இருந்திருக்கும் என்பதும் கருத்திருத்த வேண்டியதே.

    பிரித்தானியர் ஆட்சியில் இந்தியா சிக்கித் தவித்த காலம். வட இந்தியாவில் ஒரு போக்கும் தமிழ்நாட்டில் இன்னொரு போக்கும் சமூகத்தில் எழுந்து நின்ற காலம். சாதிப் பிரிவினை வடக்கில் காந்திய இயக்கத்தால் எதிர்க்கப்பட்டது. தீண்டாமை என்பது இருந்தால் தேசிய உணர்வு ஏற்படுதல் தடையாகும் என்பதால் காந்தி அவர்கள் தீண்டாமைக்கு எதிர்க்குரல் கொடுத்தார். தமிழ்நாட்டில் பிராமணர் ஆதிக்கம் யாவற்றிலும் முன்னின்றதால் அதனை உடைக்க திராவிட இயக்கம் தலைதூக்கி, தமிழியக்கத்தை முதன்மைப்படுத்தித் தனித்தமிழ் வாதத்தை ஓங்கி ஒலித்த சூழல் அங்கு காணப்பட்டது. இலங்கையிலோ சமயமாற்றம், இனவாதம், சாதிப் பிரச்சினை என்பவற்றோடு தமிழ்ப்பகுதிகளில் மரபுவழி தமிழ் இலக்கியங்கியங்களைப் பேணுவதும், சைவத்தைக் காப்பதுவுமான ஒரு சூழல் காணப்பட்டது எனலாம்.

    இப்படியான சூழலில் சுவாமி அவர்கள் வாழும் நிலை ஏற்பட்டதால் அவரின் நடவடிக்கைகளிலும் இம்மூன்று சூழல்களும் பாதிப்பினை உண்டாக்கத் தவறவில்லை என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள். தாய்மொழியுடன் ஆங்கிலம், சமஸ்கிருதம், சிங்களம், பாலி , லத்தீன், கிரோக்கம், அரபி, என்று பன்மொழி அறிவினையும் சுவாமி அவர்கள் பெற்றிருக்கிறார்கள். பன்மொழி அறிவால் அவரின் பார்வை குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடவில்லை. அவரின் எண்ண ஓட்டங்கள் பரந்துபட்டனவாகவே அமைந்திருந்தன.

    மரபுவழியில் தமிழினைக் கற்று தமிழில் பண்டிதர் பட்டமும் பெற்றவராக இருந்த பொழுதும் அவரின் விஞ்ஞானப் பட்டப்படிப்பு அவரை பழமைக்குள் மட்டும் அமுங்கிவிடச் செய்துவிடவில்லை என்பது மிகவும் முக்கியக் கருத்தெனலாம். பண்பாட்டினைக் கட்டிக்காத்து சமயநெறிகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தை உள்ளிருத்தி வாழ்ந்தாலும் அவரின் சிந்தனைகள், செயற்பாடுகள் சமூகத்தின் புரையோடிப் போன புறம்போக்கான நடவடிக்கைகளை மட்டும் ஏற்றுவிடும் மனப்பாங்கு அவரிடம் காணப்படவில்லை என்பதும் மனத்தில் இருத்தவேண்டியதே.

    சைவ சமயச் சூழலில் சைவராக வாழ்ந்த சுவாமிகள் ஆரம்பத்தில் சித்தாந்தத்தைப் பெரிதென எண்ணுகிறார். பின்னர் அவரின் போக்கு இராமகிருஷ்ண மடத்துடன் இணைந்துவிடும் நிலையில் வேதாந்தமே முன்னுரிமை வகிக்கும் நிலை உருவாகிறது. இராமகிருஷ்ண அமைப்பில் சேருமுன் சுவாமிகளின் சிந்தனை, எழுத்து, செயற்பாடுகள் வேறு. இராமகிருஷ்ண அமைப்பில் இணைந்த பின்னர் அவரின் எழுத்துகள், நடவடிக்கைகள், சமூகப் பார்வைகள் வேறாகவே இருந்தன என்பதை அவரின் வரலாற்றில் கண்டுகொள்ள முடிகிறது. சமரச சன்மார்க்க நெறி என்பதே அவரின் மனத்தை நிறைத்து நின்றது எனலாம்.

    மொழிபெயர்ப்புகள் செய்தார். மரபுக் கவிதைகள் யாத்தார். பலவிதமான கட்டுரைகளை எழுதினார். பத்திரிகை ஆசிரியராக விளங்கினார். ஆராய்ச்சி நூல்களை எழுதினார். இசைபற்றி ஆராய்ந்தார். அவரின் அரிய முயற்சியால் பழந்தமிழ் இசையின் பரிணாமம் என “யாழ் நூல்” எழுந்து வந்தது. இந்த நூலின் வருகை, பலரையும் பிரமிக்க வைத்தது. பழங்கால இசை மரபைத் தனது இசை அறிவாலும், கணித அறிவாலும், தமிழ் அறிவாலுமே யாழ்நூலாக அடிகளார் அவர்கள் ஆக்கி அளித்தார் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    அறிஞர்கள் யாவரும் போற்றும் வண்ணம் இப்படைப்பு வந்திருக்கிறது என்றால் அந்த அளவு ஆளுமையினை அடிகளாரின் கல்விப்புலமே வழங்கி இருக்கிறது எனலாம். யாழ்நூலினை ஆராய்கின்ற பொழுது தமிழிசையினைக் கணித மொழியினில் விளக்க முயன்ற திறனையே காட்டுகிறது எனலாம்.

    பன்மொழி அறிவால் பன்னாட்டு நூல்களையும் அங்குள்ள பண்பாடு, கலாச்சாரங்களையும் மூல மொழியிலே கற்று விளங்கும் ஆற்றலை அடிகளார் பெற்றவர் ஆகிறார். மரபுவழிவந்த தமிழ் அறிஞர்களிடம் கல்வி கற்றாலும் கூட அடிகளாரின் எண்ணங்கள் விசாலம் அடைவதற்குப் பன்மொழி ஆற்றல் கைகொடுத்த காரணத்தால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை அடிகளார் புறந்தள்ளுகிறார். அக்காலத் தமிழ் அறிஞர்களிடம் காணப்பட்ட அத்தனை அறிவும் ஆற்றலும் அடிகளாரிடமும் காணப்பட்ட போதிலும் – அவர் அத்தகைய பழைமை பேணும் அறிஞர்கள் வரிசையில் தாமும் இடம்பெற்று நின்றுவிட விரும்பவில்லை. அவரின் கலை, இலக்கியம், சமூகம் பற்றிய பார்வையானது உலகின் பரந்துபட்ட சிந்தனைகளுடன் தமிழினையும் உற்று நோக்குவதாகவே அமைந்திருந்தது என்பதுதான் கவனத்தில் இருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    அகில உலகப் பார்வையினால் அடிகளின் சமூக நோக்கும் அதன் அடிப்படையிலே எழுச்சி பெற்றது எனலாம். உயர்வு தாழ்வு பார்ப்பதை அவரது உள்ளம் ஏற்றிட மறுத்தது. இதனால் சாதியைப் பற்றிய எண்ணமே அவரின் மனத்தில் இருந்திட  மறுத்தே  விட்டது  எனலாம். செயல்களினால் மனிதர்கள் வேறுபடலாமே ஒழிய, பிறப்பினால் அல்ல என்னும் சிந்தனை அடிகளாரின் மனதில் வேரூன்றி நின்றது.

    விஞ்ஞானம் படித்தவர் மெய்ஞ்ஞானி ஆகிறார். இராமகிருஷ்ண அமைப்பு அடிகளிடம் பல மாற்றங்களுக்கு வழி சமைக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பொழுது, ஒதுக்கப்பட்டவர்கள், கல்விகற்க வழியற்றவர்களை நாடிச்சென்று அவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்து அவர்களின் நலனில் அடிகளார் காட்டிய அக்கறை, அவரின் சமூக, சமத்துவ மனப்பாங்கினுக்கு மிக்கதோர் சான்று எனலாம்.

    பாரதியாரைப் பெரும்புலவர் என்றோ அவரின் கவிதைகளை தமிழ்க் கவிதைகள் என்றோ தமிழ்நாட்டில் இருந்த பழந்தமிழ்ப் பண்டிதப் பரம்பரை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தமிழ்நாட்டில் பிறந்த பாரதியைச் சமூகத்தின் முன்னே கொண்டுவந்து காட்டி, பாரதிக்கும் அவரது படைப்பினுக்கும் முன்னுரிமையினை ஈழத்தவராக இருந்தும் சுவாமி விபுலானந்தர் எடுத்துக் கொடுத்திருக்கிறார். இதற்குக் காரணம் சுவாமிகளின் பழமைக்கும் புதுமைக்குமான பொருத்தப்பாடு எனலாம். புதுக்கவிதை  எழுதுபவர்கள் பாரதியைத் தொடுகிறார்கள். வசன கவிதையைக் கையில் எடுப்பவர்கள் பாரதியைப் பார்க்கிறார்கள். மரபுக் கவிஞர்கள்கூட பாரதியின் கற்பனை ஆற்றலில் கட்டுண்டு போகிறார்கள். இந்த வகையில் பாரதிக்கு முன், பாரதிக்குப் பின் என்று சொல்லும் நிலையும் இன்று ஏற்பட்டிருக்கிறது. பாரதியின் பாடல்கள் பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை படிப்பிக்கவும் படுகிறது. இப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்றும் அடிகளாரின் சிந்தனையில் அன்றே உதித்திருக்கிறது. இதைத்தான் ஆத்மீக பலம் என்கிறோம். ஆத்மீக பலம் மிக்க அடிகளார் எதைச் செய்தாலும் அவையாவுமே அன்றும் பயனை நல்கியது. இன்றும் நல்கிக் கொண்டே இருக்கிறது  என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

    “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்பது முற்றிலும் அடிகளாருக்கே மிகவும் பொருந்துவதாக அமைகிறது. ஈழத்தில் காரைதீவு என்னும் கிராமத்தில் பிறந்தவர் இமயமலைவரை சென்று இமாலய சாதனையின் நாயகனாக மிளிர்ந்தார் எனும் பொழுது கருவிலேயே திருவினைப் பெற்றே அடிகளார் பிறந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை எனலாம். சாதாரண விஞ்ஞான ஆசிரியராய் ஆரம்பித்து யாழ்ப்பாணம் சென்று அங்கு தனது வாழ்வினைத் திருப்பி விடுகிறார். அடிகளார். கல்வியால் திருப்பம். சிந்தனையால் திருப்பம். மயில்வாகன விஞ்ஞான ஆசிரியராக யாழ்ப்பாணம் சென்றவர், பாதை மெய்ஞ்ஞானச் சிந்தனையில் விரிந்து, சுவாமி விபுலானந்தர் ஆகிவிடுகிறார். பழமையில் ஊறியவர் பழமையையும் புதுமையையும் சரிவர உணர்ந்து சரியான வழியினைத் தேர்ந்தெடுத்து சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் சிந்தையில் இருத்தி, சமூக ஈடேற்றத்துக்கு எது சிறந்தது என்பதை உள்ளத்து இருத்தி அதன்வழியில் செயலாற்றி, சமூகத்தில் ஏற்றுதலுக்கும் போற்றுதலுக்கு உரியவராக உயர்ந்து நிற்கிறார்.

    கல்வித் தொண்டு, சமூகத் தொண்டு, இலக்கியத் தொண்டு, இவை யாவற்றையும் எடுத்து நோக்கும் பொழுது அவரின் பிறப்பு தமிழ்ச் சமூகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். பழமையில் வளர்ந்தாலும் புதுமையில் பயணித்தார். தனித்தமிழ் விரும்பினாலும் பன்மொழிப் புலமையினையும் ஒதுக்கிவிட விரும்பவில்லை. மரபிலே முகிழ்த்தாலும் விஞ்ஞானம் அவரை விரிவுபடுத்தியது. அதனால் குறுகிய பாதைகள் குறுக்கிடுவதை ஒதுக்கியே விட்டார். சித்தாந்த நிலையிலிருந்து வேதாந்த நிலைக்கு வந்தமையால் அவரின் நோக்கும் செயலும் பரந்து பட்டதாகவே காணப்பட்டது. கலைஞராய் விளங்கினார். அறிஞராய் விளங்கினார். நிறைவில் துறவியாய் உயர்வு பெற்றார். தாமரை இலைத் தண்ணீராய் அடிகளார் வாழ்வு அமைந்திருந்தது. ஆனால் அவரின் உள்ளம், வெள்ளைக் கமலமாகவே இருந்தது.

    —————————————————————

    தொடர்புடைய கட்டுரை :

    சுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப் புலமையும் வாய்க்கப்பெற்ற சந்தர்ப்பங்களும்

    https://www.vallamai.com/?p=91090

    Share
  • மதுவிற்றல் முறையோ!

    மதுவிற்றல் முறையோ!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
    மெல்பேண்ஆஸ்திரேலியா 

    எம்மதமும் மதுகுடிக்கச் சொல்லியதே இல்லை
    எந்நூலும் மதுநன்று எனச்சொன்ன துண்டோ
    புத்தரொடு வள்ளுவரும் புறக்கணிக்கச் சொன்னார்
    சித்தமதில் ஏற்றாமல் திரிகிறார் பலரும் !

    நாடிருக்கும் நிலையினிலே தேடுவதா மதுவை
    கேடுதரும் மதுநாட  யாருமக்குச் சொன்னார்
    வீடுவிட்டு வீதிவந்து மதுதேவை என்று
    விளக்குகிற வீணர்களை விலக்கிவிட வேண்டும்!

    நோயுற்றார் மனைகளிலே நொந்து மடிகின்றார்
    தாயாகச் சேவைசெய்வார் தம்மை இழக்கின்றார்
    மதுவில்லை என்பதனால் மனமுடைந்து போச்சு
    எனவுரைக்கும் மனிதரைநாம் என்னவென்று சொல்ல!

    மதுவாலே வருமானம் வருகிறதாய் நினைக்கும்
    மதியுரைஞர் தனையெண்ணத் தலைகுனிவாய் இருக்கு
    காந்திமகான் நடைநடந்து களம்கண்ட நிலத்தில்
    காசுக்காய் கடைதிறந்து மதுவிற்றல் முறையோ!

    Share
  • கொரோனா வரமா? சாபமா?

    கொரோனா வரமா? சாபமா?

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண்,  ஆஸ்திரேலியா

    கொரோனா வரமா சாபமா என்றால்… வரமென்றும் கருதலாம். சாபமென்றும் கருதலாம். சாபமென்னும் வேளை அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள். அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள். அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை. நாளாந்த வாழ்க்கையினையே புரட்டிப் போட்ட போக்கிரித்தனம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் குடும்பத்தைக் கூட்டி வைத்திருப்பதை நன்மையென்றே எடுத்துக் கொள்ளலாம். மனரீதியில் பாதிப்புகள் வருவதாக பல செய்திகள் வந்தாலும் வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டிலே இருக்கின்ற ஒரு நிலை உருவாகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகாலை அவசரப்பட்டு எழத் தேவையில்லை. அடித்துப்பிடித்து வேலைக்கு ஓடிப்போக வேண்டியதில்லை. பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியதும் இல்லை. அவர்கள் சுவையற்ற உணவுகளை உண்ண வேண்டியதும் இல்லை. கணவனும் மனைவியும் பிள்ளைகளுடன் சேர்ந்திருந்து மகிழ்வுற நல்ல தருணம். வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டியும் தனிமை என்னும் இருளைக் கடந்து வெளிச்சம் என்னும் மகிழ்வுக்குள் வந்துவிட்ட நிலைமை.

    தனித்திருத்தல் என்பது தடுப்புச் சுவராகும். விழித்திருப்பதென்பதும் நம்மையும் காத்து மற்றவர்களையும் காப்பாற்றுவது என்பதாகும். வீட்டில் இருப்பது என்பது வீட்டையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கு ஒப்பானதாகும்.

    ஓய்வு நேரம் கிடைக்காத என்று ஏங்கிய பலருக்கு கொரோனாவின் வரவால் நல்ல ஓய்வு கிடைத்திருக்கிறது. கிடைத்த ஓய்வைச் சாபமென நினைத்துச் சஞ்சலப்படுவதாகப் பல செய்திகள் நாளும் பொழுதும் வந்த வண்ணம் இருக்கின்றன. வீடற்றவர்கள் பலர் தெருவை வீடாக்கி சீவிதத்தை ஓட்டி வருகிறார்கள். அன்றாடங் காய்ச்சிகள் அவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையே பெரிய சங்கடம்! உண்ண உணவு கிடைத்தால் அவர்களுக்கு அதுவே ஆனந்தம்! தனிமை என்பதை அவர்கள் நினைத்தே பார்ப்பதும் இல்லை. வயிறு பசித்தால் உணவு கிடைக்கவேண்டும் கிடைத்தால் அதுவே நிம்மதி என்பதுதான் அவர்கள் நிலை.

    இருப்பதற்கு வீடு இருக்கிறது. அது சொந்த வீடாக இருக்கலாம். அல்லது வாடகை வீடாகக்கூட இருக்கலாம். எப்படியோ ஒரு வீடு  அமைந்துவிடும். வீட்டில் இருப்பதே பெரிய பாதுகாப்பு! வீதியை வீடாக்கி இருப்பார்க்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே! அவர்கள் வயிற்றை நிரப்பவே வழி தேடுகிறார்கள். ஆனால் வீடும் இருக்கிறது. வேலையும் இருக்கிறது. கொரோனாவால் வீட்டிலே இரு என்னும் நிலையை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது பொருத்தமற்ற ஒரு சிந்தனையே எனலாம். நல்ல ஒரு தருணம் நம்மைக் காத்திட நம்மைச் சார்ந்தவர்களைக் காத்திட வாய்த்திருக்கும் வேளை அதனைச் சாபமாக ஏன் நினைக்க வேண்டும். நல்ல வரமாக நினைத்தால் குறைந்தா போய்விடுவோம்?

    பிள்ளைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லலாம். அவர்களுடன் இருந்து விரும்பிய விளையாட்டை விளையாடலாம். எல்லோரும் சேர்ந்து சமைத்து மகிழலாம். நல்ல நூல்களை வாசிக்கலாம். உறவுகளுடன் , நட்புகளுடன் தொலைபேசியில் சுகம் விசாரிக்கலாம். பிராத்தனைப் பாடல்களை ஒன்று கூடிப்பாடலாம். நல்ல இசைநிகழ்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கலாம். கணினியில் பட்டி மண்டபங்கள், நற்சிந்தனைகள், பார்க்கலாம். சிரிப்பு நாடகங்களைக் கண்டு நம்மை மறக்கலாம். இப்படி என்ன என்ன நல்லன எல்லாம் இருக்கின்றனவோ அவற்றைக் குடும்பத்துடன் பார்த்து மனதைச் சிதற விடாமல் மகிழலாம் அல்லவா? அதற்கான நல்ல தருணமே இந்தத் தனிமைப்படுத்தல் என்பதை ஏன் மனத்தில் கொள்ள  மறுக்கிறோம்!

    பசுமையான நல்ல நினைவுகளை மீட்கலாம். அதனைக் குடும்பத்தாருடன் பகிர்ந்து பழைய வாழ்வினுக்கே செல்லலாம் அல்லவா? இளமையில் செய்த குறும்புத்தனங்களைக் குடும்பத்தாருடன் பகிர்ந்து மனம்விட்டுச் சிரித்து மகிழலாம் அல்லவா?

    கொரோனாவின் கொடூரம் ஒருபுறம். வீட்டில் இருக்கிறோமே என்றும் வருந்தினால் அது அதைவிடக் கொடூரமாயும் ஆகிவிடும். அத்தியாவசியத் தேவைகளில் வேலை செய்கின்ற மருத்துவர்கள், காவல்துறை சார்ந்தவர்கள், ஆம்புலன்ஸ் சாரதிகள், துப்பரவுத் தொழிலாளர், இவர்கள் யாவரும் குடும்பத்தை விட்டு, கொடூரக் கொரோனாவுக்குள் வேலைசெய்யும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை கொரோனா பற்றிய கொடூரத்தில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறும் அறிவுரையால் வீட்டிலே இருக்கின்ற நிலையை எப்படி வெறுக்க முடியும்? அப்படி இருப்பது மன உளைச்சலைத் தருகிறது என்று சொல்லுவது மனித தர்மமா? சற்று நிதானித்துச் சிந்திக்க வேண்டும்!

    Share
  • நான் காற்றுவாங்கப் போனேன் ஒரு க‌‌‌‌‌ஷ்டம் வாங்கி வந்தேன்!

    நான் காற்றுவாங்கப் போனேன் ஒரு க‌‌‌‌‌ஷ்டம் வாங்கி வந்தேன்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    பெல்பேண், அவுஸ்திரேலியா

    நான் காற்றுவாங்கப் போனேன்
    ஒரு க‌‌‌‌‌ஷ்டம்வாங்கி வந்தேன்
    அதைக் கேட்டு வாங்கவில்லை
    இப்போ கிலிக்குள் நிற்கிறேனே
    நான் காற்றுவாங்கப் போனேன்

    தொண்டை வரண்டு வருது
    எனக்கு தும்மல்கூட வருது
    உடலும் வலியாய் இருக்கு
    இப்போ உள்ளம் பயத்திலிருக்கு
    நான் காற்றுவாங்கப் போனேன்

    எச்சில் விழுங்கும் போதும்
    எனக்கு எரிச்சலாக இருக்கு
    மூச்சை இழுத்து நிற்க
    இப்போ சோர்வு அதிகமாச்சு
    நான் காற்றுவாங்கப் போனேன்

    பழத்தைக் கடித்துப் பார்த்தேன்
    அதன் இனிப்புத் தெரியவில்லை
    மலரை நுகர்ந்து பார்த்தேன்
    அதன் மணமும் உணரவில்லை
    நான் காற்றுவாங்கப் போனேன்

    உடனே ஓடிச் சென்றேன்
    எனக்கு உதவி நாடியங்கு
    கொரனோ என்று சொன்னார்
    குழம்பி அங்கு நின்றேன்
    நான் காற்றுவாங்கப் போனேன்

    வீட்டில் இருந்த வேளை
    எனக்கு எதுவும் நிகழவில்லை
    வீட்டை விட்டுச் சென்றேன்
    இப்போ வினைக்குள் மாட்டிவிட்டேன்
    நான் காற்றுவாங்கப் போனேன்

    Share
  • சிந்தையைத் திருத்தும் சிவராத்திரி

    சிந்தையைத் திருத்தும் சிவராத்திரி

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    முன்னாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்,
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மனிதர்களை மாண்புடன் வாழச் செய்வதற்கு நல்ல நெறிகளைக் காட்டி நிற்கும் உன்னதப் பணியினைச் சமயம் ஆற்றி வருகிறது. சமயம் என்பது சமூகத்தின் ஆணிவேர் எனலாம். காட்டில் விலங்குகளுடன் வாழ்ந்த மனிதனின் வாழ்வில் காலத்தின் மாற்றத்தினால் ஏற்பட்ட பலவித வளர்ச்சிப் படியில் சமயம் என்பது மிகவும் உன்னதமானது என்று கருத முடிகிறது. விலங்குகளுடன் இருந்த மனிதன், விலங்காய் விளக்கமின்றி இருந்த மனிதன், விலங்கினத்தினின்று வேறுபட்டு மாறுபட்டு நிற்பதற்குச் சமயமும் அது சார்ந்த கொள்கைகளும் ஒரு காரணம் என்பது  மறுத்துவிடக்கூடிய விடயமன்று.

    உலகின் தொன்மையான சமயம், சனாதன தர்மம், பல வாழ்வியல் கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட சமயம், நமது சைவ சமயம் எனும் பொழுது நாமெல்லாம் எவ்வளவு பெருமை கொள்ளுதல் வேண்டும்! பக்திப் பாடல்களைக் கொண்டிருக்கும் சமயம்கூட எங்கள் சைவ சமயமே ஆகும்! இசையினால் இறைவனை அடையலாம் என்னும் பாங்கில் பண்கள் பல கொண்ட பக்திப் பனுவல்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் சமயமும் எமது சைவ சமயமே ஆகும்!

    எங்கள் சைவ சமயம், இறைவழிபாட்டினை இலகுவாக்குவதற்குப் பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவு என்பது மிகவும் முக்கியமானது. அதேவேளை அந்த முக்கியமான உணவுகூட எங்களின் உள்ளத்தை, உடல் நலத்தைக் கூட பாதித்தும் விடலாம். அதனால் உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும், வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதை எமது சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை “விரதம்” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்புபடுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாக சைவர்களால் கருதப்படுகிறது.

    பசித்திரு – தனித்திரு – விழித்திரு. இவை தத்துவார்த்தமான பதங்களாகும். சொல்லுவதற்குக் கவிதை நடை போல இருந்தாலும் உயரிய பொருளினை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் கருத்தில் இருத்த வேண்டும். பசித்திருவில் – ப, தனித்திருவில் – த , விழித்திருவில் – வி , இம்மூன்று எழுத்தையும் சேர்த்தால் வருவது “பதவி” என்னும் சொல்லாகும். பசித்து தனித்து விழித்து இருந்தால் என்ன பதவி கிடைத்துவிடும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? பதவிகளுக்கெல்லாம் உயர்ந்த பதவி, அதாவது இறைவனது அருள் என்னும் பதவி, மனமாசு அகன்று மனம் மாண்புறும் பதவி, ஆணவமெனும் அழுக்கு அகன்று ஆண்டவன் நினைப்பு அகத்தில் எழுந்திடும் பதவி, என்று பல பதவிகள் எமக்கு வாய்க்கும் என்று எமது சைவ சமயம் எடுத்து இயம்பி நிற்கிறது.

    சிவராத்திரி நோன்புக் காலத்தில் ஆலயத்துக்குச் சென்று அரட்டை அடிப்பதோ, வீண் வம்புகள் பேசுவதோ, மற்றவரைக் குறை சொல்லுவதோ, தவிர்க்கப்பட வேண்டியதாகும். தனித்திருங்கள். புசிப்பதைத் தவிருங்கள். இறை எண்ணத்துடன் இறை புகழ் பாடி விழித்திருத்திருங்கள். இப்படி இருப்பதுதான் சிவராத்திரிக்கு நமது சமயம் கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.

    விழித்திருக்க வேண்டும் என்பதற்காக, சினிமாப் படங்களைப் பார்ப்பதோ, நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதோ முறையல்ல. விழிப்பது முக்கியமானதுதான். ஆனால் அந்த விழித்திருக்கும் நேரத்திலும் இறை நினைப்பாய் இருப்பதுதான் விழிப்புக்கு உரிய அர்த்தமாய் அமையும் என்பதையும் யாவரும் கருத்தில் இருத்துவது அவசியமாகும்.

    கருட புராணம், அக்னி புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் யாவும் சிவராத்திரியைப் பற்றி அதன் மகிமைகள் பற்றியெல்லாம் எடுத்தியம்புகின்றன. ஆலகால விஷத்தை ஈசன் உண்ட  நிகழ்ச்சியும், அடிமுடி தேடிய பிரம்மா விஷ்ணுவுக்கு ஒளிப்பிழம்பாகக் காட்சி கொடுத்த சம்பவமும், அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் ஈசனுக்குத் தனது கண்ணைப் பிடுங்கி அப்பியதும் அதனால் கண்ணப்பன் மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயருக்காக ஈசன் எமனைக் காலால் உதைத்ததும், குபேரன் செல்வந்தனாகியதும், என்று பல அற்புதங்கள் நிகழ்ந்த தினமாக சிவராத்திரி விளங்குகிறது என்னும் நம்பிக்கை பல காலமாக இருப்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    மாதம் மாதம் சிவராத்திரி வருகிறது. ஆனால் மாசி மாதத்தில் வருகின்ற சிவராத்திரியைத்தான் “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் அனுட்டிக்கின்றோம் . மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்குப் புராணக் கதைகளை விட, அறிவியல் ரீதியான விளக்கமே அனைவருக்கும் பயனை நல்கும் அல்லவா? ஆன்மீகம் என்பது வெறும் வார்த்தை அல்ல. ஆன்மீகம் அறிவியலுடன் இணையும் பொழுதுதான் அதன் உன்னதம் உயர்வடைகின்றது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே எங்கள் சமயம் தன்னை நிலைநிறுத்தி வருகிறது என்பதை மறுத்துவிட முடியாது. அந்த வகையில் மாசியில் வருகின்ற சிவராத்திரி “மகா” என்னும் உயர்நிலை எய்துவதற்கு உரிய காரணத்தை அறிவது அவசியம் அல்லவா?

    ஈத்தர் என்னும் சக்தி உலகத்தை இயக்குகிறது என்று அறிவியல் சொல்லுகிறது. இந்தச் சக்தியானது உலகம் முழுவதும், அண்டம் முழுவதும் நிறைந்தே இருக்கிறது. இந்தச் சக்தியானது பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறதாம்.

    பூமியானது சூரியனைச் சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதைகளில் சுற்றி வருகிறது. இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக்கு மாறுகின்ற நேரம்தான் “மகாசிவராத்திரி” வரும் நேரமாக அமைகிறது. ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே ஈத்தர் சக்தியின் அளவு அபரிமிதமாக இருக்கும். இப்படி அபரிமிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒருமுறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியை “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும்.

    மாசி மாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச் சக்தியும்  கிடைக்கும் நிலை, இந்த மகாசிவராத்திரிக்கே வாய்க்கிறது. மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து, தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்தச் சுரப்பி, ஆனந்த மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே ஆசீர்வாதம் (Self Blessing)  செய்துகொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) வில் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

    ஈத்தர் சக்தி என்பது, பகலிலும் உண்டு, இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்றுக் குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடுதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத்திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமய ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

    எமது சமயம், நல்ல நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சமயமாகும். ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான காரண காரியங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் விளங்கிக்கொண்டு விட்டோமானால் மனத்தில் ஐயம் என்பது அகன்றே ஓடிவிடும். ஐயந்தெளிதல் வேண்டும். ஐயம் தெளிந்தால் ஆண்டவன் அருளும் எமக்கு வாய்த்துவிடும். சிந்தையினை தெளிவாக்கல், சிவன் அருள் பெற வழியாகும். சிவராத்திரி நன்னாளில் சிந்தையைத் திருத்திட, சிவனை வேண்டுவது எமது தலையாய பணியாகும்.

    ” நற்றுணையாவது நமச்சிவாயவே”

    Share
  • என்னப்பா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    விரதமெலாம் தானிருந்து
    விரும்பியெனை இறைவனிடம்
    வரமாகப் பெற்றவரே
    வாய்மைநிறை என்னப்பா
    விரல்பிடித்து அரிசியிலே
    எழுதவைத்த என்னப்பா
    உரமாக என்னுள்ளே
    உணர்வோடு கலந்துவிட்டார்!

    தோள்மீது எனைத்தூக்கி
    தான்மகிழ்ந்து நின்றிடுவார்
    வாழ்நாளில் வீழாமல்
    வளரவெண்ணிப் பலசெய்தார்
    மெய்வருத்தம் பாராமல்
    எனையெண்ணித் தானுழைத்தார்
    கண்ணெனவே காத்துநின்றார்
    கருணைநிறை என்னப்பா!

    பொட்டுவைத்த என்முகத்தை
    கட்டிக்கட்டிக் கொஞ்சிடுவார்
    பட்டுச்சட்டை வாங்கிவந்து
    பரவசத்தில் மூழ்கிடுவார்
    இஷ்டமுடன் தன்மார்பில்
    எனையுறங்க வைத்திடுவார்
    அஷ்ட ஐஸ்வரியமென்று
    அனைவர்க்கும் சொல்லிடுவார்!

    நானுண்ட மிச்சமெலாம்
    தானெடுத்துச் சுவைத்திடுவார்
    அவர்பாதி நானென்று
    அவருக்குள் எண்ணிடுவார்
    உலகிலென்னை உயர்ந்தவனாய்
    உருவாக்க உருவானார்
    நிலவுலகில் என்னப்பா
    நிகரில்லா தெய்வமன்றோ!

    பட்டம்பல நான்பெற்றேன்
    பதவிகளும் வகித்துநின்றேன்
    கஷ்டம்பல பெற்றாலும்
    கைகொடுத்தார் என்னப்பா
    விருதுகளோ எனையணுகி
    விரும்பிவந்து சேர்ந்தனவே
    விரும்பிநின்ற என்னப்பா
    விண்ணுலகு சென்றுவிட்டார்!

    ஆளாக்கி விட்ட எந்தன்
    அன்புநிறை அப்பாவை
    அனுதினமும் எண்ணியெண்ணி
    அலமந்து நிற்கின்றேன்
    ஆண்டவனின் திருவுருவாய்
    அப்பாவைக் காணுகிறேன்
    அவர்நினைப்பை மனமிருத்தி
    அவர்வாழ்த்தை வேண்டுகிறேன்!

    Share
  • கொன்றுவிட்டால் சுவர்க்கம் கிடைக்குமா?

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    வெறி கொண்டு அலைகின்ற
    நெறி பிறழ்ந்த கூட்டமதால்
    கறை படியும் காரியங்கள்
    கண் முன்னே காண்கின்றோம்.
    பொறி புலன்கள் அவரிடத்து
    அழி என்றே சொல்லுவதால்
    குடி மக்கள் எந்நாளும்
    கதி கலங்கிப் போகின்றார்!

    மதம் என்னும் பெயராலே
    மதம் ஏற்றி நிற்கின்றார்
    சினம் என்னும் பேயதனை
    சிந்தை கொள வைக்கின்றார்
    இனம் என்னும் உணர்வுதனை
    இருப்பு கொள்ள வைக்குமவர்
    தினம் தீங்கு செய்வதிலே
    திருப்தி உற்றுத் திரிகின்றார்!

    மொழியுணர்வை மத உணர்வை
    இன உணர்வை அழிக்கின்றார்
    பழிதீர்க்கும் வெறி உணர்வை
    பாடம் எனப் புகட்டுகிறார்
    கொன்று விட்டால் சுவர்க்கமென
    கொள்கை தனைப் பரப்புமவர்
    கொன் றொழிக்கும் பாங்கினிலே
    கோர நடம் ஆடுகிறார்!

    வெறி கொண்டார் நெறிதிரும்ப
    வேண்டி நிற்போம் இறைவனிடம்
    நெறி பிறழ்ந்து போவாரை
    வழி மாற்ற முனைந்திடுவோம்
    வள்ளுவனார் ஆழ் கருத்தை
    உள்ளம் எல்லாம் பதித்திடுவோம்
    நல் இணக்கம் சமாதானம்
    நாட்டில் ஓங்கச் செய்திடுவோம் !

    Share
  • எண்ணியெண்ணி அழுகின்றோம்!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

    இரக்கமின்றி கொலைசெய்ய
    எம்மதமும் சொன்னதுண்டா?
    வணக்கத்தலம் வன்முறைக்கு
    வாய்த்ததென்றும் சொன்னதுண்டா?

    அரக்ககுணம் மனமிருத்தி
    அனைவரையும் அழிக்கும்படி
    அகிலமதில் எம்மதமும்
    ஆணையிட்டு சொன்னதுண்டா!

    ஈஸ்டர்தின நன்னாளில்
    இலங்கையினை அதிரவைத்த
    ஈனச்செயல் தனைநினைக்க
    இதயமெலாம் நடுங்குகிறதே!

    துதிபாடி துதித்தவர்கள்
    துடிதுடித்தார் குருதியிலே
    அதையெண்ணி அகிலமுமே
    அழுதேங்கி நிற்கிறதே!

    பிராத்தனைக்குச் சென்றவர்கள்
    பிணமாகிக் கிடந்தார்கள்
    பேயாட்டம் நடந்தேறி
    பெருந்துயரே எழுந்ததுவே

    இன்னுயிரை ஈந்தளித்த
    யேசுபிரான் சன்னதியில்
    இரத்தவெறி அரங்கேறி
    எடுத்ததுவே பலவுயிரை!

    மதங்கடந்து இனங்கடந்து
    மக்கள்மனம் சேரவேண்டும்
    மதவெறியை இனவெறியை
    மனம்விட்டு அகற்றவேண்டும்

    புவிமீது பொல்லாங்கு
    நிகழ்த்துகின்றார் அனைவருமே
    அறவழியில் வருவதற்கு
    ஆண்டவனை வேண்டிநிற்போம் !

    ஈழத்தின் துயரமதை
    எண்ணியெண்ணி அழுகின்றோம்
    வாழுகின்ற வயதினிலே
    மண்மீது சாய்ந்தார்கள்,

    ஆழமாய்ப் பதிந்துவிட்ட
    அவலமதை நினைக்கையிலே
    அழுகின்ற நிலைமாற
    ஆண்டுபல ஆகிடுமே!

                                    

                                   

    Share
  • இதோ, நம் வேட்பாளர்!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண் , ஆஸ்திரேலியா

    தேர்தல்தேர்தல் தேர்தலென்று
    தெருவெல்லாம் திரிகிறார்
    ஆளைஆளை அணைத்துபடி
    அன்புமுத்தம் பொழிகிறார்
    நாளைவரும் நாளையெண்ணி
    நல்லகனவு காண்கிறார்
    நல்லதெதுவும் செய்துவிட
    நாளுமவர் நினைத்திடார்  !

    மாலை மரியாதையெல்லாம்
    வாங்கிவிடத் துடிக்கிறார்
    மக்கள்வாக்கை பெற்றுவிட
    மனதில்திட்டம்  தீட்டுறார்
    வேலைபெற்றுத் தருவதாக
    போலிவாக்கை விதைக்கிறார்
    வாழவெண்ணும் மக்கள்பற்றி
    மனதிலெண்ண மறுக்கிறார்  !

    ஆட்சிக்கதிரை ஏறிவிட
    அவர்மனது துடிக்குது
    அல்லல்படும் மனதுபற்றி
    அவர்நினைக்க மறுக்கிறார்
    அதிகசொத்து பதவியாசை
    அவரைசூழ்ந்து நிற்குது
    அவரின்காசை அனுபவித்தார்
    அவர்க்குத்துதி பாடுறார் !

    அறத்தைப்பற்றி நினைத்திடார்
    அக்கறையை விரும்பிடார்
    இருக்கும்வரை அரசியலால்
    எடுத்துச்சுருட்ட நினைக்கிறார்
    வாக்களிக்கும் மக்கள்தம்மை
    போக்குக்காட்டி ஏய்க்கிறார்
    வாக்குக்கொண்டு போகுமாறு
    வாக்களிப்போம் வாருங்கள் !

    படத்துக்கு நன்றி: http://www.mowval.in
    Share