இலக்கியம்கவிதைகள்

மதுவிற்றல் முறையோ!

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
மெல்பேண்ஆஸ்திரேலியா 

எம்மதமும் மதுகுடிக்கச் சொல்லியதே இல்லை
எந்நூலும் மதுநன்று எனச்சொன்ன துண்டோ
புத்தரொடு வள்ளுவரும் புறக்கணிக்கச் சொன்னார்
சித்தமதில் ஏற்றாமல் திரிகிறார் பலரும் !

நாடிருக்கும் நிலையினிலே தேடுவதா மதுவை
கேடுதரும் மதுநாட  யாருமக்குச் சொன்னார்
வீடுவிட்டு வீதிவந்து மதுதேவை என்று
விளக்குகிற வீணர்களை விலக்கிவிட வேண்டும்!

நோயுற்றார் மனைகளிலே நொந்து மடிகின்றார்
தாயாகச் சேவைசெய்வார் தம்மை இழக்கின்றார்
மதுவில்லை என்பதனால் மனமுடைந்து போச்சு
எனவுரைக்கும் மனிதரைநாம் என்னவென்று சொல்ல!

மதுவாலே வருமானம் வருகிறதாய் நினைக்கும்
மதியுரைஞர் தனையெண்ணத் தலைகுனிவாய் இருக்கு
காந்திமகான் நடைநடந்து களம்கண்ட நிலத்தில்
காசுக்காய் கடைதிறந்து மதுவிற்றல் முறையோ!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க