அண்ணாகண்ணன்

இந்தக் கவிதையை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்

 

****************

விரைந்து செல்லும் வாக னத்தில்
ஜன்னல் ஓரம் சாய்கிறேன்!
விரியும் காற்று முகத்தில் மோத,
மவுனத் தேனில் தோய்கிறேன்!

மழையில் நனையும் போதில் கண்ணீர்
மறைந்து வழியும் கண்ணிலே!
பழைய பாடல் ஒலிக்கும் நேரம்
பனிக்கும் என்றன் கண்களே!

தூய சிரிப்பைப் பார்க்கப் பார்க்க,
துள்ளும் என்றன் இதயமே.
நேயம் ஓங்கும் நேரம் எல்லாம்
நெஞ்சம் விம்மி நெகிழுமே!

எளிய மனிதர் வெல்லும் செய்தி
எனக்குள் சக்தி பாய்ச்சுமே!
துளியில் வெள்ளம் விதையில் ஆலம்
வடிவ மாயை மாயுமே!

நீதி வெல்லும் ஜோதி வெல்லும்
நிறையும் எங்கும் உண்மையே!
மேதினிக்குள் நல்லவர்க்கு
மேன்மை உண்டு மேன்மையே!

எண்ணெய் இல்லாத் தீபத்திற்குள்
என்னை ஊற்ற ஆவலே!
எண்ணம் முற்றும் வற்ற வேண்டும்
இங்கு தேவி காவலே!

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.