அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (10.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி – 257

 1. படக் கவிதை போட்டி 257

  நம்பிக்கை

  வேகமான நகரத்தில்
  விரைவாக செல்வோரே
  சோகமே எங்களது
  சொத்தாகும் அறிவீரோ ?

  ஆழக் குழி தோண்டி
  அஸ்திவாரமிட்டு – பிறர்
  வாழக் கட்டிடங்கள்
  வாகாய் கட்டிடுவோம் !

  வானம் கைகுலுக்கும்
  வண்ணக் கட்டிடங்கள்
  எத்தனையோ நாங்கள்
  எடுத்துக் கட்டி விட்டோம் !

  சொந்தக் குடிசை என்று
  சொல்ல எதுவுமில்லை
  வண்ணமிட்ட கைகளுக்கு
  அன்னமிட யாருமில்லை !

  கோவில் சுவர் எங்கள்
  கூடும் இடமாகும் – எம்
  நாவில் உணவு படவே
  நாட்கள் பலவாகும் !

  ஆளுக்கு அரைக்குவளை
  அளவாக நீர் உண்டு
  தாவிக் குடித்தே பசித்
  தாகம் தீர்த்திடுவோம்

  நீராகாரம் முன்பு நாங்கள்
  நிதமும் பருகிடுவோம்
  நீரே ஆகாரமாகும்
  நிலை வந்து விடுமோ ?

  எங்களுக்குள் பயம்
  எட்டிப்பார்க்கும் நிதம்
  கண்களில் நீர் தாரை
  கொட்டித்தீர்க்கும் !

  தாளாப் பசியினிலும்
  தளராது எங்கள் மனம்
  உள்ளுணர்வு வந்து
  உரைத்தது மெதுவாக

  வந்துவிட்ட ஊரடங்கு
  விரைவாகத் தகருமென !
  எங்கள் வாழ்க்கை
  இயல்பாக நகருமென !

  நாங்கள் மூவருமே
  நன்று உணர்ந்திட்டோம்
  நம்பாமை இனி தாழ்வு
  நம்பிக்கையே வாழ்வு !

  ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்

 2. ஓட்டுக்காக பணத்தை கை நீட்டி வாங்கியபோது தெரியலை சாமி

  நாட்டுக்காக உழைக்கிறவர்களுக்கு ஓட்டுப் போடாமல் வீட்டுக்காக அரசியல் பிழைப்பு நடத்துபவர்களுக்கு சிந்திக்காமல் வாக்களித்து இப்போது சிந்திப்பதால் ஏன்ன பலன்

  சிந்திக்கிற நேரத்தில் சிந்திக்க மறந்ததால் சந்ததிகள் விலாசத்தை தொலைத்து விடுமோ என்ற அச்சமோ

  எளிமை வலிமை என்பது எளியவர்களான நமக்கு புரிய வைக்க எளிமையான தலைமை கிடைக்கவே கிடைக்காது என்ற விரக்தியின் பார்வையோ

  மும்மூர்த்திகள் நாட்டை ஆள்கிறது அதாவது ஊழல் லஞ்சம் கொள்ளை அதன் பாதிப்பால் உண்மை நீதி நேர்மை சந்தியில் நிற்கிறது பரிதாபமாக என்பதன் பிரதிபலிப்போ

 3. இத எங்கள் மதிய உணவு வேளை
  பத்து நிமிடங்கள் அமர்வோம்
  அரை பசி உணவு உண்ட பின்

  வஞ்சமில்லை நெஞ்சில்
  பஞ்சமில்லை எண்ணத்தில்
  கெஞ்சவில்லை எவரிடத்தும்
  அஞ்சவில்லை உழைப்பதற்கு

  வங்கி மோசடி தெரியாது
  ஓங்கி பேசவும் தெரியாது
  ஏங்கி வாழவும் தெரியாது
  தூங்கி வீணாவதும் தெரியாது

  தஞ்சை கோயிவைக் கட்டியவர்கள் எங்கள் பாட்டன்கள்
  பெயரை கல்வெட்டில் பதிய வைத்து உழைப்புக்கு மதிப்பளிந்தது மன்னராட்சி

  தனிமனித வழிப்பாட்டில்
  குடும்ப அரசியல் சாக்கடையில்
  மக்களாட்சி என்ற பெயரில்
  உழைப்பாளி விலாசமில்லாத தபாலாக இருப்பதைத்தான் ஏற்க முடியல

  உழைக்க சலைத்ததில்வை

  உழைப்பிற்கேற்ற ஊதியமிவ்வை

  உழைப்பைத்தவிர ஏதிலும் நம்பிக்கையில்லை

  உழைப்பவன் ஒருநாளும் தாழந்ததில்லை

  உழைத்து உயிர் விட்டவனில்லை
  உழைத்தவனை உழைப்பு ஒருநாளும் கைவிட்டதில்லை

  உயரச் செல்கிறோம் உழைக்க
  கட்டிடங்கள் விண்ணை முட்ட

  உயர்ந்த இடத்தில் இருக்கிறோம்
  வியர்வை தரும் உழைப்பால்

  மனத்தை தவிர உலகில் உயர்ந்த இடம் எதுவுமில்லை என்பதால்

 4. மூவரும் உழைப்பால் மட்டுமே ஒன்றான வர்கள் அல்லர்
  உறவுமுறையிலும்

  அப்பா மகன் மருமகன்
  ஆலோசனையில் அதுவும்
  அதிதீவிர ஆலோசனையில்

  நாற்பது நாட்கள் குடியை மறந்திருந்தோம் குடிசையில்
  குடியிருந்ததோ பூரண நிம்மதி

  மறக்க முடிந்தது மதுவை
  துறக்க முடிந்தது போதையை
  வியக்க கண்டது புதிய பாதையை

  திறக்கட்டும் மீண்டும் கையாலாகத அரசுகள்

  துறந்தது துறந்ததுதான
  மறந்தது மறந்தது தான்
  மது எதற்கு இனி என்றான பின்பு
  இலவசமாய் தந்தாலும் மது மலமே

  மாமா நீ உழைக்கவே வேண்டாம்
  குடிக்காம இரு பிள்ளைக்கு அப்பனாய்
  பாடம் நடத்தி விட்டாள் பெஞ்சாதி

  குடி குடியை கெடுக்கும்
  வாசகம் அரசுக்கு பொருந்தாதா
  ஆறு வயசு பையன் கேட்கிறான்

  உழைப்பவன் உயர்வாக சிந்திக்க மறக்கடிக்கவே மது
  அரசியல் சதுரங்கத்தில்
  உழைப்பாளி களைத்தான்
  பகடைக்காய்களாக
  உருட்டி விளையாடுகின்றன
  ஆளுங்கட்சியும்
  எதிர்க்கட்சியும்

  இருகட்சிகளுமே கூட்டணி
  அமைப்பர் மது விசயத்தில்

  அமாவாசை அன்று மூடிய மதுக்கடைகளை மீண்டும் ஒளிமயமான பவுர்ணமி அன்று அரசு திறக்கலாம்

  குடும்பத்தை அமாவாசை இருட்டாக்கும் மதுவிற்கு
  தர்ப்பணம் பண்ணியாச்சு

  தனிமனிதன் திருந்திய பின்பு
  எவன் குரல் எதற்கு

  மதுக்கடைகளை மூடிப் பாரு
  முதலில் விபத்துக்கள் குறையும்
  மருத்துவமனைக்கு வேலையில்லை
  குற்றங்கள் குறையும்
  தேசபக்தி வளரும்

  குடி குடியை கெடுக்கும்
  அரசும் சிந்தனை கொண்டால்
  குடி மாநிலத்தை கெடுக்கும்
  குடி நாட்டைக் கெடுக்கும்

  மூவர் நாங்கள் சிந்தித்து விட்டோம்
  சிந்திய வியர்வை துளிகள்
  பெண்டாட்டி பிள்ளைகளுக்கே

  அவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கும் மதுவிற்கல்ல.

 5. உதவிடு உழைப்பவர்க்கு…

  உழைப்பவர் ஓய்வில் அமர்ந்திடலாம்
  ஊதியம் உழைப்பு இரண்டுமிலை,
  அழைத்திடும் வயிறு பசியினிலே
  அடங்கா ததுதான் வெறும்நீரில்,
  அழையாக் கொடுநோய் வந்ததாலே
  அல்லல் படுவார் அனைவருமே,
  உழைப்போர் உண்டிட வழிவகுத்தே
  உயிர்க்கொலும் நோயையும் ஓட்டுவோமே…!

  செண்பக ஜெகதீசன்…

 6. படக்கவிதைப் போட்டி 257

  எப்போது திறக்குமென்று காத்திருக்கிறாயோ
  ஏன் இப்படியானோமென நினைக்கிறாயோ
  கொரோனாவை அழிக்குமென இதை குடிக்கிறாயோ
  குடும்பத்தில் நிம்மதியை குலைக்கிறாயோ

  காடுமேடுக் காட்டில் நிற்கிறாயோ
  காசுபணம் நிரம்ப வைத்திருக்கிறாயோ
  குடல் தின்னும் திரவமதில் மயங்குகிறாயோ
  குடும்ப மானம் பறிபோக நினைக்கிறாயோ

  உன் சுற்றங்கள் நினைவில்தான் வரவில்லையோ
  குதூகலமாய் உன் மழலைமுகம் தெரியவில்லையோ
  தாலி கட்டியவள் கண்ணீரை நிறுத்தவில்லையோ

  மௌனமாய் இருப்பதால் நீ
  ஞானியல்ல
  மடைதிறந்த மது உனக்கு நல்லதல்ல
  உடற்பயிற்சி யோகா தினம் உடனே செய்க
  உன்னத நிலை அடைந்திடு வாழ்வை இனிதே வெல்ல!!!!!

  சுதா மாதவன்

  ************

 7. அரசின் வருவாய் பெருக
  மதுக்கடலில் மக்களா?
  எதிர்ப்பு சக்தி தரும் என்கிறார்களே
  அதை எதிர்க்கும் சக்தி நம்மிடம் இல்லையா?
  உன் வாழ்க்கை உன் கையில்
  அமர்ந்திருந்து யோசி
  ஆவாய் நீ சன்யாசி
  புதுமைமிகு எண்ணம் எழும்
  பொலிவு பெறும் இது திண்ணம்

  சுதா மாதவன்

  ***************

 8. போதுமென்ற மனம்

  பாடுபட்டு தானுழைக்கும் பாட்டாளிக்குக்
  காடு வேண்டாம் கழனி வேண்டாம்
  பட்டுச் சட்டை பீதாம்பரம் வேண்டாம்
  மேலுடுத்தி மானங்காக்க ஆடை போதும்

  வீடு கட்டி வாழ வைக்கும் உழப்பாளிக்கு
  கோட்டை வேண்டாம் கொத்தளம் வேண்டாம்
  தங்கம் வெள்ளி பித்தளை வேண்டாம்
  ஓய்வொடுக்க கூரை வீடு அஃதே போதும்

  சோறு போட்டு உயிர் காக்கும் விவசாயிக்கு
  கூழ் கஞ்சி இருந்தால் போதும்
  பாதை போடும் தொழிலாளியை தெருவில்
  நடக்க அனுமதி தந்தால் போதும்

  நாட்டு மக்கள் நலங்காண
  திட்டம் தீட்ட வகையின்றி
  ஓட்டதனை காசுக்குப் பெறும்
  குடியாட்சி ஒன்றே போதும்

  கனவு கொண்டு முயற்சி இன்றி
  மதுக்கடையில் வாழ்வு தொலைத்து
  இலவசத்தில் வாழ்ந்திருந்தால்
  போதுமென்ற மனமே போதும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *