விபுலானந்த அடிகளாரின் பன்முகப் பரிமாணங்கள்

0
vibulanandhar

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா 

விபுலானந்த அடிகளார் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் ஐம்பத்து ஐந்து வருடங்கள் மட்டுமே. ஆனால் இக்காலக் கட்டத்துக்குள் அவரின் வாழ்வானது மூன்றுவித அனுபவங்களைக் கொண்டதாக அமைகிறது. ஈழத்தில் பிறந்த அடிகளார், இந்தியாவில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவும் தமிழ் நாடாகிய தென்னிந்தியாவிலும் தமிழ் பேசாத வட இந்தியாவிலும் இருக்கின்ற சூழலும் அடிகளாருக்கு ஏற்படுகிறது. இதனால் மூன்று விதமான சூழலும் அங்கே கிடைத்த அனுபவங்களும் அடிகளாரின் பணிகளில் சிந்தனைகளில் செயற்பாடுகளிலெல்லாம் பல தாக்கங்களுக்குக் காலாகவும் இருந்திருக்கும் என்பதும் கருத்திருத்த வேண்டியதே.

பிரித்தானியர் ஆட்சியில் இந்தியா சிக்கித் தவித்த காலம். வட இந்தியாவில் ஒரு போக்கும் தமிழ்நாட்டில் இன்னொரு போக்கும் சமூகத்தில் எழுந்து நின்ற காலம். சாதிப் பிரிவினை வடக்கில் காந்திய இயக்கத்தால் எதிர்க்கப்பட்டது. தீண்டாமை என்பது இருந்தால் தேசிய உணர்வு ஏற்படுதல் தடையாகும் என்பதால் காந்தி அவர்கள் தீண்டாமைக்கு எதிர்க்குரல் கொடுத்தார். தமிழ்நாட்டில் பிராமணர் ஆதிக்கம் யாவற்றிலும் முன்னின்றதால் அதனை உடைக்க திராவிட இயக்கம் தலைதூக்கி, தமிழியக்கத்தை முதன்மைப்படுத்தித் தனித்தமிழ் வாதத்தை ஓங்கி ஒலித்த சூழல் அங்கு காணப்பட்டது. இலங்கையிலோ சமயமாற்றம், இனவாதம், சாதிப் பிரச்சினை என்பவற்றோடு தமிழ்ப்பகுதிகளில் மரபுவழி தமிழ் இலக்கியங்கியங்களைப் பேணுவதும், சைவத்தைக் காப்பதுவுமான ஒரு சூழல் காணப்பட்டது எனலாம்.

இப்படியான சூழலில் சுவாமி அவர்கள் வாழும் நிலை ஏற்பட்டதால் அவரின் நடவடிக்கைகளிலும் இம்மூன்று சூழல்களும் பாதிப்பினை உண்டாக்கத் தவறவில்லை என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள். தாய்மொழியுடன் ஆங்கிலம், சமஸ்கிருதம், சிங்களம், பாலி , லத்தீன், கிரோக்கம், அரபி, என்று பன்மொழி அறிவினையும் சுவாமி அவர்கள் பெற்றிருக்கிறார்கள். பன்மொழி அறிவால் அவரின் பார்வை குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடவில்லை. அவரின் எண்ண ஓட்டங்கள் பரந்துபட்டனவாகவே அமைந்திருந்தன.

மரபுவழியில் தமிழினைக் கற்று தமிழில் பண்டிதர் பட்டமும் பெற்றவராக இருந்த பொழுதும் அவரின் விஞ்ஞானப் பட்டப்படிப்பு அவரை பழமைக்குள் மட்டும் அமுங்கிவிடச் செய்துவிடவில்லை என்பது மிகவும் முக்கியக் கருத்தெனலாம். பண்பாட்டினைக் கட்டிக்காத்து சமயநெறிகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தை உள்ளிருத்தி வாழ்ந்தாலும் அவரின் சிந்தனைகள், செயற்பாடுகள் சமூகத்தின் புரையோடிப் போன புறம்போக்கான நடவடிக்கைகளை மட்டும் ஏற்றுவிடும் மனப்பாங்கு அவரிடம் காணப்படவில்லை என்பதும் மனத்தில் இருத்தவேண்டியதே.

சைவ சமயச் சூழலில் சைவராக வாழ்ந்த சுவாமிகள் ஆரம்பத்தில் சித்தாந்தத்தைப் பெரிதென எண்ணுகிறார். பின்னர் அவரின் போக்கு இராமகிருஷ்ண மடத்துடன் இணைந்துவிடும் நிலையில் வேதாந்தமே முன்னுரிமை வகிக்கும் நிலை உருவாகிறது. இராமகிருஷ்ண அமைப்பில் சேருமுன் சுவாமிகளின் சிந்தனை, எழுத்து, செயற்பாடுகள் வேறு. இராமகிருஷ்ண அமைப்பில் இணைந்த பின்னர் அவரின் எழுத்துகள், நடவடிக்கைகள், சமூகப் பார்வைகள் வேறாகவே இருந்தன என்பதை அவரின் வரலாற்றில் கண்டுகொள்ள முடிகிறது. சமரச சன்மார்க்க நெறி என்பதே அவரின் மனத்தை நிறைத்து நின்றது எனலாம்.

மொழிபெயர்ப்புகள் செய்தார். மரபுக் கவிதைகள் யாத்தார். பலவிதமான கட்டுரைகளை எழுதினார். பத்திரிகை ஆசிரியராக விளங்கினார். ஆராய்ச்சி நூல்களை எழுதினார். இசைபற்றி ஆராய்ந்தார். அவரின் அரிய முயற்சியால் பழந்தமிழ் இசையின் பரிணாமம் என “யாழ் நூல்” எழுந்து வந்தது. இந்த நூலின் வருகை, பலரையும் பிரமிக்க வைத்தது. பழங்கால இசை மரபைத் தனது இசை அறிவாலும், கணித அறிவாலும், தமிழ் அறிவாலுமே யாழ்நூலாக அடிகளார் அவர்கள் ஆக்கி அளித்தார் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

அறிஞர்கள் யாவரும் போற்றும் வண்ணம் இப்படைப்பு வந்திருக்கிறது என்றால் அந்த அளவு ஆளுமையினை அடிகளாரின் கல்விப்புலமே வழங்கி இருக்கிறது எனலாம். யாழ்நூலினை ஆராய்கின்ற பொழுது தமிழிசையினைக் கணித மொழியினில் விளக்க முயன்ற திறனையே காட்டுகிறது எனலாம்.

பன்மொழி அறிவால் பன்னாட்டு நூல்களையும் அங்குள்ள பண்பாடு, கலாச்சாரங்களையும் மூல மொழியிலே கற்று விளங்கும் ஆற்றலை அடிகளார் பெற்றவர் ஆகிறார். மரபுவழிவந்த தமிழ் அறிஞர்களிடம் கல்வி கற்றாலும் கூட அடிகளாரின் எண்ணங்கள் விசாலம் அடைவதற்குப் பன்மொழி ஆற்றல் கைகொடுத்த காரணத்தால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை அடிகளார் புறந்தள்ளுகிறார். அக்காலத் தமிழ் அறிஞர்களிடம் காணப்பட்ட அத்தனை அறிவும் ஆற்றலும் அடிகளாரிடமும் காணப்பட்ட போதிலும் – அவர் அத்தகைய பழைமை பேணும் அறிஞர்கள் வரிசையில் தாமும் இடம்பெற்று நின்றுவிட விரும்பவில்லை. அவரின் கலை, இலக்கியம், சமூகம் பற்றிய பார்வையானது உலகின் பரந்துபட்ட சிந்தனைகளுடன் தமிழினையும் உற்று நோக்குவதாகவே அமைந்திருந்தது என்பதுதான் கவனத்தில் இருத்த வேண்டிய கருத்தெனலாம்.

அகில உலகப் பார்வையினால் அடிகளின் சமூக நோக்கும் அதன் அடிப்படையிலே எழுச்சி பெற்றது எனலாம். உயர்வு தாழ்வு பார்ப்பதை அவரது உள்ளம் ஏற்றிட மறுத்தது. இதனால் சாதியைப் பற்றிய எண்ணமே அவரின் மனத்தில் இருந்திட  மறுத்தே  விட்டது  எனலாம். செயல்களினால் மனிதர்கள் வேறுபடலாமே ஒழிய, பிறப்பினால் அல்ல என்னும் சிந்தனை அடிகளாரின் மனதில் வேரூன்றி நின்றது.

விஞ்ஞானம் படித்தவர் மெய்ஞ்ஞானி ஆகிறார். இராமகிருஷ்ண அமைப்பு அடிகளிடம் பல மாற்றங்களுக்கு வழி சமைக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பொழுது, ஒதுக்கப்பட்டவர்கள், கல்விகற்க வழியற்றவர்களை நாடிச்சென்று அவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்து அவர்களின் நலனில் அடிகளார் காட்டிய அக்கறை, அவரின் சமூக, சமத்துவ மனப்பாங்கினுக்கு மிக்கதோர் சான்று எனலாம்.

பாரதியாரைப் பெரும்புலவர் என்றோ அவரின் கவிதைகளை தமிழ்க் கவிதைகள் என்றோ தமிழ்நாட்டில் இருந்த பழந்தமிழ்ப் பண்டிதப் பரம்பரை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தமிழ்நாட்டில் பிறந்த பாரதியைச் சமூகத்தின் முன்னே கொண்டுவந்து காட்டி, பாரதிக்கும் அவரது படைப்பினுக்கும் முன்னுரிமையினை ஈழத்தவராக இருந்தும் சுவாமி விபுலானந்தர் எடுத்துக் கொடுத்திருக்கிறார். இதற்குக் காரணம் சுவாமிகளின் பழமைக்கும் புதுமைக்குமான பொருத்தப்பாடு எனலாம். புதுக்கவிதை  எழுதுபவர்கள் பாரதியைத் தொடுகிறார்கள். வசன கவிதையைக் கையில் எடுப்பவர்கள் பாரதியைப் பார்க்கிறார்கள். மரபுக் கவிஞர்கள்கூட பாரதியின் கற்பனை ஆற்றலில் கட்டுண்டு போகிறார்கள். இந்த வகையில் பாரதிக்கு முன், பாரதிக்குப் பின் என்று சொல்லும் நிலையும் இன்று ஏற்பட்டிருக்கிறது. பாரதியின் பாடல்கள் பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை படிப்பிக்கவும் படுகிறது. இப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்றும் அடிகளாரின் சிந்தனையில் அன்றே உதித்திருக்கிறது. இதைத்தான் ஆத்மீக பலம் என்கிறோம். ஆத்மீக பலம் மிக்க அடிகளார் எதைச் செய்தாலும் அவையாவுமே அன்றும் பயனை நல்கியது. இன்றும் நல்கிக் கொண்டே இருக்கிறது  என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

“தோன்றிற் புகழொடு தோன்றுக” என்பது முற்றிலும் அடிகளாருக்கே மிகவும் பொருந்துவதாக அமைகிறது. ஈழத்தில் காரைதீவு என்னும் கிராமத்தில் பிறந்தவர் இமயமலைவரை சென்று இமாலய சாதனையின் நாயகனாக மிளிர்ந்தார் எனும் பொழுது கருவிலேயே திருவினைப் பெற்றே அடிகளார் பிறந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை எனலாம். சாதாரண விஞ்ஞான ஆசிரியராய் ஆரம்பித்து யாழ்ப்பாணம் சென்று அங்கு தனது வாழ்வினைத் திருப்பி விடுகிறார். அடிகளார். கல்வியால் திருப்பம். சிந்தனையால் திருப்பம். மயில்வாகன விஞ்ஞான ஆசிரியராக யாழ்ப்பாணம் சென்றவர், பாதை மெய்ஞ்ஞானச் சிந்தனையில் விரிந்து, சுவாமி விபுலானந்தர் ஆகிவிடுகிறார். பழமையில் ஊறியவர் பழமையையும் புதுமையையும் சரிவர உணர்ந்து சரியான வழியினைத் தேர்ந்தெடுத்து சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் சிந்தையில் இருத்தி, சமூக ஈடேற்றத்துக்கு எது சிறந்தது என்பதை உள்ளத்து இருத்தி அதன்வழியில் செயலாற்றி, சமூகத்தில் ஏற்றுதலுக்கும் போற்றுதலுக்கு உரியவராக உயர்ந்து நிற்கிறார்.

கல்வித் தொண்டு, சமூகத் தொண்டு, இலக்கியத் தொண்டு, இவை யாவற்றையும் எடுத்து நோக்கும் பொழுது அவரின் பிறப்பு தமிழ்ச் சமூகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். பழமையில் வளர்ந்தாலும் புதுமையில் பயணித்தார். தனித்தமிழ் விரும்பினாலும் பன்மொழிப் புலமையினையும் ஒதுக்கிவிட விரும்பவில்லை. மரபிலே முகிழ்த்தாலும் விஞ்ஞானம் அவரை விரிவுபடுத்தியது. அதனால் குறுகிய பாதைகள் குறுக்கிடுவதை ஒதுக்கியே விட்டார். சித்தாந்த நிலையிலிருந்து வேதாந்த நிலைக்கு வந்தமையால் அவரின் நோக்கும் செயலும் பரந்து பட்டதாகவே காணப்பட்டது. கலைஞராய் விளங்கினார். அறிஞராய் விளங்கினார். நிறைவில் துறவியாய் உயர்வு பெற்றார். தாமரை இலைத் தண்ணீராய் அடிகளார் வாழ்வு அமைந்திருந்தது. ஆனால் அவரின் உள்ளம், வெள்ளைக் கமலமாகவே இருந்தது.

—————————————————————

தொடர்புடைய கட்டுரை :

சுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப் புலமையும் வாய்க்கப்பெற்ற சந்தர்ப்பங்களும்

https://www.vallamai.com/?p=91090

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.