சிந்தையைத் திருத்தும் சிவராத்திரி

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
முன்னாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்,
மெல்பேண், ஆஸ்திரேலியா

மனிதர்களை மாண்புடன் வாழச் செய்வதற்கு நல்ல நெறிகளைக் காட்டி நிற்கும் உன்னதப் பணியினைச் சமயம் ஆற்றி வருகிறது. சமயம் என்பது சமூகத்தின் ஆணிவேர் எனலாம். காட்டில் விலங்குகளுடன் வாழ்ந்த மனிதனின் வாழ்வில் காலத்தின் மாற்றத்தினால் ஏற்பட்ட பலவித வளர்ச்சிப் படியில் சமயம் என்பது மிகவும் உன்னதமானது என்று கருத முடிகிறது. விலங்குகளுடன் இருந்த மனிதன், விலங்காய் விளக்கமின்றி இருந்த மனிதன், விலங்கினத்தினின்று வேறுபட்டு மாறுபட்டு நிற்பதற்குச் சமயமும் அது சார்ந்த கொள்கைகளும் ஒரு காரணம் என்பது  மறுத்துவிடக்கூடிய விடயமன்று.

உலகின் தொன்மையான சமயம், சனாதன தர்மம், பல வாழ்வியல் கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட சமயம், நமது சைவ சமயம் எனும் பொழுது நாமெல்லாம் எவ்வளவு பெருமை கொள்ளுதல் வேண்டும்! பக்திப் பாடல்களைக் கொண்டிருக்கும் சமயம்கூட எங்கள் சைவ சமயமே ஆகும்! இசையினால் இறைவனை அடையலாம் என்னும் பாங்கில் பண்கள் பல கொண்ட பக்திப் பனுவல்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் சமயமும் எமது சைவ சமயமே ஆகும்!

எங்கள் சைவ சமயம், இறைவழிபாட்டினை இலகுவாக்குவதற்குப் பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவு என்பது மிகவும் முக்கியமானது. அதேவேளை அந்த முக்கியமான உணவுகூட எங்களின் உள்ளத்தை, உடல் நலத்தைக் கூட பாதித்தும் விடலாம். அதனால் உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும், வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதை எமது சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை “விரதம்” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்புபடுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாக சைவர்களால் கருதப்படுகிறது.

பசித்திரு – தனித்திரு – விழித்திரு. இவை தத்துவார்த்தமான பதங்களாகும். சொல்லுவதற்குக் கவிதை நடை போல இருந்தாலும் உயரிய பொருளினை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் கருத்தில் இருத்த வேண்டும். பசித்திருவில் – ப, தனித்திருவில் – த , விழித்திருவில் – வி , இம்மூன்று எழுத்தையும் சேர்த்தால் வருவது “பதவி” என்னும் சொல்லாகும். பசித்து தனித்து விழித்து இருந்தால் என்ன பதவி கிடைத்துவிடும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? பதவிகளுக்கெல்லாம் உயர்ந்த பதவி, அதாவது இறைவனது அருள் என்னும் பதவி, மனமாசு அகன்று மனம் மாண்புறும் பதவி, ஆணவமெனும் அழுக்கு அகன்று ஆண்டவன் நினைப்பு அகத்தில் எழுந்திடும் பதவி, என்று பல பதவிகள் எமக்கு வாய்க்கும் என்று எமது சைவ சமயம் எடுத்து இயம்பி நிற்கிறது.

சிவராத்திரி நோன்புக் காலத்தில் ஆலயத்துக்குச் சென்று அரட்டை அடிப்பதோ, வீண் வம்புகள் பேசுவதோ, மற்றவரைக் குறை சொல்லுவதோ, தவிர்க்கப்பட வேண்டியதாகும். தனித்திருங்கள். புசிப்பதைத் தவிருங்கள். இறை எண்ணத்துடன் இறை புகழ் பாடி விழித்திருத்திருங்கள். இப்படி இருப்பதுதான் சிவராத்திரிக்கு நமது சமயம் கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.

விழித்திருக்க வேண்டும் என்பதற்காக, சினிமாப் படங்களைப் பார்ப்பதோ, நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதோ முறையல்ல. விழிப்பது முக்கியமானதுதான். ஆனால் அந்த விழித்திருக்கும் நேரத்திலும் இறை நினைப்பாய் இருப்பதுதான் விழிப்புக்கு உரிய அர்த்தமாய் அமையும் என்பதையும் யாவரும் கருத்தில் இருத்துவது அவசியமாகும்.

கருட புராணம், அக்னி புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் யாவும் சிவராத்திரியைப் பற்றி அதன் மகிமைகள் பற்றியெல்லாம் எடுத்தியம்புகின்றன. ஆலகால விஷத்தை ஈசன் உண்ட  நிகழ்ச்சியும், அடிமுடி தேடிய பிரம்மா விஷ்ணுவுக்கு ஒளிப்பிழம்பாகக் காட்சி கொடுத்த சம்பவமும், அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் ஈசனுக்குத் தனது கண்ணைப் பிடுங்கி அப்பியதும் அதனால் கண்ணப்பன் மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயருக்காக ஈசன் எமனைக் காலால் உதைத்ததும், குபேரன் செல்வந்தனாகியதும், என்று பல அற்புதங்கள் நிகழ்ந்த தினமாக சிவராத்திரி விளங்குகிறது என்னும் நம்பிக்கை பல காலமாக இருப்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

மாதம் மாதம் சிவராத்திரி வருகிறது. ஆனால் மாசி மாதத்தில் வருகின்ற சிவராத்திரியைத்தான் “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் அனுட்டிக்கின்றோம் . மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்குப் புராணக் கதைகளை விட, அறிவியல் ரீதியான விளக்கமே அனைவருக்கும் பயனை நல்கும் அல்லவா? ஆன்மீகம் என்பது வெறும் வார்த்தை அல்ல. ஆன்மீகம் அறிவியலுடன் இணையும் பொழுதுதான் அதன் உன்னதம் உயர்வடைகின்றது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே எங்கள் சமயம் தன்னை நிலைநிறுத்தி வருகிறது என்பதை மறுத்துவிட முடியாது. அந்த வகையில் மாசியில் வருகின்ற சிவராத்திரி “மகா” என்னும் உயர்நிலை எய்துவதற்கு உரிய காரணத்தை அறிவது அவசியம் அல்லவா?

ஈத்தர் என்னும் சக்தி உலகத்தை இயக்குகிறது என்று அறிவியல் சொல்லுகிறது. இந்தச் சக்தியானது உலகம் முழுவதும், அண்டம் முழுவதும் நிறைந்தே இருக்கிறது. இந்தச் சக்தியானது பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறதாம்.

பூமியானது சூரியனைச் சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதைகளில் சுற்றி வருகிறது. இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக்கு மாறுகின்ற நேரம்தான் “மகாசிவராத்திரி” வரும் நேரமாக அமைகிறது. ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே ஈத்தர் சக்தியின் அளவு அபரிமிதமாக இருக்கும். இப்படி அபரிமிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒருமுறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியை “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும்.

மாசி மாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச் சக்தியும்  கிடைக்கும் நிலை, இந்த மகாசிவராத்திரிக்கே வாய்க்கிறது. மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து, தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்தச் சுரப்பி, ஆனந்த மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே ஆசீர்வாதம் (Self Blessing)  செய்துகொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) வில் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

ஈத்தர் சக்தி என்பது, பகலிலும் உண்டு, இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்றுக் குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடுதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத்திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமய ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

எமது சமயம், நல்ல நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சமயமாகும். ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான காரண காரியங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் விளங்கிக்கொண்டு விட்டோமானால் மனத்தில் ஐயம் என்பது அகன்றே ஓடிவிடும். ஐயந்தெளிதல் வேண்டும். ஐயம் தெளிந்தால் ஆண்டவன் அருளும் எமக்கு வாய்த்துவிடும். சிந்தையினை தெளிவாக்கல், சிவன் அருள் பெற வழியாகும். சிவராத்திரி நன்னாளில் சிந்தையைத் திருத்திட, சிவனை வேண்டுவது எமது தலையாய பணியாகும்.

” நற்றுணையாவது நமச்சிவாயவே”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.