அமெரிக்காவின் பகுத்தறிவுப் பகலவன்!

1

-மேகலா இராமமூர்த்தி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியானது, சுதந்தரச் சிந்தனைகளின் பொற்காலம் (The Golden Age of Free thought) என்று அமெரிக்காவில் அழைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்களில் ஒருவர்தாம் இராபர்ட் கிரீன் இங்கர்சால் (Robert Green Ingersoll).

நியூயார்க் மாநிலத்திலுள்ள டிரெஸ்டென் (Dresden) எனும் ஊரில்,  புரோடஸ்டாண்ட் (Protestant) மதபோதகராக விளங்கிய ஜான் இங்கர்சாலுக்கும் (John Ingersoll), மேரி அம்மையாருக்கும் (Mary Ingersoll)  1833ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ஆம் நாள் மகனாய்ப் பிறந்த இராபர்ட் இங்கர்சால், தேர்ந்த வழக்கறிஞராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், அனைத்திற்கும் மேலாக மூடநம்பிக்கைகளுக்குத் தீ மூட்டும் பகுத்தறிவுப் பகலவனாகவும் விளங்கி அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தவர் ஆவார்.

அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிரான நிறவெறி கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த காலமது. கறுப்பர்களை அடிமைகளாய் நடத்திக் கொடுமைப்படுத்தும் அவலத்துக்கு எதிரான போராட்டங்களில் இராபர்ட் இங்கர்சாலின் தந்தை ஜான் இங்கர்சால் கலந்துகொண்டார். இனபேதம் பாராத மனிதநேயச் சிந்தனைகளைக் கொண்டிருந்ததாலேயே மதபோதகர் பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இவற்றையெல்லாம் கவனித்துவந்த சிறுவன் இராபர்ட் இங்கர்சாலின் மனத்தில் கிறித்தவ மதத்தின்மீதும் அதன் கவைக்குதவாப் பழமைவாதக் கோட்பாடுகளின்மீதும் குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

குடும்பச்சூழல் காரணமாக இராபர்ட் இங்கர்சாலின் முறையான பள்ளிக்கல்வி சில ஆண்டுகளோடு முற்றுப்பெற்றுவிட்டது. எனினும், தாமாகவே முயன்று பல நூல்களைக் கற்றுத்தேர்ந்து தம் அறிவைப் பெருக்கிக்கொண்டார் அவர். இயல்பிலேயே நாவன்மை மிக்கவராக விளங்கிய இங்கர்சால், தம் வாழ்வை நடாத்துதற்கு நிலையான தொழிலொன்று தேவை என்பதை உணர்ந்து, வழக்கறிஞர்கள் இருவரிடம் முறையாகப் பயிற்சிபெற்று 1854இல் வழக்கறிஞரானார். தம் வாதத் திறமையால் வழக்கறிஞர்கள் பலரின் பாராட்டைப் பெற்றார் இங்கர்சால்.

இச்சிறப்புகளால் இல்லியனாய் (Illinois) மாநில அட்டர்னி ஜெனரல் பதவி இங்கர்சாலைத் தேடிவந்தது. குடியரசுக் கட்சியில் (Republican Party) இணைந்து, ஓர் உண்மையான தொண்டனாக அரசியல் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் இங்கர்சால்.

மதம், கடவுள் நம்பிக்கை, பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கான வாக்குரிமை குறித்தெல்லாம் புரட்சிகரமான முற்போக்குக் கருத்துக்களை அவர் முன்வைத்த காரணத்தினால் பழமைவாதத்திலும், பெண்களை இரண்டாந்தரக் குடிமக்களாய் நடத்தும் பிற்போக்குத்தனத்திலும் ஊறிப்போயிருந்த அமெரிக்காவில் அவரால் அரசியலில் பெரும் பதவிகளைப் பெறமுடியாமற் போய்விட்டது.

இங்கர்சாலின் இறைக்கொள்கையைப் பற்றிக் குறிப்பிடுவதானால், கடவுளின் இருப்பைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ஓர் எதார்த்தவாதியாக (Agnostic) தம்மை அவர் அடையாளப்படுத்திக்கொண்டார். ” The great agnostic” என்றே அமெரிக்க மக்கள் அவரை அழைத்தனர். பகுத்தறிவுக்குப் பொருந்தாத மத நம்பிக்கைகள் குறித்த பகடியும் எள்ளலும் அவருடைய பேச்சுக்களில் துள்ளி விழுந்தவண்ணம் இருந்தன.

ஒருமுறை பெரிய மண்டபம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார் இங்கர்சால். அவர் பொழிவைக் கேட்க வந்திருந்தவர்களில் ஒருவர் திடீரென்று எழுந்து, “அன்பரே! உமக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டா?” என்று வினவினார். இங்கர்சாலும் சற்றும் தயங்காமல் “ஐயா! எனக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு; குறிப்பாக, சோப்புப் போட்டுக் குளிக்கும் ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு” என்று சொன்னதுதான் தாமதம் கைதட்டல் விண்ணைப் பிளந்ததாம்! ஞான ஸ்நானம் (baptism) என்பது கிறித்தவ தேவாலயங்களில் குழந்தைகளுக்குப் பாதிரிமார்கள் செய்யும் புனிதச் சடங்கு; அதைத் தான் அவ்வாறு கிண்டல் செய்திருக்கின்றார் இங்கர்சால். பிறப்பால் ஒரு கிறித்தவராக இருந்தபோதும் அம்மதத்தில் பின்பற்றப்படும் பொருளற்ற சடங்குகளில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பதையே அவருடைய இந்த வேடிக்கைப் பேச்சு நிரூபிக்கின்றது.

மோசஸ் செய்த சில தவறுகள் (Some Mistakes of Moses (1879)) என்ற தம்முடைய நூலில், கடவுளை நம்புகிறவன் ஏன் நம்பாதவனை வெறுக்கிறான்? நாத்திகன் கடவுளுக்கு ஏதாவது ஊறுசெய்கின்றானா? இல்லையே! அவனும் மற்றவர்களைப் போல சுக துக்கங்கள் உள்ள மனிதன் தானே? அவனுக்கும் மற்ற மனிதர்களுக்கு இருப்பதுபோல் அனைத்து உரிமைகளும் உள்ளனதாமே?

கிறித்தவ தேவாலயங்களிடம்தான் சொர்க்க, நரகத்தின் திறவுகோல் இருப்பதுபோல் அவர்கள் நடந்துகொள்வதும், மதநம்பிக்கைகளை மறுப்பவர்களைப் பாவிகளாகப் பாவிப்பதையும், மதத்திலிருந்தே அவர்களை ஒதுக்கிவைப்பதையும் தொடர்ந்தால் இந்த உலகமே வெறுப்பாலும் வேதனையாலுந்தான் நிறையும். மனிதனை வெறுப்பதும், கடவுளை நேசிப்பதும் மதங்களின் வேடிக்கையான கொள்கைகளாக இருக்கின்றன.

பைபிளும் மற்ற புத்தகங்களைப் போலத்தான்; ஏன் அவற்றைவிடவும் பயனற்றது; ஆனால் மதபோதகர்கள் அதனைப் பொதுவில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றுகூறிப் பைபிளிலுள்ள பல கதைகளையும் அவற்றின் கருத்துக்களையும் கண்டிக்கிறார்.

தேவாலயப் பணியாளர்கள் பைபிளில் ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டிருப்பதைக் கிளிப்பிள்ளைபோல் ஒப்பிக்கவே பணியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். புதிய சிந்தனைகள் எவற்றையும் வெளிப்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் சொல்கின்றவற்றையெல்லாம் எவ்வித ஆதாரங்களும் கேட்காமல் நம்பி நடப்பவனே உண்மையான கிறித்தவன் எனப்படுவான். இவ்வாறு மக்களிடம் மூடநம்பிக்கைகள் பெருகினால் என்னவாகும்? சோதிடத்துறை வளரும்; அறிவொளி பெருகினால்? மத நம்பிக்கைகள் தளரும்!

என்னைப் பொறுத்தவரை, அறிவியலுக்கும் மதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; சொல்லப்போனால், அவை ஒன்றுக்கொன்று பெரும் பகையானவை என்பேன். மெதாடிஸ்ட் கணிதம் (Methodist mathematics), கத்தோலிக்க வானியல் (Catholic astronomy), பிரெஸ்பிடேரியன் தாவரவியல் (Presbyterian botany), பேப்டிஸ்ட் உயிரியல் (Baptist Biology) என எவையேனும் இருக்கின்றனவா? பின்பு எதற்காக மதக்கல்வி போதிப்பதற்கென்றே தனியாகக் கிறித்தவ மதவாதக் கல்லூரிகளை (sectarian colleges) நாம் உருவாக்கவேண்டும்?

மதங்களுக்கும் பள்ளிகளுக்கும் மணமுறிவு (divorce) நடக்குவரை சிறந்த கல்விநிறுவனங்களை உருவாக்குவது முயற்கொம்பே. மதங்களின் வல்லாண்மையும் ஆதிக்கமும் இருக்குவரையில் பள்ளிகளில் அறிவியல் புறக்கணிப்பட்ட ஒன்றாகவே இருக்கும். ஒருநாள் வரும்! அன்று பழைய புனிதங்கள் கட்டுடைக்கப்பட்டு இயற்கையின் உண்மை ஏற்றுக்கொள்ளப்படும். என்று மதபோதகர்களையும், அறிவியலுக்குப் புறம்பான மதநம்பிக்கைகளையும் மிகத் துணிச்சலாக விமரிசிக்கின்றார் இங்கர்சால்.

ஷேக்ஸ்பியர், அமெரிக்காவின் மறுகட்டமைப்பு, மனிதநேயம், மதங்களின் நிலை, குடும்ப அமைப்பின் அவசியம், பெண்விடுதலை என்று அனைத்துத் தலைப்புக்களிலும் மணிக்கணக்கில் பேசக்கூடிய பேராற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார் இங்கர்சால். மதங்கள் குறித்த அவருடைய விமரிசனங்களை வைத்தே அமெரிக்கப் பத்திரிகைகள் அவரை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியபோதும், மக்கள் மத்தியில் அவர் சொல்வாக்கிற்கிருந்த செல்வாக்கை அவற்றால் குறைக்கமுடியவில்லை. மாறாக, அவருடைய கட்டணச் சொற்பொழிவுகளுக்கும் மக்கள் அமோக ஆதரவு கொடுத்துப் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர் என்பது வரலாறு.

இந்நாளில் சிலர் தம்முடைய சொற்பொழிவுகளுக்குக் கட்டணம் வசூல் செய்வதை விமரிசிப்போர், இஃதொன்றும் விந்தையான வழக்கமன்று! இங்கர்சால் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்துவரும் முந்தைய வழக்கமே என்று அறிதல்வேண்டும்

தம் மேடைப்பொழிவுகளின் மூலம் மட்டுமே இங்கர்சாலுக்கு ஆண்டுதோறும் கிடைத்துவந்த வருவாய், அன்றைய அமெரிக்க அதிபரின் ஆண்டு வருவாயைக் காட்டிலும் இருமடங்கு அதிகமானது. வேறுவிதமாக இதனைக் கணக்கிட்டுச் சொல்வதென்றால், அமெரிக்காவின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்கள் இருபத்தைந்து பேர் ஒரே சமயத்தில் எவ்வளவு சம்பாதிப்பார்களோ அவ்வளவு வருமானம் இங்கர்சால் ஒருவருக்கே கிடைத்துவந்தது. ஆனால் பணத்தால் பெருமை கொள்ளவில்லை இங்கர்சால்! வாய்த்திறமையினால் தாம் ஈட்டியதைக் கைத்திறமையால் வரையாது வழங்கிய கொடையாளராக அவர் திகழ்ந்தார்.

மனிதன், மங்கை, குழந்தை, அவர்தம் சுதந்தரம் (The Liberty of Man, Woman and Child) என்ற தலைப்பில் இங்கர்சால் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதில் இம்மூவருடைய சுதந்தரம் குறித்தும் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அக்காலத்துக்கு மட்டுமன்றி எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.

நங்கையர்தம் நற்சுதந்தரம் பற்றிக் குறிப்பிடும் இங்கர்சால், பெண்கள் ஒருகாலத்தில் அடிமைகளுக்கெல்லாம் அடிமைகளாக இருந்திருக்கின்றார்கள். என்னுடைய எண்ணப்படி, பெண்கள் கேவலமான அடிமைத்தனத்திலிருந்து திருமணம் செய்துகொண்டு வாழும் சுதந்தரத்தை அடையவே பல இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும். ஆதலால், மானிட சமுதாயத்திலேயே நான் மிகவும் புனிதச் சடங்காகக் கருதுவது திருணத்தைத்தான் என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அடுக்களையின்றி மானிட சமுதாயத்தின் முன்னேற்றமில்லை; குடும்பச் சுற்றமின்றி வாழ்வும் பயனில்லை. பல நல்ல குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஒரு நல்ல அரசாங்கம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு நல்ல அரசாங்கத்தின் கிளையாக இருப்பது குடும்பம். இந்தக் குடும்ப அமைப்பைச் சீரழிக்கச் செய்யப்படும் எந்த முயற்சியும் பேய்த்தன்மை வாய்ந்தது; களங்கமுடையது. எனக்குத் திருமண வழக்கத்தில் மிகுந்த நம்பிக்கையுண்டு. இந்த மணச்சடங்கை, திருமணம் என்னும் அமைப்பை வசைபாடுகின்ற நீள்முடி வளர்த்த ஆடவர்கள், குட்டைக் கூந்தலோடு வலம்வரும் பெண்கள் போன்றோரின் கருத்துக்களை நான் மிகக் கேவலமாகக் கருதுகின்றேன் என்கிறார் அழுத்தந்திருத்தமாக.

”திருமணமே பெண்ணை அடிமைப்படுத்துகின்றது; உடைத்தெறிய வேண்டிய தளை அது!” என்று தமிழகத்தின் பகுத்தறிவாளர்கள் முச்சந்திதோறும் முழக்கமிட்டிருக்க, மேனாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனையாளரும், தமிழகப் பகுத்தறிவு இயக்கங்களுக்கு அறிவுக்கொடை நல்கியவர்களில் முக்கியமான ஒருவராக அறியப்படுபவருமான இங்கர்சாலோ, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அடிமைத்தனத்திலிருந்த மகளிர்க்கு விடுதலை நல்கியதே திருமணந்தான்! குடும்ப அமைப்பினும் உயர்ந்தது வேறில்லை என்று அதனை விதந்தோதுவதைக் காண்க!

ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய நூலும்,

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
(தொல்” கற்பியல் – 4) என்றுரைப்பதன் வாயிலாகத் தமிழ்ச் சமூகத்தில் கட்டுப்பாடற்ற ஆண் பெண் உறவுகளால் குற்றங்களும் ஒழுக்கக்கேடுகளும் மலிந்துவிட, அவற்றைத் தடுக்கவேண்டியே திருமணம் எனும் நடைமுறை அறிவிற் சிறந்த ஆன்றோரால் ஏற்படுத்தப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதை எண்ணுக.

அடுத்து, குழந்தைகள் சுதந்தரம் பற்றிக் குறிப்பிடும் இங்கர்சால்,

பெரியவர்களுக்குள்ள உரிமைகள்போலவே குழந்தைகளுக்கும் உரிமைகள் உண்டு. ஆகவே குழந்தைகளை நாம் மனிதப் பிறவிகள் எனக் கருதி நடத்தவேண்டும்; மிருகத்தனமாக நடத்தக் கூடாது. தாங்களே சுயமாகச் சிந்திக்கின்ற உரிமையை அவர்களுக்கு நாம் நல்கவேண்டும். குடும்பத்திலே சனநாயகம் நிலவவேண்டும் என்பது என் நம்பிக்கை. இந்தச் சகத்தில் மகத்தானது ஒன்று இருக்குமானால் அஃது எல்லாரும் சமமாக நடத்தப்படுகின்ற ஒரு குடும்பமே என்கிறார்.

இசையைவிடக் குழந்தைகளின் பேச்சு எனக்கு மிகுந்த இன்பத்தைத் தருகின்றது என்றார் இங்கர்சால். இக்கருத்து,

குழலினுது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
(குறள் – 66) என்ற ஐயன் வள்ளுவனின் பொய்யாமொழியை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றது.

பழமைவாதிகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் இங்கர்சால், எல்லா மனிதர்களும் ஒரே மாதிரிச் சிந்திக்கவேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். உலகத்தில் எந்திரத் தொழில்நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்ட பின்பும்கூட, இரண்டு கடிகாரங்கள் ஒரே மாதிரி ஓடுவதில்லை; ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை. அப்படியிருக்க, அறிவிலும், ஆற்றலிலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும், சுற்றுச்சூழலிலும், ஆசையிலும் வேறுபட்டிருக்கும் மானுடர் அனைவரும் ஒரே மாதிரிச் சிந்திக்கவேண்டும் என்று எப்படி நீங்கள் வற்புறுத்தமுடியும்?

எல்லையற்ற ஆற்றலுள்ள கடவுள் ஒருவர் இருந்து, அவர் நம்மைப் படைத்திருப்பாராகில், நாம் அனைவரும் ஒரே மாதிரியே சிந்திக்கவேண்டும் என்பது அவருடைய உள்ளக்கிடக்கையாயின், அவர் ஏன் ஒருவருக்குக் குறைவான அறிவையும் மற்றொருவருக்கு அதிகமான அறிவையும் கொடுத்திருக்க வேண்டும்? என்று வினவும் இங்கர்சால், மதத்தின் பெயரால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடந்த அட்டூழியங்களை நினைந்து மனம் வருந்துகின்றார். அவரவர் விருப்பப்படி வாழும் உரிமை மாந்த சமூகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். எதையும் யார்மீதும் திணிக்கும் உரிமை யாருக்குமில்லை என்கிறார்.

நெஞ்சில் நேர்மையும், வாழ்வில் தூய்மையும் பிறர்க்கென இரங்கும் தாய்மைக் குணமும் கொண்டவராய் வாழ்ந்து, தம்முடைய புரட்சிகரமான கருத்துக்களாலும் மனிதநேயமிக்க அணுகுமுறைகளாலும் அமெரிக்க மக்களைத் தம் வயப்படுத்திய இராபர்ட் இங்கர்சால், 1899ஆம் ஆண்டு தம்முடைய 65ஆம் அகவையில் இதயச் செயலிழப்பு நோயால் (congestive heart failure) உயிரிழந்தார்.

மூடநம்பிக்கையே அடிமைத்தனத்தின் குழந்தையாகும். சுயமாகச் சிந்தனை செய்தால் மட்டுமே நமக்கு உண்மை புலப்படும். எல்லாரும் சுயமாய் எண்ணவும் எண்ணியதை எவ்விதத் தடையுமின்றி வெளியில் சொல்லவும் உரிமை பெற்றுவிடுவார்களேயானால் ஒவ்வொருவருடைய மூளையிலிருந்தும் சிறந்த கருத்துக்கள் தாமே வெளிவரும். பிறகு இந்த உலகமே அறிவுக் களஞ்சியத்தால் நிரம்பியிருக்கும் என்றார் இங்கர்சால்.

இறைவனிடம் தொழுகை செய்யும் உதடுகளைவிடத் துயருற்றோரின் அழுகை போக்க உதவும் கரங்கள் உன்னதமானவை என்பது இங்கர்சாலின் கருத்து. ஆதலால் நாமும் ஒல்லும் வகையெல்லாம் அல்லலுற்றோர்க்கு உதவுவோம்! சாதி மத பேதமின்றி அனைவரிடத்தும் அன்பு பாராட்டுவோம்! அமெரிக்காவின் பகுத்தறிவுப் பகலவனாம் இங்கர்சால் வகுத்தளித்த நல்லறிவுப் பாதையில் பயணிப்போம்! 

கட்டுரைக்குத் துணைநின்றவை:

  1. https://en.wikipedia.org/wiki/Robert_G._Ingersoll
  2. https://www.britannica.com/biography/Robert-G-Ingersoll
  3. https://www.gutenberg.org/files/38813/38813-h/38813-h.htm#Alink0009
  4. வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு – 12

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அமெரிக்காவின் பகுத்தறிவுப் பகலவன்!

  1. தென்னாட்டுப் பெர்னார்ட்ஷா, இந்நாட்டு இங்கர் சால் என்னுந் தொடர் தமிழகத்தில் பெருவழக்கு. உண்மையில் அந்த இருபெருமக்களின் வாழ்க்கை வரலாற்றை திரு சாமிநாத சர்மாபோல் படித்தறிந்தவர் வேறு எவருமிருக்க இயயலாது. அப்பெருமக்களில் இங்கர்சால் பற்றிய இந்தக் கட்டுரை சிறந்த அறிமுகம். தேவையான அறிமுகம். ‘நடாத்துதல்’ போன்ற செயற்கைத் தமிழைப் பயன்படுத்தாது இருந்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.