நிர்மலா ராகவன்

பாட்டியின் முடி வெள்ளி, மனமோ தங்கம்.

பொதுவாகவே, பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்களுடைய எதிர்ப்பைக் காட்டும் வழி?

இதோ ஒரு துணுக்கு;

எல்லா நாடுகளிலும் பெண்கள் தலைவர்களாக இருந்தால் என்ன ஆகும்?

ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாத நாடுகள் உருவாகும்.

கதை

மரியாவின் மகள் தன் குழந்தைகளுடன் வேறு ஊரில் குடியிருக்கிறாள். அடிக்கடி வரும் தாய் தான் செய்யும் காரியங்களிலெல்லாம் குற்றம் கண்டுபிடிப்பதும், தன் வளர்ப்பு முறையில் குறை சொல்வதும் அவளுக்குப் பிடிக்கத்தானில்லை.

தாய் பாட்டியிடம் காட்டிய பாராமுகம் குழந்தைகளிடமும் தொற்றிக்கொண்டதில் என்ன ஆச்சரியம்?

என்னதான் நாம் வளர்த்த குழந்தையானாலும், வயது வந்தபின் அவர்களைச் சுதந்திரமாக விடவேண்டியதுதான். ஐந்து வயதில் கண்டித்ததுபோலவே என்றென்றும் நடத்த நினைப்பவர்களின் பாடு திண்டாட்டம்தான்.

மகளே இப்படியென்றால், இப்படிப்பட்ட மாமியாரிடம் எந்த மருமகள் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பாள்?

‘எனக்கு வரும் ஓய்வூதியம் பூராவையும் மகன் குடும்பத்திற்காக செலவழிக்கிறேன்,’ என்று கணக்குப் பார்த்து, அதிகாரம் செலுத்த நினைத்தால், இரு தரப்பினருக்கும் மனத்தாங்கல்தான் வரும்.

‘அவரவர் பாடு!’ என்று சற்றே ஒதுங்கிவிட்டால், மரியாதை நிலைக்கும். தாய் பாட்டிக்குக் காட்டும் மரியாதையைத் தம்மையுமறியாது குழந்தைகளும் கடைப்பிடிப்பார்கள்.

பாட்டி-தாத்தாவுடன் ஒரே வீட்டில் வசிக்கும் இளைஞர்கள், “எங்களுக்குப் பெற்றோரைவிட பாட்டி-தாத்தாவைத்தான் பிடிக்கும்,” என்கிறார்களாம். (நான் கேட்காமலேயே என்னிடம் ஒருவர் தெரிவித்தது).

முதல் காரணம்: பெற்றோருக்குத் தம் குழந்தைகளுடன் செலவிட அதிக நேரம் கிடைத்ததில்லை; இல்லை, அவர்கள் ஒதுக்கியதில்லை.

பணம் தேடுவதில், தம் சொந்த பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்குவதில், ‘பிறர் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற அசிரத்தையில், அவர்கள் காலத்தைக் கழித்துவிடுகிறார்கள்.

வளரும் குழந்தைகளுக்கு இதெல்லாம் புரியுமா? பெற்றோருக்குத் தாங்கள் இரண்டாம் பட்சம்தான் என்ற மனக்குறையுடன் வளர்கிறார்கள்.

உடனிருக்கும் பாட்டி சிறு வயதிலிருந்தே அவர்களுக்குச் சோறு ஊட்டி, கதை சொல்லி, விளையாட்டுக் காட்டி வளர்த்திருப்பாள். எதையாவது பார்த்துப் பயந்துவிடும் குழந்தைக்கு உடனடியாக ஆறுதலளிப்பாள். பேரக்குழந்தைகளுக்கு எந்தெந்த தின்பண்டங்கள் பிடிக்கும் என்று தெரிந்துவைத்திருக்கும் பாட்டி அவர்களுடைய அன்பைப் பெறுவாள்.

தன் குழந்தைகளையும் அப்படி வளர்த்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு நினைவிருக்காது. சொந்தக் குழந்தைகளுடனேயே போட்டி எழும். ‘என்னை இவ்வளவு அருமையாக வளர்க்கவில்லையே!’ என்று சாடுவார்கள்.

இதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும்.

முதல் குழந்தை படும் பாடு

‘எல்லாவற்றிலும் சிறந்தவனாக, பார்ப்பவர்கள் பாராட்டுகிறவனாக தன் குழந்தை வளரவேண்டும்,’ என்ற தாயின் அளவுகடந்த எதிர்பார்ப்பு பாதிப்பைத்தான் உண்டாக்கும். முதல் குழந்தையின்போதுதான் இந்த வெறி.

‘பெற்றோருக்கு முதல் குழந்தையாக மட்டும் பிறக்கக்கூடாது!’ என்று அங்கலாய்த்தாள் ஒரு பாட்டி. (அவள் கடைசிக் குழந்தை).

தன் மருமகள் பேத்தியை விரட்டுவதைப் பார்த்தும், எதுவும் செய்யமுடியாத நிலையில் அச்சொற்கள் வெளிவந்தன.

ஆணோ, பெண்ணோ, குடும்பத்தின் மூத்த குழந்தைகள் இந்த நிலைக்கு ஆளாவது சகஜம்.

கதை

முத்து முதல் குழந்தை. இயற்கையிலேயே பொறுமைசாலி. பொறுப்பானவன். அவனுடைய நல்ல குணங்கள் தாயின் கண்ணுக்குத் தெரியாமல் போயின.

‘இதை இப்படிச் செய், அதை அப்படிச் செய்,’ என்ற அவளுடைய ஓயாத போதனையால் அவன் தன்னம்பிக்கை ஆட்டம் கண்டது. இதனால், மேலும் கண்டனத்திற்கு ஆளானான்.

பாட்டி-தாத்தாவுடனும் சேர்ந்து வளர்ந்தால், பெற்றோரின் அளவுமீறிய கண்டிப்பால் உண்டாகும் பாதிப்பு குறையும். ஏனெனில், `குழந்தைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள்,’ என்ற அனுபவம் வயதானவர்களுக்கு உண்டு. பொறுக்க முடியாது, குறுக்கிடுவார்கள். (பலன் என்னவோ இருக்காது).

குழந்தை வளர்ப்பு என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவான ஒரு நியதி அல்ல. குழந்தைகளின் தன்மைக்கேற்ப மாறுபடும்.

முத்துவுக்கு அடுத்துப் பிறந்தவளோ, இரண்டாவது குழந்தைகளின் இயல்பின்படி சுறுசுறுப்பாக, தைரியசாலியாக — அதனாலேயே தந்தையின் செல்லப்பெண்ணாக — வளர்ந்தாள்.

தாய் ஓயாது, ‘இப்படித்தான் நடக்கவேண்டும்,’ என்று போதித்தபோது, அதை அலட்சியம் செய்யும் துணிவு அவளுக்கு இருந்தது.

ஏன் இத்தனை தடைகள்?

‘ஒழுக்கத்தைப் போதிக்கிறோம்’ என்ற பெயரில் குழந்தைகள் ஆசைப்பட்டுச் செய்ய முற்படும் எதையும், `வேண்டாம்’, ‘முடியாது’ என்று தடைவிதிப்பார்கள் பல பெற்றோர்.

ஏன் கூடாது என்று விளக்குவதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அதையே பாட்டி-தாத்தா விளக்கும்போது, அவர்களிடம் மரியாதை எழுகிறது.

முதியவர்கள் அத்தனை விதிமுறைகளை விதிப்பதும் கிடையாது. குழந்தைகள் எது செய்தாலும் பாராட்டுகிறவர்கள் அனேகமாக அவர்களாகத்தான் இருப்பார்கள்.

‘கண்டிப்பதே இல்லை. செல்லம் கொடுத்துக் கெடுக்கிறார்கள்,’ என்று பெற்றோர் முணுமுணுக்கலாம். ஆனால், தம்மை நோக்கி, கையை விரித்து ஓடிவரும் குழந்தைகளிடம் கொண்ட அன்பால் பாராட்டினாலும், அவர்களுக்குத் தம்மைப்பற்றிய நன்மதிப்பு எழ இந்தப் புகழ்ச்சி உதவுகிறதே!

பேசுங்கள்    

சிறு குழந்தைகள் நிறைய கேள்விகள் கேட்பார்கள். சரியோ, தவறோ, சலிக்காமல் பதில் கூறினால் பிணைப்பு இறுகும். நம் வாழ்க்கையின் சில பகுதிகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் தங்களைப் பாதித்தவைகளைப்பற்றிச் சொல்வார்கள்.

மனம் வருந்தி, ‘இப்போதெல்லாம் என்னுடன் பேசவே உனக்கு நேரமிருப்பதில்லை. அப்படி என்ன கணினி விளையாட்டு?’ என்பதுபோல் கண்டித்தால் மாறுவார்களா?

ஒரே விஷயத்தில் ஆர்வம் இருந்தால்தானே கலந்து பேச முடியும்? காலத்திற்கேற்ப மனதை இளமையாகவே வைத்திருக்க கணினி, இணையம் என்று கற்க வேண்டியதுதான்.

போட்டிகள்

‘தாய்வழிப் பாட்டி, தந்தைவழிப் பாட்டி இருவருக்குள்ளும் போட்டி மனப்பான்மை இருக்கிறதே!’ என்று ஒருவர் கேட்டார்.

போட்டி போடாது, இரு தரப்பினரையும் மதித்துப் பேசக் கற்றுக்கொடுப்பது சிறப்பு.

“அந்த பாட்டி, தாத்தாவைப் பார்க்கும்போது மரியாதையாக `குட்மார்னிங்’, `குட் ஈவ்னிவ்’ என்று சொல்லுங்கள். உங்கள் பள்ளிக்கூடத்தில் நீங்கள் பெற்ற வெற்றிகளைச் சொல்லுங்கள்,’” என்று அறிவுறுத்தும்போது, ”இது தற்பெருமை இல்லை?” என்ற சந்தேகத்தை எழுப்புவார்கள்.

“முதியவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்படி நிறைய நடப்பதில்லை. உங்களுடைய வெற்றிகளைத் தம்முடையதாக எண்ணி மகிழ்வார்கள்,” என்ற ரீதியில் கூடவே இருக்கும் பாட்டி அறிவுரை கூறும்போது, `நம் முன்னேற்றத்தில் அக்கறை காட்ட இத்தனைபேர் இருக்கிறார்களே!’ என்று சிறுவர்கள் மகிழ்வார்கள். மேலும் உயர்வார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *