நெல்லைத் தமிழில் திருக்குறள்-115
நாங்குநேரி வாசஸ்ரீ
115. அலர் அறிவுறுத்தல்
குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
ஊருக்குள்ளார பலபேர் எங்க நேசத்தப் (காதலை) பத்தி பாடு (அலர்) பேசுததால (என் காதல் கைகூடுத) நல்லது நடக்கும்னு நெனைப்புல என் உசிரு போவாம இருக்குனு நெறையபேரு அறிஞ்சிக்கிடமாட்டாங்க.
குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்
பூப்போல கண்ணு இருக்க இவளோட அரும புரியாம இந்த ஊரு இவளுக்கு எம்மேல காதல்னு ஒளிச்சிமறைச்சி பாடுபேசியே எனக்கு நன்மயச் செஞ்சிட்டாவ.
குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
எங்க நேசத்தப்பத்தி ஊர்முழுக்க பேசமாட்டாகளா. அது கெடைக்காதுனு நெனைச்ச நேசம் கெடச்சது (திருமணம்) கணக்கா சந்தோசத்தக் குடுக்குமே.
குறள் 1144
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
ஊர்க்காரவுக பேச்சால எங்க நேசம் வளருது. அதுமட்டும் இல்லையினா அது தன்ம கெட்டு வாடிப் போவும்.
குறள் 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது
எங்க நேசம் வெளிய தெரியத் தெரிய சந்தோசம் உண்டாகுதது கள்ளு குடிச்கவன் போதை ஏற ஏற அதையே குடிக்க விரும்புதது கணக்கா ஆவும்.
குறள் 1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
காதலிச்சவுக சந்திச்சுக்கிட்டது ஒருநாள்தாம்னாலும், நிலாவ பாம்பு முழுங்கும் ங்குத சேதி கணக்கா ஊர்முழுக்க பரவிப் போச்சு.
குறள் 1147
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்
இந்த நேசம் ஊர்க்காரவுக பேசுத பேச்ச எருவாவும், ஆத்தா சொல்லுத கடுஞ்சொல்ல தண்ணியாவும் கொண்டுக்கிட்டு செழிப்பா வளருது.
குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்
இந்த ஊர்க்காரவுக பாடு பேசி எங்க நேசத்த அழிச்சுப்போடலாம்னு நெனைக்கது நெய்ய மொண்டு ஊத்தி தீய அணைக்கதுக்கு சமானம்.
குறள் 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை
பயப்படாத நான் விட்டுப்போட்டு போவ மாட்டேம்னு அன்னைக்கு உறுதியா சொன்னவுக பாடு பேசின பலரும் வெக்கப்படுதமாரி என்னையப் பிரிஞ்சு போகையில நான் மட்டும் ஊர்க்காரவுக பேச்சுக்கு வெக்கப்படலாமா?.
குறள் 1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்குமிவ் வூர்
நான் மனசுல நெனைக்காமாரி இந்த ஊர்க்காரவுக பாடு பேசுதாங்க. இனிமே நான் நேசிக்கவரு விரும்பினாருன்னா அவரும் ஒத்துக்கிடுவார் .(திருமணம் செய்வார்).