இலக்கியம்கவிதைகள்

கொன்றுவிட்டால் சுவர்க்கம் கிடைக்குமா?

-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

வெறி கொண்டு அலைகின்ற
நெறி பிறழ்ந்த கூட்டமதால்
கறை படியும் காரியங்கள்
கண் முன்னே காண்கின்றோம்.
பொறி புலன்கள் அவரிடத்து
அழி என்றே சொல்லுவதால்
குடி மக்கள் எந்நாளும்
கதி கலங்கிப் போகின்றார்!

மதம் என்னும் பெயராலே
மதம் ஏற்றி நிற்கின்றார்
சினம் என்னும் பேயதனை
சிந்தை கொள வைக்கின்றார்
இனம் என்னும் உணர்வுதனை
இருப்பு கொள்ள வைக்குமவர்
தினம் தீங்கு செய்வதிலே
திருப்தி உற்றுத் திரிகின்றார்!

மொழியுணர்வை மத உணர்வை
இன உணர்வை அழிக்கின்றார்
பழிதீர்க்கும் வெறி உணர்வை
பாடம் எனப் புகட்டுகிறார்
கொன்று விட்டால் சுவர்க்கமென
கொள்கை தனைப் பரப்புமவர்
கொன் றொழிக்கும் பாங்கினிலே
கோர நடம் ஆடுகிறார்!

வெறி கொண்டார் நெறிதிரும்ப
வேண்டி நிற்போம் இறைவனிடம்
நெறி பிறழ்ந்து போவாரை
வழி மாற்ற முனைந்திடுவோம்
வள்ளுவனார் ஆழ் கருத்தை
உள்ளம் எல்லாம் பதித்திடுவோம்
நல் இணக்கம் சமாதானம்
நாட்டில் ஓங்கச் செய்திடுவோம் !

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க