Tag: எம்.ஜெயராமசர்மா

  • சான்றோர் விருது

    “சான்றோர் விருது” பெறும் திருமிகு எம். ஜெயராமசர்மா அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்

    ஆசிரியர்

    ajr

    22- 10 – 2016 சனிக்கிழமை சிட்னி மாநகரில் இடம்பெறுகின்ற கம்பன் விழாவில்
    ” சான்றோர் விருது ” வழங்கப்படுகிறது.வல்லமையுடனும் பகிர்ந்து
    கொள்ளுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

    அன்புடன்
    எம் . ஜெயராமசர்மா.

    Share
  • கைகோத்துக் காத்துநிற்போம்!

    -எம் .ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

     

    mahatma-gandhi

     

    பசித்திருந்தார் தனித்திருந்தார்
    விழித்திருந்து செயற்பட்டார்
    பழிபாவம் தனைவெறுத்துப்
    பக்குவமாய் வாழ்ந்திருந்தார்!

    தனக்கெனவே பலகொள்கை
    இறுக்கமாய்க் கடைப்பிடித்தார்
    தளர்ந்துவிடும் வகையிலவர்
    தனைமாற்ற விரும்பவில்லை!

    பொறுப்புகளைப் பொறுமையுடன்
    பொறுப்பேற்றே ஆற்றிநின்றார்
    வெறுத்தாலும் பலவற்றை
    விருப்பமுடன் அவர்செய்தார்!

    மற்றவரை மனம்நோக
    வைக்காமல் இருந்துவிட
    மனத்தளவில் வேதனையை
    வைத்துவிட்டார் மாமனிதர்!

    தன்வீட்டை நினையாமல்
    தாய்நாட்டை நினைத்துநின்றார்
    தாய்சொல்லைத் தட்டாத
    தனயனாம் காந்திமகான்!

    தாய்சொல்லே வேதமாய்
    தான்மனத்தில் கொண்டதனால்
    தாய்நாட்டின் விடுதலைக்காய்
    தனையிழக்கத் துணிந்துநின்றார்!

    உடையை மாற்றினார் உணவை மாற்றினார்
    படையை மாற்றினார் பாதைகூட மாற்றினார்
    ஆயுதத்தை மாற்றினார் அஹிம்சைதனை ஏற்றினார்
    அகிலம்பார்த்து வியந்துநிற்க அரக்கத்தையும் ஓட்டினார்!

    நீதிபார்த்து நின்றுநின்று நிமிர்ந்து செயலாற்றினார்
    சாதிபேதம் தனையுடைத்துச் சமத்துவத்தைப் போற்றினார்
    பாதியாடை தானுடுத்திப் பார்வியக்கச் செய்திட்டார்
    பாரதத்தை மீட்டெடுத்த பாரதத்தின் பொக்கிஷம்!

    பண்புகாத்து பலரும்போற்ற பாரதத்தை உருவாக்க
    பட்டபாடு கொஞ்சமல்ல காந்திமகான் வாழ்வினிலே
    காந்திபட்ட பாடெல்லாம் கடுகளவு நினையாமல்
    காற்றிலே பறக்கவிட்டுக் கவலையின்றித் திரிகின்றார்!

    நீதியொரு பக்கம் நிட்டூரம் மறுபக்கம்
    சாதியொரு பக்கம் சதிகாரர் நாற்பக்கம்
    கள்ளமின்றிச் சிரிக்கின்ற காந்திபடம் காசுதனில்
    கள்ளப்பண முதலைகளோ நல்லவராய் உலவுகிறார்!

    காசுபற்றி நினையாத காந்திமகான் இப்போது
    காசுதனில் இருந்தாலும் கவலையுடன் தானிருப்பார்
    காந்திதனைக் காசில்வைத்துக் கலப்படங்கள் செய்வாரைக்
    காந்தி ஜயந்திதனில் கல்லெறிந்து கொல்லல் வேண்டும்!

    மதுவெறுத்த காந்திமகான் மனம்மகிழ வைப்பதற்கு
    மதுக்கடையை ஒழித்துவிட மனத்திலெண்ணம் வருமாயின்
    புதிதான பாரதத்தைப் பூமியிலே கண்டிடலாம்
    அதுதானே காந்திமகான் ஜயந்திக்கே அர்த்தமாகும்!

    கொடியேற்றம் மலர்வளையம் கொண்டாட்டம் பேச்சரங்கம்
    வெளிவேஷம் எல்லாமே காந்திக்குப் பொருத்தமல்ல
    பழிபாவம் தருகின்ற பாதகங்கள் தனையொழித்துப்
    பாரதத்தை மீட்டுவிட்டால் காந்திக்குப் பெருமைவரும்!

    காந்தி ஜயந்திதனைக் கருத்துடனே மனத்திருத்திக்
    காந்தி மனம்விரும்பும் காரியங்கள் செய்துநிற்போம்
    காந்தி மகான் கண்டெடுத்த கண்ணான சுதந்திரத்தைக்
    காந்தி மகான் வாழ்த்திநிற்கக் கைகோத்துக் காத்துநிற்போம்!

     

    Share
  • வெறுத்துவிடல் முறையாமோ?!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    jaya

    கறுப்பென்றால் வெறுக்கின்றார்
    காறியும் உமிழ்கின்றார்
    கறுத்தநிறம் கொண்டோரை
    வெறித்தனமாய்த் தாக்குகிறார்
    நிலத்திலுள்ள கறுப்பரெல்லாம்
    நிமிர்ந்துநிற்கும் நிலைபார்த்து
    வெறுத்தவரே வியக்கின்றார்
    விருப்பமின்றிப் பார்க்கின்றார்!

    காந்தியைக் கறுப்பரென்று
    காலாலே மிதித்தார்கள்
    கருணையின்றி அவர்வாழ்வில்
    கஷ்டம்பல கொடுத்தார்கள்
    சாந்திதனை வேண்டியவர்
    சாப்பிடவே மறுத்ததனால்
    கறுப்பரெனப் பார்த்தவரே
    கதிகலங்கிப் போனார்கள்!

    கறுப்பினத்தை விலங்கெனவே
    கண்டுநின்ற கூட்டத்தார்
    கனவுகாணா வகையினிலே
    கறுப்பரே தலைமையானார்
    வெறுத்தொதுக்கி நின்றவினம்
    பொறுத்தொதுங்கிப் போகாமல்
    வீரமுடன் எழுந்ததனால்
    வெற்றிகொண்டே  நிற்கிறதே!

    வான்கறுக்கா நின்றுவிடின்
    மழைவருதல் இல்லையன்றோ?
    இரவுவரவில்லை என்றால்
    பகலுக்கே அர்த்தமுண்டோ?
    கறுப்புநிற ரத்தமதைக்
    கண்டுவிடல் சாத்தியமா?
    கறுப்பதனை வெறுப்பதற்குக்
    காரணம்தான் விளங்கவில்லை!

    கறுப்பதனை வெறுப்போர்கள்
    கறுப்புமுடி வருவதற்கு
    காசுபல செலவழித்துக்
    காணுகிறார் இன்பமதில்!
    கறுப்புடுப்புப் போடுகிறார்
    கறுப்புக்கார் வாங்குகிறார்
    கறுப்புநிறப் பொருள்வாங்கி
    காணுகிறார் மனமகிழ்வை!

    வெள்ளைநிற முள்ளவரே
    வெள்ளைமுடி வெறுக்கின்றார்
    விதம்விதமாய்ச் சாயத்தை
    விலைகொடுத்தே வாங்குகிறார்
    அள்ளியள்ளி அதைப்பூசி
    ஆனந்தம் காணுகிறார்
    அவர்வெறுத்த கறுப்புதனை
    அவரேற்றே  மகிழுகிறார்!

    வெள்ளையினக் கூட்டத்தை
    வென்றுநின்ற மாமனிதர்
    நெல்சனாம் மண்டேலா
    நெஞ்சுரத்தைப் பார்த்துவிட்டு
    கறுப்புநிற ரோஜாவாய்க்
    கருத்தினிலே கொண்டதனால்
    பொறுப்புமிகு பதவிபெற்றார்
    கறுப்புநிறப் பெருமகனும்!

    வெள்ளைநிற முடையோரின்
    விருப்பமெலாம் மாறிடினும்
    வெள்ளையரை விரட்டிவிட்டோர்
    வேறுருவம் கொண்டுவிட்டார்
    கள்ளமனம் அவரிடத்தில்
    மெள்ளவுருக் கொண்டதனால்
    கறுப்புதனை அவருமிப்போ
    வெறுப்புடனே நோக்குகிறார்!

    வெள்ளையாய்ப் பிள்ளைபெற
    விதம்விதமாய் உண்ணுகிறார்
    வெள்ளையாய்ப் பெண்தேடி
    விரைந்தோடி அலைகின்றார்
    உள்ளமதை வெள்ளையாய்
    உருவாக்க மறுக்கின்றார்!
    கள்ளமனம் எல்லாமே
    கறுப்பாக இருக்கிறதே!

    சாமியிருக்கும் கருவறையும்
    சரியான கறுப்புத்தான்
    சாமிசிலை அத்தனையும்
    சரியான கறுப்புத்தான்
    தாயினது கருவறையும்
    சரியான கறுப்புத்தான்
    கறுப்பதனை குறையெனவே
    வெறுத்துவிடல் முறையாமோ!

     

    Share
  • மல்லிகை மணக்கிறது !

    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    dd415941-26f4-46ab-8148-ba248c25be79

    தமிழினை முதலாய்க் கொண்டு
    தரணியைப் பார்க்க வைத்த
    உரமுடை டொமினிக் ஜீவா
    உவப்புடன் என்றும் வாழ்க

    அளவிலா ஆசை கொண்டு
    அனைவரும் விரும்பும் வண்ணம்
    தெளிவுடன் எழுத்தை ஆண்ட
    தீரனே வாழ்க வாழ்க

    சொல்லிலே சுவையை ஏற்றி
    சுந்தரத் தமிழைக் கொண்டு
    மல்லிகை இதழைத் தந்த
    மாதவன் ஜீவா வாழ்க

    தொல்லைகள் பலவும் கண்டும்
    துவண்டு நீ இருந்திடாமல்
    மல்லிகை இதழை நாளும்
    மலர்ந்திடச் செய்தாய் நன்றாய்

    தோழிலே சுமந்து சென்றாய்
    சுகமுடன் பணியைச் செய்தாய்
    ஆதாலால் அந்த மல்லி
    அனைவரின் வசமாய் ஆச்சு

    சிறு கதை மன்னனாக
    சிறந்து நீ விளங்கினாலும்
    பெரு மனங் கொண்டதாலே
    பிரபலம் ஆகி விட்டாய்

    சரிவெலாம் வந்த போதும்
    சலிப்பிலா உள்ளங் கொண்டு
    நிலைபெற உறுதி பூண்ட
    நீயென்றும் நிலைத்து வாழ்க

    கண்ணீரைக் கொண்டு நீயும்
    கதைபல எழுதி நின்றாய்
    தண்ணீரைக் காட்டித் தானே
    தகைவுடை பரிசைப் பெற்றாய்

    உண்மையாய் உழைத்து நின்றாய்
    ஊருக்கு வேரும் ஆனாய்
    உன்னலம் துறந்து நின்றாய்
    உயர்ந்து நீ இருக்கின்றாயே

    விண்ணிலே நிலவாய் நின்று
    வெளிச்சத்தை காட்டி நாளும்
    மண்ணிலே எழுத்தை ஆண்டு
    மதிப்பினைப் பெற்று விட்டாய்

    மல்லிகையை வளர்த் தெடுத்த
    வல்லவனே நீ வாழ்க
    நல்லதமிழ் எழுதி நிற்கும்
    நாயகனே நீ வாழ்க
    எல்லையிலாப் புகழ் பெற்று
    என்றுமே நீ வாழ்க
    எழுத்துலகில் ஜீவா நீ
    என்றுமே வாழ்க வாழ்க

    நடந்தலைந்து நீ தந்த
    நல்ல தமிழ் ஏடெமக்கு
    நல்விருந்தாய் இருந் தமையை
    நாம் மறக்க மாட்டோமே
    தெரிந் தெடுத்து வைத்தபெயர்
    சிறந் தோங்கி நிற்கிறது
    வரம் பெற்ற ஏடாக
    மல்லிகையும் மணக்கிறது

    மல்லிகைப் பந்தல் போட்டு
    வளர்த்தனை பலரை நாளும்
    கள்ள மில் செயலினாலே
    கற்றவர் புகழ நின்றாய்
    நல்லதோர் ஏடாய் நாளும்
    மல்லிகை வளரச் செய்தாய்
    நாட்டிலே உள்ளார் நெஞ்சில்
    நாயகன் ஆகி விட்டாய்

    மல்லிகை மணக்கிறது
    மனமெல்லாம் மகிழ்கிறது
    செல்லுகின்ற இடமெல்லாம்
    ஜீவாவை பார்க்கின்றோம்
    நல்லதொரு ஏடுதந்த
    நற்றமிழன் ஜீவாவே
    எல்லையிலா இன்பமுடன்
    என்றுமே நீவாழ்க

    Share
  • என்றுமே வணங்கிநிற்போம் !

     
    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    images-63-3
    அப்பாவின் தோழேறி
    அவர்மார்பில் உதைத்துநிதம்
    துப்பிநாம் நின்றாலும்
    சுகமுடனே அதையேற்பார்
    நித்திரையில் எமையணைத்து
    நீங்காமல் அவர்படுப்பார்
    நினைத்துநாம் பார்த்துவிடின்
    நெக்குருகி நிற்போமே !

    தோழேறி நின்றநாம்
    தோழளவு வளர்ந்தபின்பும்
    தன்தோழில் எமைத்தாங்கும்
    தருமசீலர் அப்பாவே
    எம்குறையைத் தம்குறையாய்
    ஏற்றுநின்று காக்குமவர்
    என்றுமெங்கள் நெஞ்சினிலே
    இறைவனென இருக்கின்றார் !

    புழுதிதனில் புரண்டாலும்
    புன்முறுவல் காட்டிடுவார்
    அழுதுநாம் பார்த்துவிடின்
    அவருருகிப் போய்விடுவார்
    தெருவதனில் சண்டைசெய்தால்
    திருந்துதற்கு வழிகாண்பார்
    ஒருபொழுதும் சினங்காட்டா
    உத்தமராம் எங்களப்பா !

    அப்பாவின் கைபட்டால்
    அனைத்துமே துலங்கிவிடும்
    அவர்கையைப் பற்றியதால்
    அகமகிழ வாழுகின்றோம்
    அளவறிந்து வாழுவென்று
    அவருரைத்து நின்றதனால்
    அமைதியுடன் வாழுகிறோம்
    அப்பாவை அகத்திருத்தி !

    அன்புதந்த அப்பாவை
    அறமுரைத்த அப்பாவை
    அறிவுடையார் அருகணைய
    அழைத்துச்சென்ற அப்பாவை
    ஆருமற்ற அனாதையென
    அகமதிலே விட்டுவிடின்
    ஆண்டவனே எமைப்பாரார்
    அடைந்திடுவோம் நரகமதை !

    உலகமெலாம் அப்பாவை
    உயர்த்திநிற்கும் தினமாக
    உவகையுடன் கொண்டாடி
    ஊர்வலமும் செய்திடுவோம்
    நித்தமே எமைநினைத்து
    அத்தனையும் ஈந்தளித்த
    சொத்தான அப்பாவை
    சுமையென்றல் முறையாமோ
    எத்தனையே இடர்தாங்கி
    எமைஉயர்த்தி விட்டவரை
    இல்லத்தில் நாம்வைத்துப்
    என்றுமே வணங்கிநிற்போம் !

    Share
  • உள்ளமதைத் திருப்புங்கள் !

     

     எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
    அவையெல்லாம் மனிதற்கு அரணாகின – அவனோ
    அழித்தான் எரித்தான் ஆனமட்டும் பயன்படுத்தி
    முடித்தானே காட்டினை இன்று.

    தானாக வளர்ந்தமரம் தன்வாழ்வை மனிதனுக்காய்
    தானீந்து நிற்கின்ற தன்மையினை காணுகிறோம்
    தானாக வளர்ந்தமரக் காட்டினிலே வளர்ந்துவிட்டு
    வீணாகக் காடழித்து விபரீதம் தேடுவதேன் !

    மாடுவெட்டி நிற்கின்றான் ஆடுவெட்டி நிற்கின்றான்
    அத்தோடு நின்றிடாமால் அநேகமரம் வெட்டுகின்றான்
    மரம்வளர்க்கும் எண்ணமின்றி மரம்வெட்டி நின்றுவிடின்
    மாநிலத்தின் பசுமையெலாம் வாழ்விழந்தே போயிடுமே !

    நாட்டின்வளம் காடதனை நாமழித்து நின்றுவிடின்
    நல்லமழை பெய்வதனை நாம்பார்க்க முடியாது
    நீரில்லா வாழ்க்கைதனை யாருமெண்ண மாட்டார்கள்
    பாரில்மழை மழைவேண்டிமெனில் பாதுகாப்போம் காடதனை !

    சுவாசிக்கக் காற்றும் பசிபோக்க உணவும்
    சுத்தமான இடமும் அத்தனையும் அவசியமே
    சூழல்பற்றிப் பேசுகிறோம் சூழலைநாம் பார்ப்பதில்லை
    சூழல்நிலை மாசுபடின் வாழ்வுநிலை என்னாகும் !

    நகரமய மாக்கலினால் நம்சூழல் என்னாச்சு
    நச்சுத்தன்மை சூழலினை தன்வசமாய் வைத்திருக்கு
    பெருந்தெருக்கள் பேருந்து பெருமளவில் வந்தாச்சு
    அருந்திநிற்கும் குடிநீரும் அசுத்தமுடன் கலந்தாச்சு !

    மேல்நாட்டு வண்டியொடு கீழ்நாட்டு வண்டியுமாய்
    பாதையிலே விடும்புகையால் பலநோய்கள் வருகிறது
    கவனிப்பார் கவனிக்கா நிலையிவை இருந்துவிடின்
    கண்டிப்பாய் கஷ்டகாலம் காலனென வந்துநிற்கும் !

    இயற்கைவழி அத்தனையும் இலாபம்தரா எனவெண்ணி
    செயற்வழி கையாண்டு சேர்க்கின்றார் பலநோய்கள்
    விளைகின்ற பயிரனைத்தும் வேகமாய் வளர்ந்தாலும்
    விரும்பியுண்ணும் யாவருக்கும் வில்லங்கம் விளைக்குதல்லோ !

    தொழிற்சாலைக் கழிவுகளால் தூய்மையுடை நீர்நிலைகள்
    அழுக்கேறி நிற்கையிலே அதைப்பருகும் மக்கள்தமை
    கணப்பொழுதும் நினையாமல் காசையெண்ணும் கயமையெனும்
    குணம்மாறி நின்றுவிடின் கொண்டிடுமே தூய்மையங்கு !

    மரம்வெட்ட நினைக்கின்றார் மரம்வளர்க்க வாருங்கள்
    நிலம்காக்க நினைக்கின்றார் செயற்கைமுறை தவிருங்கள்
    உரமான வாழ்வினுக்காய் உள்ளமதைத் திருப்புங்கள்
    தரமான நற்சூழல் தானமைக்க வந்திடுங்கள் !

    Share
  • வானமுதம் வானொலியின் பத்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மனமுவந்து வழங்கிய வாழ்த்துப்பா

     

    எம். ஜெயராமசர்மா
    வானலைகள் ஊடாக வண்ணத் தமிழ்பரப்பி
    தேனாக இனித்துநிற்கும் திகட்டாத வானமுதே
    ஐயிரண்டு ஆண்டாக அனைவரது மனங்கவர்ந்தாய்
    அளவில்லா வளர்ச்சிபெற அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன் !

    எல்லையில்லா இன்பம்தரும் எங்களது வானமுதே
    நல்லபல ரசிகர்களை நாளும்நீ வளர்த்துள்ளாய்
    சொல்லவல்ல சுவைபயக்க சுந்தரமாய் தமிழ்தருவாய்
    நல்லபடி நீநிலைக்க நயந்துன்னை வாழ்த்துகிறேன் !

    வானத்துமழை காணின் மண்ணெல்லாம் பசுமைபெறும்
    வானமுதின் தேன்மழையால் மனமெல்லாம் மகிழ்வுபெறும்
    ஞானத்தை உடையோரின் நற்கருத்தும் தேடிவரும்
    நாளும்நீ வளர்ச்சிபெற நல்வாழ்த்தை நவில்கின்றேன் !

    விஞ்ஞானம் மெஞ்ஞானம் மேலான கலாசாரம்
    எஞ்ஞான்றும் உந்தனது ஒலிபரப்பில் இணைந்துநிற்கும்
    நல்ஞானம் உடையோரால் நாளும்நீ வளருகிறாய்
    வல்லமையாய் நீதிகழ மனமார வாழ்த்துகிறேன் !

    கங்காரு நாட்டினிலே களைப்பின்றித் தமிழ்பேசி
    சிங்கார நடைபோட்டு சிறப்பாக விளங்குகின்றாய்
    தங்கத்தமிழ் வானமுதே தலைநிமிர்ந்து நீநிற்கப்
    பொங்கிவரும் பூரிப்பால் பொலிவுபெற வாழ்த்துகிறேன் !

    பத்தாண்டை நிறைவுசெய்யும் பண்பான வானமுதே
    பல்லாண்டு நீநிலைக்கப் பாசமுடன் வாழ்த்துகிறேன்
    முத்தான் தமிழ்கொண்டு முன்வந்த வானமுதே
    முன்னேற்றம் பலகண்டு முழுமைபெற வாழ்த்துகிறேன் !

    பிரம்மஶ்ரீ எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    Share
  • கடவுளிடம் முறையிடுவோம் … !

     

     எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

     

    ஆயுதக் கழஞ்சியத்தை அரவணைத்த அரக்கரெலாம்
    அறிவுக் கழஞ்சியத்தை அக்கினியில் இட்டார்கள்
    அத்தனையும் செய்துவிட்டும் அவரோய்ந்த பாடில்லை
    மிச்சமெலாம் கொழுத்துதற்கும் மீண்டுமெழ நினைக்கின்றார் !

    புத்தபிரான் போதித்த போதனைகள் அத்தனையும்
    போதிமரம் கேட்டுவிட்டுப் பெறுமையுடன் நிற்கிறது
    காவிகட்டி சேதிசொல்லும் கனிவுடைய துறவியரும்
    பாவிகளின் அருகிருந்து பாடமெல்லோ சொல்லுகிறார் !

    வேட்டிகட்டும் தர்மிஷ்டர் விரும்பிநின்ற மந்திரிகள்
    போட்டிபோட்டு வந்துநின்று பொசுக்கிவிட்டார் நூலகத்தை
    காட்டிக்காட்டி எரிக்கச்சொல்லி கைகட்டி நின்றார்கள்
    நாட்டுமக்கள் தமைக்காக்கும் நல்லவரின் மந்திரிகள் !

    கொழுத்தடா என்றுசொல்லி கொடுத்தானே தீயதனை
    ஊத்தடா என்றுசொல்லி உடன்கொடுத்தான் எண்ணெய்தனை
    கொக்கரித்து நின்றுகொண்டு கொழுத்திவிட்டார் நூலகத்தை
    யாழ்நகரின் மத்தியிலே தீவானைத் தொட்டதுவே !

    தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகத்தை
    திட்டமிட்டுக் கொழுத்தியதை திறலென்றே நினைக்கின்றார்
    அன்புடையோர் அறிவுடையோர் அறமுடையோர் அனைவருமே
    அநியாயம் இதுவெனவே அலறிநின்று அழுகின்றார் !

    புத்த தர்மமெங்கே புனிமுடை ஆட்சியெங்கே
    தத்துவத்தைப் போதிக்கும் தகைமையுடை தலைமையெங்கே
    சத்தியத்தை மறந்துவிட்டு உத்தமாராய் நடித்துநின்றால்
    நித்தமுமே தீயிட்டு நிட்டூரம் செய்வரன்றோ !

    படித்தோரும் அழுதார்கள் பாமரும் அழுதார்கள்
    எடுத்துத்தேடி வைத்தெல்லாம் எரியுண்டு போச்சுவென
    படித்தறிந்த தாவீது பாதிரியார் கேட்டவுடன்
    துடிப்படங்கிப் போய்விட்ட துயரினைநாம் மறப்போமா !

    காவல்துறை கயவர்களாய் மாறியதை மறப்போமா
    கடமையுடை மந்திரிகள் காடைத்தனம் மறப்போமா
    கல்விச்சொத்தை தீயிட்ட காலமதை மறப்போமா
    கடவுளிடம் முறையுடுவோம் கவலைதனை மறப்பதற்கு !

    Share
  • அனைத்துமே உனக்கு !

     

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

    அன்புடன் இரு
    ஆணவம் அகற்று
    இன்முகம் காட்டு
    ஈகை வளர்
    உண்மையை உரை
    ஊக்கத்தை நாடு
    எரிக்கும் கோபத்தை
    ஏற்காது இரு
    ஐக்கியமாகு சத்தியவழியில்
    ஒன்றிய மனத்துடன்
    ஓதிநீ அறிந்திடு
    ஒளடதம் ஆகும்
    அனைத்துமே உனக்கு !

    கள்ளமனத்தினை காணாமல்செய்திடு
    கிள்ளியெறிந்திடு கீழவர்தொடர்பினை
    குறைகள்சொல்வதை கூறுகள்போட்டிடு
    கெட்டவர்நட்பு கேடெனவுணர்ந்திடு
    கைகளால் அன்பொடு கைகளைப்பற்றிடு
    கொலைவெறி ஊட்டிடும் கோபத்தைவிட்டிடு
    கெளரவமுந்தன் ஒளடதமாகுமே !

    சன்மார்க்கம் நின்றால் சாந்தியைப் பெறலாம்
    சிறுமதி கொண்டால் சீரெலாம் மறையும்
    சுகம்பெற வேண்டில் சூழலை மாற்று
    செகமதில் உன்னைச் சேவிப்பர் நாளும்
    சைகள் மூலம் சகலதும் உணர்த்தலாம்
    சொல்லும் சொல்லை சோர்விலா சொல்லு
    செளக்கியம் ஆகும் சகலதும் உனக்கு !

    தர்மம் செய்வதை தாமதம் ஆக்காதே
    திருட்டு என்பதை தீண்டாமல் இருந்திடு
    துன்மார்க்க குணத்தைத் தூரவே விரட்டு
    தென்படும் உனக்கு தேவையாம் தெளிவு
    தைக்கும் வார்த்தையை தவிர்த்தே நில்லு
    தொட்டிடும் யாவும் தோன்றிடும் நன்றாய் !

    Share
  • சிறக்க வாழ்ந்திட!

    -எம். ஜெயராம சர்மா, மெல்பேண், அவுஸ்த்திரேலியா

    மதுவைநீ நாடாதே மதிகெட்டுப் போயிடுவாய்
    மங்கையரை நாடுவதால் வலியுனக்கு வந்துவிடும்
    சதிசெய்யும் குணமுடையார் சகவாசம் தனைவிடுத்தால்
    சரியான வழிநடக்கத் தானாகப் பழகிடுவாய்!

    ஏழ்மைநிலை இருப்பாரை இரக்கமுடன் அணைத்துவிடு
    எதிரியென எவரையுமே என்றும்நீ எண்ணாதே
    சோதனைகள் வந்திடினும் சோர்ந்துவிடா திருந்துவிடின்
    சாதனையின் நாயகனாய்த் தலைநிமிர நின்றிடுவாய்!

    அறத்தினை நினை அன்பை யணை
    சிரத்தையுடன் நீ சிறந்தன தேர்ந்திடு
    இறப்பினைப் பற்றி எண்ணா திருந்திடு
    சிறக்க வாழ்ந்திட சிந்தனை செய்திடு!

    அரக்க குணத்தை அடியோ டழித்திடு
    உரக்க வுண்மையை வாழ்வினி லுரைத்திடு
    குறைக்குள் சென்றிடா மனத்தைத் தடுத்திடு
    சிறக்க வாழ்ந்திடச் சிந்தையைச் செலுத்திடு!

    தாழ்வுமனப் பான்மையினைத் தானழித்து நில்லு
    வீழ்கின்ற எண்ணம்வரின் விரட்டியே கொல்லு
    ஆர்வந்து எதிர்த்தாலும் அன்புவழி நில்லு
    அகிலமதி லுன்வாழ்வு அர்த்தமுட னமையும்!

     

    Share
  • ‘உணர்வுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.

    பிரம்மஸ்ரீ.மகாதேவ ஐயர்.ஜெயராமசர்மா அவர்களின்  ‘உணர்வுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.

    மெல்பேண் நவரத்தினம் அல்லமதேவன்

    மெல்பேணில் கோலாகலமாகவும் உணர்வோடும் நடந்தேறிய பிரம்மஸ்ரீ.மகாதேவ ஐயர்.ஜெயராமசர்மா அவர்களின் ” உணர்வுகள் “ கவிதை நூல் வெளியீட்டு விழா.

    a4

    மெல்பேண் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் கடந்த மாதம் 28.03.2016 திங்கட்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு அரங்கம் நிறைந்த தமிழ் அறிஞர்கள், அன்பர்கள், நண்பர்கள் ஆதரவாளர்கள் முன்னிலையில் உணர்வுகள் நூல் வெளியீட்டு விழா ஆரம்பமானது.

    a1
    ஸ்ரீமதி சாந்திசர்மா, ஸ்ரீமதி சுந்தரம்பாள், ஸ்ரீமதி தேவகி, ஸ்ரீமதி கௌசல்யா, ஸ்ரீமதி மங்களம் ஆகியோரின் மங்கள விளக்கேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. கடவுள் வாழ்த்துப் பாடலை செல்வி.ஆகர்ஷணா சாயி ஜீவானந்தக்குருக்கள், செல்வி.பிரவர்த்திகா சாயி ஜீவானந்தக்குருக்கள், ஆகிய இரு பிள்ளைகளின் மழலை மொழியில் கேட்டிருந்தோம். மழலைத் தமிழை நன்கு அழகாக உச்சரித்திருந்தார்கள்.
    தமிழ் வாழ்த்துப் பாடலை ஸ்ரீமதி ஜனனி அபர்ணாசுத சர்மா அவர்கள் பாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்னிசை அமுதம் நிகழ்ச்சியை செல்வி.அபிதாரணி சந்திரன் அவர்கள் வழங்கியிருந்தார். மெல்பேண் சிறுவர்கள் எவ்வளவு தூரம் தமிழை நன்கு உச்சரிபோடு பேசுகின்றார்கள், பண்ணோடு இசைக்கின்றார்கள் என்பதை பல மேடைகளில் பார்த்திருக்கின்றேன். அந்த வகையில் எமது பிள்ளைகள் அதற்கு குறையில்லாமல் இனிய குரலில் தமிழால் தமிழுக்கு அழகு சேர்த்திருந்தார்கள்.

    a2
    இசைக்கோலம் என்ற நிகழ்ச்சியில் திருசிவபாலன் புல்லாங்குழல் இசை, திரு.முருகதாஸ் தவில் இசை, செல்வி.ஆகர்ஷணா மற்றும் செல்வி.பிரவர்த்திகா இருவரும் வயலின் இசை, செல்வன்.கார்த்திகேயன் கீ போட் வாத்திய இசை எனக் கலைஞர்கள் யாவரும் இணைந்து செவிக்கினிய, அற்புதமான இசையை வழங்கியிருந்தார்கள். உணர்வுகள் கவிதை நூல் வெளியீட்டிற்கு வந்திருந்த அனைத்து தமிழ் அன்பர்களையும் செம்மொழியாகிய சங்கத் தமிழால், மங்காத புகழுடைய எங்கள் தமிழ் சார்பில் ஸ்ரீமதி.ஜானகி சாயி ஜீவானந்தக்குருக்கள் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார்.

    a3

    முக்கிய நிகழ்வான உணர்வுகள் கவிதை நூல் வெளியீட்டு விழாவினை தலைமை வகித்து நடாத்த வந்திருந்தவர் ஸ்ரீமதி.பாலம் லக்சுமண ஐயர் அவர்கள். ஸ்ரீமதி பாலம் லக்சுமண ஐயர் உடைய இனிய தமிழ், அழகு தமிழ், இன்பத் தமிழ் பற்றி அதிகம் குறிப்பிடத் தேவையில்லை. காரணம் தமிழ் உலகம் அறிந்த ஒரு பெண் பேரறிஞர் ஆகும். அவரது தமிழ்ப் பேச்சில் பல் சுவைகள் நிறைந்த செந்தமிழ் தமிழ் ஆறாக ஓடியதைக் கேட்டேன். தொடர்ந்து அவரது தமிழைக் கேட்க வேண்டும் போலிருந்தது. .
    கவிதைத் தொகுப்பான உணர்வுகள் நூலினை நன்கு வாசித்து அதில் கவி வரிகளில் பொதிந்திருந்த விடயங்களை அலசி ஆராய்ந்து தங்கள் விமர்சனங்களை தமிழ்ப் பேச்சாளர்களான திரு.பொன்னரசு மற்றும் திரு.சசிதரன் ஆகியோர் தமது கருத்துக்களை முன் வைத்து விமர்சித்தார்கள். அதன் போதே நூலுக்குள் பொதிந்திருந்த பொக்கிஷங்களை எடுத்துரைத்தார்கள். உணர்வுகள் நூலின் வெளியீட்டுரையை வழங்கிய சிவஸ்ரீ.பிரேமகாந்தக்குருக்கள் உணர்வு பூர்வமான கருத்துக்களை முன் வைத்திருந்தார். அதே போன்று சிவஸ்ரீ.சாயி ஜீவானந்தக்குருக்கள் என் மனவானில் என்ற கருத்தில் அவர்பால் ஈர்த்துக் கொண்ட கவி வரிகளைக் குறிப்பிட்டு அந்த கவிதை நூல் படைப்பின், தரத்தின், மேன்மையை உணர்ச்சியோடு விளக்கமாகக் கூறியிருந்தார். உணர்வுகள் கவிதை நூல் படைப்பாளர் பிரம்ஸ்ரீம..ஜெயராமசர்மா வருகை தந்து ஆதரவு வழங்கிய அத்தனை உணர்வாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறினார். இறுதியில் அனைவருக்கும் இரவுணவு வழங்கப்பட்டது.

    இந்த கவிதை நூலாசிரியர் பற்றிக் குறிப்பிட வேண்டும். பிரம்ஸ்ரீ.மகாதேவஐயர்.ஜெயராமசர்மா அவர்கள் இலங்கையில் தமிழ் மொழியில் நன்கு கற்றுத் தேர்ந்த தமிழ் அறிஞர். எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், நூல் விமர்சகர், நூலாசிரியர், ஆராய்ச்சியாளர், விவுரையாளர், பத்திரிகை ஆலோசகர், சைவசமயக் குருத்துவப் பட்டம் பெற்ற குருக்கள் என்று பல பரிமாணங்களை தன்னகத்தே கொண்டதொரு பேரறிஞர். இவரால் தமிழ் உலகத்துக்குப் பெருமை என்றால் அது மிகையாகாது. அனைவரது முன்னிலையில் நூலாசிரியரைக் கௌரவித்து பட்டம் வழங்கப்பட்டது.

    ஐயா உங்கள் சேவை எமது தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதே வேளை எல்லாம் வல்ல இறைவன் அனுக்கிரகத்தோடு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றேன். இது போன்ற தமிழ்ப் படைப்புக்கள் எமக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன். வாழ்க தமிழ்.

    மெல்பேண் நவரத்தினம் அல்லமதேவன்

    Share
  • அகத்தில் வைத்துப் பூசிப்போம்

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

    230c7ee8-a9f0-4f48-b2c7-42cd28a6da39

    பெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து
    நற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து
    சுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து
    வெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார் !

    தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
    தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்
    ஊணுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்
    தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !

    பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது
    கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள்
    பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்
    துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

    உச்சிமுகந்திடுவாள் ஊரார் கண்படா வண்ணம்
    குட்டியாப் பொட்டுவைப்பாள் குளிவிழும் அக்கன்னமதில்
    கட்டியணைத் தணைத்து கற்கண்டே எனவிழித்து
    தொட்டிலே இட்டபடி தூங்கத்தமிழ் பாடிநிற்பாள் !

    ஏங்கித் தவிக்கும்தாய் இதையெல்லாம் எண்ணுகின்றாள்
    எதையுமே மனங்கொள்ளா இருக்கின்றான் அவர்பிள்ளை
    தூங்காமல் கண்விழித்த தூயவளைப் பாராமல்
    துரையாக வாழ்ந்துகொண்டு தூரவைத்தான் தாயவளை !

    தாயவளோ காப்பகத்தில் தனையனையே நினைக்கின்றாள்
    தாய்மைநிறை அவளுள்ளம் தவியாகத் தவிக்கிறது
    தவிப்பறியா மனத்துடனே தனயனுமே இருக்கின்றான்
    தாய்மனதை நோகடித்து தாம்வாழ்தல் முறையன்றோ !

    காப்பகத்தில் தாயைவிட்டுக் களியாட்டம் நடத்துகின்ற
    கருணையில்லா உள்ளங்களே கடவுளுமை மன்னிக்கார்
    கர்ப்பத்தில் சுமந்தவளை கண்போலக் காத்தவளை
    கவலையிலே மூழ்கவிட்டு வாழ்வதுதான் முறையாமோ !

    நோய்வந்து படுக்கையிலே நூறுமுறை கண்விழித்து
    பாய்மீதும் படுக்காமல் பஞ்சணையில் உறங்காமல்
    கண்விழிக்கும் காலம்வரை கண்ணுறங்கா இருந்தவளை
    காப்பகத்தில் விட்டுவிட்டு கண்ணுறங்க மனம்வருமா !

    பரிசுபெற வேண்டுமென்று பலகனவு கண்டவளை
    உரிமையுடன் பாராமல் ஒதுக்கிடுதல் முறையாமோ
    கருவுற்ற நாள்முதலாய் பெற்றெடுக்கும் காலம்வரை
    எமைநினைத்து நின்றவளை ஏங்கவிடல் முறையன்றோ !

    அன்னைதனை அரவணையார் அகமகிழ வாழார்கள்
    அன்னையவள் அடிதொழுவார் அனைத்துமே பெற்றிடுவார்
    அன்னையது கண்ணீரால் அனைத்துமே அற்றுவிடும்
    அன்னையவள் தினமதனில் அவளாசி பெற்றுநிற்போம் !

    ஆர்மனதும் நோகாமல் வாழ்ந்துவந்த அன்னையவள்
    ஆருமற்ற வெறுமையிலே அழவிடுதல் முறயன்றோ
    அன்னைதினம் கொண்டாடும் அனைவருமே கேளுங்கள்
    அன்னையது மனம்மகிழ அகத்தில்வைத்துப் பூசிப்போம் !

    நோய்க்கு மருந்தாவாள்
    நொடியிலவள் விருந்தளிப்பாள்
    சேய்க்கு முகஞ்சுழியாள்
    சிந்தனையின் வித்தாவாள்
    ஆர்க்குமவள் உதவிடுவாள்
    அன்புநிறை மனமுடையாள்
    அகிலத்தில் அன்னையவள்
    அனைவருக்கும் தெய்வமாவாள் !

    Share
  • குதித்தெழுந்து வாருங்கள் !

     எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

     

    படித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார்
    அடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார்
    குடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார்
    அடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே !

    குடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும்
    அடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார்
    பிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார்
    எடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு !

    அம்மாவை மதியார்கள் அப்பாவை மதியார்கள்
    ஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள்
    என்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது
    ஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் !

    கொலைகூடச் செய்திடுவார் கொழுத்திநிற்பார் சொத்தையெலாம்
    நிலைகெட்டுத் தடுமாறி நீசராய் மாறிடுவார்
    வெறிமுறிந்த பின்னாலே விபரீதம் தனைப்பார்த்து
    வேரொடிந்த மரமாகி விரக்தியிலே நின்றிடுவார் !

    உழைக்கின்ற காசெல்லாம் ஒருசதமும் மிஞ்சாது
    பிழைக்கின்ற பிழைப்பதனில் பெருங்குழப்பம் வந்துவிடும்
    கிடைக்கின்ற நல்வாழ்வும் கீழ்நிலைக்கு வந்துவிடும்
    நடைப்பிணமாய் ஆகியவர் நரகத்தைத் தொட்டுநிற்பர் !

    நாட்டிலே குடியொழித்தால் நல்லதே நடக்குமென
    ஏட்டிலே எழுதிவைத்த எழுத்தையெலாம் ஒதுக்கிவிட்டு
    கூட்டமாய் குடிகுடித்து குவலயத்தை அழிப்பதனை
    கூண்டோடு அழித்திடுவோம் குதித்தெழுந்து வாருங்கள் !

    வள்ளுவர் பிறந்தமண்ணில் வகைவகையாய் குடியிருக்கு
    மாசமண முனிவரெலாம் குடியொழிக்கு வகைசொன்னார்
    தெள்ளுதமிழ் நூல்கள்பல குடியொழிக்கச் சொன்னாலும்
    உள்ளமதில் கொள்ளாமல் உயிர்குடிக்கக் குடிக்கின்றார் !

    அன்பை அறத்தை அஹிம்சையை அழித்துநிற்கும்
    அநியாயக் குடிதன்னை அகற்றிடுவோம் வாருங்கள்
    துன்பமெலாம் தந்துநிற்கும் துன்மார்க்கக் குடிதன்னை
    துடைத்தொழிக்க வாருங்கள் தூய்மையாய் வாழ்ந்திடுவோம் !

    Share
  • பாராட்டு!

    -எம். ஜெயராமசர்மாமெல்பேண்,  அவுஸ்திரேலியா

    ஆண்குழந்தை பெற்றெடுத்தால்
    அன்னைக்குப் பாராட்டு
    அப்பிள்ளை சபையேறின்
    அப்பாக்குப் பாராட்டு
    அவன்சிறந்து விளங்கிவிடின்
    அகிலமே பாராட்டும்
    ஆதலால் பாராட்டு
    அருமைமிகு பரிசன்றோ!

    குறள்தந்த வள்ளுவர்க்குக்
    குவலயத்தார் பாராட்டு
    அவர்தந்த குறள்படிப்பார்
    அனைவர்க்கும் பாராட்டு
    எவர்மனமும் நோகாமல்
    ஏற்றமாய்க் கருத்துரைத்த
    எங்கள்பிதா வள்ளுவர்க்கு
    இதயத்தால் பாராட்டு!

    பாரதியின் பாட்டுக்குப்
    பலவிதத்தில் பாராட்டு
    பாரதிரப் பலவற்றைப்
    பாட்டாலே சொன்னதனால்
    போரொக்கும் சொற்கொண்டு
    போதனைகள் சொன்னதனால்
    பாரிப்போ பாரதியைப்
    பாராட்டி நிற்கிறது!

    பக்திநிறை பாடல்தந்த
    பாவலர்க்குப் பாராட்டு
    பலகருத்தை உள்நுழைத்த
    பாங்கினுக்குப் பாராட்டு
    சத்தான இலக்கியமாய்த்
    தமிழுக்குத் தந்ததனால்
    தலைவணங்கிப் பாராட்டை
    தான்வழங்கி நிற்போமே!

    கவிகண்ண தாசனுக்குக்
    காலமெலாம் பாராட்டு
    காலமெலாம் பேசும்படிக்
    கவியெழுதிக் குவித்தாரே
    கன்னித் தமிழ்தன்னைக்
    கையாண்ட திறம்கண்டு
    கவியரசர் தமிழினுக்குக்
    கண்ணியமாய்ப் பாராட்டு!

    பாராட்டுப் பலபெற்ற
    பலதலைவர் இருந்தாலும்
    பாரினிலே காந்தியைப்போல்
    பார்ப்பதற்கு யாருமுண்டோ?
    பாருலகில் தர்மத்தால்
    பலசெய்ய முடியுமென்று
    பக்குவமாய் உணர்த்தியதால்
    பாராட்டே அவரானார்!

     

     

    Share