வானமுதம் வானொலியின் பத்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மனமுவந்து வழங்கிய வாழ்த்துப்பா

0

 

எம். ஜெயராமசர்மா
வானலைகள் ஊடாக வண்ணத் தமிழ்பரப்பி
தேனாக இனித்துநிற்கும் திகட்டாத வானமுதே
ஐயிரண்டு ஆண்டாக அனைவரது மனங்கவர்ந்தாய்
அளவில்லா வளர்ச்சிபெற அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன் !

எல்லையில்லா இன்பம்தரும் எங்களது வானமுதே
நல்லபல ரசிகர்களை நாளும்நீ வளர்த்துள்ளாய்
சொல்லவல்ல சுவைபயக்க சுந்தரமாய் தமிழ்தருவாய்
நல்லபடி நீநிலைக்க நயந்துன்னை வாழ்த்துகிறேன் !

வானத்துமழை காணின் மண்ணெல்லாம் பசுமைபெறும்
வானமுதின் தேன்மழையால் மனமெல்லாம் மகிழ்வுபெறும்
ஞானத்தை உடையோரின் நற்கருத்தும் தேடிவரும்
நாளும்நீ வளர்ச்சிபெற நல்வாழ்த்தை நவில்கின்றேன் !

விஞ்ஞானம் மெஞ்ஞானம் மேலான கலாசாரம்
எஞ்ஞான்றும் உந்தனது ஒலிபரப்பில் இணைந்துநிற்கும்
நல்ஞானம் உடையோரால் நாளும்நீ வளருகிறாய்
வல்லமையாய் நீதிகழ மனமார வாழ்த்துகிறேன் !

கங்காரு நாட்டினிலே களைப்பின்றித் தமிழ்பேசி
சிங்கார நடைபோட்டு சிறப்பாக விளங்குகின்றாய்
தங்கத்தமிழ் வானமுதே தலைநிமிர்ந்து நீநிற்கப்
பொங்கிவரும் பூரிப்பால் பொலிவுபெற வாழ்த்துகிறேன் !

பத்தாண்டை நிறைவுசெய்யும் பண்பான வானமுதே
பல்லாண்டு நீநிலைக்கப் பாசமுடன் வாழ்த்துகிறேன்
முத்தான் தமிழ்கொண்டு முன்வந்த வானமுதே
முன்னேற்றம் பலகண்டு முழுமைபெற வாழ்த்துகிறேன் !

பிரம்மஶ்ரீ எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.