தித்திக்குதே திருக்குறள் – 7
மூன்று கேள்விகள்
திவாகர்
சோறுடைத்த சோழநாட்டில் பஞ்சமோபஞ்சம்
அறிவுக்குப் பஞ்சம்வந்தததாம் சொல்கின்றான்
ஆக்கியாழ்வான்; அவனடி பணியவேண்டுமாம்
போக்கற்ற பண்டிதனாய் பிதற்றுகிறானென
அவன்போக்கில் அவனை விட்டுவிட்டால்
அவனேயனைத்தும் அறிந்தவனாய் ஊர்சொல்வர்
பண்டிதன்கேள்விக்கோ பதில்சொல்வார் இல்லை
பண்டையகாலத்து வேதமெல்லாம் அறிந்தவனாம்
சாத்திரங்கள் ஓதியோதி நாத்தழும்பானவனாம்
தோத்திரங்களெல்லாம் அவனுக்கே சொந்தமாம்
கற்றோருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லைதான்
கற்றோரே இங்கில்லையென இவன்கூவுகையில்
கற்றாரொருவர் உளரேல் கொண்டுவாருமென
கொற்றவன் கோபத்துடன் ஆணையிட்டான்
‘ஈசுவரமுனியே உமக்குமிஞ்சிய கற்றவர்தாம்
காசினியிலுண்டோ வாதுசெய்ய வாரீர்
சோணாட்டுத் திறமையெலாம் ஊருலகம்
காணுமாறு உம்பாண்டியத்தியம் தெரியவேணும்’
‘ஆண்டவனையன்றி வேறேதும் நானினையேன்
பாண்டித்தியமெல்லாம் பரமனுக்கே வெளிச்சமாம்
அரசனிட்ட ஆணையென்றீர் அரசனிடம்சொல்லும்
சுரம்வந்தவன்போல ஈசுவரமுனி ஆகிவிட்டேன்
ஊரெல்லாம் போற்றுகின்றார் அவன்புகழை
பாரினிலே பலகலைகள் பயின்றபண்டிதனாம்
ஆக்கியாழ்வானிடம் வாதம்செய்வது கொடும்
நாக்கைநீட்டும் தீப்பிழம்பில் வீழ்வதுபோலாம்
வாழும்போதே ஊருக்குள் தலைகுனிவதைவிட
பாழும்கிணற்றில் எனைத்தள்ளுவதே மேலாம்’
ஈசுவரமுனியின் மகனாம் யாமுனன்கேட்டான்
‘பாசமுள்ள தந்தையே தலைகுனியவேண்டாம்
ஆட்டமாடும் குழந்தையாய் வளர்க்காமலெம்
பாட்டனிடம் பலகலைகள் பயிற்றுவித்தீர்
பால்மணம்மாறா பாலகனாய் பார்க்கவேண்டா
காலம் கனிந்திருக்க நாலுமறிந்தவனாய்
கற்றவித்தையைக் காண்பிப்பேன் ஊரார்
போற்றும்விதமாய் ஆக்கியாழ்வானை வென்று
தந்தைக்கு மகனாற்றும் கடமையென
சிந்தையிலே கொண்டெனை அனுப்பிவீரே’
குழந்தையே தெய்வமாய் வந்ததெனத்தன்
குழந்தையோடு தந்தைசென்றான் வாதுசெய்ய
தேசத்து நல்மக்களெல்லாம் அதிசயித்து
பாசத்தால் அவர்பின்னால் சென்றனரே
கற்றாரும் சுற்றாரும் கலங்கியவராய்
பற்றுடனே சபையினிலே பார்த்திருக்க
யாமார்க்கும் அஞ்சோம் நமனையஞ்சோமென
யாமுனனும் கலங்காமல் பதிலளித்தானே
சுள்ளென சூட்டிகையாய் சொன்னவிதமும்
பிள்ளையின் பதில்களத்தனையும் சரியேயென
சுவையான சொற்கூட்டமென கண்டுகளித்து
அவையோரும் சான்றோரும் பிரமித்தனராம்
யாமுனனும் தன்முறைவந்ததும் சொன்னான்;
யாம்கேட்கும் மூன்றே மூன்றுகேள்விக்கும்
ஆக்கியாழ்வானோ மறுத்துப் பேசவேணும்
ஆக்கியாழ்வான் அப்படி மறுக்கவில்லையெனில்
எம்மறிவின்முன் அவரென்றும் தோற்றவரே
சம்மதமெனில் செவிமடுப்பீர் எம்வார்த்தைகளை!
உம்மைப் பெற்றதாய் ஒருமலடியல்லள்
சிம்மமாய் அரசாளும் எம்ராஜன் ஓர்தர்மவான்
அம்மையாய் அமர்ந்திருக்கும் அரசியும்பத்தினி
உம்மால் மறுக்கமுடிந்தால் மறுத்துச்சொல்லும்
முன்வந்ததே கோபம் ஆக்கியாழ்வானுக்கு
சின்னஞ்சிறுவனே எப்படியிவைகளை மறுப்பதாம்
என்னால்மட்டுமல்ல யாராலும் முடியாது
உன்னால்முடியுமோ முடிந்தால் மறுத்துச்சொல்
அன்பிலே அனைவருக்கும் மூத்தவளாம்
அன்னையெனவே உலகம்செல்லும் வழக்குப்படி
உம்மைப் பெற்றதாய் ஓர்மலடியென்பேன்
இன்னொன்று பெற்றாளில்லை உமக்குப்பின்
ஒன்றுபின்னொன்றாய் ஓரிரண்டு பெற்றிருந்தால்
ஒன்றின் ஆயுள்முடிந்தாலும் அடுத்ததுமீறும்
விதியின்செய்கை யார்தான் அறிவார்
விதிவினை விளைவால் நீவிர்மறைந்தால்
அன்னையவள் பிள்ளைஇல்லாமல் அழுவாள்
பின்னை நினைக்கையில் இன்னொன்றினை
பெற்றிருந்தால் பேறடைந்த பெருமையை
பெற்றிருப்போம் ஆறுதல் அடைந்திருப்போம்
ஒன்றேபெற்று மலடியாகிப் போனோமெனும்
தொன்றேவரும் வழக்கை சொல்லிமாள்வாள்
அரசனென்பவன் அனைவருக்கும் தலைவன்
அரசனெவ்வழியோ மாந்தர் அவ்வழிதான்
பொதுவாய் மாந்தரென்போர் நல்லோர்தீயோர்
அதுபோல் தீயோர்செய்கை அதர்மத்தின்வழியே
நல்லரசனென்போன் எத்தனைதான் தடுத்தாலும்
பொல்லாதவர்தாம் பொழுதும் தோன்றுவரே
மாந்தரிலே அதர்மங்கள் இருக்குமிவ்வுலகில்
வேந்தன்மட்டும் தர்மவானாக இருப்பதெப்படி?
உயர்பண்பின்சிகரமாம் மாதரசியார் அவர்தம்
உயிருக்குயிராம் மன்னவர்தம் கரம்பற்றி
மந்திரம்படித்து தீவலம்வந்து மணம்செய்தாரே
மணம்செய்யுமுன் வரும்மந்திரங்கள் அறிவீரோ
குணவதியாம் இம்மணமகளை தேவர்களாம்
இந்திரன் சந்திரன் கந்தர்வன் இவர்களிடம்
வந்தனம்செய்து பெற்றுக்கொள்கிறேனென்றே
மந்திரம்சொன்னதே அதன்படி பார்க்கையில்
சொந்தமனைவியே எப்படி பத்தினியாவாள்?
அரசவைகலகலத்தது மாதரசி எழுந்தாள்
கரகோஷம்விண்ணைப் பிளக்க மன்னவனும்
வாதித்த ஆக்கியாழ்வானும் எழுந்துயாமுனன்.
பாதம்பற்றி தூக்கினர்; கொஞ்சிமகிழ்ந்தனர்
‘யாமுனன்வாய் எம்மையாளவந்தவாய்
பாமரனும் பார்மன்னரும் போற்றும்வாய்
வாதினில் வென்ற ஞானக்குழந்தையானாய்
ஏதினிக் குறையெமக்கு வேதவித்தகனே
பெற்றவர்தம் பெரும்புகழைக் காத்தவனே
கற்றபயன் இன்னதென்று காண்பித்தாய்
சோழவளநாட்டுப் பெருமை காத்தவனே
வாழ்நாள்முழுதும் இனி ஆளவந்தானாக
அறிவில்பெரியோனாய் ஆற்றல்மிகுந்தவனாய்
பெரும்பேறுபெற்று பெருவாழ்வு வாழ்வாயே’
மகவை ஈன்றபொழுது கிடைத்தவின்பத்தைவிட
மிகமகிழ்ச்சி தந்தாய் எந்தன்மகனேயென
யாமுனனை அந்தஅவையை ஆளவந்தானை
தம்மோடணைத்து உச்சிமுகர்ந்தாரே ஈசுவரமுனியே
—————————————————————————————-
தித்திக்குதே திருக்குறள் – 7
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனுஞ் சொல். (குறள் – 70)
மகன் தந்தைக்குச் செய்யும் கடமை ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லே ஆகும்.
(மேலே உள்ளது வைணவ ஆச்சாரியாரான யாமுனாச்சாரியர் (ஆளவந்தார்) சரிதத்திலிருந்தகருத்து)