-எம். ஜெயராமசர்மாமெல்பேண்,  அவுஸ்திரேலியா

ஆண்குழந்தை பெற்றெடுத்தால்
அன்னைக்குப் பாராட்டு
அப்பிள்ளை சபையேறின்
அப்பாக்குப் பாராட்டு
அவன்சிறந்து விளங்கிவிடின்
அகிலமே பாராட்டும்
ஆதலால் பாராட்டு
அருமைமிகு பரிசன்றோ!

குறள்தந்த வள்ளுவர்க்குக்
குவலயத்தார் பாராட்டு
அவர்தந்த குறள்படிப்பார்
அனைவர்க்கும் பாராட்டு
எவர்மனமும் நோகாமல்
ஏற்றமாய்க் கருத்துரைத்த
எங்கள்பிதா வள்ளுவர்க்கு
இதயத்தால் பாராட்டு!

பாரதியின் பாட்டுக்குப்
பலவிதத்தில் பாராட்டு
பாரதிரப் பலவற்றைப்
பாட்டாலே சொன்னதனால்
போரொக்கும் சொற்கொண்டு
போதனைகள் சொன்னதனால்
பாரிப்போ பாரதியைப்
பாராட்டி நிற்கிறது!

பக்திநிறை பாடல்தந்த
பாவலர்க்குப் பாராட்டு
பலகருத்தை உள்நுழைத்த
பாங்கினுக்குப் பாராட்டு
சத்தான இலக்கியமாய்த்
தமிழுக்குத் தந்ததனால்
தலைவணங்கிப் பாராட்டை
தான்வழங்கி நிற்போமே!

கவிகண்ண தாசனுக்குக்
காலமெலாம் பாராட்டு
காலமெலாம் பேசும்படிக்
கவியெழுதிக் குவித்தாரே
கன்னித் தமிழ்தன்னைக்
கையாண்ட திறம்கண்டு
கவியரசர் தமிழினுக்குக்
கண்ணியமாய்ப் பாராட்டு!

பாராட்டுப் பலபெற்ற
பலதலைவர் இருந்தாலும்
பாரினிலே காந்தியைப்போல்
பார்ப்பதற்கு யாருமுண்டோ?
பாருலகில் தர்மத்தால்
பலசெய்ய முடியுமென்று
பக்குவமாய் உணர்த்தியதால்
பாராட்டே அவரானார்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.