குறளின் கதிர்களாய்…(498)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(498)
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.
-திருக்குறள் – 411 (கேள்வி)
புதுக் கவிதையில்…
ஒருவருக்கு
வாழ்வில் வரும்
செல்வங்களுக்குள்
சிறந்த செல்வம்
செவியால் வரும்
கேள்விச் செல்வமாகும்,
அது
அனைத்துச் செல்வங்களிலும்
தலையாய ஒன்றாகும்…!
குறும்பாவில்…
செல்வங்களுள் சிறந்த செல்வம்
செவியால் வந்திடும் கேள்விச் செல்வமே,
அனைத்திலும் முதன்மையானது அதுவே…!
மரபுக் கவிதையில்…
செல்வம் பலவாய் உள்ளவற்றுள்
சிறந்த செல்வம் செவிச்செல்வம்,
நல்ல சேதி பலவற்றை
நாமே கேட்டுப் பெறுஞ்செல்வம்,
எல்லா வகையில் செல்வங்கள்
எந்த வழியில் வந்தாலும்
நல்ல தான இச்செல்வம்
நடப்பில் பெறுமே முதலிடமே…!
லிமரைக்கூ…
சிறந்த செல்வம் ஒன்றே
செவிதரும் கேள்விச் செல்வம், சிறப்பில்
மிளிரும் முதல்நிலை நின்றே…!
கிராமிய பாணியில்…
பெருசு பெருசு
அறிவுல பெருசு,
கேள்வி அறிவுதான்
அறிவுல பெருசு..
ஒலக வாழ்க்கயில
சேருற செல்வத்திலயெல்லாம்
செறந்த செல்வம்
செவியால கேக்கிற
கேள்விச் செல்வந்தான்,
அதுதான்
எல்லாச் செல்வத்திலயும்
மொதல் தரமான செல்வம்..
அதால
பெருசு பெருசு
அறிவுல பெருசு,
கேள்வி அறிவுதான்
அறிவுல பெருசு…!