குறளின் கதிர்களாய்…(499)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(499)
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
– திருக்குறள் – 424 (அறிவுடைமை)
புதுக் கவிதையில்…
அரிய பொருளையும்
கேட்பவர்கள் எளிதில்
புரியும்படிச் சொல்லி,
பிறர்பேசும் சொற்களின்
அரிய நுண்பொருளையும்
எளிதில் காணவல்லதுதான்
அறிவாகும்…!
குறும்பாவில்…
அரும்பொருளையும் கேட்பவர் எளிதில்
புரியும்படிச் சொல்லியும் பிறர்பேச்சின் நுண்பொருளை
எளிதில் காண்பதுவுமே அறிவு…!
மரபுக் கவிதையில்…
கருதிடும் பொருளதைப் பேசுகையில்
கரந்ததன் உள்ளிலே மறைந்திருக்கும்
அரும்பொருள் தன்னையும் கேட்பவர்கள்
அறிந்ததைப் புரிந்திட ஏதுவாகக்
கருத்துடன் எளிமையாய்ச் சொல்லுதலும்,
கவனமாய்ப் பிறருரை கேட்டதிலே
இருந்திடும் நுண்பொருள் தனையுணர்ந்தே
எளிதினில் காண்பதும் அறிவாமே…!
லிமரைக்கூ…
பேசு பொருளின் செறிவு
புரியும்படிச் சொல்லி, பிறர்பேச்சின் நுண்பொருளை
எளிதில் காண்பதே அறிவு…!
கிராமிய பாணியில்…
அறிவு அறிவு
அதுதான் அறிவு..
எத யாருகிட்ட பேசுனாலும்
கேக்கிறவங்க அத
ஏளிதாப் புரிஞ்சிக்கிறாப்புல
சொல்லுறதயும்,
அடுத்தவங்க
பேசுறதில உள்ள
உள்பொருள எளிதா
காணுறதயுந்தான்
அறிவுண்ணு சொல்லுவாங்க..
அறிவு அறிவு
அதுதான் அறிவு…!