எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

 

ஆயுதக் கழஞ்சியத்தை அரவணைத்த அரக்கரெலாம்
அறிவுக் கழஞ்சியத்தை அக்கினியில் இட்டார்கள்
அத்தனையும் செய்துவிட்டும் அவரோய்ந்த பாடில்லை
மிச்சமெலாம் கொழுத்துதற்கும் மீண்டுமெழ நினைக்கின்றார் !

புத்தபிரான் போதித்த போதனைகள் அத்தனையும்
போதிமரம் கேட்டுவிட்டுப் பெறுமையுடன் நிற்கிறது
காவிகட்டி சேதிசொல்லும் கனிவுடைய துறவியரும்
பாவிகளின் அருகிருந்து பாடமெல்லோ சொல்லுகிறார் !

வேட்டிகட்டும் தர்மிஷ்டர் விரும்பிநின்ற மந்திரிகள்
போட்டிபோட்டு வந்துநின்று பொசுக்கிவிட்டார் நூலகத்தை
காட்டிக்காட்டி எரிக்கச்சொல்லி கைகட்டி நின்றார்கள்
நாட்டுமக்கள் தமைக்காக்கும் நல்லவரின் மந்திரிகள் !

கொழுத்தடா என்றுசொல்லி கொடுத்தானே தீயதனை
ஊத்தடா என்றுசொல்லி உடன்கொடுத்தான் எண்ணெய்தனை
கொக்கரித்து நின்றுகொண்டு கொழுத்திவிட்டார் நூலகத்தை
யாழ்நகரின் மத்தியிலே தீவானைத் தொட்டதுவே !

தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகத்தை
திட்டமிட்டுக் கொழுத்தியதை திறலென்றே நினைக்கின்றார்
அன்புடையோர் அறிவுடையோர் அறமுடையோர் அனைவருமே
அநியாயம் இதுவெனவே அலறிநின்று அழுகின்றார் !

புத்த தர்மமெங்கே புனிமுடை ஆட்சியெங்கே
தத்துவத்தைப் போதிக்கும் தகைமையுடை தலைமையெங்கே
சத்தியத்தை மறந்துவிட்டு உத்தமாராய் நடித்துநின்றால்
நித்தமுமே தீயிட்டு நிட்டூரம் செய்வரன்றோ !

படித்தோரும் அழுதார்கள் பாமரும் அழுதார்கள்
எடுத்துத்தேடி வைத்தெல்லாம் எரியுண்டு போச்சுவென
படித்தறிந்த தாவீது பாதிரியார் கேட்டவுடன்
துடிப்படங்கிப் போய்விட்ட துயரினைநாம் மறப்போமா !

காவல்துறை கயவர்களாய் மாறியதை மறப்போமா
கடமையுடை மந்திரிகள் காடைத்தனம் மறப்போமா
கல்விச்சொத்தை தீயிட்ட காலமதை மறப்போமா
கடவுளிடம் முறையுடுவோம் கவலைதனை மறப்பதற்கு !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.