எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

 

அன்புடன் இரு
ஆணவம் அகற்று
இன்முகம் காட்டு
ஈகை வளர்
உண்மையை உரை
ஊக்கத்தை நாடு
எரிக்கும் கோபத்தை
ஏற்காது இரு
ஐக்கியமாகு சத்தியவழியில்
ஒன்றிய மனத்துடன்
ஓதிநீ அறிந்திடு
ஒளடதம் ஆகும்
அனைத்துமே உனக்கு !

கள்ளமனத்தினை காணாமல்செய்திடு
கிள்ளியெறிந்திடு கீழவர்தொடர்பினை
குறைகள்சொல்வதை கூறுகள்போட்டிடு
கெட்டவர்நட்பு கேடெனவுணர்ந்திடு
கைகளால் அன்பொடு கைகளைப்பற்றிடு
கொலைவெறி ஊட்டிடும் கோபத்தைவிட்டிடு
கெளரவமுந்தன் ஒளடதமாகுமே !

சன்மார்க்கம் நின்றால் சாந்தியைப் பெறலாம்
சிறுமதி கொண்டால் சீரெலாம் மறையும்
சுகம்பெற வேண்டில் சூழலை மாற்று
செகமதில் உன்னைச் சேவிப்பர் நாளும்
சைகள் மூலம் சகலதும் உணர்த்தலாம்
சொல்லும் சொல்லை சோர்விலா சொல்லு
செளக்கியம் ஆகும் சகலதும் உனக்கு !

தர்மம் செய்வதை தாமதம் ஆக்காதே
திருட்டு என்பதை தீண்டாமல் இருந்திடு
துன்மார்க்க குணத்தைத் தூரவே விரட்டு
தென்படும் உனக்கு தேவையாம் தெளிவு
தைக்கும் வார்த்தையை தவிர்த்தே நில்லு
தொட்டிடும் யாவும் தோன்றிடும் நன்றாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *