-ல. புவனேஸ்வரி & சி. சத்தியசீலன்

முன்னுரை:

கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சமற்கிருதப் புலவரான காளிதாசரால் இயற்றப்பட்ட பாடல் மேகதூதம் ஆகும். இது தமிழில் உள்ள தூது இலக்கியத்தை ஒத்ததாகும். பணி காரணமாக நீண்ட நாட்களாக திரும்பாத தலைவர், தன் மனைவிக்கு மேகத்தைத் தூதுவிடுவதாக இப்பாடல் அமைகிறது. இது இலத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  எளிமையும் அழகும் மிகுந்த மேகதூதக் கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

1. தூது எனப்படுவது:

நேரடியாகச் சொல்ல முடியாத வேளைகளில், ஒருவர் சொல்ல விரும்பும் செய்தியை இன்னொருவர் மூலம் தெரிவிப்பதே தூது. தூது என்ற தமிழ்ச்சொல்லுக்கு தனிப்பெரும் சிறப்பு இருக்கிறது. ஒரு நெடில் எழுத்தும் அதே எழுத்தின் குறிலும் சேர்ந்து பொருள் தரும்படியான சொல் தூது என்ற சொல் மட்டுமாகும்.

1.1. தூதின் இலக்கணம்:  

தூது இலக்கிய வகையின் இலக்கணத்தைப் பின்வரும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன:

இலக்கண விளக்கம்
பிரபந்த மரபியல்
சிதம்பரப் பாட்டியல், மரபியல்
நவநீதப் பாட்டியல், செய்யுளியல்
முத்துவீரியம், யாப்பதிகாரம், ஒழிபியல்

பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம் மூலம் தூது இலக்கியம் என்பது,

  தூது அனுப்புவோர் ஓர் ஆணாக அல்லதுபெண்ணாக இருக்கலாம்.
தூது பெறுவோரும் ஓர் ஆண் அல்லது பெண்ணாக இருக்கலாம்.
காதல் காரணமாக ஏற்பட்ட பிரிவுத்துயரம், தூதுஅனுப்புவதன் நோக்கமாக அமையும்.
  தூது அனுப்புவோர், உயர்திணை மாந்தர் அல்லது ஓர் அஃறிணைப் பொருளிடம் தம் செய்தியைக்கூறி அனுப்புவது.
  தூது பெறுவோரிடம் இருந்து மாலையை அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை வாங்கிவருமாறு வேண்டித் தூது அனுப்புவது.

என்பன தெரியவருகின்றன.

தூது விடப்படுபவை:

மனிதர்: தோழி, விறலி
பிற உயிரினங்கள்: அன்னம், மயில், தென்றல், வண்டு, பூ, மான், நெல்
அஃறிணைப் பொருட்கள்: முகில், தென்றல்
கருத்துருக்கள்: பணம், தமிழ், நெஞ்சம்

1.2. தூது நூல்கள்:

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய நெஞ்சுவிடு தூது என்ற நூலைத் தொடர்ந்து தமிழ்விடு தூது, அன்னம்விடு தூது, மேகம்விடு தூது, காக்கைவிடு தூது, பழையதுவிடு தூது, மான்விடு தூது, கிள்ளைவிடு தூது போன்று நூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட தூது நூல்கள் தோன்றியுள்ளன.

2. காளிதாசரும் மேகதூதும்:

“காளிதாசன் பரத கண்டத்திற்கு வெளியே தோன்றியவர் என்று நம்ப நிச்சயமான காரணங்கள் இருக்கின்றன. “காளிதாசன்” என்னும் அவர் பெயரே வித்தியாசமானது;megdoot அவர் பற்றிய கதைகள்கூட, அவரது பெயர் இயற்பெயர் அல்ல, அவரது வாழ்வில் பின்னர்க் கிடைத்த ஒருபெயர் என்று கூறுகின்றன. “தாசன்” (அடிமை) என்று பெயரின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் சொல்லின் சமூகப் பின்புலம் அழுத்தமானது; பழமையான ஹிந்துக்கள் இந்தப் பெயரைத் தவிர்த்தார்கள். காளிதாசனின் பிராமணீய பக்தி, புதிதாக மதமாற்றம் ஆன ஒருவரின் உத்வேகத்தையே காட்டிக் கொடுக்கிறது” – இப்படி ஓர் அறிஞர் (Benjamin Walker in “Kalidasa”, Hindu World) காளிதாசன் குறித்து எழுதினார். ஆனால், உண்மையில் காளிதாசன் யார்? எங்கே, எப்போது  பிறந்து வாழ்ந்தார்? யாரிடம் கல்வி கற்றார்? கேள்விகள் ஏராளம். பதில் யாரும் இன்னும் கண்டுபிடிக்க வில்லை.  

சமஸ்கிருத இலக்கியத்தில் பெரும் ஆளுமையாக இருக்கும் காளிதாசனைப் பற்றி பல கர்ணபரம்பரைக் (செவிவழி) கதைகள் உண்டு. இவற்றுக்குப் பெரும்பாலும் ஆதாரம் இருக்காது. இவ்வாறு பரவியுள்ளவற்றில், மிகப் பிரபலமான கதை ஒன்றில், காளிதாசன் முதலில் படிப்பறிவற்ற முட்டாளாக இருந்து, சிலரின் சதியால் ஓர் இளவரசியை மணக்க நேரிட்டதாகவும், பின்னர் அந்த இளவரசி அவரை விலக்க, காளியின் அருளால் கவிபாடும் திறன் பெற்றதாகவும், அதனாலேயே காளிதாசன் என்ற பெயரும் அடைந்ததாகக் கூறுவர். இதே கதையின் நீட்சியாக, காளியின் அருளோடு திரும்பி வந்த காளிதாசனைக் கண்டு அவர் மனைவி பேச்சில் ஏதும் முன்னேற்றம் உண்டா? என்று கேட்க, இதற்கு பதிலாகக் காளிதாசன் மூன்று பெரும் காவியங்களை (குமாரசம்பவ காவியம், மேகதூத காவியம், மற்றும்  ரகுவம்ச காவியம்) இயற்றினார் என்ற ஒரு சுவாரசியக் கூற்று உண்டு.

இன்னொரு கதை இப்படிப் போகிறது. இலங்கை அரசன் குமாரதாசன் அவையில் காளிதாசன் வீற்றிருந்தபோது, அவ்வரசன் (கமலே கமலோத்பத்தி: ஸ்²ருயதே ந து த்³ருʼஸ்²யதே) – தாமரையில் தாமரை மலர்வது கேள்விப்படுவது மட்டுமே. எங்கும் கண்டதில்லை என்ற பொருளில் ஒரு வரியைச் சொல்லி இந்த ஸ்லோகத்தை முழுமையாக்குபவர்க்குப் பரிசு என்று அறிவித்தான். பிறகு காளிதாசன் இந்த ஸ்லோகத்தை முழுமைசெய்து (பா³லே தவ முகா²ம்போ⁴ஜே கத²மிந்தீ³வரத்³வயம்) – ஓ பெண்ணே! உன் தாமரைமுகத்தில் எப்படி இரண்டு தாமரைகள் உள்ளன? (அதாவது தாமரை முகத்தில் இரு தாமரை போன்ற கண்கள்) என்ற பொருளில் அந்த ஸ்லோகத்தை நிறைவுசெய்து விட்டார். இது அரசனின் காதுக்கு எட்டும் முன் அந்த அவையில் இருந்த நடனப் பெண்ணொருத்தி, அந்த வரியை அரசனிடம் கூறி பரிசு பெற்றுக் கொண்டு விட்டாள். பின் எங்கே காளிதாசன் தான் அந்த ஸ்லோகத்தை நிறைவு செய்தது என்று தெரிய வருமோ என்று அஞ்சிக் காளிதாசனைக் கொன்றுவிட்டாள் என்று கூட ஒரு கதை உண்டு.

காளிதாசரின் மேகதூதம் 111 சந்தங்கள் கொண்டது. இந்தக் காவியத்தை, 1813ஆம் ஆண்டு Megha Duta: The Cloud Messenger என்ற தலைப்பில் Horace Hayman Wilson என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தவறு செய்ததினால், குபேரனால் நாட்டைவிட்டு விரட்டப்பட்ட ஒரு யக்ஷன், மழைக்கால மேகங்கள் மூலம் மனைவிக்குத் தூது அனுப்புகிறான். “நீ போகும் வழியில் இயற்கைக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும்; உன் மனம் நிறையும்; நீ போகும் வழியில் எல்லாம் மழை பொழிந்துகொண்டே சென்றால் பலர் உன்னை வாழ்த்துவர்” என்று அவற்றிற்கு போகவேண்டிய காரணத்தை எடுத்துச் சொல்கிறான். மேகத்தைத் தூது விடுபவர்கள் பொதுவாக வெயில்கால வெண்மேகத்தைத் தூது விடுவதில்லை.

3. மேகதூதக்கதை:

இம்மேகதூதம் “மந்தாக்கிரந்தம்” என்ற விருத்தப்பாவகையைச் சார்ந்தது. மந்தாக்கிரந்தம் என்றால் மெல்ல நடப்பது எனப் பொருள்படும். இந்நூல் பூர்வமேகம் மற்றும் உத்தரமேகம் என இரு பிரிவுகளைக்கொண்டது.

பூர்வமேகம்: கடமையில் தவறிய இயக்கன் ஒருவனுக்கு, நிதிஅரசன் குபேரன் சபித்துத் தொழில்நீக்கம் செய்து மற்றும் தலைவியை ஒருவருட காலம் பிரிந்து வாழும்படி ஆணையிட்டான். இயக்கன், தன் புதுமணங்கண்ட மனைவியைப் பிரிந்து சித்திரகூட மலையில் தன் வாழ்வைக் கழித்துவந்தான். அத்தகு தனிமையில் எட்டு மாதம் துன்பப்பட்ட அவ்வியக்கன் ஆடிமாதத்தின் முதல்நாளில் அம்மலை உச்சியில் ஒருமேகம், கொம்புக்கு மண்ணெடுக்கும் யானை போலக் கிடந்ததைக் கண்டான்.

அப்போது அவன் மனத்தில் ஓர் எண்ணம் பிறந்தது. “வடதிசையை நோக்கிச் செல்லும் இம்மேகம் என் அருமைக் காதலியையும் அளகாபுரியையும் நோக்கிச் செல்லும்மல்லவா; இதன் வாயிலாக மனைவிக்குத் தூதுசொல்லி அனுப்புதல் வேண்டும்” என்று சிந்தித்தான். சிந்தித்தவன், அன்றே மலர்ந்த கிரிமல்லிகைப் பூவினைத் தூவி, தூது போகுமாறு இரந்து வேண்டுகிறான். பின்னர் இமாலயத்திலுள்ள அளகாபுரிக்குப் போகும் வழியைக் கூறுகிறான். ”புறப்பட்ட நீ முதலில் ஆமிரக் கூடமலையை அடைய வேண்டும். அம்மலையை நீங்கி விஞ்சை மலையிலிருந்து விழும் இரேவா நதியை அடைய வேண்டும். கடப்ப மலரை நோக்கி வண்டுகள் விரையும்.  கதலிப் பூண்டின் முதல் தளிரை மான்கள் கறிக்கும். நிலத்திலிருந்து எழும் நறுமணத்தை விழுங்கி யானைகள் மகிழும். இவற்றால் உன் வழியறிந்து தசார்ணவ தேசத்தை அடைய வேண்டும்.

மெல்லிய மலர்கள் மணங்கமழ, ஊர்மருங்கிலுள்ள பெருமரங்களில் காக்கை ஆரவாரஞ்செய்யும்; நாவன் மரங்கள் கனி பழுத்துத் தூங்கும்.    இத்தேசத்தின் தலைநகரான விதிசையைக் காண்பாய். அங்கே அழகு மிளிரும் வேத்திராவதி ஆற்றின் புனலைக் கண்டபிறகு, நீச மலையில் இளைப்பாறுவாயாக.   பின்னர், பூமியில் சுவர்க்கமாகக் கருதப்படும் உஞ்சைமா நகரச் சிறப்புகளைக் கண்குளிரக் காண்பாய். பின் நிருவிந்தை ஆற்றைக்கடந்து உஞ்சைனி வனப்பைக் கண்டபின் சண்டீசு வரனுறையும் புண்ணியத் தலத்தை அடைவாய். இங்கே, ஈசன் சன்னதியில் திருப்பலி செய்யும் மாதர், உன் துளியைப் பெற்று அயர்வு நீங்கி உன்னைக் கடைக்கண்ணால் நோக்குவர். சூலபாணிக்கு அந்திமாலையிலெடுக்கும் விழாவிலே நீ பலிமுரசறைந்து சேவை செய்தபின்னர், மாடப் புறாக்கள் கண்ணுறங்கும் மாளிகைத்தலத்தில் உன் மனையாள் மின்னலோடு இராக்காலத்தைக் கழிக்க வேண்டும். குளிர்ந்த மந்தமாருதம் உன்னை மெல்லென்று ஊக்கிச் செல்லும். 

நீ, பின்னர் முருகவேளுறையும் தேவகிரியை அடைவாய். பின் சருமவதி என்னும் ஆற்றைக்கடந்து தசபுர மக்களுக்கு உன் வடிவைக் காட்டிச்செல்வாய். பின்னர், புகழ்பெற்ற பார்த்தன் தன் வில்லினால் எதிரிகள் தலையைக் கொன்று குவித்த குருக்கேத்திரத்தைப் பார்த்துக்கொண்டு சரசுவதியாற்றின் புண்ணியநீரை உண்டு மேற்செல்வாயாக. பின்னர் வடபாற் சென்று சிவனுறையும் வெள்ளயங்கிரியை அடைவாய். அங்கே சிவபெருமான் செய்த அட்டகாசங்கள் திரண்டு குவிந்துகிடக்கும் அக் கைலையின் சாரலில் விளங்குவது அளகாபுரி.

உத்தரமேகம்: மேகமே! நீ அவ் வளகாபுரியின் மஞ்சு கொஞ்சும் மாளிகைகளைப் போன்றவன்; நீயோ மின்னலொடு தோன்றுவாய்; அம்மாளிகைகள் அழகிய பெண்களையுடையன; உன்னிடத்து இந்திரவில்லு; அங்கே அழகொழுகும் பல்வண்ண ஓவியங்கள்; நீ மெல்லென மெலிதாய் முழங்குவாய்; அங்கே இன்னிசை கனிந்த மத்தளவொலி. அங்கே மரங்கள் எப்போதும் மலர்களால் நிறைந்திருக்கும். மயில்கள் எல்லாப் பருவத்திலும் கலாபம் விரித்தாடும். இரவில் என்றும் வெண்ணிலா விளங்கும்.  இல்லத்தின் புறத்தே மரகதக் கல்லினால் செய்யப்பட்ட சலக்கிரீடை மற்றும் பொற்றாமரை மலர்கள் காணப்படும். அதனிடையே வீட்டுமயில் தங்குதற்கு ஒரு நிவாசத்தண்டம் அமைக்கப்பட்டிருக்கும்.

இக்குறிப்புகளை மனத்தில் வைத்து என் இல்லத்தை அடையாளங் கண்டுகொள்வாய், அங்கே எனது காதற்கிழத்தியைக் காண்பாய். என்னை நினைந்து அழுதுகொண்டே நான் வரும் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பாள். வீணையை எடுத்து என் பெயரமைந்த இனிய வரிப்பாட்டுகளைப் பாட நினைத்தவள், கண்ணீரால நனைந்த நரம்புகளை இசைக்கமுடியாது வருந்துவாள்; பின்னர், அதற்குரிய பண்ணை மறந்து சோருவாள். அவளை மாடச்சாளர வழியால் கண்டுகொள். கண்டு, ”சுமங்கலி! நானுன் காதலனுக்குற்ற நண்பன்; அவன் சித்திரகூட மலையில் உயிரோடு வாழுகின்றான். இன்னும் நான்கு மாதங்களையும் ஒருவாறு கழிப்பாயாக. அதன்பின் அவனது சாபம் நீங்கிவிடும். பின்னர் நான் உன்னை வந்தடைவேன்; இவ்வாறு உன் இனிய காதலன் என்னிடங் கூறினான்” என்று முகில் தூதை அவளுக்குக் கூறுகின்றது.  

4. முடிவுரை: மகாகவி காளிதாசர் வடமொழியில் இயற்றிய இம்மேக தூதம் vaடமொழியிலக்கியத்திலுள்ள சிறுகாப்பியங்களுக்கு மகுடமணி போன்றது. இம்மேக தூதத்தில் “பிரிவு” (பாலை) எனும் ஒரு மெய்ப்பாட்டை ஜீவசுருதியாக வைத்து மகாகவி காளிதாசர் மண், விண்ணைப் பிரிந்து வாடும் ஒரு தாபத்தை வருணிக்கிறார். இயற்கையின் தோற்றம், காதலர் கருத்தில் உண்டாகும் கிளர்ச்சிகளை வருணிக்கும் முறையில் காளிதாசருக்கு இணையில்லை என்றால் அது மிகையாகாது; அவர் ஒரு கற்பனைக் களஞ்சியம். இதனால் இவர் உலக மகா கவிகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளார். அவருடைய இலக்கியநடை எளிமையும் தூய்மையும் உடையது; தெளிவும் சுருக்கமும் விகற்பமில்லாத போக்குமுடையது. உவமைகள் பொருத்தமும் திட்பமும் உடையன. நாம் அவரின் காவியங்களைப் படித்து “எளிமையின் இனிய அழகே போற்றி” என வியந்து பாராட்டுவோம்.

மேற்கோள் பட்டியல்:

  1. மேகதூதம், வடமொழி மூலம்: மகா கவி காளிதாசர், தமிழாக்கம்: நவாலியூர் சோ. நடராசன், கொழும்பு அப்போதிக்கரிஸ் லிமிற்றெட், இலங்கை.
  2. மேகதூதக்காரிகையுரை, சி. கணேசையர், சோதிடப்பிரகாசயந்திரசாலை, யாழ்ப்பாணம், 1925.

*****

ல. புவனேஸ்வரி & சி. சத்தியசீலன்
முனைவர் பட்ட ஆய்வாளர், இணைப்பேராசிரியர் மற்றும் நெறியாளர்
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்
இலாஸ்பேட்டை, புதுச்சேரி – 605008

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மேகதூதம்

  1. யாருடைய தமிழாக்கம் படிக்க நன்றாக இருக்கும் என சொல்லுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.