முனைவர் சங்கரராமன்

Man on top of mountain. Conceptual design.

மதுரையில் இருந்து ஒரு அழைப்பு. “சார் வணக்கம். ப்ரீயா இருக்கீங்களா. பேசலாமா ?”… கல்லூரி விழாவில் இருந்ததால் “மன்னிக்கவும் நான் மாலையில் அழைக்கிறேன்… விழாவில் இருக்கிறேன்” என்று துண்டித்து விட்டு சற்று முன்னர் அந்த எண்ணுக்கு அழைத்தேன். முகநூலில் எனது நம்பிக்கை பதிவுகளை (?) பாராட்டி பேசிவிட்டு அடுத்த மாதம் ஒரு நிகழ்வுக்கு வர முடியுமா ? என்று கேட்டார். நான் என்ன நிகழ்ச்சி எங்கு நடக்கிறது என்று கேட்டேன். அவர் நடக்கும் இடத்தை சொன்னவுடன் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனே ஒத்துக் கொண்டேன். கண்டிப்பாக வந்துவிடுகிறேன் என்று என்னையும் அறியாமல் அவரிடம் மூன்று முறை சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டேன்.

இதுவரை நான் எத்தனையோ பள்ளி கல்லூரி, நிறுவனங்கள், கோயில்கள் ஆகியவற்றில் பேசியிருக்கிறேன். ஆனாலும் இவ்வளவு ஆசையோடு உடனடியாக எந்த நிகழ்ச்சிக்கும் ஒத்துக் கொண்டதில்லை. அப்படி என்ன இந்த நிகழ்ச்சி … நிகழ்ச்சியை விட நிகழும் இடமே என்னை ஒத்துக் கொள்ள வைத்தது.

“கண்ணாடி முன்னாடி நின்னு நல்லா பேசி பழகு. பேசுறதெல்லாம் அவ்வளவு ஈசியில்ல. உனக்கு முடியலனா எதுக்கு போட்டில கலந்துக்கணும்… காசு செலவழிச்சு வேஸ்ட் பண்ணாதே ” என்ற அறிவுரைகளோடு நான் ஶ்ரீ ராம் சிட்பண்ஸ் நிறுவனம் இன்று வரை வருடந்தோறும் நடத்தி வரும் பாரதி விழா பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவராக இருந்த போது தோற்று வெளியேறிய இடம் அது. அதன் பின் அதே போட்டிகளில் மாநில அளவில் மூன்று முறை பரிசு பெற்றாலும் அந்த தோல்விதான் என்னை மீண்டு எழச் செய்தது என் பேச்சுத் துறையில் எனலாம்.

எந்த இடத்தில் தோற்று வெளியேறினேனோ அதே இடத்தில் சிறப்பு விருந்தினராக பேச அழைப்பு.

வாழ்க்கை இதுபோன்ற சில ரகசியங்களை நமக்கே தெரியாமல் நமக்கு அளிக்கும்… காலம் எல்லாவற்றையும் மாற்றி விடும். நாம் மட்டும் நமது கடமைகளை சரியாகவும் நம்பிக்கையோடும் செய்துவந்தாலே போதுமானது…

நீங்கள்
எதனால் நிராகரிக்கப்பட்டீர்களோ
அதனைக் கொண்டே
வெல்ல வேண்டும்

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *