Tag: மாதவன் இளங்கோ

  • மர்ம பாலம்

     

    மாதவன் இளங்கோ

     

    அது ஒரு நீண்ட பாலம்.

    அவனொரு விந்தை மனிதன்.

    பாலத்தைக் கடக்க

    அடியெடுத்து வைத்த ஒருவனுக்காய்

    மகிழ்வுற்றான் –

    வாழ்த்தினான்.

    பாலத்தைக் கடந்து

    விலகிப் போன ஒருவனுக்காய்

    துயருற்றான் –

    பிரார்த்தித்தான்.

    பாலத்தின் நடுவே

    கடக்கவியலாமல் அயர்வுற்று

    விடைபெற்றுக்கொண்ட வேறொருவனுக்காய்

    மீளாத்துயருற்றான்.

    பிரார்த்தித்தான்.

    அவனும் அதே பாலத்தின்

    ஏதோ ஒரு புள்ளியில்

    நின்றுகொண்டு

    ‘தெளிவாகத் தெரியுமந்த’

    பாலத்தின் மறுமுனைக்கும்

    தனக்குமான தூரத்திற்கு

    எதிர்காலம் எனப்பெயர் வைத்து,

    அது வருவதற்குள் முடித்துவிட

    ஒரு நீண்ட பட்டியலொன்றை

    தயாரித்தான்.

    எண்ணற்ற கனவுகளும்

    எண்ணற்ற கவலைகளும்

    எண்ணற்ற எதிர்பார்ப்புகளும்

    எண்ணற்ற ஏக்கங்களும்

    எண்ணற்ற திட்டங்களும்

    எண்ணற்ற குறிக்கோள்களும்

    நிறைந்த பட்டியல் அது.

    பாரம் நிறைந்த அந்தப் பட்டியலை

    தன் தலையில் சுமந்துகொண்டு

    பாலத்தின் மறுமுனை நோக்கிய

    தன்னுடைய பயணத்திற்கு

    வாழ்க்கை என்றொரு பெயர் வைத்தான்.

    எண்ணற்ற உறவுகளும்

    எண்ணற்ற துரோகங்களும்

    எண்ணற்ற மகிழ்ச்சிகளும்

    எண்ணற்ற துயரங்களும்

    எண்ணற்ற சாதனைகளும்

    எண்ணற்ற சோதனைகளும்

    எண்ணற்ற அனுபவங்களும்

    எண்ணற்ற பாடங்களும்

    நிறைந்த பயணம் அது.

    பயணத்தின் நடுவே

    பட்டியல் நீண்டுகொண்டே போனது.

    பயணத்தின் சுமை

    கூடிக்கொண்டே போனது.

    நடையின் வேகம் குறைந்து

    மெதுவாக பயணித்து

    முன்சென்று கொண்டிருந்தான்

    அந்த விந்தை மனிதன்!

    நடந்து நடந்து அவனுடல்

    ஓய்ந்துகொண்டே போக

    அவன் உருவாக்கிய எதிர்காலம்

    தேய்ந்துகொண்டே போனது.

    பாலத்தின் மறுமுனையும் வந்தது

    அங்கே மலைபோல் குவிந்து கிடந்த

    பட்டியல்களின் மேல்

    எடை பன்மடங்கு கூடியிருந்த

    தன பட்டியலையும்

    இறக்கி வைத்துவிட்டு,

    திரும்பிப் பார்த்தான்.

    அந்த மர்ம பாலம் –

    காணாமல் போயிருந்தது.

    அவனைப் பார்த்து

    மர்மமாய் புன்னகைத்தது –

    வெற்றிடம்!

    Share
  • பனிப்போர்வை

     

    மாதவன் இளங்கோ

     

    சென்னை மாநகரில் அன்று கடும் பனிப்பொழிவு.

    நான் சென்னைக்குச் சென்ற ஒரு வாரத்திற்கு முன்பு ஹாலந்தில் இருந்தபோது மட்டும் இந்தச் செய்தி என்னை வந்தடைந்திருந்தால், எள்ளி நகையாடியிருப்பேன். “சென்னையில் பனிப்பொழிவா? இதென்ன ‘காதை கிழிக்கும் அமைதி’, ‘ஊரறிந்த ரகசியம்’, ‘தெளிவான குழப்பம்’ போன்றதொரு முரண்தொடையாக இருக்கிறதே?” என்று வினவி விட்டு வந்த செய்தியை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருப்பேன்.

    நான் பிறந்தது என்னவோ வேலூர் மாவட்டம் ஏலகிரிமலைக்கு அருகே உள்ள ஒரு கிராமமாக இருந்தாலும், ஐரோப்பாவிற்குக் குடியேறி பன்னிரண்டு வருடங்களும், ஹாலந்து நாட்டில் குடியுரிமை பெற்று நான்கு வருடங்களும் ஆகிவிட்டது. ஐரோப்பாவுக்கு வந்த இந்தப் பன்னிரண்டு வருடங்களில் எத்தனை பனிப்பொழிவுகளைச் சந்தித்திருப்பேன்! இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சென்னையில் நிகழ்ந்த பனிப்பொழிவை என்னால் நான் மரிக்கும் வரை மறக்கவே இயலாது. நான் மட்டும் அல்ல; உங்களாலும் அதை மறக்க முடியாது என்பதை நான் அறிவேன். இதுபோன்ற அதிசயங்கள் எல்லாம் மீண்டும் நம்மூரில் நிகழுமா என்று தெரியவில்லை. எனவேதான் அதை உடனே எழுதிப்  பதிவு செய்ய வேண்டுமென்று தோன்றியது.

    இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில், இங்கே ஆம்ஸ்டர்டாமில் பனி பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும், முதன்முறையாக பனிப்பொழிவை எதிர்கொண்ட சென்னையில் நான் கண்ட குழப்பங்கள், ஆர்பாட்டங்கள், பாதிப்புகள், இழப்புகள், துயரங்கள் இவை எதுவுமின்றி சலனமில்லாமல் பொழிந்து கொண்டிருக்கிறது.

    என் மகள்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தான் இங்கு கோடை விடுமுறை என்றாலும் நாங்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விடுமுறை எடுத்து இந்தியாவிற்கு செல்வதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

    இதற்குப் பல காரணங்கள்.

    சென்னையில் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கோடைகாலமே நிலவுகிறது. ஜூலை மாதம் வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மேலும், ஐரோப்பாவில் கடுங்குளிர் மாதங்களான டிசம்பர் மற்றும் ஜனவரியில், அங்கு வாழ்வது என்பதே ஒரு பெரிய சாபம்.

    அது என்ன சாபம் என்றுதானே கேட்கிறீர்கள்?

    குளிர்காலம் வந்துவிட்டால் காலை பத்து அல்லது பதினொரு மணிக்கு உதித்து மாலை மூன்று மணிக்கே ஓய்ந்து, தினமும் சராசரியாக நான்கு அல்லது ஐந்து மணிநேரம் தான் ‘டைம் ரெஜிஸ்டர்‘ செய்கிறான் இந்தக் கதிரவன் என்கிற ஆசாமி. அவன் நிச்சயம் என் மேலதிகாரி காரல் டில்கினை சந்தித்தே ஆக வேண்டும். இடைப்பட்ட நேரத்திலும் மங்கலாக ஒளி வீசுவதோடு நிறுத்திக்கொண்டு, தனக்கு வெப்பம் எனும் குணாதிசயம் இருப்பதையே மறந்து போய்விடுகிறான். என் மனைவி இந்த நாட்டு சூரியனுக்கு வைத்திருக்கும் பெயர் ‘சரியான ட்யூப்லைட்!’. பொருத்தமான ஒன்றுதான்! வடக்கு பிராந்தியங்களில் இன்னமும் மோசம் – தலையே காட்ட மாட்டான். இதற்காகவே வைட்டமின் ‘டி’ பெறுவதற்காக சூரியப் படுக்கைகளை நாடிச்சென்று ஐம்பது, அறுபது ஈரோக்களை வீச வேண்டி இருக்கிறது. சென்னையின் வெயிலையும், ஆம்ஸ்டர்டாமின் குளிரையும் பண்டமாற்றுமுறை செய்ய முடிந்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலமுறை நான் நினைத்ததுண்டு.

    இதில் அவ்வப்போது பனிபொழிவு வேறு. நாடு முழுவதும் சுற்றினாலும் இங்கெல்லாம்  சேறு என்பதை பார்ப்பது அரிது. மண்ணே தெரியாமல் நாடு நகரம் முழுதும் ரப்பர் கலந்த தார் பூசி மொழுகி இருக்கிறார்களே! எங்கிருந்து சேறு உண்டாகும்? ஆனால் இந்தப் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டால் மட்டும் நடைபாதைகளில் உண்டாகும் பனிச்சகதியை பார்க்கவேண்டுமே! சில நேரங்களில் அது மிகவும் ஆபத்தானதும் கூட. பனிக்காலங்களில் மருத்துவமனைகளின் எலும்புமுறிவு பிரிவில் மட்டும் கூட்டம் நிரம்பி வழியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். வேடிக்கை என்னவென்றால் விழுபவர்களில் பெரும்பாலும் ‘ஸ்னோபூட்’ அணிந்தவர்களாக இருப்பார்கள். சாதாரண காலணிகள் அணிந்தவர்கள் சாவகாசமாக நடந்து செல்வார்கள். நானும் என் மகள்களும் ‘வழுக்கி விழுந்து விடாமல் கவனமாக எப்படி நடக்கவேண்டும்?’ என்பதை அவர்கள் அடிக்கடிப் பார்க்கும் ‘பிங்கு’ சிறுவர் நிகழ்ச்சியின் பென்குவின்-களிடமிருந்து கற்றுத் தேர்ந்திருக்கிறோம். பனிக்காலங்களில் கிட்டத்தட்ட சாலைகளில் பென்குவின்-களைப் போலத்தான் நடந்து செல்வோம். இயற்கையோடு தன் தொடர்பையே அறுத்துக்கொண்டுவிட்ட மனிதர்களிடமிருந்து இனி எனக்கு கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை; விலங்குகளிடம் நிறைய இருக்கிறது.

    இன்னொரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். குளிர்காலத்தில் ஹீட்டிங்கிற்கு ஆகும் செலவிற்கு இரண்டு முறை இந்தியா சென்று திரும்பலாம். இதுபோன்ற பல பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு வருவோம். மாறாக, தமிழகத்தில் அவ்விரு மாதங்களிலும் ஐரோப்பிய கோடைகாலத்தை போன்று அருமையான தட்பவெப்பம் நிலவும். என் குழந்தைகளுக்கு நிறைய இடங்களைச் சுற்றிக் காண்பிக்கலாம். பொங்கல் பண்டிகை வேறு ஜனவரியில் வருவதால் அவர்களை என் கிராமத்துக்கு அழைத்துச் சென்று நம் உறவினர்களிடம் பழக வைக்கலாம், நமது கலாச்சாரத்தையும் (அப்படியொன்று இன்னமும் உயிரோடு இருந்தால்) அறிந்து கொள்வார்கள். இவையெல்லாவற்றிற்கும் மேலாக நமது அடையாளத்தை அவர்கள் தொலைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    ஆனால் என்னதான் ஆயிற்று இந்தமுறை தமிழகத்திற்கு?

    நாங்கள் ஆம்ஸ்டர்டாமிலிருந்து சென்னை வந்திறங்கிய  நாளிலிருந்தே பருவநிலை மாற்றத்தை என்னால் நன்றாக உணர முடிந்தது. வழக்கமாக நான் விமானத்திலிருந்து வெளியே வந்த அடுத்தகணம் வெப்பநிலை மாற்றம் காரணமாக என் முகக்கண்ணாடியில் நீராவி படியும். அன்று அவ்வாறு நடக்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல் வேறு ஏதோவொரு இனம்புரியாத மாற்றத்தையும் என்னால் உணர முடிந்தது.

    என் மனைவி ஆனந்தியிடம் அதைப்பற்றி கூறியபோது, “அதெல்லாம் ஒண்ணுமில்ல சந்தோஷ். லாஸ்ட் இயர் கூட கொஞ்சம் கோல்டா தான் இருந்தது.” என்றாள்.  ‘எனக்குத் தெரியாதா என் தாயகத்தைப் பற்றி?’ என்று நினைத்துக் கொண்டேன்.

    தாயின் கருவறையிலிருந்து வெளியேறிப் பிறக்கும் குழந்தை, இந்தப் பிரபஞ்சம் என்கிற  தாயின் மாபெரும் கருவறையின் வேரிடங்களுக்கு நீந்திச் செல்வதற்கான சுதந்திரத்தைப் பெறுகிறது என்பதை நம்புபவன்; உணர்ந்தவன் நான்.

    பிறக்கும் குழந்தையின் உணர்வை, ஒவ்வொருமுறையும் சென்னையில் தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளியே வரும்போதும் பெறுபவன் நான். விமானத்தை ‘பேய்ப்பறவை’ என்று தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் என்னுடைய அபிமான எழுத்தாளர் ஒருவர். அது பேய்ப்பறவை மட்டும் அல்ல; தாய்ப்பறவையும் கூட. மம்மாலியா இனத்தை சேர்ந்த ஒரே பறவை என்றும் வைத்துக்கொள்ளலாம். பத்து மணிநேர பயணத்தில் தன் வயிற்றில் பயணிகள் அனைவரையும் சுமந்து, இறுதியில் பிரசவித்துவிட்டு போவாள். வெளியே வந்து தாயக மண்ணில் கால்வைக்கும் போது, நான் ஏற்கனவே கூறியது போன்றே இன்னொரு தாயின் கருவறைக்குள் நுழைவதாய் உணர்வேன். ‘எனக்குத் தெரியாதா அதன் வெம்மை?’

    இதற்கு முன்பு சென்னையில் சுனாமி வருவதற்கு முந்தைய தினம்  இதுபோன்றதொரு மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன். அது நடந்ததுகூட  ஒரு டிசம்பர் மாதம்தான் என்று நினைக்கிறேன். திடீரென்று சுனாமி பற்றிய எண்ணங்களும், மனிதர்களின் அவலக்குரல்களும் கேட்பது போலத் தோன்றியது. உடனே என் தங்கையிடமும், சித்தியிடமும் அதுபற்றி கூறி, ‘சுனாமி என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?’ என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் காலை தொலைக்காட்சியில் வந்த சுனாமி பற்றிய செய்தியைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள் என் தங்கையும், சித்தியும்.

    இதுபோன்று நமக்கு அவ்வப்போது தோன்றுவதையும், உணர்வதையும் கூறினாலே நம்மை  கேலிசெய்து கும்மியடித்துவிட்டுப்  போகிறார்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள். எல்லாவற்றிற்கும் அறிவியல் விளக்கம் கேட்கிறார்கள். பிறந்த குழந்தை அறிவியல் விளக்கம் கேட்டுவிட்டா தாயின் மார்பில் பால் குடிக்கிறது? இதற்காகவே நான் உணர்வதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை நிறுத்திவிட்டேன். இத்தகைய ‘பேரறிவுவாதிகளிடம்’ (இதற்கு அவர்களே வைத்திருக்கும் பதத்தை உபயோகித்தால் வீண் விமர்சனங்களுக்கு ஆளாகி, சிலபல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் இந்தப் பதம்).  நாம் உணர்வதை எடுத்துச் சொல்லி நாமும் முட்டாள் என்று பெயர் எடுத்து, அவர்களையும் அறிவாளிகளாக ஆக்குவதைவிட, எனக்குள்ளே அமைதியாக அவற்றை ஆய்ந்து, எனக்காகவே அறிவாளியாக இருப்பது என்று நான் முடிவு செய்து நீண்ட நாட்களாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாது; சிலவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும்; உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும் என்பதை முழுமையாக நம்புபவன் நான். இங்கு ‘முழுமையாக’ என்று எழுதியிருந்ததை அழித்துவிட்டேன். அதென்ன முழுமையாக நம்புவது? நம்புகிறேன்!

    சென்னை வந்திறங்கிய முதல் நாள், “வானம் மேகமூட்டமாக இருக்கிறது, மழை பொழிய வாய்ப்பிருக்கிறது.” என்றார் ரமணன்.

    இரண்டாம் நாள், “பருவநிலை மாற்றம் நம்ப முடியாததாக உள்ளது. வடமாநிலங்களில் நிலவும் கடுங்குளிர் தமிழகத்திலும் நிலவ வாய்ப்பிருக்கிறது.” என்றார். அன்று இரவு, பதினொரு டிகிரி செல்சியசை தொட்டிருந்தது சென்னை.

    விருகம்பாக்கம் ‘ஷ்யாமளா கார்டன்ஸ்‘ குடியிருப்பிலுள்ள என் தங்கை வீட்டில் தங்கியிருந்த நான், “எல்லோரிடமும் தெர்மல் வேர் இருக்கிறதா?” என்றேன்.

    என் மனைவி சிரித்துவிட்டு, “அதெல்லாம் ஹாலன்ட்லையே நாம யூஸ் பண்ண மாட்டோம். இங்க எதுக்கு?” என்றாள்.

    என் தங்கை என்னை சிறிது நேரம் வெறித்துப் பார்த்துவிட்டு, “தெர்மல் வேர் இல்லை அண்ணா. வாங்கலாமா?” என்று கேட்டாள். சுனாமி தினத்தன்று என்னோடு இருந்தவள் அன்றோ? என்னை உணர்ந்தவள், எனக்கு மதிப்பளித்தாள்.

    “வாங்குவது நலம்” என்றேன்.

    பாரிஸ் கார்னர் பூக்கடை அருகேயுள்ள யூனுஸ் சேத் கடைதான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் நாடும் கடை. அங்கு சென்று காரை நிரப்பிக் கொண்டு வந்தோம்.

    அடுத்த இரு தினங்களில் சுழிநிலையை நெருங்கிக்கொண்டிருந்தது சென்னை. “வீட்டில் ஹீட்டர் இருக்கிறதா?” என்று எதேச்சையாகக் கேட்டேன். உடனே என் மைத்துனரை கடைக்கு விரட்டினாள் என் தங்கை.

    வெள்ளைச் சலவைக்கல்லாலான தரையில் யாராலும் வெறும் கால்களால் நடக்க முடியவில்லை. புத்தம்புது செருப்புகளை  வாங்கி வந்து, எல்லோரும் காலுறையும், செருப்பும் அணிந்துகொண்டு நடப்பதைப்  பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.

    பரணுக்கு என்றோ புலம்பெயர்ந்திருந்த பழைய போர்வைகள், கம்பளிகள் எல்லாம் எடுத்துவந்து தரையில் விரித்துப் போட்டாள் என் தங்கை.

    சென்னை மாநகரமே வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தது.

    “தமிழகத்தில் கடுங்குளிர் நிலவுவதால் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை.” என்கிற செய்தி எல்லா தொலைக்காட்சிச் சேனல்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது.

    “கடுங்குளிர் வானிலை நிலவும் போது என்ன மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும், என்னென்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்?” என்பது போன்ற கேள்விகளுடன் பல பேட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள் நிருபர்கள்.

    அதனூடே சமையற்கட்டு உரையாடல்களும் என் காதில் விழுந்து கொண்டிருந்தன.

    “பால் கெடவே இல்லையே?” என்றார் என் சித்தி.

    “பழங்கள் கூட அழுகவே இல்லை. இன்னும் ப்ரெஷ்ஷாகவே இருக்கிறது” – இது என் தங்கை.

    “ஹாலந்தில் இப்படித்தான். குளிர்காலங்களில் பிரிட்ஜை உபயோகிக்கவே மாட்டோம். ஒரே ஒரு அறையின் ஜன்னலை மட்டும் லேசாக திறந்து வைத்து எல்லா பொருட்களையும் அங்கே வைத்துவிடுவோம். நேச்சுரல் பிரிட்ஜ்!” என்று பெருமையாக அயல்நாட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தாள் என் மனையாள்.

    அலைந்து திரிந்து இரண்டு வெவ்வேறு வகையான சூடேற்றும் சாதனங்களை எப்படியோ வாங்கி வந்துவிட்டார் எனது மைத்துனர்.

    அன்றிரவே சுழிநிலைக்கும் கீழே சென்றது சென்னை.

    இரவு யாருக்கும் தூக்கம் வரவில்லை.

    மறுநாள் காலை டிரைவர் வேலுவுடன் காரை எடுத்துக்கொண்டு குளிர்காலச் சென்னை எப்படி இருக்கிறது என்பதைக் காண நகர்வலம் சென்றேன். ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் இப்படிச் சுற்றுவது வழக்கம். அன்றைக்கு இருந்த குளிர் காரணமாக நகர்வல நாட்டம் மும்மடங்கு அதிகரித்திருந்தது.

    யூனுஸ் சேத் ஒரே இரவிலேயே சென்னையில் பல கிளைகளை தொடங்கிவிட்டாரா என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு ஆங்காகே கம்பளிச்சட்டைகள், பாய்கள், பலவித வெப்ப ஆடைகளை குளிரில் நடுங்கியபடி கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தனர் புத்தம்புது நடமாடும் ‘யூனுஸ் சேத்’ கடை முதலாளிகள்.

    அந்தக் குளிரிலும் பாண்டிபஜார் துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குச் சென்று குங்குமம் வைக்கும் வரை அல்லது அடுத்த பொங்கல், தீபாவளி வரும்வரை விட்டுவைக்குமா குளிர்?  பாவம். புத்தம்புது கம்பளிச்சட்டைகளையும், மேலாடைகளையும், தொப்பிகளையும்,  கையுறைகளையும், காலணிகளையும் வாங்கிய அடுத்தகணமே அணிந்து கொண்டும்; இன்னும் வாங்காதவர்கள் குளிர் தாங்கமுடியாமல், நீர்மத்தில் ஒழுங்கற்று இங்குமங்கும் ஓடும் துகள்களாய் மாறி இருந்தார்கள்.

    மேற்குறிப்பிட்ட அத்தனை சமாச்சாரங்களையும் அணிந்தவாறு, வாயிலும் மூக்கிலும் புகைவிட்டுக்கொண்டு, பற்கள் தட்டச்சு அடித்தபடி, ஆளுயர மேலுறைக்குள் புதைந்தபடி செல்லும் மனிதர்களை அன்றாடம் ஐரோப்பாவில் கண்டு பழகிய எனக்கு, நம் சென்னையில் இப்படிப்பட்ட காட்சிகளைக் காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. கையுறைகளை கழற்றிவிட்டு, என்னையும் மறந்து எனது கைபேசியைக் கொண்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.

    அப்போது திடீரென குளிர்காற்று முகத்தில் அறைந்து முகத்தின் மேலடுக்கு உறைந்தது. சுழிநிலைக்கு கீழே செல்வது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. முறையான உடையணிந்து இருந்தால் ஓரளவு தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பத்து-பதினைந்து  டிகிரி இருந்தாலும் கூட, காற்று அடித்தால் அவ்வளவுதான். அன்று அதுவும் நடந்துகொண்டிருந்தது. வெப்பத்தை மட்டுமே காலங்காலமாகத் தாங்கிக் கொண்டிருந்த அந்த சென்னைக் காற்று ஒரு மாறுதலுக்காக குளிரைத் தாங்கும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அனைவர் மீதும் மோதி மோதி உறையவைத்து விளையாடிக்கொண்டிருந்தது.

    பாண்டிபஜார் பூக்கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த மாலைகளில் உறைந்து போயிருந்த துளிகளை படம்பிடித்துக்கொண்டிருந்த என் காதில் அந்த ஆட்டோ பேர உரையாடல் காதில் விழுந்து என் கவனத்தை திசை திருப்பியது.

    “ரொம்ப குளிருப்பா. சீக்கிரம் போகணும். உன்கிட்ட பேரம் பேச நேரமில்லை. முடிவா எவ்ளோ சொல்லு.”

    “சார். குளிர்லையே ஆட்டோ ஓட்டுறோம். பாத்து குடு சார்.”

    சாக்கு போக்கு சொல்வதற்கு இந்த ஆட்டோக்காரர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். விலை உயர்வு செய்வதில் மத்திய அரசின் பெட்ரோலியத் துறையையே விஞ்சி விடுவார்கள் இவர்கள். அவர்களாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாகத்தான் பெட்ரோல் விலையை உயர்த்துவார்கள். இவர்கள் கூறும் காரணமெல்லாமே வித்தியாசமாக இருக்கும். மழைபெய்தால், வெயிலடித்தால், புயலடித்தால், பொங்கல் வந்தால், தீபாவளி வந்தால், ஆடி மாதம் என்பதால் – இப்படி எல்லாவற்றிற்கும். இந்தப் பட்டியலில் இப்போது குளிரும் சேர்ந்துவிட்டது. சில சமயங்களில் டீசல் வண்டி வைத்திருப்பவர்கள் கூட பெட்ரோல் விலை உயர்ந்தால் சவாரி விலையை உயர்த்துவார்கள்.

    இப்படித்தான் ஒருமுறை ஒரு ஆட்டோக்காரரிடம், “ராமசாமி சாலை செல்லவேண்டும். நூறு ரூபாய் தருகிறேன்.” என்று கூறினேன். அதுவே அங்கு செல்வதற்கு அதிகம்.

    “அதெல்லாம் ஒன் வே பண்ணிட்டாங்க சார். சுத்திட்டு போனும். அம்பது ரூபா போட்டுக் குடு சார் போலாம்.” என்றார்.

    கடைசியில் 125 ரூபாய்க்கு பேசிச் சென்றேன். சுற்றிக்கொண்டு செல்லவேண்டும் என்றவர் அந்த ஒருவழிச் சாலையிலேயே போக ஆரம்பித்தார்.

    “என்னப்பா? சுத்திட்டு போகணும்னு அதிகமா வாங்கிட்டு, ஒன்வேலயே போறியே?” என்று கோபமாகக் கேட்டேன்.

    “சார். மாட்டினா மாமாக்கு தர்றதுக்குத்தான் சார் காசு” என்று அவர் கூறியதைக் கேட்டு விக்கித்துப் போனேன். இப்படிப்பட்டவர்கள் குளிருக்குக் காசு கேட்காமல் இருப்பார்களா? ஆட்டோவில் செல்லும் போது இலவச குளிரூட்டப்பட்ட காற்றுக்கு பணம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ஆட்டோக்காரர்களை விடுங்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லோருமே வியாபாரிகளாகத்தான்    பிறக்கிறார்கள்; சென்ற வருடம் பிறந்து ஆண்டு நிறைவைக் கண்டிராத குழந்தைகூட வியாபாரம் பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று நினைத்துக்கொண்டே காரையும் வேலுவையும் தேடியவாறு நடக்கும்போது, என் எதிரே திடீரென வந்து குதித்துக் கத்திய அந்த மனிதரைக் கண்டவுடன் மிரண்டு போய்விட்டேன். அழுக்குப் படிந்த முகத்துடனும், நீண்ட தாடியுடனும், தீர்க்கமான கண்களுடனும்,  அந்தக் குளிரிலும் சட்டைகூட போடாமல், “மாயன் சரியாத்தான் சொன்னான். மாயன் சரியாத்தான் சொன்னான்!” என்று கத்தும் இந்த மனிதர் யார்?

    இதுபோன்ற மனிதர்களை திருவண்ணாமலையில் அதிகம் பார்த்திருக்கிறேன். சென்னையில் இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? இவர் சாமியாரா? பித்துப் பிடித்தவரா? இல்லை பிச்சைக்காரரா? என்று யோசித்துக்கொண்டே ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்.

    “ஹா ஹா ஹா!” என்று சிரித்துவிட்டு, “என்னை என்ன பிச்சைகாரன்னு நெனச்சியா? நான் ராசன் டா! மகராசன்! நீங்கல்லாம் தாண்டா பிச்சைக்காரனுங்க. சொல்றேன் கேட்டுக்கோ! மாயனுங்க கணக்கு தான் சரி! உங்க கணக்குதான்டா தப்பு! மக்கு பசங்களா! ரெண்டாயிரத்து பன்னெண்டு இல்லைடா! ரெண்டாயிரத்து பதினாறுல இருக்குடா உங்களுக்கு கச்சேரி! இன்னும் ஒரு வருஷம் தான். ஒரே ஒரு வருஷந்தான்! அப்புறம் இருக்கு உங்களுக்கு பிரச்சினை. அது என்ன பிரச்சனைன்னு நீ கேக்க வருவ. ஆனா, தப்ப வழியே கிடையாது! மாயனுங்க கணக்குதான் சரி! ஹா ஹா!” என்று உரக்கச் சிரித்துக்கொண்டே ஓடினார்.

    அவரைப் பார்த்துக்கொண்டே குழம்பிய மனதுடன் நின்றுகொண்டிருந்த என்னைத் தேடிவந்த வேலு, “என்ன ஆச்சி சார்? அந்த பைத்தியக்காரன் எதனா பிரச்சின பண்ணானா?” என்று பதைபதைத்தபடி கேட்டார்.

    “அதெல்லாம் இல்ல வேலு. காசு கொடுத்தாலும் வாங்கிக்கல. இந்தக் குளிருல துணிகூட போடாமே இருக்கறத பாக்க கஷ்டமா இருக்கு!”.

    காரை திருப்பி வீட்டிற்கு விரட்டிக்கொண்டு சென்றோம். எல்லா பண்பலைகளிலும் சென்னையின் குளிர் பற்றிய செய்திதான். இடையிடையே புத்தம் புதியதாய்க் கிளம்பியிருந்த சூடேற்றும் சாதனங்களைப் பற்றிய விளம்பரங்கள் வேறு.

    “அமெரிக்கா குளிரையே தாங்கும் சார் இந்த சொட்டரு!” என்று ரங்கநாதன் தெருவில் கூவிக்கொண்டிருந்த சிறுவனுக்கும், “ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட சாதனம்!” என்று பிளிரிக்கொண்டிருந்த இவர்களின் வியாபார உத்திக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.

    வீட்டிற்குள் நுழைந்தால், சுடச்சுட போண்டாவுடனும், தேநீருடனும் தொலைகாட்சியில் செய்திகளில் பார்வைகளை பதித்துக் கிடந்தது ஒட்டுமொத்த குடும்பமும்.

    “இன்னும் டூ டேஸ்ல சென்னைல ஸ்னோஃபாலாம்!!” என்று கைகளை உயர்த்தியபடி என்னைப் பார்த்து கத்தினார்கள் என் குழந்தைகளும், தங்கையும்.

    “இது என்ன விந்தையான செய்தி?” என்று அதிசயத்துப்போய் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பினால், பருவநிலை மாற்றங்களை பற்றி அவருக்கே உரித்தான பாணியில் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார் ரமணன் அவர்கள். ஆங்கிலத் தொலைக்காட்சிகள் இது பற்றி அனிமேஷன் வித்தைகளோடு விளக்கிக் கொண்டிருந்தன.

    “இந்தியால எப்படிம்மா ஸ்னோஃபால் வருது” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் என் மகள்.

    “குளோபல் வார்மிங்தான் ரீசன்.” என்றாள் என் மனையாள்.

    “குளோபல் வார்மிங்னா ஹாட்டா இல்ல ஆகணும். ஏன் கோல்ட் ஆகுது” என்கிற நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டாள் என் இளைய மகள். அது நிச்சயம் என் மனைவிக்கு அவுட்ஆஃப்சிலபஸ் ஆயிற்றே என்று நான் நினைத்த அடுத்தகணமே,

    “சும்மா கேள்வி கேட்டு டைம் வேஸ்ட் பண்ணாம போயி டேபிலட்ல கேம்ஸ் விளையாடு போடி!” என்று குழந்தையை துரத்தினாள்.

    வழக்கமாக மடிக்கணினியில் இணையத்தில் மூழ்கி இருக்கும் சமயங்களில் குடும்ப விவகாரங்களில் தலையிடும் கெட்ட பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அதனால் அமைதியாக என் வேலையை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி என்ன முக்கிய வேலை?

    வேறென்ன? பாழாய்ப்போன இந்த ஃபேஸ்புக் தான்! இந்த ஃபேஸ்புக் சுவரை பார்க்கும் போதெல்லாம், நான் பிறந்த நிலாவூர் கிராமத்தில் இருக்கும் என் தாத்தா வீட்டு எடுபிடி மங்குண்டு தான் எனக்கு நினைவுக்கு வருவார். எனக்கு விளையாட்டு காட்ட, வட்டம், முக்கோணம், நட்சத்திரம் மற்றும் விதவிதமான வடிவங்களில் மாட்டுச் சாணத்தை தட்டி அதை சுவரில் அறைவார். அவை காய்ந்த பிறகு அடுப்பில் தூக்கிப்போட்டு எரிப்பது எனக்கு பிடித்தமானதொரு விளையாட்டு. என் ஃபேஸ்புக் சுவரிலும் அப்படி அன்றாடம் நிறைய நண்பர்களும், நண்பர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும், நான் வேண்டாவெறுப்போடு தொடர்ந்து வரும் சில பிரபலங்களும் என்று எல்லோரும் வகைவகையாக நிலைத்தகவல்கள், அவர்களின் சாதனைகள், சோதனைகள், அறிவுரைகள் என்று தட்டி ஒட்டி இருப்பார்கள்.

    நம் தரப்புக்கு அன்று நாம் எடுத்திருந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று முகநூலின் உள்ளே நுழைந்தால் அதுபோன்ற பல புகைப்படங்களை ஏற்கனவே பகிர்ந்து முடித்திருந்தார்கள். ‘இதற்கென்றே ஒரு கூட்டம் அலையும் போல் உள்ளதே’ என்று நினைத்துக்கொண்டே சுட்டியை மேலும் கீழும் உருட்டினேன். சுவர் முழுதும் சென்னை வானிலை அறிக்கை வாசித்திருந்தார்கள் நண்பர்கள்.

    இடையே ஹாலந்து நண்பன் ஒருவன் ஆம்ஸ்டர்டாம் நகரில் நிகழ்ந்த பனிப்பொழிவு புகைப்படத்தை தரவேற்றியிருந்தான். “விரைவில் சென்னையிலும்…” என்கிற வாசகத்துடன் அந்தப் படத்தையும் பகிர்ந்துவிட்டு வெளியே வந்தேன். சில மணித்துளிகள் கழித்து எத்தனை விருப்பங்களும், பின்னூட்டங்களும் விழுந்திருக்கின்றன என்று பார்க்கவேண்டும்.

    அந்த காலத்தில் எல்லாம் திருமணத்திற்கு வந்து மொய் போடுபவர்களின் கணக்கை எழுதி வைப்பார்கள். அதுபோன்றதுதான் இந்த முகநூல் லைக்குகளின்; கமெண்டுகளின் கணக்கும். நமக்கு லைக் போடுபவர்களுக்கு தவறாமல் நாமும் போட்டுவிடவேண்டும். இல்லையெனில் கோபித்துக் கொள்வார்கள். ஆனால், களைப்பு மிகுதியால் கணக்கெழுதாமல் கைபேசியோடு கண்ணயர்ந்து உறங்கிவிட்டேன்.

    நள்ளிரவில் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன். என் சாரதி.

    “சார், உங்க வீட்டுக்கு கீழதான் சார் நிக்கறேன். ரொம்ப குளிரு சார். பசங்களால தாங்க முடியல.”

    “ஒரு நிமிஷம் வேலு. நான் கீழ வரேன்.” என்று கூறிவிட்டு ஹாலந்தில் அன்றாடம் அலுவலகத்திற்கு செல்வதற்குமுன் போருக்கு போவதுபோல் தயாராகுவேனே, அதேபோன்று மேலுறை, கையுறை, காலுறை சகிதமாய் வெளியே சென்றால் அங்கே வேலு காலில் வெறும் செருப்பு மட்டுமே அணிந்து, சால்வை போத்தியபடி நின்றுகொண்டிருந்தார்.

    அப்போதுதான் எனக்கு உறைத்தது. “அடடா, இவருக்கும் ஷூ, ஸ்வெட்டர் வாங்கி இருக்கலாமே! சில சமயங்களில் எவ்வளவு சுயநலத்தோடு நடந்துகொள்கிறோம்?” என்று தோன்றியது.

    உடனே மேலே சென்று பூனை போல் லாவகமாய் எனது கம்பளிச்சட்டைகள் சிலவற்றையும், அடர்த்தியான போர்வைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

    “இந்தாங்க வேலு. வீட்டுக்கு போலாம் வாங்க.”

    என் தங்கையுடைய அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து அழைக்கும் தூரத்தில் இருந்தது அவரது வீடு. வேலுவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியுமென்றாலும் அவர் வீட்டுக்குச் சென்றதில்லை. அவர் அழைத்துச் சென்ற இடத்தில் சமையற்கட்டு அளவிலான சிறு வீடுகள் நிறைய இருந்தன.

    அவர் வீட்டிற்குள் குளிரில் நடுங்கிக்கொண்டு ஸ்டவ்வைச் சுற்றி அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும், அவரது வயதான தாயாருக்கும் கொண்டுவந்த போர்வைகளைக் கொடுத்தபோது மனம் முப்பது வருடங்கள் பின்னோக்கி பாய்ந்து பயணித்தது.

    நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அரையாண்டுத் தேர்வில் பெரும்பாலும் எங்கள் தாத்தா வீட்டிற்குச் செல்வோம். மஞ்சம்பில் வீடுதான். இரவில் வாட்டும் கடுங்குளிரிலிருந்து தப்பிக்க சமையற்கட்டிலேயே படுத்துக்கொள்வோம். அதிகாலை நான்கு மணிக்கே விழித்து எங்கள் அனைவருக்கு தேநீர் தயார் செய்து கொடுப்பார் என் தாத்தா. அதைக் குடித்துவிட்டு அடுப்பிற்கு அருகே அமர்ந்து ஒவ்வொரு சுள்ளியாக பொறுக்கி அடுப்பில் போட்டு குளிர் காய்வோம்.

    வேலுவை இரும்புத்தொட்டி ஏதேனுமிருந்தால் எடுத்துவரச் சொன்னேன். அந்தத் தெருவில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த வீட்டிற்கெதிரே இருந்து சிறிது மணலை அள்ளிவந்து வீட்டில் கொட்டிவிட்டு, அதன்மீது வேலு கொண்டுவந்த சிறு இரும்புத் தொட்டியை வைத்து, விறகுகளை போட்டுக் கொளுத்தி அவர்களோடு சேர்ந்து நானும் சிறிது நேரம் அங்கு அமர்ந்து குளிர் காய்ந்து, வேலுவின் மனைவி போட்டுக்கொடுத்த அருமையான தேநீரைப் பருகிவிட்டு வீட்டுக்கு வந்த படுத்தபோது மணி நான்கு. மனதில் ஒரு வேள்வி நடத்தி முடித்த திருப்தி!

    கடைசியில் அந்த நாள் வந்தே விட்டது. சென்னை மாநகரில் அன்று கடும் பனிப்பொழிவு.

    சென்னை வெயில் வாட்டியபோதெல்லாம் வான் பார்த்து கண்களை மூடி, “ஐரோப்பாவைப் போன்று இப்போது இங்கே பனிபெய்து என் முகத்தில் பனித்துகள்கள் பளிச்சென்று விழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன். அன்று உண்மையாகவே விழுந்தது. அந்தக் குடியிருப்பிலிருந்த அனைவரும் – சிறுவர் முதல் பெரியவர் வரை –  அத்தனை பேரும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆச்சர்யத்துடனும், குதூகலத்துடனும் வானிலிருந்து கொட்டிக்கொண்டிருக்கும் அந்தத் துகள்களை வரவேற்றுக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

    அன்று மாலைக்குள்ளாகவே வானம் துகள்துகளாகக் கொட்டித் தீர்த்துவிட்டது. எல்லோரும் வெளியே பனிப்பந்துகள் செய்து வீசியெறிந்து விளையாடிக்கொண்டிருக்க, நாம் எப்போதும்போல் முகநூலுக்குள் நுழைந்தோம். மெரினா கடற்கரைப் புகைப்படங்கள் சிலவற்றை சுடச்சுட பகிர்ந்திருந்தது ‘உலக தமிழ் மக்கள் இயக்கம்’ பக்கமும் மற்ற சில பக்கங்களும்.

    ஒயிட் கிறிஸ்துமஸை‘ எதிர்நோக்கியிருந்த சாந்தோம் தேவாலயம் அழகாயிருந்தது.

    காந்தி சிலை – சாகும் வரை கோவணத்துடன் வாழ்ந்தவருக்கு சால்வை போர்த்தியிருந்தாள் இயற்கை அன்னை. ஆயினும், சிலம்பை தூக்கிக்கொண்டு நிற்கும் கைம்பெண் கண்ணகிக்கு திராவிடக் கட்சிகள் வழங்கியிருந்த கறுப்புச் சேலையை களைந்துவிட்டு, வெள்ளைச் சேலை வழங்கியிருந்தாள். இயற்கைக்கும் சிறிது மூடநம்பிக்கை உண்டு போலும்.

    மாநகராட்சியின் கருந்தார் பூச்சுக்காக  நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக வழிமேல் விழிவைத்து, ஏங்கிக் காத்திருந்த வேளச்சேரி தரமணி சாலைக்கு கிடைத்திருந்த வெண்பனிப் பூச்சு யோகம், உறைந்துபோன கூவம், வீட்டு வாசலுக்கு முன்பு பால்காரர் போட்டிருந்த ஒரு வெண்பனிக்கட்டிப் பொட்டலம், வீட்டு உப்பரிகையில் தாங்கள் அழகாய் செய்திருந்த ‘ஸ்னோமேன்‘, ஒரு நாளிதழின் முதல்பக்கத்தில் முதன்முறையாக இடம்பிடித்திருந்த வானிலை ஆய்வு மைய இயக்குநரின் புகைப்படம் என பலவிதமாய் சென்னையின் அன்றைய தின அதிசயங்களை க்ளிக்கித் தள்ளி புகைப்படங்களை சுவர்தட்டியிருந்தார்கள் நண்பர்கள்.

    முகநூலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தொலைக்காட்சி நியூஸ் சேனல் ஒன்றினுள் மூழ்கிக்கிடந்த மைத்துனருடன் இணைந்துகொண்டேன்.

    இப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையென்றாலும், குறைந்தபட்சம் ஒரு சமூக ஆர்வலர், ஒரு நடிகர், ஒரு வியாபாரி, ஒரு எழுத்தாளர், இரண்டு அரசியல்வாதிகள், தொலைபேசி மூலம் சில பொதுமக்கள் என்று எல்லா தொலைகாட்சிகளிலும் வந்து விவாதித்து சித்ரவதை செய்வது வாடிக்கையாகி விட்டது.

    அப்படியொரு அவஸ்தையான, காரசாரமான விவாதம் ‘இன்றைய முழக்கம்’ தொலைக்காட்சியில், “நெஞ்சில மஞ்சா..” நிகழ்ச்சியில் அன்று நடந்து கொண்டிருந்தது.

    “குளிர் தாங்க முடியலைங்க. கவர்மெண்டு ஒண்ணுமே செய்யமாட்டேங்குது. விறகு வாங்கினாலும் பச்சையா கெடக்கு. என்ன பன்றதுனே தெரியல. மொதலாளி வீட்டுல ஹீட்டர் இருக்குனு போனா, கரண்டு பன்னெண்டு மணிநேரம் கட் பண்றானுங்க. சென்னைல இருக்கறவங்க மட்டும் உயிரோட இருந்தா போதும்னு கவர்மெண்ட் நெனைக்குது. என்ன பண்றதுனே தெரியலைங்க! குளிருலையே செத்துடுவோம் போல இருக்குங்க.” என்று தொலைபேசி மூலம் ஒரு சாதாரணர் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருந்த போது என் மைத்துனர் சுடச்சுட போண்டா ஒன்றை எடுத்து வாயில் விட்டார்.

    தொழிலதிபர் ரெங்கமணி ஆவுடையப்பன் “தற்போது கூட ஜப்பானில் ஒரு வுட் ட்ரையர் கண்டுபிடித்துள்ளார்கள். பச்சை மரத்தை உள்ளே அனுப்பினால், காய்ந்த விறகாக வெளியே வந்துவிடும். அரசாங்கம் அத்தகைய இயந்திரங்களை உடனே இறக்குமதி செய்தால் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். எங்களுடைய  நிறுவனம் அதற்கான உதவிகள் செய்யத் தயாராயிருக்கிறது.” என்று ஆலோசனை வழங்கிய அதே வேளையில், அவரது IIM அகமதாபாத் மூளை அந்த வணிக திட்டம் எப்போது சமபாட்டுப் புள்ளியைத் தொடும் என்பதை கணித்து முடித்திருந்தது.

    சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான கட்டுத்தறி திடீரென கத்தத் தொடங்கினார், “குளிருக்காக மரங்களை வெட்டுவதென்பது அபாயகரமானது. நாளைய சந்ததியினருக்கு மரங்களை விட்டு வைக்கவேண்டும். என்னமாதிரியான ஒரு சமூகத்தில் நாம்…. ”

    தொலைபேசி மூலம் யாரோ ஒரு சாதாரணர் குறுக்கே புகுந்து, “யோவ், கட்டுத்தறி! நீ என்ன பெரிய அறிவாளின்னு காமிக்கிறையா? இன்னைக்கு சாகரவங்கள காப்பாத்த சொன்னா நாளைக்கி நாளானன்னைக்கு பெனாத்தற…” என்று சூடாகப் பேசிய போது அவரை இடைமறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கருணாகர மூர்த்தி, “நண்பரே உங்கள் வார்த்தை பிரயோகம் சரியில்லை.” என்று கூறியபோதே இணைப்பு துண்டிக்கப்பட்டு, “டூன்..டூன்..டூன்..” என்று சத்தம் வந்தது.

    ஒருங்கிணைப்பாளர் கருணாகர மூர்த்தி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-விடம் திரும்பி, “திரு.பச்சைமாமலை, அமைச்சர் திரு.பொய்கைவீரன் அவர்கள் பல நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் இதுகுறித்து உங்கள் பார்வை என்ன?”. அவர் இந்தக் கேள்வியை கேட்டுக்  கொண்டிருந்தபோது, பச்சைமாமலை அவர்கள் தனது புத்தம் புதிய வெள்ளை சட்டைக்குள் உடலை நுழைத்து தலையை காண்பித்து சிரித்தபடி அமர்ந்து, எனது தங்கையின் 41 அங்குல தொலைகாட்சிப் பெட்டித்திரை முழுவதையும் நிரப்பியிருக்க, கீழே அவரை பற்றிய ‘ஹைக்கூவை’ காண்பித்துக் கொண்டிருந்தது ‘இன்றைய முழக்கம்’.

    திரு. பச்சைமாமலை

    எம் எல்

    தமிழர் முன்னேற்ற கட்சி 

    “சில எழுத்தாளர்களுக்கும்,  சமூக ஆர்வலர்களுக்கும்  இதுவே வேலையாகிவிட்டது. இவர்களாக ஒரு தீர்வையும் வழங்க மாட்டார்கள். அரசாங்கமோ அல்லது வேறு எவரேனும் ஒருவர் கொடுக்கின்ற தீர்வில் குறை கண்டுபிடித்தே வாழ்க்கையை ஓட்டும் ஒட்டுண்ணிகள்!” என்று வார்த்தைஜாலம் காட்டி அடுத்த தேர்தலுக்கு தொலைபேசியில் பேசியவரின் ஓட்டை தக்க வைத்துக்கொண்டு, தன் பேச்சை தொடர்ந்தார் பச்சைமாமலை, “என்னைப் பொருத்தமட்டிலும் நடக்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கு காரணம் ம.மு.க-வினர் (மறத்தமிழர் முன்னேற்றக்  கட்சி) தான். நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர்கள் முன்பே இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். மின்சார பிரச்சினைக்கும் அவர்களே காரணம். மின்சாரம் இருந்திருந்தால் இத்தனை பேர் குளிரில் வாடியிருக்கமாட்டார்கள். ஆனால் எங்கள் மாண்புமிகு ஐயா அவர்கள் தொலைநோக்கோடு, அடுத்த தலைமுறையினரும் பாராட்டும் வண்ணம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.”

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த ம.மு.க கட்சி அரசியல்வாதியும், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சருமான L.A.P.D கோதண்டம், சிறிது ஆவேசமாகவே பேச ஆரம்பித்தார், “இந்த மாண்புமிகு என்பது அவரோட ஐயாவோட பதவிக்கா? இல்லை அவரோட ஐயாவுக்கேவா? மாண்புமிகு முதல்வர் ஐயா என்று கூற பழகிக் கொள்ளவேண்டும், சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள். நான் கேட்கிறேன்… ம.மு.க பற்றி பேச த.மு.க.வினருக்கு என்ன தகுதி இருக்கிறது? மின்சாரம் தான் பிரச்சினை என்கிறார்களே, எத்தனை பேர் வீட்டில் இன்று ஹீட்டர் இருக்கிறது? அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், அனைவருக்கும் ஹீட்டர் இலவசமாக வழங்கப்படும் என்று எங்கள் தலைவர் நேற்று மாலையே அறிக்கை விடுத்து தனது தாயுள்ளத்தை காண்பித்துள்ளார். அதைச் செய்வார்களா இவர்கள்?”

    இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போது இவர்களுக்கிடையே, ‘ஊர் ரெண்டு பட்டால்..” எனும் விதமாகவும், ‘முட்டாள்களுக்கிடையே அமர்ந்திருக்கும் தான் மட்டுமே இங்கு அறிவுஜீவி’ எனும் விதமாகவும் அமர்ந்திருந்த எழுத்தாளர் முகத்தில் ஒரே புன்னகை!

    இன்னொரு தொலைக்கட்சியில் தனது விநோதமான யோசனையைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் பொய்கை வீரன், “சாலைகளிலும், நடைபாதைகளிலும் படர்ந்து கிடக்கும் பனியை மாநகராட்சி குடிநீர் வண்டிகளில் கடல்நீர் கொண்டு வந்து சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்கும்.”

    “பரவாயில்லை. கடல் நீரில் உப்பு கலந்திருக்கிறது என்கிற அளவிற்காவது அமைச்சருக்கு அறிவிருக்கிறதே!” என்றாள் என் தங்கை.

    “யோசனையாம் யோசனை. மண்ணாங்கட்டி.” என்று நொந்துகொண்டார் என் மைத்துனர்.

    இதற்கிடையே இன்றைய முழக்கத்தில் சற்றுமுன் வந்த செய்தி ஒன்று மின்னிக் கொண்டிருந்தது :

    போரூர் ஏரி உறைந்து போனதால் அதில் பனிச்சறுக்கு விளையாட்டை நடத்த சென்னை மாநகராட்சி ஸ்னோ ஒயிட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது

    இன்னொரு தொலைக்காட்சியில்:

    சாலையோரத்தில் பனிப்போர்த்தி மறைத்திருந்த குழிக்குள் விழுந்த கிழவி பலி.

    குளிரினாலும், பனியால் ஏற்பட்ட விபத்துகளாலும் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 20 என்று காண்பித்தது த.மு.க சேனல்; 200 என்று காண்பித்தது  ம.மு.க சேனல். அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை – கடைசியில் ஒரு பூஜ்ஜியம். அவ்வளவுதானே? மேலும், இந்தியாவில் அன்றாடம் 62000 பேர் இறக்கிறார்கள். அது 62020 -ஆக இருந்தால் என்ன? இல்லை 62200 -ஆக இருந்தால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? மனிதர்களை விடுங்கள்; எண்ணற்ற கால்நடைகள் மரித்துப் போயிருக்கும். அவற்றை பற்றி பச்சைமாமலையும், கட்டுத்தறியும் விவாதம் புரிந்ததாய் தெரியவில்லை. பேசினாலும் அவைகளுக்குப் புரியப்போவதில்லை.

    நாட்டை உலுக்கும் அதிபயங்கரமான விஷயங்களை நாம் கையாளும் விதத்தையும், ‘நெஞ்சில மஞ்சா!’ போன்ற நிகழ்ச்சிகளில் வாதிடும் அறிஞர்களையும், அவர்களின் விஷய ஞானம், சமூகப் பார்வை இவற்றையெல்லாம் பார்க்கும் போது, நாம் என்னமாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற நிதர்சனம் மனதுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. இவர்கள் தான் நம்மை ‘அறிவார்ந்த’ சமூகமாக மாற்ற இளைஞர்களை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பரிதாபகரமான உண்மை.

    இரவு தூக்கமே வரவில்லை. இருட்டில் அமர்ந்து நுண்ணறி பேசியை எடுத்து வருடிக்கொண்டிருந்த போது திடீரென கூகிள் காலண்டர் கண்ணில் பட்டது. காலண்டரைக் கண்ட அடுத்தகணம், பாண்டிபஜாரில் பார்த்த கிழவர் நினைவுக்கு வந்தார்.

    “சட்டைகூட போடாமல் திரிந்து கொண்டிருந்த அந்த மகராசன் இந்நேரம் எங்கிருப்பார்? போய் பார்க்கலாமா? அவருக்கு ஒரு கம்பளிச்சட்டையும், கம்பளிப் போர்வையையும் கொடுத்திருக்கலாமே? பலியாகிற அனைத்து உயிர்களையும் நம்மால் காப்பாற்ற இயலாது. ஆனால், பணத்திற்காக முட்டாள்களை அறிவாளிகளாக்கிப் பார்க்கும் விந்தையான மனிதர்களுக்கிடையே, கொடுத்த பணத்தையும் மதிக்காமல், கொடுத்தவனையும் முட்டாள் என்றுரைத்த அந்த மனிதரின் உயிர் மகத்தானதல்லவா?” என்று தோன்றிய அடுத்தகணம் பனிப்போருக்கு தயாராகி, ஒன்றிரண்டு கம்பளிப் போர்வைகளை எடுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து காரை எடுத்தேன். பனிப்பொழிவின்பொது கார் ஓட்டுவது நமக்கு ஒன்றும் புதிதில்லையே? என்ன இங்கெல்லாம் விண்டர் டயர் கிடையாது. சமாளித்து ஓட்ட வேண்டும். இருந்தாலும் அந்த மகராசனுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ளலாம் என்று தோன்றியது.

    பனிப்பொழிவு சற்று குறைந்திருந்தது.

    காரில் ஏறி அமர்ந்தாலே நடு இரவிலும் கூட இந்த ரேடியோக்களின் தொல்லை தாங்க முடிவதில்லை; அதில் வரும் ஆர்.ஜேக்கள் பேசும் தமிழ் – சொல்வதற்கில்லை. டோனி க்ரைகும், ஜெப்ரி பாய்காட்டும் ஆங்கிலம் பேசுவது போலவே தமிழ் பேசவேண்டும் என்று யாரோ பாடம் நடத்தியிருப்பார்கள் போலிருக்கிறது. அன்றைய விவாத மேடையில் இரண்டு அரசியல்வாதிகளையும் வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலரின் ஜகதலப் பிரதாபங்களை மூச்சு விடாமல் டோனி பாணியில் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் ரேடியோ பீட்-ரூட் ஆர்.ஜே ‘காதல் கிங்’ கார்த்தி. இவற்றிற்கிடையே காதலர்களுக்கு அறிவுரையும், அதன் பிறகு ஒரு டூயட் பாடலும்.

    “நம் நாட்டில் ஆளாளுக்கு கருத்து பேசுகிறார்களே? பேச்சுக்கும் செயல்களுக்கும் தொடர்பே இல்லாத இதுபோன்ற போலிகளால் நிரம்பி வழிகிறது இந்த உலகம்.” என்று எரிச்சல்பட்டுகொண்டே, தியாகராயர் சாலையின் இரு புறங்களையும் பார்த்தபடி காரோட்டிச் சென்றபோது சாலையோரத்தில் ஒரு மரத்தருகே என் கண்கள் கண்ட அந்தக் காட்சி, உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி, என்னை உடனே ப்ரேக் அடிக்க வைத்தது. திடீரென ப்ரேக் அடித்ததால் பனிபடர்ந்த சாலையில் என் கார் சறுக்கி, க்றீச்சிக்கொண்டே சென்று, ஒரு சுற்று சுற்றி, இன்னொரு மரத்தின் மீது மோதி நின்றது. கிட்டத்தட்ட கார் கண்ணாடியை முத்தமிட்டுத் திரும்பினேன். பழக்க தோஷம் காரணமாக அணிந்திருந்த சீட் பெல்ட்டினால் தலைதப்பியது. பின்னர் சுதாரித்துக்கொண்டு கார் கதவைத் திறந்து வலதுகாலைக் கீழே வைத்ததும், முழங்கால் வரை பனியில் புதையுண்டது. அடுத்த அடிக்கு தரையில்  இருப்போமா அல்லது ஏதேனும் ஒரு குழிக்குள் புதைந்து விடுவோமா என்கிற அளவில்தான் எனக்கு சென்னை மாநகராட்சியின் மேல் ‘நம்பிக்கை’ இருந்தது. குளிரில் உதறியபடி அச்சத்துடனும், வெகுகவனமாகவும் அடிமேல் அடிவைத்து மெதுவாக நடந்து சென்றேன். அங்கு பென்குவின் உத்தி மட்டும் போதுமானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

    மரத்தருகே நெருங்க நெருங்க, நான் கண்ட அந்தக் காட்சி இன்னும் தெளிவாகத் தெரிந்து இறுதியில் என் ஊகத்தை உறுதிப்படுத்தியது.

    நான் யாரைத் தேடிச் சென்றேனோ அந்த மனிதர், அங்கே ஒரு சிறு நாய்க்குட்டியை இறுக அணைத்தபடி அமர்ந்திருக்க, அந்த ஜீவன்கள் குளிரில் நடுங்காமல் இருப்பதற்காக, இயற்கை அன்னை என்னை முந்திக்கொண்டுச் சென்று, அடர்த்தியானதொரு வெண்பனிப் போர்வையை அவர்கள் மீது போர்த்தி இருந்தாள்.

    பனிப்போர்வைக்குள் சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தன – அந்த இரு உயிர்களும்.

    Share
  • முன்னைப் பிறவியில்… (கவிதைக்கதை)

     

    மாதவன் இளங்கோ

     

    Author’s Note:

    சில சந்திப்புகள் நம் மனதிற்கு இனிமையானதாக அமையும்; சில சந்திப்புகள் நம்மை சிந்தனையாளர்களாக மாற்றும்; சில சந்திப்புகள் நம்மை முட்டாள்களாக்கும்; சில சந்திப்புகள் நம் வாழ்க்கைப் பாதையை  சற்று மாற்றும்; சில சந்திப்புகள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். சில சந்திப்புகள் சில மணித்துளிகளே நீடித்தாலும், நம் மனதில் ஒரு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு தான் ‘முன்னைப் பிறவியில்..’ எழுத உந்துதலாக அமைந்தது.

    ஒரு வியாழக்கிழமை மாலை. ப்ரசல்சு மாநகரத்தின் நார்டு (வடக்கு) ஸ்டேஷன். லூவன் நகரம் செல்வதற்காக, இரயிலுக்காகக் காத்திருந்த போதுதான் நான் மேலே கூறிய அந்த ‘கொந்தளிப்பு’ சந்திப்பு நிகழ்ந்தது. அந்த மனிதர், ‘நீங்கள் தமிழரா?’ என்று கேட்டதில் ஆரம்பித்த உரையாடல் ஒரு இருபது நிமிடம் நீடித்தது. சில நிமிட உரையாடலாக இருந்தாலும் என்னை வெகுவாய் பாதித்து விட்டது – தமிழனாக அல்ல; வெறும் மனிதனாகவே!! இன்னும் சொல்லப்போனால் அவர் பகிர்ந்துகொண்ட விதத்தில், மொழியே புரியவில்லை என்றாலும் கூட, எங்களருகே அமர்ந்து கொண்டிருந்த ஃப்ளம்மியரின் மனதிலும் அது ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்கக் கூடும்.

    பெல்ஜியத்தின் பிரெஞ்சு பகுதியிலுள்ள லியாஷே (Liege) நகருக்கு செல்லும் இரயிலுக்காக அவர் காத்திருந்தார். நானும் அதே இரயிலில் சென்று இடையில் வரும் ஃப்ளம்மிய நகரான லூவனில் (Leuven) இறங்க வேண்டும். வண்டியிலும் அவர் பேச்சு தொடர்ந்தது. நான் அமைதியாக அவரருகே அமர்ந்து அவர் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும், என் மனது மட்டும் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

    ‘காலம் நிச்சயம் மாறும்; விடியல் பிறக்கும்!’ என்று கூறிவிட்டு , லூவன் நகரில் இறங்கிய என் மனதில் ஏராளமான எண்ண ஓட்டங்கள், கேள்விகள், கொந்தளிப்புகளை ஏற்படுத்திவிட்டு அவர் விடைபெற்று இரயிலோடு சென்று விட்டார். அப்போது  வேறொரு சமயத்தில், வேறொரு இடத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வர, இவையிரண்டையும் இணைத்துப் பார்க்கையில் ‘முன்னைப் பிறவியில்..’ பிறந்தது.

    வீட்டிற்கு வந்தவுடன், அதே வேகத்தில், அதே மனநிலையில் ஒரு இருபத்து ஐந்து நிமிடத்தில் எழுதியதைத்தான் இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    இதோ… முன்னைப் பிறவியில்… 

    இம்மையில்,

    என் பெயர் வேதநாயகம்.

     

    காதலில் விழுந்து,

    திருமணம் முடிந்து,

    ஐந்து ஆண்டுகளோடிய பின்னும்

    மழலை இல்லை வீட்டினிலே!

     

    முதல் குழந்தைகருவிலே மரித்தது!

    இரண்டாவதுஇறந்தே பிறந்தது!

    மூன்றாவதோபிறந்து இறந்தது!      

     

    உற்றார் உறவினர் –

    துரத்தி அடித்தனர்!

    மருத்துவம் பாரென்றனர்!

    கருக்காவூர் போவென்றனர்

    திருமலை நடவென்றனர்!

    தானம்புரி என்றனர்!

     

    அவர்தம் பரிகாசப்

    பேச்சுகளைக் கேட்டுக்கேட்டு,

    நாணிக் குறுகினோம்,

    நானும் என் மனையாளும்!

    ஓடி ஒளிந்தோம்.

    உற்றார் உறவினரின்,

    தொடர் பறுத்தோம்!

     

    மூலகாரணம் அறிந்திடல்

    முக்கிய மென்றார்,

    நண்பர் ஒருவர்.

    அவர் நாடச் சொன்னது

    நாடி சோதிடம்‘!

     

    நாடி‘ நாடித்

    தேடி ஓடினேன் –

    வைத்தீசுவரன்கோவில்!   

     

    ஓலைகள் பல அலசியபின்

    சோதிடர் சொன்னார் என்னிடமே:

    முன்னைப் பிறவியில் நீ,

    அந்தத் தீவினில்’ பிறந்தவன்!

    பந்துக் களுடன் கூட்டாய்

    செய்தாய் பல நீ உயிர்வதைகள்.

    அதற்கு விலையே,

    இப்பிறவியிலே உனக்கு

    இத்தனை சித்ரவதைகள்!”

     

    சோதிடர் சொன்னதை நான்,

    துளியும் நம்பவில்லை!

    வீடு திரும்பினேன்.

    நாடி சோதிடத்தை,

    நம்பி ஓடுபவர்கள்

    அனைவருமே அவிவேகிகள்,

    என்றெண்ணிச்

    சிறிது கண்ணயர்ந்தேன்.

     

    கனவிலே,

    கடல் கடந்து சென்றேன்.  

    அங்கேபச்சை உடையணிந்த

    வெறிபிடித்தக் கூட்டமொன்று,

    வளைத்துப் பிடித்தது –

    சில அப்பாவி மக்களை!

    அதில் ஆடவர் சிலர்,

    பெண்டிர் பலர்,

    நிறைமாதக் கர்ப்பிணிகள் சிலர்

    சிறார்களோ பலர்.

     

    பிடித்தோம்!” என்றும்,

    சிக்கினர்!”  என்றும்,

    கொக்கரித்தது,

    அந்தப் பச்சை உடையணிந்தக் கூட்டம்!

     

    அதோ!

    அந்த கூட்டத்தின் தலைவன்!

    அவன் என்னைப்போல்!

    அது நானா?

    எனக்கு என் நண்பர்கள்

    வைத்த பெயர் ‘சாந்த சொரூபி‘ அன்றோ?!

    ஆனால்அந்தக் கொடூர முகம்?

    அதில் குடிக்கொண்டிருந்த வெறித்தனம்!

    அது நிஜமாய் நான் தானா?

    ஆம்நானே தான்!

    அந்தச் சிரிப்பு

    அந்த அசுரச் சிரிப்பு?

    அதற்குச் சொந்தக்காரன்?

    அதுவும் நானே தான்!

     

    பெண்களைசிறார்களை

    மட்டும் விட்டு விட

    ஆடவர் வேண்டினர்

    கர்ப்பிணிகளை மட்டும் விட்டு விட

    பெண்டிரும் கதறித் துடித்தனர்!

    ஒன்றும் புரியா மழலைகளோ,

    ஒளிந்து அழுதன – 

    சேலையின் மறைவில்!

    அனைவரையும் விட்டு விட,

    கிழவர்கள் சிலர் – என்

    காலில் விழுந்து மன்றாடினர்!  

     

    நான் தந்த பதிலோ,

    சிரிப்பு மட்டும் தான்!

    ஏளனச் சிரிப்பு!

    இடிச்சிரிப்பு!

     

    சில நிமிடங்களில்,

    வெடிச்சிரிப்பு மறைந்தது,

    வெறித்தனம் புகுந்தது,

    வெறிச்சிரிப்பானது!

    கண்கள் சிவந்தது,

    வானம் பார்த்தோம்,

    உரக்கக் கத்தினோம்!   

     

    வெட்டிச் சாய்த்தோம்

    ஆடவர் கைகளை – பின்

    அவர்தம் கால்களை – அதன் பின்

    அவர்தம் தலைகளை!

     

    சிட்டுக் குருவிகளைப்  போல்,

    சுட்டு வீழ்த்தினோம் – அவர்தம்

    சிறார்களை!

    ஓடி விளையாடும் வயதில்,  

    அவர்தம் உடல்களில் – எம்

    துப்பாக்கிக் குண்டுகள்

    விளையாடின!

     

    கதறினர் பெண்டிர் – அவர்

    கண்களில் நீர் வற்றும் வரை!

    அழுகுரல்கள் நிறைந்த

    அந்த அவல ஓசை,

    எங்கள் செவிகளில்

    தேனினு மினிய’ 

    நாதமாய் ஒலித்தது!

     

    சபித்தனர் எங்களை:

    நீங்கள் கொன்று குவித்த

    அவைகள் –

    எம் பிள்ளைகள் அல்ல!

    உம் பிள்ளைகள்!

    அவைகளுக்கும் இது நேரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    இங்கே புதைக்கப்படும்,

    ஒவ்வொரு உடலும்,

    விதைகள்!

    அவைகள் மரமாய் வளர்ந்து

    உங்களைச் சாய்க்கும் நாள் வரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    நிராயுதபாணிகளை நிர்வாணப்படுத்திச்

    சுட்டுக் கொல்லும்

    உங்களைஉங்கள் பாவங்களே

    ஆயுதங்களாய் மாறித்

    தாக்கி அழிக்கும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    ‘நாய்நிலைக்கும் கீழ்நிலை

    எம்நிலை’ கண்டு

    கொக்கரிக்கும் நீவீர் – நாளை

    உம்நிலை மாறுகையில்

    கதறி வீழ்வீர்கள்!!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    இயற்கை தந்த மண்ணை ஆள,

    இன்றெம்மைக் கொல்லும் உம்மை

    இனிதாய் வாழவிடுமா இயற்கை?

    இந்நிலத்தை அதன் சீற்றமே,

    சிதைத்தெறியும் நாள் தூரமில்லை!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    ஆம்எம் மக்களின்

    சதை தின்று,

    எம் குஞ்சுகளின்

    குருதி குடித்த உம்மை

    அந்தக் கடல் குடிக்கும் நாள் வரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    உங்கள் ஒவ்வொரு கொலைக்கும்,

    உங்கள்  சந்ததி விலை கொடுக்கும்!

    ஏன்இன்னொரு பிறவி

    என்று ஒன்று இருப்பின்,

    நீங்களே அதற்கு விலை கொடுப்பீர்கள்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    நீங்கள் கொன்று குவித்த

    அவைகள் –

    எம் பிள்ளைகள் அல்ல!

    உம் பிள்ளைகள்!

    அவைகளுக்கும் இது நேரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    எம் பிள்ளைகளா?

    ஹா ஹா ஹா” என

    மீண்டும் அதிபயங்கரமாய்,

    அசுரத்தனமாய்ச் சிரித்தோம்!

     

    கொலைவெறிகாமவெறியும் ஆனது!

    பேதை முதல்

    பேரிளம்பெண் வரை  

    ஆளுக்கு ஒன்றாய்ப் பகிர்ந்து,

    இழுத்துச் சென்றோம்!

    கதறக் கதறச்

    சூறையாடினோம்!

    சூறையாடிய பின்

    சிதைத்தோம்

    சுட்டு வீழ்த்தினோம்!

     

    அங்கே பாரென்றான் தோழன்!

    அவன் காட்டிய திசையில்,

    கர்ப்பிணிப் பெண்ணொருத்தி,

    மடிந்து கிடந்தாள்!

    வயிற்றினில் சுட்டேன்!

    சுட்டுச் சிரித்தேன்!

     

    சிரித்தேன்சிரித்தேன்!

    இடியெனச் சிரித்தேன்!

     

    அந்த வயற்காட்டை

    இடுகாடாய்சுடுகாடாய்,

    பூலோக நரகமாய்

    மாற்றிக் காட்டி இருந்தோம்!

    எங்கள் சாதனைகளைக் கண்டு

    குதூகலித்தோம்!

     

    வானத்தில் வட்டமிடும்,

    வல்லூறுகளாய்ச் சுற்றிப் பார்த்தோம்!

     

    எங்கெங்கு காணினும்

    உடையில்லா உடல்கள்!

    சிதைக்கப்பட்ட உறுப்புகள்!

    அறுபட்ட தலைகள்!

    அவற்றினூடே ஓடிய

    குருதி ஆறு!

     

    ஹா ஹா ஹா!”

    மீண்டும் சிரித்தேன்!

    உடல்களின் மீதேறிக் குதித்துத்

    தாண்டவ மாடினோம்!

     

    திடீரென,

    நிலை தடுமாறி

    கீழே விழுந்தேன்,

    ஆவென்று கத்தி,

    விழித்தேன்‘!

     

    அது கனவா?”

     

    இதயம் இரைத்தது,

    தேகம் நடுங்கியது,

    தலை கனத்தது,

    கண்களில் கண்ணீர்

    வழிந்து ஓடியது!

     

    ஆயிரமாயிரம் எண்ணங்கள்

    ஆணிபோல் என் நெஞ்சில்

    அறைந்ததாய் உணர்ந்தேன்!

     

    எனக்குள் இப்படி ஒரு மிருகமா?”

     

    ஐயோஅந்தக் குழந்தைகள்!!!”

     

    முன்தினப் பிறவியில்,

    நான் கொன்றது,

    அவர்கள் எவருடைய

    குழந்தைகளையோ அல்ல!

    என்னோடு இன்று 

    வாழ்ந்திருக்க வேண்டிய

    என் குழந்தைகளே!”

     

    எந்த இனத்தை அழித்துக்

    கொக்கரித்தேனோ,

    அதே இனத்தில்

    இன்று நானா?”

     

    இனமென்ற குறுகிய

    வட்டத்திற்குள் நான்

    சிக்க வேண்டாம்!

    அவர்களெல்லாம் மனிதர்களல்லவா?

    வெறும் மனிதனாகவே,

    வெட்கித் தலை குனிகிறேன்!” 

     

    அந்த இரத்த பூமி!”

     

    அந்த உடல்கள்!”

     

    பொசுக்கப்பட்ட அந்த பொடியன்கள்!”

     

    அந்த கதறல்கள்!”

     

    என்றோ செய்த

    என் குற்றங்கள்          

    என் கண்முன்னே

    படமாய் ஓடின!

     

    கதறிக் கதறிக்

    கடவுளை வேண்டினேன் –

    வேண்டாம் எனக்கு

    பெண் குழந்தைகள்!

    ஏனெனில்அவர்கள்

    கண்டிப்பாய்ச் சூறையாடப்படுவார்கள்!”

     

    மீண்டும் வேண்டினேன் –

    இன்னொரு பிறவி இருப்பின்,

    நானும் பெண்ணாய்ப்

    பிறந்திடல் வேண்டாம்!

    ஏனெனில்நானும்

    நிச்சயமாய் சூறையாடப்படுவேன்!”

     

    கடவுளே

    என்று மீண்டும் கத்திக் கதறினேன் !

     

    ஓடி வந்தாள் மனையாள்!

    என்னவென்று கேட்டாள்,

    பதறியபடி!

     

    அந்தத் தீவினில்

    குழந்தைகளையுமா கொன்றார்கள்?”

    என அதிர்ச்சியுடன் கேட்டேன்.

     

    தீவிரவாதம் பேசாதீர்,” என்றாள்!

     

    சிந்தித்தேன் –

    கொடூரக் கொலைகளை

    எதிர்த்து இந்த மண்ணில்

    கொடுக்கப்படும்

    குரல்களெல்லாம் ,

    தீவிரவாதத்தின் குரல்களாக

    மாற்றிக்காட்டியது

    யார் குற்றம்?”  

     

    என்னவென்று மீண்டும் வினவினாள்

    என் மனையாள்.

    அதற்கு பதிலாய்,

    நான் தந்தேன் உபதேசம்,

    அவளுக்கு மட்டுமல்ல,

    என் முன்னைப்பிறவி சக மிருகங்களுக்கும்:

    நீ விதைக்கும் ஒவ்வொன்றையும்,

    நீ அறுவடை செய்தே ஆகவேண்டும்!

    நீ கொலைகாரன் என்றால்,

    நீ கொல்வது மற்றவரை அல்ல!

    உன்னையே தான்!

    நீ செய்வது கொலையல்ல,

    தற்கொலை!

    ஏனெனில்,

    நீ கொல்லும் ஒவ்வொரு முறைக்கும்,

    நீ ஒருமுறை கொல்லப்படுவாய்!    

     

    முன்னைப் பிறவியில் நான் மிருகம்!

    என் கொலைகளுக்கு விலையாய்,

    இம்மையில் நானே அந்த

    மிருகம் தின்ற ஆடாய்!

     

    இம்மை மிருகங்களே!

    அங்கிருந்தவன்,

    இங்கிருந்து பேசுகிறேன்!

    ஆடாதீர்ஆவீர்கள் ஆடுகளாய்!

    யாரும் ஆக்கவேண்டியதில்லை!

    நீங்களாகவே ஆவீர்கள்!

      

    பழிக்குப் பழி

    சரியான பதிலல்ல!

    கண்ணுக்குக் கண்

    சரியான பதிலல்ல!

    கொலைக்குக் கொலை

    சரியான பதிலல்ல!

    ஆனால்,

    இயற்கைக்குக்

    கண்ணனையும்,

    நியூட்டனையும்,

    தெரிந்த அளவிற்கு,

    காந்தியம் தெரியாது!

     

    ஊழிற் பெருவலி யாவுள?’

     

     

     

    Share
  • பேஸ்புக் ஸ்டேடஸ் (Facebook Status)

    மாதவன் இளங்கோ

    “ஹவ் ஆர் யு பீலிங், விக்ரம்?” – இப்படி கேட்ட என்னோட பேஸ்புக் ஸ்டேடஸ் பாக்சுக்கு இன்னைக்கு கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்னு தோணிச்சிங்க. அதனால என் மனசுல இருக்கற பாரத்த இந்த பாக்சுக்குள்ள இறக்கிவச்சி உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.

    கொஞ்சம் பாரம் ஜாஸ்திங்கறதால இந்த  ஸ்டேடஸ் மெசேஜ் கொஞ்சம் பெரிசா போவும் போல இருக்கு. உங்களுக்கு வேற ஏதாவது வேலை இருந்தா பாத்துட்டு வந்து பொறுமையா படிங்க. இல்ல, என் கஷ்டத்த இப்போவே தெரிஞ்சிக்கணும்னா தொடர்ந்து படிங்க.

    ஒரு வரி ரெண்டு வரின்னா இங்கிலீஷ்லயே எழுதியிருப்பேன். இவ்ளோ பெரிய விஷயத்தையெல்லாம் என்னால இங்கிலீஷ்ல எழுத முடியாதுங்க. தமிழில எழுதறதே பெரிய விஷயம். இதுல வேற, நம்ம ஊர்க்கார பசங்கல்லாம் பேஸ்புக் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. அவங்களுக்கும் நம்ம சொல்ல வர்றது புரியணுமில்லையா? ‘இங்கிலீஷ்லயே எழுதத் தெரியாத நீ அமெரிக்காவுல போயி என்னத்த கிழிக்கற’னு உங்க மைண்ட் வாய்ஸ் பேசறது எனக்குக் கேக்குதுங்க. நான் பாக்குற வேலைக்கு ஜாவா லாங்குவேஜும் அதோட கீவேர்ட்ஸும் போதும்! ஒருநாளைக்குப் பதினாலு மணிநேரம் கம்ப்யூட்டர் கூட தானே பேசுறோம். அதுவுங்கூட சரியா தெரியாதுங்கறது வேற விஷயம். ஆனா ஒன்னு, இந்த ஊர்க்காரங்க பேசற வழவழா, கொழகொழா இங்கிலீஷுக்கு என்னோடது எவ்வளவோ பரவாயில்லீங்க.

    என்னடா இவன் ரொம்ப மரியாதையா நெறைய ‘ங்க’ யூஸ் பண்றானேனு நெனெச்சீங்கதானே? என்ன பண்றது? இப்போதான் பேஸ்புக்ல என் பெரிப்பா, சித்தப்பா, மாமா, மாமினு எல்லா பெரியவங்களும் வந்துட்டாங்களே. என்ன பண்றது?

    சித்தப்பா “ஓ! சட்டை மேல எவ்ளோ பட்டன்!” பேஸ்புக் பேஜ்லர்ந்து போட்டோவ ஷேர் பண்றார். மாமா என்னடான்னா, “Ovvoru figurum thevai machaan”-னு ஏதோவொரு பேஜை லைக் பண்றாரு. என்னதான்  நடக்குது இந்த பேஸ்புக்ல?

    எங்க கெழவி மட்டும்தான் இன்னும் வரலைங்க. அவங்களுக்கும் சாவித்திரி சொல்லிக் கொடுத்துட்டு இருக்கானு கேள்விப்பட்டேன். உண்மையா @Savithiri Muthusamy?

    தமிழில எழுதறத்துக்கு இன்னொரு காரணம் – நான் இன்னைக்கு எழுத போறது இந்த ஊருக்காரங்கள பத்தி. சாதாரண ஆளுங்களப்பத்தி எழுதனாவே பிரச்சினை. அப்படி இருக்கும்போது, இந்த ஊர் போலீஸ்காரங்கள பத்தி எழுதினா சும்மா விடுவாங்களா? அட, இப்போல்லாம் நம்ம இந்தியாவுலையே கான்ட்ரொவர்ஷியலா எதாச்சும் பேஸ்புக் ஸ்டேடஸ் போட்டா, சரியில்லையேன்னு சொல்லி, புடிச்சி உள்ள வெச்சிடறாங்க. (கான்ட்ரொவர்சிக்கு தமிழ்ல என்னங்க?) நாளைக்கு நம்மளையும் புடிச்சி உள்ள வச்சிட்டாங்கன்னா என்ன பண்றது? நம்மளையும்னு சொல்றதுல இருந்தே உங்களுக்கு ஏதோ  புரிஞ்சிருக்கணுமே?

    டிஸ்க்ளைமர்: பிரச்சினைல மாட்டிக்கவேணாம்னு நெனெக்கற யாரும் இந்த ஸ்டேடஸ படிச்சிட்டு ‘லைக்கோ’, பாராட்டி ‘கமெண்டோ’ போட்டுறாதீங்க பா. வேணும்னா என்ன திட்டி எழுதுங்க. ஒருவேளை அதனால உங்களுக்கு அவார்டு கூட கெடைக்கலாம்.

    ஆனா ஒன்ன மட்டும் தெளிவா சொல்லிடறேன். இது இந்த ஊர்ல மட்டும் நடக்கற விஷயம் இல்ல. உலகம் பூராவும் இருக்கறதுதான். என்னடா இவன் புதிர் போட்டுட்டே போறானேன்னு பாக்கறீங்களா? சிலர் செய்யற தப்புனாலையும், பலர் தப்பா ஜெனெரலைஸ் பண்றதாலையும் எவ்ளோ அப்பாவிங்க பாதிக்கப்படறாங்க?

    மொதல்ல என்னோட பேஸ்புக் ஸ்டேடஸ் பாக்ஸ் என்கிட்ட கேட்ட கேள்விக்கு வருவோம் – “ஹவ் ஆர் யு பீலிங், விக்ரம்?”

    இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு பதிலா, உங்ககிட்ட ரெண்டு விஷயத்தை இப்போ ஷேர் பண்ணிக்க போறேன்: 16 மணிநேரத்துக்கு முன்ன நடந்த ஒரு விஷயம், அப்புறம் 16 நாளைக்கு முன்னால நடந்த இன்னொரு விஷயம்.

    மொதல்ல 16 நாளைக்கு முன்ன நடந்த விஷயத்தைப் பத்தி சொல்றேன்:

    அன்னைக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டில, ஹாலிவுட் பவுல்வர்டு ஏரியால இருக்கற மெக்டீல தனியா உக்காந்து, ப்ரைசும், சாண்ட்விச்சும் சாப்டிட்டு இருந்தேன். திடீர்னு எனக்கு எதிர இருந்த டேபிள்ல இருந்தவங்கல்லாம் பதறியடிச்சி எழுந்து நின்னு எனக்கு பின்னாடி இருந்த கண்ணாடிச் சுவரு வழியா வெளிய பாத்தாங்க.

    நானும் எந்திரிச்சி திரும்பிப் பார்த்தப்போ, ரோடுக்கு அந்தப்புறம் இருக்கற ஸ்னோ வைட் கபே கிட்ட ஒரே பரபரப்பாக இருந்தது. சாதாரணமாக இவ்வளவு கூட்டமெல்லாம் இந்த ஊர்ல கூடாதேனு நெனெச்சிக்கிட்டே வெளியே வந்தேன். ரெண்டு மூணு போலீஸ்காரங்க சேர்ந்து எவனோ ஒருத்தன தரையில அமுக்கிப்பிடிச்சி, ரெண்டு கையையும் முதுகுக்குப் பின்னாடி வளைச்சி, அவன் கைல விலங்கு மாட்டிட்டு இருந்தாங்க. அந்தப் போலீஸ்காரங்க அவனைத் தூக்கி நிறுத்தனப்போ அவன் மொகத்தப் பாத்தவுடனே அப்படியே என் ஒடம்பெல்லாம் ஜில்லிட்டு போச்சுங்க. ஏன்னா, அவங்க புடிச்சி வெச்சிருந்தது என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் – இம்ரான்!

    அவனைக் கார்கிட்ட இழுத்துட்டுப்போறத பாத்தவுடனே, ரோட க்ராஸ் பண்ண ஓடினேன். ஆனா அதுக்குள்ள சிக்னல் விழுந்துடுச்சி. இந்த ஊர்ல இது வேற ஒரு பெரிய தொல்லைங்க! தலை போற நேரத்துல கூட ரூல்ஸ பாலோ பண்ணியாகணும். எப்படா பச்சை விழும்னு பாத்துட்டே இருந்து, விழுந்த அதே செகண்ட் அடிச்சி பிடிச்சி க்ராஸ் பண்றதுக்குள்ள, இம்ரான கூட்டிட்டு போயிட்டாங்க போலீஸ்காரங்க.

    அங்க கூடியிருந்த கூட்டத்துல சத்தம் போட்டுப் பேசிட்டு இருந்த ஒரு ஆள்கிட்ட போயி என்ன ஆச்சுனு கேட்டேன்.

    “என்னாச்சுனே தெரியல. திடீர்னு பாருக்குள்ள வந்து பாட்டில தூக்கிக் கண்ணாடி மேல போட்டு ஒடச்சிட்டு வெளிய போயிட்டான்.  நல்லவேள, அந்த நேரம் கரெக்டா இந்த பக்கமா வந்த போலீஸ் அவனை அமுக்கி பிடிச்சிட்டுப் போயிட்டாங்க.” என்று இங்கிலீஷ்ல சொன்னான்.

    அவன் ஏன் அப்படி செஞ்சான்னு எனக்கு லேசா புரிஞ்சது. ஆனா, அந்த சமயத்துல நிஜமாவே எனக்கு என்ன செய்யறதுனே தெரியல.

    ஹி ஈஸ் மை ப்ரண்ட். அவன எங்க கூட்டிட்டு போனாங்கன்னு தெரியுமா?” என்று அந்த ஆள்கிட்டயே திரும்பவும் கேட்டேன்.

    ஓ! காட் டேம்! எல்.ஏ.பி.டி ஈஸ் நாட் பார் பிரம் ஹியர். கோ தேர் அண்ட் செக்! குயிக்!” என்றான்.

    என்னோட போன்ல ஜிபிஎஸ்-ஐ ஆன் பண்ணிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் டிபார்ட்மெண்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். போற வழியில இம்ரான பத்தியே நெனெச்சிட்டுப் போனேன். எப்படி இருந்தவன்? நான் மொதமொதல்ல லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தப்போ, அவன் கூடத்தான் தங்கினேன். எனக்கு இங்க யாரைத் தெரியும்? எவ்ளோ ஹெல்ப் பண்ணினான்? வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர்லர்ந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு வர்ற என்ன மாதிரி ஆளுங்களுக்கு அவன் தான் கைட், ப்ரண்ட், பிலாசபர், எல்லாமே. அவன் மட்டும் இல்லேனா இங்க வந்த அடுத்த வாரமே கிளம்பி இந்தியாவுக்குப் போயிருப்பேன்.

    அவனுக்கு ஒரு கேர்ல் ப்ரண்ட் கெடச்சவுடனே, அவன் இருந்த வீட்ல என்ன விட்டுட்டு, வெஸ்ட் ஹாலிவுட் ஏரியாவுக்குப் போயிட்டான்.

    அடிக்கடி என் ரூமுக்கு வருவான். பிரெண்ட்ஸ் எல்லாரும் ஒன்னா சேர்ந்து வாரத்துக்கு ரெண்டு படம் பாப்போம். இந்தியாவிலேயே ரெண்டு நாள் ஓடாத படத்தைக்கூட சீரியசா பாத்திருக்கோம். நல்லா ஊர் சுத்துவோம். சூப்பரா போயிட்டு இருந்த அவனோட வாழ்க்கைய ஒரு ஆக்சிடென்ட் அப்படியே புரட்டிப் போட்டுடிச்சி.

    அவனுக்கு அம்மா கெடையாது. ஆறு மாசத்துக்கு முன்னாடி அவனோட அப்பாவும் சித்தியும் ஆம்பூர்லர்ந்து திண்டுக்கல்லுக்கு ஏதோ கல்யாணத்துக்குப் போகும்போது ஆக்சிடெண்ட்ல ஸ்பாட் டெட். எதிர்ல வந்த வேன் டிரைவர் தண்ணி அடிச்சிட்டு ஓட்டிட்டு வந்ததால நடந்த கொடுமை. அவங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப ஜாஸ்தியா பாசம் வெச்சிருந்ததால ஒடிஞ்சி போயிட்டான்.

    இந்தியாவுக்கு போயிட்டு திரும்பி வந்ததுல இருந்தே ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தான். திடீர்னு நைட் முழிச்சிப்பானாம். ஓடுவானாம். சாப்பாட்ட தூக்கி எறிவானாம். ரெண்டு மூணுமுற எங்க கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண அவனோட கேர்ல் ப்ரெண்ட், நாலு மாசம் சகிச்சிட்டு அப்புறம் பிரிஞ்சி போயிட்டா. அப்பலர்ந்து அடிக்கடி என் ரூமுக்கே வந்திடுன்னு கூப்பிட்டுப் பாத்தேன், அவன் கேக்கவே இல்ல. நானும் இன்னொரு ப்ரெண்ட் கார்த்திக்கும் நெறைய முறை அவன ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மெண்டுக்கு கூட்டிட்டுப் போனோம்.

    மென்டல் டிப்ரஷன்தான் காரணம், ரெகுலரா மெடிசின்ஸ் எடுத்துக்கிட்டா சரியா போய்டும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனா, அவன் ஒழுங்கா மருந்து சாப்பிடரானான்னு கூட எங்களுக்குத் தெரியல. அடிக்கடி அவன பாக்க அவன் ரூமுக்கு போவோம் – எப்பவுமே பூட்டியே இருக்கும்.

    “அடுத்த மாசம் இந்தியாவுக்கு போகும்போது பேசாம நான் அவன கூட்டிட்டு போயிடறேண்டா” என்று கார்த்திக் மூனு வாரத்துக்கு முன்னாடி கூடச் சொன்னான்.

    இப்படி நடந்ததெல்லாம் திங்க் பண்ணிக்கிட்டே பார்ட்டி மினிட்ஸ் நடந்ததுல வில்காக்ஸ் அவென்யூவில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் போய்ச்சேர்ந்தேன். உள்ள போயி எல்.ஏ.பி.டி ஆபீசர்கிட்ட என்ன அறிமுகப்படுத்திகிட்டு, இம்ரான் கானைப் பத்திக் கேட்டேன். அவ்வளோதான் என்னோட பாஸ்போர்ட உடனே வாங்கிக்கிட்டு, என்னப்பத்தியும், இம்ரானப் பத்தியும் எல்லா டீடைல்சயும் கேட்டு ரெகார்ட் பண்ணிட்டு என்னை போகச் சொல்லிட்டார்.

    நான் இம்ரானோட ப்ராப்லெம்ச பத்தி எடுத்துச் சொல்லி அவன பாக்கணும்னு சொன்னேன். எவ்ளோ சொல்லியும் அவர் கேக்கவே விரும்பல. கடைசியா,

    “வி கான்ட் லெட் யூ மீட் எ டெர்ரரிஸ்ட் லைக் ஹிம்” என்று கத்தினார்.

    அந்த ஆள் சொன்னதக் கேட்டு அரண்டு போயிட்டேங்க.

    ” டெர்ரரிஸ்ட்?? வாட் த ஹெக்? ஹவ் கேன் யூ கால் மை ப்ரெண்ட் எ டெர்ரரிஸ்ட்? வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்!” என்று என்னையறியாமல் ஆவேசமாக நானும் கத்திவிட்டேன்.

    “மை ப்ராப்ளெம்??? ஹிஸ் நேம் ஈஸ் த ப்ராப்ளெம். ‘கான்’ ஈஸ் த ப்ராப்ளெம். கெட் லாஸ்ட் ரைட் அவே!” என்று அவர் கத்திய கத்தில் என் காதே கிழிஞ்சிடுச்சோனு ஒரு டவுட்டே வந்திடுச்சு.

    இன்வெஸ்டிகேஷன் முடிஞ்சாத்தான் பாஸ்போர்ட்ட தருவேன்னு என்னை தொறத்தி அடிச்சிட்டார். அன்னைலர்ந்து நானும், கார்த்திக்கும் படாதபாடு பட்டுட்டோம். தொலச்சி எடுத்துட்டாங்க. ஒரு வாரம் கழிச்சி, என்னோட பாஸ்போர்ட்ட திருப்பி கொடுத்துட்டாலும், இம்ரானைப் பாக்கவே முடியல. ஒரு வாரத்துக்கு முன்னால போனப்ப அவன் தீவிரவாதிங்கறதால (??!!) எப்.பி.ஐ கஸ்டடில இருக்கான், நாங்க ஒண்ணுமே பண்ண முடியாதுனு கைய விரிச்சிட்டாங்க பாவிப்பசங்க. எப்.பி.ஐ சம்மந்தப்பட்டதுங்கறதால நம்ம இந்தியன் லாயர்சும் கைய விரிச்சிட்டாங்க.

    கார்த்திக் இந்தியன் எம்பசில ஹெல்ப் கேக்கறதுக்காக சான் பிரான்சிஸ்கோ போனான். கான்சலேட் சீரியஸா ஸ்டெப்ஸ் எடுத்துட்டு இருக்கார்னு தைரியம் சொன்னான். நானும் அலைஞ்சி திரிஞ்சி நாலு நாளைக்கு முன்னாலதான் என்னோட கொலீக் மூலமா ஒரு அமெரிக்க லாயரப் புடிச்சேன். அவர் கண்டிப்பா வெளிய கொண்டுவந்திடலாம்னு ஆறுதல் சொன்னார். அப்போதான் எனக்கு உயிரே வந்தது. வெளிய வந்தவுடனே பேசாம நானே இந்தியா கூட்டிட்டு போகலாம்னு நெனெச்சிட்டு இருக்கேன்.

    இப்போ 16 மணிநேரத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்துக்கு வருவோம்.

    அத சொல்றதுக்குப் பதிலா, இன்னைக்கு காலைல இதோ இங்க ஒரு பாபுலர் நியூஸ் பேப்பரோட பேஸ்புக் பேஜ்ல ஸ்டேடசா போட்டிருக்கற நியூஸ் அப்டேட்ட படிக்கறேன் கேளுங்க. இது உங்களுக்குப் புரிஞ்சா, என் வலியும் உங்களுக்குப் புரிஞ்சிடுச்சுனு அர்த்தம்:

    “சான் டியகோ நகரில் நேற்று மாலை ஒரு ‘கன் மேன்’ (??!!) – அதாவது ‘துப்பாக்கி ஏந்திய ‘நபர்’ – ஒரு வணிக வளாகத்தில் புகுந்து 23 பேரை சரமாரியாகச் சுட்டுக் கொன்றுவிட்டார். ‘ஆன்டர்சன்’ என்கிற அந்த ‘கன் மேன்’ ஒரு மன நோயாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.”

    Share
  • ஏன் முதல் ஏடு வரை…

     

    மாதவன் இளங்கோ

     

    சிறிது குழப்பமான தலைப்புதான்.

    என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே!

    ஓரிரு நாட்களுக்கு முன்பு எனது பெல்கிய நண்பருக்கு ‘கிப்ளிங் முறை’ (Kipling Method) பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன்.

    அது என்ன ‘கிப்ளிங் முறை’ என்று உங்கள் புருவங்கள் சுருங்குவது தெரிகிறது.

    Rudyard Kipling – எனது ஆதர்ச கவிஞர், எழுத்தாளர். தலைவலி வந்தால் மருந்தை உட்கொள்வது போல, எப்போதாவது மனவலி வந்தால் அவருடைய ‘IF’ என்கிற கவிதைதான் எனக்கு மருந்தே! என்னைப் பொறுத்தவரையில், IF – உலகின் தலைசிறந்த கவிதைகளில் ஒன்று.

    அவரது “The Elephant’s Child” கதையில் வரும் “I KEEP…“ என்கிற கீழ்வரும் கவிதைதான் கிப்ளிங் முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

    I KEEP six honest serving-men

     (They taught me all I knew);

    Their names are What and Why and When

     And How and Where and Who.

    நாம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முயலும்போதும் அல்லது ஒரு திட்டத்தைத் (Project) தொடங்கும்போதும், ‘ஏன்?’, ‘என்ன?’, ‘எப்போது?’, எங்கே?’, ‘எப்படி?’ மற்றும் ‘யார்?’ என்கிற இந்த ஆறு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டும். இந்த ஆறு கேள்விகளுக்கு விடையளித்தாலே பாதித் தீர்வு கிடைத்ததற்குச் சமம், பாதித் திட்டத்தை முடித்ததற்குச் சமம்.

    இது ஒன்றும் நமக்குப் புதிய விஷயமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது பாட்டனார் ‘வினைசெயல்வகை’அதிகாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று விளக்கிவிட்டார்.

    ஆனால், என் மகனுக்கு என்னவோ இவர்கள் இரண்டு பேரையும் விட,   டாய்ச்சி ஓனோ-வைத்தான் நிறைய பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஓனோ, ஆறு கேள்வியெல்லாம் வேண்டாம், ஒரே ஒரு கேள்வி போதும் – ‘ஏன்?’. ஆனால், அதை விடாமல் ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’ என்று கேட்டுகொண்டே போக வேண்டும் என்றார்.

    இதைத்தான் செம்மையாக செய்து கொண்டிருக்கிறான் என் மகன் – ஒனோவை பற்றியெல்லாம் தெரியாமலேயே! நேற்று முழுவதும் ‘ஏன்? ஏன்? ஏன்?’ என்று அவன் கேட்ட கேள்விகளை எண்ணியிருந்தால் நிச்சயமாக எண்ணிக்கை ஐநூற்றைத் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

    “ஏன் அலுவலகத்திற்குப் போகிறீர்கள்?” என்பதில் தொடங்கி “ஏன் பாட்டு பாடுகிறீர்கள்?” என்பதில் முடியும் (முடியாது.. நீளும்!). ஏதோ நான் அலுவலகத்துக்குச் செல்வதே பாட்டு பாடுவதற்காகத்தான் என்று தோன்றுமளவிற்கு எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடியும் அந்தக் குழந்தையின் கேள்விகள்.

    சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால், இப்படி ஏன்-களைப் போட்டுக்கொண்டே செல்லும் போதுதான் ஒரு சிக்கலுக்கான அடிப்படைக் காரணத்தை தெரிந்துகொள்ள முடியும். அடிப்படைக் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நம்மால் எந்தவொரு சிக்கலையும் தீர்க்கவே முடியாது.

    நான் அலுவலகத்தில் என் அணியினருக்கு அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம்: “அறிகுறிகள் எல்லாம் மூல காரணங்கள் அல்ல. அறிகுறிகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அறிகுறிகளே காரணங்கள் அல்ல. எனவே காரணங்களைத் தேடுங்கள்!”.

    ‘ஏன்-கள் மூல காரணங்களை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் சாதனங்கள்!’.

    சிறுவர்களுக்கு இருக்கும் இந்தக் ‘கேள்விகேட்டுப் பெறும் திறம்’, அவர்கள் வளரும் போது சிறிது சிறிதாகக் குறைந்து, பின்னர் முற்றிலும் அழிந்தே போய்விடுகிறது. இவற்றிற்கான காரணங்களை சற்று அலசுவோம்.

    • குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கச் சோம்பல்பட்டுக்கொண்டு , அவர்களை நன்றாகத் திட்டி, அதனைத் அவர்கள் தொடரவிடாவண்ணம் ஒருவித குற்ற உணர்ச்சியையை அவர்களுக்குள் ஏற்படுத்தி விடுகிறோம்.
    • இன்னும் சொல்லப்போனால், அவர்கள் சிறிது வளர்ந்த பிறகு கேட்கும் நிறைய கேள்விகளுக்கு நமக்கு உண்மையாக பதிலே தெரிவதில்லை. ஏனெனில் நம்மில் பலர் அறிவை வளர்த்துக்கொள்ளப் படிப்பதில்லை – அந்தப் பழக்கமே இருப்பதில்லை.
    • ‘கற்றலின் கேட்டல் இனிது’ என்பதுபோல பிறர் சொல்வதைக் கேட்டோ, கவனித்தோ அறிவைப் பெறலாம். ஆனால் யார் பேசுவது? பெரும்பாலான நேரம் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து கொண்டு சினிமாவைப் பற்றியோ அல்லது வீடு, மனை விற்றல்-வாங்கல் தொடர்பாகத்தான் பேசுகிறோம்..

    அறிவியலும், இலக்கியமும், வரலாறும், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களைப் பற்றியுமா பேசுகிறோம்?

    “அதையெல்லாம் எதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும்? இணையம் இருக்கிறதே, விக்கிபீடியா இருக்கிறதே!” என்று ஒரு கேள்வி எழலாம்.

    Wikipedia is a great platform. However, It may not be complete. நானும் ஒரு விக்கிப்பீடியன் என்கிற முறையில், இதனைக் கூறமுடியும். நாங்கள் எங்கோ எப்போதோ, படித்தோ கேட்டோ தெரிந்துகொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்கிற உந்துதலால் விக்கிபீடியாவில் பதிவு செய்கிறோம். அவற்றை யார் வேண்டுமானாலும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் செம்மைப்படுத்த முடியும்.

    ஆனால், விக்கிபீடியாவைக்கூட இன்று எந்த அளவிற்கு உபயோகிக்கிறோம் என்று தெரியவில்லை.

    ஒரு காலகட்டத்தில் சினிமாவில் போதிக்கப்படுவது மட்டுமே அறிவாக இருந்தது மாறி, இப்போது FACEBOOK-இல் பகிர்ந்து கொள்ளப்படும் விஷயங்கள் மட்டுமே நம் அறிவை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது என்பது ஒரு Painful reality!

    இவையனைத்துமே ‘நுனிப்புல் மேய்வது’ போலத்தான். நாம் பார்க்கும் விஷயங்களைப் பற்றிய நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள இவை சிறிதும் உதவாது.

    வேறு என்னதான் வழி?

    ஏடுகளை வாங்கிப் படிக்கலாம்.

    ஆயிரம்தான் விஷயங்கள் இணையதளத்தில் பொதிந்து கிடந்தாலும், புத்தகத்தை கையில் எடுத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசிப்பது போல் வராது.

    கடந்தமுறை இந்தியாவிற்கு வந்தபோது நண்பர்களைச் சந்திக்கக்கூட  நேரமே போதவில்லை. ஆனால், Landmark-ற்கு இருமுறையும், Higgin Bothams-ற்கு ஒருமுறையும் சென்றேன்.

    எனக்கு இதுபோன்ற புத்தகக்கடைகள் – மது அருந்துபவர்களுக்கு TASMAC போன்றது. இதைவிட மோசமான உவமை இருக்கமுடியாது என்று உங்களுக்குத் தோணலாம். இதைக்கூறிய உவமைக்கவிஞர் வேறு யாருமல்ல – என் மனையாளே தான்.

    இதற்கான காரணத்தைச் சொன்னால், அவருடைய இந்த உவமை உங்களுக்குச் சரியெனப் படலாம். புத்தகக் கடைகளைக் கண்டாலே என் கைகள் பரபரவென்றும், கால்கள் நடுநடுங்கவும்  ஆரம்பித்துவிடும். உள்ளே சென்றுவிட்டு வந்தால் CARD நன்றாகவே தேய்ந்து போயிருக்கும்.

    இந்தமுறை நான் வாங்கிய புத்தகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

    1. பாற்கடல் – லா.ச.ராமாமிருதம் (சந்தியா பதிப்பகம்)

    2. புத்ர – லா.ச.ராமாமிருதம் (சந்தியா பதிப்பகம்)

    3. நடந்தாய்; வாழி, காவேரி! – தி.ஜானகி ராமன் – சிட்டி (காலச்சுவடு பதிப்பகம்)

    4. வாழும் கணங்கள் – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    5. பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    6. நானும் என் எழுத்தும் – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    7. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)

    8. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    9. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    10. வாசக பர்வம்  – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    11. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (உயிர்மை பதிப்பகம்)

    12. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (விசா பதிப்பகம்)

    13. கண்ணீரில்லாமல் – சுஜாதா – (உயிர்மை பதிப்பகம்)

    14. இன்னும் சில சிந்தனைகள் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    15. எழுத்தும் வாழ்க்கையும் – சுஜாதா – (உயிர்மை பதிப்பகம்)

    16. தமிழ் அன்றும் இன்றும் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    17. சுஜாதாவின் நாடகங்கள் – முழுத்தொகுப்பு (உயிர்மை பதிப்பகம்)

    18. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    19. டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன – மனுஷ்யபுத்திரன்  (உயிர்மை பதிப்பகம்)

    20. பூமித்தாயே – கோ.நம்மாழ்வார் (இயல்வாகை பதிப்பகம்)

    21. Famous Chinese Short Stories – Lin Yutang (Classic Library)

    22. Great Short Stories – Anton Checkov (Classic Library)

    23. By the River Piedra I sat down and Wept – Paulo Coelho (Harper Collins)

    24. Sudden flash of a thunder – OSHO (Wisdom Tree)

    இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே?

    இவற்றில் சில நான் ஏற்கனவே படித்தவை. இது தவிர, திரு.அண்ணாகண்ணன் அவர்கள் வேறு மூன்று புத்தகங்கள் அனுப்பி இருந்தார். விமானத்தில் 30 கிலோ எடைக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் புத்தகங்களே கிட்டத்தட்ட இருபது கிலோ தேறும். என்ன செய்வது, இங்கெல்லாம் தமிழ் புத்தகங்களே கிடைப்பதில்லையே!

    ‘யாம் பெற்ற இன்பம் யாவரும் பெற’ வேண்டுமென்பதால் கூறுகிறேன்.  விரைவாய்ச் சென்று புத்தகங்களை வாங்குங்கள்! வாசியுங்கள்! UPSC, CAT, GRE, GMAT இவற்றிற்குத் தயாரிப்பது போல, ஏதோ ஒரு இலக்கிற்காக அல்லாமல், அனுபவத்திற்காக வாசியுங்கள். வாசித்தல் என்பது மனதிற்கினிய விஷயம்.

    ‘ஏன் என்பதில் தொடங்கி ஏடுகள் வரை’பேசிவிட்டோம்!

    வாசி!

    வல்லமைக்கு வா…SEE …!

    Share
  • எழுத்தாளன்

    மாதவன் இளங்கோ

    அன்று காலை பாலாவிற்கு ஒரு மின்மடல் வரையலாம் என்று முடிவு செய்துவிட்டு, எப்படி ஆரம்பிக்கலாம் என்ன எழுதலாம் என்று கண்களை மூடி, நெற்றியை என் கைவிரல்களால் அழுத்தித் தேய்த்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஒன்றாகப் பணிபுரிந்த அலுவலகத்தில் அவரது அறையில் இருவரும் பேசிய காட்சி என் மனத்திரையில் படமாக ஓடிக்கொண்டிருந்தது.

    அவர் மீது அளவுகடந்த மரியாதை கொண்ட நானும், என் திறமையின்  மீதும், என் மீதும் அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்த அவரும் அன்றைக்கு கடுமையாக விவாதம் செய்து கொண்டிருந்த காட்சி அது.

    கார்த்திக், யு ஆர் எ குட் ரைட்டர்! எழுது. வேண்டாம்னு சொல்லல. பட், ஜாப விட்டுட்டு விவசாயம் பண்ண போறேன்; ஃபுல் டைம் ரைட்டர் ஆகப்போறேன்னு சொல்றதெல்லாம் எனக்கு சரியா படல பா. பிலீவ் மி. ஐ ஸீ எ வெரி ப்ரைட் ஃபியூச்சர் பார் யு இன் ஐ.டி ஃபீல்ட் இட்செல்ஃப்.” என்று அறிவுரை கூறினார் பாலா.

    “ஐ நோ பாலா. பட், ஐ.டி ஈஸ் நாட் மை பேஷன். எழுத்து என்னோட கனவு.”

    “நீ இப்போ தான் எழுத ஆரம்பிச்சிருக்க. அந்த ஃபீல்டு பத்தி உனக்கு என்ன தெரியும்? அதுல இருக்கற ப்ராக்டிகல் டிஃபிகல்டீஸ், பிராப்ளம்ஸ், பாலிடிக்ஸ் எல்லாம் தெரியுமா? பப்ளிக் கன்சம்ப்ஷன் வேற.”

    “பிராப்ளம்ஸ்.. பாலிடிக்ஸ்.. இது ரெண்டும் எங்க தான் இல்ல பாலா? நம்ம கம்பனில இல்லையா? இது எல்லாத்துக்கும் மேல, நம்ம பேஷனே ப்ரொஃபெஷனா இருந்தாதான் லைஃப்ல ஒரு சாடிஸ்ஃபாக்ஷன் இருக்கும்; அதுதான் ட்ரூ சக்சச்னு நான் நெனெக்கிறேன்.”

    “அதெல்லாம் சரி பா. கோவமா பேசுறேன்னு நினைக்காத. அந்த ஃபீல்டுக்கெல்லாம் போனா பத்து பைசா கெடைக்காது. யார் இந்த காலத்துல புக்ஸ் படிக்கிறாங்க? பைஜாமா போட்டுட்டு தான் அலையணும்.”

    சக்சஸ்னாவே பணம் தானா பாலா? இந்த கம்பனில நீங்க எனக்கு ரோல் மாடல். நீங்களே இப்படி சொன்னா எப்படி?”

    “பணமும், வியாபாரமும் இல்லாத இடமே இல்ல, கார்த்திக். பி ப்ராக்டிகல். நீ தான் நான் உன்னோட ப்ரதர் மாதிரின்னு அடிக்கடி சொல்லி இருக்க. நான் அந்த ட்யூட்டிய தான் இப்போ பண்ணிட்டு இருக்கேன். தென், இட்ஸ் அப் டு யு.”

    இந்த பதினெட்டு வருஷத்து .டி அனுபவத்துல உலகம் முழுக்க சுத்தி பெற்றதும், கற்றதும், பட்டதும் போதும் பாலா. பட், தாங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன்ஸ்.” என்று கூறிவிட்டு .டி வேலைக்கு அன்றோடு ஒரு முழுக்கு போட்டுவிட்டேன்.

    ஆனால், இப்போது தான் புரிகிறது – அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்று.

    ஐ.டி துறையில் ஒரு நல்ல வேலையில் இருந்த எனக்கெதற்கு இந்த எழுத்துக் குப்பையெல்லாம் என்று தோன்றுகிறது இன்று.

    என்னடா இவன் ‘குப்பை’ என்று அநாகரிகமாகப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். இந்த வார்த்தையை இதற்காகவெல்லாம் பயன்படுத்தலாம் என்று எனக்கு சில நாட்களாகத் தான் தெரியும். ‘சகவாச தோஷம்’ – மன்னித்து விடுங்கள். இதற்கு பின்பு ஒரு பெரிய புராணமே இருக்கிறது.

    வேலையில் இருக்கும் போதே ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதினேன். அது பெஸ்டு செல்லர் ஆகி “ஹூ மூவ்டு மை சீஸ்?” என்கிற ஆங்கிலப் புத்தகத்தின் விற்பனையையே தூக்கிச் சாப்பிட்டு விட்டது. அதைத் தமிழில் எழுவதற்கு ஒரு எழுத்தாளர் உரிமை கேட்டபோது, வேறு யாருக்கோ எதற்கு தமிழில் எழுத உரிமை தர வேண்டும்? தாய்மொழியான தமிழ் மொழியிலேயே வேறு ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்து எழுவதை விட வேறு ஏதாவது கேவலம் இருக்க முடியுமா? அதுவும் பாரதியின் பக்தனாக இருந்துகொண்டு?

    அதனால் நானே ‘கட்டுத்தறி’ என்கிற புனைபெயரில் தமிழில் எழுதி வெளிவந்த அந்தப் புத்தகம் 1000 பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை படைத்தது.

    “அறிமுக எழுத்தாளர் ஒருவருக்கு 1000 பிரதிகள் விற்பது என்பது பெரிய விஷயம், தொடர்ந்து எழுதுங்கள் தோழரே!” என்று என்னை வெகுவாய் ஊக்கப்படுத்தினார் ‘ஊற்று’ பதிப்பக ஆசிரியர் பொன்.கலையரசன்.

    ஆங்கிலத்தில் முதலில் எழுதத் தொடங்கிய எனக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி; நான் முற்றிலும் எதிர்ப்பார்க்காத ஒன்று. ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதி, அது பெஸ்டு செல்லர் ஆகியிருந்தாலும், எனக்கென்னவோ தமிழில் எழுதுவதுதான் மனதிற்கு இனிமை தந்தது.

    அடுத்த சில மாதங்களிலேயே ”கட்டுத்தறியின் பகடையாட்டம்” என்கிற எனது முதல் சிறுகதை தொகுப்பை ஊற்று பதிப்பகம் வெளியிட்டது. அதுவும் 1400 பிரதிகள் விற்றுப் புதிய சாதனைப் படைத்தது. 1400 பிரதிகள் விற்பதெல்லாம் ஒரு சாதனையா என்று கேட்காதீர்கள். மூன்று லட்சத்து இருபதாயிரம் பேர் வாழும் ஐஸ்லாந்து நாட்டில் கூட அந்த மொழியில் எழுதப்படும் புத்தகம் மூவாயிரத்திற்கும் மேல் விற்பனையாகும். ஆனால் உலகம் முழுவதும் சுமார் எட்டு கோடி பேர் பேசுகிற தமிழுக்கு இதுதான் நிலைமை. நம்மை விட சிறிய மாநிலமான கேரளாவில் கூட லட்சக்கணக்கில் புத்தகங்கள் விற்பனையாகின்றனவாம். ஆனால் தமிழில் இரண்டாயிரம், மூணாயிரமே ஒரு மாபெரும் சாதனையாக இருக்கிறது.

    என் எழுத்தை புத்தகங்களுக்குள் மட்டும் அடைத்து வைக்காமல், உலகம் முழுதும் உள்ள வாசகர்களுக்கு எடுத்துச் செல்லவும், அவர்களோடு தொடர்பிலிருக்கவும் எனக்கென்று ஒரு வலைதளத்தைத் தொடங்கி தொடர்ந்து எழுதி வந்தேன். ஒரு வருடத்திலேயே லட்சத்திற்கும் மேற்பட்ட  பார்வைகள் – அதிசயமாக இருந்தது. இத்தனை பேரும் ஏன் புத்தகங்களை வாங்க மாட்டேன் என்கிறார்கள்? இலவச தொலைகாட்சி, இலவச கிரைண்டர் என்பது போல் ‘இலவசமாய் இலக்கியம்’!

    திருட்டு வி.சி.டி. வந்து பிழைப்பை கெடுத்துவிட்டது என்று காட்டுக் கத்து கத்துகிறார்களே இந்த திரைப்பட உலகினர், பாவம், எழுத்தாளர்கள் எங்கே சென்று முறையிடுவார்கள்? புத்தகம் வெளியான சில நாட்களிலேயே பி.டி.எஃப் வந்துவிடுகிறது. இதில் வேறு சில ஆசாமிகள், அவர்களே எழுதியது போல பெருமையாகத் தங்கள் வலைப்பதிவில் பதிவு செய்து ஹிட்டுகளை அள்ளுகிறார்கள். நான்கு சுவருக்குள் அமர்ந்துகொண்டு தனக்குள் வேறொரு உலகத்தையே உருவாக்கி, தனக்கு வேண்டிய பாத்திரங்களை சிரிஷ்டித்து அவற்றுக்கு உயிர்கொடுத்து கதைக்குள்ளே உலாவவிட்டு தானும் ரசித்து, தன் வாசகர்களையும் மகிழ வைக்கும்  ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு சோதனை பாருங்கள்.

    சரி அதெல்லாம் நமக்கெதற்கு? என் புராணத்துக்கு வருவோம்.

    கடைசியில் என்னை ‘தெனாலி’ இதழிலேயே பத்தி எழுத அழைத்து விட்டார்கள். இதே தெனாலி குழுமத்தின் ஆங்கில வார இதழுக்கு எத்தனை முறை என் ஆங்கிலச் சிறுகதைகளை அனுப்பி இருப்பேன். ஒருமுறையாவது பிரசுரித்தார்களா? பிரசுரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அது அவர்கள் கொள்கை, விருப்பம் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயம் அல்லது எனது படைப்பின் தரம் சார்ந்த விஷயம். ஆனால், ‘நன்றி. பரிசீலிக்கிறோம்.’ என்று ஒரு பதில் கடிதம் கூட அனுப்பியது கிடையாது. இப்போது ‘பத்தி’ எழுத அழைக்கிறார்கள் – எல்லாம் வியாபார உத்தி என்று நினைத்துக் கொண்டேன்.

    ஓரிரு தொலைகாட்சிச் சானல்களில் விவாத மேடைகளில் பேசவும் அழைத்தார்கள்.

    இப்படி பல திறக்குகளில் நான் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்ததால், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏற்கனவே கூறியது போல், ஐ.டி என் பேஷனும் இல்லை. அதனால்தான் அந்த வேலையை தூக்கியெறிந்துவிட்டு, எழுத்தில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

    நாவல்கள், வெகுஜன மற்றும் இணைய இதழ்களில் சிறுகதைகள், பத்திகள், அவ்வப்போது தொலைக்கட்சியில் விவாத மேடைகள் என்று விறுவிறுவென்று ஓடிக்கொண்டிருந்தது என்னுடைய வாழ்க்கை.

    முழு நேர எழுத்துப்பணியில் இருந்தாலும் சக எழுத்தாளர்களைப் பற்றியோ அவர்களின் புத்தகங்கள் பற்றியோ எனக்கு அவ்வளவாகத் தெரியாது. தமிழில் இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் அதிகமாக படிக்காததும் அதற்கு ஒரு காரணம். இந்த ஒரு வருடமாகத்தான் நிறைய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். மேலும் சில நல்ல இளம் எழுத்தாளர்கள் என் கட்டுரைகளுக்கு எழுதிய விமர்சனங்கள் மூலமாகப் பழக்கமானார்கள். சில வாசகர்கள் எனக்கு எழுதிய கடிதங்களிலேயே அவர்களின் எழுத்து திறமையைக் கண்டு வியந்து அவர்களை நிறைய எழுதுமாறு ஊக்குவித்தேன்.

    இன்னும் சில மூத்த எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் நாளும் வந்தது.

    மூத்த எழுத்தாளர் ‘கதைராவணன்’ அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார் பதிப்பக ஆசிரியர் பொன்.கலையரசன்.

    “கதைராவணன். பெயருக்கேற்றார் போலவே அவருக்குப் பத்து தலைகள் தான். அவரது ஒவ்வொரு புத்தகத்தை படித்த போதும் ஒரு பத்து தேர்ந்த எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதியது போல உணர்ந்தேன். அவரது ஒரு புத்தகத்தை படித்தாலே பத்து புத்தகத்தை படித்ததற்குச் சமம். அதனால் தான்…” என்று விழாமேடையில் ஒரே புகழ்மழை பொழிந்து கொண்டிருந்தார் திரைப்படக் கவிஞர் ‘கற்பனையருவி’.

    அங்குதான் முதன்முதலாக எழுத்தாளர் ‘சித்தப்பா’ அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து, அவருக்கும் அந்த விழாவுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் எதையோ படித்துக் கொண்டிருந்தார்.

    எதோ நினைத்தவர் திடீரென என் பக்கம் திரும்பி, ” உங்க பேரு?” என்றார்.

    “கட்டுத்தறி, ஐயா”

    “சோ, கவியெல்லாம் பாடுவீங்களோ?”

    “இல்லைங்க ஐயா. கவிதை எழுதினது கிடையாது. என்னோட நிஜப் பேரு கார்த்திகேயன். எங்கப்பா ரொம்ப நல்லா வெண்பா எல்லாம் எழுதுவார். மரபுக்கவிதைல அவருக்கு ரொம்ப ஈடுபாடு. அவரோட பேர் கம்பன். அதனால கட்டுத்தறினு புனைபெயர் வெச்சுக்கிட்டேன்.”

    ” மரபுக்கவிதையா? உங்கப்பா எந்த காலத்துல இருக்கார்?” என்று அவர் கேட்ட விதமும், அந்த கேலிப் பார்வையும் என்னை ‘சுருக்’ என்று ஊசியால் குத்தியது போல இருந்தது.

    அவர் தொடர்ந்தார்.

    “சரி எவ்வளவு புத்தகம் எழுதியிருக்கீங்க?”

    இவருக்கு என்னைத் தெரியுமா? இல்லை தெரியாதது போல நடிக்கிறாரா? என்று எனக்குப் பெரிய சந்தேகமே வந்துவிட்டது.

    நான் சிறிது நேரம் மௌனித்து இருந்ததை அவருக்குச் சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்தார்.

    “சாரி. தமிழ்ல இப்பல்லாம் நிறைய குப்பைங்க வர ஆரம்பிச்சிடிச்சி. அதனால நான் அவ்வளவா படிக்கறதில்ல.”

    எனக்கு அங்கிருந்து எழுந்து வெளியே சென்று விடலாமா என்று தோன்றியது. இப்படியெல்லாம் கூட பேச முடியுமா? அதுவும் ஒரு மூத்த எழுத்தாளரால் என்று நொந்து கொண்டிருந்தேன்.

    “என்னென்ன புத்தகமெல்லாம் படிப்பீங்க?”

    அத்தனை மனப்போராட்டங்களுக்கு இடையிலும் பொறுமையாக, மரியாதையாக பதில் சொன்னேன்.

    “இல்லைங்கையா. தமிழில நிறைய புத்தகங்கள் படிச்சதில்ல. சங்க இலக்கியங்கள், பாரதியார், சுஜாதா – இவங்களெல்லாம் நெறைய படிச்சிருக்கேன். ஜெயமோகன், எஸ்ரா புத்தகமெல்லாம் படிச்சிட்டு இருக்கேன். இப்போ கூட ரீசன்டா என் பிரண்டு சொன்னானேன்னு அ.முத்துலிங்கம் படிச்சிட்டு இருக்கேன்”.

    “என்னய்யா தம்பி? மரபு கவிதைங்கற. சங்க இலக்கியம்கற. இந்த காலத்துக்கு வாங்க.”

    கவிஞர் கற்பனையருவி பலத்த கரவொலிகளுக்கும், சிரிப்பொலிகளுக்கும் இடையே மேடையில் இடிபோல் முழங்கிக் கொண்டிருக்க, அதை சற்றும் சாட்டை செய்யாமல் இங்கே சித்தப்பா என்னை உப்புமாவாக்கி முள்கரண்டியை வைத்துக் கிண்டிக் கொண்டிருந்தார்.

    “சர்ரியலிசம், எக்ஸ்சிஸ்டென்சலிசம் பத்தி எதாச்சும் படிச்சிருக்கீங்களா?”

    எப்படியும் அவர் என்னுடைய பதிலை எதிப்பார்க்கிறவர் போல் தெரியவில்லை. அதனால் பதில் சொல்லாமல் அவரது கேள்விகளுக்கு ‘இல்லை’ என்பது போல் அமைதியாய் தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

    “சார்த்தர், மார்ட்டின் ஹைடேக்கர், ஆல்பர்ட் காம்யு இவங்கள படிச்சிருக்கீங்களா?”

    “…”

    “தாஸ்தாயேவ்ஸ்கி?”

    எனக்குத் தலை சுற்றி மயக்கம் வரும்போல் ஆகிவிட்டது. அடுத்தது மொசிவேனா கசுனி, பிக்கர்லோ பேத்திரி என்று ஏதாவது பெயரைக் கேட்பாரோ என்று நினைத்துக் கொண்டே நெளிந்தேன்.

    “என்னோட புத்தகம் எதாச்சும் படிச்சிருக்கீங்களா தம்பி?”

    “இல்லைங்கையா. ஆனா, உங்களோட ‘குறுக்கு புத்தி’ நாவல் பத்தி கேள்விப்பட்டு போன வாரம் தான் வாங்கினேன். இன்னும் படிக்கல. தப்பா எடுத்துக்காதீங்கைய்யா. நான் தமிழில எழுத வந்ததே ஒரு விபத்து தான்.”

    “ஓஹோ. அது சரி. பாத்து தம்பி. உங்க புத்தகத்த படிக்கிற வாசகர்களுக்கு அது ஒரு விபத்தா முடிஞ்சிடப் போகுது! ஹா ஹா ஹா!”

    ஒவ்வொரு சொல்லும் முள்! எனக்குக் கட்டுக்கடங்காத கோபம். சி.சு.செல்லப்பா போன்றவர்கள் வாழ்ந்த இலக்கிய உலகில் இதுபோன்ற சித்தப்பாக்கள். இதில் இவருக்கு P.S.வீரப்பா சிரிப்பு வேறு. பேசாம சித்தப்பா என்பதற்குப் பதிலாக வீரப்பா என்று பெயர் வைத்து இருக்கலாம் இந்த மனிதருக்கு என்று மனதில் வைது கொண்டே மேடையை நோட்டம் விட்டேன்.

    அங்கே ‘கவிஞர். பூங்காத்து’ புயலாய்ச் சீறிக்கொண்டிருந்தார், “வே.க.முஸ்தீப் அவர்களின் வெறியன் நான். வே.க.மு-விற்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த எழுத்து ஐயா கதைராவணன் அவர்களுடையது என்றால் அது மிகையாகாது. வே.க.மு-வைத் தெரியாதவன் மூடன். கதைராவணன் புத்தகங்களைப் படிக்காதவன் இலக்கியத்தைப் பற்றிப் பேசவே தகுதியற்றவன்.”

    “அப்ப கண்டிப்பா நான் இலக்கியத்தைப் பற்றிப் பேசவே தகுதியற்ற ஒரு மூடன்” என்று எனக்குள் உறுதிப்படுத்திக்கொண்டே திரும்புகையில் சித்தப்பாவிடம் மீண்டும் மாட்டிக்கொண்டேன்.

    “கட்டுத்தறி, உங்க புத்தக லிஸ்ட கொடுங்க. ஒரு பார்வை பாக்கறேன். இப்பல்லாம் மதிப்புரை எழுதுனு சொல்லிப் பல குப்பைகள அனுப்பறான் கலை. பத்தோட பதினொன்னு.”

    பழுக்கக் காய்ச்சிய கம்பி அது.

    என் தொண்டைக்குள்ளே இரக்கமின்றி அதைச் சொருகிக்கொண்டிருந்தார் சித்தப்பா. எனக்கு வார்த்தைகளே எழவில்லை. என் கையிலிருந்த என்னுடைய “கட்டுத்தறியின் பகடையாட்டம்” புத்தகத்தை குனிந்தபடியே பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். அமைதி முகத்தில் மட்டுமே. உள்ளுக்குள் புயலடித்துக் கொண்டிருந்தது – கவிஞர். பூங்காத்தின் பேச்சைப் போல.

    நல்ல வேளை, புயல் ஓய்ந்தது.

    “அடுத்ததாக எழுத்தாளர் சித்தப்பாவை பேச அழைக்கிறேன்.” என்று மேடையிலிருந்து கலையரசனின் குரல்.

    போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது எனக்கு. மேடையில் மைக்கை சோதித்து விட்டு பேச ஆரம்பித்தார் சித்தப்பா. அதுதான் சமயமென்று நான் இரண்டு வரிசைகள் முன்னே சென்று அமர்ந்து கொண்டேன்.

    “புத்தக விழாக்கள் என்றாலே எனக்கு இப்போதெல்லாம் தலைவலி வந்து விடுகிறது….” என்று பேசத் துவங்கினார் சித்தப்பா.

    இந்த மனிதர் அடங்க மாட்டார் போலிருக்கிறது என்று அலுத்துக் கொண்டே இடது புறம் திரும்பினால் அங்கே அமர்ந்திருந்த எழுத்தாளர் ‘செங்கை சிங்கன்’ தலையில் அடித்துக் கொண்டே பார்வையை என் மேல் விட்டார்.

    “உங்களை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே?” என்றார்.

    “அப்பாடா, கடைசியா என்னை எங்கோ பாத்த மாதிரியாவது இருக்கிறதே ஒரு எழுத்தாளருக்கு” என்று நினைத்து, அதையே ஒரு பெரிய அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு எனது கையிலிருந்த புத்தகத்தைக் கொடுத்தேன்.

    “ஆ..ஹான். இப்போ நியாபகம் வருது. இந்த புத்தக அட்டைல தான் உங்க முகத்த பாத்து இருக்கேன். ரெண்டு மூணு நண்பர்கள் உங்கள பத்திச் சொல்லி இருக்காங்க. கலை நெறைய பேசுவார்.” என்று கூறிவிட்டு புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

    எனக்கு யாரோ அறைந்தது போலிருந்தது.

    அவர் விடுவதாயில்லை. “இது தான் என் வலைதளம், கட்டுத்தறி. என்னோட புத்தகங்களை ஆன்லைன்லயே வாங்கலாம். நான் ‘சாமந்தி’ இதழ்ல எழுதின என்னோட ‘பசித்தால் படி!” தொடர கூட புத்தகமா நெக்ஸ்ட் வீக் வெளியிடறாங்க. வந்தவுடனே முடிஞ்சா படிங்க. ஆமா, சித்தப்பாவோட புத்தகமெல்லாம் படிக்கறதுண்டா?” என்று கேட்டார்.

    “இல்லைங்கையா. இப்போ தான் அவரோட குறுக்கு புத்தி..”

    “என்னது?” என்று இடைமறித்த அவரது முகத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாசம்.

    “அவரோட ‘குறுக்கு புத்தி’ நாவல வாங்கி இருக்கேன்.”

    “என்ன தலைப்பு இது? தப்பித்  தவறி கூட இனிமேல் அவன் புத்தகத்த வாங்கிடாதீங்க. வேஸ்ட் ஆப் மனி. உங்க மனச குப்பை வண்டியாக்காதீங்க. அவனெல்லாம் இருபது வருஷமா என்னத்த, எதுக்கு எழுதறான்னே தெரியல. என்னாலெல்லாம் அவன எழுத்தாளனாவே ஏத்துக்க முடியாது. அவனச் சொல்லி பிரஜோஜனம் இல்லை. இந்த முட்டா ஜனங்கள சொல்லணும். ஒன்னு சொல்லட்டுமா, கட்டுத்தறி? இன்னைக்கு தேதில தமிழ்ல ரெண்டே ரைடர்ஸ் தான் இருக்காங்க. ஒன்னு கதைராவணன். இன்னொருத்தர ஊருக்கே தெரியும்.”

    இவரை ஊருக்கே தெரியுமாம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பூனைக்கு பயந்து புலியிடம் மாட்டிக் கொண்டது போலிருந்தது. இது புலி அல்ல; சிங்கம்.

    அப்படியே மெதுவாக செங்கை சிங்கனின் பார்வையின் பிடியிலிருந்து நழுவி மேடை பக்கம் திரும்பினால், அங்கே சித்தப்பா பொறுமையாக பேசிக்கொண்டிருந்தார், “இந்த புத்தகத்தை படிச்சிட்டு, கதைராவணன் இதை எதுக்கு எழுதினார்னு ரொம்ப நேரம் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் புரியல. ஆனா ஒன்னு சொல்ல முடியும். இதுவரை அவர் எழுதின மோசமான புத்தக லிஸ்டுல இது சேராது. அதுக்காக சிறந்த புத்தகம்னும் சொல்ல மாட்டேன்.”

    எனக்கு நிஜமாகவே ஒரு டார்ட் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. தலை கனத்தது – மனமும் சேர்ந்து தான்.

    இன்னொரு எழுத்தாளர், கதைராவணன் புத்தகத்தைத் தவிர மற்ற எதையெல்லாமோ பேசிவிட்டுச் சென்று விட்டார். அந்தப் புத்தகத்தைப் பாராட்ட அவருக்கு ஏனோ வாயெழவில்லை. நெஞ்சு திறந்தால் ‘தானே’ வாய் திறக்கும்.

    அந்த விழாவிலேயே என்னை மிகவும் ஈர்த்தது மூத்த எழுத்தாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு மட்டுமே.

    விழா முடிந்தவுடன் புத்தக விற்பனை ஆரம்பித்தது. கதைராவணன் புத்தகங்களோடு சேர்த்து, ஊற்று பதிப்பகத்தின் அத்தனைப் புத்தகங்களையும் அடுக்கி வைத்திருந்தார் பொன்.கலையரசன். என்னுடைய புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும் என்னால் அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை.

    ஒருவரோடு மற்றொருவர் சிரித்துப் பேசுவதையே அங்கு பார்க்க முடியவில்லை. எல்லோருடைய முகங்களும் ஒருவித இறுக்கத்துடன் காணப்பட்டன. சில பேரின் முகங்கள் தீவிர மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களின் முகத்தைப் போன்று காணப்பட்டது. அவரவர்களுக்கு ஒரு வாசகக் கூட்டத்தைக் கூட்டி கருத்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

    ஒரு புத்தகத்தின் அட்டையில் புன்னகைத்துக் கொண்டிருந்த சுஜாதாவை வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தபோது, ஆசிரியர் பொன்.கலையரசன் மூத்த எழுத்தாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார்.

    “நீங்க நன்னா எழுதரேளாமே. சின்ன வயசுக்காரரா இருக்கேள். குட். போன வாரம் தான் உங்க புத்தகமெல்லாம் கொடுன்னு கலைகிட்ட கேட்டேன். இதோ கொடுத்திருக்கார். படிச்சிட்டு சொல்றேன். வரட்டுமா? வாழ்த்துகள்!” என்று பாராட்டி கைகுலுக்கிவிட்டுக் கிளம்பினார். பேசியது மூன்று வரியானாலும் அவரது முத்தான வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்தது. அந்தப் பேச்சில் வன்மம் மிகுந்த கேலி இல்லை, கிண்டல் இல்லை, தாக்குதல்கள் இல்லை. அன்பு தெரிந்தது; நாகரிகம் தெரிந்தது; அதனால் மரியாதை வந்தது.

    அன்று இரவு முழுக்க எனக்குத் தூக்கமே வரவில்லை.

    முதன் முறையாக நான் வேலைபார்த்த ஐ.டி நிறுவனங்களெல்லாம் சொர்க்கபுரிகளாய்த் தெரிந்தன. சக பணியாளனுக்கு விருது கிடைக்கும் போது பாராட்டுவது; தனிமனிதனை விட குழுவுக்கு மிகுந்த மதிப்பளிப்பது; இது எல்லாவற்றிற்கும் மேலாக சக மனிதனின் உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பது போன்ற பழைய வாழ்க்கையின் நினைவுகள் ஒவ்வொன்றாக தோன்றி மறைந்து என்னைத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தன. கண்டிப்பான வாடிக்கையாளர்கள் கூட மென்பொருளில் குறையிருந்தால், விளக்கி மின்னஞ்சல் அனுப்புவார்கள்; திருத்தி அனுப்புவோம். ஆனால் குப்பை என்று யாரும் கூறியதில்லையே?

    உண்மை விளம்பிகள் என்றால் எதை வேண்டுமானாலும் பொதுச்சபையில்  பேசலாமா? கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லையே கிடையாதா? பிறகு எதற்கு சிக்மண்டு ப்ராயிடு இட், ஈகோ, சூப்பர் ஈகோ பற்றி பேசவேண்டும். மனிதனின் மனம் எவால்வ் ஆக வேண்டாமா?

    பிடிக்காததை பிடிக்கவில்லை என்று கூறலாம்; மனதுக்கு ஒவ்வாததாக இருக்கிறது எனலாம்; எனக்குச் சரியாகப் படவில்லை என்றும், அது ஏன் என்றும் ‘விளக்கமாக’ கூறலாம்; இன்னும் சற்று நன்றாக வந்திருக்கலாம் என்கிற ஆதங்கம் மேலெழுகிறது எனலாம்; இது அவருடைய மாஸ்டர் பீஸ் இல்லை எனலாம். ஆனால், அது என்ன குப்பை என்கிற வார்த்தை? அப்படி உரைக்க ஒன்றும் இல்லையென்றால் எதையும் சொல்லாமல் அமைதி காக்க வேண்டியதுதானே? கதைகளிலும், கட்டுரைகளிலும் மட்டும் கருத்து கூறிவிட்டு, அதற்குப் புறம்பாக வெளியில் நடந்துகொள்வது இலக்கியவாதிகளுக்கு அழகா?

    வாசகர்கள் புத்தகங்களை மட்டும் பார்ப்பதில்லை. சொல்பவன் யாரெனவும் காண்கிறார்கள். கட்டுரையில் சொல்லப்படுவது ஒன்றாகவும், அதைப் படைத்தவன் செயல் ஒன்றாகவும் இருக்கும் போது அந்தப் படைப்பு ஜீவன் இழந்து விடுமல்லவா?.

    இப்படி ஏதேதோ கேள்விகள் எனக்குள்ளே அடுத்தடுத்து எழுந்து விழுந்து கொண்டிருந்தது. கேள்விகளுக்கு இடையே பாலாவின் முகமும் அவ்வப்போது எட்டி எட்டி பார்த்தது.

    சூரியனும் எட்டிப் பார்த்துவிட்டது.

    அன்று காலை பாலாவிற்கு ஒரு மின்மடல் வரையலாம் என்று முடிவுசெய்து விட்டு, எப்படி ஆரம்பிக்கலாம் என்ன எழுதலாம் என்று கண்களை மூடி நெற்றியை என் கைவிரல்களால் அழுத்தித் தேய்த்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

    பாலா ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இருந்தார். அவரது நிறுவனத்தில் சேர விழைவதாய் கடிதம் எழுதி சரிபார்த்து விட்டு அனுப்புவதற்கு செண்ட் பட்டனை அழுத்தச் சென்றபோது என் நுண்ணறி பேசி அழைத்தது. தெரியாத எண்ணாக இருந்ததால் யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே எடுத்தேன்.

    “ஹலோ.”

    “ஹலோ நான் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி பேசறேன் கண்ணா.”

    “வாட் எ சர்ப்ரைஸ்? வணக்கம் ஐயா!”

    “என்னமா எழுதியிருக்கேள். நல்ல நடை. எழுத்தில ஒரு தனித்துவம் இருக்கு. அதிலும் அந்த முதல் கதை பகடையாட்டம். அசந்தே போயிட்டேன். காகிதக்குருவி கதையை முடிச்ச விதம் ரொம்ப டிபரண்ட். இது தான் மொத புத்தகம்னா யாரும் நம்பவே மாட்டா. அருமை. உங்க ரெண்டு புத்தகம் படிச்சிட்டு காலம்பர நாலு மணிக்கு தான் படுக்க போனேன். அத்தன ஈர்ப்பு அந்த எழுத்தில.”

    என்னால் நம்பவே முடியவில்லை. என்ன மாதிரி ஒரு லெஜண்டு அவர். அவரா இப்படி என்னைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்?

    “ரொம்ப நன்றி ஐயா. எனக்கு நோபல் பரிசே கெடைச்ச மாதிரி இருக்கு.”

    “அத விட முக்கியமான விஷயத்த சொல்லனும்னு இப்ப தோன்றது. நேக்கு எழுபத்தி அஞ்சு வயசாயிடுத்து. இன்னும் எத்தன நாளுக்கு இருப்பேன்னு நேக்கு தெரியாது. இருபத்தி அஞ்சு வயசில எழுத ஆரம்பிச்சேன். நெறைய விமர்சனங்கள். ஆனா அந்த காலத்துல எல்லாம் ‘விமர்சனமே இலக்கியம்’ மாதிரி இருக்கும். கதை கூட எழுதிடலாம், அந்த மாதிரி விமர்சனம் எழுத முடியாது. அவ்ளோ தரம் இருக்கும். கத்துக்கறதுக்கு அவ்வளோ விஷயங்கள விமர்சகர்கள் நம்ம முன்னால வந்து கொட்டுவா. ஆனா, நேத்து பன்க்ஷன்ல பாத்தேளா ஒவ்வொருத்தரும் எப்படி பேசினா? இப்பல்லாம் ‘குப்பை’ என்கிற ஒரு வார்த்தைல விமர்சனத்தையே முடிச்சிடறா. இது அவாளோட இயலாமைய காட்றது. இவாள்டல்லாம் சரக்கு இல்லையோனு கூட தோன்றது.”

    எனக்கு என்னவோ நேற்று நான் நினைத்ததையெல்லாம் அவர் டெலிபதி மூலம் கேட்டுவிட்டு பதில் சொல்வது போலவே இருந்தது. அல்லது நான் சிந்தித்துக் கொண்டிருந்த நேரமும், அவர் என் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த நேரமும் ஒன்றாக இருந்ததாலா? இதுதான் எழுத்தாளனையும், வாசகனையும் இணைக்கும் இழையா?

    நான் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்க, அவர் பேசிக்கொண்டே போனார்.

    “தமிழில என்ன வேற வார்த்தையா இல்ல? இல்ல, இவாளுக்கெல்லாம் பதப்பஞ்சம் வந்திடுத்தா? குப்பைனு ஒரு பாமரன் சொல்லலாம். ஒரு எழுத்தாளன் எப்படிச் சொல்லலாம்? அப்புறம் நமக்கு சொல்லாட்சி பத்தி பேச என்ன தகுதி இருக்கு? எழுத வரவாளையெல்லாம் இப்படி குப்பைனு தொரத்திட்டு, தமிழ் சாகுதேனு ஒப்பாரி வெக்கறதுல என்ன பிரயோஜனம். எல்லாத்துக்கும் மேல, எழுத்தாளனுக்கு பக்குவமும் பொறுப்பும் வேண்டாமோ?” என்று அவர் கேட்டவை எல்லாமே என் மனம் என்னிடம் கேட்ட கேள்விகள்.

    “இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, யாராச்சும் விமர்சனம் பண்ணா கன்ஸ்ட்ரக்டிவா எடுத்துக்கோங்கோ. துச்சமா பாத்தாள்னா கண்டுக்காதேள். நீங்களும் யாரையும் துச்சமா பாக்காதேள். எல்லா படைப்புக்குப் பின்னாடியும் உழைப்பு இருக்கு. அத குப்பைனு சொல்ல நாம யாரு? இன்னும் சொல்லபோனா குப்பை பொறுக்கறது கூட ஒரு பூஜை மாதிரி தான். அதுவும் ஒரு தவம். செய்யும் தொழிலே தெய்வம்னா, எல்லா படைப்புமே அந்த தெய்வத்தோட சிருஷ்டி தானே? இவாள்லாம் ஒரு வகையான ரேசிஸ்ட்டுன்னு நேக்குத் தோன்றது. உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி மாதிரி, உயர்ந்த இலக்கியம் – தாழ்ந்த இலக்கியம். எல்லாம் இலக்கியமும் ஒன்னுதான். முழுமையானது தான். ஆழ்வார் ‘அவரவர் இறையவர் குறைவிலர்’னு இறைவன பத்தி சொன்னது இதுக்கும் பொருந்தும். இதுல குப்பைனு சொல்றவாளோட மனசு  தான் மொதல்ல குப்பை புரியுதோ? அடிக்கடி நாம சந்திக்கணும். பேசணும். எழுதிண்டே இருங்கோ. நிறுத்தாதேள். வாழ்த்துகள்!!” என்று கூறிவிட்டு அவர் போனை அணைத்த அடுத்த நிமிடமே, நான் பாலாவுக்கு எழுதியிருந்த மின்மடலை குப்பைக்குத் (TRASH) தள்ளினேன்.

    அதே வேகத்தில் ‘இன்று புதிதாய்ப் பிறந்த’ உற்சாகத்தோடு எனது அடுத்த கதையை எழுதத் தொடங்கினேன் – ” குப்பை” என்கிற தலைப்பில்.

    Share
  • இயந்திரர்கள்

    Take the time to smell the rose!

    மாதவன் இளங்கோ

     

    எந்திரன் திரைப்படத்தில் ROBOT-ஐ மனிதனாக மாற்ற முயலுவார்கள். எந்திரன் என்றவுடன் உங்கள் புருவங்கள் சுருங்குவது தெரிகிறது. கவலைப்படாதீர்கள்! இந்தக் கட்டுரையில் எந்திரன் திரைப்படத்தைப் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை. ஆனால், எந்திரன் திரைப்படத்தின் கரு இன்று நான் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குப் பொருத்தமானது – ‘எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஊட்டி, ஒரு பெண்ணை நேசிக்கச் செய்வது’.

    சில நாட்களுக்கு முன்புகூட இது தொடர்புடைய செய்தி ஒன்றை வாசித்தேன். இத்தாலி நாட்டிலுள்ள பைசா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘FACE’ என்கிற மனித உணர்வுகளைப் வெளிப்படுத்தக்கூடிய ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார்களாம். FACE ரோபோவில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘HEFES’ என்கிற மென்பொருளைக் கடந்த முப்பது வருடங்களாக படிப்படியாக உருவாக்கி வந்துள்ளார்கள் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம்.

    ஒரு இயந்திரத்தை சிரிக்கவைக்கவும், கோபப்படவைக்கவும் கிட்டத்தட்ட ஒரு மனிதனின் அரை ஆயுள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் இன்று FACE பற்றியோ, HEFES பற்றியோ நான் எழுதப்போவதில்லை. இதற்கு நேர்மாறாக, ‘ஆராய்ச்சியாளர்களின் உதவியின்றி’ தன்னிச்சையாக நடந்துகொண்டிருக்கும் ஒரு மாற்றத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

    இயந்திரங்கள் எல்லாம் மனிதர்களைப் போலச் சிரிக்க ஆரம்பிக்கும் அதே வேளையில், மனிதர்கள் எல்லாம் இயந்திரர்களாக மாறிக்கொண்டு வரும் ஒரு வேதனையான விஷயத்தைப் பற்றிய என் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

    ஒருமுறை பெல்கியத்தில் ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்தபோது ஒரு சிறுகுழந்தை அழகாக RHYMES பாடிக்கொண்டிருந்தது. எனக்கு டச்சு மொழி சிறிதளவே தெரியுமென்றாலும், அது உரக்கப் பாடிய விதத்தையும், அதன் அழகிய முகபாவங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

    திடீரெனெ ஏதோ தோன்றி, தலையைச் சற்று உயர்த்தி சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டேன். ஒரே ஒரு மனிதர் மட்டும் என்னைப் போலவே புன்னகைத்துக்கொண்டு இருந்தார். மற்ற அனைவருமே, ஏதோ ‘அவர்களுடைய உணவை வேறு யாரோ தெரியாத நபர் பிடுங்கித் தின்றுவிட்டதைப் போன்று’ அந்தக் குழந்தையை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெறுப்பை  உமிழ்ந்துகொண்டும், அருவருப்பு உணர்வுகளை ஏந்திக்கொண்டும் இருந்த அவர்களின் பார்வை, அந்தப் பிரயாணமே ஒரு மழலை உரக்கப் பாடியதால் வீணடிக்கப்பட்டுவிட்டது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

    “மழலைச் சொல் கேளாதவர்” என்று கூறிய வள்ளுவன் நினைவுக்கு வந்தான். கூடவே, FACE ரோபோவும் நினைவிற்கு வந்தது. “ஒருவேளை, இந்தக் குழந்தை செய்துகொண்டிருப்பதை ஒரு ரோபோ அந்தக்கணம் செய்து காட்டியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? நிச்சயம் சிரித்திருப்பார்கள்! கைதட்டிப் பாராட்டியிருப்பார்கள்!” என்று யோசித்த அடுத்தகணம் என்னையும் வெறுப்பு வந்து தொற்றிக் கொண்டது.

    இவர்களிடம் ரசிப்புத்தன்மையைப் பற்றிப் பேசுவது வீண். ரசிப்புத்தன்மையை விடுங்கள்! சகிப்புத்தன்மை வேண்டாமா? சகிப்புத்தன்மை அறவேயின்றி  வாழும் (இயங்கும்) இவர்கள் ஒரு வகையான இயந்திரர்களே!

    நான் முதன்முதலில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்திற்கு 2005-ல் சென்றேன். அதற்குப் பிறகு, இதுவரை நான்கு முறை சென்று விட்டேன். ஆனால் இன்னமும் முழுமையாக பார்த்ததில்லை. அந்நகரில் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும், ருசிப்பதற்கும் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி ஒரு பயணக் கட்டுரையே வரையலாம்.

    குறிப்பாக ஐபில் டவரை பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். இப்படியொரு பிரம்மாண்டத்தை அந்த காலகட்டத்திலேயே எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று நினைக்கும்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். ‘குஸ்தவ் ஐபில்’ மீது ஒரு பெரும் மரியாதையே வந்துவிட்டது. இதை எப்படி வடிவமைத்திருப்பார்? கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மீறி, ஆயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்டு எப்படிக் கட்டிமுடித்திருப்பார் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

    ஆனால், ஐபிலுக்கு அத்தனை அருகே சென்றாலும், அதன் கம்பீரத்தை கண்விரியப் பார்த்து, மலைத்துப்போய் ரசிப்பவர்களைவிட கேமரா லென்சினூடே பார்த்து ‘க்ளிக்குபவர்களே’ அதிகம். அந்த நேரத்தில் புகைப்படங்களை மட்டும் எடுத்து விட்டு, பிறகு எப்போதாவது நேரம் கிடைக்கும் போது அவற்றையெல்லாம் மெதுவாக ரசிக்கலாம் என்கிற இயந்திர மனநிலையை என்னவென்று சொல்வது. இதற்கு அடிப்படைக் காரணம் – ‘நாம் எப்போதுமே எதிர்காலக் கனவுகளிலோ அல்லது கடந்தகால நினைவுகளிலோ இருப்பதைத்தான் விரும்புகிறோம்’.

    இன்னும் சிலபேர் வேகவேகமாய் கோபுரத்தின் மேலே சென்று, சில மணித்துளிகள் மட்டும் இருந்துவிட்டு (க்ளிக்கிவிட்டு) உடனே கீழே இறங்கி அவர்களின் பட்டியலில் இருக்கும் அடுத்த இடத்துக்கு சென்று விடுவார்கள். மேலே சென்று எனக்கு மிகவும் பிடித்த எழிலிய ‘செய்னே’ நதியையும், அந்த காலகட்டத்திலேயே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, பரந்து விரிந்த சாலைகளுடன் கூடிய அந்த பாரிஸ் நகரின் அழகை சிறிது நேரம் நின்று ரசிக்கக்கூட அவர்களுக்கு நேரம் கிடையாது.

    அலுவலகத்தில் நாம் சில செயல்களை ‘OPEN’ நிலையிலிருந்து ‘CLOSED’ நிலைக்கு நகர்த்த வேண்டுமென்பதற்காகவே, வேண்டாவெறுப்போடு, ஈடுபாடின்றி, ரசனை உணர்வு சிறிதுமின்றி செய்து முடிப்போம். அதுபோலத்தான் இவர்களின் பாரிஸ் சுற்றுலாவும். நம்மில் பலருக்கு ஒரு செயலை ‘முடிப்பதில்’ இருக்கும் ஆர்வம் அதைச் செய்வதில் இருப்பதில்லை.

    உங்களுக்கு யாரேனும் ஓவிய நண்பர் இருந்தால், அவர் ஓவியத்தை வரையும்போது அருகே இருந்து கவனித்துப் பாருங்கள்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும். அவர்கள் ஓவியம் வரையும் போது ஒருவித யோகநிலையில் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப ஓடும் வண்ண வண்ணத் தூரிகைகளின் ஓட்டத்தில் லயித்துப்போய் ஒருவகையான லயயோக நிலையில் இருப்பார்கள். வரைந்து முடித்துவிட்டு, “அடடா முடிந்துவிட்டதே?” என்று அவர்கள் வருத்தப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை; அப்படி ஒரு ஓவிய நண்பர் வருத்தப்பட்டும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு OPEN அல்லது CLOSED போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் தெரியாது. அதற்கு இடைப்பட்ட நிலையில் லயித்து, ரசித்து யோகம் செய்யும் யோகிகள் அவர்கள்.

    ஓவியம் என்றவுடனே ‘மோனலிசா’ ஓவியம் நினைவுக்கு வருகிறது. லியோனார்டோ டாவின்சி வரைந்த அசல் மோனலிசா ஓவியம் தற்போது பாரிஸ் நகரிலுள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. லூவரை முற்றிலுமாகச் சுற்றிப் பார்க்க குறைந்தது ஒருவாரமாவது தேவைப்படும். ஆனால் அதைக்கூட இரண்டு மணிநேரங்களில் சுற்றிப்பார்த்த அன்பர்களும் உண்டு. I am also not a big fan of museums. லூவர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

    லூவரின் கலைக்கூடத்தில் (ART GALLERY) டாவின்சி மட்டுமன்றி மைக்கேல் ஏஞ்செலோ, ரபேல் போன்ற இன்னும் எத்தனையோ தலைசிறந்த ஓவியர்கள் வரைந்த ஆயிரக்கணக்கான ஓவியங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆயினும், அத்தனை அழகான, பிரம்மாண்டமான, வெவ்வேறுவிதமான ஓவியங்களை ரசிப்பதை விட்டுவிட்டு, எல்லோருமே அந்த அருங்காட்சியகத்தின் வரைபடத்தைப் பார்த்துக்கொண்டே எதை நோக்கியோ ஒடிக்கொண்டு இருப்பார்கள்.

    அவர்களைத் தொடர்ந்து நாமும் ஓடினோமென்றால், கலைக்கூடத்தின் ஒரு பகுதியில் முட்டி மோதிக் கொண்டும், எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டத்தில் சென்று கலப்பார்கள். அங்கே பலவகையான காமிராக்களின் பளிச்சொளி தொடர்மின்னல் போல் வெட்டிகொண்டிருக்கும். இந்த லூவர் கலைக்கூடத்தில் ஓவியங்களுக்கா பஞ்சம், அது என்ன இங்கு மட்டும் இவ்வளவு கூட்டம் என்று அவர்களை விலக்கிகொண்டே உள்ளே நுழைந்து பார்த்தால், அங்கு மோனலிசா தனக்கே உரித்தான மர்மப் புன்னகையை வீசிக்கொண்டிருந்தார்.

    மோனலிசா ஓவியத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் இன்னொரு ஓவியம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஓவியம்.  சிலுவையைத் தாங்கிக்கொண்டிருக்கும் முற்கிரீடம் அணிந்த ஏசு கிறித்துவின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர்த் திவலைகள் அவ்வளவு தத்ரூபமாக அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும். கிறித்துவின் முகத்தில் தெரியும் அந்த வலி உணர்வு நம்மை என்னவோ செய்யும்.

    ஆனால் அந்த ஓவியத்தின் அருகே யாரும் சென்றதாகக் கூடத் தெரியவில்லை. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எல்லோரும் ஓட்டமும் நடையுமாகச் சென்றது கலையின் மேல் இருந்த காதலினால் அல்ல. உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்திற்கு அருகே நானும் நின்றவன் என்கிற ஆதாரத்திற்காக.

    ‘I-TOO-WENT-TO-PARIS’ என்கிற பெருமித உணர்வே அவர்களை ஓடவைத்திருக்கிறது. இந்த ஓட்டத்தின் வேகத்தில் மோனலிசாவை விடப் பலமடங்கு பெரிய, பலமடங்கு அழகான எத்தனை ஓவியங்களை இவர்கள் கண்ணாரக் காணும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள்.

    இவர்களிடமும் ரசிப்புத்தன்மையை எதிர்பார்க்கமுடியாது.

    எப்போதுமே ஒருவித பரபரப்பு நிலையில் இருக்கும் (இயங்கும்) இவர்கள் இன்னொரு வகையான இயந்திரர்கள்!

    நாள்தோறும் அலுவலகத்திற்குச் செல்வதிலிருந்து சுற்றுலா வரை ‘அதே வேகம்’ – ‘அதே இயந்திரத்தனம்’.

    சென்னையில் எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் எப்போதாவது தான் என்னை தொலைபேசியில் அழைப்பார். ஆனால் “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? குழந்தை எப்படி இருக்கிறான்?” என்று நம்மைப் பற்றியெல்லாம் விசாரிக்கவே அவருக்கு நேரம் இருக்காது, தோன்றவும் தோன்றாது. அவருக்கு வேண்டிய விஷயங்களை மட்டும் அவசர அவசரமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, உடனே அழைப்பைத் துண்டித்துவிடுவார். நான் ஏதாவது கேட்க ஆரம்பித்தால், அதைக் காதில்கூட வாங்கிக்கொள்ளமாட்டார். ஒவ்வொரு முறை அவருடன் தொலைபேசியில் பேசும்போதும் அவர் இயந்திரத்தனமாகக்  கேட்பதை ரசித்துக்கொண்டே நானும் ஒரு கணிப்பொறியைப் போல் பதிலளிப்பது வழக்கமாகி விட்டது. இவரும் ஒரு ‘OPEN-TO-CLOSE’ ஆசாமிதான்.

    மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் சார்லி சாப்ளினின் ‘MODERN TIMES’ திரைப்படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘Section 5 More Speed…’ காட்சியில், தலைசொறியக்கூட நேரமில்லாமல் தொகுப்புவரிசையின் (Assembly Line) வேகத்திற்கு ஈடுகொடுத்து அவர் வேலை செய்யும் விதம்தான் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் காட்சியை நினைத்துச் சிரிப்பு வந்தாலும், அதுவே இன்றைய நிதர்சனமாகிப் போனதை பார்க்கும்போது கவலையாகவும் இருக்கிறது.

    நாம் செய்யும் செயலிலோ, தொழிலிலோ அல்லது ஏதாவதொரு கலையிலோ  MASTERY அடைய விரும்பினால், முதலில் அதை ரசிப்பதும், அதில் லயிப்பதும் மிகவும் அவசியம்.

    ஓவியம் பற்றிக் கூறினேன். ஆனால் நாட்டிய சாஸ்திரமும் கிட்டத்தட்ட இதையே தான் கூறுகிறது.

    “யதோ ஹஸ்த ததோ திருஷ்டி

    யதோ  திருஷ்டி  ததோ  மனா

    யதோ மனஸ் ததோ பாவா

    யதோ பாவா ததோ ரசா” 

    சுருங்கச் சொன்னால், ‘கைகள், கண்கள், மனம், பாவம் இவை அனைத்தும் செய்யும் கலையில் கலந்திருக்கும் நிலையில்தான் ரசசித்தி கிட்டும்’. இது நாட்டியக் கலைக்கு மட்டும் அல்ல, கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.

    நாம் செய்யும் செயலில் சித்தி உண்டாக, இந்த விழிப்புணர்வும், ரசனையும், லயிப்பும் அவ்வளவு முக்கியம். இயந்திரத்தனம் இதற்குச் சற்றும் உதவாது. மாறாக மன உளைச்சல் போன்ற மனப் பிறழ்வு நோய்கள்தான் உண்டாகும். இந்த பாழாய்ப்போன இயந்திரத்தனமே பெரும்பாலானோரின் மன உளைச்சலுக்கு ஒரு மூலகாரணம்.

    எனவே,

    மன உளைச்சலைத் தூக்கி எரிய..

    நாம் அறியாமலேயே நமக்குள் INSTALL செய்யப்பட்டுவிட்ட ‘இயந்திரத்தனம்’ என்னும் மென்பொருளை UNINSTALL செய்ய…

    நாம் செய்யும் தொழிலில், கலையில் சித்தி உண்டாக…

    OPEN மற்றும் CLOSE இவற்றிற்கு இடைப்பட்ட நிலையை ரசிப்போம்.

    பிறப்பு மற்றும் இறப்பு இவற்றிற்கு இடையில் இருக்கும் வாழ்க்கை என்னும் ஒரு உன்னதமான நிலை – அதை, ரசிப்போம், ருசிப்போம்!

    Let us be a fan of our own life! நம் வாழ்க்கையின் ரசிகனாக – நாமே!

    படத்திற்கு நன்றி: http://fc04.deviantart.net/fs30/i/2009/240/8/2/Stop_and_Smell_Blue_Roses_by_MidgetMe.jpg

    Share
  • அமைதியின் சத்தம்

    இலண்டன் மாநகருக்கு என் குடும்பத்துடன் குடியேறிக் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது இலண்டன் மாநகரின் அழகை விவரிக்கும் மனநிலையில் எல்லாம் நான் இல்லை. இன்னும் சொல்லப்போனால் திரும்பவும் பெங்களூருக்கே போய்விடலாமா என்று கூட சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

    இதற்கான காரணத்தைக் கேட்டால், இதெல்லாம் ஒரு காரணமா என்றும், இதற்குப் போய் இலண்டனை விட்டுவிட்டு எவனாவது திரும்பி வருவானா என்றும், இந்த சத்யா ஒரு பைத்தியக்காரன் என்றும் கூட உங்களுக்குத் தோணலாம்.

    நான், என் மனைவி மற்றும் என்னுடைய இரண்டு மகன்களும்,   ஆறுமாதங்களுக்கு முன்புவரை வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வசித்து வந்தோம். அதுவரை இலண்டனில் காலம் ஆனந்தமாகக் கழிந்தது.

    ஆனால் அந்த வீட்டிற்கு வாடகை கொஞ்சம் அதிகம் என்பதால், தெற்கு லண்டனிலுள்ள கிராய்டன் பகுதியில் பதினான்கு தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஆறாவது தளத்திலிருந்த வீட்டிற்குக் குடிபுகுந்தோம்.

    இந்தச் சிறிய வீட்டிற்கு நான் கொடுக்கும் வாடகையைக் கேட்டால் உங்களுக்கு மாரடைப்பே வந்துவிடும். பெங்களூரில் கூட தற்போது வீட்டு வாடகை எகிறி எங்கோ போய்விட்டதாக என் நண்பர்கள் கூறினார்கள். இருந்தாலும், அங்கெல்லாம் நம்முடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்குதான் வீட்டு வாடகைக்குப் போகும் (நான் தகவல் தொழில்நுட்பத்  துறையில் வேலை பார்ப்பவன் என்பதை மனதில் கொள்ளவும்). ஆனால் இங்கு ஐரோப்பாவில் எந்த  நாட்டில் இருந்தாலும் சரி, சம்பளத்தின் மூன்றில் ஒரு பங்கை வீட்டு வாடகைக்காக ஒதுக்கிவிட வேண்டும். அதற்குமேல், மின்சாரம், தண்ணீர், ஹீட்டிங், இத்யாதி இத்யாதிகள் வேறு.

    இருந்தாலும் இவையல்ல என் பிரச்சினைக்குக் காரணங்கள்.

    ஐரோப்பாவில் பெருஞ்செல்வந்தர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று எங்களை நினைத்துப் பொறாமைப்பட்டுக்கொண்டிருக்கும் உறவு நெஞ்சங்களுக்கு இவற்றையெல்லாம் விளக்கினாலும் புரியப்போவதில்லை எனும்போது, எதற்கு விளக்கி நேரத்தை வீணடிக்கவேண்டும்?.

    என் பிரச்சினைக்கு வருவோம்.

    என் குழந்தைகளில் ஒருவனுக்கு ஐந்து வயது, இன்னொருவனுக்கு இரண்டு வயது. இரண்டாவது மகன் இலண்டனில்தான் பிறந்தான்.

    “இது ஒரு பிரச்சினையா?” என்று கேட்க வேண்டாம்.

    நான் பிரச்சினை என்னவென்று சொல்வதற்கு முன்பு, முதலில் நீங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

    குழந்தைகள் வீட்டில் அங்கும் இங்கும் ஓடுவதும், குதித்து விளையாடுவதும் தவறா?                        

    “நிச்சயமாக இல்லை!” என்று நீங்கள் தலையாட்டுவது தெரிகிறது. ஓடிவிளையாடிக் குதிப்பது என்பது குழந்தைகளின் இயல்பு. ஆனால் அதற்காக அவர்களது தந்தையாகிய நான் காவல் நிலையம் மட்டுமல்ல, கோர்ட் வாசல் வரைச் சென்று வந்தேன் என்றால் உங்களால் நம்பமுடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்! நான் சிறைக்குச் செல்லாதது மட்டும்தான் குறை.

    ஒருநாள் நான் என் குழந்தைகளுடன் படுக்கையறையில்  விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென தடதடதடவென்று பூகம்பம் வந்தது போன்று ஒரு சத்தம். என் குழந்தைகள் மிரண்டுபோய் ஓடிவந்து என்னைக் கட்டியணைத்துக் கொண்டனர். யாரோ வேண்டுமென்றே சுவரைத் தட்டிச் சத்தத்தை ஏற்படுத்தியது போல இருந்தது. அந்தச் சத்தம் பக்கத்து வீட்டிலிருந்து வந்ததா, மேல்வீடு அல்லது கீழ்வீட்டிலிருந்து வந்ததா என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

    ஒருவேளை என் மனைவிதான் சமையலறையில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறாளோ என்று ஹாலுக்கு வந்தால், அவள் எனக்குமேல் பதைபதைத்துக் கொண்டு ஓடிவந்து, “என்ன சத்தம்?” என்று கேட்டாள்.

    “தெரியல அர்ச்சனா. பக்கத்து வீட்லர்ந்து யாரோ சொவத்த இடிக்கற மாதிரி தெரியுது.” என்றேன்.

    “ஒருவேளை நீங்க மூணுபேரும் ரொம்பச் சத்தம் போட்டு விளையாடினதால வார்ன் பண்றாங்கன்னு நெனெக்கிறேன் சத்யா. கொஞ்சம் நேரம் அமைதியா இருந்து பார்க்கலாம்.” என்றாள் என் மனைவி.

    அதற்குப் பிறகு அன்றைக்கு மீண்டும் அந்தச் சத்தம் கேட்கவே இல்லை.

    அடுத்த நாள் மாலை வீட்டிற்குள் நுழைந்ததுமே என் மனைவி, “இன்னிக்கு மட்டும் நாலுதடவ சத்தம் வந்துச்சு சத்யா. கரெக்டா நோட் பண்ணேன். இவங்க குதிக்கறப்ப, ஒடரப்போதான் யாரோ இடிக்கறாங்க. எனக்கென்னமோ நாய்ஸ் கீழ்வீட்டிலர்ந்து வர்ற மாதிரிதான் தெரியுது. ரொம்ப அன்னாயிங்கா இருக்கு பா.” என்று எரிச்சல் பட்டுக்கொண்டாள்.

    அடுத்தநாள், எனக்குத் தலைவலி அதிகமாக இருந்ததால் வழக்கத்திற்குச் சற்று முன்னதாகவே அலுவலகத்திலிருந்து கிளம்பி, ட்யூபில் வீட்டிற்குச்  சென்று கொண்டிருந்த போது, அர்ச்சனாவிடமிருந்து கைபேசி அழைப்பு வந்தது.

    “சத்யா, போலீஸ் வந்திருக்கு. கொஞ்சம் சீக்கிரம் வர்றியா?” என்று அவள் சொன்னவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

    “வாட்??? போலீசா? எதுக்கு?”

    “அப்புறம் பேசலாம். நீ வர்றதுக்கு இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?”

    “அல்மோஸ்ட் ஸ்டேஷன் ரீச் ஆயிட்டேன். இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.”

    எனக்குத் தலைவலி போய் மாரடைப்பே வந்துவிடும் போலாகிவிட்டது. எதற்கு வந்திருப்பார்கள் என்று என்னால் சிறிதும் யூகிக்கவே முடியவில்லை. இவள் வேறு விஷயத்தைச் சொல்லாமல் புதிர் போடுகிறாள் என்று திட்டிக்கொண்டே என் நண்பனுக்கு உடனே போன் செய்தேன்.

    “ஹே விச்சா, கொஞ்சம் உடனே வீட்டுக்கு வர்றியா?”

    “ஆபீஸ்ல இருக்கேன் மச்சி. ஈவினிங் வரட்டுமா?”

    “கொஞ்சம் அர்ஜன்ட் டா. வீட்டுக்கு பக்கத்துல தானே ஆபீஸ் இருக்கு. கொஞ்ச நேரம் வந்துட்டு போயிடேன்.”

    “என்ன ஆச்சுடா?”

    “நீ வா சொல்றேன்.” என்று என் மனைவி போட்ட அதே புதிரைப் போட்டுவிட்டு கைபேசியை அணைக்கவும் ஸ்டேஷன் வரவும் சரியாக இருந்தது.

    ட்யூப் ரயிலிலிருந்து இறங்கி வீட்டிற்கு ஓட்டமாய் ஓடி எங்கள் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தேன். குடியிருப்பு வாசலில் வோல்வோ V70 காவல்துறை வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது.

    அதைக் கண்டவுடன் இன்னமும் வேகமாக ஓடிச்சென்று எலிவேட்டரைப் பிடித்து,  ஒன்று.. இரண்டு.. மூன்று.. என ஒவ்வொரு தளமாகக் கடக்கும்போதும், எனக்கு இரத்த அழுத்தம் 120.. 130.. 140.. என்று பத்தின் மடங்குகளாக ஏறிக்கொண்டிருந்தது.

    ஆறு..

    எலிவேட்டரின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். திறந்து கிடந்த என் வீட்டிலிருந்து சிரிப்பொலி கேட்டது.

    உள்ளே நுழைந்த என்னை, “ஹலோ, வெல்கம்!” என்று கம்பீரக் குரலில் வரவேற்றனர் இரண்டு காவல் துறை அதிகாரிகள்.

    “ஹலோ, அம் சத்யா!” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களோடு கைகுலுக்கினேன்.

    “யுவர் பிப்த் ப்ளோர் நெய்பர் ஹேஸ்  லாட்ஜ்ட் எ கம்ப்ளையின்ட்!” என்று கூறிய அவருடன் ஆங்கிலத்தில் உரையாடினேன்.

    “என்ன புகார்?”

    “உங்கள் வீட்டிலிருந்து அதிக சத்தம் வருகிறதாம். ஆனால், இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சிறுவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். உங்கள் மனைவியை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசினோம். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகவேண்டும். வேறு வழியில்லை. இதில் நாங்கள் எதுவும் பெரிதாகச் செய்ய முடியாது.” என்று கூறிவிட்டுப் புறப்படத் தயாரானார்கள்.

    வழியனுப்ப வெளியே வந்த எங்களுடன் கைகுலுக்கிவிட்டு, என் மனைவியிடம், “தாங்க்ஸ் பார் த கோலா!” என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டுச் சென்றார்கள்.

    அவர்கள் லிப்டுக்குள் சென்ற அதே சமயம், அருகிலிருந்த லிப்டிலிருந்து விச்சா வெளியே வந்தான்.

    “என்னடா ஆச்சு? போலீஸ்லாம் வந்திருக்கு…” என்று பதற்றத்துடன் கேட்டான்.

    நான் உடனே பின்னால் திரும்பி “என்ன அர்ச்சு ஆச்சி?” என்று என் மனைவியைக் கேட்டேன்.

    “நம்ம வீட்டுக்கு கீழ்வீட்ல ஒரு வயசான கபில்ஸ் இருக்காங்க. ஹாலந்து நாட்டுக்காரங்களாம். அந்தப் பாட்டிக்கு ஏதோ ஒடம்பு முடியலையாம். போனவாரம் தான் ஹாஸ்பிடல்லர்ந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக்காங்களாம். நம்ம வீட்லர்ந்து ரொம்ப நாய்ஸ் வர்றது தாங்க முடியலைன்னு கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க.”

    “நாய்ஸ் வந்தா பர்ஸ்ட் நம்ம கிட்ட சொல்ல வேண்டியதுதானே! அதுக்கு போயி போலீஸ் கிட்ட யாரவது போவாங்களா?”

    “இட்ஸ் நாட் எ சர்ப்ரைஸ் பார் மி. நான் ஆம்ஸ்டர்டாம்ல நாலு வருஷம் இருந்திருக்கேன். டச்சுக்காரங்க கொஞ்ச கோவக்காரப் பசங்க டா.”

    “ரெண்டு மூணு நாலா பசங்க விளையாடும்போதெல்லாம் தடதடனு சத்தம் கேட்டது மச்சி. ஆனா இதுக்கெல்லாமா போலீஸ்கிட்ட போவாங்க?”

    “இந்த ஊருக்காரங்கல்லாம் அமைதி விரும்பிகள் டா!”

    “என்ன அமைதியோ? அந்த தாத்தா ஒரு சார்ட் கொடுத்திருக்காரு விச்சாண்ணா” என்றாள் அர்ச்சனா.

    “என்ன சார்ட்?” என்று கேட்டேன்.

    “நைட் 7 மணிலர்ந்து மார்னிங் 7 வரைக்கும் பசங்க தூங்கணுமாம். அதனால அவங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இருக்காதாம். மார்னிங் 8 மணிக்கு விகாஷ் ஸ்கூலுக்கு போறதால. ஆகாஷ் மட்டும் தான் வீட்ல இருப்பான். சோ, சத்தம் நிறைய வராதாம். ஈவினிங் போர் டு செவென் மட்டும் அவங்க அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்களாம்.”

    “என்னக் கொடும சரவணன் இது?” என்று தலையில் அடித்துக்கொண்டான் விச்சா.

    “அப்போ வீக்கென்டுல?” என்று என்னமோ மருத்துவரிடம் தடுப்பூசி அட்டவணையின் பேரில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது போன்று ஆர்வத்தோடு அவளிடம் கேட்டேன்.

    “வீக்கென்டுல ரொம்ப சத்தம் வந்தா அவங்க அதே மாதிரி சொவத்துல த்ரீ டைம்ஸ் மட்டும் நாக் பண்ணுவாங்களாம். நாம கிட்ஸ கண்ட்ரோல் பண்ணனுமாம். இல்லைனா எங்கயாவது வெளில கூட்டிட்டு போயிடணுமாம். இந்தக் குளிருல எங்கன்னு வெளில போறது?” என்று கூறிவிட்டு தலைமேல் கைவைத்துக்கொண்டு அமர்ந்தாள் அர்ச்சனா.

    அதற்குப் பிறகு, சுவரைத் தட்டி ஒலி எழுப்புவதே அவர்களுக்கு வேலையாகிவிட்டது. எங்களுக்கும் குழந்தைகளைத் திட்டித்திட்டி வெறுப்பாகிவிட்டது. அதற்கு முன்பு இதுபோன்றெல்லாம் என் குழந்தைகளைத்  திட்டியதே இல்லை. அர்ச்சனா ஒருமுறை மிகவும் எரிச்சலடைந்து விகாஷை நன்றாக அடித்தேவிட்டாள். இப்போதெல்லாம் இங்கு குழந்தைகளைத் கண்டிப்பதற்குக்கூட பயமாய் இருக்கிறது. பெற்றோர்களைச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள்.

    இப்படியே இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது.

    “டைரக்டர் பாக்யராஜுக்கு மட்டும் இந்த மேட்டர் தெரிஞ்சா ‘சுவரின் மேல் சத்தங்கள்’ னு ஒரு படமே எடுத்துடுவார் மச்சி.” என்று விச்சா கிண்டல் செய்துவிட்டுச் சிரித்தான்.

    “டேய். நான் டென்ஷன்ல இருக்கேன் உனக்கு நக்கலா?”

    “ஒரு ஐடியா! அவங்க ஒருமுறை போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணாங்கல்ல. இப்போ நாம ஒருமுறை போய், கீழ்வீட்டுக்காரங்க ரொம்ப நாய்ஸ் பண்ணி மென்டல் டார்ச்சர் பண்றாங்க. என்னோட கிட்ஸ் ஆர் கெட்டிங் வெரி நெர்வஸ்னு கம்ப்ளைன்ட் பண்ணிப் பாக்கலாமா?” என்றான்.

    நானும் அர்ச்சனாவும் யோசித்துக்கொண்டிருந்தபோது அவனே இன்னொரு யோசனையும் வழங்கினான், “பசங்கள விளையாடவிட்டு அவங்க தட்டும்போது வீடியோ எடுக்கலாம். அப்போ தான் அவங்களுக்கு அந்தச் சத்தத்தோட இம்சை புரியும்!”

    எங்களுக்கும் அது சரியெனப் பட்டதால் அவன் கூறியபடியே செய்து, வீடியோ ஆதாரங்களோடு போலீசில் புகார் செய்தோம்.

    அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை இரண்டு வீட்டிற்கும் வந்து பார்வையிட்டு விட்டு, கோலா குடித்து விட்டு, அதே அறிவுரையை வழங்கி விட்டுச் சென்று விட்டனர்.

    அதற்குப் பிறகுதான் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது. தாத்தா கிராய்டன் கவுன்சிலுக்குச் சென்று மேல்முறையீடு செய்துவிட்டார். கவுன்சிலின் தடுப்புச் சேவை மையத்தில் (prevention service) எங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஒரு அதிகாரியை நியமித்தார்கள்.

    அவர் முதலில் அவர்களுடன் பேசுவாராம். பின்னர் எங்களிடம் பேசுவாராம். அதற்குப் பிறகு எங்கள் இருவரையும் அழைத்துப் பேசுவாராம். இந்தப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஒரு நான்கு கட்டங்களாக நடக்குமாம்.

    முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு நானும், கிச்சாவும் சென்றோம். அதிகாரி மிகவும் நல்லவர். நாங்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார். நாங்கள் சொல்லுவதுதான் மிகச்சரி என்பது போலப் பேசினார்.

    “இவரு அவுங்களுக்கும் இதே மாதிரிதான் தலையாட்டுவார் போல இருக்குடா. பேசாம ஏன் நாம அந்தத் தாத்தா கிட்டயே போயி பேசக்கூடாது?” என்று மற்றுமொரு யோசனையைக் கொடுத்தான் கிச்சா.

    அன்று மாலையே நானும் கிச்சாவும் ஐந்தாம் தளத்திலிருக்கும் அந்த ஹாலந்து தம்பதியினர் வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினோம்.

    சிறிது நேரம் கழித்துக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தது ஒரு வெள்ளைக் கிழ உருவம்.

    எங்களைப் பார்த்த அடுத்த நொடி அவரது முகம் சிவந்தது. எங்கே கதவை மடாரெனச் சாத்திவிட்டு உள்ளே சென்றுவிடுவாரோ என்று நினைத்த அடுத்த கணம், “கம் இன்” என்றார்.

    நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே உள்ளேச் சென்று, கைகுலுக்கி எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

    எங்களை ஹாலுக்கு அழைத்துச் சென்றார். அந்த வீடே கிட்டத்தட்ட ஒரு அருங்காட்சியகம் போலக் காட்சியளித்தது. அவ்வளவு நேர்த்தியாக அத்தனைப் பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    ஒரு மயான அமைதி குடிகொண்டிருந்த அந்த வீட்டில் ஏதோ மெல்லிய சத்தம் வந்து கொண்டிருந்ததை உணர்ந்தோம். என்னவென்று திரும்பிப் பார்த்தால், அந்த வீட்டின் மூலையில் ஒரு பாட்டி சாய்வு நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த டிவியின் ஓசைக் கூட கேட்கவில்லை. இப்படி ஒரு சூழலில் என் குழந்தைகள் குதித்தால் மட்டும் இல்லை, வாயு பிரித்தால் கூட ராக்கெட் ஏவும் சத்தம் கேட்கும் அந்த வீட்டில்.

    தாத்தா ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

    “என் மனைவி சில நாட்களுக்கு முன்னால்தான் சிகிச்சை முடித்துக்கொண்டு மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்திருக்கிறாள். ஏன் இப்படி எங்களுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? பேசாமல் நீங்கள் வீட்டை காலி செய்துகொண்டு போய்விடுங்கள். நான் வேண்டுமானால் எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன்.” என்று சற்றுச் சூடாகவே வார்த்தைகளை வீசினார்.

    அவர் பேசிய விதம் என்னைச் சினம் கொள்ளவைத்தாலும், அந்தப் பாட்டியின் நிலைமை பார்க்கப் பரிதாபமாக இருந்ததால் என்னை நானே அமைதிப்படுத்திக்கொண்டேன்.

    கிச்சா மட்டும் அவரிடம் பணிவாகப் பேசினான்.

    “யூ ஆர் லைக் அவர் பேரன்ட்ஸ். ஹிஸ் சன்ஸ் ஆர் ஸ்மால் கிட்ஸ். சோ பிளீஸ் அட்ஜஸ்ட்!” என்று அவன் சொன்ன அடுத்த கணம், மேலே என் வீட்டிலிருந்து மெல்லியதாக தட்தட்டென்று சத்தம் கேட்டது.

    அவ்வளவுதான். “டிட் யூ ஹியர்? டிட் யூ ஹியர்?” என்று கத்திக்கொண்டே கிழவர் மேஜையின் மேலிருந்த ஒரு கட்டையை எடுத்து சுவரில் தம்தம்மென்று அடித்தார்.

    எங்களிருவருக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. அதற்காகவே அந்தக் கட்டையை வாங்கி வைத்திருக்கிறார் என்று தோன்றியது. எனக்கென்னவோ என் குழந்தைகள் எழுப்பும் சத்தத்தை விட, இந்தச் சத்தம்தான் அந்தப் பாட்டிக்குப் பெருந்தொல்லையாய் இருக்கும் போலத் தோன்றியது.

    அந்தப் பாட்டி உடனே அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்தவுடன் அந்தக் கிழவர் இன்னும் எரிச்சலடைந்து எங்களைப் பார்த்து, “’டாட் பர்டோமெ’. கோ டு யுவர் கன்ட்ரி” என்று கத்தினார்.

    “ஹூ ஆர் யூ டு சே திஸ்? ஐ நோ டச்சு! டேக் பேக் யுவர் வேர்ட்ஸ்! சே சாரி!” என்று நேரம் காலம் புரியாமல் கிச்சா திடீரெனக் கத்திக் குதிக்க ஆரம்பித்து விட்டான்.

    போனை வேறு உயர்த்தி, “நாங்க எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணி இருக்கோம். கோர்டுக்கு போவோம்” என்று சத்தம் போட்டவனை அப்படியே பிடித்து வெளியே இழுத்து வந்துவிட்டேன்.

    அந்தக் கிழவரும் அவர் தரப்பிற்கு உள்ளே டச்சு மொழியில் விதம்விதமாய் வசவுகளை வீசிக்கொண்டிருந்தார்.

    “ஏண்டா இப்படி பண்ண? பாவன்டா அந்தப் பாட்டி! அழறாங்க!” என்றேன்.

    “உனக்கு ‘டாட் பர்டோமெ’ னா என்னனு தெரியுமாடா? எனக்கு டச்சு தெரியும். இதுல வேற உன் நாட்டுக்கு போங்கறான். நான் எதுக்கு போகணும். நான் இங்க டேக்ஸ் கட்டறேன். அவன் என் டேக்ஸ்ல பென்ஷன் வாங்கிட்டு இருக்கான்.”

    “அதுவாடா இப்போ முக்கியம்? பெங்களூர்ல இருக்கும்போது கூடத்தான் எவ்ளோ ஆட்டோகாரங்க கன்னடத்துல கன்றாவியா திட்டி இருக்காங்க. இந்தியாவிலயே சகிச்சிக்கிட்டு வாழறோம். இது வெளிநாடு. இங்க பொழப்பு தேடி வந்திருக்கோம். இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனுண்டா. இது அவங்க எடம். நாளைக்கு பிரச்சினை வந்தா நமக்காக யாரும் வரமாட்டாங்க.”

    “பேசாம நீ வீட்ட காலி பண்ணிடு மச்சான்! என் வீட்டுக்கு வந்துடு. ப்ரவென்ஷன் செர்வீசும் வேணாம், ஒரு மண்ணும் வேணா.”

    “இது கரெக்ட் அப்ரோச். அந்த ஆள் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாரு. எல்லா எக்ஸ்பென்சசும் நானே பாத்துக்குறேன். காலி பண்ணுங்கறான். அப்படின்னா அவங்களுக்கு எவ்ளோ கஷ்டம் இருக்குமோ? நான் வேற வீடு தேடறேன். அதுக்கு மட்டும் நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா போதும்.”

    “ஷூர் டா! இன்னைக்கே தேட ஆரம்பிக்கலாம்” என்று கூறிய அவனை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.

    இப்படியாக மூன்று வாரம் ஓடிவிட்டது. ஆனால் அந்த ‘சுவர் சத்தம்’ மட்டும் ஓய்ந்தபாடில்லை. அதோடு வாழப் பழகிக் கொண்டோம் என்று கூடச் சொல்லலாம். ஆனால், அர்ச்சனாவை நினைத்தால்தான் சிறிது வேதனையாக  இருந்தது. நானாவது வாரநாட்களில்  அலுவலகத்திற்குச் சென்று விடுவேன். அவளுக்கு இருந்த மன உளைச்சலை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவளுக்காகவே தீவிரமாக வீடு தேடினோம் நானும் கிச்சாவும்.

    இப்படியிருக்க, ஒருநாள் கவுன்சிலிலிருந்து எங்களுடைய அதிகாரி தொடர்பு கொண்டு, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக என்னை அழைத்தார். நான் வேறு வீடு பார்த்துக்கொண்டிருப்பதாகக் கூறி இந்தச் சேவை வேண்டாமென்று மறுத்துவிட்டேன். அவரும் எனது முடிவைப் பாராட்டினார். அது ஒன்றுதான் சரியான வழி என்றும், அந்தப் பெரியவருக்கு அதை தானே தெரிவித்துவிடுவதாகவும் கூறினார்.

    ஒரு சனிக்கிழமை.

    குழந்தைகள் எப்போதும் போலக் குதித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

    அர்ச்சனா, “என்ன இன்னைக்கு காலைலர்ந்து பெருசுங்க சத்தமே காணோம். எங்கயாச்சும் வெளிய போயிட்டாங்களா?” என்றாள்.

    “கரெக்ட். அதிசயமா இருக்கு. இன்னைக்கு மழை பேயும்.” என்று கூறிவிட்டு ஜன்னலினூடே வெளியே பார்த்தேன். அன்றைக்கு கிராய்டன் வட்டாரமே எனக்கு அவ்வளவு அழகாய்த் தெரிந்தது.

    “சத்யா, பாத் டப்ல தண்ணி தேங்குது. கொஞ்சம் சிண்டிகஸ்ல சொல்லிடேன். நாளைக்கு ஹாலிடே. அப்புறம் மன்டே வரைக்கும் கஷ்டம்.” என்றாள்.

    நான் கீழே சென்று, எங்கள் குடியிருப்பு பராமரிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு திரும்பும்போது, ஐந்தாவது தளத்தில் வசிக்கும் தெலுங்கு நண்பர் ஒருவர் எதிர்ப்பட்டார்.

    அவரிடம் அவ்வளவாக நான் பேசியது கிடையாது. ஆனால் அன்றைக்கு அவராகவே என்னருகே வந்து, “விஷயம் தெரியுமா சத்யா?” என்று கேட்ட விதத்திலும், பார்த்த பார்வையிலும், ஏதோ கெட்ட செய்தி கொண்டு வந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

    “என்ன விஷயம் சதீஷ்” என்று சிறிது குழப்பத்தோடு வினவினேன்.

    “எங்க ப்ளோர்ல இருக்கற பாட்டி இன்னைக்கு விடிகாலைல செத்துப் போச்சாம். இன்னைக்கு மார்னிங் ப்யூனரல் ஹோமுக்கு பாடிய தூக்கிட்டு போனப்பப் பாத்தேன்.”

    சதீஷ் சொன்னதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன். அவனுக்குப் பதில் சொல்ல எனக்கு வாயெழவில்லை. “ஓ. அப்படியா? சாரி டு ஹியர்.” என்று வெறுமனே கூறிவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். எனது கைகள் நடுங்க ஆரம்பித்தன; கால்களின் நடை தளர்வடைந்தது. வீட்டிற்குச் செல்வதற்கே சிறிது கலக்கமாக இருந்தது. எங்கள் குடியிருப்பில் இருந்த பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு, வீட்டிற்குச் சென்று அர்ச்சனாவிடம் கூட எதுவும் சொல்லாமல் அப்படியே நாற்காலியில் சரிந்தேன்.

    குழந்தைகள் இங்குமங்கும் ஓடிக் குதித்து விளையாடி ஒலி எழுப்பிக்கொண்டிருந்ததனர்.

    ஆனால் என் செவிகள் ஐந்தாவது தளத்திலிருந்து வழக்கமாக வரும் சுவரின் சத்தத்தையே தேடிக்கொண்டிருந்தன.  அவைகளுக்கு நிசப்தம் மட்டுமே பதிலாகக் கிடைத்துக்கொண்டிருந்தது. 

    Share
  • உச்சத்தில் உழவு

     

    மாதவன் இளங்கோ

     

    உணவு தின்றுக் கருவுக்கு

    குருதி தருவாள் – ‘தாய்!’

    தன்குருதி தந்து உலகோர்க்கு

    உணவு படைப்பான் – உழவன்’!

     

    நிலமென்னும் கருவறையில் விதைவீசி

    உயிர்கொடுத்து உடல்வேர்க்க உழவுசெய்து

    உலகுக்கே உணவு படைத்தவனின்று

    சுருங்கிப் போனத்தன் வயிற்றிற்கே

    ஒருவேளைச் சோறின்றி வாழ்ந்திருக்க,

    எங்கனம் செய்வான் அவன் உழவு?

    அன்றாடம் அவன் வீட்டில் இழவு!

    பொய்த்துப்போன மழை,

    வற்றிப்போன கிணறுகள்,

    பாலையாகக் காட்சிதரும் ஆறுகள் – அந்தப்

    பாலையின்மேல் பதிந்திருந்த ஆறுகளின்

    பாதச் சுவடுகளைச் சுரண்டியதால்

    வெளித்தெரியும் களிமண் என

    இத்தனையும் மீறி

    அறுவடைக்கு எட்டிப்பார்த்த

    பயிர்களையும்

    வனப்புடனே வளர்ந்து நின்ற

    வாழைமரங்களையும்

    காணாமல் செய்துவிட்ட

    கோரப்புயலென்று

    எத்தனைதான் வேதனைகள் அவனுக்கு?

    மலடாகிப்போனது அவன் மண்ணல்ல!

    பாரபட்சம் காட்டும் அந்த

    அகண்ட வானமும்

    நீர்மறுக்கும் அண்டை மாநிலத்தின்

    நெஞ்சமும்தான்!

    கருவறையில் கல்நட்டு

    கட்டங்கட்டி விற்றுவிட்டான்

    வயிற்றுக்காக மட்டும் அன்று!

    வானம் பார்த்த பூமியின் மேலெழுந்து

    வான்தொட்டு நிற்குமந்த

    அடுக்குமாடிக் கட்டிடங்கள் மீதேறிச் சென்று

    மழைவேண்டி யாசிக்கலாமே என்று!

    வேண்டியும் பலனில்லை என்றால்

    வீழ்ந்து மாய்க்கலாமும் என்று!

    இப்படித்தான் நிற்கிறார்கள் –

    உச்சத்தில் உழவனும்,

    மரணத்தின் விளிம்பினில் உழவும்

    இன்று!

    Share
  • என்னைக் கவர்ந்த மனிதர்கள்..

    மாதவன் இளங்கோ

    எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், எழுத்துலகில் இருக்கும் எத்தனையோ ஜாம்பவான்களை விடவும் ஒருபடி மேலே சென்று, பெரிதாக நாம் ஒன்றும் செய்து விட முடியாது. ஆனாலும், என் ஆதர்ச எழுத்தாளர்களின் சீரிய எழுத்துகளின் உந்துதலாலும், தமிழின் மேல் கொண்ட காதலாலும், மனதில் உதிப்பதையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு கடைஞன் நான்.

    சில சமயங்களில் மின்னல்போல் பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அந்த எண்ணத்தின் பின்னால் இடியைப் போல கிடுகிடுவென சிறிதுநேரம் ஓடினால், அதைப்பற்றிய கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் முன்னே வந்து கொட்டும். சிதறி விழும் சிந்தனைகளைத் தமிழில் கோர்த்துப் பார்த்தால் அது ஒரு கட்டுரையாகவோ, கவிதையாகவோ அல்லது கதையாகவோ வடிவெடுக்கிறது.

    இந்தக் கட்டுரையில் நான் எழுதப்போகும் விஷயம் கூட அப்படி பளீரென மின்னிய ஒன்று தான். சில நாட்களுக்கு முன்னாள், ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருந்த போது உதித்த எண்ணம். ஆனால், வேடிக்கை என்னவென்றால் இதற்கு தலைப்பு வைக்கத்தான் மெனெக்கெட்டு சிறிது நேரம் சிந்திக்க வேண்டியதாய்ப் போயிற்று.

    என்னைப் பொறுத்தவரை மனம் என்பது ஒரு ‘விவாதக்களம்’; சிந்திப்பது என்பது எனக்குள் ‘விவாதித்துக் கொள்வது’ போன்றது. ஏனெனில், நான் ஒவ்வொருமுறையும் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும்போதெல்லாம், மூன்று பேர் கொண்ட ஒரு ‘திறனாளர் குழு’ (Brain Trust) என் மனவெளியில் புகுந்து விடுகிறது. ‘மாதவன் இளங்கோ’, ‘மாதவன்’, மற்றும் ‘இளங்கோ’ ஆகிய வல்லுநர்கள் தான் அந்த குழு உறுப்பினர்கள். இவர்கள் மூவரும் கடுமையாக விவாதித்து விட்டு, முடிவாக எனக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.

    சில நேரங்களில் முடிவுகளைக் கூட அவர்களே எடுத்துவிடுவது உண்டு. பல நேரங்களில் முடிவே எடுக்காமல் காலங்காலமாக, இரவு பகலாக விவாதிக்கொண்டே இருப்பார்கள். இன்று சிறிது விரைவாகவே முடிவெடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    “எனது கதாநாயகர்கள் என்று தலைப்பு வைக்கலாம்.” என்று மாதவன் கூறினார்.

    “கதாநாயகர்களா? வேண்டவே வேண்டாம்! நம் நாட்டில் கதாநாயகர்கள் என்றாலே திரைப்பட நடிகர்கள்தான் என்பது போலாகிவிட்டது. வேறு ஏதாவது சொல்லுங்கள்.” என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் இளங்கோ.

    “எனது முன்மாதிரிகள்?” என்று மாதவன் இளங்கோ அவர் தரப்பிற்கு ஒரு தலைப்பை முன்வைத்தார்.

    “முன்மாதிரிகள் என்றால் Role Models தானே? அதெல்லாம் வேண்டாம். அதை இவருடைய தொழிலோடு தொடர்புபடுத்தி விடுவார்கள். இல்லையென்றால் யாரேனும் ஒரு அரசியல்வாதியையோ, தொழிலதிபரையோ நினைத்துக் கொள்வார்கள்.” என்று மாதவன் மறுப்பு தெரிவித்து விட்டார்.

    “என்னைக் கவர்ந்த எளிய மனிதர்கள் – இது எப்படி இருக்கிறது?” என்று மீண்டுமொரு தலைப்பை முன்மொழிந்தார் மாதவன் இளங்கோ.

    அவர் கூறியதையே மற்ற இருவரும் வழிமொழிந்தாலும், ‘எளிய’ என்கிற சொல்லை மட்டும் நீக்கிவிடலாம் என்று இளங்கோ பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை மற்ற இருவரும் ஆதரித்து, எனக்கு ஆலோசனை வழங்கியதால், அதை ஏற்றுக்கொண்டு இந்த கட்டுரையைத் தொடர்கிறேன்.

    அவர்கள் குறிப்பிட்டதுபோல், இன்று நான் ஏதேனும் ஒரு நடிகரைப் பற்றியோ, அரசியல்வாதியைப் பற்றியோ அல்லது தொழிலதிபரைப் பற்றியோ சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், நிச்சயமாக உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

    ஏனெனில், என்னைக் கவர்ந்த மனிதர்களில் பெரும்பாலானோர் சாமான்யர்கள் தான். அவர்கள்தான் என் முன்மாதிரிகள்! அவர்கள்தான் என் கதாநாயகர்கள்!

    எனது வாழ்க்கைப் புத்தகத்தின் வாசித்து முடிக்கப்பட்ட பக்கங்கங்களைச் சற்று புரட்டிப் பார்த்தால், அவைகளெல்லாம் இப்படிப்பட்ட எத்தனையோ எளிய மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கைமுறைகள், அவர்களுடன் பழகியதால் எனக்குள் உண்டான மாற்றங்கள், அவர்களிடமிருந்து நான் கற்ற விஷயங்கள் – இவற்றின் பதிவுகளால்தான் நிரம்பியுள்ளது.

    இன்று அப்படிப்பட்ட ஒரு யதார்த்தமான மனிதரைப் பற்றித் தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

    எனக்கு அப்போது பன்னிரண்டு வயது இருக்குமென்று நினைக்கிறேன்.

    எங்கள் வீட்டுத் தெருமுனையில் ஒரு காமாஜர் சிலை இருந்தது. தினமும் காலை வேளையில் அங்கு ஒரு சிறிய கூட்டம் கூடும். ஒரு வயதான பெரியவர், சிலைக்கு அருகே இருக்கும் ஒரு கல்லின்மேல் நின்றுகொண்டு, ஏதோ சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருப்பார். அதற்கு அவரைச் சுற்றி நின்றுகொண்டிருக்கும் மனிதர்கள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

    அவர் பெயர் சுப்ரமணி – படிப்பறிவில்லாத ஒரு மேஸ்திரி. அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் அவரிடம் பணிபுரியும் கட்டிடத் தொழிலாளிகள்! அவர் என்னுடைய சிற்றூரில், நான்கைந்து இடங்களில் ஒரே சமயத்தில் கட்டிடங்களும், வீடுகளும் கட்டிக்கொண்டிருந்தார்.

    ஆனால், அவர்கள் அப்படி அங்கு என்னதான் பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வமிகுதியால், ஒருநாள் அவர்கள் அருகே சென்று நடப்பவற்றை கவனித்தேன். அந்த கட்டிடடத் தொழிலாளிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கட்டுமானப் பணிகளின் நிலவரம் குறித்து பெரியவருக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தனர்.

    பெரியவர் அவர்களைக் கேட்ட கேள்விகள் இவைதான்:

    1 . நீ நேற்று என்ன செய்தாய்?

    2 . இன்று என்ன செய்யப்போகிறாய்?

    3 . களத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? (கட்டுமான பொருள் பற்றாக்குறை அல்லது வேறு ஏதேனும்)

    4 . எங்கெல்லாம் முக்கியமான பணிகள் நடக்கின்றன? (அடித்தளம், கூரை முதலியன)

    5 . யாருக்காவது அடி பட்டதா?

    6 . யாரேனும் இன்று விடுமுறை எடுத்துள்ளார்களா?

    இவ்வாறு கேட்டுவிட்டு, தொழிலாளிகள் எழுப்பிய பிரச்சினைகளுக்குத் தன்னுடைய தீர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார். கடினமான பிரச்சினைகளைக் கூட அவருக்கே உரித்தான பாணியில் – இன்முகத்தோடும், வேடிக்கையாகவும் பேசியபடியே ஆலோசனை வழங்குவதில் மனிதர் கெட்டிக்காரர்.

    பிறகு, அவர் செய்த செயல் எனக்கு அப்போது புரியவில்லை. சில பணியாளர்களிடம் மட்டும் “நேற்று நீ எங்கு சென்றாய்?” என்று கேட்டு விட்டு, “இன்று இவனோடு போ!” என்று கூறி வேறு இடத்துக்கு அனுப்பினார்.

    இவையெல்லாம், நான் சிறுவயதில் அவர் அருகில் இருந்து கவனித்தது! இன்னும் சொல்லப்போனால் எங்களுடைய வீட்டைக்கூட அவர்தான் கட்டினார். அதனாலேயே அவருடன் மேலும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அறிய பல விஷயங்களை எல்லாம் ஏதோ அற்பமான சமாச்சாரங்கள் போல போகிற போக்கில் வேடிக்கையாக விளக்கிக்கொண்டு போவார்.

    காலங்கள் ஓடின.

    நான் ஐரோப்பாவில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருக்கிறேன். கற்றறிந்த மேதைகள் விவாதித்துக்கொண்டும், அவர்களுடைய ஆய்வுக்கட்டுரைகளைப் பற்றி மேடையில் உரையாற்றிக்கொண்டும் இருந்தார்கள்.

    “Scrum Methodology Vs Traditional Project Management” என்பது தான் தலைப்பு.

    குறிப்பு: இசுக்கிரம் (Scrum) என்பது ஒருவகை மென்பொருள் உருவாக்க முறையியல். இதுபற்றி நான் எழுதியுள்ள குறுங்கட்டுரையை இங்கு காண்க –  http://ta.wikipedia.org/s/5zx

    கருத்தரங்கில் சிலர் ‘daily stand -up meetings’ பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் கருத்து தெரிவித்துக்கொண்டு  இருந்தார்கள்.

    என் நினைவுகள் 21  ஆண்டுகளுக்கு முன்னர் பறந்தது!

    1 . நீ நேற்று என்ன செய்தாய்?

    2 . இன்று என்ன செய்யப்போகிறாய்?

    3 . களத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? (கட்டுமான பொருள் பற்றாக்குறை அல்லது வேறு ஏதேனும்)

    கருத்தரங்கில் –

    சிலர் தங்கள் பணிகளை ‘முக்கியத்துவத்தின் அடிப்படையில் எப்படி வரிசைப்படுத்துவது?’, ‘அவ்வாறு செய்வதின் அனுகூலங்கள் என்ன?’, மற்றும் ‘மாஸ்கோ (MoSCoW) முறை’ என்று ஏதேதோ புரியாதவைகளைப் பற்றியெல்லாம் உரையாற்றினர்.

    என் நினைவுகள் மீண்டும் 21  ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது!

    4 . எங்கெல்லாம் முக்கியமான பணிகள் நடக்கின்றன? (அடித்தளம், கூரை முதலியன)

    இன்று…

    சிலர் ‘பணியாளர்கள்தான் ஒரு நிறுவனத்தின் சொத்து’ என்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றியும் போதித்துக்கொண்டிருந்தனர்.

    அன்று…

    5 . யாருக்காவது அடி பட்டதா?

    6 . யாரேனும் இன்று விடுமுறை எடுத்துள்ளார்களா? 

    இன்று…

    சிலர் திறமான முறையில் எப்படி ‘Knowledge Management’ புரிவது என்றும் ‘Staff Rotation’ பற்றியும் விவாதித்தனர்.

    அன்று…

    சில பணியாளர்களிடம் மட்டும் நேற்று நீ எங்கு சென்றாய்?” என்று கேட்டு விட்டு, “இன்று இவனோடு போ!” என்று கூறி வேறு இடத்துக்கு அனுப்பினார்.

    என் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடின..

    …. இருபது வருடங்களுக்கு முன், ஒரு சாதரணரிடமிருந்து, கற்றுக்கொண்ட அதே விஷய ஞானத்தை, படித்த மாமேதைகள்  ஆங்கிலத்தில்  விளக்குவதைக்  கேட்பதற்கா  நான்  ஒரு லட்ச ரூபாய் (1400€)  செலவளித்தேன்?

    …. அவர் பேசவில்லை, நடைமுறைப்படுத்தினார்!

    …. இவர்கள் பேசும் வார்த்தைகளில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லாத போது, எங்கே, என்றைக்கு நடைமுறைப்படுத்த போகிறார்கள்?

    …. இந்த எளிய விஷயங்களைப் புரியவைக்க ஒரு விவாத மேடை வேறு!

    …. எளிய வழிமுறைகளை சந்தைப்படுத்துவதற்கு என்றே இடையிடையே திணிக்கப்படும் எவருக்கும் விளங்கா பிதற்றொலிகள் வேறு!

    அறிவு என்பது புத்தகங்களைப்  படித்துவிட்டுப்  பிதற்றும் மேதைகளுக்கும்,  ‘so called’ சான்றிதழ் பெற்ற  வல்லுநர்களுக்கும் (certified professionals)  மட்டுமேயான  சொத்து அல்ல.

    இது போன்ற சாதாரண மனிதர்களிடம்தான் உலக வாழ்க்கைக்குத் தேவையான ‘இயல்பறிவு’ புதையலாய் பதுங்கிக்கிடக்கிறது.

    ஆனால் இன்று பலருக்கு இயல்பறிவு என்பதே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது – இந்தப் பலரில் நானும் அடக்கம்!

    இந்த நிகழ்வு கதையும் அல்ல! என் கற்பனையும் அல்ல. உண்மை! நீங்கள் இந்தக் கட்டுரையை  வல்லமையில்  படித்துக்கொண்டிருப்பது எந்த அளவிற்கு உண்மையோ – அந்த அளவிற்கு உண்மை. என்னைத் தட்டி எழுப்பிய   உண்மையும் கூட!

    இந்தக் கட்டுரையை என் கதாநாயகரான ‘சுப்பிரமணி மேஸ்திரிக்குச்’ சமர்ப்பிக்கிறேன். ஆம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், என் கதாநாயகர்களில் பெரும்பாலானோர்  இத்தகைய சாமான்யர்களே; ஆனால் சாமான்யப்பட்டவர்களில்லை. ‘உருள்பெருந்தேர்க்கு அச்சாணிகளாம்’  இவர்களின் ‘உருவுகண்டு எள்ளாமல்’, சாமான்யர்களைப் படித்து சாதனையாளர்களாக முயற்சிக்க வேண்டும்.

    இன்னும் சொல்லப்போனால், திருபாய் அம்பானி போன்ற சாதனையாளர்களைப் பற்றிய புத்தகங்களை வாசித்தால்கூட, அவர்கள் சாமானியர்களாக இருந்தபோது செய்தவற்றயே பெரும்பாலும் அவை பேசுகின்றன. அவர்களுக்கு இருந்த கடின உழைப்பு, ஒழுக்கம், உந்துதல், இவையனைத்திற்கும் மேலாக அவர்களுக்கு இருந்த ‘இயல்பறிவு’ – இவற்றிற்குப் பரிசாகத்தான் காலம் அவர்களை சிகரத்தில் வைத்து அழகு பார்த்தது.

    என் கதாநாயகரும்  சிகரம் தொட்டவர் தான்! ஆனால் என்ன? அவர் தொட்ட ‘சிகரத்தின் உயரம்தான் வேறு!’.

    Share
  • பிரம்மாவைக் கண்டோம்!

    மாதவன் இளங்கோ

    இந்தக் கட்டுரையின் தலைப்பில் நான் குறிப்பிட்டிருக்கும் ‘இந்த பிரம்மா யார்?’ என்று உங்களுக்கு நிச்சயம் கேள்வி எழுந்திருக்கும். அவர் வேறு யாருமல்ல; சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவனே தான்!

    “இந்த மனிதர்  கதை எழுதுவார் என்று தெரியும். இப்போது கட்டுரைக்குள்ளும் கதையை நுழைக்க ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது” என்று நீங்கள் நினைப்பது எனக்கு டெலிபதி மூலம் வந்தடைந்து விட்டது.

    ஆனால் இது கதையும் அல்ல; ஆன்மீகக் கட்டுரையும் அல்ல. மாறாக, ஒரு பதிமூன்று வயது சிறுவன், தனது ஒன்பது வயது தம்பியுடனும், முப்பது-நாற்பது வயது மதிக்கத்தக்க பெரியவர்களுடன் புரிந்த ஆன்மீகப் பயணங்களின் அனுபவக் கட்டுரை. ஆகையால் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, நான் ஏதோ தவறாக எழுதிவிட்டேன் என்று வெகுண்டெழுந்து வந்து எனது கட்டுரையை முடக்கப் போராடாமல், நீங்களும் ஒரு பதிமூன்று வயது சிறுவனின் மனநிலைக்குச் சென்று படித்து ரசிக்கவும். சிறுவயது நினைவுகளைப் போல இனிமை தரக்கூடிய விஷயம் வேறொன்று இருக்க முடியுமா?

    “வாழ்க்கையிலும் ஒரு ரிமோட் கண்ட்ரோல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்ற திரைப்பட வசனம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. சென்றது சென்றதுதான். ‘சென்றதினி மீளாது மூடரே!’ என்று பாரதி வந்து தலையில் குட்டுவார்.

    ஆனால் அதுபோன்ற ஒரு ரிமோட் கண்ட்ரோல் இல்லாத குறையை ஒரு சுஜாதா புத்தகம் எனக்கு நிவர்த்தி செய்ததால்தான் இந்த கட்டுரையையே எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த கட்டுரை உங்களுக்கான  அத்தகைய ஒரு ரிமோட் கண்ட்ரோல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

    எனக்கு இப்போதெல்லாம் எதைப் பற்றிப் படித்தாலும் அது தொடர்பாக என் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வந்து, நான் அந்த நினைவுகளில் மூழ்கி, சில சமயங்களில் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தையே மூடிவைத்தும் விடுவதுண்டு.

    அப்படித்தான் நேற்று இரவு, என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா, அவரது  திருச்சி நினைவுகள் பற்றி எழுதியிருந்த மூன்றே மூன்று பக்க கட்டுரையை, எனது நினைவுகளுக்கிடையே படித்து முடிக்க இரண்டு மணிநேரம் எடுத்துக் கொண்டேன். அவரது எழுத்து திருச்சி நகர வீதிகளில் உலா வர, எனது நினைவுகள் திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கோயமுத்தூர் என்று அலைந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக அந்தக் கட்டுரையை வாசித்து முடித்து விட்டு, என்னை அவ்வளவு நேரம் வாசிக்க விடாமல் தொல்லை செய்துகொண்டிருந்த என்னுடைய சிறுவயது நினைவுகளை எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.

    முதலில் திருவண்ணாமலை. ஆம். அங்குதான், தலைப்பில் கூறியுள்ளபடி நாங்கள் ‘பிரம்மாவைக் கண்டோம்’. திருவண்ணாமலை எனக்கு மிகவும் பிடித்தமான, என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு நகரம்.

    எனக்கு அப்போது பதிமூன்று வயது; என் தம்பிக்கு ஒன்பது. அப்போதெல்லாம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருவண்ணாமலைக்கு நாங்கள், என் தந்தை மற்றும் அவரது நண்பர்களுடன் கிரிவலம் செல்வதுண்டு.

    எங்களின் ஆன்மீகக் குழுத் தலைவர் ஒரு அருமையான மனிதர். அறிய பல ஆன்மீகச் சிந்தனைகளை எங்களுக்குள் விதைத்ததில் அவருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. தமிழ் வேதங்களாகத் திகழும் பன்னிரு திருமுறைகளையும் அவரது பத்து விரல் நுனிகளில் வைத்திருப்பார்.

    இந்தப் பயணங்களுக்காக என் தந்தையார் எங்களை தயார் செய்த விதம் மறக்க முடியாதது. எனக்கும் என் தம்பிக்கும் ‘மாதம் ஒரு வேதம்’ என்று போட்டியெல்லாம் வைப்பார். தமிழ் வேதங்களை மனனம் செய்து நாங்கள் இருவரும் உரக்கப் பாட அவர் அதை, டேப் ரிகார்டரில் பதிவு செய்து எங்கள் இருவருக்கும் பரிசு வழங்குவார்.

    அதிலும் குறிப்பாக மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை இன்று கூட என்னால் ‘நமச்சிவாய வாழ்க’ என்று ஆரம்பித்து ‘பல்லோரும் ஏத்தப் பணிந்து’ வரை ஒரே மூச்சில் சொல்லி திருச்சிற்றம்பலத்துடன் முடிக்க முடியும்.

    தமிழ் இலக்கிய உலகிற்குள் நான் காலடி எடுத்து வைத்தது இப்படித்தான். தமிழ் இலக்கியம் என்றாலே இன்றும் எனக்கு முதலில் சைவ இலக்கியங்கள் நினைவுக்கு வருவதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

    கிரிவலம் செல்லும் போது நானும் என் தம்பியும் சிவபுராணத்தை பக்தியுடன் உரக்கப் பாடி வர, ஒவ்வொரு வரிக்கும் ஒரு கதை சொல்லுவார் எங்களுடைய குழுத் தலைவர்.

    சைவத்தின் நுண்ணிய கருத்துகளையும், சித்தாந்த நெறிகளையும் அவர் போதித்துக்கொண்டே வர, என் தந்தையின் இன்னொரு நண்பர் காற்றைப் பிரித்தவாறு, அவற்றை எல்லாம் ஆமோதித்துக் கொண்டே வருவார். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நான் நடக்க, என் தம்பி அதுமுடியாமல் ‘க்ளுக்’ என்று சிரித்து விட்டு வாயைப் பொத்திக் கொள்வான். இப்படியாக பாடலும், கருத்தும், நடையும், சிரிப்புமாக மாதமாதம்  எங்களது  ஆன்மீகப் பயணம் ஆரவாரமாக இருக்கும்.

    சிவபுராணத்தோடு படுஜோராக ‘முதல் இந்திர லிங்கத்தில்’ பயபக்தியுடன் ஆரம்பிக்கும் எங்களின் ஆன்மீகப் பயணம் எம லிங்கம் தாண்டி கிரிவலப் பாதைக்குள் நுழைந்து, நிருதி லிங்கத்தருகே சிறிது சுருதி குறைந்து, வாயு லிங்கம் தாண்டி குபேர லிங்கம் வந்தவுடன் பாய் சுருட்டிப் படுத்துவிடும்.

    அந்த ஒரே ஒரு மலை, கிரிவலப் பாதையின் ஒவ்வொரு பகுதியிலிருந்து பார்க்கும் போதும் ஒவ்வொரு விதமாக தோற்றமளிக்கும். அந்த ஒவ்வொரு தோற்றத்துக்கும் கூட ஒரு அர்த்தத்தையும், கதையையும் சொல்லுவார் எங்கள் தலைவர். பௌர்ணமி அன்று நிலவொளி படர்ந்த அந்த அழகிய மலையை, செயற்கை சத்தங்களற்ற ரம்யமான, அதி தெய்வீகமான சூழலில் பார்க்கும் போது மனதிற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.

    அந்த மலையையே இறையாக பாவித்து வலம் வருவது தான் ‘கிரிவலம்’ (கிரிவலம் பற்றி தெரியாதவர்களுக்காக). நமது கலாச்சாரத்தில் ‘இயற்கையே இறைவன்’ என்பதற்கு இதை விட சிறந்த சான்று வேறு இருக்க முடியாது. இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், ஞானக்கவி.பெருமாள் ராசு அவர்களின் வரிகள் நினைவுக்கு வருகின்றன:

    நிமிர்ந்த மலையின் கம்பீரம்

    வித்தியாசம் பார்க்காமல் வீசும் காற்று,

    குறைவை நிறைவு செய்ய ஓடும் நீர்

    இப்படி எல்லாமே குருநாதர்களே! 

    புரிந்து கொள்; வேதங்கள் புரியும்…! 

    உன்னையும் புரிந்து கொள்வாய்!

     

    சரி, நாம் இப்போது எங்கு இருக்கிறோம்? குபேர லிங்கம் தானே? குபேர லிங்கம் எங்களுக்கு மிகவும் பிடித்த கோயில். அதற்கான காரணத்தை நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டும். ஒவ்வொரு முறையும் குபேர லிங்கத்தை நாங்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் சென்றடைவோம்.

    இன்று கூட ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று யாராவது கூறினாலே நானும் என் தம்பியும் மிரண்டு போய் விடுவோம். அதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. எனது தந்தையார் எங்களை அன்றாடம் பிரம்ம முகூர்த்த வேளையில் (அதிகாலை சுமார் நான்கு மணி) எழுப்பி அவருடன் தியானம் மற்றும் யோகா செய்யச் சொல்லுவார். வேண்டாவெறுப்போடு எழுந்து, அவர் கண்ணை மூடி தியான நிலைக்கு எப்போது செல்வார் என்று காத்திருந்து, பின்பு நானும் என் தம்பியும் ஷிப்ட் முறையில் மாறி மாறி சுவரில் அப்படியே சாய்ந்து உறங்குவோம் (தியானிப்போம்). ஆனாலும் யோகா செய்யும் போது தப்பிக்க முடியாது. எப்போதுதான் சவாசனம் வருமோ என்று ஆகி விடும். இப்படி ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் பரிதாபமாகத் தொடங்கும். நான் கல்லூரி செல்லும் வரை இது தொடர்ந்தது. அதற்குப் பின் நான் தப்பித்துவிட என் தம்பி மட்டும் தனியாக மாட்டிக்கொண்டு அவதிப்பட்டான்.

    மீண்டும் குபேர லிங்கம். என்ன இது நான் சுஜாதா கட்டுரையை படிப்பது போல ஒரே இடத்திலேயே நிற்கிறோம்? பிரம்மாவை வேறு பார்க்க வேண்டும்.

    “குபேர லிங்கத்திடம் அவசியம் தியானம் செய்தே ஆக வேண்டும்; அப்போதுதான் அதிக பலன்கள் கிட்டும்” என்று எங்கள் தலைவர் சொல்ல, அது எங்கள் எல்லோருக்கும் அற்புதமான யோசனையாகப் பட்டதால் உற்சாகத்தோடு தியானத்தைத் தொடங்குவோம். நானும் என் தம்பியும் உட்கார்ந்தவாறே சுவரில் சாய்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தூங்கும் (தியானிக்கும்) வித்தை அறிந்தவர்களாயிற்றே!

    சில மணித்துளிகளிலேயே, வெவ்வேறு விதமான குறட்டை ஒலிகள் கேட்டு பயந்து போய் நானும் என் தம்பியும் கண்ணைத் திறந்து பார்த்தால் – ‘முதுகு தண்டு வளையாமல் நேர்த்தியாக தியானத்தை தொடங்கிய பெரியவர்கள், முதலில் சுவரின் மேல் சாய்ந்து, பின் லேசாக தரையில் படர்ந்து, கைகளை தலையணையாக்கி, முடிவாக சவாசனத்தில் லயித்து காலை நீட்டிப் படுத்துக்கொண்டு ‘ராக்’ இசைக்கச்சேரி நடத்திக் கொண்டிருப்பார்கள்.

    சில மணித்துளி கச்சேரி முடிவடைந்ததும், அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து எங்கள் நடைபயணம் மீண்டும் தொடங்கும்.

    எங்கள் தலைவரின் ஆன்மீகக் கதைகள் சிலசமயம் பிரமிப்பாகவும், சிலசமயம் பயத்தை உண்டு பண்ணக்கூடியதாகவும் இருக்கும். மலைப்பாதையை சுற்றியுள்ள கோயில்களின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது, திடீரென்று சுவரில் காதை வைத்து ‘ஓங்கார ஒலி’ கேட்கிறது என்பார்; சித்தர்கள் தவம் செய்கிறார்கள் என்பார். எல்லோருமே பக்தி சிரத்தையோடு காதை வைத்துக் கேட்டு அதை ஆமோதிப்பார்கள். நானும் என் தம்பியும் பலமுறை முயற்சிசெய்தும் கடைசிவரை எங்களுக்கு அந்தச் சத்தம் கேட்கவேயில்லை. எங்களுடைய பிரம்ம முகூர்த்த வித்தையினால் தெய்வ குற்றம் ஆகிவிட்டதோ, எங்களுக்கு கடவுள் அருள் இல்லை என்று கூறிவிடுவார்களோ என்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பின் பயந்து ‘கேட்கிறது கேட்கிறது’ என்று கூறி விடுவோம்.

    ஒருமுறை அதே பிரம்ம முகூர்த்த வேளையில், குபேர லிங்கத்திலிருந்து வெளியே வந்த போது கிட்டத்தட்ட ஆதிசங்கரர் போன்ற உடையணிந்த ஒருவர் எங்கள் முன்னே சென்று கொண்டிருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. திடீரென எங்கள் தலைவர் தன்னுடைய நடையை நிறுத்தி விட்டு, கண்களை மூடிக்கொண்டார். நாங்களும் நின்றுவிட்டோம். சில நொடிகளில் தியான நிலையிலிருந்து சிலிர்த்துக்கொண்டு வெளியே வந்தவர், “அவர் யார் என்று தெரியுமா?” என்று எங்கள் எல்லோரையும் பார்த்துக் கேட்டார். நாங்கள் ஒன்றும் புரியாமல் கண்களை அகல விரித்தவாறு அவரையே நோக்கிக் கொண்டிருந்தோம்.

    அவர் தான் பிரம்மா!” என்று கூறிவிட்டு, கிடுகிடுவென ஓடிச் சென்று மனிதர் சாஷ்டாங்கமாக பிரம்மாவின் காலில் விழுந்து விட்டார்.

    அவ்வளவு தான், நாங்கள் அனைவரும் பதறி அடித்துக்கொண்டு அவர் பின்னாலேயே ஓடிச்சென்று பிரம்மாவின் காலில் விழுந்து வணங்கினோம்.

    பிரம்மாவும் எங்களை வாழ்த்திவிட்டு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டார்.

    கைகளைக் கட்டிக்கொண்டு அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்த எங்கள் தலைவர், “இது யாருக்கும் கிடைக்காத பாக்கியம்!” என்று பெருமிதத்துடன் கூறினார்.

    எனக்கும் என் தம்பிக்கும் பிரம்மாவையே பார்த்துவிட்ட சந்தோசம். அம்புலிமாமா, பாலமித்ரா புத்தகங்களின் ரசிகனான என் தம்பி, “பிரம்மா கிட்ட ஏதாவது ஒரு வரம் கேட்டிருக்கலாண்டா?” என்றான். (நான் கல்லூரி செல்லும் வரை, அவர் என்னை ‘டா’ என்று மரியாதையோடு விளிப்பது வழக்கம்.)

    எனக்கும் அப்படித் தோன்றியது. பிரம்மாவையே பார்த்துவிட்டதால் மறுநாள் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை என்று என் தம்பி கூறியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    நாங்கள் நடையைத் தொடர்ந்தோம். சற்றுமுன் நாங்கள் கண்ட பிரம்மா, அங்கே சாலையோரத்தில் இருந்த ஒரு பாறையின் மீது பத்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வருவதை பார்த்துக் கொண்டிருந்தார்.

    எனக்கும், என் தம்பிக்கும் பயங்கர ஆச்சரியம்; மகிழ்ச்சி.

    “இந்த முறை வரம் கேட்டே ஆக வேண்டும்” என்றான் என் தம்பி.

    “அட்டமா சித்தி கேட்கலாம்!” என்றேன் நான்.

    எங்கள் குருநாதர் பவ்யமாக வாயைப் பொத்திக்கொண்டே முதலில் பிரம்மாவின் அருகே சென்றார். நாங்களும் பயபக்தியோடு அவரை பின்தொடர்ந்தோம்.

    பிரம்மா மெதுவாகக் கூறினார் –

    “நாளைக்காலை எங்களுடைய சத்திரத்தில் அன்னதானம் செய்ய இருக்கிறோம். நன்கொடை வழங்குகிறீர்களா?”

    எனக்கும் என் தம்பிக்கும் பேரிடி விழுந்தது போல் இருந்தது.

    “என்னடா பிரம்மாவே காசு கேட்கிறார்?” என்று அப்பாவியாக என் காதருகே வந்து கேட்டான் என் தம்பி.

    “பிரம்மா தற்போது இருக்கும் நிலைமையில் இவரிடம் எப்படி வரம் கேட்பது?” என்று நானும் யோசித்து கொண்டிருந்தேன்.

    மற்றவர்களுக்கும் அதிர்ச்சி தான். ஆனால், அவர்கள் ஏனோ அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.

    பிரம்மா தொடர்ந்தார் –

    “நன்கொடை தந்தீர்களேயானால் நாளை காலை பெரிய கோவிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனத்தை வெகு அருகிலிருந்து பார்க்கலாம்!”

    எங்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சி. சீக்கிரம் மலையை சுற்றிவிட்டு, கோவிலுக்கு எதிரில் இருக்கும் தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு, பேருந்தில் தூங்கிக்கொண்டே பயணிக்கலாம் என்று நினைத்தால், இந்த பிரம்மா வேறு இப்படிக் குழப்புகிறாரே என்று நொந்து கொண்டோம்.

    வேறு வழியில்லாமல் எல்லோரும் அன்னதானம் செய்ய பணம் கட்டி ரசீது பெற்றுக்கொண்டார்கள். அதற்குப் பிறகு யாரும் வாய் திறக்கவில்லை; குறிப்பாக எங்கள் தலைவர். விடியற்காலை, கோபுரமருகே எங்களுக்காக பிரம்மா காத்துக்கொண்டிருந்தார்.

    ஆயிரங்கால் மண்டபத்தில், எங்கள் குழுவிலிருந்த அனைவரும் ஆருத்ரா தரிசனத்தை வெகு அருகே அமர்ந்து, கண்ணாரக் கண்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டிருக்க, அங்கேயிருந்த பக்தகோடிகள் அனைவரும் “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்று உரக்கச் சொல்லிக்கொண்டிருக்க, நானும் என் தம்பியும் பிரம்ம முகூர்த்த வித்தையை தூணின் மீது சாய்ந்தபடி பழகிக் கொண்டிருந்தோம்.

    அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அந்த நாள் மட்டுமல்ல, அந்த பயணங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் மற்றும் அந்தக் குழுவிலிருந்த ஒவ்வொருவரிடம் இருந்தும் நாங்கள் கற்றவையும் பெற்றவையும் ஏராளம் ஏராளம். அந்தக் குழுவில் மருத்துவர், ஆசிரியர், வங்கி மேலாளர், அலுவலக ஊழியர், பேராசிரியர் என்று பலதரப்பட்ட பின்னணிகளை கொண்ட மனிதர்களும் உள்ளடக்கம்.

    குறிப்பாக எனது தந்தையின் ஆத்ம நண்பர் திரு.அனந்த நாராயணன் அவர்கள். அந்தப் பயணங்களில் ஏதாவது அறிவைத் தூண்டும் வகையில் நகைச்சுவையான விஷயங்களைச் சொல்லி எங்களுக்குச் சிரிப்பு காட்டிக்கொண்டே வருவார். தலைவரையும், மற்றவர்களையும் விட்டுவிட்டு எப்பொழுதும் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டு விடுவார். இவருக்கு நான் எழுத எண்ணியிருக்கும் ‘என்னை கவர்ந்த மனிதர்கள்’ புத்தகத்தில் நிச்சயம் ஒரு அத்தியாயம் காத்திருக்கிறது; சொல்வதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. எனக்கு முப்பதுகளிலேயே பின்தலையில் வளர்பிறை ஆரம்பித்துவிட்டது. ஆனால் இந்த மனிதர் தலைமுடி ஒன்று கூட விழாமல், நரைக்காமல், அன்று பார்த்தது போலவே இன்றைக்கும் இளமையாக காட்சி தந்து, எனக்கு தீராத மன உளைச்சலையும், வயிற்றெரிச்சலையும் தந்து கொண்டிருக்கிறார். நான் கூறுவது மிகையில்லை என்பதை நீங்கள் அவரை நேரில் கண்டீர்களேயானால் ஆமோதிப்பீர்கள்.

    இது போன்ற மனிதர்களை நான் சந்திப்பதற்கும், பழகுவதற்கும், இதுபோன்ற அறிய பல அனுபவங்களை நான் பெறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என் தந்தைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

    தொலைகாட்சி, சினிமா போன்ற பொழுதுபோக்கு சமாச்சாரங்கள் மட்டுமே வாழ்க்கை என்கிற அளவில் சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இது போன்ற அனுபவங்கள் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

    நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் நமக்கு அண்டைவீட்டார் யாரென்று கூட தெரிவதில்லை. பெற்றோர்களுடன் பேசவே நேரமில்லாத நமக்கு எங்கிருந்து அவர்களின் நண்பர்களுடன் பழகவும், பயணம் செய்யவும் நேரமிருக்கிறது? இன்னும் சொல்லப்போனால், சென்னை போன்ற நகரங்களில் வாழும் நிறைய பேருக்கு ஆத்ம நண்பர்களே கிடையாது என்பது நிதர்சனமான உண்மை.

    இதுபோன்ற பயணங்களில், இன்று வரை எனக்கு விடைதெரியா – MYSTERIOUS – அனுபவங்கள் கூட கிடைத்திருக்கிறது.

    அதுபற்றி இன்னொரு நாள் பேசுவோம்.

    நிழற்படத்திற்கு நன்றி : திருவண்ணாமலை முகநூல் பக்கம்
    Share
  • கல்லூரி கட்டணம்

    மாதவன் இளங்கோ

    “ஏண்டா சீனி, காத்தால சீக்கரமா போவணும்னு நேத்து ராவே சொல்லமாட்டே? சாப்பாடே உன்னும் ஆகல!” என்று திட்டிக்கொண்டே சமையற்கட்டிலிருந்து வெளியே வந்தாள் என் தாய்.

    “பரவால மா. இன்னிக்கி எங்க கம்பெனி கஸ்டமர்ஸ் ரெண்டு பேரு     அமெரிக்காலர்ந்து வராங்களாம். ஏர்போர்டுக்கு போயி கூட்டினு போணும். கம்பெனி காரு சாவிய வேற நைட் ட்யூடி பாத்த இன்னோரு டிரைவர் மறந்து வீட்டுக்கு எடுத்துனு போயிட்டானாம். அவன் வீட்டுக்கு வேற போணும். நான் மத்தியானம் ஹோடல்லயே சாப்டுக்கறேன்.” என்று கூறிவிட்டு எனது ஷூவை துடைத்து மாட்டிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன்.

    “பால் சுத்தமா இல்ல. முருகன் கடைல டீயாச்சும் குடிச்சிட்டு போடா. வெறும் வயித்துல போகாத.”

    “சரிம்மா. ஆமா, செல்விக்கு இன்னக்கி காலேஜ் இல்லையா? இன்னும் தூங்கினே இருக்குது.”

    ” அட போடா! ஒன்னும் தெரியாத மாரி கேக்கற. ஏந்தான் அவள நீ அந்த காலேஜில சேத்துவுட்டியோ? அப்பப்போ காசு கேட்டு ராவடி பண்றானுங்க. காலேஜி பீசு கட்டணும்னு அவ மூஞ்ச உம்முன்னு வெச்சிணு கிறா. நீயும் கம்முனு கீற. கொஞ்சம் எதனா பண்ணமுடியுமா பாரு. கட்டற தேதி முடிஞ்சி ஒன்ற மாசம் ஆகுது.”

    “நான் என்னா மா பண்றது? எங்க போறது? நான் என்னா யார்கிட்டயும் கேக்காமையா இருக்கேன்?”

    “இல்லாட்டி பேசாம அவள நிறுத்திட்றா நீ. கல்யாணம் பண்ணி அனுப்பில்லாம். படிப்பும் வேணா! ஒரு எழவும் வேணா!” என்று கத்தினாள்.

    “மா, காலாங்காத்தால உன் கச்சேரிய ஆரம்பிக்காத. என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். சாயங்காலம் பேசிக்கலாம்.” என்று கடிந்து விட்டு அய்யப்பந்தாங்கல் பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தேன்.

    நல்லவேளையாக தாம்பரம் செல்லும் பேருந்து ஒன்று கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடிச்சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தேன். உட்கார இடம் கிடைத்ததில் சிறிது மகிழ்ச்சியடைந்தாலும், சற்று நேரத்திற்கு முன்பு என் தாயுடன் பேசியது நினைவுக்கு வரவே, மீண்டும் விசனம் வந்து என்னைத் தொற்றிக்கொண்டது.

    நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே என் தந்தை காலமாகிவிட்டார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு உறவுகள் தானாய் விலகிக்கொண்டன. எங்கே நாங்கள் அவர்களுக்கு பாரமாகி விடப் போகிறோமோ என்கிற (அ)நியாயமான பயம் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

    என் தாய் வீட்டுவேலை செய்ததில் கிடைத்த பணம் எங்கள் உணவிற்கே போதவில்லை என்பதால், என் படிப்பை நிறுத்திவிட்டு, என் தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் லாரி கிளீனராக என் வேலையைத் தொடங்கி, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று ஓட்டுநராகி விட்டேன்.

    கல்வி கற்க வேண்டும் என்கிற ஆவல் நிறைய இருந்தாலும், போதாமையால் இளம் வயதிலேயே இந்த வேலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். ஆனால், என் தங்கையை மட்டும் எப்பாடுபட்டேனும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்கிற வெறி அந்த வயதிலிருந்தே எனக்கு இருந்தது.

    அவளுடைய பள்ளிக்கல்வி வரை அதிக சிரமமில்லாமல் எங்களால் சமாளிக்க முடிந்தது. ஆனால், என்றைக்குக் கல்லூரிக்குப் போக ஆரம்பித்தாளோ அன்றைய நாளிலிருந்தே நிலைமை தலைகீழ் ஆகிப்போனது.

    இந்த இரண்டு வருடங்களில் நிறைய கடன்கள் வாங்கிவிட்டேன். மேலும் யாரிடம் கடன் கேட்கலாம் என்று எனக்குத் ரொம்பத் தெரிந்தவர்கள், சுமாராகத் தெரிந்தவர்கள், எங்களை விட்டு என்றோ விலகிப் போன உறவுகள் என்று இப்படி எல்லோரையும் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் சென்று கடன் கேட்டேன். சொல்லி வைத்தார் போல அனைவரிடமிருந்தும் ஒரேமாதிரியான பதில் வரும். இதற்கு மேல் கடன் கேட்க எனக்கு யாருமேயில்லை என்கிற நிலை.

    வீட்டிலும் இதற்கு மேல் விற்பதற்கு என்று எதுவுமே இல்லை. என்னுடைய ஓரே ஒரு சொத்தான பைக்கையும் விற்றுவிட்டேன். நான் பள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர வாசிக்கும் பழக்கம் அதிகமாய் இருந்ததால், தெருவோரக் கடைகளில் வாங்கிய புத்தகங்கள் மட்டும் வீட்டில் ஒரு மூலையில் இரண்டு மூட்டைகள் முழுக்க நிரம்பிக் கிடந்தது. அடுத்ததாக அவைகளைத்தான் விற்கவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் யார் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள்? தமது கதாநாயகர்களின் திரைப்படங்களின் ஆரம்ப நாள் அமர்க்களங்களுக்கு வேண்டுமானால் ஆயிரம், இரண்டாயிரம் இறைப்பார்கள்; குடம் குடமாக பால் வாங்கி அபிஷேகம் செய்வார்கள். புத்தகமாவது? வாங்குவதாவது?

    சரி, வீட்டையாவது விற்கலாமென்றால், புறம்போக்கு நிலத்தில் கட்டிய குடிசையை யார் வாங்குவார்கள்? இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் என்றைக்கு அந்த இடத்தை எங்களிடமிருந்து பறித்து, வீட்டை இடித்துத்தள்ளுமோ என்கிற எண்ணம் அவ்வப்போது எனக்குத் தோன்றி மிரட்டிப் பார்க்கிறது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சிறிய ‘கால் டாக்ஸி’ நிறுவனத்தில் ஆம்னி ஓட்டிக்கொண்டிருந்தேன். என் தங்கை பொறியியல் கல்லூரி சேர்ந்த சமயத்தில் கிட்டத்தட்ட எல்லா வங்கிகளுக்கும் சென்று கடன் கேட்டேன். எனது தற்காலிகப் பணியை காரணங்காட்டி எல்லா வங்கிகளுமே கடன் தர மறுத்து விட்டன.

    இதற்காகவே அரசாங்கத்திலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நல்ல நிறுவனத்திலோ ஓட்டுநராக வேலைக்குச் சேர வேண்டும் என்கிற வெறியோடு வேலை தேடியலைந்தேன்.

    கடன் வாங்குவதற்கானத் தகுதியை அடைவதற்காகவே ஒரு நல்ல வேலையை த் தேடிய முதல் ஆள் நானாகத் தானிருப்பேன்.

    எங்கள் கம்பெனி டாக்ஸியில் அடிக்கடி பயணித்த வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் எனக்கு ஓட்டுநராக வேலை கிடைத்தது. மாத ஊதியம் கொஞ்சம் குறைவாயிருந்தாலும், சேமநல நிதி, மருத்துவக் காப்பீடு, நன்றாக வேலை செய்வோருக்கு கூடுதல் ஊதியம் என்று நிறையச் சலுகைகள் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருந்தது.

    என் மேலதிகாரி வேணுகோபால் மிகவும் கண்டிப்பானவர். மற்ற ஓட்டுநர்களை விட என் மீது அவருக்கு ஒரு தனி அக்கறை உண்டு. எனக்கு இருக்கும் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தையும், எனது தமிழ் உச்சரிப்பையும் பாராட்டினாலும், ஆங்கிலம் நன்றாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று அடிக்கடி அறிவுரை வழங்குவார். என் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையினால் என்னை வங்கிக்குச் செல்வது, பொருட்கள் வாங்கி வருவது போன்ற மற்ற சில அலுவலகப் பணிகளையும் செய்யச் சொல்லுவார். நல்ல உடைகளை அணிந்து வரச்சொல்வார். அதனால் தான் இப்போதெல்லாம் நான் சட்டையை மடித்து விட்டுக் கொண்டு, ஷூவெல்லாம் அணிந்து கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மென்பொருள் வல்லுநரைப் போல அலுவலகத்திற்குச் செல்கிறேன். என்னையே எனக்கு இப்போதுதான் மிகவும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

    வார நாட்களில் இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு, வார ஈறுகளில், சொந்தமாகக் கார் வைத்திருக்கும் எனக்குத் தெரிந்த பழைய வாடிக்கையாளர்கள் சிலருக்கு கார் ஓட்டினேன். அதன்மூலம் சிறிது கூடுதல் வருமானம் கிடைத்தாலும், என் தங்கையின் கல்லூரிச் செலவுகளுக்கு அது போதுமானதாக இல்லை.

    போதிப்பது என்ன அவ்வளவு சிரமமான விஷயமா? பிறகு ஏன் இந்தக் கல்லூரிகள் இப்படி வசூல் வேட்டை நடத்துகின்றன? தரமான கல்வி ஏன் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது? என் தங்கையின் இந்த வருடக் கல்லூரி கட்டணத்தை எப்படிக் கட்டுவது? வேணுகோபால் சாரிடம் கேட்கலாமா? தருவாரா? நல்லவர்தான்! ஆனால் கண்டிப்பானவர் ஆயிற்றே? எப்போது திருப்பிக் கொடுப்பாய் என்று கேட்டால் என்ன சொல்வது? திருப்பிக் கொடுக்காவிட்டால் வேலைக்கே உலை வைத்துவிடுவார்களே?” என்று இப்படி ஏதேதோ கேள்விகளைத் தனக்குள்ளே கேட்டுக்கொண்டு சிந்தனையில் தொலைந்து போயிருந்த என்னை, தாம்பரம் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தது எம்.டி.சி பேருந்து எஸ் 166.

    மேற்கு தாம்பரத்திலிருந்த மற்றொரு ஓட்டுநரின் வீட்டிற்கு ஓட்டமாய் ஓடி, சாவியை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து நேராக அலுவலகத்திற்குச் சென்று காரை எடுத்துக்கொண்டு நான் விமான நிலையத்திற்குள் நுழையவும், எங்களுடைய அமெரிக்க கஸ்டமர்கள் வந்த விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது.

    அவர்களுடைய பெயர்கள் எழுதியிருந்த போர்டை கையில் வைத்துக்கொண்டு வருகைக்கூடத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

    இரண்டு மேல்நாட்டவர்கள் புன்னகைத்துக் கொண்டே என்னை நோக்கி வந்தார்கள். அவர்களாகத்தானிருக்கும் என்று யூகித்த சமயம், அவர்களில் ஒருவர், “ஆ யூ சி..ரி..நி.. வசன்?” என்று கேட்டார்.

    பெயரைச் சிறிது குழப்பி உச்சரித்தாலும், அவர்கள் எனது பெயரை  தெரிந்து வைத்திருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

    “எஸ் சார். ஐயாம் சீனிவாசன்!” என்று கூறிவிட்டு அவர்களிடமிருந்த கைவண்டியைப் பெற்றுக் கொண்டு,  கார் நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றேன்.

    சரியாக இருபது நிடங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள் வழக்கமாகத் தங்கும் ராடிசன் ஹோட்டலுக்கு அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தேன். சற்று நேரம் இளைப்பாறிவிட்டு, காலையுணவை முடித்துக் கொண்டு வந்த அவர்களுடன் அலுவலகத்திற்குக் கிளம்பினேன்.

    அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே காரை ஓட்டிச் சென்றேன். அது ஆங்கிலம் போலவே இருந்தாலும், பெரும்பாலான வார்த்தைகளும், விஷயங்களும் எனக்குப் புரியவே இல்லை. போக்குவரத்து நெரிசலைப் பற்றியும், ஒழுங்கீனமாக வண்டிகள் சென்று கொண்டிருப்பதைப் பற்றியும் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பது போலத் தெரிந்தது. ஒருவேளை என் தங்கைக்கு இவர்கள் பேசுவது நன்றாகப் புரியும் என்று நினைத்துக் கொண்டபோது, அவளின் கல்லூரி கட்டணமும் சேர்ந்து நினைவுக்கு வந்து வருத்தியது.

    முப்பது நிமிட ஓட்டத்திற்குப் பிறகு ஐ.டி நெடுஞ்சாலையில் இருந்த எங்கள் அலுவலகத்திற்கு சென்றடைந்தோம். காரிலிருந்து இறங்கிய அவர்கள், “யுவர் டிரைவிங் இஸ் ஆசம்! வெரி டிசிப்ளின்ட் டிரைவர்! ப்ரிசியேட் இட்!” என்று கூறிவிட்டு என்னிடம் கைகுலுக்கி வாழ்த்தினர்.

    “தாங்க்யூ சார்!” என்று கூறிய எனக்கு அவர்கள் பயன்படுத்திய சில வார்த்தைகளும், உச்சரிப்புகளும் புரியவில்லை என்றாலுங்கூட, அவற்றிலிருந்த உணர்வுகள் நன்றாகவே புரிந்தது.

    மாலை ஐந்து மணிக்கு வேணுகோபால் சாரிடமிருந்து எனது கைபேசிக்கு அழைப்பு வந்தது.

    “ஸ்ரீனி, ரிசெப்ஷனுக்கு கொஞ்சம் உடனே வா.”

    “இதோ வர்றேன் சார்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினேன்.

    வரவேற்பு கூடத்தில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது அந்த ஆறடி உயரம்.

    “ஸ்ரீனி, இன்னிக்கி ஒரு ஆறுமணிக்கு திரும்பவும் கஸ்டமர்ச ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகணும். நம்ம பாபு சாரும் கூட வருவார். அவர் டீம்லர்ந்து இருபது இருபத்தைஞ்சி பேர் கஸ்டமர்சோட டீம் ப ஃபே டின்னருக்குப் போறாங்க. டின்னர் முடியற வரைக்கும் நீ அங்க வெயிட் பண்ணிட்டு, அவங்க டீம்ல மூணு கேர்ல்ஸ மட்டும் அவங்க வீட்ல டிராப் பண்ணிட்டு போய்டு. ஒகே வா?”

    “ஒகே சார்.” என்று தலையாட்டிவிட்டு, சிறிது தயக்கத்துடன் அவரை அழைத்தேன், “சார்…”

    “என்னப்பா?”

    “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சார்..”

    “இப்போ கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு ஸ்ரீனி, நாளைக்கு மார்னிங் கண்டிப்பா பேசலாம்.” என்று கூறிவிட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வந்து, “ப்யூ மோர் திங்க்ஸ், ஸ்ரீனி. பாபு சார்கிட்ட டின்னர் முடிஞ்சப்புறம் ரெசீட் வாங்கிட்டு வந்து சைலஜா கிட்ட கொடுத்துடு. அப்புறம், நாளைக்கு மார்னிங் கஸ்டமர்ச கூட்டிட்டு நம்ம சிறுசேரி ஆபீஸ் வந்துடு! அவங்க ரொம்ப இம்பார்டன்ட் கஸ்டமர்ஸ். டிரைவ் பண்ணும்போது சும்மா போனெல்லாம் எடுத்து பேசிட்டு இருக்காதே! ஒகே?”

    “ஒகே சார். ஆனா, நான் டிரைவ் பண்ணும்போது எப்போவுமே போன சுட்ச் ஆப் பண்ணிடுவேன் சார்.” என்றேன்.

    “ஐ நோ யூ ஸ்ரீனி. பட் இட்ஸ் மை ட்யூட்டி டு வார்ன் யூ.” என்று கூறி என் தோள் மீது  தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றார்.

    சுமார் ஆறேகால் மணியளவில் பாபு அவர்களையும், அமெரிக்கர்களையும் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்குச் சென்று சேர்ந்த போது மணி ஏழு. அவர்கள் இறங்கிய பிறகு கதவுகளை மூடிவிட்டு மீண்டும் காருக்குள் அமரச் சென்றபோது, அவர்களில் ஒருவர், “ஹே, சி..ரி..நி, ஆ யூ நாட் ஜாய்னிங் அஸ்?” என்று கேட்டார்.

    இந்தக் கேள்வியே எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. வழக்கமாக விருந்து முடியும் வரை நான் வெளியேதான் காத்திருப்பேன்.

    “நோ சார். ஐயாம் ஈட் ஹோம்.” என்று எதோ எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் உளறினேன்.

    “நோ நோ! ப்ளீஸ் கம்! பேபு, ப்ளீஸ் ஆஸ்க் ஹிம் டு ஜாயின் அஸ்!”

    “ஸ்ரீனி, வாங்க. ப்ளீஸ். கஸ்டமர்ஸ் தப்பா நினைப்பாங்க!” என்று பாபு சார் வற்புறுத்தியதின் பேரில் அவர்களோடு விருந்திற்குச் சென்றேன்.

    என் வாழ்க்கையிலேயே அத்தனை உணவு வகைகளை நான் பார்த்ததே இல்லை. எங்களுடைய நீண்ட மேசையில், கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து பேர் அமர்ந்து இருந்தனர். எல்லோருமே குதூகலத்துடன் உணவுவகைகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டும், அலுவலகத்தில் அன்றாடம் நடக்கும் விஷயங்களைப் பற்றி உரையாடிக்கொண்டும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் உணவருந்திக் கொண்டிருந்தனர். அந்த அணியில் நிறைய பேரை எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும், அந்தச் சூழல் எனக்கு புதியது என்பதால் அங்கு அமர்வதற்கே சிறிது வெட்கமாக இருந்தது.

    அதிலும் இந்த மேசைக்கரண்டியையும், முள்கரண்டியையும் வைத்துக் கொண்டு எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ? முதலில் தட்டிலிருக்கும் உணவுக்கும் கரண்டிகளுக்கும் இடையே ஒரு பலத்த போராட்டம்; பிறகு, அதை வாயில் திணிப்பதற்கு ஒரு பகீரதப் பிரயத்தனம் என்று எனக்கு  எப்போதுதான் விருந்து முடியுமோ என்றாகி விட்டது.

    அத்தனை பெயர் தெரியா உணவு வகைகள் விதம் விதமாய் இருந்தாலும், எதையுமே திருப்தியாக ரசித்து ருசித்து உண்ண முடியவில்லை. எந்த வகையான உணவிற்கு எந்தக் கரண்டி, எதை வலது கையில் பிடிப்பது, எதை இடது கையில் பிடிப்பது என்று அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதற்குள் போதுமென்றாகி விட்டது. வெளியே எழுந்து சென்றால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்கிற பயம் வேறு இருந்ததால் தட்டையே குனிந்து பார்த்துக்கொண்டு, மெதுவாக உணவருந்திக் கொண்டிருந்தேன். இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும், கண்டிப்பாக வாழ்வில் ஒருமுறையாவது எனது தாயையும் தங்கையையும் அழைத்து வந்து இத்தனை உணவு வகைகளையும் காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் உதித்தது.

    ஒரு வழியாக விருந்து முடிந்தது. அனைவரது தட்டிலும் உணவு வகைகள் தொட்டும் தொடாமலும் இன்னும் நிறைய மீதமிருந்தது. பஃபே முறையில் அளவில்லா உணவு என்பதால் வீணடிப்பதில் தவறில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே வெளியே செல்ல நினைத்த போது, என்னுடைய புதிய வெள்ளைக்கார நண்பர்கள் சிரித்துக்கொண்டே என்னிடம் வந்து மீண்டும் கைகுலுக்கினார்கள்.

    இதெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருந்தது. என் அலுவலகத்தில் பணிபுரிபவர்களே இதுநாள் வரை  என்னிடம் கைகுலுக்கியெல்லாம் நட்பாகப் பேசியதில்லை. அவர்களிடம் மறுநாள் காலை எட்டு மணிக்கு வருவதாய் சொல்லி விடை பெற்றுக்கொண்டு வெளியே சென்றேன்.

    பாபு சார் என்னிடம் வந்து, “ஸ்ரீனி, இந்தாங்க ரெசிட். தென், அந்த கேர்ல்ஸ பத்திரமா வீட்ல ட்ராப் பண்ணிடுங்க!” என்று கூறிவிட்டு ஒரு கவரைத் தந்தார்.

    அதை வாங்கி காரில் வைத்துவிட்டு, அந்த மூன்று பெண்களையும் சென்னை நகரின் ஒவ்வொரு மூலையில் இருந்த அவர்களின் வீடுகளில் பாதுகாப்பாய் விட்டு விட்டு அலுவலகத்தில் நுழைந்த போது மணி பதினொன்று.

    காரிலிருந்து கீழே இறங்கும் போது அந்த வெள்ளைக் கவர் தென்பட்டது. நான் அலுவலகக் கவர்களை என்றுமே பிரித்துப் பார்த்ததேயில்லை. ஆனால், என் தாயையும் தங்கையையும் அது போன்ற விருந்திற்கு ஒருநாள் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஆதங்கம் மேலெழுந்ததால் பிரித்துப்  பார்த்தேன்.

    அதிர்ந்தே போனேன்.

    மொத்தச் செலவு 41000 ரூபாய் என்று இருந்தது. இருபத்தைந்து பேரின் இரவு உணவிற்கு நாற்பத்தியோராயிரமா??? நமக்கெதற்கு இதெல்லாம்? என்னுடைய குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்லவேண்டும் என்கிற கனவை அந்தக்கணமே தகர்த்து எறிந்துவிட்டேன்.

    அந்நேரத்திற்கு பேருந்து எதுவும் கிடைக்காததால், நடந்தே கிட்டத்தட்ட கிண்டிவரைச் சென்று விட்டேன். அங்கே எதிர்பட்ட ஷேர் ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி போரூர் வரைக்கும் அதில் சென்று, மீண்டும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. நள்ளிரவில் போரூர் ஏரியை பார்த்துக் கொண்டே நடப்பதில் எனக்கு ஒரு அலாதி இன்பம்.

    சில நிமிட நடையில் என் வீட்டுத் தெருமுனையைச் சென்றடைந்த போது, அங்கு வழக்கமான நாய் குரைப்புகளோடு சேர்ந்து ஒருவித சலசலப்பு இருப்பதை உணர முடிந்தது.

    அந்த இருட்டில் என் வீடு மங்கலாகத் தெரிந்தது.

    ஆனால்….

    அங்கு ஏன் அவ்வளவு கூட்டம்?

    நெஞ்சம் படபடத்தது. எனக்கு என்னவோ தவறாகப் பட்டது. இன்னும் அருகே சென்றபோது அங்கே ஒலித்துக்கொண்டிருந்த அழுகுரல்கள் மெள்ள மெள்ள என் காதுகளை வந்து நிரப்ப, என் இதயத்தில் கனம் ஏறிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. என் கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்து, எனது நடைச் சிறிது சிறிதாய் தளர்ந்தது.

    “அதோ சீனி வந்துட்டான்…..” என்று என்னைக் கண்டவுடன் என் நண்பன் துரை உரக்கக் கத்தினான்.

    அடுத்த நிமிடமே, உள்ளேயிருந்த என் தாய் தலைவிரிக் கோலத்தோடு, தலையிலும், மார்பிலும் அடித்துக்கொண்டும், “டேய்ய்ய்ய்ய் சீனி……..,” என்று கதறிக்கொண்டும் என்னருகே ஓடிவந்து என் சட்டையைப் பிடித்து இரு கன்னங்களிலும் அறைந்துவிட்டு, “எங்கடா போய்த் தொலைஞ்சே? எங்க போயி தொலைஞ்சே? செல்வி நம்மள விட்டுட்டு போய்ட்டா டா சீனீ….! அய்யோ! நான் இப்போ என்னடா பண்ணுவேன்?” என்று அவள் கதறி ஓலமிட்ட அந்த நொடி, என் இதயம் தடதடதடவென்று அதிர்ந்து கொண்டிருந்தது.

    எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்று கேட்கவும் வாயெழவில்லை. வீட்டிற்குச் சென்று என் தங்கையைப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை. என் மனம் உறைந்து போயிருந்தது. அப்படியே பிரமைப் பிடித்தவன் போல துரைமீது சாய்ந்து கிடந்தேன்.

    “எம் பொண்ண நானே கொன்னுட்டேன். நானே கொன்னுட்டேன்.” என்ற என் தாயின் கதறல்கள் என் நெஞ்சைத் தைத்துக்கொண்டே இருக்க, துரை சொல்லிக்கொண்டிருந்த எல்லா விஷயங்களும் மெல்லியதாக என் செவிகளுக்குள் சென்று கொண்டிருந்தது.

    “பீஸ் கட்டாட்டி காலேஜுக்கு வராதேனு சொல்லிட்டாங்களாம் டா பாவிப்பசங்க. வகுப்பறைல இவ பேர மட்டும் படிச்சாங்களாம். சாயங்காலம் ரொம்ப அழுதிருக்கா. அம்மா சும்மா இல்லாம, கன்னா பின்னானு திட்டிட்டு, வேலை பாக்கற எடத்துல பணம் கேக்க போனாளாம். வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆயிடிச்சி போல. அதுக்குள்ற மருந்து நெறைய குடிச்சிட்டா டா. இவள என்ன பண்ண? உனக்கு போன் பண்ணோம். சுட்ச் ஆபுல இருந்துச்சி. வேற யாரு நம்பரும் தெரில. ராமச்சந்திரா ஆஸ்பிடலுக்குப் போறதுக்குள்றயே போய்ட்டா டா.” என்று மெதுவாகக் கூறிவிட்டு, “இந்தா அவ எழுதன லெட்டர்.”

    நடுநடுங்கிக்கொண்டிருந்த என் கைகளில் அந்தக் கடிதத்தைத் திணித்தான் துரை. மெதுவாக அந்தக் கடிதத்தை திறந்து பார்த்தேன்.

    “அன்புள்ள அண்ணா, தன்னலமில்லாமல் இதுவரை நீ செய்த…….” – வாசிக்க ஆரம்பித்த போதே மூச்சு த் திணறியது. அதற்கு மேல் படிக்கத் தோன்றவில்லை. கடிதத்தோடு வேறொரு தாளும் இருந்தது. அதில் அவளுடைய அந்த வருட கல்லூரி கல்வி கட்டண விவரங்கள் இருந்தன.

    அந்த வருட மொத்த கல்லூரி கட்டணம் –

    41000 ரூபாய்.

    Share
  • என் இனிய சக இந்தியனே…

    மாதவன் இளங்கோ

    கவிதைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு:

    ஒவ்வொருநாளும் நம் சக இந்தியச் சகோதரனால் நாம் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம், நம்முடைய செயல்களால் மற்ற சகோதரர்கள்/ சகோதரிகள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று பட்டியலிட எத்தனித்தபோது, அந்தப் பட்டியல் ஒரு கவிதையாக உருவெடுத்தது. இதைக் கவிதை என்றுகூட நான் அழைக்க விரும்பவில்லை. நம் எல்லோருடைய ‘உள்ளக்குமுறல்களின் ஒருங்கிணைந்த பதிவு’ என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

    என் இனிய சக இந்தியனே,

    பிறப்பு சான்றிதழுக்குப்

    பின்தலை சொறிந்துகொண்டே

    கையூட்டு கேட்டாய்

    கொடுத்துத் தொலைத்தேன்!

    இறப்பு சான்றிதழுக்கு

    இரண்டு மடங்கு

    அதிகமாய்க் கேட்டாய்

    அதையும் அளந்தேன் அழுதுகொண்டே!

    உள்ளாட்சித் தேர்தலின்போது

    உடையும் பணமும் தந்தாய்

    கடமைக்குக் காசெதற்கென்று

    திடமாய் நான் மறுத்தேன்!

    ஆட்சிக்கு அமர்த்தினோம்

    ஆட்டிப் படைத்தாய்;

    அடக்குமுறை செய்தாய்

    அடங்கி ஒடுங்கியே போனேன்!

    பட்டம் பெற்றேன், தகுதித்தேர்வில்

    வெற்றியும்  பெற்றேன் – வேறென்ன?

    எனக்குப் பாதி, ஆளும் மந்திரிக்கு மீதியென்றாய்

    தனியார் பணியில் தஞ்சம் புகுந்தேன்!

    இரத்தம் சுண்டி நானீன்ற பணத்தை

    இரக்கமின்றி நீ தின்றாய்

    இருந்தும் செலுத்தினேன்

    முறையாய் வரியை!

    ஏழ்மையைக் காட்டியுன்

    இனியமகள் கல்விபயில

    பள்ளிக்கு வருவதை நிறுத்தினாய்

    வருந்தியே கவனித்தேன்!

    ஆனாலுன் தலைவனவன் திரைப்படத்தின்

    ஆரம்பநாள் அமர்க்களங்களுக்கு

    இறைத்தாய் நீ இரண்டு மூன்றாயிரம்

    புரியாமல் தவித்தேன்!

    நான் செல்லும் பாதையிலே

    சிறுநீர் கழித்தாய்; குப்பைகள் போட்டாய்;

    சிந்தினாய்; துப்பினாய்

    அத்தனையும் சகித்தேன்!

    சாலைவிதிகளைக் கடைபிடித்து

    சிவப்பிற்கு முன்வரும் மஞ்சளுக்கு நின்றேன்

    அநாகரிகமாய்  வசைபாடினாய்

    அமைதி காத்தேன்!

    நான் கற்ற நன்னெறிகள்

    நானூற்றில் நான்கைந்துகூட

    பின்பற்ற முடியாமற் செய்தாய்

    பொறுமை காத்தேன்!

    படித்தவனாய்  இருந்தும்,

    பாதகா, கிராதகா, நீ

    பெண்சிசுக்கொலை செய்தாய்

    பனியாய் உறைந்தேன்!

    ‘மதம்’ பிடித்துப் போனதால்

    உன்னை அவன் அடித்தான்

    அவனை நீ கொன்றாய்!

    இருவருக்கும் அழுதேன், துடித்தேன்!

    பேருந்து ஓட்டுகையில்

    கைபேசியில் காதல் பேசி – கவனம்சிதறிப்

    பலபல கொலைகள் செய்தாய்

    பொறுப்பின்மையைக் கண்டு மனம் கொந்தளித்தேன்!!

    பிள்ளைகள் – எம் பிஞ்சுகள் செல்லும்

    பள்ளி வாகனங்களையே

    எமவாகனங்களாய் மாற்றிக்காட்டினாய்

    எதிர்த்துக் குரல் கொடுத்தேன்!

    வறுமை வாழ்வில் வளம்சேர்க்க

    நகரம் வந்தவென் அன்புத் தங்கையை

    வன்புணர்ந்தாய்; சிதைத்தாய்; பின் வீசினாய்

    மரித்தே போனாள் மலர் போன்றாள்!

    போராட்டம் எனும் பெயரில்

    பொதுச் சொத்துக்களைச் சிதைத்தாய்

    சிரித்தாய்ப் பின் குதித்தாய்

    சிந்தித்தேன் பின் மௌனித்தேன்!

    புதைச்சாக்கடை வாயிற்புழைகளுக்கு வழிகாண்போம்

    மழலைகள் மரிக்கின்றன என்றேன்

    விமானநிலையங்களை சீரமைக்கக் கோடிகளை வீசினாய்

    முன்னுரிமைகளைக் கண்டுக் கொதிப்படைந்தேன்!

    வீடு வாங்க வந்தேன்,

    வெள்ளைப் பாதி, கறுப்புப் பாதி

    வேண்டுமென்றாய்; தந்தால்தான் வீடென்றாய்

    வேண்டாம் வீடென விட்டொழித்தேன்!

    மக்களுக்கு வேலையில்லை, வாழ வழியில்லை,

    அடிப்படை வசதிகளில்லை என்றேன்

    விரைவிலே வல்லரசாவோமென்று வாயிலே வடைசுட்டாய்

    பேசுவதே வீணென்று விட்டுவிட்டேன்!

    இதை செய்வோம் அதை செய்வோம்

    சாதிப்போம் பின் போதிப்போம் என்றேன்,

    மேடைபோட்டு முன்னோர் புகழ்பாடிக் காலங்கடத்தினாய்

    வெறுத்துப்போய் ஒதுங்கிக் கொண்டேன்!

    ஐரோப்பியரைப் பாரேன்றேன்!

    ஐயா! தாய்மொழியைக் கொண்டே தழைப்போமென்றேன்

    ஆங்கிலத்தில் அசிங்கமாய் வசவுகள் வீசினாய்

    அமைதியாய் குமுறினேன்!

    சினிமா பின்னால் ஒருகூட்டம்

    கிரிக்கெட் பின்னால் மறுகூட்டம்

    அரசியல் பின்னால் தெருக்கூட்டம்

    இம்மூன்றின் பின்னால் ஊடகக் கூட்டம்!

    இலக்கியம் பல படைத்த இந்தியன் எங்கே!

    அறிவியல், சிற்பம், வானவியல், கணிதம் என

    அனைத்தும் கண்ட அவன் எங்கே?

    அன்பு, பண்பு, அறம், மறம் 

    இவையெல்லாம்தான் எங்கே?

    எதுவும் இன்றி எல்லாம் கண்டவன் 

    எல்லாமிருந்தும் செய்யாதிருக்கும் 

    நிலை ஏனோ?

    வந்தான் பாரதி மீசை முறுக்கியபடி,

    தொடர்ந்தான் முண்டாசை கழற்றி உதறியபடி,

    “‘நெஞ்சு பொறுக்குதிலையே

    இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்!’

    அன்றே பகர்ந்தேன் புரியலையோ?

    அறிவில்லையோ?

    நெஞ்சில் உரமுமில்லையடா,

    நேர்மை சிறிதுமில்லையடா,

    வஞ்சனை சொல்வாரடா,

    வாய்ச்சொல்லில் வீரரடா!

    நீ புறப்படடா!

    உலகெலாம் நம் புகழ் பரப்படா!

    நிலையாய், நீர்நிலையாய்,

    குளமாய் நீ இராதேடா!

    துர்நாற்றம் வீசுமடா

    ஓடும் ஓடையாய் மாறடா!

    ஓடடா! ஓடடா! ஓடடா!!”

    வந்தோம் ஓடி வெளிநாடு!

    வாவென்றது வளநாடு!

    கடுமையாய் உழைத்தோம் திறமோடு!

    மேலை நாட்டவர் பார்த்தனர் மதிப்போடு!

    நிமிர்ந்தோம் இந்தியர் இறுமாப்போடு!

    என்று மாறும் எம் திருநாடு?

    வாழ்கிறோம் இன்று ஏக்கமோடு!

    எம்மைப்போல் ஏங்குபவர்

    எத்தனை பேர்?

    எத்தனையோ பேர்!

    இருப்பது எங்கோ வென்றாலும்,

    இதயத்தால் என்றுமே இந்தியர்கள்!

    இதயத்திலும் என்றுமே இந்தியாதான்!

    சுழியைக் கண்டோம்!

    எண்ணத் தவறினோம்!

    மேல்நாட்டவரோ,

    சுழியோடு ஒன்றையும் சேர்த்து,

    கணிப்பொறியாக்கினர்!

    அதையே கற்றறிந்து – அவர்கள்

    திருடிச் சென்றதை,

    திரும்பப் பெறவே வந்தோம்!

    களவாடப்பட்ட நம்

    கோஹினூர் வைரங்கள்

    அந்நியச் செலாவணி வழியாயும்,

    அந்நிய முதலீடுகள் வழியாயும்,

    திரும்பப் பெறவே வந்தோம்!

    பெறவும் செய்தோம்!

    ஆனால்…

    நம் சக இந்தியர் 

    அடித்துச்சென்ற கொள்ளைப்பணத்தை – 

    அந்தக் கறுப்புப்பணத்தை

    எப்படிப் பெறுவோம்?

    எங்கே செல்வோம்?

    மாற்றம் வருமா?

    வரும்!

    மாறுவோம்.. மாற்றுவோம்..

    Share
  • அம்மாவின் தேன்குழல்

    மாதவன் இளங்கோ 

    அன்று காலை ப்ருசெல்ஸ் (Brussels) விமான நிலையத்தில் நான் சென்ற விமானம் தரையிறங்கி சில நிமிடங்கள்தான் ஆகி இருந்தது.

    என் வேலையே ஊர் ஊராகச் சுற்றுவதுதான். ஆரம்பத்தில் என்னவோ அது கவர்ச்சியாகவும், சுவாரசியமாகவும்தான் இருந்தது. இப்போதெல்லாம் விமானப் பயணத்தையும், விமான நிலையங்களையும் நினைத்தாலே எரிச்சலும், தலைவலியும் வந்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், சென்னையில் வீட்டிலிருந்து கிளம்பி, வெளிநாடு வந்து சேர்ந்து, விடுதி அறைக்குள் நுழைவதற்குள் (door-to-door) நடப்பவைகள் எல்லாமே ஒரு கெட்டகனவு போலவே தோன்றுகிறது. ஏன்தான் இந்த ‘உலகம் சுற்றும் வாலிபப் பணியை தேர்ந்தெடுத்துத் தொலைத்தோமோ?’ என்று என்னையே நான்  அறைந்துகொள்ளவேண்டும் என்று பலசமயம் தோன்றும்.

    ஆனால் அந்தமுறை அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஏனென்றால், நீண்ட நாளைக்குப் பிறகு என் கல்லூரித் தோழன் கிருஷ்ணமூர்த்தியை சந்திக்கப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் இருந்தேன். அவனை அதற்கு முன்பு கடைசியாகக் கோயமுத்தூரில் நண்பன் ஒருவனின் திருமணத்தில் சந்தித்தது என்று நினைக்கிறேன். அவனும் பெல்ஜியம் சென்று நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன.

    ப்ருசெல்ஸ் நகரம் எனக்கு ஒன்றும் புதியது அல்ல; ஆறு வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறேன். அப்போதெல்லாம், சென்னையிலிருந்து ப்ருசெல்சிற்கு நேரடி விமானம் கிடையாது; பிராங்க்பர்ட் (Frankfurt) நகரம் சென்று, மாற்றுப்பயணியர் ஓய்வறையில் நான்கு மணிநேரம் காத்திருந்து விட்டு, வேறு விமானம் மாறிச் செல்ல வேண்டும். நல்ல வேளை – அந்தமுறை அந்தத் தொல்லை இல்லை. நான் சென்றது ஒரு நேரடி விமானம்.

    பத்து மணிநேர விமான பயணத்தில் சரியாகத் தூக்கமே வரவில்லை. ஒரு தமிழ், ஒரு ஆங்கிலம், ஒரு இந்தி என தலா மூன்று திரைப்படங்களைப் பார்த்துவிட்டேன். மூன்றரை என்று கூடச் சொல்லலாம். ஏனென்றால், அந்த இந்திப்படத்தை ஏன்தான் பார்த்தோம் என்றாகி, பாதியில் நிறுத்திவிட்டுத் தூங்கிவிட்டேன்.

    குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகளை எல்லாம் விரைவாக முடித்துவிட்டு, என் மூட்டை முடிச்சுகளைத் தூக்கி தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு, வருகைக்கூடத்திற்குள் நுழைந்தேன்.

    “கார்த்திக் ….” என்று சற்று உரக்கவே ஒலித்தது கிருஷ்ணமூர்த்தியின் குரல். இடது புறம் திரும்பிப் பார்த்தால், வெள்ளைக்காரர்களுக்கு நடுவே ஒரு மாநிற முகம் புன்னகையுடன் கையசைத்துக்கொண்டிருந்தது. நிச்சயம் அவனேதான்.

    ஓடிச்சென்று கைகுலுக்கினேன்.

    “ஹே கிருஷ்ணா! எப்படிடா இருக்கே?”

    ‘என்னடா மச்சான் எப்படி இருக்கே’ என்று கேட்டுவிட்டு அணைக்கலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால், இந்தப் பன்னிரண்டு வருட இடைவெளியும், முன்தலை வழுக்கை விழுந்து முற்றிலும் மாறிப்போயிருந்த அவன் தோற்றமும் ஏனோ தடுத்துவிட்டது.

    “என்னடா கார்த்திக், ஆளே மாறிப்போயிட்டே?” என்று கேட்டான்.

    “நானும் அதத்தான் கேட்கணும்னு நெனெச்சேன். நீ முந்திகிட்ட! ஆள் அடையாளமே தெரியலடா. நீமட்டும் என்ன கூப்பிடாம இருந்தா உன்ன கண்டே பிடிச்சிருக்க மாட்டேன்.”

    “என்னடா பண்றது. இங்க வாட்டர் ஹார்ட்னெஸ்  சித்த அதிகம். அதனால முடியெல்லாம் கொட்டிப்போயிடுத்து. பத்தாக்குறைக்கு இந்த ஊரு பட்டரும், பீரும் கொஞ்சம் உடம்ப கூட்டிடுத்து!!”

    “பீர் வேறையா? இது எப்போ இருந்து?”

    “அப்கோர்ஸ்! பெல்ஜியம் வந்துட்டு யாராச்சும் பீர் குடிக்காம இருப்பாளா? சரி வா போயிண்டே பேசலாம்.”

    வருகைக்கூடத்தை விட்டு வெளியே வந்த அடுத்த நொடி, சில்லென்று குளிர்காற்று வந்து மோதி என் உடம்பை சிலிர்க்கச் செய்தது.

    “ஊ………. ஐ கேன் பீல் ஈரோப் நவ்!” என்று சொன்னேன்.

    “ஹலோ, இப்போ இங்க சம்மர் தெரியுமோ? இதுக்கே சிலுத்துண்டா, வின்டர்லல்லாம் வந்தா நீ என்னடா பண்ணுவ?”

    “சம்மரா? சென்னைல வின்டர்கூட இவ்ளோ குளிராது மச்சி!”

    “ஐயையோ! சென்னைய பத்தி மட்டும் பேசாதடாப்பா சாமி! கேட்டாலே பயமா இருக்கு.”

    அவன் கூறியதைக்கேட்டுச் சிரித்தாலும், எனக்கு உள்ளுக்குள் சற்று எரிச்சல் உண்டாகியது.

    வெளிநாட்டவர்கள் கூட இப்படி பேசமாட்டார்கள். ஆனால், ஒரு மூன்று, நான்கு வருடம் வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு, விடுமுறைக்கு வரும் நம் மக்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே? என்னவோ, இந்தியாவிற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதது போலவும், நாமெல்லாம் இங்கு ஏதோ பரிதாபமானதொரு வாழ்க்கையை   வாழ்ந்து கொண்டிருப்பது போலவும் பேசுவார்கள். இது போன்ற மனிதர்களைக் கண்டாலே எனக்கு எரிச்சல் வந்து விடுவது உண்டு.

    இப்படி ஏதேதோ உரையாடிக்கொண்டே அவனது காரை வந்தடைந்தோம்.

    “ஹே, ஆடி ஏ சிக்ஸ் (Audi A6)! கலக்கு மச்சி. யு நெவெர் மெயில்ட் மீ அபௌட் திஸ்!”

    “ஆமாண்டா. வந்த புதிசுல வோல்க்ஸ் வேகன் பசாட் வாங்கினேன். ஆடி மேல ரொம்ப நாளா ஒரு கண்ணு. வாங்கி எயிட் மந்த்ஸ் தான் ஆகுது.”

    ‘மோட்டார் வே’ எனப்படும் குறுக்கு சாலைகளற்ற, அதிவேக போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்தது கிருஷ்ணாவின் ஆடி.

    யாரோ பெருக்கிவிட்டுப் பின்  தண்ணீரால் துடைத்தெடுத்தது போல் காணப்படும் அந்த ரப்பர் சாலைகளையும், அதன் தரத்தையும், நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் விரிந்துகிடந்த பச்சைப் புல்வெளிகளையும், விதிகளை மதித்துச் செல்லும் வாகனங்களையும்  பார்க்கும் போது அவர்கள் அப்படி கர்வப்பட்டுக் கொள்வதிலும், நம்மை பரிதாபமாகப் பார்ப்பதிலும்கூட ஒரு நியாயம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.

    “கார்த்தி, பர்ஸ்ட் என் வீட்டுக்கு போயிட்டு, ப்ரேக்பாஸ்ட், லஞ்செல்லாம், முடிச்சிட்டு, கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு, அப்புறம் ஈவினிங்கா லூவன்ல (Leuven) இருக்கற உன் ஹோட்டல் ரூமுக்கு போகலாம்!”

    “ஒகே டா. யு ஆர் மை பாஸ் டுடே!  ஆமா , உன் வீடு எங்க இருக்கு?”

    “என் வீடு ப்ருசெல்சுக்கும், லூவனுக்கும் நடுவுல டெர்வூரன்-ங்கிற  (tervuren) ஒரு ஸ்மால் டவுன்ல இருக்கு. மொதல்ல லூவன்ல தான் இருந்தேன். என்னோட பையன ஒரு பிரிட்டிஷ் ஸ்கூல்ல சேர்க்கறதுக்காக இங்க வந்துட்டேன். எக்ஸ்பென்சிவ் தான் – பத்தாயிரம் ஈரோஸ் பெர் இயர்! பரவால.  ஐ டோன்ட் மைண்ட் த்ரோவிங் மனி பார் மை சன்!”

    “வாட்ட்ட்ட்??? பத்தாயிரம் ஈரோஸா? அப்ராக்சிமேட்லி, ஒரு வருஷத்துக்கு ஏழு லட்சம் ரூபா!!!! அம்மாடி!!!”

    “காச சேர்த்து என்னடா பண்ண போறோம். எல்லாம் என் பையனுக்காகத் தானே!”

    “அது கரெக்ட். எஜுகேஷன் ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் பார் தி கிட்ஸ்!”

    காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தோம். அது ஒரு அழகான வீடு. மூன்று பேருக்கு கொஞ்சம் பெரிய வீடு என்று கூடச் சொல்லலாம். கிருஷ்ணாவின் மனைவி வித்யா  மிக நேர்த்தியாக வீட்டை பராமரித்து வைத்திருந்தாள். அது அவளுடைய பொழுதுபோக்கு என்று கிருஷ்ணா கூறினான்.

    கிருஷ்ணாவின் குழந்தை சிரேஷின் அறிவு என்னை பிரமிக்கச் செய்தது. மூன்றரை வயதேயான அவன் அவ்வளவு செம்மையாக ஐபாடை (iPad) உபயோகித்த விதம் என்னை பிரம்மிக்கச் செய்தது. ஆனால் ஒன்று, அவனுக்குத் தமிழே பேசத் தெரியவில்லை.

    அவனுக்காகவே ஒரு பெரிய டாய் ரூம் (Toy Room) ஒன்றை செய்து கொடுத்திருந்தான் கிருஷ்ணா. அவ்வளவு பொம்மைகள் நம் ஊரில் ஒரு கடையில் கூட இருக்காது.

    அவன் வீட்டில் இதற்கு மேல் வாங்குவதற்கென்று ஒன்றும் இல்லை என்றுகூடச்  சொல்லலாம். அந்த அளவிற்கு ஆடம்பரமான வாழ்க்கையாக எனக்குப்பட்டாலும், தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்த  என் நண்பன் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

    “வீடு நல்லாயிருக்குடா கிருஷ்ணா” என்று கூறிக்கொண்டிருந்தபோதே அவன் மனைவி, “க்ரிஸ் (Kris), பிரான்சிஸ் ஆன் தி லைன்” என்று கூறி கைப்பேசியை அவனிடம் கொடுத்தாள்.

    “க்ரிஸ் ஹியர்…” என்று யாரிடமோ சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். கிருஷ்ணமூர்த்தி – க்ரிஸ் ஆக மாறி இருந்தது. பரவாயில்லை, உடம்பு பெருத்துவிட்டிருந்தாலும் பெயராவது குறுகியிருக்கிறதே என்று நினைத்தபோது சிரிப்பு வந்தது.

    “சாரிடா கார்த்திக். ரியல் எஸ்டேட் ஏஜென்ட் போன் பண்ணினான். ஒரு வீடு ஒன்னு இந்த ஏரியால பாத்துண்டு இருக்கேன்”

    “இந்த வீடே சூபெர்பா  இருக்கேடா!”

    “இல்லடா, கொஞ்சம் பிக்கர் ஹவுஸ் வித் கார்டனோட வாங்கணுங்கறது எங்க ரெண்டு பேரோட ரொம்ப நாள் ட்ரீம். வித்யா கூட இப்போ கார்டன் ஆர்கிடெக்ட் கோர்ஸ் பண்ணிண்டு இருக்கா.”

    “சூப்பெர்டா! ஆல் த பெஸ்ட்!”

    பகல் நேரங்களில் என்னுடைய வேலை, மாலை நேரங்களில் கிருஷ்ணா – மன்னிக்கவும் – க்ரிஸ் வீட்டிலும் என்று இரண்டு வாரங்கள் ஓடியதே தெரியவில்லை. இதற்கு நடுவே, க்ரிஸ் ஒரு மூன்று நான்கு வீடுகளைப் பார்த்துவிட்டு, காற்றோற்றம் இல்லை, தோட்டம் பெரிதாக இல்லை என்று மறுத்து விட்டான்.

    நான் புறப்படுவதற்கு முந்தைய இரவு, நீண்ட நேரம் அவன் வீட்டில்  அளவளாவிக்கொண்டிருந்தோம்.

    “அடுத்த மாசம் கண்டிப்பா திரும்பவும் வர்ற மாதிரி இருக்குடா..”

    “தட்ஸ் க்ரேட்! அப்போ உங்களுக்கு ஒரு பெரிய லிஸ்ட் கொடுக்கறேன்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் வித்யா.

    ” கண்டிப்பா வித்யா. இட்ஸ் மை ப்ளஷர். ஹே கிருஷ்ணா, கேக்கணும்னு நெனெச்சேன். அம்மா இப்போ தஞ்சாவூர்லையா இருக்காங்க?”

    “இல்லடா, சென்னைல தான்! நான் கூட உன்கிட்ட சாக்லேட்ஸ் வாங்கித் தரணும்னு நெனெச்சேன் மறந்தே போயிடுத்து. டேம்!!! போயி குயிக்கா வாங்கிண்டு வந்துடவா?”

    “இப்போ டைம் நைன் ஆயிடுத்து. ஷாப்ஸ் எல்லாம் க்ளோஸ் பண்ணி இருப்பா. மே பி, கார்திக்க ஏர்போர்ட்-ல வாங்கிண்டு போகச் சொல்லலாம்” என்றாள் வித்யா.

    “ஆமான்டா. நான் ஏர்போர்ட்ல வாங்கிக்கிறேன். நீ அட்ரச மட்டும் கொடு” என்றேன்.

    “நாங்க இங்க வரும்போது அவ மந்தவெளிலதான் இருந்தா. இப்போதான் மயிலாப்பூர்ல வேற வீட்டுக்கு ஜாகை போயிட்டா. ஒன் செகண்ட், அட்ரெஸ் தரேன்.”.

    “அவங்க இங்க வரலையா?”

    “பெரியவாளுக்கெல்லாம் இந்த ஊரு சரிப்படாது டா. எங்கம்மா கோயில் கொளம்னு சுத்திண்டே இருப்பா. அவாளுக்கெல்லாம் இந்தியாதான் சரிப்படும். அடுத்த சம்மருக்கு  சும்மா கூட்டிண்டு வரலாமான்னு திங்க் பண்ணிண்டு இருக்கேன்.”

    அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. என்னதான் சுத்தமாகவும், கண்ணுக்கு அழகாகவும் தெரிந்தாலும், எப்போது பார்த்தாலும் எதோ ஊரடங்கு உத்தரவு போட்டது போலிருக்கும் அந்த அமைதி எனக்கே அச்சமூட்டியது. அங்கெல்லாம் ஒரு சுற்றுலா பயணியைப் போல பார்வையிடச் செல்லலாம், ரசிக்கலாம் – அவ்வளவுதான். ஆனால், அங்கேயே வாழ்வதை என்னாலெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

    கிருஷ்ணாவின் மனைவி தந்த  பட்டியலையும், அம்மாவின் முகவரியையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன்.

    மறுநாள் மறக்காமல் ப்ரெசெல்ஸ் ஏர்போர்ட்டில் அவனுடைய அம்மாவிற்கும் மட்டுமல்ல; என் குடும்பத்தினருக்கும் நிறைய சாக்கலேட்டுகளை வாங்கிக்கொண்டேன். உலகிலேயே அதிக அளவில் சாக்கலேட்டுகளை விற்கும் இடமாயிற்றே. விடுவேனா?

    இந்தியாவிற்கு வந்து ஆறு நாட்களாகி விட்டது. கிருஷ்ணாவின் தாயாரின் நினைவு வந்தது. சென்னை வெயிலுக்கு பெல்ஜியம் சாக்கலேட்டுகள் நீண்ட நாளைக்குத் தாங்காது – உருகி ஓடி விடும். பத்தாக்குறைக்கு மின்சாரப் பிரச்சினை வேறு. அதனால், காரை எடுத்துக்கொண்டு மயிலாப்பூருக்குக் கிளம்பினேன்.

    ஆர்.கே மட் சாலை வழியாக சென்று, தெப்பக்குளம் கடந்து வலது புறம் திரும்பி, காரை நிறுத்திவிட்டு, அங்கே இருக்கும் கடையில் முகவரியை காண்பித்தேன்.

    “சார், இதுக்கு சித்திரக்குளம் எல்லாம் தாண்டி போகனும் சார். கார்லல்லாம் போக முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க. சன்னதி தெருவுக்கா போயி கார நிப்பாட்டிட்டு, நடந்து போயிருங்க.”

    “ரொம்ப தேங்க்ஸ்!”

    காரை ஒட்டிக்கொண்டு போய், கோயிலுக்கு எதிரேயுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, சித்திரக்குளம் நோக்கி நடந்தேன்.

    ஒரு சில மணித்துளிகளில் அவன் தாயார் இருக்கும் தெருவை வந்தடைந்தேன். மிகமிகக் குறுகிய தெரு. காற்றோட்டமோ, வெளிச்சமோ வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் தோன்றியது. மேலும், அந்தத் தெருவில் இருந்த அத்தனை வீடுகளுமே ஏதோ போன நூற்றாண்டின் பாதியில் கட்டிய வீடுகளைப் போல் அழுக்குடனும், பராமரிப்பில்லாமலும் காட்சியளித்தன.

    நிஜமாகவே அந்தத் தெருதானா என்று எனக்குச் சந்தேகமே வந்துவிட்டது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு சென்ற ஒருவரிடம் முகவரியைக் காண்பித்துக் கேட்டேன்.

    “இந்த தெருவே தான்!”

    “பாலம்பாள் வீடு எதுன்னு தெரியுங்களா?” என்று கேட்டேன்.

    “பாலா மாமிய சொல்ரேள்னு நெனைக்கிறேன். அதோ அந்த கடைசி வீட்டுக்கு முந்தன வீடு” என்று வீட்டை காண்பித்தார்.

    நான் அவர் காட்டிய அந்த வீட்டிற்கு அருகே சென்றேன். அந்தத் தெருவிலேயே மிகவும் சிதிலமடைந்த வீடு அதுவாகத்தான் இருக்கும். வீடு பூட்டி இருந்தது. எனக்கு நிஜமாகவே அவர் அங்குதான் இருப்பார் என்று தோன்றவில்லை.

    என்னைக்கடந்து போன பெண்மணி, “ஆர பாக்க வந்தேள்?” என்று கேட்டார்.

    “பாலா மாமி”

    “இன்னைக்கு பிரதோஷம். மாமி அநேகமா கோயிலுக்குத்தான்  போயிருப்பா. சித்த நாழி இங்கேயே இருங்கோ. இல்லேனா கோயிலுக்கு போயி பாருங்கோளேன்.”

    “இல்ல.. இல்ல.. நான் இங்கயே வெயிட் பண்றேன்.”

    அந்தத் தெருவில் நின்றிருந்த ஒரு பழைய சைக்கிள் மேல் ஏறி அமர்ந்தேன். என் மனதில் பெல்ஜியமும், கிருஷ்ணாவின் வீடும், அவன் பேச்சுக்களும்  ஒன்றடுத்தொன்றாக நினைவுக்கு வந்தன. அந்தத் இருட்டுத் தெருவை திரும்பவும் வலதும், இடதுமாய்த் திரும்பிப் பார்த்தேன்.

    தெரு மூலையில் ஒரு வயதான பெண்மணி நுழைவது தெரிந்தது. இது அவராக இருக்குமோ? இருக்காது. அவரை ஓரிரண்டு முறை  கல்லூரி நாட்களில் பார்த்திருக்கிறேன். கல்லூரி விடுதியில் தங்கி இருந்த நாட்களில், கிருஷ்ணா தஞ்சாவூருக்கு சென்றுவிட்டு வந்தாலே எங்களுக்குக் குதூகலம் தான். அவ்வளவு இனிப்புகளும், கார வகைகளும் கொண்டு வருவான். அவ்வளவும் அவன் அம்மா வீட்டிலேயே செய்து கொடுத்தது. அவரை வைத்து ஒரு பலகாரக்கடையே ஆரம்பிக்கலாமென்று அவனை கிண்டல் செய்வோம். அதுவும் அவரின் தேன்குழல் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

    அவரா இவர்? இருக்கலாம். அவர் என்னை நோக்கி நடந்து வர, நான் அவரைக் கூர்ந்து கவனித்தேன். அவரது மேனி ஒடுங்கிப் போயிருந்தது. கடைசியாகக் கல்லூரி விடுதியில் அவரைப் பார்த்தது இன்னமும் நினைவிலிருந்தது. ஒளிபொருந்திய அந்த முகம் ஏனோ அன்று வாடிக் கறுத்துப்போயிருந்தது.

    அவர் என்னைப் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் பூட்டிய கதவைத் திறக்க முற்பட்டார். அவர் என்னை மறந்திருக்கலாம் என்று தோன்றியது.

    “அம்மா”

    “ஆரு?”

    நிச்சயமாய் அவரே தான்! ஆனால் அந்தக் குரல் சிறிது ஈனஸ்வரத்தில் ஒலித்து என் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.

    “நான்தாம்மா. கார்த்திக். கிருஷ்ணாவோட காலேஜ் பிரண்ட்.”

    “அடடே.. வாங்கோ வாங்கோ! கிச்சா மூணுநா முன்னா தான் சொன்னான். நேக்குதான் அடையாளமே தெரியல”

    விரைவாகக் கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்தார். திடீரென புதுவலுப்பெற்றவராய் ஓடிச்சென்று ஒரு நாற்காலியை எடுத்துவந்து போட்டார்.

    “காபி சாப்டுறியா பா?”

    முதலில் எனக்கு வேண்டாமென்று சொல்லத் தோன்றினாலும், அவர் நிலையை பார்த்தவுடன் சிறிது நேரம் அங்கு இருக்கவேண்டும் என்றும் தோன்றியது.

    “சரிம்மா! இந்தாங்க மா சாக்கலேட்ஸ்.”

    “கிச்சா சொன்னான். நோக்கு எதுக்குப்பா சிரமம்?” என்று கேட்டுவிட்டு, அதனைப் பெற்றுக்கொண்டு, “தோ வரேன்.” என்று சொல்லிவிட்டு காபி போட சென்று விட்டார்.

    அந்த வீட்டை சுற்றி பார்த்தேன். சுற்றிப்பார்க்கும் அளவிற்கு அது ஒரு பெரிய வீடில்லை. ஒரு பார்வையின் எல்லைக்குள்ளேயே ஒட்டுமொத்த வீடும் வந்து விழுந்துவிடும். ஆனால் அந்த இருட்டும், மக்கிய வாசமும் ஏதோ செய்தது. அவ்வளவு பழைய வீடு.

    “வேற வீடு கெடைக்கலையாம்மா?” என்று காபி கொண்டு வந்து கொடுத்தவரிடம் கேட்டேன்.

    “என்னப்பா பண்றது? கொஞ்ச நன்னாயிருந்தா பத்தாயிரம் கேக்கறா. மின்னமே இருந்த ஆத்துல பன்னெண்டாயிரம் கேட்டாளேனுதான் இங்க ஜாகை வந்துட்டேன். கிச்சா தோப்பனார் பென்ஷன் எட்டாயிரம் வர்றது. அத வச்சிண்டு அவ்ளோல்லாம் முடியாது பா. அவர் போறதுக்கு முன்னே வீடு வாங்கிவெச்சிருந்தா நேக்கு ஏன் இவ்ளோ பிரச்சினை வரப் போறது! எல்லாம் கர்ம வினை.” என்றார்.

    இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கையில், என் இதயம்  உலைக்களமாய் மாறி அந்த உஷ்ணத்தில் தகதகவெனக் கொதித்துச் சூடேறிய புதிய இரத்தம் என் நரம்புகளினூடே சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

    “கிச்சா நன்னா இருக்கானா?”

    அவர் கேட்டது என் காதில் விழுந்தும் என்னால் பதில் சொல்லமுடியவில்லை.

    “கிச்சா நன்னா இருக்கானா பா?” என்று மீண்டும் கேட்டார்.

    “ஒ.. நல்லா இருக்கான் மா.”

    “வீடு வாங்கப்போரேனு சொல்லிண்டு இருக்கான். அவ அப்பாவோட ஆசை. எல்லாம் நன்னா முடிஞ்சா விநாயகருக்குச் சிதறுக்கா போடறேன்னு வேண்டிண்டு இருக்கேன். அவ அப்பா போனப்புறம் என்னோட சேர்ந்து ரொம்ப ஸ்ரமப்பட்டுட்டான். இதுக்கு மேல அவன் ஸ்ரமப்படவேணாம்!”

    எனக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது.

    “கொழந்த எப்படி இருக்கான்? அதுக்கு நம்ம பேச்சே வர்ற மாட்டேன்றதே? எதாச்சும் டாக்டர் கிட்ட காட்ட சொன்னேன், செஞ்சானான்னு தெரியல.  இந்தியாவுக்கு வர்றத பத்தி ஏதாச்சும் சொன்னானா பா? பாத்தே நாலஞ்சு வருஷமாயிடுத்து. வேணாம். அவாளுக்கு எதுக்கு செரமம். வந்து போனா நெறைய செலவு ஆகும்னு எல்லாரும் சொல்றா. பாவம் அவாளே கஷ்டப்பட்டுண்டு இருக்கா!”

    அவருக்கு நிறைய பேசவேண்டும் போலிருக்கிறது என்று தெரிந்தது. எனவே, அவரைப் பேசவிட்டுவிட்டு, அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தேன்.

    “எனக்கு ஒன்னும் இல்லப்பா. ஆனா…. இப்போல்லாம் அடிக்கடி கரண்ட் போய்டறதால ராத்திரியில தான் கொஞ்சம் பயமா இருக்கு! அதுவும் மழ வந்து, இடி இடிக்கரச்ச, கரண்டில்லாம, …. ரொம்ப பயமா… இருக்கு பா…. ” என்று கதறி அழத்தொடங்கிய போது, என் நெஞ்சம் படபடத்து, என் உடலின் ஒட்டுமொத்த சக்தியையும் யாரோ உறிஞ்சி விட்டாற்போல செயலிழந்து போய்விட்டேன்.  எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஆறுதல் சொன்னேன்.

    “கவலைப்  படாதீங்க மா. கிருஷ்ணாவுக்கு அங்க இருக்கவே பிடிக்கலையாம். சும்மா டாக்ஸ் சேவ் பண்ணத்தான் வீடு கூட வாங்கறான். ஒரு வருஷம், இல்லைனா இரண்டு வருஷத்துக்குள் வந்துடுவேன்னு சொன்னான். நீங்க தான் தேன்குழல் செய்வீங்களாமே, உங்க பேர்ல ஒரு தேன்குழல் கடையெல்லாம் வைக்கலாம்னு பேசிட்டு இருக்கோம்.” என்று நான் சொன்னவை எல்லாமே பொய்கள்! ஆனால், அந்த உன்னதமான தாயின் கண்ணீரை அடக்குவதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை.

    “நல்லவேளை. மறந்தே போயிடுத்து. கிச்சா நீ திரும்பவும் அங்க போறதா சொன்னானேன்னு சீடை, தேன்குழல் எல்லாம் பண்ணி இருக்கேன். கொஞ்சம் எடுத்துண்டு போயி கொடுக்கறையா?”

    “கண்டிப்பா மா” என்று அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு, அவரிடமிருந்து விடைபெற மனமில்லாமல் கிளம்பினேன்.

    “அடிக்கடி ஆத்துக்கு வாப்பா” என்றவரிடம் புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். தெருமுனைக்குச் சென்று திரும்பிப் பார்த்தேன். என்னையே ஒருவித சோகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவருக்குக் கையசைத்துவிட்டு இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

    வீட்டிற்குச் செல்லவே பிடிக்காத அளவிற்கு அந்த நிஜங்களின் பாரம் என் நெஞ்சை அழுத்தியது. நேராகக் கோயிலுக்குச் சென்று, என்னால் முடிந்த அளவிற்கு அந்தக் கடவுளைத் திட்டிவிட்டு, வெளியே வந்து பிரகாரத்தில் அமர்ந்தேன். எனது கையிலிருந்த அம்மாவின் தேன்குழல்கள் கண்களில் பட, கிருஷ்ணாவின் ஆடம்பர வாழ்க்கையும், அவன் பகட்டுப் பேச்சுக்களெல்லாமும் என் மனதில் வேகவேகமாய் ஓடின.

    கோயிலைவிட்டு வெளியே வந்த போது, தன் குருட்டுத்தாயை மூன்று சக்கர வண்டியில் தன்னருகே அமர்த்தியிருந்த மாற்றுத்திறனாளி இளைஞன் ஒருவன், “சார், சார்” என்று கையை நீட்டினான். அவன் குரலைக் கேட்ட அந்த வயதானப் பெண்மணியும், “ஐயா ரொம்ப பசிக்கிதுய்யா ராசா! எதாச்சி வாங்கி குடுய்யா…” என்று தன் கையை நீட்டினார்.

    வாழ்க்கையில் முதல்முறையாக அன்றுதான் எனக்கு ஒரு பிச்சைக்காரனின் கால்களில் வீழ்ந்து வணங்கவேண்டும் என்று தோன்றியது. ஒரு கையும் இரண்டு கால்களுமற்று அமர்ந்திருந்த அவனது கையில் இருபது ரூபாய் நோட்டையும், அவனது தாயின் கைகளில் அம்மாவின் தேன்குழல்களையும் வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தபோது ஒரு முடிவெடுத்தேன். இனி அந்த முடவன் கிருஷ்ணாவைச் சந்திக்கவே போவதில்லை என்று.

    Share