மாதவன் இளங்கோ

அன்று காலை பாலாவிற்கு ஒரு மின்மடல் வரையலாம் என்று முடிவு செய்துவிட்டு, எப்படி ஆரம்பிக்கலாம் என்ன எழுதலாம் என்று கண்களை மூடி, நெற்றியை என் கைவிரல்களால் அழுத்தித் தேய்த்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஒன்றாகப் பணிபுரிந்த அலுவலகத்தில் அவரது அறையில் இருவரும் பேசிய காட்சி என் மனத்திரையில் படமாக ஓடிக்கொண்டிருந்தது.

அவர் மீது அளவுகடந்த மரியாதை கொண்ட நானும், என் திறமையின்  மீதும், என் மீதும் அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்த அவரும் அன்றைக்கு கடுமையாக விவாதம் செய்து கொண்டிருந்த காட்சி அது.

கார்த்திக், யு ஆர் எ குட் ரைட்டர்! எழுது. வேண்டாம்னு சொல்லல. பட், ஜாப விட்டுட்டு விவசாயம் பண்ண போறேன்; ஃபுல் டைம் ரைட்டர் ஆகப்போறேன்னு சொல்றதெல்லாம் எனக்கு சரியா படல பா. பிலீவ் மி. ஐ ஸீ எ வெரி ப்ரைட் ஃபியூச்சர் பார் யு இன் ஐ.டி ஃபீல்ட் இட்செல்ஃப்.” என்று அறிவுரை கூறினார் பாலா.

“ஐ நோ பாலா. பட், ஐ.டி ஈஸ் நாட் மை பேஷன். எழுத்து என்னோட கனவு.”

“நீ இப்போ தான் எழுத ஆரம்பிச்சிருக்க. அந்த ஃபீல்டு பத்தி உனக்கு என்ன தெரியும்? அதுல இருக்கற ப்ராக்டிகல் டிஃபிகல்டீஸ், பிராப்ளம்ஸ், பாலிடிக்ஸ் எல்லாம் தெரியுமா? பப்ளிக் கன்சம்ப்ஷன் வேற.”

“பிராப்ளம்ஸ்.. பாலிடிக்ஸ்.. இது ரெண்டும் எங்க தான் இல்ல பாலா? நம்ம கம்பனில இல்லையா? இது எல்லாத்துக்கும் மேல, நம்ம பேஷனே ப்ரொஃபெஷனா இருந்தாதான் லைஃப்ல ஒரு சாடிஸ்ஃபாக்ஷன் இருக்கும்; அதுதான் ட்ரூ சக்சச்னு நான் நெனெக்கிறேன்.”

“அதெல்லாம் சரி பா. கோவமா பேசுறேன்னு நினைக்காத. அந்த ஃபீல்டுக்கெல்லாம் போனா பத்து பைசா கெடைக்காது. யார் இந்த காலத்துல புக்ஸ் படிக்கிறாங்க? பைஜாமா போட்டுட்டு தான் அலையணும்.”

சக்சஸ்னாவே பணம் தானா பாலா? இந்த கம்பனில நீங்க எனக்கு ரோல் மாடல். நீங்களே இப்படி சொன்னா எப்படி?”

“பணமும், வியாபாரமும் இல்லாத இடமே இல்ல, கார்த்திக். பி ப்ராக்டிகல். நீ தான் நான் உன்னோட ப்ரதர் மாதிரின்னு அடிக்கடி சொல்லி இருக்க. நான் அந்த ட்யூட்டிய தான் இப்போ பண்ணிட்டு இருக்கேன். தென், இட்ஸ் அப் டு யு.”

இந்த பதினெட்டு வருஷத்து .டி அனுபவத்துல உலகம் முழுக்க சுத்தி பெற்றதும், கற்றதும், பட்டதும் போதும் பாலா. பட், தாங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன்ஸ்.” என்று கூறிவிட்டு .டி வேலைக்கு அன்றோடு ஒரு முழுக்கு போட்டுவிட்டேன்.

ஆனால், இப்போது தான் புரிகிறது – அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்று.

ஐ.டி துறையில் ஒரு நல்ல வேலையில் இருந்த எனக்கெதற்கு இந்த எழுத்துக் குப்பையெல்லாம் என்று தோன்றுகிறது இன்று.

என்னடா இவன் ‘குப்பை’ என்று அநாகரிகமாகப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். இந்த வார்த்தையை இதற்காகவெல்லாம் பயன்படுத்தலாம் என்று எனக்கு சில நாட்களாகத் தான் தெரியும். ‘சகவாச தோஷம்’ – மன்னித்து விடுங்கள். இதற்கு பின்பு ஒரு பெரிய புராணமே இருக்கிறது.

வேலையில் இருக்கும் போதே ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதினேன். அது பெஸ்டு செல்லர் ஆகி “ஹூ மூவ்டு மை சீஸ்?” என்கிற ஆங்கிலப் புத்தகத்தின் விற்பனையையே தூக்கிச் சாப்பிட்டு விட்டது. அதைத் தமிழில் எழுவதற்கு ஒரு எழுத்தாளர் உரிமை கேட்டபோது, வேறு யாருக்கோ எதற்கு தமிழில் எழுத உரிமை தர வேண்டும்? தாய்மொழியான தமிழ் மொழியிலேயே வேறு ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்து எழுவதை விட வேறு ஏதாவது கேவலம் இருக்க முடியுமா? அதுவும் பாரதியின் பக்தனாக இருந்துகொண்டு?

அதனால் நானே ‘கட்டுத்தறி’ என்கிற புனைபெயரில் தமிழில் எழுதி வெளிவந்த அந்தப் புத்தகம் 1000 பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை படைத்தது.

“அறிமுக எழுத்தாளர் ஒருவருக்கு 1000 பிரதிகள் விற்பது என்பது பெரிய விஷயம், தொடர்ந்து எழுதுங்கள் தோழரே!” என்று என்னை வெகுவாய் ஊக்கப்படுத்தினார் ‘ஊற்று’ பதிப்பக ஆசிரியர் பொன்.கலையரசன்.

ஆங்கிலத்தில் முதலில் எழுதத் தொடங்கிய எனக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி; நான் முற்றிலும் எதிர்ப்பார்க்காத ஒன்று. ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதி, அது பெஸ்டு செல்லர் ஆகியிருந்தாலும், எனக்கென்னவோ தமிழில் எழுதுவதுதான் மனதிற்கு இனிமை தந்தது.

அடுத்த சில மாதங்களிலேயே ”கட்டுத்தறியின் பகடையாட்டம்” என்கிற எனது முதல் சிறுகதை தொகுப்பை ஊற்று பதிப்பகம் வெளியிட்டது. அதுவும் 1400 பிரதிகள் விற்றுப் புதிய சாதனைப் படைத்தது. 1400 பிரதிகள் விற்பதெல்லாம் ஒரு சாதனையா என்று கேட்காதீர்கள். மூன்று லட்சத்து இருபதாயிரம் பேர் வாழும் ஐஸ்லாந்து நாட்டில் கூட அந்த மொழியில் எழுதப்படும் புத்தகம் மூவாயிரத்திற்கும் மேல் விற்பனையாகும். ஆனால் உலகம் முழுவதும் சுமார் எட்டு கோடி பேர் பேசுகிற தமிழுக்கு இதுதான் நிலைமை. நம்மை விட சிறிய மாநிலமான கேரளாவில் கூட லட்சக்கணக்கில் புத்தகங்கள் விற்பனையாகின்றனவாம். ஆனால் தமிழில் இரண்டாயிரம், மூணாயிரமே ஒரு மாபெரும் சாதனையாக இருக்கிறது.

என் எழுத்தை புத்தகங்களுக்குள் மட்டும் அடைத்து வைக்காமல், உலகம் முழுதும் உள்ள வாசகர்களுக்கு எடுத்துச் செல்லவும், அவர்களோடு தொடர்பிலிருக்கவும் எனக்கென்று ஒரு வலைதளத்தைத் தொடங்கி தொடர்ந்து எழுதி வந்தேன். ஒரு வருடத்திலேயே லட்சத்திற்கும் மேற்பட்ட  பார்வைகள் – அதிசயமாக இருந்தது. இத்தனை பேரும் ஏன் புத்தகங்களை வாங்க மாட்டேன் என்கிறார்கள்? இலவச தொலைகாட்சி, இலவச கிரைண்டர் என்பது போல் ‘இலவசமாய் இலக்கியம்’!

திருட்டு வி.சி.டி. வந்து பிழைப்பை கெடுத்துவிட்டது என்று காட்டுக் கத்து கத்துகிறார்களே இந்த திரைப்பட உலகினர், பாவம், எழுத்தாளர்கள் எங்கே சென்று முறையிடுவார்கள்? புத்தகம் வெளியான சில நாட்களிலேயே பி.டி.எஃப் வந்துவிடுகிறது. இதில் வேறு சில ஆசாமிகள், அவர்களே எழுதியது போல பெருமையாகத் தங்கள் வலைப்பதிவில் பதிவு செய்து ஹிட்டுகளை அள்ளுகிறார்கள். நான்கு சுவருக்குள் அமர்ந்துகொண்டு தனக்குள் வேறொரு உலகத்தையே உருவாக்கி, தனக்கு வேண்டிய பாத்திரங்களை சிரிஷ்டித்து அவற்றுக்கு உயிர்கொடுத்து கதைக்குள்ளே உலாவவிட்டு தானும் ரசித்து, தன் வாசகர்களையும் மகிழ வைக்கும்  ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு சோதனை பாருங்கள்.

சரி அதெல்லாம் நமக்கெதற்கு? என் புராணத்துக்கு வருவோம்.

கடைசியில் என்னை ‘தெனாலி’ இதழிலேயே பத்தி எழுத அழைத்து விட்டார்கள். இதே தெனாலி குழுமத்தின் ஆங்கில வார இதழுக்கு எத்தனை முறை என் ஆங்கிலச் சிறுகதைகளை அனுப்பி இருப்பேன். ஒருமுறையாவது பிரசுரித்தார்களா? பிரசுரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அது அவர்கள் கொள்கை, விருப்பம் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயம் அல்லது எனது படைப்பின் தரம் சார்ந்த விஷயம். ஆனால், ‘நன்றி. பரிசீலிக்கிறோம்.’ என்று ஒரு பதில் கடிதம் கூட அனுப்பியது கிடையாது. இப்போது ‘பத்தி’ எழுத அழைக்கிறார்கள் – எல்லாம் வியாபார உத்தி என்று நினைத்துக் கொண்டேன்.

ஓரிரு தொலைகாட்சிச் சானல்களில் விவாத மேடைகளில் பேசவும் அழைத்தார்கள்.

இப்படி பல திறக்குகளில் நான் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்ததால், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏற்கனவே கூறியது போல், ஐ.டி என் பேஷனும் இல்லை. அதனால்தான் அந்த வேலையை தூக்கியெறிந்துவிட்டு, எழுத்தில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

நாவல்கள், வெகுஜன மற்றும் இணைய இதழ்களில் சிறுகதைகள், பத்திகள், அவ்வப்போது தொலைக்கட்சியில் விவாத மேடைகள் என்று விறுவிறுவென்று ஓடிக்கொண்டிருந்தது என்னுடைய வாழ்க்கை.

முழு நேர எழுத்துப்பணியில் இருந்தாலும் சக எழுத்தாளர்களைப் பற்றியோ அவர்களின் புத்தகங்கள் பற்றியோ எனக்கு அவ்வளவாகத் தெரியாது. தமிழில் இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் அதிகமாக படிக்காததும் அதற்கு ஒரு காரணம். இந்த ஒரு வருடமாகத்தான் நிறைய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். மேலும் சில நல்ல இளம் எழுத்தாளர்கள் என் கட்டுரைகளுக்கு எழுதிய விமர்சனங்கள் மூலமாகப் பழக்கமானார்கள். சில வாசகர்கள் எனக்கு எழுதிய கடிதங்களிலேயே அவர்களின் எழுத்து திறமையைக் கண்டு வியந்து அவர்களை நிறைய எழுதுமாறு ஊக்குவித்தேன்.

இன்னும் சில மூத்த எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் நாளும் வந்தது.

மூத்த எழுத்தாளர் ‘கதைராவணன்’ அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார் பதிப்பக ஆசிரியர் பொன்.கலையரசன்.

“கதைராவணன். பெயருக்கேற்றார் போலவே அவருக்குப் பத்து தலைகள் தான். அவரது ஒவ்வொரு புத்தகத்தை படித்த போதும் ஒரு பத்து தேர்ந்த எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதியது போல உணர்ந்தேன். அவரது ஒரு புத்தகத்தை படித்தாலே பத்து புத்தகத்தை படித்ததற்குச் சமம். அதனால் தான்…” என்று விழாமேடையில் ஒரே புகழ்மழை பொழிந்து கொண்டிருந்தார் திரைப்படக் கவிஞர் ‘கற்பனையருவி’.

அங்குதான் முதன்முதலாக எழுத்தாளர் ‘சித்தப்பா’ அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து, அவருக்கும் அந்த விழாவுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் எதையோ படித்துக் கொண்டிருந்தார்.

எதோ நினைத்தவர் திடீரென என் பக்கம் திரும்பி, ” உங்க பேரு?” என்றார்.

“கட்டுத்தறி, ஐயா”

“சோ, கவியெல்லாம் பாடுவீங்களோ?”

“இல்லைங்க ஐயா. கவிதை எழுதினது கிடையாது. என்னோட நிஜப் பேரு கார்த்திகேயன். எங்கப்பா ரொம்ப நல்லா வெண்பா எல்லாம் எழுதுவார். மரபுக்கவிதைல அவருக்கு ரொம்ப ஈடுபாடு. அவரோட பேர் கம்பன். அதனால கட்டுத்தறினு புனைபெயர் வெச்சுக்கிட்டேன்.”

” மரபுக்கவிதையா? உங்கப்பா எந்த காலத்துல இருக்கார்?” என்று அவர் கேட்ட விதமும், அந்த கேலிப் பார்வையும் என்னை ‘சுருக்’ என்று ஊசியால் குத்தியது போல இருந்தது.

அவர் தொடர்ந்தார்.

“சரி எவ்வளவு புத்தகம் எழுதியிருக்கீங்க?”

இவருக்கு என்னைத் தெரியுமா? இல்லை தெரியாதது போல நடிக்கிறாரா? என்று எனக்குப் பெரிய சந்தேகமே வந்துவிட்டது.

நான் சிறிது நேரம் மௌனித்து இருந்ததை அவருக்குச் சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்தார்.

“சாரி. தமிழ்ல இப்பல்லாம் நிறைய குப்பைங்க வர ஆரம்பிச்சிடிச்சி. அதனால நான் அவ்வளவா படிக்கறதில்ல.”

எனக்கு அங்கிருந்து எழுந்து வெளியே சென்று விடலாமா என்று தோன்றியது. இப்படியெல்லாம் கூட பேச முடியுமா? அதுவும் ஒரு மூத்த எழுத்தாளரால் என்று நொந்து கொண்டிருந்தேன்.

“என்னென்ன புத்தகமெல்லாம் படிப்பீங்க?”

அத்தனை மனப்போராட்டங்களுக்கு இடையிலும் பொறுமையாக, மரியாதையாக பதில் சொன்னேன்.

“இல்லைங்கையா. தமிழில நிறைய புத்தகங்கள் படிச்சதில்ல. சங்க இலக்கியங்கள், பாரதியார், சுஜாதா – இவங்களெல்லாம் நெறைய படிச்சிருக்கேன். ஜெயமோகன், எஸ்ரா புத்தகமெல்லாம் படிச்சிட்டு இருக்கேன். இப்போ கூட ரீசன்டா என் பிரண்டு சொன்னானேன்னு அ.முத்துலிங்கம் படிச்சிட்டு இருக்கேன்”.

“என்னய்யா தம்பி? மரபு கவிதைங்கற. சங்க இலக்கியம்கற. இந்த காலத்துக்கு வாங்க.”

கவிஞர் கற்பனையருவி பலத்த கரவொலிகளுக்கும், சிரிப்பொலிகளுக்கும் இடையே மேடையில் இடிபோல் முழங்கிக் கொண்டிருக்க, அதை சற்றும் சாட்டை செய்யாமல் இங்கே சித்தப்பா என்னை உப்புமாவாக்கி முள்கரண்டியை வைத்துக் கிண்டிக் கொண்டிருந்தார்.

“சர்ரியலிசம், எக்ஸ்சிஸ்டென்சலிசம் பத்தி எதாச்சும் படிச்சிருக்கீங்களா?”

எப்படியும் அவர் என்னுடைய பதிலை எதிப்பார்க்கிறவர் போல் தெரியவில்லை. அதனால் பதில் சொல்லாமல் அவரது கேள்விகளுக்கு ‘இல்லை’ என்பது போல் அமைதியாய் தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

“சார்த்தர், மார்ட்டின் ஹைடேக்கர், ஆல்பர்ட் காம்யு இவங்கள படிச்சிருக்கீங்களா?”

“…”

“தாஸ்தாயேவ்ஸ்கி?”

எனக்குத் தலை சுற்றி மயக்கம் வரும்போல் ஆகிவிட்டது. அடுத்தது மொசிவேனா கசுனி, பிக்கர்லோ பேத்திரி என்று ஏதாவது பெயரைக் கேட்பாரோ என்று நினைத்துக் கொண்டே நெளிந்தேன்.

“என்னோட புத்தகம் எதாச்சும் படிச்சிருக்கீங்களா தம்பி?”

“இல்லைங்கையா. ஆனா, உங்களோட ‘குறுக்கு புத்தி’ நாவல் பத்தி கேள்விப்பட்டு போன வாரம் தான் வாங்கினேன். இன்னும் படிக்கல. தப்பா எடுத்துக்காதீங்கைய்யா. நான் தமிழில எழுத வந்ததே ஒரு விபத்து தான்.”

“ஓஹோ. அது சரி. பாத்து தம்பி. உங்க புத்தகத்த படிக்கிற வாசகர்களுக்கு அது ஒரு விபத்தா முடிஞ்சிடப் போகுது! ஹா ஹா ஹா!”

ஒவ்வொரு சொல்லும் முள்! எனக்குக் கட்டுக்கடங்காத கோபம். சி.சு.செல்லப்பா போன்றவர்கள் வாழ்ந்த இலக்கிய உலகில் இதுபோன்ற சித்தப்பாக்கள். இதில் இவருக்கு P.S.வீரப்பா சிரிப்பு வேறு. பேசாம சித்தப்பா என்பதற்குப் பதிலாக வீரப்பா என்று பெயர் வைத்து இருக்கலாம் இந்த மனிதருக்கு என்று மனதில் வைது கொண்டே மேடையை நோட்டம் விட்டேன்.

அங்கே ‘கவிஞர். பூங்காத்து’ புயலாய்ச் சீறிக்கொண்டிருந்தார், “வே.க.முஸ்தீப் அவர்களின் வெறியன் நான். வே.க.மு-விற்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த எழுத்து ஐயா கதைராவணன் அவர்களுடையது என்றால் அது மிகையாகாது. வே.க.மு-வைத் தெரியாதவன் மூடன். கதைராவணன் புத்தகங்களைப் படிக்காதவன் இலக்கியத்தைப் பற்றிப் பேசவே தகுதியற்றவன்.”

“அப்ப கண்டிப்பா நான் இலக்கியத்தைப் பற்றிப் பேசவே தகுதியற்ற ஒரு மூடன்” என்று எனக்குள் உறுதிப்படுத்திக்கொண்டே திரும்புகையில் சித்தப்பாவிடம் மீண்டும் மாட்டிக்கொண்டேன்.

“கட்டுத்தறி, உங்க புத்தக லிஸ்ட கொடுங்க. ஒரு பார்வை பாக்கறேன். இப்பல்லாம் மதிப்புரை எழுதுனு சொல்லிப் பல குப்பைகள அனுப்பறான் கலை. பத்தோட பதினொன்னு.”

பழுக்கக் காய்ச்சிய கம்பி அது.

என் தொண்டைக்குள்ளே இரக்கமின்றி அதைச் சொருகிக்கொண்டிருந்தார் சித்தப்பா. எனக்கு வார்த்தைகளே எழவில்லை. என் கையிலிருந்த என்னுடைய “கட்டுத்தறியின் பகடையாட்டம்” புத்தகத்தை குனிந்தபடியே பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். அமைதி முகத்தில் மட்டுமே. உள்ளுக்குள் புயலடித்துக் கொண்டிருந்தது – கவிஞர். பூங்காத்தின் பேச்சைப் போல.

நல்ல வேளை, புயல் ஓய்ந்தது.

“அடுத்ததாக எழுத்தாளர் சித்தப்பாவை பேச அழைக்கிறேன்.” என்று மேடையிலிருந்து கலையரசனின் குரல்.

போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது எனக்கு. மேடையில் மைக்கை சோதித்து விட்டு பேச ஆரம்பித்தார் சித்தப்பா. அதுதான் சமயமென்று நான் இரண்டு வரிசைகள் முன்னே சென்று அமர்ந்து கொண்டேன்.

“புத்தக விழாக்கள் என்றாலே எனக்கு இப்போதெல்லாம் தலைவலி வந்து விடுகிறது….” என்று பேசத் துவங்கினார் சித்தப்பா.

இந்த மனிதர் அடங்க மாட்டார் போலிருக்கிறது என்று அலுத்துக் கொண்டே இடது புறம் திரும்பினால் அங்கே அமர்ந்திருந்த எழுத்தாளர் ‘செங்கை சிங்கன்’ தலையில் அடித்துக் கொண்டே பார்வையை என் மேல் விட்டார்.

“உங்களை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே?” என்றார்.

“அப்பாடா, கடைசியா என்னை எங்கோ பாத்த மாதிரியாவது இருக்கிறதே ஒரு எழுத்தாளருக்கு” என்று நினைத்து, அதையே ஒரு பெரிய அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு எனது கையிலிருந்த புத்தகத்தைக் கொடுத்தேன்.

“ஆ..ஹான். இப்போ நியாபகம் வருது. இந்த புத்தக அட்டைல தான் உங்க முகத்த பாத்து இருக்கேன். ரெண்டு மூணு நண்பர்கள் உங்கள பத்திச் சொல்லி இருக்காங்க. கலை நெறைய பேசுவார்.” என்று கூறிவிட்டு புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

எனக்கு யாரோ அறைந்தது போலிருந்தது.

அவர் விடுவதாயில்லை. “இது தான் என் வலைதளம், கட்டுத்தறி. என்னோட புத்தகங்களை ஆன்லைன்லயே வாங்கலாம். நான் ‘சாமந்தி’ இதழ்ல எழுதின என்னோட ‘பசித்தால் படி!” தொடர கூட புத்தகமா நெக்ஸ்ட் வீக் வெளியிடறாங்க. வந்தவுடனே முடிஞ்சா படிங்க. ஆமா, சித்தப்பாவோட புத்தகமெல்லாம் படிக்கறதுண்டா?” என்று கேட்டார்.

“இல்லைங்கையா. இப்போ தான் அவரோட குறுக்கு புத்தி..”

“என்னது?” என்று இடைமறித்த அவரது முகத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாசம்.

“அவரோட ‘குறுக்கு புத்தி’ நாவல வாங்கி இருக்கேன்.”

“என்ன தலைப்பு இது? தப்பித்  தவறி கூட இனிமேல் அவன் புத்தகத்த வாங்கிடாதீங்க. வேஸ்ட் ஆப் மனி. உங்க மனச குப்பை வண்டியாக்காதீங்க. அவனெல்லாம் இருபது வருஷமா என்னத்த, எதுக்கு எழுதறான்னே தெரியல. என்னாலெல்லாம் அவன எழுத்தாளனாவே ஏத்துக்க முடியாது. அவனச் சொல்லி பிரஜோஜனம் இல்லை. இந்த முட்டா ஜனங்கள சொல்லணும். ஒன்னு சொல்லட்டுமா, கட்டுத்தறி? இன்னைக்கு தேதில தமிழ்ல ரெண்டே ரைடர்ஸ் தான் இருக்காங்க. ஒன்னு கதைராவணன். இன்னொருத்தர ஊருக்கே தெரியும்.”

இவரை ஊருக்கே தெரியுமாம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பூனைக்கு பயந்து புலியிடம் மாட்டிக் கொண்டது போலிருந்தது. இது புலி அல்ல; சிங்கம்.

அப்படியே மெதுவாக செங்கை சிங்கனின் பார்வையின் பிடியிலிருந்து நழுவி மேடை பக்கம் திரும்பினால், அங்கே சித்தப்பா பொறுமையாக பேசிக்கொண்டிருந்தார், “இந்த புத்தகத்தை படிச்சிட்டு, கதைராவணன் இதை எதுக்கு எழுதினார்னு ரொம்ப நேரம் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் புரியல. ஆனா ஒன்னு சொல்ல முடியும். இதுவரை அவர் எழுதின மோசமான புத்தக லிஸ்டுல இது சேராது. அதுக்காக சிறந்த புத்தகம்னும் சொல்ல மாட்டேன்.”

எனக்கு நிஜமாகவே ஒரு டார்ட் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. தலை கனத்தது – மனமும் சேர்ந்து தான்.

இன்னொரு எழுத்தாளர், கதைராவணன் புத்தகத்தைத் தவிர மற்ற எதையெல்லாமோ பேசிவிட்டுச் சென்று விட்டார். அந்தப் புத்தகத்தைப் பாராட்ட அவருக்கு ஏனோ வாயெழவில்லை. நெஞ்சு திறந்தால் ‘தானே’ வாய் திறக்கும்.

அந்த விழாவிலேயே என்னை மிகவும் ஈர்த்தது மூத்த எழுத்தாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு மட்டுமே.

விழா முடிந்தவுடன் புத்தக விற்பனை ஆரம்பித்தது. கதைராவணன் புத்தகங்களோடு சேர்த்து, ஊற்று பதிப்பகத்தின் அத்தனைப் புத்தகங்களையும் அடுக்கி வைத்திருந்தார் பொன்.கலையரசன். என்னுடைய புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும் என்னால் அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை.

ஒருவரோடு மற்றொருவர் சிரித்துப் பேசுவதையே அங்கு பார்க்க முடியவில்லை. எல்லோருடைய முகங்களும் ஒருவித இறுக்கத்துடன் காணப்பட்டன. சில பேரின் முகங்கள் தீவிர மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களின் முகத்தைப் போன்று காணப்பட்டது. அவரவர்களுக்கு ஒரு வாசகக் கூட்டத்தைக் கூட்டி கருத்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு புத்தகத்தின் அட்டையில் புன்னகைத்துக் கொண்டிருந்த சுஜாதாவை வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தபோது, ஆசிரியர் பொன்.கலையரசன் மூத்த எழுத்தாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார்.

“நீங்க நன்னா எழுதரேளாமே. சின்ன வயசுக்காரரா இருக்கேள். குட். போன வாரம் தான் உங்க புத்தகமெல்லாம் கொடுன்னு கலைகிட்ட கேட்டேன். இதோ கொடுத்திருக்கார். படிச்சிட்டு சொல்றேன். வரட்டுமா? வாழ்த்துகள்!” என்று பாராட்டி கைகுலுக்கிவிட்டுக் கிளம்பினார். பேசியது மூன்று வரியானாலும் அவரது முத்தான வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்தது. அந்தப் பேச்சில் வன்மம் மிகுந்த கேலி இல்லை, கிண்டல் இல்லை, தாக்குதல்கள் இல்லை. அன்பு தெரிந்தது; நாகரிகம் தெரிந்தது; அதனால் மரியாதை வந்தது.

அன்று இரவு முழுக்க எனக்குத் தூக்கமே வரவில்லை.

முதன் முறையாக நான் வேலைபார்த்த ஐ.டி நிறுவனங்களெல்லாம் சொர்க்கபுரிகளாய்த் தெரிந்தன. சக பணியாளனுக்கு விருது கிடைக்கும் போது பாராட்டுவது; தனிமனிதனை விட குழுவுக்கு மிகுந்த மதிப்பளிப்பது; இது எல்லாவற்றிற்கும் மேலாக சக மனிதனின் உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பது போன்ற பழைய வாழ்க்கையின் நினைவுகள் ஒவ்வொன்றாக தோன்றி மறைந்து என்னைத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தன. கண்டிப்பான வாடிக்கையாளர்கள் கூட மென்பொருளில் குறையிருந்தால், விளக்கி மின்னஞ்சல் அனுப்புவார்கள்; திருத்தி அனுப்புவோம். ஆனால் குப்பை என்று யாரும் கூறியதில்லையே?

உண்மை விளம்பிகள் என்றால் எதை வேண்டுமானாலும் பொதுச்சபையில்  பேசலாமா? கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லையே கிடையாதா? பிறகு எதற்கு சிக்மண்டு ப்ராயிடு இட், ஈகோ, சூப்பர் ஈகோ பற்றி பேசவேண்டும். மனிதனின் மனம் எவால்வ் ஆக வேண்டாமா?

பிடிக்காததை பிடிக்கவில்லை என்று கூறலாம்; மனதுக்கு ஒவ்வாததாக இருக்கிறது எனலாம்; எனக்குச் சரியாகப் படவில்லை என்றும், அது ஏன் என்றும் ‘விளக்கமாக’ கூறலாம்; இன்னும் சற்று நன்றாக வந்திருக்கலாம் என்கிற ஆதங்கம் மேலெழுகிறது எனலாம்; இது அவருடைய மாஸ்டர் பீஸ் இல்லை எனலாம். ஆனால், அது என்ன குப்பை என்கிற வார்த்தை? அப்படி உரைக்க ஒன்றும் இல்லையென்றால் எதையும் சொல்லாமல் அமைதி காக்க வேண்டியதுதானே? கதைகளிலும், கட்டுரைகளிலும் மட்டும் கருத்து கூறிவிட்டு, அதற்குப் புறம்பாக வெளியில் நடந்துகொள்வது இலக்கியவாதிகளுக்கு அழகா?

வாசகர்கள் புத்தகங்களை மட்டும் பார்ப்பதில்லை. சொல்பவன் யாரெனவும் காண்கிறார்கள். கட்டுரையில் சொல்லப்படுவது ஒன்றாகவும், அதைப் படைத்தவன் செயல் ஒன்றாகவும் இருக்கும் போது அந்தப் படைப்பு ஜீவன் இழந்து விடுமல்லவா?.

இப்படி ஏதேதோ கேள்விகள் எனக்குள்ளே அடுத்தடுத்து எழுந்து விழுந்து கொண்டிருந்தது. கேள்விகளுக்கு இடையே பாலாவின் முகமும் அவ்வப்போது எட்டி எட்டி பார்த்தது.

சூரியனும் எட்டிப் பார்த்துவிட்டது.

அன்று காலை பாலாவிற்கு ஒரு மின்மடல் வரையலாம் என்று முடிவுசெய்து விட்டு, எப்படி ஆரம்பிக்கலாம் என்ன எழுதலாம் என்று கண்களை மூடி நெற்றியை என் கைவிரல்களால் அழுத்தித் தேய்த்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

பாலா ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இருந்தார். அவரது நிறுவனத்தில் சேர விழைவதாய் கடிதம் எழுதி சரிபார்த்து விட்டு அனுப்புவதற்கு செண்ட் பட்டனை அழுத்தச் சென்றபோது என் நுண்ணறி பேசி அழைத்தது. தெரியாத எண்ணாக இருந்ததால் யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே எடுத்தேன்.

“ஹலோ.”

“ஹலோ நான் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி பேசறேன் கண்ணா.”

“வாட் எ சர்ப்ரைஸ்? வணக்கம் ஐயா!”

“என்னமா எழுதியிருக்கேள். நல்ல நடை. எழுத்தில ஒரு தனித்துவம் இருக்கு. அதிலும் அந்த முதல் கதை பகடையாட்டம். அசந்தே போயிட்டேன். காகிதக்குருவி கதையை முடிச்ச விதம் ரொம்ப டிபரண்ட். இது தான் மொத புத்தகம்னா யாரும் நம்பவே மாட்டா. அருமை. உங்க ரெண்டு புத்தகம் படிச்சிட்டு காலம்பர நாலு மணிக்கு தான் படுக்க போனேன். அத்தன ஈர்ப்பு அந்த எழுத்தில.”

என்னால் நம்பவே முடியவில்லை. என்ன மாதிரி ஒரு லெஜண்டு அவர். அவரா இப்படி என்னைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்?

“ரொம்ப நன்றி ஐயா. எனக்கு நோபல் பரிசே கெடைச்ச மாதிரி இருக்கு.”

“அத விட முக்கியமான விஷயத்த சொல்லனும்னு இப்ப தோன்றது. நேக்கு எழுபத்தி அஞ்சு வயசாயிடுத்து. இன்னும் எத்தன நாளுக்கு இருப்பேன்னு நேக்கு தெரியாது. இருபத்தி அஞ்சு வயசில எழுத ஆரம்பிச்சேன். நெறைய விமர்சனங்கள். ஆனா அந்த காலத்துல எல்லாம் ‘விமர்சனமே இலக்கியம்’ மாதிரி இருக்கும். கதை கூட எழுதிடலாம், அந்த மாதிரி விமர்சனம் எழுத முடியாது. அவ்ளோ தரம் இருக்கும். கத்துக்கறதுக்கு அவ்வளோ விஷயங்கள விமர்சகர்கள் நம்ம முன்னால வந்து கொட்டுவா. ஆனா, நேத்து பன்க்ஷன்ல பாத்தேளா ஒவ்வொருத்தரும் எப்படி பேசினா? இப்பல்லாம் ‘குப்பை’ என்கிற ஒரு வார்த்தைல விமர்சனத்தையே முடிச்சிடறா. இது அவாளோட இயலாமைய காட்றது. இவாள்டல்லாம் சரக்கு இல்லையோனு கூட தோன்றது.”

எனக்கு என்னவோ நேற்று நான் நினைத்ததையெல்லாம் அவர் டெலிபதி மூலம் கேட்டுவிட்டு பதில் சொல்வது போலவே இருந்தது. அல்லது நான் சிந்தித்துக் கொண்டிருந்த நேரமும், அவர் என் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த நேரமும் ஒன்றாக இருந்ததாலா? இதுதான் எழுத்தாளனையும், வாசகனையும் இணைக்கும் இழையா?

நான் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்க, அவர் பேசிக்கொண்டே போனார்.

“தமிழில என்ன வேற வார்த்தையா இல்ல? இல்ல, இவாளுக்கெல்லாம் பதப்பஞ்சம் வந்திடுத்தா? குப்பைனு ஒரு பாமரன் சொல்லலாம். ஒரு எழுத்தாளன் எப்படிச் சொல்லலாம்? அப்புறம் நமக்கு சொல்லாட்சி பத்தி பேச என்ன தகுதி இருக்கு? எழுத வரவாளையெல்லாம் இப்படி குப்பைனு தொரத்திட்டு, தமிழ் சாகுதேனு ஒப்பாரி வெக்கறதுல என்ன பிரயோஜனம். எல்லாத்துக்கும் மேல, எழுத்தாளனுக்கு பக்குவமும் பொறுப்பும் வேண்டாமோ?” என்று அவர் கேட்டவை எல்லாமே என் மனம் என்னிடம் கேட்ட கேள்விகள்.

“இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, யாராச்சும் விமர்சனம் பண்ணா கன்ஸ்ட்ரக்டிவா எடுத்துக்கோங்கோ. துச்சமா பாத்தாள்னா கண்டுக்காதேள். நீங்களும் யாரையும் துச்சமா பாக்காதேள். எல்லா படைப்புக்குப் பின்னாடியும் உழைப்பு இருக்கு. அத குப்பைனு சொல்ல நாம யாரு? இன்னும் சொல்லபோனா குப்பை பொறுக்கறது கூட ஒரு பூஜை மாதிரி தான். அதுவும் ஒரு தவம். செய்யும் தொழிலே தெய்வம்னா, எல்லா படைப்புமே அந்த தெய்வத்தோட சிருஷ்டி தானே? இவாள்லாம் ஒரு வகையான ரேசிஸ்ட்டுன்னு நேக்குத் தோன்றது. உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி மாதிரி, உயர்ந்த இலக்கியம் – தாழ்ந்த இலக்கியம். எல்லாம் இலக்கியமும் ஒன்னுதான். முழுமையானது தான். ஆழ்வார் ‘அவரவர் இறையவர் குறைவிலர்’னு இறைவன பத்தி சொன்னது இதுக்கும் பொருந்தும். இதுல குப்பைனு சொல்றவாளோட மனசு  தான் மொதல்ல குப்பை புரியுதோ? அடிக்கடி நாம சந்திக்கணும். பேசணும். எழுதிண்டே இருங்கோ. நிறுத்தாதேள். வாழ்த்துகள்!!” என்று கூறிவிட்டு அவர் போனை அணைத்த அடுத்த நிமிடமே, நான் பாலாவுக்கு எழுதியிருந்த மின்மடலை குப்பைக்குத் (TRASH) தள்ளினேன்.

அதே வேகத்தில் ‘இன்று புதிதாய்ப் பிறந்த’ உற்சாகத்தோடு எனது அடுத்த கதையை எழுதத் தொடங்கினேன் – ” குப்பை” என்கிற தலைப்பில்.

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “எழுத்தாளன்

 1. எழுத்தாளனாய் அங்கீகாரம் பெறுவதே பெரிய போராட்டம்; அப்பட்டத்தை (அ) பதவியைத் தக்கவைத்துக் கொள்வதோ அதனினும் பெரிய போராட்டம். இவையெல்லாவற்றையும் கடந்து எழுத்தாளன் என்று சிறிய அளவிலேனும் அறியப்பட்டுவிட்டால் அவ்வெழுத்தும், எழுத்தாளனும் விமரிசனம் என்ற பெயரில் அநாகரிகமாகக் கிழித்துத் தொங்கவிடப்படுவதும், எள்ளி நகையாடப்படுவதும் வேதனையின் உச்சம். எப்பதவியில் இருந்தாலும் சிக்கல்களும், பிரச்சனைகளும் வருமென்றாலும் மக்களோடு நேரடித் தொடர்பிலிருக்கும் கலைத்துறையினர் (எழுத்தும் கலை தானே?) சந்திக்கும் பிரச்சனைகள் மற்றோரைவிட அதிகமே.

  ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தோலுரித்துக்காட்டும் சிறுகதை. எழுத்து நடையும், கதாபாத்திரங்களின் பெயர்களும் (கதைராவணன், செங்கை சிங்கன்) சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள் திரு. மாதவன் இளங்கோ!!

 2. ஆகா… நாலும் கருத்துல வெச்சி, நல்லா வந்திருக்கு. 🙂  பொன்னாடை!!

 3. ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தாயின் மனம் தனது  மக்கள் பாராட்டப் பெருவதை கேட்கும் பொழுது.  படைப்பாளிகளுக்கும் அது  பொருந்துமல்லவா?  உண்மையில் துன்பத்தில் போராடி உயிரை விட்ட படைப்பாளிகளின் படைப்பை (கதை, ஓவியம், இன்ன பிற)  பிற்கால மக்கள் புகழும்போழுது அந்த படைப்பாளி உயிருடன் இருக்கும் பொழுதே இந்தப் பாராட்டுக்கள்  கிடைத்திருந்தால் ஊக்கமுடன் இன்னமும் பல படைதிருப்பாரே, மன நிம்மதியைக் கொடுத்திருக்கலாமே அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் எனத் தோன்றும்.  

  ஒவ்வொருவருக்கும் ரசனை வேறுபடும் ஒருவருக்குப்  பிடித்தது மற்றவருக்குப் பிடிப்பதில்லை.  பாராட்டு என்னும் நீர் ஊற்றி வளரச் செய்ய இயலாவிட்டாலும் வெந்நீர் ஊற்றி அழிக்கும் தொழிலை விமர்சனம் என்ற பெயரில் செய்வதை  நிறுத்தலாம்.

  இக்கருத்தினை ஒரு வளரும் எழுத்தாளர் பார்வையில் படைத்ததற்கு பாராட்டுக்கள் இளங்கோ.  இலக்கிய உலகின் அரசியலை கண்டு துவளும் இளங்கலைஞர்களுக்கு இந்தக் கதை ஆறுதல் அளிக்கும். கதைக்கரு, எழுத்து நடை அனைத்தும் அருமை  பாராட்டுக்கள். 

  அன்புடன் 
  …..தேமொழி 

 4. வாழ்த்துக்கள் சகோதரரே!!. என்ன ஒரு எழுத்தாளுமை!!!. ஒவ்வொரு வரியும் ஆழமான அர்த்தங்களுடன் இதயத்தில் ஊடுருவிச் செல்கின்றன. நிறைய வரிகள் மனதில் நிற்கின்றன. 

  ‘நெஞ்சு திறந்தால் தானே வாய் திறக்கும்’

  ‘இவாளுக்கெல்லாம் பதப்பஞ்சம் வந்திடுத்தா’

  ‘குப்பை பொறுக்கறது கூட ஒரு பூஜை மாதிரிதான்’

  நிறைவாக, எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி மூலமாக வரும் அறிவுரைகள் வளரும் எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த ஊக்க மருந்து. ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு குழந்தையைப் பிரசவிப்பது போல் தான் படைப்புகளைத் தருகிறார்கள். சக கலைஞர்களை நேசிக்க, அவர்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாவிட்டால் கலைத்தாயின் குழந்தைகள் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?. தங்கள் எழுத்தும், நடையும் சொல்ல வந்த கருத்தை பதியச் சொன்ன பாங்கும் பாராட்ட வார்த்தைகளில்லை. சிரம் தாழ்ந்த நன்றிகள்.

 5. அருமை இளங்கோ.

  வளரும் எழுத்தாளன் சக எழுத்தாளர்களால் சந்திக்கும் இடர்பாடுகளைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில், ஆயிரம் இரண்டாயிரம் பிரதிகள் விற்பதே தமிழில் பெரிய சாதனை என்னும் வரிகளில் வாசகர்களையும் விளாசியிருக்கிறாய். வாழ்த்துக்கள்

 6. //////நான்கு சுவருக்குள் அமர்ந்துகொண்டு தனக்குள் வேறொரு உலகத்தையே உருவாக்கி, தனக்கு வேண்டிய பாத்திரங்களை சிரிஷ்டித்து அவற்றுக்கு உயிர்கொடுத்து கதைக்குள்ளே உலாவவிட்டு தானும் ரசித்து, தன் வாசகர்களையும் மகிழ வைக்கும் ஒரு எழுத்தாளனுக்கு/////

  இந்த இடத்தில் எழுத்தாளரின் கதாபாத்திரத்தை ஒரு உண்மையை மிக அருமையாக வெளிக்காட்டுகிறீர்கள். சபாஷ்.

  எழுத்தாளருக்கும் எழுத்தாளராக ஆசைப்பாட்டு எழுத துவங்குவோருக்கும் உள்ள அடிப்படை இம்சை இது.

  ////குப்பைனு ஒரு பாமரன் சொல்லலாம். ஒரு எழுத்தாளன் எப்படிச் சொல்லலாம்? அப்புறம் நமக்கு சொல்லாட்சி பத்தி பேச என்ன தகுதி இருக்கு? எழுத வரவாளையெல்லாம் இப்படி குப்பைனு தொரத்திட்டு, தமிழ் சாகுதேனு ஒப்பாரி வெக்கறதுல என்ன பிரயோஜனம்./////

  இந்த சாட்டை அடி இடத்துக்கு மிகப்பெரிய சபாஷ் இளங்கோ.

  கதைக்கருவும், அது நகரும் விதமும் அருமை.

 7. @பழமைபேசி, தங்கள் கருத்துக்கும், பொன்னாடைக்கும் மிக்க நன்றி! நான் தங்களின் வாசகன் என்கிற முறையில், இந்தப் பொன்னாடையை எனக்குக் கிடைத்த உயரிய விருதாக எடுத்துக்கொள்வேன். 
  கதையை உள்வாங்கி, அதன் உணர்வுகளைத் தாங்கி, அருமையாக கருத்துரை வழங்கி, பாராட்டியுள்ள சகோதரிகள் மேகலா, தேமொழி ஆகியோருக்கும், நண்பன் சச்சிதானந்தத்திற்கும் எனது நன்றிகள்! நண்பர் தனுசு அவர்களின் சபாஷ்களுக்கு என் நன்றிச்செண்டு!   
  @பார்வதி, தங்களின் கருத்துரைக்கும், கடிதத்திற்கும் நன்றிகள் பல. I was really moved!! Thanks a ton!!

 8. தோட்டத்து மலர்கள் சில,தெய்வச்சிலை சேரும் ! தலைவர்கள் தோள் சேரும்!
  ஆரணங்குகள் தலை சேரும் !
  காட்டுமலர்களோ பூத்துக்குலுங்கி பூமிசேரும்!-அவை
   கண்டதென்னவோ  வண்டும்,வண்ணத்துப்பூச்சியும் ,
  தேனீயும், தென்றலும்!ஆனால் அவைகள் அங்கலாய்ப்பதில்லை!
  அங்கீகாரத்திர்கேங்குவதில்லை!எப்போதும், எங்கும்,  வாசமும் வண்ணமும் 
  தப்பாது தருமவைகாண!ஒப்பிலாகுணமதை உள்வாங்கு தோழா!-அங்ஙனம்
  வாசம் வீசிமகிழ் எழுத்தாளா!

 9. எண்ணத்தால் கருசுமந்து 
  கைவண்ணத்தால் உருவேற்றி 
  விரல்வழி பிரசவிக்கும் ஒவ்வொரு படைப்பும் 
  நாம் சுமக்காது சுமந்து 
  பெற்ற குழந்தைக்குச் சமம்….
  ===
  உன் படைப்பு உன்னதமானது 
  என்று அறிவார்ந்தோர் வாய்மொழியால் 
  கேட்கையிலே பிறக்கும் ஆனந்தத்திற்கு 
  அளவுகோலே கிடையாது …
  ===
  வேறுபட்ட குணங்கள் போல 
  மாறுபட்ட கருத்துகளும் உலவுகின்றன உலகில்…
  படைப்புகள் சரியானதாக படவில்லை என்றாலும்..
  படைப்பாளியின் மனம் புண்படாத வகையில் 
  இருக்கவேண்டும் கருத்துக்களும் விவாதங்களும்….
  ===
  கதையில் வரும் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரம் 
  இன்றைய படைப்பாளிகளுக்கும், கருத்தாளர்களுக்கும் 
  சொல்லும் அறிவுரைகள் மனதுக்கு இதமாகவும்…
  அட.. இப்படித்தான் நாமும் இருக்கவேண்டும் 
  என்றும் உறுதிகொள்ள வைக்கிறது….
  ===
  அருமையான ஆக்கம் நண்பரே….
  வாழ்த்துக்கள்…

 10. Dear Ananthu Sir, Great to see your comments on Vallamai. THANKS A TON!

  வல்லமை நண்பர்களுக்கு, நான் எனது ‘பிரம்மாவைக் கண்டோம்’ கட்டுரையில் திரு. அனந்த நாராயணன் அவர்களைப் பற்றி பின்வருமாறு எழுதியிருப்பேன். அவரே தான் இவர். 

  //குறிப்பாக எனது தந்தையின் ஆத்ம நண்பர் திரு.அனந்த நாராயணன் அவர்கள். அந்தப் பயணங்களில் ஏதாவது அறிவைத் தூண்டும் வகையில் நகைச்சுவையான விஷயங்களைச் சொல்லி எங்களுக்குச் சிரிப்பு காட்டிக்கொண்டே வருவார்…..இந்த மனிதர் தலைமுடி ஒன்று கூட விழாமல், நரைக்காமல், அன்று பார்த்தது போலவே இன்றைக்கும் இளமையாக காட்சி தந்து, எனக்கு தீராத மன உளைச்சலையும், வயிற்றெரிச்சலையும் தந்து கொண்டிருக்கிறார்.// 

  அவரே ஒரு சிறந்த கவிஞர். ஆன்மிகம், யோகம், ஆரோக்கிய உணவுமுறை பற்றி அவரிடம் பேச ஆரம்பித்தால்,  கருத்துகள் கொட்டும்.

  நன்றி ஐயா!

 11. மகி, கவிதையாவே படிச்சிட்டீங்களா? 

  //எண்ணத்தால் கருசுமந்து 
  கைவண்ணத்தால் உருவேற்றி 
  விரல்வழி பிரசவிக்கும் ஒவ்வொரு படைப்பும் 
  நாம் சுமக்காது சுமந்து 
  பெற்ற குழந்தைக்குச் சமம்…// 

  அருமையான வரிகள்!!

  மிக்க நன்றி, நண்பா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *