மாதவன் இளங்கோ

 

அது ஒரு நீண்ட பாலம்.

அவனொரு விந்தை மனிதன்.

பாலத்தைக் கடக்க

அடியெடுத்து வைத்த ஒருவனுக்காய்

மகிழ்வுற்றான் –

வாழ்த்தினான்.

பாலத்தைக் கடந்து

விலகிப் போன ஒருவனுக்காய்

துயருற்றான் –

பிரார்த்தித்தான்.

பாலத்தின் நடுவே

கடக்கவியலாமல் அயர்வுற்று

விடைபெற்றுக்கொண்ட வேறொருவனுக்காய்

மீளாத்துயருற்றான்.

பிரார்த்தித்தான்.

அவனும் அதே பாலத்தின்

ஏதோ ஒரு புள்ளியில்

நின்றுகொண்டு

‘தெளிவாகத் தெரியுமந்த’

பாலத்தின் மறுமுனைக்கும்

தனக்குமான தூரத்திற்கு

எதிர்காலம் எனப்பெயர் வைத்து,

அது வருவதற்குள் முடித்துவிட

ஒரு நீண்ட பட்டியலொன்றை

தயாரித்தான்.

எண்ணற்ற கனவுகளும்

எண்ணற்ற கவலைகளும்

எண்ணற்ற எதிர்பார்ப்புகளும்

எண்ணற்ற ஏக்கங்களும்

எண்ணற்ற திட்டங்களும்

எண்ணற்ற குறிக்கோள்களும்

நிறைந்த பட்டியல் அது.

பாரம் நிறைந்த அந்தப் பட்டியலை

தன் தலையில் சுமந்துகொண்டு

பாலத்தின் மறுமுனை நோக்கிய

தன்னுடைய பயணத்திற்கு

வாழ்க்கை என்றொரு பெயர் வைத்தான்.

எண்ணற்ற உறவுகளும்

எண்ணற்ற துரோகங்களும்

எண்ணற்ற மகிழ்ச்சிகளும்

எண்ணற்ற துயரங்களும்

எண்ணற்ற சாதனைகளும்

எண்ணற்ற சோதனைகளும்

எண்ணற்ற அனுபவங்களும்

எண்ணற்ற பாடங்களும்

நிறைந்த பயணம் அது.

பயணத்தின் நடுவே

பட்டியல் நீண்டுகொண்டே போனது.

பயணத்தின் சுமை

கூடிக்கொண்டே போனது.

நடையின் வேகம் குறைந்து

மெதுவாக பயணித்து

முன்சென்று கொண்டிருந்தான்

அந்த விந்தை மனிதன்!

நடந்து நடந்து அவனுடல்

ஓய்ந்துகொண்டே போக

அவன் உருவாக்கிய எதிர்காலம்

தேய்ந்துகொண்டே போனது.

பாலத்தின் மறுமுனையும் வந்தது

அங்கே மலைபோல் குவிந்து கிடந்த

பட்டியல்களின் மேல்

எடை பன்மடங்கு கூடியிருந்த

தன பட்டியலையும்

இறக்கி வைத்துவிட்டு,

திரும்பிப் பார்த்தான்.

அந்த மர்ம பாலம் –

காணாமல் போயிருந்தது.

அவனைப் பார்த்து

மர்மமாய் புன்னகைத்தது –

வெற்றிடம்!

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “மர்ம பாலம்

  1. மர்மப் பாலத்தினூடே நடைபெறும் வாழ்க்கைப் பயணம் புதிரானதுதான்; புதிராக இருக்கின்ற காரணத்தினாலேயே அப்பயணம் எதிர்பார்ப்புகள் நிறைந்ததாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாறுகின்றது; இல்லையேல் எத்தனை பேரால் தம் எதிர்காலத்தை மகிழ்வோடு எதிர்கொள்ளவியலும்?
    வாழ்க்கைப் பயணத்தைச் சுவைபட விவரித்திருக்கும் கவிதை அருமை. பாராட்டுக்கள் மாதவன் இளங்கோ!!

  2. வாழ்க்கை பயணம் எங்கே முடியும் என தெரியாமல் பயணிக்கும் ஒரு மர்மப்பயணம். பயணத்தை முடிக்கையில் தான் முடிச்சுகள் கண்ணுக்குத்தெரியும். நல்லதொரு கவிதையை படிக்க தந்தமைக்கு நன்றி.

  3. அருமையான கவிதை இளங்கோ. நம் கல்லூரி ஆங்கில வகுப்பில் வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றி நீ ஆற்றிய உரையை நினைவு படுத்துகிறது கவிதை. வாழ்த்துக்கள்.

  4. அற்புதமான கவிதை!. ரொம்ப ரொம்ப பெரிய விஷயங்களையும், எளிதாக, அநாயாசமாக சொல்வது உங்கள் கவிதைகளின் சிறப்பு என்று தோன்றுகிறது. ‘வெற்றிடம்’ என்ற வார்த்தையோடு முடித்திருப்பது, மிக அருமை!. பாராட்ட வார்த்தைகளில்லை. சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி!

  5. பயணத்தில் சுமை அதிகமிருந்தாலும்,
    பாவில் சுவை குறையவில்லை..
    நன்று.. வாழ்த்துக்கள்…!

  6. கருத்து தெரிவித்த நண்பர்கள் மேகலா, தனுசு, பார்வதி மற்றும் செண்பக ஜெகதீசன் ஆகியோருக்கு நன்றி!!!

    சச்சி, இன்னும் அந்த உரையை நினைவில் வைத்திருக்கிறாயா? 🙂 ‘Life is like an onion! அதை உரித்துக் கொண்டே போகிறோம். இறுதியில் ஒன்றுமே  இருப்பதில்லை.’ என்று பேசினேன் என நினைக்கிறேன். 

    நீண்ட விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்துக்கு வந்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் மின்னஞ்சல்கள் நிரம்பி வழிந்து அவற்றையெல்லாம் வாசித்து, பதிலளிக்கவே ஒரு வார காலமாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு வல்லமைக்கு வரும்போது இதையே உணர்கிறேன். வல்லமையாளர்களின் பலபல சுவையான படைப்புகள், புதிய படைப்பாளிகளின் ஆக்கங்கள் என மிளிர்கிறது வல்லமை!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *