மாதவன் இளங்கோ

 

Author’s Note:

சில சந்திப்புகள் நம் மனதிற்கு இனிமையானதாக அமையும்; சில சந்திப்புகள் நம்மை சிந்தனையாளர்களாக மாற்றும்; சில சந்திப்புகள் நம்மை முட்டாள்களாக்கும்; சில சந்திப்புகள் நம் வாழ்க்கைப் பாதையை  சற்று மாற்றும்; சில சந்திப்புகள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். சில சந்திப்புகள் சில மணித்துளிகளே நீடித்தாலும், நம் மனதில் ஒரு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு தான் ‘முன்னைப் பிறவியில்..’ எழுத உந்துதலாக அமைந்தது.

ஒரு வியாழக்கிழமை மாலை. ப்ரசல்சு மாநகரத்தின் நார்டு (வடக்கு) ஸ்டேஷன். லூவன் நகரம் செல்வதற்காக, இரயிலுக்காகக் காத்திருந்த போதுதான் நான் மேலே கூறிய அந்த ‘கொந்தளிப்பு’ சந்திப்பு நிகழ்ந்தது. அந்த மனிதர், ‘நீங்கள் தமிழரா?’ என்று கேட்டதில் ஆரம்பித்த உரையாடல் ஒரு இருபது நிமிடம் நீடித்தது. சில நிமிட உரையாடலாக இருந்தாலும் என்னை வெகுவாய் பாதித்து விட்டது – தமிழனாக அல்ல; வெறும் மனிதனாகவே!! இன்னும் சொல்லப்போனால் அவர் பகிர்ந்துகொண்ட விதத்தில், மொழியே புரியவில்லை என்றாலும் கூட, எங்களருகே அமர்ந்து கொண்டிருந்த ஃப்ளம்மியரின் மனதிலும் அது ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்கக் கூடும்.

பெல்ஜியத்தின் பிரெஞ்சு பகுதியிலுள்ள லியாஷே (Liege) நகருக்கு செல்லும் இரயிலுக்காக அவர் காத்திருந்தார். நானும் அதே இரயிலில் சென்று இடையில் வரும் ஃப்ளம்மிய நகரான லூவனில் (Leuven) இறங்க வேண்டும். வண்டியிலும் அவர் பேச்சு தொடர்ந்தது. நான் அமைதியாக அவரருகே அமர்ந்து அவர் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும், என் மனது மட்டும் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

‘காலம் நிச்சயம் மாறும்; விடியல் பிறக்கும்!’ என்று கூறிவிட்டு , லூவன் நகரில் இறங்கிய என் மனதில் ஏராளமான எண்ண ஓட்டங்கள், கேள்விகள், கொந்தளிப்புகளை ஏற்படுத்திவிட்டு அவர் விடைபெற்று இரயிலோடு சென்று விட்டார். அப்போது  வேறொரு சமயத்தில், வேறொரு இடத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வர, இவையிரண்டையும் இணைத்துப் பார்க்கையில் ‘முன்னைப் பிறவியில்..’ பிறந்தது.

வீட்டிற்கு வந்தவுடன், அதே வேகத்தில், அதே மனநிலையில் ஒரு இருபத்து ஐந்து நிமிடத்தில் எழுதியதைத்தான் இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இதோ… முன்னைப் பிறவியில்… 

இம்மையில்,

என் பெயர் வேதநாயகம்.

 

காதலில் விழுந்து,

திருமணம் முடிந்து,

ஐந்து ஆண்டுகளோடிய பின்னும்

மழலை இல்லை வீட்டினிலே!

 

முதல் குழந்தைகருவிலே மரித்தது!

இரண்டாவதுஇறந்தே பிறந்தது!

மூன்றாவதோபிறந்து இறந்தது!      

 

உற்றார் உறவினர் –

துரத்தி அடித்தனர்!

மருத்துவம் பாரென்றனர்!

கருக்காவூர் போவென்றனர்

திருமலை நடவென்றனர்!

தானம்புரி என்றனர்!

 

அவர்தம் பரிகாசப்

பேச்சுகளைக் கேட்டுக்கேட்டு,

நாணிக் குறுகினோம்,

நானும் என் மனையாளும்!

ஓடி ஒளிந்தோம்.

உற்றார் உறவினரின்,

தொடர் பறுத்தோம்!

 

மூலகாரணம் அறிந்திடல்

முக்கிய மென்றார்,

நண்பர் ஒருவர்.

அவர் நாடச் சொன்னது

நாடி சோதிடம்‘!

 

நாடி‘ நாடித்

தேடி ஓடினேன் –

வைத்தீசுவரன்கோவில்!   

 

ஓலைகள் பல அலசியபின்

சோதிடர் சொன்னார் என்னிடமே:

முன்னைப் பிறவியில் நீ,

அந்தத் தீவினில்’ பிறந்தவன்!

பந்துக் களுடன் கூட்டாய்

செய்தாய் பல நீ உயிர்வதைகள்.

அதற்கு விலையே,

இப்பிறவியிலே உனக்கு

இத்தனை சித்ரவதைகள்!”

 

சோதிடர் சொன்னதை நான்,

துளியும் நம்பவில்லை!

வீடு திரும்பினேன்.

நாடி சோதிடத்தை,

நம்பி ஓடுபவர்கள்

அனைவருமே அவிவேகிகள்,

என்றெண்ணிச்

சிறிது கண்ணயர்ந்தேன்.

 

கனவிலே,

கடல் கடந்து சென்றேன்.  

அங்கேபச்சை உடையணிந்த

வெறிபிடித்தக் கூட்டமொன்று,

வளைத்துப் பிடித்தது –

சில அப்பாவி மக்களை!

அதில் ஆடவர் சிலர்,

பெண்டிர் பலர்,

நிறைமாதக் கர்ப்பிணிகள் சிலர்

சிறார்களோ பலர்.

 

பிடித்தோம்!” என்றும்,

சிக்கினர்!”  என்றும்,

கொக்கரித்தது,

அந்தப் பச்சை உடையணிந்தக் கூட்டம்!

 

அதோ!

அந்த கூட்டத்தின் தலைவன்!

அவன் என்னைப்போல்!

அது நானா?

எனக்கு என் நண்பர்கள்

வைத்த பெயர் ‘சாந்த சொரூபி‘ அன்றோ?!

ஆனால்அந்தக் கொடூர முகம்?

அதில் குடிக்கொண்டிருந்த வெறித்தனம்!

அது நிஜமாய் நான் தானா?

ஆம்நானே தான்!

அந்தச் சிரிப்பு

அந்த அசுரச் சிரிப்பு?

அதற்குச் சொந்தக்காரன்?

அதுவும் நானே தான்!

 

பெண்களைசிறார்களை

மட்டும் விட்டு விட

ஆடவர் வேண்டினர்

கர்ப்பிணிகளை மட்டும் விட்டு விட

பெண்டிரும் கதறித் துடித்தனர்!

ஒன்றும் புரியா மழலைகளோ,

ஒளிந்து அழுதன – 

சேலையின் மறைவில்!

அனைவரையும் விட்டு விட,

கிழவர்கள் சிலர் – என்

காலில் விழுந்து மன்றாடினர்!  

 

நான் தந்த பதிலோ,

சிரிப்பு மட்டும் தான்!

ஏளனச் சிரிப்பு!

இடிச்சிரிப்பு!

 

சில நிமிடங்களில்,

வெடிச்சிரிப்பு மறைந்தது,

வெறித்தனம் புகுந்தது,

வெறிச்சிரிப்பானது!

கண்கள் சிவந்தது,

வானம் பார்த்தோம்,

உரக்கக் கத்தினோம்!   

 

வெட்டிச் சாய்த்தோம்

ஆடவர் கைகளை – பின்

அவர்தம் கால்களை – அதன் பின்

அவர்தம் தலைகளை!

 

சிட்டுக் குருவிகளைப்  போல்,

சுட்டு வீழ்த்தினோம் – அவர்தம்

சிறார்களை!

ஓடி விளையாடும் வயதில்,  

அவர்தம் உடல்களில் – எம்

துப்பாக்கிக் குண்டுகள்

விளையாடின!

 

கதறினர் பெண்டிர் – அவர்

கண்களில் நீர் வற்றும் வரை!

அழுகுரல்கள் நிறைந்த

அந்த அவல ஓசை,

எங்கள் செவிகளில்

தேனினு மினிய’ 

நாதமாய் ஒலித்தது!

 

சபித்தனர் எங்களை:

நீங்கள் கொன்று குவித்த

அவைகள் –

எம் பிள்ளைகள் அல்ல!

உம் பிள்ளைகள்!

அவைகளுக்கும் இது நேரும்!

அதுவரைநீங்கள்

எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

 

இங்கே புதைக்கப்படும்,

ஒவ்வொரு உடலும்,

விதைகள்!

அவைகள் மரமாய் வளர்ந்து

உங்களைச் சாய்க்கும் நாள் வரும்!

அதுவரைநீங்கள்

எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

 

நிராயுதபாணிகளை நிர்வாணப்படுத்திச்

சுட்டுக் கொல்லும்

உங்களைஉங்கள் பாவங்களே

ஆயுதங்களாய் மாறித்

தாக்கி அழிக்கும்!

அதுவரைநீங்கள்

எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

 

‘நாய்நிலைக்கும் கீழ்நிலை

எம்நிலை’ கண்டு

கொக்கரிக்கும் நீவீர் – நாளை

உம்நிலை மாறுகையில்

கதறி வீழ்வீர்கள்!!

அதுவரைநீங்கள்

எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

 

இயற்கை தந்த மண்ணை ஆள,

இன்றெம்மைக் கொல்லும் உம்மை

இனிதாய் வாழவிடுமா இயற்கை?

இந்நிலத்தை அதன் சீற்றமே,

சிதைத்தெறியும் நாள் தூரமில்லை!

அதுவரைநீங்கள்

எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

 

ஆம்எம் மக்களின்

சதை தின்று,

எம் குஞ்சுகளின்

குருதி குடித்த உம்மை

அந்தக் கடல் குடிக்கும் நாள் வரும்!

அதுவரைநீங்கள்

எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

 

உங்கள் ஒவ்வொரு கொலைக்கும்,

உங்கள்  சந்ததி விலை கொடுக்கும்!

ஏன்இன்னொரு பிறவி

என்று ஒன்று இருப்பின்,

நீங்களே அதற்கு விலை கொடுப்பீர்கள்!

அதுவரைநீங்கள்

எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

 

நீங்கள் கொன்று குவித்த

அவைகள் –

எம் பிள்ளைகள் அல்ல!

உம் பிள்ளைகள்!

அவைகளுக்கும் இது நேரும்!

அதுவரைநீங்கள்

எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

 

எம் பிள்ளைகளா?

ஹா ஹா ஹா” என

மீண்டும் அதிபயங்கரமாய்,

அசுரத்தனமாய்ச் சிரித்தோம்!

 

கொலைவெறிகாமவெறியும் ஆனது!

பேதை முதல்

பேரிளம்பெண் வரை  

ஆளுக்கு ஒன்றாய்ப் பகிர்ந்து,

இழுத்துச் சென்றோம்!

கதறக் கதறச்

சூறையாடினோம்!

சூறையாடிய பின்

சிதைத்தோம்

சுட்டு வீழ்த்தினோம்!

 

அங்கே பாரென்றான் தோழன்!

அவன் காட்டிய திசையில்,

கர்ப்பிணிப் பெண்ணொருத்தி,

மடிந்து கிடந்தாள்!

வயிற்றினில் சுட்டேன்!

சுட்டுச் சிரித்தேன்!

 

சிரித்தேன்சிரித்தேன்!

இடியெனச் சிரித்தேன்!

 

அந்த வயற்காட்டை

இடுகாடாய்சுடுகாடாய்,

பூலோக நரகமாய்

மாற்றிக் காட்டி இருந்தோம்!

எங்கள் சாதனைகளைக் கண்டு

குதூகலித்தோம்!

 

வானத்தில் வட்டமிடும்,

வல்லூறுகளாய்ச் சுற்றிப் பார்த்தோம்!

 

எங்கெங்கு காணினும்

உடையில்லா உடல்கள்!

சிதைக்கப்பட்ட உறுப்புகள்!

அறுபட்ட தலைகள்!

அவற்றினூடே ஓடிய

குருதி ஆறு!

 

ஹா ஹா ஹா!”

மீண்டும் சிரித்தேன்!

உடல்களின் மீதேறிக் குதித்துத்

தாண்டவ மாடினோம்!

 

திடீரென,

நிலை தடுமாறி

கீழே விழுந்தேன்,

ஆவென்று கத்தி,

விழித்தேன்‘!

 

அது கனவா?”

 

இதயம் இரைத்தது,

தேகம் நடுங்கியது,

தலை கனத்தது,

கண்களில் கண்ணீர்

வழிந்து ஓடியது!

 

ஆயிரமாயிரம் எண்ணங்கள்

ஆணிபோல் என் நெஞ்சில்

அறைந்ததாய் உணர்ந்தேன்!

 

எனக்குள் இப்படி ஒரு மிருகமா?”

 

ஐயோஅந்தக் குழந்தைகள்!!!”

 

முன்தினப் பிறவியில்,

நான் கொன்றது,

அவர்கள் எவருடைய

குழந்தைகளையோ அல்ல!

என்னோடு இன்று 

வாழ்ந்திருக்க வேண்டிய

என் குழந்தைகளே!”

 

எந்த இனத்தை அழித்துக்

கொக்கரித்தேனோ,

அதே இனத்தில்

இன்று நானா?”

 

இனமென்ற குறுகிய

வட்டத்திற்குள் நான்

சிக்க வேண்டாம்!

அவர்களெல்லாம் மனிதர்களல்லவா?

வெறும் மனிதனாகவே,

வெட்கித் தலை குனிகிறேன்!” 

 

அந்த இரத்த பூமி!”

 

அந்த உடல்கள்!”

 

பொசுக்கப்பட்ட அந்த பொடியன்கள்!”

 

அந்த கதறல்கள்!”

 

என்றோ செய்த

என் குற்றங்கள்          

என் கண்முன்னே

படமாய் ஓடின!

 

கதறிக் கதறிக்

கடவுளை வேண்டினேன் –

வேண்டாம் எனக்கு

பெண் குழந்தைகள்!

ஏனெனில்அவர்கள்

கண்டிப்பாய்ச் சூறையாடப்படுவார்கள்!”

 

மீண்டும் வேண்டினேன் –

இன்னொரு பிறவி இருப்பின்,

நானும் பெண்ணாய்ப்

பிறந்திடல் வேண்டாம்!

ஏனெனில்நானும்

நிச்சயமாய் சூறையாடப்படுவேன்!”

 

கடவுளே

என்று மீண்டும் கத்திக் கதறினேன் !

 

ஓடி வந்தாள் மனையாள்!

என்னவென்று கேட்டாள்,

பதறியபடி!

 

அந்தத் தீவினில்

குழந்தைகளையுமா கொன்றார்கள்?”

என அதிர்ச்சியுடன் கேட்டேன்.

 

தீவிரவாதம் பேசாதீர்,” என்றாள்!

 

சிந்தித்தேன் –

கொடூரக் கொலைகளை

எதிர்த்து இந்த மண்ணில்

கொடுக்கப்படும்

குரல்களெல்லாம் ,

தீவிரவாதத்தின் குரல்களாக

மாற்றிக்காட்டியது

யார் குற்றம்?”  

 

என்னவென்று மீண்டும் வினவினாள்

என் மனையாள்.

அதற்கு பதிலாய்,

நான் தந்தேன் உபதேசம்,

அவளுக்கு மட்டுமல்ல,

என் முன்னைப்பிறவி சக மிருகங்களுக்கும்:

நீ விதைக்கும் ஒவ்வொன்றையும்,

நீ அறுவடை செய்தே ஆகவேண்டும்!

நீ கொலைகாரன் என்றால்,

நீ கொல்வது மற்றவரை அல்ல!

உன்னையே தான்!

நீ செய்வது கொலையல்ல,

தற்கொலை!

ஏனெனில்,

நீ கொல்லும் ஒவ்வொரு முறைக்கும்,

நீ ஒருமுறை கொல்லப்படுவாய்!    

 

முன்னைப் பிறவியில் நான் மிருகம்!

என் கொலைகளுக்கு விலையாய்,

இம்மையில் நானே அந்த

மிருகம் தின்ற ஆடாய்!

 

இம்மை மிருகங்களே!

அங்கிருந்தவன்,

இங்கிருந்து பேசுகிறேன்!

ஆடாதீர்ஆவீர்கள் ஆடுகளாய்!

யாரும் ஆக்கவேண்டியதில்லை!

நீங்களாகவே ஆவீர்கள்!

  

பழிக்குப் பழி

சரியான பதிலல்ல!

கண்ணுக்குக் கண்

சரியான பதிலல்ல!

கொலைக்குக் கொலை

சரியான பதிலல்ல!

ஆனால்,

இயற்கைக்குக்

கண்ணனையும்,

நியூட்டனையும்,

தெரிந்த அளவிற்கு,

காந்தியம் தெரியாது!

 

ஊழிற் பெருவலி யாவுள?’

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “முன்னைப் பிறவியில்… (கவிதைக்கதை)

 1. கதம்பம்! வாழ்த்துகள்!!

  //‘நாடி‘ நாடித் தேடி ஓடினேன்//

  நானும் ஒரு நாள் போனேன். உங்களுக்குக் கட்டு தஞ்சாவூர்ல இருந்து வரணும்னு சொல்லிப் போட்டாரு. இஃகி, அவர் கேட்ட கேள்விகளுக்குப் பெரும்பாலும் தெரியலைன்னுதான் நாம சொன்னது. 🙂

 2. நெஞ்சைக் கனக்கச் செய்யும் பதிவு. படித்து முடித்த போது கண்களில் நீர் கொட்டியது. ‘சிரித்துச் செய்த பாவத்தை அழுது அழுது தான் தொலைக்க வேண்டும்’ என்ற வழக்கு மொழி நினைவுக்கு வந்தது. நெஞ்சில் அறையும் வரிகள் ஒவ்வொன்றும். 
  கர்ம வினைகளின் முடிச்சுக்கள் கடினமானவை. விடுவிப்பதற்கு இறையருளே துணை!!.

 3. Ah! Laudable, indeed, laudable. I was wondering what this was all about until I hit upon ‘அந்தத் தீவினில்’ – which gave it all away! Got it, the point! 🙂
  Truth need not be camouflaged but sometimes one wishes to be “Politically correct”!
  Keep them coming, looking forward to reading more.

  Darn right, the comment is in English. That is because my current computer does not support Asian fonts. A temporary discomfort I shall have to put up with!

  Cheers,
  Bhuvaneshwar

 4. உணர்ச்சிப் பிழம்பாய் வெடித்திருக்கிறாய் இளங்கோ. தொடரட்டும் உன் கவிதைப்பணி. வாழ்த்துக்கள்.

 5. @பழமைபேசி, சகோ எனக்கும் முதலில் ஓலை இல்லை என்று கூறிவிட்டார்கள். 🙂 பிறகு ஒரு அனுபவத்திற்காக வேறொரு சோதிடரிடம் (அதே ஊரில்) சென்று, அங்கு சில  கேள்விகளுக்கு பதில் கூறியதும், ஓலை தானாய் கிடைத்துவிட்டது. 
  ஓலையில் எழுதப்பட்டிருந்தது எனக்கு சுத்தமாக புரியவே இல்லை. அதில் ஏதோ எழுதப்பட்டு இருக்கும்,  அதையும் ‘புரிந்து கொண்டு’ (?) நமது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி பாடல்களை எழுதிக் கொடுப்பார் சோதிடர். ஓலையில் ‘எழுத்துகள் வேறு மாதிரி இருக்கிறதே’ என்று கேட்டதற்கு, ‘அதெல்லாம் பழைய தமிழ் எழுத்துகள்; நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை’ என்று கூறி விட்டார் சோதிடர். கொஞ்சம் அதிகமாக பணம் கொடுத்தால் கேசட்டில் பதிவு செய்து கொடுப்பார். இப்போது ஒருவேளை வீடியோ எடுத்து சிடி அல்லது பென் டிரைவில் (அல்லது யூட்யூபில் ப்ரைவேட் லிங்க்) கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. Windows 8 Release ஆனால், அது பற்றி தமிழில் புத்தகம் வருகிறதோ இல்லையோ, இதுபோன்ற விஷயங்களில் மாற்றம் வெகுவிரைவில் நடந்து விடும்.  
  இருந்தாலும், அவர்களது திறமையையும், தைரியத்தையும் நான் மெச்சுகிறேன். 🙂      @சச்சிதானந்தம், @பார்வதி, தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே!! 

  @புவனேஸ்வர்,
  தங்கள் வாழ்த்துகளுக்கு, கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே! 
  //Truth need not be camouflaged// I agree with you, buddy! But, that’s definitely not the intention.  சொல்லப்பட்டதை விட சொல்லாமல் விடப்பட்டவைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பார்கள். சொல்லாமல் விட்டதால் உண்டான வெற்றிடத்தை வாசகர்களே நிரப்பிக் கொள்ளும்போது படைப்பு பலம் பெரும் என்றும் படித்திருக்கிறேன். ‘அந்தத் தீவு’ எதுவென்று சொல்லத் தேவையே இல்லை என்று தோன்றியது. சொல்லாதவை முக்கியம். அதேபோல் கவிதையின் கருப்பொருளும் முக்கியம் என்றும் தோன்றியது.
  மற்றபடி, அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. Thanks again for your motivating words!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *