மாதவன் இளங்கோ

எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், எழுத்துலகில் இருக்கும் எத்தனையோ ஜாம்பவான்களை விடவும் ஒருபடி மேலே சென்று, பெரிதாக நாம் ஒன்றும் செய்து விட முடியாது. ஆனாலும், என் ஆதர்ச எழுத்தாளர்களின் சீரிய எழுத்துகளின் உந்துதலாலும், தமிழின் மேல் கொண்ட காதலாலும், மனதில் உதிப்பதையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு கடைஞன் நான்.

சில சமயங்களில் மின்னல்போல் பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அந்த எண்ணத்தின் பின்னால் இடியைப் போல கிடுகிடுவென சிறிதுநேரம் ஓடினால், அதைப்பற்றிய கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் முன்னே வந்து கொட்டும். சிதறி விழும் சிந்தனைகளைத் தமிழில் கோர்த்துப் பார்த்தால் அது ஒரு கட்டுரையாகவோ, கவிதையாகவோ அல்லது கதையாகவோ வடிவெடுக்கிறது.

இந்தக் கட்டுரையில் நான் எழுதப்போகும் விஷயம் கூட அப்படி பளீரென மின்னிய ஒன்று தான். சில நாட்களுக்கு முன்னாள், ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருந்த போது உதித்த எண்ணம். ஆனால், வேடிக்கை என்னவென்றால் இதற்கு தலைப்பு வைக்கத்தான் மெனெக்கெட்டு சிறிது நேரம் சிந்திக்க வேண்டியதாய்ப் போயிற்று.

என்னைப் பொறுத்தவரை மனம் என்பது ஒரு ‘விவாதக்களம்’; சிந்திப்பது என்பது எனக்குள் ‘விவாதித்துக் கொள்வது’ போன்றது. ஏனெனில், நான் ஒவ்வொருமுறையும் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும்போதெல்லாம், மூன்று பேர் கொண்ட ஒரு ‘திறனாளர் குழு’ (Brain Trust) என் மனவெளியில் புகுந்து விடுகிறது. ‘மாதவன் இளங்கோ’, ‘மாதவன்’, மற்றும் ‘இளங்கோ’ ஆகிய வல்லுநர்கள் தான் அந்த குழு உறுப்பினர்கள். இவர்கள் மூவரும் கடுமையாக விவாதித்து விட்டு, முடிவாக எனக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.

சில நேரங்களில் முடிவுகளைக் கூட அவர்களே எடுத்துவிடுவது உண்டு. பல நேரங்களில் முடிவே எடுக்காமல் காலங்காலமாக, இரவு பகலாக விவாதிக்கொண்டே இருப்பார்கள். இன்று சிறிது விரைவாகவே முடிவெடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

“எனது கதாநாயகர்கள் என்று தலைப்பு வைக்கலாம்.” என்று மாதவன் கூறினார்.

“கதாநாயகர்களா? வேண்டவே வேண்டாம்! நம் நாட்டில் கதாநாயகர்கள் என்றாலே திரைப்பட நடிகர்கள்தான் என்பது போலாகிவிட்டது. வேறு ஏதாவது சொல்லுங்கள்.” என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் இளங்கோ.

“எனது முன்மாதிரிகள்?” என்று மாதவன் இளங்கோ அவர் தரப்பிற்கு ஒரு தலைப்பை முன்வைத்தார்.

“முன்மாதிரிகள் என்றால் Role Models தானே? அதெல்லாம் வேண்டாம். அதை இவருடைய தொழிலோடு தொடர்புபடுத்தி விடுவார்கள். இல்லையென்றால் யாரேனும் ஒரு அரசியல்வாதியையோ, தொழிலதிபரையோ நினைத்துக் கொள்வார்கள்.” என்று மாதவன் மறுப்பு தெரிவித்து விட்டார்.

“என்னைக் கவர்ந்த எளிய மனிதர்கள் – இது எப்படி இருக்கிறது?” என்று மீண்டுமொரு தலைப்பை முன்மொழிந்தார் மாதவன் இளங்கோ.

அவர் கூறியதையே மற்ற இருவரும் வழிமொழிந்தாலும், ‘எளிய’ என்கிற சொல்லை மட்டும் நீக்கிவிடலாம் என்று இளங்கோ பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை மற்ற இருவரும் ஆதரித்து, எனக்கு ஆலோசனை வழங்கியதால், அதை ஏற்றுக்கொண்டு இந்த கட்டுரையைத் தொடர்கிறேன்.

அவர்கள் குறிப்பிட்டதுபோல், இன்று நான் ஏதேனும் ஒரு நடிகரைப் பற்றியோ, அரசியல்வாதியைப் பற்றியோ அல்லது தொழிலதிபரைப் பற்றியோ சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், நிச்சயமாக உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

ஏனெனில், என்னைக் கவர்ந்த மனிதர்களில் பெரும்பாலானோர் சாமான்யர்கள் தான். அவர்கள்தான் என் முன்மாதிரிகள்! அவர்கள்தான் என் கதாநாயகர்கள்!

எனது வாழ்க்கைப் புத்தகத்தின் வாசித்து முடிக்கப்பட்ட பக்கங்கங்களைச் சற்று புரட்டிப் பார்த்தால், அவைகளெல்லாம் இப்படிப்பட்ட எத்தனையோ எளிய மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கைமுறைகள், அவர்களுடன் பழகியதால் எனக்குள் உண்டான மாற்றங்கள், அவர்களிடமிருந்து நான் கற்ற விஷயங்கள் – இவற்றின் பதிவுகளால்தான் நிரம்பியுள்ளது.

இன்று அப்படிப்பட்ட ஒரு யதார்த்தமான மனிதரைப் பற்றித் தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

எனக்கு அப்போது பன்னிரண்டு வயது இருக்குமென்று நினைக்கிறேன்.

எங்கள் வீட்டுத் தெருமுனையில் ஒரு காமாஜர் சிலை இருந்தது. தினமும் காலை வேளையில் அங்கு ஒரு சிறிய கூட்டம் கூடும். ஒரு வயதான பெரியவர், சிலைக்கு அருகே இருக்கும் ஒரு கல்லின்மேல் நின்றுகொண்டு, ஏதோ சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருப்பார். அதற்கு அவரைச் சுற்றி நின்றுகொண்டிருக்கும் மனிதர்கள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

அவர் பெயர் சுப்ரமணி – படிப்பறிவில்லாத ஒரு மேஸ்திரி. அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் அவரிடம் பணிபுரியும் கட்டிடத் தொழிலாளிகள்! அவர் என்னுடைய சிற்றூரில், நான்கைந்து இடங்களில் ஒரே சமயத்தில் கட்டிடங்களும், வீடுகளும் கட்டிக்கொண்டிருந்தார்.

ஆனால், அவர்கள் அப்படி அங்கு என்னதான் பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வமிகுதியால், ஒருநாள் அவர்கள் அருகே சென்று நடப்பவற்றை கவனித்தேன். அந்த கட்டிடடத் தொழிலாளிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கட்டுமானப் பணிகளின் நிலவரம் குறித்து பெரியவருக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தனர்.

பெரியவர் அவர்களைக் கேட்ட கேள்விகள் இவைதான்:

1 . நீ நேற்று என்ன செய்தாய்?

2 . இன்று என்ன செய்யப்போகிறாய்?

3 . களத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? (கட்டுமான பொருள் பற்றாக்குறை அல்லது வேறு ஏதேனும்)

4 . எங்கெல்லாம் முக்கியமான பணிகள் நடக்கின்றன? (அடித்தளம், கூரை முதலியன)

5 . யாருக்காவது அடி பட்டதா?

6 . யாரேனும் இன்று விடுமுறை எடுத்துள்ளார்களா?

இவ்வாறு கேட்டுவிட்டு, தொழிலாளிகள் எழுப்பிய பிரச்சினைகளுக்குத் தன்னுடைய தீர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார். கடினமான பிரச்சினைகளைக் கூட அவருக்கே உரித்தான பாணியில் – இன்முகத்தோடும், வேடிக்கையாகவும் பேசியபடியே ஆலோசனை வழங்குவதில் மனிதர் கெட்டிக்காரர்.

பிறகு, அவர் செய்த செயல் எனக்கு அப்போது புரியவில்லை. சில பணியாளர்களிடம் மட்டும் “நேற்று நீ எங்கு சென்றாய்?” என்று கேட்டு விட்டு, “இன்று இவனோடு போ!” என்று கூறி வேறு இடத்துக்கு அனுப்பினார்.

இவையெல்லாம், நான் சிறுவயதில் அவர் அருகில் இருந்து கவனித்தது! இன்னும் சொல்லப்போனால் எங்களுடைய வீட்டைக்கூட அவர்தான் கட்டினார். அதனாலேயே அவருடன் மேலும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அறிய பல விஷயங்களை எல்லாம் ஏதோ அற்பமான சமாச்சாரங்கள் போல போகிற போக்கில் வேடிக்கையாக விளக்கிக்கொண்டு போவார்.

காலங்கள் ஓடின.

நான் ஐரோப்பாவில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருக்கிறேன். கற்றறிந்த மேதைகள் விவாதித்துக்கொண்டும், அவர்களுடைய ஆய்வுக்கட்டுரைகளைப் பற்றி மேடையில் உரையாற்றிக்கொண்டும் இருந்தார்கள்.

“Scrum Methodology Vs Traditional Project Management” என்பது தான் தலைப்பு.

குறிப்பு: இசுக்கிரம் (Scrum) என்பது ஒருவகை மென்பொருள் உருவாக்க முறையியல். இதுபற்றி நான் எழுதியுள்ள குறுங்கட்டுரையை இங்கு காண்க –  http://ta.wikipedia.org/s/5zx

கருத்தரங்கில் சிலர் ‘daily stand -up meetings’ பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் கருத்து தெரிவித்துக்கொண்டு  இருந்தார்கள்.

என் நினைவுகள் 21  ஆண்டுகளுக்கு முன்னர் பறந்தது!

1 . நீ நேற்று என்ன செய்தாய்?

2 . இன்று என்ன செய்யப்போகிறாய்?

3 . களத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? (கட்டுமான பொருள் பற்றாக்குறை அல்லது வேறு ஏதேனும்)

கருத்தரங்கில் –

சிலர் தங்கள் பணிகளை ‘முக்கியத்துவத்தின் அடிப்படையில் எப்படி வரிசைப்படுத்துவது?’, ‘அவ்வாறு செய்வதின் அனுகூலங்கள் என்ன?’, மற்றும் ‘மாஸ்கோ (MoSCoW) முறை’ என்று ஏதேதோ புரியாதவைகளைப் பற்றியெல்லாம் உரையாற்றினர்.

என் நினைவுகள் மீண்டும் 21  ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது!

4 . எங்கெல்லாம் முக்கியமான பணிகள் நடக்கின்றன? (அடித்தளம், கூரை முதலியன)

இன்று…

சிலர் ‘பணியாளர்கள்தான் ஒரு நிறுவனத்தின் சொத்து’ என்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றியும் போதித்துக்கொண்டிருந்தனர்.

அன்று…

5 . யாருக்காவது அடி பட்டதா?

6 . யாரேனும் இன்று விடுமுறை எடுத்துள்ளார்களா? 

இன்று…

சிலர் திறமான முறையில் எப்படி ‘Knowledge Management’ புரிவது என்றும் ‘Staff Rotation’ பற்றியும் விவாதித்தனர்.

அன்று…

சில பணியாளர்களிடம் மட்டும் நேற்று நீ எங்கு சென்றாய்?” என்று கேட்டு விட்டு, “இன்று இவனோடு போ!” என்று கூறி வேறு இடத்துக்கு அனுப்பினார்.

என் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடின..

…. இருபது வருடங்களுக்கு முன், ஒரு சாதரணரிடமிருந்து, கற்றுக்கொண்ட அதே விஷய ஞானத்தை, படித்த மாமேதைகள்  ஆங்கிலத்தில்  விளக்குவதைக்  கேட்பதற்கா  நான்  ஒரு லட்ச ரூபாய் (1400€)  செலவளித்தேன்?

…. அவர் பேசவில்லை, நடைமுறைப்படுத்தினார்!

…. இவர்கள் பேசும் வார்த்தைகளில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லாத போது, எங்கே, என்றைக்கு நடைமுறைப்படுத்த போகிறார்கள்?

…. இந்த எளிய விஷயங்களைப் புரியவைக்க ஒரு விவாத மேடை வேறு!

…. எளிய வழிமுறைகளை சந்தைப்படுத்துவதற்கு என்றே இடையிடையே திணிக்கப்படும் எவருக்கும் விளங்கா பிதற்றொலிகள் வேறு!

அறிவு என்பது புத்தகங்களைப்  படித்துவிட்டுப்  பிதற்றும் மேதைகளுக்கும்,  ‘so called’ சான்றிதழ் பெற்ற  வல்லுநர்களுக்கும் (certified professionals)  மட்டுமேயான  சொத்து அல்ல.

இது போன்ற சாதாரண மனிதர்களிடம்தான் உலக வாழ்க்கைக்குத் தேவையான ‘இயல்பறிவு’ புதையலாய் பதுங்கிக்கிடக்கிறது.

ஆனால் இன்று பலருக்கு இயல்பறிவு என்பதே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது – இந்தப் பலரில் நானும் அடக்கம்!

இந்த நிகழ்வு கதையும் அல்ல! என் கற்பனையும் அல்ல. உண்மை! நீங்கள் இந்தக் கட்டுரையை  வல்லமையில்  படித்துக்கொண்டிருப்பது எந்த அளவிற்கு உண்மையோ – அந்த அளவிற்கு உண்மை. என்னைத் தட்டி எழுப்பிய   உண்மையும் கூட!

இந்தக் கட்டுரையை என் கதாநாயகரான ‘சுப்பிரமணி மேஸ்திரிக்குச்’ சமர்ப்பிக்கிறேன். ஆம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், என் கதாநாயகர்களில் பெரும்பாலானோர்  இத்தகைய சாமான்யர்களே; ஆனால் சாமான்யப்பட்டவர்களில்லை. ‘உருள்பெருந்தேர்க்கு அச்சாணிகளாம்’  இவர்களின் ‘உருவுகண்டு எள்ளாமல்’, சாமான்யர்களைப் படித்து சாதனையாளர்களாக முயற்சிக்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், திருபாய் அம்பானி போன்ற சாதனையாளர்களைப் பற்றிய புத்தகங்களை வாசித்தால்கூட, அவர்கள் சாமானியர்களாக இருந்தபோது செய்தவற்றயே பெரும்பாலும் அவை பேசுகின்றன. அவர்களுக்கு இருந்த கடின உழைப்பு, ஒழுக்கம், உந்துதல், இவையனைத்திற்கும் மேலாக அவர்களுக்கு இருந்த ‘இயல்பறிவு’ – இவற்றிற்குப் பரிசாகத்தான் காலம் அவர்களை சிகரத்தில் வைத்து அழகு பார்த்தது.

என் கதாநாயகரும்  சிகரம் தொட்டவர் தான்! ஆனால் என்ன? அவர் தொட்ட ‘சிகரத்தின் உயரம்தான் வேறு!’.

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “என்னைக் கவர்ந்த மனிதர்கள்..

 1. நன்றாக எழுதுகிறீர்கள் . வாழ்த்துகள் , தொடருங்கள் . நீங்கள் திரு .பாரதி அவர்களின் மகனா . அப்படியானால் கிருஷ்ணகிரி பெருமாள் ராஜு அய்யா வீட்டில் சந்தித்திருக்கிறேன் . நன்றி

 2. இளங்கோ, உன்னைக் கவர்ந்த மற்ற மனிதர்களையும் அவர்களிடமிருந்து பெற்ற இயல்பறிவையும் பற்றி அறிந்து கொள்ள அவளாக இருக்கிறேன் நண்பா.

 3. திரு. ரகுராமன் அவர்களுக்கு,  வணக்கம். தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிச் செண்டு!! நான் திரு பாரதி அவர்களின் மைந்தன் தான். நாம் ஏற்கனவே என் ஞானத்தந்தை ஐயா பெருமாள் ராசு அவர்கள் இல்லத்தில் சந்தித்திருக்கிறோம். தங்களை வல்லமை தளத்தில் காண்பது எனக்கு பேருவகை அளிக்கிறது. தங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். தொடர்பிலிருக்கவும்.    

 4. சச்சிதானந்தம், நன்றி நண்பா! You have my word on that! 

 5. You narrated the practical way of life! Excellent Narration with proper relation!

 6. //இது போன்ற சாதாரண மனிதர்களிடம்தான் உலக வாழ்க்கைக்குத் தேவையான ‘இயல்பறிவு’ புதையலாய் பதுங்கிக்கிடக்கிறது.//

  மிகவும் உண்மை. அந்தக் காலத்தில் எங்கள் குடும்பங்களில் ஆண்கள் வெளியூர்களில்தான் பெரும்பாலும் வேலை செய்ததாகச் சொல்வார்கள். அப்படி இருந்தும் என் பாட்டி போன்றவர்கள் தனியாகவே குடும்பத்தை நிர்வகித்து, குழந்தைகளை வளர்த்தனர். இளம் வயதில் கணவனை இழந்து, கல்வி அறிவில்லாமலேயே குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வந்தவர்களையும் பார்த்து வியந்திருக்கிறேன்.

  //என் கதாநாயகரும் சிகரம் தொட்டவர் தான்! ஆனால் என்ன? அவர் தொட்ட ‘சிகரத்தின் உயரம்தான் வேறு!’.//

  அருமை! நம் நடுவிலேயே இருக்கும் சிகரம் தொட்ட பலரையும் பற்றிச் சிந்திக்க வைத்து விட்டீர்கள். நம் எல்லோருக்குமே நம் பாதை பலராலும் செப்பனிடப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் நீங்கள் உன்னிப்பாகக் கவனித்து, உணர்ந்து, பகிர்ந்திருக்கிறீர்கள். இதனையே தொடராகத் தொடரலாமே! அழகான பகிர்தலுக்கு மிக்க நன்றி.

  (வாசித்துக் கொண்டு வரும்போதே நினைத்தேன், scrum போல இருக்கிறதே என்று…எங்கள் அலுவலகத்திலும் scrum படாத பாடு பட்டு வருகிறது!)

 7. அருமை!  மென்பொருள் உருவாக்க முறையியலில் தனித்து மேலிருந்து கீழ்வந்தாலும் , கீழிருந்து மேல்நக‌ர்ந்தாலும், பயனர் வரையறுத்த சார்பிலே கூடி பயணித்தாலும், நடு வழியில் நாம் விட்டாலும் இல்லை அவர்கள் வெறுத்து  தள்ளினாலும் , திறந்த மூலநிரல் வழி (open source) ஏகினாலும்  பம்பரம்போல் சுருளியாக் சுற்றி மென்பொருள் படைத்தாலும் ,அதிகம்/குறைவான மதிப்பீட்டில் அளித்தாலும் அன்றி இலவசமாய் கொடுத்தாலும் பூரணம் என்பது இருப்பதில்லை. தொழில்நுட்ப வேகமும் வர்த்தகர்களின் பணமீட்டும் வெறியும் போட்டி மனப்பான்மையும் புதுபுது வழிகளாய்கின்றன.  அவை நம் மேல் திணிக்கப்படுகின்றன. இது தற்காலத்தின் எந்திரவாழ்வின் குணம். அக்கால கிராமத்தில் செயல்முறை கணிதம் அறியாமலே கறிகாய்விலைகளை நிர்ணயித்தனர் (Transportation) , வயலுக்கு நீரூற்ற தம் பலத்திற்கேற்றாற் போல் காலஅளவு(Time plan and work  allocation, game theory), தேவையான ஆட்கள் கணித்தனர். ஐயா அந்த கால இட்லி கடைகளில் காலம் கிழமைக்கேற்றாற் போல் உணவுகள் ஆக்கப்பட்டன( queuing theory).  பரிசல் காரரிடம் ரேடார் இருந்ததா? சர்வசாதரனமாக அப்போது அவர்கள் செய்த விஷயம் இன்று மேல்நாட்டிற்கு சென்று ஆங்கிலத்தில் புதுமுகமாக வருகிறது. ஒன்றை தவிர…அப்போது இந்த இன்டர்னெட் இருந்திருந்தால்…..ம்ம்ம்ம்ம்ம்

 8. @தனசேகரன், மிக்க நன்றி நண்பரே!

  @கவிநயா, இங்கும் அதே நிலைமைதான்.    SCRUM – அதுவும் படாத பாடுபட்டு நம்மையும் படுத்தி எடுக்கிறது. SCRUM பற்றி பாடம் நடத்தினால், ‘அணியிலுள்ள ஒருவருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போனால், அதை SCRUM எப்படி தீர்த்து வைக்கும்?’ என்கிறார்கள். என்ன செய்வதென்றே புரியவில்லை. தங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாயிருந்தால் மட்டுமே பின்பற்றுவோம் என்று நிபந்தனை போடுகிறார்கள். ஒரு பாமரர் பின்பற்றிய வழிமுறையை கற்றறிந்த மேதைகளுக்கு விளக்குவதற்கு சிரமப்பட்டபோது தான் இந்தக் கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. நிச்சயம் மேலும் எழுதுவேன். தங்கள் அன்புக் கட்டளைக்கு நன்றி.    

  @சத்தியமணி ஐயா, நான் ஒரு நான்கைந்து கட்டுரையில் எழுதி இருக்க வேண்டியதை ஒரே ஒரு பாராவில் சுருங்கச் சொல்லிவிட்டீர்கள். அருமை! என் கருத்தும் அதே. கல்லூரியில் படிக்கும் போது, Queuing theory சார்ந்து மகிந்த்ரா நிறுவனத்திற்காக ஒரு Project செய்தது நினைவுக்கு வருகிறது. அதில் Project செய்யுமளவிற்கு என்ன இருக்கிறது என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை. கூட்டத்தோடு கோவிந்தா சொல்லியாயிற்று. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *