விசாலம்                                                                                                                                    

பல வருடங்களுக்கு முன் ……… பம்பாயில் தாதர் அருகில் இருக்கும் என் வீட்டிற்கு பள்ளியிலிருந்து வந்துக்கொண்டிருந்தேன் . என் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பார்க்கிலிருந்து மிக அழகான காதிற்கு இனிமையான இசை, தென்றலில் மிதந்து என்னை அப்படியே ஸ்தம்பிக்க வைத்தது .கூடவே ஹார்மோனியத்தின் ஒலியும் அந்த இசையுடன் சேர்ந்து மெருகூட்டின .  நடு நடுவே முருகா என்ற நாமமும் கேட்டது . அந்தப்பார்க் மிகவும் சிறியது . தாதர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறது . அந்த இடம் அநேகமாக மராட்டியர்கள் வசித்து வரும் இடம் . அங்கு தான் பிரகாஷ் படுகோனே . முன்னாள் கிரிகெட் வீரர் தாமானே. மெர்ச்சன்ட், உலகப்புகழ் பின்னணி பாடகி , லதாமங்கேஷ்கர் ஹிந்தி கிளாசிகல் பாடகர் திரு நாரயண் வியாஸ் போன்றவர்கள் வசித்து வந்தார்கள் . இப்போதும் அவர்கள் வீடுகள் அங்கு இருக்கின்றன ஆனால் அவர்கள் அங்கு இல்லை . அங்கு எல்லோருமே மராட்டியர்கள் தான் .இந்த நிலையில் முருகனின் பாடல்கள் அந்த இடத்தில் அமிருதமாக பொழிய எனக்கு வியப்பு ஏற்பட்டது.

PITHUKULI_jpg_2623_2623536f

மாதுங்கா என்றால் சென்னையில் இருக்கும் தி.நகர் மாதிரி….. ஆனால் தாதர் அப்படி இல்லை . அந்த இசையைக் கேட்க நானும் அந்த இடம் சென்றேன். அங்கிருந்தவர் எல்லோரும் வேஷ்டி சட்டையுடன் நெற்றியில் விபூதி தரித்து பயபக்தியுடன் ஒருவரைச்சுற்றி நின்று கொண்டிருந்தனர் அந்த ஒருவர் தாடியுடன் இருந்தார் தலையில் சீரடி பாபாவைப்போல் மஞ்சள் துணி கட்டியிருந்தார். முகத்தில் தமிழ்வாணன் போல் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டிருந்தார் . கொஞ்சம் தூரத்தில் ஒரு கூஜாவுடன் ஒருவர் நின்றிருந்தார் . அவர் அருகில் சென்றேன்

“இங்கு என்ன நடக்கிறது .? இங்கு அமர்ந்து பாடுபவர் யார் ?”

“இவரை உங்களுக்குத்தெரியாதா? இவர் பெரிய முருக பக்தர் . இவர் போக இருந்த ரயில் மூன்று மணி நேரம் லேட் அதனால் இந்த கார்டனில் அமர்ந்து இருக்கிறார்கள் . சில பக்தர்களின் வேண்டுகோளின்படி பாடிக்கொண்டிருக்கிறார்.

” இவர் பேரென்ன ?’

” இவரை எல்லோருக்குமே தெரியும் இவர்தான் பித்துக்குளி முருகதாஸ் “

” ஆ ..  அவரா இவர் .. இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன் . இப்போதுதான் நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது”

என் வீடு மிக அருகில் இருந்ததால் வேகமாக வீட்டிற்கு வந்தேன் என் பள்ளிப் புத்தகங்களை வைத்துவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு திரும்பவும் அந்த இடத்திற்கு வந்து புல்லில் அமர்ந்தேன் ஆஹா இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை

கந்தா, குமரா, வடிவேலா என்று பல பாடல்கள் , பின் திருப்புகழ் என்று அருவி கொட்டுவது போல் அவருக்குரிய பாணியில் பாடிக்கொண்டிருந்தார் அன்றுதான் அவரை முதன் முதலாக பார்த்தேன். அதன் பின் பல தடவைகள் மாதுங்கா பஜனைசமாஜுக்கு வருகை தரும்போதெல்லாம் நான் போவது வழக்கம் பின்னர் அவரைப்பற்றி பல விஷயங்கள் நான் தெரிந்துக்கொண்டேன்

ஆமாம் ! அவர் பெயர் பித்துக்குளி முருகதாஸ் என்று வந்த காரணம் என்ன ?

பிரும்மானந்த பரதேசி என்ற ஒரு சித்தர் இருந்தார் , அவர் உடை ஒன்றும் அணியமாட்டார் ஆனால் அவரது உடலை அவரது தலை முடி மூடி மறைத்தது .அத்தனை நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் . அவரது வயதைப்பற்றி பலர் பலவிதமாகச்சொல்லி வந்தனர் . சிலர் நானூறு வயது என்றும் கூறினர் . ஒரு தடவை அவர் கோயம்பத்தூரில் நடந்துக்கொண்டிருக்க திரு முருகதாஸ் ஒன்பது வயது பையன் .. தெருவில் கல்லை எரிந்து வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான் . அந்த நேரம் நிர்வாணமாக பிரும்மானந்தர் அந்தப்பக்கம்வந்தார் . அவரை இந்த நிலையில் பார்த்ததும் “சே என்ன இவர் இப்படி வருகிறாரே என்று நினைத்து ஒரு பயத்தில் கல்லை அவர் மேல் வீசினான். அவ்வளவுதான் அவர் நெற்றியில் அந்தக்கல் பட்டு பொல பொலவென இரத்தம் வழியத்தொடங்கியது .

“டேய் பித்துக்குளி” ! நீயும் என்னைப்போல் ஒரு நாள் ஊர் சுத்தி முருகன் பெயரைச்சொல்லி முன்னுக்கு வரக்கூடியவன் .நீ ஏண்டா இப்படி செய்தே?’ என்றபடி தன் நெற்றியில் கையை வைத்தார் . என்ன ஆச்சரியம் .உடனே இரத்தம் வடிந்தது நின்று விட்டது . அன்று அவர் மேல் அளவுகடந்த பக்தி ஏற்பட்டு அவர் அழைத்த பெயரான “பித்துக்குளியையே” தன் பெயருடன் சேர்த்துக்கொண்டு பித்துக்குளி முருகதாஸ் ஆனார் . முருகதாஸின் இயற்பெயர் திரு. சுப்பிரமண்யம் அவரது தாயின் பெயர் அலமேலு தந்தை திரு சுந்தரமய்யர் .. நடுத்தர குடும்பமாக இருந்தாலும் இவர் தானம் செய்வதை மிக முக்கியமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார் கேட்பவர்க்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் தண்ணீர் மற்றும் உணவு வாரி வழங்குவார். ஒரு சிறந்த முருகபக்தர். அவருக்குப் பிறந்த அவரது மகனோ ஒரு முருகபக்தன் மட்டுமில்லாமல் முருகதாசனாகவும் ஆகிவிட்டார். ஒரு எட்டு வகுப்பு வரைதான் படித்திருந்த அவர் பின்னால் உலக முழுவதும் சுற்றித் தமிழும், தமிழ்ப்பாடல்களையும் பரப்பி சரவணபவ அலைகளை வீச வைத்தது எத்தனைப் பெரிய சாதனை! அவரது எட்டு வயதிலேயே பல பக்திப் பாடல்கள் அருவி போல் கொட்ட ஆரம்பித்தன, அவரது பதினைந்தாம் வயதில் எங்கும் வந்தேமாதரம் ஒலி நிரம்ப அவர் மனதும் நாட்டிற்கு எதாவது செய்யவேண்டும் என்று தீர்மானிக்க சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். வீட்டிலிருந்தபடி இது செய்ய முடியாது என தீர்மனித்து வீட்டை விட்டு வெளியேறினார், பிரிட்டிஷ் போலீஸ் அவரைப்பிடித்து செம அடி அடித்தது அந்த அடியில் தான் அவருக்கு ஒரு கண் சேதமாகி பார்வை போனது என்று சிலர் சொன்னார்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் அவர் கிட்டிப்பிள்ளை விளையாட்டின் போது அந்தக் கில்லித் தண்டு கண்ணில் தெரித்து ஒரு கண்ணில் அடிப்பட்டதாக என் தந்தை எனக்குச் சொல்லியிருக்கிறார். இரண்டுமே சரியாக இருக்கலாம் .

இதனால் தான் அவர் முகத்தை கருப்பு கண்ணாடி அலங்கரித்தது .பின்னர் பெங்களூரு சிறையிலும் அந்தப் போராட்டத்தின் போது கைதியாகி அடைக்கப்பட்டார். ஒரு ஆறுமாதங்கள் கழிந்த பின் வெளியே வந்து முழு ஆன்மீகத்தில் ஈடுபட்டார். அடிக்கடி பழனி குகையிலும் , திருவண்ணாமலை குகையிலும் தியானம் செய்ய ஆரம்பித்தார்  ஒரு சன்யாசியாக.

வட இந்தியாவுக்குப் பாத யாத்திரையாக பல முக்கிய க்ஷேத்திரங்களுக்குப்போய் தன் ஆன்மீக அறிவை வளர்த்துக்கொண்டார் , ஒரு சமயம் சரஸ்வதி நதியின் கரையில் அமர்ந்து தியானம் செய்ய அவரது உள்மனம் அவரை அழைத்தது ” முருகதாஸ் .. நீ தமிழ் நாட்டிற்கு திரும்பிச்செல். உனக்கு அங்கு பல சேவைகள் செய்ய வாய்ப்பு காத்திருக்கிறது , ஒரு பெரிய இசை மேதையாக பக்தியைப் பரப்பு ” இந்த உள்குரலைக்கேட்டு முருகனது ஆணையாக இதை பாவித்து உடனே தமிழ் நாட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ., அவரது இசை பழனி மலையில் எதிரொலிக்க திரு பிரும்மானந்த பரதேசி சுவாமிகள் இதைக்கேட்டு அவரை சிஷ்யராக ஏற்று பல பாடல்களைக் கற்றுக்கொடுத்தார் . அவரைத்தவிர ஆனந்தாஸ்ரமத்தின் தலைவர் சுவாமி ராமதாசர் கேரளாவில் இருக்கும் கஞ்சன்கோடிலிருந்து வந்து இவரது இசையில் மெய்மறந்து அவருக்கு “முருகதாஸ்” என்ற பட்டமும் கொடுத்தார் . அத்துடன் பிரும்மானந்த யோகீஸ்வரர் கொடுத்த ‘பித்துக்குளி’ என்ற பெயரையும் இவர் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டார்.

images (2)

இவர் அடிக்கடி விரதங்கள் அனுஷ்டிப்பார் அதில் சஷ்டி, கிருத்திகை, ஏகாதசி, சதுர்த்தி என்று பல மாறி மாறி வரும் இந்த விரதத்துடன் மௌன விரதமும் அடிக்கடி கடைபிடிப்பார். இவர் கன்யாகுமரிலியிலிருந்து பத்ரி கேதார்நாத் வரை பல புண்ணிய தலங்களைத் தரிசித்திருக்கிறார் இவருக்குக் கன்யாகுமரி கோயில் மிகவும் பிடித்த ஒன்று . கிட்டத்தட்ட தன் ஐம்பத்தெட்டாவது வயதில் அவர் திருமணம் செய்து கொள்ள அந்தத் தேவியின் அருளைக் கேட்டபோது பகவதி தேவியும் தன் மேலிருந்த பூவை கீழே போட்டு சம்மதம் தெரிவித்தாளாம் . அதன் படி அவருக்கு வந்த மனைவியின் பெயரும் தேவி சரோஜா .. இந்த தேவி சரோஜா பித்துக்குளி முருகதாஸின் இசையிலும் அவரது முருக பக்தியிலும் மனதைப் பறி கொடுத்து அவரைத் தன் மணாளனாக ஆக்கிக்கொள்ள விரும்பினார். இதில் அவருக்குச் சேவை செய்ய வேண்டும், அவருடன் சேர்ந்து முருகனது பாடல்களைப் பாட வேண்டும் என்ற நோக்கமே அந்தப் பெண்மணிக்கு இருந்ததாம் . கன்யாகுமரி அம்மனும் பூவை அளித்து சம்மதம் தெரிவித்ததால் பித்துக்குளி முருகதாஸ் அவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணம் ஆனபின் ஒரு தடவை அவர் தன் மனைவியுடன் மும்பைக்கு வருகை தந்தார் . அப்பப்பா .. அப்போது நடந்த சம்பவம் . இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது . ஒரு சன்யாசியாகப் போனவர் எப்படி இந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பலர் அவர் முன் மிகவும் மோசமாக கடுப்பைக் காட்டினர் மாதுங்காவில் அவர் பஜன் நடக்கவிடாமல் கற்களை வீசினர். பின்னால் அமர்ந்திருக்கும் சிலருக்கு இது தெரிந்து மெள்ள அவரைப் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன், அவர் திருமணம் குறித்து ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி எடுத்தபோது அவர் சொன்னது .”அடியேன் வயது ஏற ஏற என் உடல் தொல்லை தரும் நேரத்தில் என்னைப் பார்த்துக்கொள்ள என் தாயார் தான் இருந்தார் .அவர் மிகவும் பாசமானவர் . அவருக்கு நான் சேவை செய்யவேண்டுமே தவிர அவர் எனக்கு செய்வதை அடியேன் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? சில கடமைகள் மனைவிதான் செய்ய முடியும். கணவர் நோய்வாய்பட்டால் கூட இருந்து பார்த்துக்கொள்வது அவள்தான். அடியேனின் மனைவி தேவி சரோஜா மிகவும் அன்பைப் பொழிபவர் . கடவுளின் சித்திரங்கள் மிக அழகாக வரைவார். எல்லாம் அந்த முருகனின் விருப்பம் ” ஆம் உண்மைதான் , சிறுவயதை விட வயதான பின்தான் எல்லோருக்கும் ஒரு துணை மனம் விட்டுப் பேசவோ , அல்லது அன்பை பரஸ்பரம் பரமாறிக்கவோ  தேவைப்படுகிறது

இவருக்கு அமைந்த மனைவி கடவுள் பக்தி மிகுந்தவர் . அவர் வீட்டில் அம்பாள் பூஜை ஒவ்வொரு வெள்ளிக் கிழமைக்கும் நடக்கும் . அதுவும் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியபடி இச்சா சக்தி , ஞானசக்தி , கிரியா சக்திக்கு பூஜை நடக்கும் . பலர் இந்தப் பூஜையைப் பார்க்க வருவார்கள். இவரைப் பார்க்க விரும்புபவர்கள் மாட்டுப் பொங்கலன்று மருதமலை முருகனை தரிசிக்கப் போனால் இவரையும் பார்க்கலாம். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இவர் இந்த மருதமலைக் கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார், இவருடைய முருகனும் இவருக்குப் பல அதிசயங்களைச் செய்திருக்கிறான். ஒரு சமயம் இவருடைய மற்றொரு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு வலி ஏற்பட்டதாம். ஏற்கனவே தன் ஒரு கண் தெரியாமல் போனதால் இந்தக் கண்ணிற்கும் ஏதாவது வந்துவிடப் போகிறதே என்று சுவாமி ராம்தாஸ் ஆச்ரம பஜனுக்குப் போனார் அங்கு முருகனின் பல பாடல்கள் கேட்டு தன்னை மறந்தார் . அப்போது ஒரு மூதாட்டிக்கு அருள் வந்து அவரிடம் வந்தாள் . அவரது வலது கண்ணைத் தடவி விட்டாள் ” அப்பா முருகதாஸ் இந்தக்கண்ணுக்கு ஆயுசு கெட்டி .. நீ நன்றாக இருப்பாய்” என்றாள். மற்றொரு சமயம் வட இந்தியாவில் பாதயாத்திரை போயிருந்த போது ஒரு நாள் இரவு எட்டுமணி மேல் இருக்கும் . மனித நடமாட்டம் இல்லாத ஒரு இடம் . பசி எடுத்தது . அங்கு ஒரு சின்ன வீடு தென்பட்டது. உள்ளே ஒரு பெண்மணி நின்றது தெரிந்தது . வீட்டு வாசலுக்குப் போய் “அம்மா சாப்பிட எதாவது இருக்கிறதா?” என்று கேட்க அந்த அம்மாள் ஒரு வாழை இலை போட்டு சுடச்சுட சாதம் பரிமாறினார் . பின்னர் ” மகனே இந்தத் திண்ணையில் ஓய்வுஎடுத்துக்கொண்டபின் நாளை யாத்திரை தொடருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மறுநாள் காலை .ஆதவனின் கிரணங்கள் ஒளிபட திண்ணையிலிருந்து எழுந்து கதவைத்தட்ட அது தானாகவே திறந்து கொண்டது. உள்ளே அறைகள் ஒன்றுமில்லாமல் வெட்டவெளியாக இருந்ததாம் . வந்தது அந்த முருகனின் தாயல்லவா . அப்படியே கண் கலங்கி தன்னை மறந்து நின்றார் முருகதாஸ் . பிருந்தாவனத்தில் நடந்த ஒரு சம்பவம் . யமுனை நதிக்கரையில் உள்ள பிருந்தாவனில் ஒருவர் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார் . கண்ணன் விளையாடிய இடமல்லாவா? கிருஷ்ணலீலா சொல்லிக்கொண்டிருந்தார் , ‘கண்ணன் வந்தான் மெள்ள பூனைப்போல் நடந்து உறியின் மேல் ஒரு கண் வைத்து கல்லடித்தான் பின் வெண்ணெயைத் திருடி உண்டான் .பின் எல்லா கோபிச்சிறுவர்களும் கேட்க தன் கையை வீசிக்கொடுத்தான் ” என்றபடி அவர் தன் வெறுங்கையை வீசினார் ..

கூட்டத்தில் அமர்ந்திருந்த அத்தனைப்பேர் வாயிலும் வெண்ணெய் விழுந்தது. ஒரு மறக்க முடியாத சம்பவமாக பித்துக்குளி முருகதாஸ் உணர்ச்சி வசப்பட்டு கூறினார். இவருக்கு மலேசியாவில் இருக்கும் பத்துமலை முருகன் ரொம்பவும் பிடித்த இடமாம். வாழ்க்கையில் பலராலும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் . ஊனமுற்றவர்களுக்கும் பலவிதத்திலும் சேவை செய்து வந்திருக்கிறார் இவர். தை பூசத்திலே இவரது பிறந்த நாள் வருவதினால் அன்று எல்லோருக்கும் அன்னதானம் செய்து வருகிறார் . அவரது மனைவி தேவி சரோஜா இந்த உலகத்தில் இல்லாதது மனதுக்கு கனமாகத்தான் இருக்கிறது . தவிர ஶ்ரீ ஜ்யோதி மாயாதேவி டிரஸ்டு ஒன்றும் சேவை செய்யும் நோக்கத்துடன் நடத்தி வருகிறார் என்று தெரிய வந்தது . நான் அடிக்கடி ரசித்து கேட்கும் இவரது பாடல்கள். அம்மா தாயே கலைவாணி . அலைபாயுதே மகர குண்டலம் ஸ்வாகதம் செந்தூர் முருகன்  பால் வடியும் முகம் …………..

இந்த முருக பக்தரைப்பற்றி எழுதியதை ஒரு இரண்டு பேர் படித்தால் கூட நான் எழுதிய பலனும் மனத் திருப்தியும் எனக்கு ஏற்படும்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நான் கண்ட முருக பக்தர்!..

  1. தொலைக்காட்சியில் ஓரிரு முறை நான் பார்த்திருக்கும் முருக பக்தர் திரு.பித்துக்குளி முருகதாஸ் அவர்களைப் பற்றிய விரிவான தகவல்களை தங்களது கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி.

  2. பித்துக்குளி முருகதாசின் வெண்கலக்குரலில் மயங்கிவருள் நானும் ஒருவன். ‘ஆடாது அசங்காது கண்ணா…” பாடலிலும், “அலை பாயுதே கண்ணா…. பாடலிலும் அவர் கண்ணனைக் கூப்பிடும்போது கண்ணன் நேரிலேயே வந்துவிடுவான்.. அவ்வளவு உருக்கமாக இரக்கமாகப் பாடுவார், சின்னப்பாதேவரின் பக்தித் திரைப்படங்களில் பித்துக்குளி முருகதாஸ் பாடல் கண்டிப்பாக இருக்கும். இவரது திருமணப் புகைப்படம் குமுதம் இதழில் வந்தபோது தமிழகத்தில் ஒரு முக்கியச் செய்தியாக இருந்தது ! தங்கள் பதிவு செய்திகள் அருமை நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *