பிரம்மாவைக் கண்டோம்!
மாதவன் இளங்கோ
இந்தக் கட்டுரையின் தலைப்பில் நான் குறிப்பிட்டிருக்கும் ‘இந்த பிரம்மா யார்?’ என்று உங்களுக்கு நிச்சயம் கேள்வி எழுந்திருக்கும். அவர் வேறு யாருமல்ல; சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவனே தான்!
“இந்த மனிதர் கதை எழுதுவார் என்று தெரியும். இப்போது கட்டுரைக்குள்ளும் கதையை நுழைக்க ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது” என்று நீங்கள் நினைப்பது எனக்கு டெலிபதி மூலம் வந்தடைந்து விட்டது.
ஆனால் இது கதையும் அல்ல; ஆன்மீகக் கட்டுரையும் அல்ல. மாறாக, ஒரு பதிமூன்று வயது சிறுவன், தனது ஒன்பது வயது தம்பியுடனும், முப்பது-நாற்பது வயது மதிக்கத்தக்க பெரியவர்களுடன் புரிந்த ஆன்மீகப் பயணங்களின் அனுபவக் கட்டுரை. ஆகையால் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, நான் ஏதோ தவறாக எழுதிவிட்டேன் என்று வெகுண்டெழுந்து வந்து எனது கட்டுரையை முடக்கப் போராடாமல், நீங்களும் ஒரு பதிமூன்று வயது சிறுவனின் மனநிலைக்குச் சென்று படித்து ரசிக்கவும். சிறுவயது நினைவுகளைப் போல இனிமை தரக்கூடிய விஷயம் வேறொன்று இருக்க முடியுமா?
“வாழ்க்கையிலும் ஒரு ரிமோட் கண்ட்ரோல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்ற திரைப்பட வசனம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. சென்றது சென்றதுதான். ‘சென்றதினி மீளாது மூடரே!’ என்று பாரதி வந்து தலையில் குட்டுவார்.
ஆனால் அதுபோன்ற ஒரு ரிமோட் கண்ட்ரோல் இல்லாத குறையை ஒரு சுஜாதா புத்தகம் எனக்கு நிவர்த்தி செய்ததால்தான் இந்த கட்டுரையையே எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த கட்டுரை உங்களுக்கான அத்தகைய ஒரு ரிமோட் கண்ட்ரோல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
எனக்கு இப்போதெல்லாம் எதைப் பற்றிப் படித்தாலும் அது தொடர்பாக என் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வந்து, நான் அந்த நினைவுகளில் மூழ்கி, சில சமயங்களில் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தையே மூடிவைத்தும் விடுவதுண்டு.
அப்படித்தான் நேற்று இரவு, என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா, அவரது திருச்சி நினைவுகள் பற்றி எழுதியிருந்த மூன்றே மூன்று பக்க கட்டுரையை, எனது நினைவுகளுக்கிடையே படித்து முடிக்க இரண்டு மணிநேரம் எடுத்துக் கொண்டேன். அவரது எழுத்து திருச்சி நகர வீதிகளில் உலா வர, எனது நினைவுகள் திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கோயமுத்தூர் என்று அலைந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக அந்தக் கட்டுரையை வாசித்து முடித்து விட்டு, என்னை அவ்வளவு நேரம் வாசிக்க விடாமல் தொல்லை செய்துகொண்டிருந்த என்னுடைய சிறுவயது நினைவுகளை எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.
முதலில் திருவண்ணாமலை. ஆம். அங்குதான், தலைப்பில் கூறியுள்ளபடி நாங்கள் ‘பிரம்மாவைக் கண்டோம்’. திருவண்ணாமலை எனக்கு மிகவும் பிடித்தமான, என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு நகரம்.
எனக்கு அப்போது பதிமூன்று வயது; என் தம்பிக்கு ஒன்பது. அப்போதெல்லாம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருவண்ணாமலைக்கு நாங்கள், என் தந்தை மற்றும் அவரது நண்பர்களுடன் கிரிவலம் செல்வதுண்டு.
எங்களின் ஆன்மீகக் குழுத் தலைவர் ஒரு அருமையான மனிதர். அறிய பல ஆன்மீகச் சிந்தனைகளை எங்களுக்குள் விதைத்ததில் அவருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. தமிழ் வேதங்களாகத் திகழும் பன்னிரு திருமுறைகளையும் அவரது பத்து விரல் நுனிகளில் வைத்திருப்பார்.
இந்தப் பயணங்களுக்காக என் தந்தையார் எங்களை தயார் செய்த விதம் மறக்க முடியாதது. எனக்கும் என் தம்பிக்கும் ‘மாதம் ஒரு வேதம்’ என்று போட்டியெல்லாம் வைப்பார். தமிழ் வேதங்களை மனனம் செய்து நாங்கள் இருவரும் உரக்கப் பாட அவர் அதை, டேப் ரிகார்டரில் பதிவு செய்து எங்கள் இருவருக்கும் பரிசு வழங்குவார்.
அதிலும் குறிப்பாக மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை இன்று கூட என்னால் ‘நமச்சிவாய வாழ்க’ என்று ஆரம்பித்து ‘பல்லோரும் ஏத்தப் பணிந்து’ வரை ஒரே மூச்சில் சொல்லி திருச்சிற்றம்பலத்துடன் முடிக்க முடியும்.
தமிழ் இலக்கிய உலகிற்குள் நான் காலடி எடுத்து வைத்தது இப்படித்தான். தமிழ் இலக்கியம் என்றாலே இன்றும் எனக்கு முதலில் சைவ இலக்கியங்கள் நினைவுக்கு வருவதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
கிரிவலம் செல்லும் போது நானும் என் தம்பியும் சிவபுராணத்தை பக்தியுடன் உரக்கப் பாடி வர, ஒவ்வொரு வரிக்கும் ஒரு கதை சொல்லுவார் எங்களுடைய குழுத் தலைவர்.
சைவத்தின் நுண்ணிய கருத்துகளையும், சித்தாந்த நெறிகளையும் அவர் போதித்துக்கொண்டே வர, என் தந்தையின் இன்னொரு நண்பர் காற்றைப் பிரித்தவாறு, அவற்றை எல்லாம் ஆமோதித்துக் கொண்டே வருவார். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நான் நடக்க, என் தம்பி அதுமுடியாமல் ‘க்ளுக்’ என்று சிரித்து விட்டு வாயைப் பொத்திக் கொள்வான். இப்படியாக பாடலும், கருத்தும், நடையும், சிரிப்புமாக மாதமாதம் எங்களது ஆன்மீகப் பயணம் ஆரவாரமாக இருக்கும்.
சிவபுராணத்தோடு படுஜோராக ‘முதல் இந்திர லிங்கத்தில்’ பயபக்தியுடன் ஆரம்பிக்கும் எங்களின் ஆன்மீகப் பயணம் எம லிங்கம் தாண்டி கிரிவலப் பாதைக்குள் நுழைந்து, நிருதி லிங்கத்தருகே சிறிது சுருதி குறைந்து, வாயு லிங்கம் தாண்டி குபேர லிங்கம் வந்தவுடன் பாய் சுருட்டிப் படுத்துவிடும்.
அந்த ஒரே ஒரு மலை, கிரிவலப் பாதையின் ஒவ்வொரு பகுதியிலிருந்து பார்க்கும் போதும் ஒவ்வொரு விதமாக தோற்றமளிக்கும். அந்த ஒவ்வொரு தோற்றத்துக்கும் கூட ஒரு அர்த்தத்தையும், கதையையும் சொல்லுவார் எங்கள் தலைவர். பௌர்ணமி அன்று நிலவொளி படர்ந்த அந்த அழகிய மலையை, செயற்கை சத்தங்களற்ற ரம்யமான, அதி தெய்வீகமான சூழலில் பார்க்கும் போது மனதிற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.
அந்த மலையையே இறையாக பாவித்து வலம் வருவது தான் ‘கிரிவலம்’ (கிரிவலம் பற்றி தெரியாதவர்களுக்காக). நமது கலாச்சாரத்தில் ‘இயற்கையே இறைவன்’ என்பதற்கு இதை விட சிறந்த சான்று வேறு இருக்க முடியாது. இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், ஞானக்கவி.பெருமாள் ராசு அவர்களின் வரிகள் நினைவுக்கு வருகின்றன:
வித்தியாசம் பார்க்காமல் வீசும் காற்று,
குறைவை நிறைவு செய்ய ஓடும் நீர்
இப்படி எல்லாமே குருநாதர்களே!
புரிந்து கொள்; வேதங்கள் புரியும்…!
உன்னையும் புரிந்து கொள்வாய்!“
சரி, நாம் இப்போது எங்கு இருக்கிறோம்? குபேர லிங்கம் தானே? குபேர லிங்கம் எங்களுக்கு மிகவும் பிடித்த கோயில். அதற்கான காரணத்தை நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டும். ஒவ்வொரு முறையும் குபேர லிங்கத்தை நாங்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் சென்றடைவோம்.
இன்று கூட ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று யாராவது கூறினாலே நானும் என் தம்பியும் மிரண்டு போய் விடுவோம். அதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. எனது தந்தையார் எங்களை அன்றாடம் பிரம்ம முகூர்த்த வேளையில் (அதிகாலை சுமார் நான்கு மணி) எழுப்பி அவருடன் தியானம் மற்றும் யோகா செய்யச் சொல்லுவார். வேண்டாவெறுப்போடு எழுந்து, அவர் கண்ணை மூடி தியான நிலைக்கு எப்போது செல்வார் என்று காத்திருந்து, பின்பு நானும் என் தம்பியும் ஷிப்ட் முறையில் மாறி மாறி சுவரில் அப்படியே சாய்ந்து உறங்குவோம் (தியானிப்போம்). ஆனாலும் யோகா செய்யும் போது தப்பிக்க முடியாது. எப்போதுதான் சவாசனம் வருமோ என்று ஆகி விடும். இப்படி ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் பரிதாபமாகத் தொடங்கும். நான் கல்லூரி செல்லும் வரை இது தொடர்ந்தது. அதற்குப் பின் நான் தப்பித்துவிட என் தம்பி மட்டும் தனியாக மாட்டிக்கொண்டு அவதிப்பட்டான்.
மீண்டும் குபேர லிங்கம். என்ன இது நான் சுஜாதா கட்டுரையை படிப்பது போல ஒரே இடத்திலேயே நிற்கிறோம்? பிரம்மாவை வேறு பார்க்க வேண்டும்.
“குபேர லிங்கத்திடம் அவசியம் தியானம் செய்தே ஆக வேண்டும்; அப்போதுதான் அதிக பலன்கள் கிட்டும்” என்று எங்கள் தலைவர் சொல்ல, அது எங்கள் எல்லோருக்கும் அற்புதமான யோசனையாகப் பட்டதால் உற்சாகத்தோடு தியானத்தைத் தொடங்குவோம். நானும் என் தம்பியும் உட்கார்ந்தவாறே சுவரில் சாய்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தூங்கும் (தியானிக்கும்) வித்தை அறிந்தவர்களாயிற்றே!
சில மணித்துளிகளிலேயே, வெவ்வேறு விதமான குறட்டை ஒலிகள் கேட்டு பயந்து போய் நானும் என் தம்பியும் கண்ணைத் திறந்து பார்த்தால் – ‘முதுகு தண்டு வளையாமல் நேர்த்தியாக தியானத்தை தொடங்கிய பெரியவர்கள், முதலில் சுவரின் மேல் சாய்ந்து, பின் லேசாக தரையில் படர்ந்து, கைகளை தலையணையாக்கி, முடிவாக சவாசனத்தில் லயித்து காலை நீட்டிப் படுத்துக்கொண்டு ‘ராக்’ இசைக்கச்சேரி நடத்திக் கொண்டிருப்பார்கள்.
சில மணித்துளி கச்சேரி முடிவடைந்ததும், அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து எங்கள் நடைபயணம் மீண்டும் தொடங்கும்.
எங்கள் தலைவரின் ஆன்மீகக் கதைகள் சிலசமயம் பிரமிப்பாகவும், சிலசமயம் பயத்தை உண்டு பண்ணக்கூடியதாகவும் இருக்கும். மலைப்பாதையை சுற்றியுள்ள கோயில்களின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது, திடீரென்று சுவரில் காதை வைத்து ‘ஓங்கார ஒலி’ கேட்கிறது என்பார்; சித்தர்கள் தவம் செய்கிறார்கள் என்பார். எல்லோருமே பக்தி சிரத்தையோடு காதை வைத்துக் கேட்டு அதை ஆமோதிப்பார்கள். நானும் என் தம்பியும் பலமுறை முயற்சிசெய்தும் கடைசிவரை எங்களுக்கு அந்தச் சத்தம் கேட்கவேயில்லை. எங்களுடைய பிரம்ம முகூர்த்த வித்தையினால் தெய்வ குற்றம் ஆகிவிட்டதோ, எங்களுக்கு கடவுள் அருள் இல்லை என்று கூறிவிடுவார்களோ என்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பின் பயந்து ‘கேட்கிறது கேட்கிறது’ என்று கூறி விடுவோம்.
ஒருமுறை அதே பிரம்ம முகூர்த்த வேளையில், குபேர லிங்கத்திலிருந்து வெளியே வந்த போது கிட்டத்தட்ட ஆதிசங்கரர் போன்ற உடையணிந்த ஒருவர் எங்கள் முன்னே சென்று கொண்டிருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. திடீரென எங்கள் தலைவர் தன்னுடைய நடையை நிறுத்தி விட்டு, கண்களை மூடிக்கொண்டார். நாங்களும் நின்றுவிட்டோம். சில நொடிகளில் தியான நிலையிலிருந்து சிலிர்த்துக்கொண்டு வெளியே வந்தவர், “அவர் யார் என்று தெரியுமா?” என்று எங்கள் எல்லோரையும் பார்த்துக் கேட்டார். நாங்கள் ஒன்றும் புரியாமல் கண்களை அகல விரித்தவாறு அவரையே நோக்கிக் கொண்டிருந்தோம்.
“அவர் தான் பிரம்மா!” என்று கூறிவிட்டு, கிடுகிடுவென ஓடிச் சென்று மனிதர் சாஷ்டாங்கமாக பிரம்மாவின் காலில் விழுந்து விட்டார்.
அவ்வளவு தான், நாங்கள் அனைவரும் பதறி அடித்துக்கொண்டு அவர் பின்னாலேயே ஓடிச்சென்று பிரம்மாவின் காலில் விழுந்து வணங்கினோம்.
பிரம்மாவும் எங்களை வாழ்த்திவிட்டு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டார்.
கைகளைக் கட்டிக்கொண்டு அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்த எங்கள் தலைவர், “இது யாருக்கும் கிடைக்காத பாக்கியம்!” என்று பெருமிதத்துடன் கூறினார்.
எனக்கும் என் தம்பிக்கும் பிரம்மாவையே பார்த்துவிட்ட சந்தோசம். அம்புலிமாமா, பாலமித்ரா புத்தகங்களின் ரசிகனான என் தம்பி, “பிரம்மா கிட்ட ஏதாவது ஒரு வரம் கேட்டிருக்கலாண்டா?” என்றான். (நான் கல்லூரி செல்லும் வரை, அவர் என்னை ‘டா’ என்று மரியாதையோடு விளிப்பது வழக்கம்.)
எனக்கும் அப்படித் தோன்றியது. பிரம்மாவையே பார்த்துவிட்டதால் மறுநாள் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை என்று என் தம்பி கூறியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நாங்கள் நடையைத் தொடர்ந்தோம். சற்றுமுன் நாங்கள் கண்ட பிரம்மா, அங்கே சாலையோரத்தில் இருந்த ஒரு பாறையின் மீது பத்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வருவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
எனக்கும், என் தம்பிக்கும் பயங்கர ஆச்சரியம்; மகிழ்ச்சி.
“இந்த முறை வரம் கேட்டே ஆக வேண்டும்” என்றான் என் தம்பி.
“அட்டமா சித்தி கேட்கலாம்!” என்றேன் நான்.
எங்கள் குருநாதர் பவ்யமாக வாயைப் பொத்திக்கொண்டே முதலில் பிரம்மாவின் அருகே சென்றார். நாங்களும் பயபக்தியோடு அவரை பின்தொடர்ந்தோம்.
பிரம்மா மெதுவாகக் கூறினார் –
“நாளைக்காலை எங்களுடைய சத்திரத்தில் அன்னதானம் செய்ய இருக்கிறோம். நன்கொடை வழங்குகிறீர்களா?”
எனக்கும் என் தம்பிக்கும் பேரிடி விழுந்தது போல் இருந்தது.
“என்னடா பிரம்மாவே காசு கேட்கிறார்?” என்று அப்பாவியாக என் காதருகே வந்து கேட்டான் என் தம்பி.
“பிரம்மா தற்போது இருக்கும் நிலைமையில் இவரிடம் எப்படி வரம் கேட்பது?” என்று நானும் யோசித்து கொண்டிருந்தேன்.
மற்றவர்களுக்கும் அதிர்ச்சி தான். ஆனால், அவர்கள் ஏனோ அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.
பிரம்மா தொடர்ந்தார் –
“நன்கொடை தந்தீர்களேயானால் நாளை காலை பெரிய கோவிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனத்தை வெகு அருகிலிருந்து பார்க்கலாம்!”
எங்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சி. சீக்கிரம் மலையை சுற்றிவிட்டு, கோவிலுக்கு எதிரில் இருக்கும் தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு, பேருந்தில் தூங்கிக்கொண்டே பயணிக்கலாம் என்று நினைத்தால், இந்த பிரம்மா வேறு இப்படிக் குழப்புகிறாரே என்று நொந்து கொண்டோம்.
வேறு வழியில்லாமல் எல்லோரும் அன்னதானம் செய்ய பணம் கட்டி ரசீது பெற்றுக்கொண்டார்கள். அதற்குப் பிறகு யாரும் வாய் திறக்கவில்லை; குறிப்பாக எங்கள் தலைவர். விடியற்காலை, கோபுரமருகே எங்களுக்காக பிரம்மா காத்துக்கொண்டிருந்தார்.
ஆயிரங்கால் மண்டபத்தில், எங்கள் குழுவிலிருந்த அனைவரும் ஆருத்ரா தரிசனத்தை வெகு அருகே அமர்ந்து, கண்ணாரக் கண்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டிருக்க, அங்கேயிருந்த பக்தகோடிகள் அனைவரும் “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்று உரக்கச் சொல்லிக்கொண்டிருக்க, நானும் என் தம்பியும் பிரம்ம முகூர்த்த வித்தையை தூணின் மீது சாய்ந்தபடி பழகிக் கொண்டிருந்தோம்.
அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அந்த நாள் மட்டுமல்ல, அந்த பயணங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் மற்றும் அந்தக் குழுவிலிருந்த ஒவ்வொருவரிடம் இருந்தும் நாங்கள் கற்றவையும் பெற்றவையும் ஏராளம் ஏராளம். அந்தக் குழுவில் மருத்துவர், ஆசிரியர், வங்கி மேலாளர், அலுவலக ஊழியர், பேராசிரியர் என்று பலதரப்பட்ட பின்னணிகளை கொண்ட மனிதர்களும் உள்ளடக்கம்.
குறிப்பாக எனது தந்தையின் ஆத்ம நண்பர் திரு.அனந்த நாராயணன் அவர்கள். அந்தப் பயணங்களில் ஏதாவது அறிவைத் தூண்டும் வகையில் நகைச்சுவையான விஷயங்களைச் சொல்லி எங்களுக்குச் சிரிப்பு காட்டிக்கொண்டே வருவார். தலைவரையும், மற்றவர்களையும் விட்டுவிட்டு எப்பொழுதும் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டு விடுவார். இவருக்கு நான் எழுத எண்ணியிருக்கும் ‘என்னை கவர்ந்த மனிதர்கள்’ புத்தகத்தில் நிச்சயம் ஒரு அத்தியாயம் காத்திருக்கிறது; சொல்வதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. எனக்கு முப்பதுகளிலேயே பின்தலையில் வளர்பிறை ஆரம்பித்துவிட்டது. ஆனால் இந்த மனிதர் தலைமுடி ஒன்று கூட விழாமல், நரைக்காமல், அன்று பார்த்தது போலவே இன்றைக்கும் இளமையாக காட்சி தந்து, எனக்கு தீராத மன உளைச்சலையும், வயிற்றெரிச்சலையும் தந்து கொண்டிருக்கிறார். நான் கூறுவது மிகையில்லை என்பதை நீங்கள் அவரை நேரில் கண்டீர்களேயானால் ஆமோதிப்பீர்கள்.
இது போன்ற மனிதர்களை நான் சந்திப்பதற்கும், பழகுவதற்கும், இதுபோன்ற அறிய பல அனுபவங்களை நான் பெறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என் தந்தைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
தொலைகாட்சி, சினிமா போன்ற பொழுதுபோக்கு சமாச்சாரங்கள் மட்டுமே வாழ்க்கை என்கிற அளவில் சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இது போன்ற அனுபவங்கள் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் நமக்கு அண்டைவீட்டார் யாரென்று கூட தெரிவதில்லை. பெற்றோர்களுடன் பேசவே நேரமில்லாத நமக்கு எங்கிருந்து அவர்களின் நண்பர்களுடன் பழகவும், பயணம் செய்யவும் நேரமிருக்கிறது? இன்னும் சொல்லப்போனால், சென்னை போன்ற நகரங்களில் வாழும் நிறைய பேருக்கு ஆத்ம நண்பர்களே கிடையாது என்பது நிதர்சனமான உண்மை.
இதுபோன்ற பயணங்களில், இன்று வரை எனக்கு விடைதெரியா – MYSTERIOUS – அனுபவங்கள் கூட கிடைத்திருக்கிறது.
அதுபற்றி இன்னொரு நாள் பேசுவோம்.
கிரிவலம் சுற்றும் பொழுது பொங்கி வந்த சிரிப்பை நீ அடக்கிக் கொண்டாலும் அடக்க முடியாமல் சிரித்த உன் தம்பியைப் போன்று, இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது நானும் சிரித்துக் கொண்டே படித்தேன்.
பதின்மூன்று வயது சிறுவனின் ஆன்மிக அனுபவங்கள் (நகைச்) சுவையாக எழுதப்பட்டுள்ளன. பாராட்டுக்கள்!
சிறுவயதிலேயே நல்ல நெறிகளையும், ஆன்மிக அனுபவங்களையும் தங்களுக்கு அளித்திட்ட தங்கள் தந்தையார் மிகுந்த பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.
-மேகலா
மேகலா இராமமூர்த்தி, தங்கள் கருத்துரைக்கும், பாராட்டுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!! என் தந்தையைப் பற்றி குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி. அவர் இதை கண்டால் நிச்சயம் அகமகிழ்வார்.
சச்சிதானந்தம், நன்றி நண்பா.
இதை எழுதும் போது சில இடங்களில் என்னாலேயே சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் எழுதுவதை நிறுத்திவிட்டு பின்பு தொடர்ந்தேன்.. 🙂 அவ்வளவு அருமையான நினைவுகள்!
What a wonderful style of writing Madhavan Elango