தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – (5)

2

திவாகர்

தேவன் ஒரு சகாப்தம் – பகுதி (4)

தற்சமயம் கனடாவில் வசிக்கும் பிரபல பதிவர், எழுத்தாளர் பேராசிரியர் திரு பசுபதி எல்லாவற்றிலும் எனக்கு சீனியர். நான் படித்த அதே ராமகிருஷ்ணா (வடக்கு) பள்ளியில் எனக்கு முன்னர் 17 வருட சீனியர். தேவன் எழுத்துக்களின் மீதுள்ள ரசிகத் தன்மையிலும் எனக்கு மிகப்பெரிய சீனியர். தேவன் பற்றிய பல விவரங்கள் தொகுத்தவர்.  அவர் தன் வலைப்பதிவில் தேவன் குறித்த பல செய்திகள், சில கட்டுரைகள், சில சிறு கதைகள் என அப்படியே பதிப்பித்திருக்கிறார். அவர் பதிவுகளிலிருந்து குறிப்பு எடுத்துக் கொள்ளவும் எனக்குத் தாராளமாக அனுமதி கொடுத்த தயாநிதி. அவருக்கு என் நன்றியை தக்கணமே செலுத்துகிறேன்.

புதினங்களைப் பொறுத்த மட்டில் தேவனின் முதல் நாவலான ‘மைதிலி’ 1939 ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வராமல், அதன் துணைப் பதிப்பான ‘நாரதர்’ இதழில் தொடராக வந்தது. அப்போது நாரதருக்கு ஆசிரியர் துமிலன். கல்கி ஆனந்த விகடனில் இருந்து வெளியேறியதும் கொஞ்சநாட்கள் துமிலனும் நாடோடியும் விகடனின் ஆசிரியர் பொறுப்பில் வந்ததாகவும், ஆனால் விரைவிலேயே தேவனுடைய பொறுப்பில் விகடன் வந்து விட்டதாகவும் சில விவரங்கள் மூலம் தெரியவருகிறது. 1942 இல் மாலதி எனும் வாரம் ஒரு பக்க நாவல் கதையை ஆனந்த விக்டனில் ஆரம்பித்தார். அப்போது யுத்த காலமாகையால் செய்தித்தாள்களுக்கு பஞ்சம் என்ற நிலையில் இந்த சிக்கனத்தையும் கடைப்பிடிக்கவேண்டிய நிலையில், தேவன் இந்த சீரியஸான விஷயத்திலும், தன் ஹாஸ்யத் தொனியை மறவாமல் 14 வாரங்களில் எழுதியது இந்த ‘மாலதி’ எனும் வாரம் ஒரு பக்க நாவலாகும். இதை முழுமையாகப் படிக்க பெரியவர் பசுபதி அவர்களின் வலைப்பூவில் ஒரிஜினல் கதையாகக் கொடுத்திருப்பதால் அப்படியே அக்கதையை இந்த இணைப்பில் http://s-pasupathy.blogspot.in/2012/06/blog-post.html படிக்கலாம்.  தேவன் தன் கதைகளுக்கு எப்போதுமே அந்தந்தக் கதைகளின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாகக் கொடுத்திருக்கிறார். இதனால் கதையைப் படிக்கும்போதே தலைப்பில் உள்ள கதாபாத்திரத்துக்கு வாசக மனம் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கும். தன் முதல் நாவலான ’மைதிலி’ யிலிருந்து இதே உத்தியைத் தான் பின்பற்றி வந்தார். அவர் நாவல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவையாக இருப்பதால் இது மிகச் சிறந்தது.. அல்லது இது சுமார் ரகம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. முக்கியமாக கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் விதமும், அவர்களின் நடவடிக்கைகளையும் கதைகளில் படிக்கையில் இந்தக் கதாபாத்திரத்தை விட சிறந்த கதாபாத்திரம் இன்னொன்று இல்லை என்றும் சொல்லநேரும்.

தேவனின் ’கல்யாணி’ கதை 1944 இல் எழுதப்பட்டதாகும். இந்தக் கதைக்குப் பின்னர்தான் ‘மிஸ் ஜானகியை’ எழுதினார். கல்யாணியின் கதைச் சுருக்கத்தை எழுதினால் சர்வ சாதாரணமான கதை என்று யார் வேண்டுமானாலும் சொல்லி விடலாம். தாய் தந்தையை இழந்த கல்யாணி அழகான இளம்பெண். கும்பகோணம் சொந்த ஊர். சென்னையில் கல்லூரிப்படிப்புக்காக வந்திருக்கிறாள். கல்யாணியின் தோழி உமா, உமாவின் அண்ணன் நீலு, நீலுவின் தோழன் சுந்தரம். இந்த சுந்தரம்தான் கதையின், கல்யாணியின் நாயகன்.

கல்யாணியின் பாட்டனார் துரதிருஷ்டவசமாக தன் வீட்டில் வேலைசெய்யும் சமையல்காரக்குடும்பத்தின் வலையில் சிக்கி, அந்த சமையல்காரப் பெண்மணியின் மூத்த மகளையே கல்யாணம் செய்துகொண்டு சில நாட்களிலேயே இறந்தும் போகிறார். ஆனால் இந்த விஷயம் கல்யாணிக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்படுகிறது. பாட்டன் செத்த பதினைந்தாம் நாளில் ஒரு போஸ்ட் கார்ட் அவள் பெயருக்கு ஒரு துளி விவரத்தோடு கிடைக்க உடனே அடித்துப்பிடித்துக் கொண்டு கும்பகோணம் ஓடுகிறாள். அதற்கு முன் சென்னை எழும்பூரில் அகஸ்மாத்தாக ரயிலின் கடைசி டிக்கெட் சுந்தரத்துக்குக் கிடைக்க, அதைத் தவறவிட்ட கல்யாணிக்கு தியாகம் செய்ய, அங்கேயே கண்களும் கண்களும் கலந்து ஒரு அவசரக் காதல் அவர்கள் அறியாமல் பிறந்து விடுகிறது. கும்பகோணம் வந்தாலோ அங்கே வீட்டில் ஒரே ரகளை. தாத்தாவின் மிகப் பெரிய சொத்தான ரத்ன வைடூரியங்களை கெட்டியாக தம் கைக்குள் வைத்துக்கொண்டு சமையல்கார குடும்பம் கல்யாணியை ஏமாற்றுகிறது. இதற்கு ஒரு முடிவுகட்டவும் சோகமயமான கல்யாணிக்கு எவ்வகையாயினும் இந்த நகைகள் கிடைத்தே தீரவெண்டுமென்ற ஆவேசத்தில் சுந்தரம் உதவுவதும் தன் கில்லாடி நண்பன் (வெறும் கில்லாடி இல்லை ஜகத்ஜால கில்லாடி) நரசிம்மனோடு ஜோடி சேர்ந்து திருடுவதும், போலீஸ் கேஸில் மாட்டிக்கொண்டு சிரமப்படுவதும்தான் கதை.

ஒரு நகைச்சுவைக் கதைதான். எல்லா சம்பாஷணைகளும் இந்த நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டுதான் தேவன் எழுதியிருக்கிறார். கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும், அது அளவில் மிக சிறியதாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனி மதிப்பையும் கொடுத்திருப்பார் தேவன்.

சுந்தரத்தால் மூக்கிழுக்கப்பட்டு மூக்கால் முனகும் மதராஸ் மலையப்பராகட்டும், சுந்தரத்தின் அத்தையிடமிருந்து வைரக்கல் மறைக்கப்பட்ட கம்பளியை தானமாகப் பெற்ற மாயவரத்து சாஸ்திரிகளாகட்டும் ஒரு சிறிய அளவே கதையில் பேசப்பட்டாலும் தேவனின் எழுத்துக்களால் மிகவும் புகழப்படுபவர்கள்தான். அதே போல தெனாவெட்டு நரசிம்மன் இந்த அப்பாவி சுந்தரத்தைக் கையில் போட்டுக்கொண்டு அவன் சந்தேகங்களை அவன் பாஷையில் (யூ ப்ளடி ராட்டன் பொடோடோ என்ற முன் வார்த்தையுடன் ) தீர்த்துக்கொண்டு வரும்போதும் படிப்பவர்கள் மிகவும் ரசிக்கத்தான் செய்வார்கள். எந்த கதாபாத்திரமும் சோடை போக்வில்லை என்பது போலத்தான் ‘கல்யாணி’யின் அத்தனை கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். இதோ கதையில் சிறு பகுதியாக இடம் பிடித்து நம்மை நலம் விசாரிக்கும் கும்பகோணம் டாக்டர் பி.ஜி. கிருஷ்ணன பற்றி தேவன் எழுதுவதைப் படிப்போம்.

‘கும்பகோணத்தில் மடத்தெருவில் இருந்தது டாக்டர் பி.ஜி. கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் ‘டிஸ்பென்ஸரி’ என்று வைத்துக் கொண்டிருந்தார் டாக்டர். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிக மிக செங்குத்தாக இருக்குமாகையால், அதில் ஏறி பழக்கப்பட்ட பேர் அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது முப்பத்திரண்டு படிகள் என்பது ‘நெட்டுருப்’ பாடம்.

மாடியில் டாக்டரின் அறைக்கு உள்ளே, டாக்டர் உட்காருவதற்காக ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறைய புஸ்தகங்களாகவே அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோரு இரும்பு நாற்காலியும் ஒரு ஒற்றை பெஞ்சும் போட்டிருக்கும். இரும்பு நாற்காலியில் உட்கார உரிமை பெற்றவர் ஒன்று, டாக்டரின் அத்யந்த நண்பராக இருப்பர் அல்லது யாராவது பெரிய உத்யோகஸ்தராக இருப்பார்.

ஒற்றை பெஞ்சு நிறைய வியாதிஸ்தர்கள் கூடி, ஹாலின் பல இடங்களிலும் நின்று, மாடிப்படியிலும் கூட விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் படிக்கு ஒன்றாகப் பதுமைகள் நின்றன போல் சிலர் நிற்கத் தொடங்கிய பிறகுதான் டாக்டர் பி.ஜி.கிருஷ்ணன அதிவேகமாக ‘டிஸ்பென்ஸரிக்குள்’ பிரவேசிப்பார். டாக்டர் வந்தவுடன் யாரையும் கவனிக்காமலே ‘டக் டக்’ கென்று தன் அறைக்குள் சென்று விடுவார். காத்திருப்பவர் கண்களெல்லாம் அதன்பின் அறைகதவை நோக்கியிருக்கும். இரும்பு நாற்காலியில் ‘விருதா’ கால்ட்சேபம் செய்ய வந்திருக்கும் ‘லோட்டா ஆசாமியைப் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.

‘சுக்காம்பாளையத் தெருவிலே ஒரு கேஸ். மூணு நாளாக 105,106 டிகிரி. என்னிடம் சொல்லல்லை. விடியக் கார்த்தாலை வந்து என்னைக் கூப்பிடறான், கேளுங்க ஸார்! நாம் கை வெச்ச உடனே ஆளு ‘க்ளோஸ்’ ஆகும் – நமக்கு கெட்ட பேரு! இருந்தாலும் மனசு கேழ்க்கிறதா? போய் ஒரு இஞ்செக்ஷன் பண்ணிவிட்டு ஒடி வருகிறேன். இப்படித்தான் பாருங்கோ.. நம்ம ஆலந்தூர் ‘கோண்டு’! உங்களுக்குத் தெரியுமே ஸார்! சினிமாவெல்லாம் ‘ஆக்ட்’ பண்ணியிருக்கானே; அவனுக்கு ஸீரியஸாயிடுத்து போனமாசம்…வேற ஒருத்தர் ட்ரீட்மெண்ட்.. ரேழிக்கே கொண்டுவந்துட்டா. நான் அந்தப் பக்கம் அகஸ்மாத்தாப் போனேன். அவன் தாயாதி பங்காளிகள் படீர் படீர்னு நெஞ்சிலே அடிச்சுக்கறா! மெல்லக் ‘கோண்டு’ மார்பிலே கை வெச்சேன்.. ரொம்ப லைட்டா ‘பீட்டிங்’ -அம்மாமார்களே! இங்கே இவருக்கு அடிச்சுக்கிற மட்டும் நீங்க அங்கே அடிச்சுக்கவேண்டாம்.. சித்தெ பொறுத்துக்குங்கோ! இன்னேன். ஒரு ‘கிளிஸரைன்’ இனிமாவைக் கொடுத்து உள்ளே கொண்டுபோகச் சொன்னேன். மறுநாளைக்கு மறுநாள் ‘கோண்டு’ வந்து சாஸ்திரிகள் ஓட்டல்லே ரைஸ்-இட்லி கிடைக்குமா?ன்னு கேழ்க்கிறான்’ என்பார்.

எதிரில் உட்கார்ந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமி பரவசமாகிவிடுவார். இப்படி இன்னும் கதைகளை உதறி விசிறி விட்டு டாக்டர் ஆரம்பிப்பார்.

ஒரு சீக்காளி மருந்து வாங்கிகொண்டு வெளியே போனவுடன் இதரர்களுக்கு அவனுடைய கதையை ஹாஸ்யரஸத்துடன் சொல்வார் டாக்டர். மற்றவர்கள் தங்களைப் பற்றியும் இப்படி ஒரு பேச்சு நடக்கும்’ என்ற நினைவே இல்லாமல் கேட்டு ஆனந்திப்பார்கள்!

எல்லோரிடமும் என்ன உடம்பு என்று சொல்லிவிடும் சுபாவம் அவருக்கில்லை. ‘ஒன்றுமில்லை! பயப்படாதே! நீ தெரிந்து கொண்டு என்ன லாபம்? நான்தானே தெரிந்துகொண்டு மருந்து கொடுக்கவேண்டும் உனக்கு! சாப்பிடு..பார்க்கலாம்..போ’ என்பார். அந்த ஆசாமி போன உடனே, ‘ஆச்சு, இவன் இந்த சீசா முழுக்கச் சாப்பிட இருக்கமாட்டானே.. காலப்பிங் டி.பி..- நான் என்ன செய்யறது.. ஏன்? யார்தான் என்ன செய்யமுடியும்?” என்பார். அவர் பேச்சில் நிஜகலப்பு இருந்தால் என்ன.. இல்லாவிட்டால் என்ன? சதா தமாஷாக இருக்கும்!

கதையில் தேவன் முன்கூட்டியே இந்த டாக்டரைப் பற்றி  கதாநாயகன் கும்பகோணம் வந்தபின், அவன் நண்பன் அரட்டை அய்யாசாமி மூலமாக நமக்கு  ஒரு வார்த்தையில் அறிமுகம் செய்கிறார் – எப்படி என்று படியுங்களேன்:

‘பி.ஜி.கிருஷ்ணன் வைத்தியம் என்றால் உனக்கு தெரியாதோ? ஆள் க்ளோஸ்! தம்பி.. பேஷண்ட் ஃபட்..ஆஸாமி ஃபினிஷ்! கிருஷ்ணன் வந்துட்டுப் போனாலே பின்னாலே அழுகுரல்; அதைத் தொடர்ந்து சிவசாம்ப சாஸ்திரிகள் மந்திரம் எல்லாம் கணீரென்று கேட்கும்’

சி.ஐ.டி சந்துரு எனும் ஒரு கதாபாத்திரம். இவர் மகாபெரிய கைகாரர். கிரிமினல் குற்றவாளிகளின் பெயர்களை மட்டுமல்ல, அவர்கள் முழு ஜாதகத்தையே நினைவில் வைத்து அவர்களை மடக்கிப் பிடிப்பதில் வல்லவர். (பின்னாட்களில் தேவனின் கடைசி கதை சி.ஐ.டி. சந்துரு’ தான். பெரிய அளவில் சந்துரு சம்பந்தப்பட்டது) இப்படிப்பட்டவர் இந்த கல்யாணி சம்பந்தப்பட்ட நகை திருட்டுக் கேஸை சாமர்த்தியமாக நடத்துவதையும், இன்ஸ்பெக்டர் கோபாலன் மேற்பார்வையில் இந்த வழக்கு நகர்வதையும் தேவன் எழுத்துக்களில் படிக்கவேண்டும். இன்ஸ்பெக்டர் கோபாலன் ஏற்கனவே தேவன் எழுதி வந்த துப்பறியும் சாம்பு மூலம்  வாசகர்களுக்கு பிரபலமானவர். கும்பகோணத்தில் மாற்றலாகி வந்த வேளையில் இந்த கேஸ் அவரிடம் வருகிறது. சந்துரு’வின் ஆலோசனையின் பேரில் மாயவரம் சாஸ்திரிகளிடமிருந்து ஒரு கம்பளிப் போர்வையில் இருக்கும் வைரங்களைத் திருப்பிக்கொண்டு வரும் கெட்டிக்கார நரசிம்மன், அவன் பின்னே இன்னொரு காரில் ஏமாற்றமாக வரும் சுந்தரமும் அவன் நண்பன் அய்யாசாமியும், மூவரையும் கும்பகோணம் திரும்பியபின் போலீஸ் வளைத்துப் பிடிக்கிறது. முதலில் நரசிம்மனை விசாரித்த போலீஸ் அவனிடமிருந்து ஏதும் விஷயம் தேறவில்லை என்று தெரிந்ததும், போலீஸ் எனும் வார்த்தையைக் கேட்டே அச்சப்படும் நம் கதாநாயகன் சுந்தரத்தை விசாரிக்க அழைக்க, அவன் அவர்கள் முன்னே வந்து அந்த ‘பிரசித்த பெற்ற’ நாற்காலியில் அமர்கிறான். அந்த நாற்காலியில் அமர்ந்த எந்த அக்கூய்ஸ்டும், கோபாலன் கொக்கிப் பிடி போட்டு கேட்கும் கேள்விகளில் தம் குற்றத்தை எளிதில் ஒப்புக்கொள்வதால், அந்த நாற்காலி ‘பிரசித்தி’ பெற்றுவிட்டதாக தேவன் எழுதுவார்.

(தொடர்ந்து வரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – (5)

  1. தேவனுடன் மீண்டும் பயணிக்கிறேன்… திவாகரின் உதவியால்! வந்தனங்கள் பல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.