சிறகுதிர்த்த மின்மினி

சாந்தி மாரியப்பன்

மின்மினி மந்தையினின்று
வழி தப்பிய எரிகல்லொன்று
கவணிடை
எறிகல்லாய்ப்புறப்பட்டது..
வெகுதூரப்பயணமோவென
ஏங்கி வினவிய சகாக்களைப்
புறங்கையால் ஒதுக்கிவிட்டு
உல்லாசமாய்ப்புறப்பட்ட உற்சாகத்துடன்
துள்ளித்துழைந்தது அண்டப்பெருவெளியில்.
இலக்கில்லாப்பயணத்தில்
அதிரும் பிம்பங்களைச் சிதற விட்டபடி
துழாவித்துழாவி உணர்கொம்புகள் நீட்டி
முன்னேறிக்கொண்டுதானிருந்தது அது.
இலக்கில்லா எவரோ.. எதுவோ..
என்றேனும் ஓர் நாளில்
இலக்கினை அடைந்தே தீரவேண்டிய
நியதிக்குட்பட்டு
பூமாதேவியிடம் மயங்கி
முத்தமிட முயன்றதில்
சீறி எரித்தது
லக்ஷ்மண ரேகை..
உதிர்ந்து வீழ்ந்தது மின்மினி
ஆயிரமாயிரம் பரப்பளவில் தன் சிறகுகளை உதிர்த்தபடி..

படத்திற்கு நன்றி: http://www.foxnews.com/science/2013/02/15/injuries-reported-after-meteorite-falls-in-russia-ural-mountains

5 thoughts on “சிறகுதிர்த்த மின்மினி

  1. எரிகல் பூமியை முத்தமிட்டு மறைவதை அழகிய பாவாய்ப் புனைந்த பாவாய்! உமக்கு வாழ்த்துக்கள். ”எரிகல் கவணிடை எறிகல்”லாய்ப் புறப்பட்டதை மிகவும் இரசித்தேன்.

    -மேகலா

  2. சரியான இலக்கை எட்டிப்பிடித்தது-
    கவிதை…!
     -செண்பக ஜெகதீசன்…

  3. “மின்மினி மந்தை” – அழகான சொல்லாக்கம். கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க