​ பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்

0

பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த

விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்

[பிப்ரவரி 15, 2013]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

“இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”

நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]

ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது. 30-50 கி.மீ. உயரத்தில் நேர்ந்த அந்த வெடிப்பு ஒலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன. பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன்.

வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது. அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது. இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது ! 150 அடி நீளமுள்ள பெரிய முரண்கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளமுள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது !

Meteorite Light -1

ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி. சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார். நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர் அனுப்பட்டிருப்பதாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார். முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார். இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரியவில்லை.
1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது. “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.

Impact of a Meteor

இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.

++++++++++++++++++++++++++++

தகவல்:

  1. 1. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/9872020/Meteoroid-falling-over-Russia-caught-on-camera.html
  2. 2. http://www.telegraph.co.uk/news/newsvideo/9872507/The-science-behind-Russian-meteor-strike.html
  3. 3. http://www.telegraph.co.uk/science/space/9872991/Asteroid-passing-Earth-is-closest-ever-of-this-size.html
  4. 4. http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded
  5. 5. http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/10-ton-meteor-explodes-over-russia-injuring-hundreds-this-am.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29
  6. 6. http://rt.com/news/meteorite-crash-urals-chelyabinsk-283/
  7. 7. http://rt.com/news/scientists-explain-chelyabinsk-bolide-337/

+++++++++++++++++++

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 17, 2013)

YouTube – Videos from this email

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.