Tag: நிர்மலா ராகவன்

  • ஒரு பேருந்துப் பயணம்

    நிர்மலா ராகவன்

    “என்னை விட்டுடுங்க! இதுதான் என்னோட கடைசி வெளிநாட்டுப் பயணம்!” முகத்தில் அருவருப்புடன், முணுமுணுப்பான குரலில் கூறிய மனைவியைப் பார்த்தார் அருண். தன்னால்தானே அவளுக்கு இவ்வளவு கஷ்டம் என்ற நினைப்பில் சற்று குற்ற உணர்வு உண்டானது அவருக்கு.

    “கொஞ்ச நேரம்தானே பிரபா? புதுச்சேரியிலிருந்து மூணே மணி நேரம்! கடற்கரைவழியா போய், சென்னையில கொண்டு விட்டுடுவான்!”

    “ஆயிரக்கணக்கா, மலேசிய ரிங்கிட்டில செலவழிச்சுக்கிட்டு பிளேனில வந்திருக்கோம், உல்லாசமா சுத்திப் பாக்க! டாக்ஸிக்கு இரண்டாயிரம், இல்லே மூவாயிரம் ரூபாய் குடுக்க கருமித்தனப்பட்டுக்கிட்டு, யாராவது இப்படி பஸ்ஸில வருவாங்களா!”

    “நம்ப ரெண்டு பேருக்கும் பஸ் டிக்கட் நூறு ரூபாய்கூட ஆகலம்மா. மிச்சம் பிடிக்கிற காசில, நீ இன்னொரு பட்டுப் புடவை வாங்கிட்டுப் போயேன்!”

    அவரது நைச்சியப் பேச்சு பிரபாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. முன்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவள் கவனம் லயித்திருந்தது. எண்ண ஓட்டம் அவளைச் சுற்ற ஆரம்பித்தது.

    ஒல்லியா இருந்தாலும், பொண்ணு நல்ல களை!
    கழுத்தில் முத்து மாலை- – அதில் தோல் உரிந்திருந்தது.
    கல்யாணமாகாத பெண் போலிருக்கு! பாவம், ஏழை!
    நீண்ட ஒற்றைப்பின்னல். அதன் நுனியில் ரிப்பன் வைத்துக் கட்டியிருந்தாள்.

    சரியான பட்டிக்காடு! பெயர் என்னவாக இருக்கும்? சரி, அருக்காணி என்று வைத்துக்கொள்வோம்.
    பொழுதைக் கழிக்க, பிரபாவுக்கு இது ஒரு நல்ல விளையாட்டாகப் போயிற்று.

    பின்னலுக்கு மேலே சாமந்தி, அரளி, `பச்சை’ என்ற வாசனை இலை — எல்லாம் வைத்துக் கட்டிய தலைகொள்ளாத கதம்பம்.

    தலை கனக்காதோ!

    ஏறியதிலிருந்து, தலையைப் பரபரவென்று சொறிந்து கொண்டிருந்தாள் அருக்காணி.

    இப்படியா தலையைப் பிடுங்கிக்கொள்ளும் ஒரு பெண், நாலு பேர் பார்க்கிறார்களே என்ற கூச்சம்கூட இல்லாமல்!
    ஒருவாறாக, இரு விரல்களின் நுனியைச் சேர்த்து, மயிர்க்காலை பாடாய் படுத்திக் கொண்டிருந்த பேனை எடுத்து, இன்னொரு கை கட்டைவிரலால் அவள் சொடுக்கியபோது, பிரபாவுக்குக் குமட்டியது.

    ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்… நல்லாத்தான் சொல்லி வெச்சிருக்கான், பாட்டிலே!
    `சென்னைக்குப் போனதும், முதல் வேலையா மருந்துக் கடையிலே நல்ல மருந்தாக வாங்கி, தலையில அழுந்தத் தேய்ச்சுக்கணும்! முன் சீட்டிலிருந்து பரவிடாது!’ என்று பிரபாவின் எண்ணம் போயிற்று.

    பஸ் வழியில் எங்கோ நின்றது. கையில் ஒரு குழந்தையுடன் ஒரு மாது ஏறினாள். இன்னொரு தோளில் ஒரு பெரிய பை. வெளிறியிருந்த நீல நிற நைலான் புடவை. பரட்டைத் தலை என்று பிரபா தன் மனதில் குறித்துக் கொண்டாள்.
    “யாரும்மா? கையில பிள்ளையோட எப்படி நிப்பே? அடுத்த பஸ்ஸிலே வா. எறங்கு, எறங்கு!” கண்டக்டரின் அதிகாரக் குரல் சிலரை அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

    வேறு சிலர், `இதெல்லாம் தினம் தினம் நடக்கிறதுதானே!’ என்று நினைத்தவர்களாக, வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டோ, `இஞ்சி மொரப்பா! அஞ்சே ரூபா! தலை சுத்தலுக்கு வாங்கிக்குங்க!’ என்று கூவியபடி விற்ற பையனை அழைத்துக்கொண்டோ இருந்தனர். இஞ்சியை வேகவைத்து, சீனிப்பாகில் இட்டுக் காய வைத்திருந்த விரல்களை நினைவூட்டும் துண்டங்கள் சிறிய பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்தன.

    `அநியாயம்! இதுக்கு அஞ்சு ரூபாயா!’ என்று பேரம் பேசிக்கொண்டிருந்தார் ஒருவர்.
    யாரும் அத்தாய்க்குத் தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, நின்றுகொண்டே பயணம் செய்ய ஒப்பவில்லை.
    “ஒனக்கு எத்தனை வாட்டி சொல்றது? எறங்கு!’ கண்டக்டர் ஆக்ரோஷமாகக் கத்தினார். அவள் இறங்க யத்தனித்தாள்.

    “அவங்க எறங்க வேணாம்!” அபயக் குரல் கேட்டது. அருக்காணிதான்.
    “பிள்ளையை இப்படிக் குடுங்க!” என்று தன் கையை நீட்டி, பிடுங்காத குறையாக குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
    கறுப்புச் சாந்தில் பெரிய பொட்டு, நெற்றியிலும் கன்னத்திலும். அதைவிடப் பெரிய கண்களால் தன்னைத் தோளில் தூக்கிக் கொண்டவளை உற்றுப் பார்த்தது.

    “என்னடா முழிச்சு முழிச்சுப் பாக்கறே?” என்று கொஞ்சியபடி, “அதோ பாத்தியா! எத்தினி பஸ்!” என்று வெளியில் கைகாட்டினாள் அருக்காணி.

    குழந்தைக்கு என்ன, ஆறு மாசமிருக்குமா?
    பிரபா சுவாரசியமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பஸ் புறப்பட்டது. வழியில் தெரிந்த காட்சிகளை எல்லாம் அருக்காணி விளக்க, `இதற்குமேல் என் மூளை வேலை செய்யாது!’ என்பதுபோல், குழந்தை கண்களை மூடிக்கொண்டது. அது தூங்க வசதியாக, மடியில் கிடத்திக் கொண்டாள் அப்பெண்.

    பஸ்ஸின் குலுக்கலில் கண்ணயர்ந்த பிரபா இரண்டு மணி பொறுத்துதான் விழித்தாள்.
    “அம்மா எறங்கப் போறாங்கடா!” என்று பிரியாவிடை கொடுத்த அருக்காணி, குழந்தையை அதன் தாயிடம் நீட்டினாள். அவளை விட்டுப் பிரிய மனமில்லாததுபோல், குழந்தை தன் பிஞ்சு விரல்களால் அவளுடைய புடவையை இறுகப் பற்றியிருந்தது.

    “பிள்ளையை நல்லா பாத்துக்கிச்சு!” என்று பொதுவாகச் சொல்லியபடி, அந்த தாய் இறங்கினாள்.
    வாய் உபசாரமாக நன்றி கூறத் தெரியாத பாமரப் பெண்!

    சென்னையும், ஓடும் மாந்தர்களும், மனிதர்கள், வாகனங்களின் இரைச்சலும் சேர்ந்து வந்தன.

    “பஸ்ஸிலே இவ்வளவு பேரை அடைப்பாங்கன்னு தெரியாம போச்சு. என்னென்னமோ எண்ணை நாத்தம்! மூச்சுக்கூட விட முடியல!” கோயம்பேடில் இறங்கி, ஆட்டோவில் இறங்கும்வரை மௌனமாக இருந்த அருண், முதன்முறையாகப் பேசினார். “இனிமே பஸ்ஸே வேண்டாம்பா! டாக்சிதான்!” உடலைக் குலுக்கிக் கொண்டார்.

    “ஒரு புத்தகத்தோட மதிப்பை அதோட அட்டையை வெச்சு எடைபோடக் கூடாதுன்னு சரியாத்தான் சொல்லி வெச்சிருக்காங்க!”
    தான் என்ன சொல்கிறோம், இவள் சம்பந்தா சம்பந்தம் இல்லாது என்ன சொல்கிறாள் என்று, மனைவியைத் திரும்பிப் பார்த்தார் அருண்.

    `பாவம்! ரொம்ப நேரம் பஸ்ஸிலே வந்தது இவளுக்குத் தலை சுத்திப் போயிருக்கு!’ என்று பரிதாபப்பட்டுக் கொண்டவர், `ஹோட்டலிலே ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடிச்சா சரியாப் போயிடும்!’ என்று ஒரு முடிவும் எடுத்தார்!

    (மக்கள் ஓசை, 2010, சிறுகதைகள்.காம்)

    Share
  • உன்னையறிந்தால் ….. ! (7)

    பதின்ம வயதினர்

    நிர்மலா ராகவன்

    உனையறிந்தால்

    கேள்வி: என் மகளைச் சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக, அவள் விருப்பப்படியெல்லாம் நடக்கப் பழக்கிவிட்டேன். ஆனால், பதினைந்து வயதிலும் தன் விருப்பப்படிதான் நடப்பேன், நான் எதுவும் கேட்கக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறாள். டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது?

    விளக்கம்:

    பால்ய விவாகமும், தந்தையின் தொழிலையே கற்று, மகன் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டபோதும், `பருவ வயது 13 – 18’ என்றெல்லாம் தனியாகப் பிரிக்கப்படவில்லை. பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் குழந்தைகளாகக் கருதப்பட்டார்கள். (ஆனால், அந்தந்த வயதுக்கு மீறிய பொறுப்புகளும் அவர்கள்மீது திணிக்கப்பட்டன).

    சுமார் 65 ஆண்டுகளாகத்தான் பதின்ம வயதினர் குழந்தைகளும் இல்லை முதிர்ச்சியுற்ற பெரியவர்களும் இல்லை, இவர்கள் வேறு ஒரு பிரிவினர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு, அவர்களுடைய உளவியலைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    இந்த வயதினர், `நியாயம்’, `அநியாயம்’ என்ற முறையில்தான் எந்த பிரச்னையையும் அணுகுவர். எளிதில் உணர்ச்சிவசப்படுவர். உடலிலும், மனதிலும் மாற்றம். ஆனால், இதைச் சரிவர விளக்குவார் யாருமில்லை. `இதையெல்லாமா சொல்லித் தருவார்கள்!’ என்று கூசியபடி விளக்கினால், இந்த விஷயத்தில் வேண்டாத ஆர்வம்தான் வரும். அபாயமான விளைவுகளை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடத் தூண்டும் துணிச்சலும் இந்தப் பருவத்தினருக்கு இயற்கையிலேயே எழுகிறது.

    இதையெல்லாம் புரிந்துகொண்டு, சிறு வயதிலிருந்தே குழந்தைகளையும் ஒரு பொருட்டாக மதித்துப் பெற்றோர் நடக்க வேண்டும்.

    குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பும்போது, யாராவது வீட்டில் இருக்க வேண்டுவது அவசியம். எப்போதாவது வெளியில் போகவேண்டிய அவசியம் நேர்ந்தால், அவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு — எங்கே போயிருக்கிறீர்கள், எப்போது திரும்புவீர்கள், சாப்பிட என்ன, எங்கே வைத்திருக்கிறீர்கள் — இப்படி. இதைப் படிக்கும்போது, பெற்றோர் தம் கூடவே இருப்பதுபோல உணர்வார்கள் குழந்தைகள்.

    `என் மகள் (வயது 17) வெளியே போகும்போது, நான் கேட்காவிட்டாலும், போகுமிடத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போகிறாள். அவளுடைய சிநேகிதர்களை வீட்டுக்கு அழைத்து வந்து, அறிமுகம் செய்து வைக்கிறாள்!’ என்று என்னிடம் கூறி அதிசயப்பட்டாள் என்னுடன் வேலை பார்த்த ஒரு மாது. என்னைவிட ஏழு வயது பெரியவள். இந்த தாய், மகள் சிறுமியாக இருந்தபோது, இதேபோன்ற கரிசனத்தை (நான் சீக்கிரமே திரும்பி விடுவேன், அனாவசியமாக கவலைப்படக்கூடாது), மரியாதையை அவளுக்கு வழங்கியிருக்கிறாள் என்று ஊகித்துச் சொன்னேன். தான் பெற்றதைத் திருப்பி அளிக்கிறாள் பெண். இதில் அதிசயப்பட என்ன இருக்கிறது?

    பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் நண்பர்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். பண்டிகை நாட்களின்போது, நண்பர்களை வீட்டுக்கு அழைக்கச் சொல்லுங்கள். ஒரு சிலர், உங்கள் குடும்பத்தில் வழக்கமாக அனுசரிக்கப்படும் மரியாதை, தைரியம், ஒழுக்கம் போன்ற சில கொள்கைகளிலிருந்து மாறுபட்டிருக்கக்கூடும். அவர்களைப்பற்றிப் பிறகு பேசுங்கள். ஆத்திரமின்றி, நட்புணர்வோடு. நாம் கொண்டிருக்கும் அக்கறை குழந்தைகளுக்குப் புரியும்.

    உதாரணமாக, ஒரு பெண் பதினைந்து வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்கிறாள். அவளுடன் ஊர்சுற்றுவதில் ஒத்துப்போகாத தோழியை `பழைய காலம்! அம்மாவின் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து போகிறவள்!’ என்று பலவாறாகப் பழிக்கிறாள். திரும்பத் திரும்ப இப்படியே செய்தால், எவரையும் தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறாள்.

    அவள் நினைத்தபடியே, பெண்ணும் அம்மாவுடன் சண்டைக்குப் போகிறாள், `என் வயதொத்த பெண்கள் எல்லாம் சுதந்திரமாக இருக்கிறார்கள். நான் சந்தோஷமா இருந்தா ஒங்களுக்குப் பொறுக்காதே! என் சிநேகிதிகளோட அம்மா இவ்வளவு மோசம் இல்லே!’ என்று.

    தாய் தானும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினால், காரியம் கெட்டுவிடும். ஏன் தெரியுமா?

    பதின்ம வயதுப் பையனாக இருந்தால், முன்பின் யோசியாமல், ஏதோ உணர்ச்சிவசத்தில் தப்பு செய்கிறான். வயது வந்தவர்களோ, நன்றாக யோசித்து, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெண்ணின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, நிறையப் புகழ்ந்து, அவளை வசப்படுத்தப் பார்ப்பார்கள்.

    பதினைந்து வயதில் ஒரு பெண்ணுக்கு உடல் வளர்ந்திருக்கிற அளவுக்கு உலக விவரம் புரிவதில்லை. மனதளவில் அவள் குழந்தைதான். யாராவது, `ஒன்னைப் பாத்தா சின்னப்பொண்ணா தெரியல. என்னமா வளர்ந்திருக்கே! எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கே! புத்திசாலி!’ என்றெல்லாம் புகழும்போது, மயங்கிவிடுகிறாள்.

    (எத்தனை வயதானாலும், நம்மை முகத்துக்கு நேர் புகழ்கிறவர்கள் ஏதாவது ஆதாயம் எதிர்பார்த்துத்தான் அப்படிச் செய்கிறார்கள். அப்படி யாராவது புகழ்ந்தால், `நன்றி,’ என்றுவிட்டு, போய்க்கொண்டே இருக்க வேண்டும். பத்து வயதிலேயே உங்கள் குழந்தைக்கு இதைச் சொல்லிவைங்கள். அதிகம் ஏமாற மாட்டார்கள்).

    இப்படி, உலகத்தின் நடப்புகளைப் பக்குவமாக எடுத்துச் சொன்னால், பெண் யோசிக்க ஆரம்பிக்கிறாள். எப்போதும் நம் நன்மையைத்தான் கோருவாள் தாய் என்ற நம்பிக்கையுடன், `ஓ! அதான் என் ஃப்ரெண்ட் என்னைப் பாத்து பொறாமைப்படுகிறாளா!’ என்று தெளிந்து, எந்தக் குழப்பத்திலும் சிக்காமல் தப்புகிறாள்.

    ஆம், `சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடப்பவர்கள் எப்போதும், தன்னைக் கட்டுப்படுத்த யாருமில்லையே என்ற ஏக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    எது சரி, எது தவறு என்று விளக்க ஒரு பெண்ணோ, பிள்ளையோ தவறு செய்யும்வரை காத்திருக்க வேண்டாம். உங்களுடன் தனியாகப் பிரயாணம் செய்யும்போதோ, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போதோ, பொதுவாக இந்த வயதினருக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும், அவைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் பேச்சுவாக்கில் சொல்லுங்கள்.

    உதாரணமாக, சிறு வயதிலிருந்தே தாயிடம் அனுமதி கேட்டு விளையாடப் போகும் வழக்கமுடைய பெண், `இருட்டுவதற்குள் வர வேண்டும்,’ என்று தாய் சொன்னபடி நடந்திருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பதினைந்து வயதிலும், `என் சிநேகிதி வீட்டில் ஒரு பார்ட்டி. டீன் ஏஜ் பையன்களும் வருவார்கள். நான் போகட்டுமா?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

    `எங்க காலத்திலே..,’ என்று ஆரம்பித்தால், `போர்!’ என்று முகத்தைச் சுருக்கிக் கொள்வார்கள்.
    `ஆண்பிள்ளை,’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஏதேதோ கற்பனை செய்து, அதிலேயே பயந்து கத்தும் தாய் தன் மகளின் மதிப்பில் தாழ்ந்து விடுகிறாள்.

    `வேண்டாம். அப்பா கோபிப்பார்,’ என்னும் தாயோ தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாள்.
    முன்கூறியபடி விளக்கிவிட்டு, `ஒனக்கு என்மேல வருத்தம். தெரியும். இன்னும் நாலு வருஷம் போனா, நான் ஒன் நன்மைக்குத்தான் சொன்னேன்னு புரியும்!’ என்று, அவளுடைய உணர்வுக்கு ஆதரவு கொடுத்துப் பேசுங்கள். (`உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது,’ என்று கூறினால், நம்மை எவ்வளவு எதிர்ப்பவரும் சற்று அடங்கிவிடுவார்).

    உணர்ச்சிபூர்வமான இந்த வயதினர் தெரியாத்தனமாக ஏதாவது பிழை புரிந்துவிட்டு, ஆத்திரமும், அவமானமும் அடைவது சகஜம். தவறு செய்வது மனித இயல்பு என்று ஒவ்வொரு முறையும் பக்கபலமும், பாதுகாப்பும் அளியுங்கள். முடிந்தால், அந்த வயதில் நீங்கள் அதேபோல் எதையாவது செய்துவிட்டு, அதை மறைக்கப் பார்த்ததை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எனக்குப் பிடித்த தேங்காய் துவையலை கல்லுரலில் அரைக்கச் சொன்னார்கள் என் பாட்டி. அவர்கள் புளி நிறையப் போடுவார்கள். எனக்குப் புளித்தால் பிடிக்காததால், பாதியை எடுத்து, கல்லுரலின் பின் பக்கத்தில், சுவரருகே ஒட்டிவிட்டேன், யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி. `புளிப்பே இல்லையே! பாதி புளியை ஒளிச்சு வெச்சுட்டியா?’ என்று பாட்டி சந்தேகப்பட்டுக் கேட்டபோது, `இல்லவே இல்லை,’ என்று சாதித்து விட்டேன்!

    பொய்தான். என்ன செய்வது!
    அது பாட்டிக்கும் புரிந்ததால்தானே சிரித்தார்கள்! என் வயதில் அவர்கள் என்ன தில்லுமுல்லு செய்தார்களோ!

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …… (6)

    நிர்மலா ராகவன்

    வெற்றிப்பாதையில் முட்கள்

    உனையறிந்தால்111

    கேள்வி: எந்தச் சமயத்திலும் பிறரை நோகடிக்கக் கூடாது என்பது சரிதானா? எல்லோரிடமும் சிரித்துப் பேசுவது சிலருக்கு மட்டும் எப்படி கைவருகிறது?

    பதில்: இப்படி நடப்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள் என்று சொல்ல முடியாது. எப்போதும் சிரிப்பது, அதுவும் உரக்கச் சிரிப்பது, மகிழ்ச்சியின் அறிகுறி என்று அர்த்தமாகாது.

    சிறு வயதில் தாய், தந்தையர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஆகிய எல்லாரிடமும் பாராட்டு பெற விரும்பிய ஒரு பெண் பிறருக்கு என்ன பிடிக்கும் என்று குறிப்பால் அறிந்து, அதன்படி நடக்கிறாள்.

    யாரையாவது எதிர்த்தால், அதற்காகத் திட்டு விழும், தன்னை `நல்ல பொண்ணு!’ என்று புகழமாட்டார்கள் என்று புரிந்து போகிறது. அதனால், அவள் செய்யும் ஒவ்வொரு காரியமுமே பிறர் என்ன சொல்வார்களோ என்ற அடிப்படையில்தான் இருக்கும்.

    பெரியவளாக ஆன பின்னரும், இதே போக்கு தொடர்கிறது. `எனக்கு எதிரிகளே கிடையாது. எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாள்.

    இவளுக்கு எதிரிடையான பெண் ஒருத்தியே எடுத்துக்கொள்வோம். அவளைக் கண்டனம் செய்பவர்கள்தாம் அதிகம்.

    1 `உனக்கு ஆனாலும் ரொம்பத்தான் கர்வம்!’
    2 `நீ சொன்னது (அல்லது, நடந்துகொண்ட விதம்) என்னை நோகடித்துவிட்டது’.
    3 `உன்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை?’

    இந்த மாதிரி கேள்விக் கணைகளைத் தொடுத்து, யாராவது உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார்களா?
    கவலையை விடுங்கள். பிரச்னை உங்களிடம் இல்லை. கேட்டவரிடம்தான்.

    `ஏன் என்னால் முன்னுக்கு வரவே முடியவில்லை?’ என்று வருந்துபவர்கள், பிறர் தம் முன்னேற்றத்தைத் தடுக்க எந்தெந்த வழிகளை எல்லாம் கையாளுவர் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய நைச்சியமான பேச்சால் பாதிப்பு அடையாமல் இருக்க முடியும்.

    (1)`கர்வி’ என்று நம்மை ஒருவரைப் பழித்தால், நம்மிடம் ஏதோ சிறப்பு இருக்கிறதென்று எதிராளி உணர்ந்திருக்கிறார் என்று அர்த்தம். அந்தச் சிறப்பே நம் பலமாக, வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக ஆகவிடாமல் தடுக்கும் முயற்சி இந்த ஏளனம் கலந்த குற்றச்சாட்டு.

    பிறரை ஓயாது பழித்துவிட்டு, `ஏனோ ஒருவருக்கும் என்னைக் கண்டால் பிடிப்பதில்லை!’ என்று புலம்புவார்கள் இத்தகையவர். இல்லாவிட்டால், தன்னைப்போன்ற இன்னொருவருடன் நெருங்கிய நட்பு கொண்டு, பிறரைப் பழிப்பதிலேயே நிறைவு கண்டுவிடுவர்.

    கதை:

    நான் ஒரு புதிய பள்ளிக்கு மாற்றலாகிப் போனேன். இரு சீன ஆசிரியைகள் ஒன்று சேர்ந்து, என்னை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தார்கள், `நீ புதியவள். உனக்கு ஒன்றும் தெரியாது,’ என்பதுபோல. இத்தனைக்கும் எனக்கு முன் அனுபவம் இருந்தது. நான் பட்டதாரி ஆசிரியை, அவர்களைவிட உயர்ந்த பதவி வரிசையில் இருந்தேன் என்ற ஆத்திரமாக இருக்கலாம்.

    பொறுக்கிறவரை பொறுத்துவிட்டு, அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினேன். பின்பு, `என்னையும் உன்னைமாதிரி முட்டாள் என்று நினைத்தாயா?’ (You think I am stupid like you, aah?”) என்று ஒருத்திக்குப் பதிலடி கொடுத்தேன், ஒரு முறை. அவர்கள் பேசும் முறையையே கையாண்டதால், அவர்களுக்கு என் ஏளனம் புரிந்தது.

    அவ்விருவர் முகத்திலும் ஒரே ஆத்திரம். ஆனால், அவர்களுக்கு மேலே எதுவும் பேசும் தைரியம் இருக்கவில்லை.
    அதன்பின் என்ன! போலியான, திகட்டும் அளவுக்கு பணிவுதான் என்னிடம்!

    (2) `நீ சொன்னது (அல்லது, நடந்துகொண்ட விதம்) என்னை நோகடித்துவிட்டது’.

    பிறரது எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் நாம் பொறுப்பில்லை. நாம் சொல்வதையோ, செய்வதையோ பிறர் ஏற்றுக்கொள்ள முடியாதது நம் தப்பா?

    பல பெரியவர்கள் இம்மாதிரி பேசி, தம் குழந்தைகளை, `தாம் நொந்தாலும் பரவாயில்லை, பிறரை நோகடிக்கக்கூடாது,’ என்பதுபோல் என்றுமே சுயமாகச் சிந்தித்து நடக்கும் திறனில்லாது பழக்கிவிடுகிறார்கள். அதனால் குழந்தைகளும் பிறருடைய உணர்ச்சிக்கே மதிப்பு கொடுத்து, ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசப் பழகுகிறார்கள். பிறர் சொல்வது சரியோ, இல்லையோ, அதை ஆமோதித்து ஏற்றால் அவர்களுக்குப் பிடித்தவர்களாக ஆகிவிடுகிறோம் என்பது இவர்களுக்குத் தெரிகிறது.

    இக்குழந்தைகள் பெரியவர்களானதும், தாமே ஏதாவது செய்ய முயன்றுவிட்டு, அதுவும் பிழையாகிப் போனால் என்ன ஆகும்?

    ஒரேயடியாகக் கூசிப்போய், பிறருடைய பழிக்கும், கேலிக்கும் அஞ்சி, புதிதாக எதிலும் ஈடுபடும் துணிச்சலை இழந்துவிடுகிறார்கள். `நான் போட்டியில் எல்லாம் கலந்துகொள்ள மாட்டேம்பா. வெற்றி பெறாவிட்டால், கேவலம்!’ என்று பெருமை பேசுவார்கள்.

    அவர்களைப்போலவே பலரும் இருப்பதால், தாம் செய்வதுதான் சரி என்று திருப்தி அடைந்துவிடுகிறார்கள். வெகு சிலரே வெற்றிப் பாதையில் பீடுநடை போடுவது இதனால்தான்.

    தலைமைப் பொறுப்பு வேண்டுமெனில், சுய சிந்தனை அவசியம். எதிர்ப்புக்கு அஞ்சக்கூடாது. நமக்குச் சரியெனப்பட்டதை, அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவரை, துணிந்து செய்ய வேண்டும்.

    `எனக்காக இதைச் செய்யக்கூடாதா!’ என்று நமக்கு உடன்பாடில்லாத காரியங்களைச் செய்யத் தூண்டுபவர் நம் நலனிலும், நிம்மதியிலும் அக்கறை கொண்ட நண்பரே அல்லர்.

    கதை:

    ஒரு பார்ட்டிக்குப் போயிருந்தேன். அதை அளித்தவர் பெரிய அதிகாரி. ஒவ்வொருவரிடமாகப் போய், அவர்களை வற்புறுத்தி, மது குடிக்க வைத்தார். கூட இருந்தவர்களும் குடிக்காதவர்களைக் கேலி செய்தார்கள்.

    என்னருகே வந்தார். என்னைவிடப் பத்து வயது பெரியவரான அவர் எதுவும் பேசுமுன், `குடிப்பதை விட்டுவிடுங்கள் என்று நான் சொன்னால் கேட்பீர்களா?’ என்று சாந்தமாக, நான் அவரைக் கேட்டேன்.

    `Of course not!’ என்று ஆணித்தரமாகப் பதில் வந்தது.
    `நான் மட்டும் நீங்கள் சொல்வதைக் கேட்பேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?’ என்று நான் கேட்க, அவர் முகம் அதிர்ச்சியைக் காட்டியது. தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார். அதிலிருந்து எனக்கு ரொம்ப மரியாதை!
    (3) `உன்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை?’

    தன்னம்பிக்கை இல்லாத எவருக்குமே நாம் வித்தியாசமாக இருந்தால், பயம் உண்டாகும். எப்படியாவது தங்களைப்போல் மாற்றிவிட பெருமுயற்சி செய்கிறார்கள். நாம் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்த்துவதுபோல, `சுயநலமி,’ `அகம்பாவம் பிடித்தவள்’ என்று பல பெயர்களைச் சூட்டுவர். அவர்களை லட்சியம் செய்யவே கூடாது.

    கொஞ்சம் புத்திசாலியான வேறு சிலர், `உங்கள் புத்திசாலித்தனத்துக்கு நீங்கள் இப்படிச் செய்யலாமா?’ என்று, புகழ்வதுபோல் குழி பறிப்பர். ஒரு வேளை, அவர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று யோசித்து, அவர்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பது வீண்.

    பழியையும், வருத்தத்தையும் நாம் ஏற்காத பட்சத்தில், அவை சொன்னவரையே போய்ச் சேரும், சுவரில் அடிக்கப்பட்ட பந்துபோல். நாமும் எப்போதும்போல் நிமிர்ந்தே நடக்கலாம்.

    அச்சத்தாலோ, பொறாமையாலோ நம்மை முதலில் ஏற்காதவர்களே என்றாவது நம் உதவி தேடி வருவார்கள். `என்னைப் பழித்தாயே!’ என்று குத்திக் காட்டாது உதவலாம்.

    தொடரும்

    Share
  • உன்னையறிந்தால் ….. ! (5)

    உனையறிந்தால்11
    குழந்தைகளும் விஞ்ஞானிகள்தாம்

    நிர்மலா ராகவன்

    நம்மைச் சுற்றி இருப்பவைகளை அறிவதுதான் விஞ்ஞானம். இந்த விந்தைக்குத்தான் ஐம்புலன்களும் பயன்படுகின்றன.
    தாய் அணைத்தால், பிறந்த குழந்தை உடனே அழுகையை நிறுத்திவிடும். ஏனெனில், அவளுடைய மணம் அதற்குப் பரிச்சயமான ஒன்று. கண்களைத் திறந்த உடனேயே வெளிச்சம் இருக்கும் திசையை நோக்கித் தலையை திருப்பும். கிலுகிலுப்பையால் ஓசை எழுப்பினாலோ, தாய் அருமையாகப் பேசினாலோ, அழுகையை மறந்து பார்க்கிறது. எது கையில் அகப்பட்டாலும் இறுகப் பற்றிக்கொள்கிறது. அதாவது, நுகர்தல், பார்த்தல், கேட்டல், தொடுதல் ஆகியவைகளைப் பயன்படுத்தி தன்னைச் சுற்றி இருப்பவைகளை அறிய முயல்கிறது.

    தவழத் தொடங்கியதும், தரையில் கிடக்கும் எந்தப் பொருளையும், பூச்சியையும் துரத்திப் பிடித்து, வாயில் போட்டுக்கொள்ளப் பார்க்கும். தாய் தடுத்தால், ஒரே ரகளைதான். (இந்தப் பெரியவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை! சுவை என்பதை பின் எப்படித்தான் அறிவதாம்!– குழந்தை வெறுத்துப்போய் அழுவதன் அர்த்தம் இதுதான்).

    குழந்தைகளுக்கு அறிவு வளருவதற்குப் பல்வேறு அனுபவங்கள் அமைய வேண்டும். அவைகளை நாம்தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    நான்கு நாள் குழந்தையாக இருந்த என் பேரனை நான் முழங்காலிலிட்டுக் குளிப்பாடும்போது, அலுப்பாக இருந்தது. யாருக்காவது, எதையாவது சொல்லிக் கொடுத்தே பழக்கமில்லையா? இயல்பாக, சோப்புக்கட்டியை எடுத்து, குழந்தையைத் தொட வைத்தேன். `இது கெட்டியா இருக்கு, பாத்தியா? Solid!’ பிறகு நீரில் அவன் கையை அளையவிட்டு, ஓசை எழுப்பி, `இது Liquid. எப்படிச் சத்தம் கேக்கறது, பாரு!’ பின்பு, கையை என் மூக்கின்கீழ் கொண்டுவந்து, `இது Gas. ஹை! காத்து மாதிரி இருக்குடா!’ என்று ஆரம்பித்தேன்.

    வீட்டில் குழந்தை முதன்முதலாகக் குளிக்கும் அழகைப் பார்க்க வெளியே நின்றிருந்த என் குடும்பத்தினர் பெரிதாகச் சிரித்தார்கள், “இப்போதுமா physics?” என்று. நான் அயரவில்லை. அதற்குப் புரிகிறதோ, இல்லையோ, எனக்குப் பொழுது போயிற்று. நாலைந்து நாட்கள் அதே பாடம்தான்.

    கண்ணை மூடிக்கொண்டு இருக்கிற சிசுவிடம் பேசுவது முட்டாள்தனமோ என்று தோன்ற, அடுத்த நாள் எதுவும் பேசாது, நீரை மொள்ள ஆரம்பித்தேன். குழந்தையின் தோள் உயர உயர எழுந்தது, `இன்று ஏன் என் கையை எதன்மேலும் வைக்கவில்லை?’ என்று கேட்பதுபோல்.

    அனைவரையும் கூவி அழைத்து, “என்னைக் கேலி செய்தீர்களே! இப்போது பாருங்கள்!” என்று என் வெற்றியைக் காட்டினேன். கண் மூடி இருந்தால் என்ன! தொடுதல், கேட்டல் இரண்டும்தான் இருக்கின்றனவே!

    மூன்று மாதக் குழந்தையிடம், “குருவி கீச்சுக் கீச்சுனு கத்தறதே! கேக்கறதா?” என்று நாம் எடுத்துக் கொடுத்தால், உன்னித்துக் கவனிக்கும். ஸ்கூட்டர், ஆகாய விமானம், ரயில் போன்ற வாகன ஒலிகளையும் இப்போது அறிமுகப்படுத்தலாம்.

    `வயதானால், தானே தெரிந்துவிட்டுப் போகிறது! இதையெல்லாமா சொல்லிக் கொடுப்பார்கள்!’ என்கிறீர்களா?
    குழந்தை தானே தெரிந்து கொள்வதற்குமுன் நாம் சொல்லிக்கொடுத்தால், அதன் செவிப்புலன் கூர்மையாகி, ஆர்வம் அதிகரிக்கும். இதனால்தான் பிறந்த குழந்தைகளிடம் பேசும்போது, நீட்டி முழக்கி, நாமே குழந்தைபோலப் பேசுகிறோம்.

    சிதம்பரத்தில் இசை நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அவரது ஒன்றரை வயதுக் குழந்தை பேசவேயில்லை என்பதைக் கவனித்து, `நீ குழந்தையுடன் பேசமாட்டாயா?’ என்று அவருடைய இளம் மனைவியிடம் கேட்க, `அவள் பேசினால், நானும் பேசுவேன்,’ என்ற பதில் வந்தது.

    நான் குழந்தையிடம் என் பாடத்தை ஆரம்பித்தேன். “நேத்திக்கு கோயிலுக்குப் போனியா? அப்பாகூட போனியா? ஸ்கூட்டரிலே போனியா? ஸ்கூட்டர் எப்படிப் போச்சும்மா? டுர்..!’ வாக்கியங்கள் சிறியதாக இருந்தால் நலம்.
    குழந்தை மகிழ்ந்து சிரித்து, `டுர்..!’ என்றாள். அதுவரைக்கும் பேசாதவள், அன்று தூக்கத்தில் பாடினாள் என்று மகிழ்ந்தார்கள் பெற்றோர்.

    இரு பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தால், அதில் சிறு குழந்தையின் கவனம் போகாது. அசையாமல் கிடக்கும். அதுவே, தன் முகத்தைப் பார்த்துப் பேசுகிறார்கள் என்று தெரியும்போது, புரிகிறதோ, இல்லையோ, மனமகிழ்ச்சியைக் காட்ட, பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும்.

    குழந்தை மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார், `ஒங்களைமாதிரி பாட்டிகிட்டே வளர்ற பிள்ளைங்கதான் நல்லாப் பேசும்!’
    வளவளவென்று பேசவேண்டாம். ஆனால், மொழித் திறனையாவது வளர்த்து வைப்போமே!

    எட்டு வயதுக் குழந்தைகள் நிறைய பேசும். சற்று கண்டித்து, `வாயைவிட கண்ணையும், காதையும் அதிகமாகப் பயன்படுத்து,’ என்று இப்பருவத்தில் அறிவுரை கூறலாம். எதையும் கூர்ந்து கவனித்தல் விஞ்ஞானத்துக்கு இன்றியமையாத திறன்.

    பார்ப்பவைகளை எல்லாம் விளக்குங்கள். வீட்டுக்கு வெளியே நடக்கும்போது, “கீ..ழே புல்லு — பச்சைக் கலர்.., மே..லே வானம். அது நீ..லம். பச்சை, நீலம். சூரியன் பாத்தியா? கண்ணைக் கூசலே?” இப்படி விளையாட்டுப்போல், நமக்கு எளிதான, ஆனால் குழந்தை அறிந்திராதவற்றை ஒவ்வொன்றாக விவரித்தால், குழந்தை மகிழும். எதையும் கூர்ந்து கவனிக்கும் திறனுடன், வளர்ப்பவர்கள்மீது கொண்டுள்ள நெருக்கமும் அதிகமாகும்.

    இதேபோல், மரத்தாலான சாமான்கள், உலோகப்பொருட்கள், துணி போன்றவைகளைத் தொட்டுத் தடவி, தட்டி ஓசையெழுப்பினால், சருமத்தின் ஆர்வமும் தூண்டப்படாதா!

    சூடான, கூரான, அல்லது மின்சாரம் கசியும் பொருளைத் தொட்டு வைத்தால் என்ன ஆவது என்ற பதைப்புடன், `ஒண்ணையும் தொட்டு. விஷமம் பண்ணக்கூடாது!’ என்று மிரட்டுகிறாள் தாய். (`தாய்’ என்று இங்கே குறிப்பிடுவது பொதுப்படையாகத்தான்). எதையும் அறியவேண்டும் என்ற ஒரு குழந்தையின் இயல்பான ஆர்வத்துக்குத் தன்னையும் அறியாமல் முட்டுக்கட்டை போடுகிறாள்.

    மாறாக, கைபொறுக்கும் சூட்டில் ஒருவயதுக் குழந்தையின் விரல் நுனியை வைத்து, `ஊ..!’ என்று சொல்லிக் கொடுத்தால், வலி ஏற்படுத்தும் அனுபவம் இது என்று புரிந்துகொள்ளும். கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டால், `ஊ..!’ என்று வலியைப் புலப்படுத்தும்.

    எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயற்கையாகவே அமைய, `இது எப்படிப்பா?’ என்று ஒரு குழந்தை கேட்கும்போது, `அம்மாவைக் கேளு,’ என்று அப்பா பொறுப்பைத் தட்டிக்கழித்து விடுகிறார். அம்மாவோ, `ஒனக்குப் பதில் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே பொழுது சாஞ்சுடும்!’ என்று ஏளனத்தில் இறங்குகிறாள்.

    ஏதோ, நம்மையும் மதித்துக் கேட்கிறானே என்று, நமக்குத் தெரிந்த வகையில் எளிமையாகச் சொல்லிக் கொடுத்தாலே போதும். பெரிய விளக்கம் எலாம் தேவையில்லை. எப்படியும், ஒரு குழந்தைக்குத் தெரிவதைவிட நிறையத்தான் தெரிந்திருக்கும் நமக்கு. எதையும் அறியும் ஆர்வத்தைத் தூண்ட இது போதும். வயதானால், தானே ஆசிரியர்களைக் கேட்டுத் தம் அறிவை வளர்த்துக் கொள்வார்கள்.

    ஆசிரியர்களும் பெற்றோர் மாதிரித்தானா! கவலையை விடுங்கள். வாசகசாலைகள் இருக்கவே இருக்கின்றன!
    நம் அறியாமையால், அல்லது அலட்சியத்தால் இயற்கையாகவே அமைந்த ஐம்புலன்களின் ஆற்றல்களை நாம் கணிசமாகக் குறைத்து அல்லது அழித்து விடுகிறோம். இளமையிலேயே ஆர்வம் குன்றிவிட்டதால், பள்ளிப்பருவம் வந்தாலும், இவர்களுக்கு எதிலும் ஆர்வம் இருப்பதில்லை.

    `என் தாய் முட்டாள்!’ என்று சில மாணவிகள் என்னிடம் குறைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு மனம் நொந்திருந்தால், அப்படிக் கூறுவார்கள்!

    உங்களைவிட அனுபவசாலியாக உங்கள் மகனோ, மகளோ ஆகும்போது, தாம் கற்று அறிந்ததை ஆர்வத்துடன் உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். முற்பகல் செய்யின்…

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …. (4)

    நிர்மலா ராகவன்

    உனையறிந்தால்11

    ஆத்திரக்காரனாக வளரும் குழந்தை

    கேள்வி: சில பிள்ளைகள் எளிதாக ஆத்திரம் அடைகிறார்கள். மனோநிலை சரியாகத்தான் இருக்கிறது. எதனால் இப்படி?

    விளக்கம்:

    பெற்றோரில் ஒருவர் மிகுந்த கோபக்காரராக இருந்தால், குழந்தையும் ஆத்திரக்காரனாக வளரும். சிறு குழந்தைகள் ஓயாது அழுதால், அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். பசி, தூக்கம், உடல் நலமின்மை, எதையாவது பார்த்துப் பயந்துபோவது — இவைகளோடு, பொழுது போகாமல் அழுவதும் உண்டு. அழுகைதான் அவர்கள் மொழி.

    கூர்ந்து கவனித்தால், இப்படி அழுதால், இன்னது தேவை என்று புரிந்துகொள்ள முடியும். அணைப்பினால் அழுகையை உடனடியாக நிறுத்த முடியும். நாமும் பதட்டப்பட்டு, இல்லை, ஆத்திரப்பட்டு, குழந்தைகளையும் ஆத்திரக்காரர்களாக வளர்ப்பது எதற்கு?

    இரண்டு வயதுக்கு மேற்பட்ட எந்தக் குழந்தையும் தான் இனியும் பச்சைக்குழந்தை இல்லை, அதுதான் நடக்கவும், பேசவும் தெரிகிறதே என்று எண்ணிக்கொள்ளும். தன் சுதந்திர உணர்வை வெளிக்காட்டுவதேபோல், `வேண்டாம்,’ `மாட்டேன்,’ என்ற வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்தும். மற்றபடி, அர்த்தம் புரிந்து பேசும் வார்த்தைகளில்லை.

    தாம் சொல்வதை உடனுக்குடன் கேட்கவில்லை என்றால் சில பெற்றோர் ஆத்திரம் அடைகிறார்கள். இவர்களுக்கு தம் வயதிலும், அனுபவத்திலும் மிகுந்த பெருமை. அதை அதிகாரமாகக் காட்டிக்கொள்வர்.

    `என் பேச்சைக் கேட்காது, எதிர்த்துப் பேசுவதா!’ என்று சிறு குழந்தைகளின்மேல் ஆத்திரப்படலாமா? இந்த `குற்றத்துக்காக’ சிறுபிள்ளைத்தனமாக பெற்றோர் தண்டிக்கும்போது, தான் செய்த தவறு என்ன என்றே புரிவதில்லை குழந்தைக்கு.

    சின்னக் குழந்தையை அடித்தாலோ, திட்டினாலோ, பெற்றோருக்குத் தன்மேல் அன்பில்லை என்றெண்ணி அஞ்சும். வருந்தி அழும். இதனால்தான், தன்னை அடித்த தாய் மீண்டும் அணைத்துச் சமாதானம் செய்யும்வரை அழுகை ஓய்வதில்லை. அடிப்பது ஒரு வினாடி என்றால், சமாதானப்படுத்த அரை மணி பிடிக்கும். இந்த அவதிக்கு, சின்னத் தவறுகளைக் கண்டும் காணாமலிருக்கலாம்!

    ஏழெட்டு வயதுக் குழந்தைகளுக்கு இத்தகைய நடத்தை குழப்பத்தை விளைவிக்கும்.

    `நான் எந்தத் தப்பும் செய்யவில்லையே! அப்பா ஏன் அடிக்கிறார்? அம்மா ஏன் கத்துகிறாள்?’

    இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது, சமாளிக்க முடியாத எது நேர்ந்தாலும், ஆத்திரப்படுவதுதான் வழி என்று நிச்சயித்து, அதன்படி நடக்கிறார்கள்.

    முதல் குழந்தை பிறந்ததும், அதை நல்லவிதமாக வளர்க்கவேண்டும், தன்னால் முடியாத சிகரங்களையெல்லாம் அதைத் தொட வழி வகுக்க வேண்டும் என்று பல கனவுகளைக் காண்பார்கள் சில இளம் பெற்றோர். அதனால் படபடப்பும், பயமும் உண்டாவதுதான் கண்ட பலன். ஏனெனில், குழந்தைகளும் வளர வளர, அதே உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள்.

    என் மலாய் மாணவி ஒருத்தி என்னிடம் வந்து கேட்டாள், “நான் பாடங்களை நன்றாகப் படித்துக்கொண்டுதான் ஒவ்வொரு பரீட்சைக்கும் வருகிறேன். வினாத்தாளில் வரும் எல்லாக் கேள்விகளுக்குப் பதில் தெரியும். ஆனால், எழுத முடியாமல் போகிறது. ஏனிப்படி, டீச்சர்?” என்று. கலக்கத்தில் அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது.

    ஒரு முறை, நான் அவள் வகுப்பு மாணவிகளைக் கோபித்தபோது, விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள் — என் மனம் நொந்து விட்டதே என்று! எவ்வளவு தூரம் அவள் தன் தாயை நேசித்தால், ஆசிரியையும் அப்படியே பாவித்து நடப்பாள்!

    “நீ மூத்த பெண்ணா? மிக நன்றாகப் படித்து, உன் தாயைப் பெருமைப்படுத்த நினைக்கிறாயோ?” என்று கேட்டேன்.
    அவள் ஒப்புக்கொண்டாள்.

    தான் செய்வதெல்லாமே பெற்றோரைத் திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற ஓயாத கவலையால் இவளால் தன் முழுத்திறமையையும் காட்ட இயலாது போய்விட்டது.

    பரீட்சைக்குப் போகும்போதும், எழுதும்போதும் மனம் நிச்சலனமாக அல்லவோ இருக்க வேண்டும்!
    இவளைப்போல் தம் மனக்குறையைப் பிறரிடம் சொல்லி, அதைப் போக்கும் வழியை நாடுபவர்கள் அரிது. சிலர் தம் குறையைப் பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி, அதிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள்.

    `ஏனோ இப்படி எதிலுமே வெற்றி பெற முடியவில்லையே!’ என்பவர்களது ஏக்கமும், நிராசையும் காலப்போக்கில் ஆத்திரமாக மாற வாய்ப்புண்டு..

    இப்படி எழும் ஆத்திரத்தைப் பிறர்மீது காட்டுவோரும் உண்டு, தம்மீதே காட்டிக் கொள்பவர்கள் கூடாத சகவாசம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை நாடுகிறார்கள் — தம்மையே அழித்துக்கொள்ள விரும்புவதுபோல.

    பெரியவர்களுக்கு எரிச்சல் வர எத்தனையோ காரணங்கள்; மேலதிகாரியின் அவமதிப்பு, போக்குவரத்து நெரிசல், பணத் தட்டுப்பாடு இப்படி. அதை வெளிக்காட்டும் வகை புரியாது, பிள்ளைகளை வடிகாலாக ஆக்கிக் கொள்வது என்ன நியாயம்!
    சில பெற்றோர் தம் வயதொத்தவர்களுடன் அரட்டை அடித்து, ஓய்ந்து வீட்டுக்கு வரும்போது, பிள்ளைகளைக் கவனிப்பது எங்கே!

    இன்னும் சிலர் மனத்தளவில் குழந்தைப் பருவத்திலேயே தங்கிவிட்டவர்கள். அவர்களுடைய நினைப்பெல்லாம் கடந்த காலத்திலேயே இருக்கும். `அப்பா என்கூடப் பேசியதுகூட இல்லை, அக்காதான் அவருக்குச் செல்லம்,’ என்றெல்லாம், எப்போதோ சிறுவனாக இருந்தபோது நடந்ததைச் சொல்லிச் சொல்லி மாய்வார்கள். இதனால் நிகழ்காலத்தின் சுவையான சம்பவங்களை அனுபவிக்க முடியாது போய்விடுகிறது.

    சமீபத்தில் ஒரு மாது என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவரை நான் பார்த்ததில்லை. என்னிடம் பேசினால் ஆறுதலாக இருக்கிறது என்றார்.

    `என் கணவர் முன்கோபி. ஒன்றுமில்லாததற்கெல்லாம் கெட்ட வார்த்தை உபயோகிப்பார். அவர் போய்விட்டார். இப்போது, இரு மகன்களும் அவர் மாதிரியே இருக்கிறார்கள்! எனக்கு எங்காவது தனியாகப் போய்விட வேண்டும்போல இருக்கிறது!’ என்று பிரலாபித்தார்.

    `எங்கப்பா எப்பவும் திட்டுவார், அடிப்பார்,’ என்று இவரது மகன்கள் சிறு வயதில் தம் நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கலாம். நாம் யார்மீது குற்றப் பத்திரிகை வாசிக்கிறோமோ, அவர்கள் மாதிரியே ஆகிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

    `நாம் ஏன் இப்படி ஆனோம், நம் பிள்ளைகளும் நம்மைப்போலவே இளமைப் பருவத்தைக் குழப்பத்திலும், ஆத்திரத்திலும் கழிக்க வேண்டுமா?’ என்று நிறைய யோசித்தால், மாற வழியுண்டு.

    குழப்பத்தை வெளிக்கொணர, நம் மனதில் தோன்றியவற்றை எழுத்தாக வடிக்கலாம். இல்லையேல், படமாக வரையலாம். எழுதுவதும், வரைவதும் மிகச் சிறந்த வடிகால்கள். மனதில் நிம்மதி பிறந்தால் கோபமும், ஆத்திரமும் பறந்துவிடாதா!

    தொடரும்

    Share
  • உன்னையறிந்தால் …. (3)

    நிர்மலா ராகவன்

    உன்னையறிந்தால்1

    பெண்களை வம்புக்கிழுத்தல்

    கேள்வி: இளமைப் பருவத்தில் பெண்களைக் கேலி செய்து, வம்புக்கிழுத்தால்தான் ஆண்கள் வலியவர்களா?

    அது என்ன, வதையா? வேடிக்கைதானே?

    பதில்: ஆணாக இருப்பவனுக்கு உடல் வலிமையும், உத்தியோகமும்தான் பலம் அளிப்பவை என்கிறார், MICHAEL KORDA என்பவர், தனது MALE CHAUVINISM : HOW IT WORKS என்ற புத்தகத்தில். மேலும், தற்கால மனிதன், இந்த இரண்டு குணங்களும் இல்லாவிட்டாலும், வாய்ச்சவடால்தான் பெண்களை ஈர்க்கும், அடிமைப்படுத்தும் தனது ஆயுதம் என்று தப்பாக அர்த்தம் புரிந்துகொள்கிறான் என்கிறார் இவர்.

    உணர்வு ரீதியிலோ, அல்லது உடல் ரீதியிலோ வலிமை குன்றியவர்கள்தாம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை நான் சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தங்களையே பலமாக உணர அவர்கள் எடுக்கும் நடவடிக்கைதான் பெண்களைக் கேலி செய்வது.

    பதின்ம வயதில், தம் வயதொத்தவரைச் சிரிக்கவைக்க எதிர்ப்படும் பெண்களையெல்லாம் வார்த்தைகளாலேயே துன்புறுத்தும் ஒருவன், அதனால் அப்பெண்கள் அடையும் பயத்தையும், அதிர்ச்சியையும் கண்டு, `நான் பெரிய வீரன்!’ என்று பெருமிதம் கொள்கிறான்.

    இவர்கள் பெரும்பாலும் கும்பலாக இயங்கும் பெண்களிடம் வாலாட்டுவதில்லை. தனியாக ஒரு பெண் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். அவள் எதிர்த்தால், தன்மீது அவள் கவனம் திரும்பிவிட்டதே என்ற மகிழ்ச்சியுடன், இன்னும் மோசமாக செயல்படுவார்கள்.

    இத்தகைய அவதிக்கு உள்ளாகும் சில பெண்கள் எதுவும் நடக்காதமாதிரி தம்போக்கில் இருந்துவிடுவார்கள். ஏனெனில், எத்தனை வயதானாலும் ஆணை நம்பித்தான் இருக்கவேண்டும் என்று நம்ப வைக்கப் பட்டிருப்பார்கள். அதனால், எதிர்க்கும் பெண்ணை இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. உதவவும் மாட்டார்கள்.

    வதை என்பது உடல் ரீதியில் இருக்கும். என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், வாய்ச்சொல்லோ, உடல்வதையோ, பெண்களுக்குத் துன்பம் விளைவிப்பதுதான். தன்னம்பிக்கை குன்றி, மேலும் மோசமான நடத்தையை ஆண்களிடமிருந்து மறுப்பின்றி ஏற்கிறார்கள் இதற்கு உள்ளான பெண்கள்.

    நான் பல பெண்களிடம் இதைப்பற்றி கலந்து பேசியிருக்கிறேன். அவர்களுடைய போக்கிற்குப் பணியாவிட்டால், இத்தகைய ஆண்கள் கெஞ்சுவார்கள், சண்டை போடுவார்கள், பிறகு வருத்தமாகக் காட்டிக்கொள்வார்கள் — ஒரு பெண்ணின் இயல்பான தாய்மைக்குணம் இளகிவிடும் என்ற நம்பிக்கையில்!

    இவர்களது போக்கை ஒப்புக்கொள்ள முடியாத ஒழுக்கமான ஆண்கள் அவமானத்துடன் சுருங்குவார்கள். அவர்களால் தட்டிக்கேட்க முடியாது. வெகு சிலர், தம் நடத்தையால் அப்பெண்ணுக்கு ஆதரவு வழங்குவார்கள்.

    கேளுங்கள் கதையை.

    நான் ஆசிரியையாக இருந்தபோது, ஒரு பயிற்சிக்காக ஒரு மாத காலம் வேற்றூரில் ஹாஸ்டலில் தங்க வேண்டிய நிலை. என்னைத் துரத்தித் துரத்தி அடித்தான் ஒருவன். (கையால் அல்ல).

    நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, நாற்காலியின் இரு பக்கங்களையும் பிடித்துக் குனிந்து, `என் மகளே!’ என்று என் தோளில் கைபோட வந்தான, முதல் நாளே. எனக்கு அப்போது வயது 47!

    நான், `என்னடா.., அப்பா?’ என்று கேலியாக அழைத்தபோது, அதிர்ந்தான்.

    பிறகுதான் அறிந்தேன், பாலியல் ஈதியில் ஒரு ஆண் ஈர்க்கப்படும்போது, தனது உள்ளுணர்வை மறைக்க, தந்தையென தன்னைக் காட்டிக்கொள்வான் என்று.

    வாராந்திர விடுமுறையில் மூன்று பேருடன் இவன் வீடு திரும்பும்போது, `நான் அவளைக் காதலிக்கிறேன். அவளுக்கு என்மேல் வெறுப்பு. இருந்தாலும்..,’ என்று சொன்னதாக, உடன் பயணித்த ஆசிரியை என்னிடம் தெரிவித்தாள், என்னை எச்சரிக்கும் நோக்கத்துடன்.

    `இவனுக்கென்ன பைத்தியமா!’ என்று யோசித்தேன். திருமணம் நிச்சயமாகியிருந்த மகள் எனக்கிருந்தது எல்லாருக்கும் தெரியும். (இப்படித் தொந்தரவு அளிக்கும் விஷயத்தில், பெண்ணின் வயது ஆணுக்கு ஒரு பொருட்டே இல்லையாம்).

    அதன்பின் எப்போது எங்கள் வகுப்பு மாற்றப்பட்டாலும், அவனுடன் பயணம் செய்த ஒரு சீன ஆசிரியர், ஓடி வந்து என் பக்கத்து இருக்கையில் அமர்ந்துகொள்வார். எனக்கு அவரைச் சரியாகக்கூட தெரியாது.

    இறுதியில் அவர் போக்கு புரிந்தது. எனக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறார்!

    கடைசி நாள், 450 ஆசிரியர்கள் இருந்த சபையில், `என்ன வேண்டுமானாலும் பேசலாம்,’ என்று அறிவிக்கப்பட்டபோது, அதற்கு மேலும் பொறுக்க முடியாது எழுந்தேன்.

    மேடையிலிருந்த ஒலிபெருக்கியில், `பெண்கள் அலங்கரித்துக்கொள்வது ஆண்களுக்காக மட்டுமில்லை. அவளுக்கு அது பிடித்தமான விஷயம் என்பதால். அவள் தனியாக நடப்பதும், பிறருக்கு அழைப்பில்லை. வீணாக ஏன் தொந்தரவு செய்கிறார்கள் சிலர்? Please leave her alone,’ என்று வேண்டினேன் மலாய் மொழியில். உணர்ச்சிப்பெருக்கில், வார்த்தைகள் விட்டு விட்டு வந்தன.

    அப்படியும் என் ஆத்திரம் தீரவில்லை. `சக ஆசிரியையிடமே இப்படி நடந்துகொள்பவர்கள் தம்மிடம் பயிலும் மாணவிகளை என்ன பாடுபடுத்துவர் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு கேடுகெட்ட ஆணுடன் ஒரு நல்ல ஆணையும் படைத்திருக்கிறார் கடவுள். இத்தருணத்தில் எனது நண்பருக்கு நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!’ என்று அவர் பெயரைக் குறிப்பிட்டு முடித்தேன், கண்ணீர் பெருக.

    அதன்பின், என் எதிரில் வந்தவன் முகத்தில் அப்படியொரு அவமானம், சுய பரிதாபம். முகத்தை 180 டிகிரி திருப்பிக்கொண்டான்.

    `அவனுக்கு எதற்கு பரிதாபப்படுகிறாய்? He asked for it!” என்றார்கள் எல்லாரும்.

    `இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,’ என்று அறிவுரை வழங்கினார் ஒருவர்.

    ஒரு விரிவுரையாளர்,`ஆசிரியத் தொழிலில் இப்படியெல்லாம் நடக்க இவர்களுக்கு வாய்ப்பில்லை. அதான்!’ என்று என்னைச் சமாதானப்படுத்த முயன்றார்.

    `இந்த கஷடத்துக்குத்தான் நான் அலங்காரமே செய்துகொள்வதில்லை. குண்டாக இருந்தால், எவனும் கிட்டே வரமாட்டான்!’ — இது ஒரு சாதுவான பெண்.

    நீங்கள் எப்படி?

    Share
  • உன்னையறிந்தால் (2)

    நிர்மலா ராகவன்

    உன்னையறிந்தால்

    ஆர்வம் — ஒரு கோளாறா?

    கேள்வி: என் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு என்னைப் பிடிப்பதேயில்லை. நான் நிறைய கேள்விகள் கேட்கிறேனாம். `சும்மா, ஏன், எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே,’ என்று கண்டிக்கிறார்கள். இதில் என் தவறு என்ன? புரியவில்லையே!

    பதில்: சிறு வயதிலேயே, `எல்லாம் விதி. அல்லது கடவுள் கொடுத்தது,’ என்று எதையும் ஏற்றுக்கொள்ள உங்கள் ஆசிரியை பழக்கப்படுத்தப்பட்டு இருப்பார்கள்.

    பெரியவர்கள் சொல்வதை இம்மியளவுகூட மீறாமல், அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்பது நெடுங்காலமாக இருந்த வழக்கம். இதனால், பலருடைய கற்பனைத்திறன் நசுக்கப்பட்டுவிட்டது வருந்தத்தக்க விஷயம்.

    ஆப்பிள் எப்போதுமே மரத்திலிருந்து தரையில்தான் விழுந்து கொண்டிருந்தது. `இது எப்படி?’ என்று யோசிக்க ஒரு நியூடன் வேண்டியிருந்தது. அவரும் பிறரைப்போல், `இது இயற்கை’ என்று ஏற்றுக்கொண்டு, வாளாவிருந்தால், நமக்கு எவ்வளவு நஷ்டம்!

    `நாம் வழக்கமாக இப்படித்தான் செய்து வருகிறோம். இதை மாற்றுவானேன்?’ என்ற கேள்வி முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது.

    மிருகங்களை வேட்டையாடி, பச்சையாகவே உண்டுவந்த ஆதிமனிதன் உணவைப் பக்குவமாகச் சமைக்க நெருப்பைப் பயன்படுத்த ஆரம்பித்தது எப்படி தெரியுமா?

    ஒரு முறை அவர்கள் குடியிருந்த இடம் நெருப்புக்குப் பலியானபோது, உள்ளேயிருந்த இறைச்சி மட்டும் எளிதில் உண்ணத் தக்கவாறு பக்குவமாகியிருந்தது. பின்னர், மெனக்கெட்டு வீடுகளைக் கட்டி, எரித்து, உணவைப் பதப்படுத்தினார்கள்! `மிகுந்த பிரயாசையுடன் கட்டிய வீட்டை எரிக்காமல், உணவை மட்டும் சமைக்க முடியுமா?’ என்ற யோசனை ஒருவருக்கு எழ, நெருப்பில் சமைக்கும் பழக்கம் நடைமுறை ஆயிற்று.

    கடவுள், விதி, இயற்கை — ஏதோ ஒன்று எல்லாவற்றையும் நிச்சயிக்கிறது. அவைகளைத் தெரிந்துகொள்ள நாம் ஆர்வம் காட்டினால், அது துரோகம் இல்லை. நமக்கும் மூளை இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

    மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, அவர்களைச் சுயமாகச் சிந்திக்கும்படிச் செய்ய வேண்டும் என்று கல்வித் திட்டங்கள் வகுப்பார்கள். ஆசிரியர்களும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவார்கள். அதை ஒட்டி, ஏதாவது பரீட்சை இருந்தால், தாம் கற்றவைகளை எழுதுவார்கள். அத்துடன் முடிந்தது.

    பயிற்சி முடிந்தவுடன், அவர்கள் தாம் வளர்க்கப்பட்ட விதத்திலேயேதான் நடப்பார்கள். இல்லாவிட்டால், அவர்களும், அவர்களது பெற்றோரும் எங்கோ தவறு இழைத்திருக்கிறார்கள் என்று ஆகிவிடுமே!

    ஓர் உண்மைச் சம்பவம்: வியாசத்திற்கான விஷயங்களை ஆசிரியை வகுப்பில் விவாதித்தபடி அலசிவிட்டு, அத்துடன் தன்னுடைய தனிப்பட்ட கருத்து ஒன்றையும் எழுதிய `துணிச்சலான’ மாணவி, தன் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதற்காக வருந்தவில்லை. `இது என் தவறல்ல, ஆசிரியையிடம்தான் ஏதோ கோளாறு!’ என்று அலட்சியப்படுத்திவிட்டாள்.

    இம்மாதிரியான ஆசிரியைகளைச் சமாளிக்கும் வழி: வகுப்பில் வாயே திறக்கக்கூடாது. சொல்லப்படுவதை நாம் ஏற்கிறோமோ இல்லையோ, எல்லாவற்றிற்கும் தலையாட்டி வைக்க வேண்டும்.

    சகமாணவிகளிடமும் இப்படிச்செய்தால், நிறையபேர் நம் நட்பை நாடுவார்கள்.

    ஆனால், ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வருபவர் எப்போதும் தனியாகத்தான் இருப்பார். பின்னால் வருபவர்கள்தாம் கும்பலாக வருவார்கள்.

    திறமைசாலியாக, வெற்றி பெற்றவராக முன்னால் நிற்க வேண்டுமா, இல்லை, எல்லாருக்கும் இனியவளாக, சராசரியாகவே இருந்துவிட வேண்டுமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

    Share
  • உன்னையறிந்தால் …..! புதிய தொடர்

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். இன்றிலிருந்து (ஏப்ரல் 20, 2015) பிரதி ஒவ்வொரு திங்களன்றும், உன்னையறிந்தால்…..’ என்ற வாழ்வியல் anதொடர் கட்டுரையை நம் நிர்மலா ராகவன் வழங்கப் போகிறார்கள். தன்னையறியும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தரணியில் போற்றப்படும் என்பது நாம் அன்றாடம் காணும் உண்மை. பல மகான்களும் அதற்கு நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். அறிவியலும், ஊடகங்களும் அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ள இக்கால கட்டங்களில், குழந்தை வளர்ப்பு பெரும் சவாலாக உள்ளது. அவர்களின் அறிவு வளர்ச்சியும் அபரிமிதமாகவே உள்ளது. ஆக, இன்றைய குழந்தைகளை அதன் இயல்பு நிலை மாறாமல், அதே சமயம் தீய வழிகளை நாடாமல், ஒழுக்கம் கெடாமல் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு, அல்லதை பாரபட்சம் இல்லாமல் தள்ளும் நிலையை பழக்க வேண்டுமானால் பெற்றோரும் சற்று தெளிவடைய வேண்டியுள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் திருமதி நிர்மலா ராகவன் எழுதும் இத்தொடர் அதற்கான ஒரு முயற்சியாக இருக்கும் என்று நம்புவோம்.
    நிர்மலா ராகவன் மதராஸில் பிறந்து, பெங்களூரில் படித்துப் பட்டம் பெற்று, திருமணமானபின் மலேசியா வந்தவர். 1966-லிருந்து கோலாலம்பூரில் வசித்து வருகிறார். மூத்த பௌதிக ஆசிரியையாக மலேசிய அரசாங்கப் பள்ளிகளில் பணிபுரிந்தவர். (அதனால், மலாய், சீன இனத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு). நேரடி சமூகச்சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

    தமிழ், ஆங்கில இருமொழி எழுத்தாளர். ஆங்கிலத்தில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள் சுவீடன் மற்றும் மலேசியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    ஆங்கிலத்தில், கல்வி, சமூக இயல், மனோதத்துவம், இந்திய பாரம்பரியக் கலை விமரிசனம், மருத்துவம் முதலான பொருட்களில் தினசரிகளில் 13 வெவ்வேறு பகுதிகளில் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் ஒலிபரப்பாகி உள்ளன.

    தமிழில் சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, வானொலி நாடகம், கலை விமரிசனம் ஆகியவைகளை 1967-லிருந்து எழுதிவருகிறார். பல சிறுகதை, நாடகம், நாவல் போட்டிகளில் பரிசுகளை வென்றிருக்கிறார்.

    “சிறுகதைச் செம்மல்” விருது (1991); 1993-ன் சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது (சூரியன் மாதப் பத்திரிகை வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது); சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006)
    சிறுகதை, நாடகத்திற்கான பட்டறை நடத்தியுள்ளார். நீதிபதியாகவும் இருந்திருக்கிறார்.

    பல மேடைகளிலும், கருத்தரங்குகளிலும் பேசியுள்ளார். அண்மையில் சாகித்ய அகாடமி, இந்திய தூதரகம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலியவை இணைந்து, கோலாலம்பூரில் நடத்திய இலக்கியக் கருத்தரங்கில், `என் படைப்புலகம்’ என்ற பொருளில் உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தார்.

    இவரது “ஏணி” என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில், இளநிலை பட்டப் படிப்புக்கு பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.

    தனது இரு கதைகளை ஆங்கிலத்தில் இவர் மொழிபெயர்க்க, அவை அகில உலக இசுலாமிய பல்கலைக்கழக சஞ்சிகையில் வெளியாகி உள்ளன.

    கர்னாடக இசை, பரதநாட்டியம் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றவர். பரதநாட்டியத்திற்கு ஏற்புடையதாக தொண்ணூறுக்கு மேற்பட்ட தமிழ்ப் பாடல்களை எழுதி, கர்னாடக இசை முறைப்படி மெட்டமைத்து, சிலவற்றைப் பாடிப் பதிவு செய்திருக்கிறார்.

    தான் கற்றவை இப்பகுதிவழி பிறருக்கும் பயன்படப்போவது நிறைவளிக்கிறது என்கிறார்.

    அன்புடன்
    பவள சங்கரி

    உனையறிந்தால்

    உன்னையறிந்தால் … (1)

    தந்தை மகனுக்காற்றும் கடமை

    அப்பா கேட்கிறார்: நான் அலுவலகம் போய் அலைந்துவிட்டு, வீடு திரும்பும்போது உடல் ஓய்ந்துவிடுகிறது. இந்த லட்சணத்தில், நான் குழந்தைகளை வளர்ப்பதில் அக்கறை காட்டவில்லை, எல்லா வேலையையும் அவளிடமே விட்டுவிடுகிறேன் என்று என் மனைவி குறைப்படுவது நியாயமா?

    பதில்:

    `குழந்தை வளர்ப்பு’ என்பது எதிர்காலத்தில் குழந்தை வெளி உலகத்தை அதிக பயமில்லாமல் எதிர்கொண்டு, எந்த வயதிலும் எல்லா விஷயங்களலும் நம்பிக்கையுடன் செயல்பட வழிவகுப்பதாகும். வெளி உலகை ஓரளவு புரிந்து வைத்திருக்கும் தந்தையின் பங்கு இந்த ரீதியில் இன்றியமையாதது.

    ஆரம்பத்தில் தன் வாரிசுக்கு குரோமோசோம் வழி உயிரையும், அதனுடன் ஆண், பெண் பாகுபாட்டையும் அளித்து, பின்னர் அதற்குத் தேவையான உணவு, உடை, கல்வி முதலியவைகளுக்கான செலவுகளையும் ஏற்பது மட்டுமே ஒரு தந்தையின் கடமை ஆகிவிடாது.

    சமூக இயல் நிபுணரான ஆர்லீ ஹோஷ்சைல்ட் என்பவர் கூறுகிறார்: குழந்தை வளர்ப்பில் மிகுந்த அக்கறை கொண்டு, அதில் ஈடுபாடு கொண்டிருக்கும் தந்தைக்குப் பிறந்த குழந்தைகள் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டு வளர்கிறார்கள். பிறருடன் பழகும்போது மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை.
    மாறாக, பொறுப்பற்ற தந்தை வாய்த்தால், மேற்குறிப்பிட்ட நற்பண்புகள் இருப்பதில்லை.

    ஆணோ, பெண்ணோ, ஒரு குழந்தை தந்தையுடன் நெருக்கம் கொள்வது அவருடன் சேர்ந்து காரியங்கள் செய்யும்போது. (தாய் தன் குழந்தையுடன் பேசுவதன்மூலம் உறவை வளர்க்கிறாள்). பரம்பரைத் தொழிலில் தந்தையுடன் ஈடுபடும் மகனுக்குப் பெரியவர்கள்மேல் மரியாதை, தன் திறமையில் நம்பிக்கை இரண்டும் எழும்.

    மலேசியாவில் ஆங்கில தினசரி ஒன்றில், தந்தையர் தினத்தை ஒட்டி, பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்கள் தந்தையரைப்பற்றி எழுதும்படி கேட்டிருந்தார்கள். சொல்லிவைத்தாற்போல் அனைவரும், `அப்பா ஷாப்பிங் அழைத்துப்போவார். எனக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பபார்,’ என்று மட்டுமே எழுதினார்கள்.

    பணங்கொடுக்க மட்டும்தானா அப்பா?

    ஆணோ, பெண்ணோ, மூன்றரை வயதுவரை இவர்களுக்குள் அதிக வித்தியாசம் பாராட்டாது, ஒரே மாதிரிதான் நடத்த வேண்டும். ஆண்குழந்தை அழுவது இயல்பானதே. வேறு எப்படி தன் மனம் நொந்திருப்பதையோ, தேவைகள் பூர்த்தியாகாமல் இருப்பதையோ வெளிக்காட்டிக்கொள்ள முடியும்?

    சிறு வயதிலேயே, அளவுக்கு மீறிய சுய கட்டுப்பாடுடன் ஓர் ஆண் குழந்தை இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நேர் எதிரான குணத்துக்கு அடிகோலுகிறது. பிறர் அவன் நினைப்பதுபோல் நடக்காவிட்டால், அளவுக்கு மீறிய கோபமும், ஆத்திரமும் கொண்டு வளர்கிறான்.

    யாருக்கும் அடங்காமல், படிப்பிலும் நாட்டமில்லாமல் இருந்த என் பதினான்கு வயது (மலாய்) மாணவனிடம், அவனுடைய மனக்குறை என்னவென்று கேட்டேன். (ஒரு மணி நேர வகுப்பில் ஐந்து நிமிடங்களை இப்படிச் செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மகிழ்ச்சியுடன் என்னிடம் பகிர்ந்துகொள்வார்கள்).

    `வாரத்தில் ஆறு நாள் நான் ஒரு மகன் இருப்பதே எங்கப்பாவுக்குத் தெரியாது. ஞாயிறு மட்டும், பிரம்புடன் என்னைத் துரத்துவார். நான் வீடு பூராவும் ஓடிவிட்டு, இறுதியில் கழிப்பறையில் தஞ்சம் புகுவேன். அரை மணி கழித்து, நான் வெளியே வரும்போது, அவர் மறந்திருப்பார்!’ என்று சிரித்தான்.

    ஒழுக்கம் என்பது ஓயாத வசவுகளாலும், அடி, உதையாலும் வராது. சாதுவான மாணவனை ஆசிரியர் அடித்தால், பயத்தில் அவனுக்கு படித்ததும் மறந்துபோகாதா!

    அடிக்கடி, பிள்ளைகளிடம் பள்ளிக்கூடத்தில் நடந்ததைப்பற்றி, அவர்கள் நண்பர்களைப்பற்றி கலந்து பேச வேண்டும்.
    பெற்றோர் கல்விமான்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. அக்கறையே போதும். படிப்பறிவு அறவை அற்ற சில பெற்றோர், பிள்ளைகளின் மதிப்பெண்களுக்குக்கீழ் சிவப்புக்கோடு இருந்தால், அது உகந்ததல்ல என்றவரை புரிந்துகொண்டு, அவர்களுடன் கலந்து பேசி, சிறக்கச் செய்கிறார்கள் இங்கு.

    சிறு வயதிலிருந்தே இப்படிச் செய்தால், `அப்பா நம்மைச் சந்தேகிக்கிறார்,’ என்ற கலக்கம் அவர்களுக்கு வராது. தாமே வந்து, தம்மைப் பாதித்ததை (உதாரணமாக, ஏழு வயதுப் பையனை, `உனக்கு girl friends இருக்கிறார்கள்’ என்று நண்பர்கள் கேலி செய்தல்) எல்லாம் அழுகைக் குரலில் பகிர்ந்துகொண்டு, ஆலோசனையும் கேட்பார்கள்.

    பிள்ளைகளுக்கு நிறைய வசதி அளிக்க வேண்டும் என்று சில தந்தையர் ஒன்றுக்கும் மேற்பட்ட உத்தியோகம் பார்ப்பார்கள். ஆனால், அப்பா தம்மேல் அக்கறை இல்லாமல்தான் வீட்டுக்கே வருவதில்லை என்ற முடிவுக்குப் பிள்ளைகள் வருவதை இவர்கள் அறியமாட்டார்கள்..

    `நல்லவனாக இருந்தால் யாரும் கவனிப்பதில்லை. நான் தப்பு செய்தாலாவது, என்னைத் திட்டுகிறார்களே!’ என்று ஒரு மாணவன் ஒத்துக்கொண்டபோது அதிர்ந்துபோனேன்.

    தம்மைப்போலவே மனம் புழுங்கி, எப்படி நிலைமையை மாற்றுவது என்று புரியாதவர்களின் நட்பு இத்தகையவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. ஒரு கும்பலில் செயல்படும்போது கிடைக்கும் தைரியத்தில், வன்முறையைக் கையாண்டு, சமூகக் கோட்பாடுகளைத் தகர்த்த முயலுகிறார்கள் பலர். இந்த அவலத்தைத் தவிர்ப்பது தந்தையின் கையில்தான் இருக்கிறது.
    முரட்டுத்தனம் மட்டும் ஆணின் தன்மை அல்ல. பரிவும், மென்மையும்கூடத்தான்.

    தொடருவோம்

    Share
  • யாரோ பெற்றது

    நிர்மலா ராகவன்

    images (2)“அம்மா! என்னை இப்பவும் பாட்டி வீட்டிலேயே விட்டுட்டுப் போகப் போறீங்களா? ஒங்ககூட கூட்டிட்டுப் போகமாட்டீங்க?” குரல் ஏக்கத்துடன் வெளிப்பட்டது.

    அதற்கு நேரிடையாகப் பதில் கூறாது, “இங்கதான் நல்லா இருக்கே, மஞ்சு! பூனை இருக்கு. சீக்கிரமே ரெண்டு, மூணு குட்டி போடப்போகுது. அதோட விளையாடலாம். சிங்கப்பூரில ரொம்ப சின்ன வீடு. இங்க இருக்கிறமாதிரி தோட்டம் கிடையாது. அதோட, தாத்தாவோட பீச்சுக்குப் போய் குளிக்கலாம்,” என்று சமாதானப்படுத்துவதில் இறங்கினாள்.

    பெற்றோர் கோலாலம்பூருக்கு தெற்கே அறுபது கிலோமீட்டர் தொலைவிலிருந்த போர்ட் டிக்சன் என்ற கடற்கரைப் பகுதியிலிருக்க, உத்தியோக நிமித்தம் அருணா சிங்கப்பூரில் இருந்தாள். மூன்றரை மணிப் பயணம்.

    மகளைப் பிரிந்து அவ்வளவு தூரம் போக முதலில் தயக்கம் ஏற்பட்டாலும், மோகனைச் சந்திக்க கடவுளே இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார் என்ற புளகாங்கிதம்தான் எழுந்தது.

    ஆறு வருடங்களாக ஆண்துணை இல்லாமல் தனித்து வாழ்ந்திருந்தாள். இப்போதுதான் சற்று வெளிச்சம் வாழ்வில்.

    `இந்தக் காலத்திலே யார் இப்படி, பொட்டில்லாம இருக்காங்க! கல்யாணத்துக்கு முந்தியே, குட்டிப் பொண்ணா இருக்கிறப்போவே பொட்டும், பூவும் வெச்சுக்கலே? சும்மா அழகா டிரெஸ் பண்ணிக்குங்க,’ என்று ஊக்கின சக கூழியன் அவளுக்குக் கடவுளாகவே தெரிந்தான். அவள் முகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட சோகம் மறைந்தது. மீண்டும் கலகலப்பானாள்.

    தான் பிறப்பதற்கு முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்ட தந்தையை மஞ்சு பார்த்திராததும் நல்லதாகப் போயிற்று. இப்போது, `இவர்தான் ஒன்னோட அப்பா!’ என்று மோகனைக் காட்டிவிடலாம். ஒரு முழுமையான குடும்பமாக வாழலாம். வயதான அப்பாவும், அம்மாவும் சாசுவதமா?

    ஒரு முறை, `ஒனக்கு இன்னும் இருபத்து அஞ்சு வயசுகூட ஆகலியா? நம்ப ரெண்டு பேருக்கும் அஞ்சு வயசுதான் வித்தியாசம்!’ என்று கையைத் தட்டினான் உற்சாகமாக.

    “ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?” என்றவன், தொடர்ந்து, அவள் சற்றும் எதிர்பாராத நிபந்தனை ஒன்றையும் விதித்தான்: “ஒன் மக எப்பவும்போல, தாத்தா பாட்டிகூடவே இருக்கட்டும்!’

    எப்போது விடுமுறை வரும், மகளைப் பார்க்கலாம் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் தன்னால், இனியும் அப்படி, மாதம் தவறாமல், போக முடியுமா? அருணாக்கு வாயடைத்துப் போயிற்று.

    `யோசிச்சுப் பாரு, அருணா. ஒனக்கு ஒரு குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் நான் ஒன்னைக் கல்யாணம் செய்துக்கத் தயாரா இருக்கேன். ஆனா, ஒன் மகளைப் பாக்கறபோதெல்லாம், `என் மனைவி இன்னொருத்தனோட இருந்தவ’ அப்படின்னு உறுத்திக்கிட்டே இருக்குமே!’

    அருணாவால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. வழக்கம்போல் தாய்வீடு திரும்பியபோது, பெற்றோருடன் கலந்து ஆலோசித்தாள்.

    “ஒங்க மோகன் சொல்றது சரிதாம்மா. `மஞ்சுவை என் மகளா ஏத்துக்கறேன்’னு மொதல்லே வசனம் பேசிட்டு, அப்புறம் செத்துப்போன மனுஷனோட ஏதோ போட்டி, ஆத்திரம்னு வந்து, குழந்தையை அடிச்சா என்ன செய்யறது?” அப்பாவுக்கு இன்னொரு ஆணின் மனவக்கிரங்கள் புரிந்தன.

    “அவளைப் பாத்துக்கறதிலே எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லே,” என்று அம்மாவும் ஒத்துப் பாடினாள், தான் பெற்ற மகள் எப்படியோ சந்தோஷமாக இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன்.

    ஒவ்வொரு தடவை அவள் வரும்போதும், `அம்மா! நானும் ஒங்ககூடவே வர்றேனே!’ என்று கெஞ்சும் மகளை இனி எப்படிச் சமாதானப்படுத்துவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள் அருணா. எத்தனையோ முறை, `அடுத்த தடவை. ஓ.கே?’ என்று கொஞ்சி, சமாதானம் செய்தாயிற்று.

    விளையாட்டுச் சாமான்களால் சமாதானம் அடைந்துவிடும் பருவம் இப்போது. நாளைக்கே, விவரம் புரிந்தால், `உனக்கு என்னைவிட அந்த மோகன்தானே பெரிசாப் போயிட்டாரு?’ என்று சண்டை பிடிப்பாளோ? ஒரு வேளை, அம்மாவுக்கே வேண்டாதவளாகப் போய்விட்டோமே என்று உள்ளுக்குள்ளேயே அழுது, எதிலும் பற்றின்றி ஆகிவிடுவாளோ?

    மஞ்சு! மோகன்! யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரை விட்டு விலகுவது?

    அருணாக்குத் தற்காலிகமாக சிந்தனைகளிலிருந்து விடுதலை கிடைத்தது, பூனையால்.

    “மஞ்சு! பெரிய பூனைகிட்ட போகாதே. குட்டியைத்தான் தூக்க வரேன்னு நினைச்சுக்கிட்டு, ஒன்னைப் பிராண்டிடும்,” என்று மகளை ஓயாது கவனிக்க வேண்டியிருந்தது.

    “அம்மா! மூணில ஒரு குட்டிதாம்மா இருக்கு! இன்னும் ரெண்டு எங்கேம்மா?”

    பூனை, பூனை! அருணாவுக்கு அலுப்பாக இருந்தது. “அதான் ஒண்ணு இருக்கில்ல? போதும். நீ அதுக்கு சாப்பிடக் குடு. தாத்தா அந்த டப்பாவிலே வெச்சிருக்காரு, பாரு”.

    `தெருவிலே போற பூனையா இருந்தா என்ன! அதுக்கு மட்டும் பசிக்காதா? அதுவும் இந்த சமயத்திலே!’ என்று சொல்லிவிட்டு, பூனைக்கும், மிகுந்திருந்த ஒரு குட்டிக்கும் கடையிலிருந்து சிக்கன் கலந்து, சிறு சிறு கட்டிகளாக இருந்த உணவை அப்பா வாங்கி வந்திருந்தார்.

    “அம்மா! பாருங்களேன்! அம்மாபூனை ரொம்ப நாட்டி! குட்டியோட மங்கிலே இருக்கிறதைச் சாப்பிடுது. குட்டி, பாவம்! ஒதுங்கி நிக்குது!”

    `குழந்தைகளுக்கு எல்லாமே வேடிக்கைதான். பெரியவர்களானபின்தான் வேதனை எல்லாம்!’ என்று எண்ணமிட்டாள் அருணா. தனக்குப் பால் சுரக்க வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று தாய்ப்பூனைக்கு இயற்கையாகவே தெரிந்திருக்கிறது. இதை மஞ்சுவிடம் சொன்னால் புரியுமா?

    அன்று சாயங்காலம் பள்ளியிலிருந்து திரும்பிய குழந்தை ஓடி வந்தாள், “அம்மா! தாத்தா!” என்று அலறியபடி.

    பதறிப்போனார்கள் இருவரும். “என்னம்மா? என்ன ஆச்சு?”
    “குட்டியைக் காணும்!”
    “அவ்வளவுதானே! எங்கேயாவது காருக்கடியில, செடிக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கும். போய்த் தேடு”.
    “நான் நல்லாப் பாத்துட்டேம்மா. காணும்!” மஞ்சுவுக்கு அழுகை வந்தது.

    “எங்கேயாவது ஓடிப் போயிருக்குமா?” தன்னைத்தானே கேட்டுக்கொள்வதுபோல் கேட்டாள் அருணா.

    “பூனைக்குட்டி தானே ஓடாது,” என்றார் அப்பா, அவளுக்கு மட்டும் கேட்கும்படி.
    இரண்டு நாட்கள் கழிந்தும், பூனைக்குட்டி போன இடம் தெரியவில்லை.

    அருணா தோட்டத்துக்கு வரும்போதெல்லாம், தாய்ப்பூனை ஏக்கமாக ஓலமிட்டபடி அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது அவளுக்குள் எதையோ அசைத்தது..

    “ஒன் பேபி காணுமாடா? வந்துடும்,” என்று அதனுடன் பேசி, ஆறுதல் அளிக்க முயன்றாள். மடியில் தூக்கி வைத்துக்கொண்டாள். ஆதரவுடன் அதன் உடலின் மேற்பகுதியைத் தடவிக்கொடுத்தாள்.

    அவளுடைய அன்பான வார்த்தைகள் அதற்குப் புரியவில்லையோ, அல்லது தன் வேதனை இன்னொரு தாய்க்குப் புரிகிறதே என்றோ, அதே நடத்தை தொடர்ந்தது. தானே அவள் மடியில் வந்து உட்கார்ந்துகொண்டது. பூனையின் ரோமம் ஒவ்வாமை உண்டாக்க, உடனே கையிலும், காலிலும் சருமம் தடித்துவிட்டது..

    “இப்போ எதுக்கு அந்த கர்மத்தைத் தூக்கி மடியில் வெச்சுக்கிட்டுக் கொஞ்சறே?” என்று அம்மா ஆட்சேபித்தாள். கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போகப் போகிற மகளுடைய உடல் நலம் பாதிக்கப்படுகிறதே என்ற ஆதங்கத்தில் வார்த்தைகள் சற்றுக் கடுமையாகவே வந்தன.

    அப்பா எதுவும் சொல்லாது, மரவள்ளிக்கிழங்கு மாவை நீரில் குழைத்து, “போட்டுக்க. அலர்ஜி சரியாகிடும்,” என்று அவளிடம் நீட்டினார்.

    ஆனால், குட்டியை விட்டுவிட்டு, தான் மட்டும் சாப்பிடுவதா என்று நினைத்தது போல், பூனை ஆகாரத்தைத் தொடவில்லை.
    `ஒரு வேளை, சாப்பிட்டால் பால் சுரக்கும்; இனி யாருக்குக் கொடுக்கப்போகிறேன் என்ற விரக்தியோ அதற்கு?’ என்ற சந்தேகம் எழுந்தது அருணாவுக்கு.

    மஞ்சுவும் ரொம்பவே ஏங்கிப்போனாள். உற்சாகம் குன்றி, சாப்பிடப் பிடிக்காமல்..!

    “சீக்கிரமே இன்னும் நிறைய குட்டி போடப்போகுது பெரிசு!” என்று அவளுக்கு நம்பிக்கை அளிக்கப் பார்த்தார் அப்பா.

    “அதோட வயத்தைப் பாத்தியா? எவ்வளவு பெரிசு! அதுக்குள்ளேதான் குட்டி எல்லாம் இருக்கு!” என்றாள் அம்மா, தன் பங்குக்கு.
    அப்படியும் சமாதானமாகாமல், மஞ்சு அழுதபடியே தூங்கப்போனதும், “பூனைக்குட்டி அப்படி எங்கதாம்பா போயிருக்கும்?” என்று தந்தையைக் கேட்டாள் அருணா. இருவரும் வாசலிலிருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர்.

    “இப்போ பெரிசு கர்ப்பமா இருக்கில்லே? அதுக்குக் காரணமாயிருந்த ஆண்பூனை இந்தக் குட்டியைக் கொன்னிருக்கும், இது தன் குட்டி இல்லேன்னு!” என்றோ படித்ததை சற்றும் உணர்ச்சி இல்லாத குரலில் அப்பா விவரித்தார்.

    அருணா அடைந்த அதிர்ச்சியைப் பார்த்து, “பூனை உலகத்திலே இது சகஜம்தான்! என்றார், கையை ஒருமுறை அலட்சியமாக வீசியபடி.

    சட்டென, அருணாவின் நினைவில் எழுந்தான் மோகன்.
    அவனுக்கும், அந்த ஆண் பூனைக்கும் என்ன வித்தியாசம்?

    பூனைக்கு சிந்திக்கும் திறனில்லை. அதனால், உடனுக்குடனே கொன்று விடுகிறது. போட்டி மனப்பான்மை என்னவோ ஒன்றுதான்.
    “மோகன்கிட்ட ஒன் சம்மதத்தைச் சொல்லிடு,” அப்பா ஊக்கினார். “மஞ்சு இல்லாட்டி எங்களுக்கும் வெறிச்சுனு இருக்கும்!”

    தன் சுகத்துக்காக மோகனை மணந்து, சுமந்து பெற்றதை இழந்து, அந்த வேதனையைப் பொறுக்க முடியாது, தான் எதையோ, யாரையோ சுற்றிச் சுற்றி வருவதுபோல பிரமை எழுந்தது அருணாவுக்குள்.

    “எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம்பா! மஞ்சுதான் வேணும்!” என்றாள் அருணா. குரல் தெளிவாக இருந்தது.

    படத்திற்கு நன்றி

    Share
  • மீராவும் மொஹம்மது ஆரிஃபும்

    நிர்மலா ராகவன்
    `கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?’
    மின் அதிர்வு உடலெல்லாம் பாய்ந்தாற்போல், படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் மீரா. மூச்சை அடைத்தது. தலைமாட்டில் இருந்த கொசுவர்த்தியைச் சற்று தூரத்தில் வைத்தாள். ஆனாலும், இறுக்கம் தணியவில்லை.
    இருள் அறவே பிரியாத காலைப்பொழுதில், பள்ளிக்கூடம் ஆரம்பிக்க முக்கால் மணி இருக்கையில், அவளிடம் கேட்கப்பட்ட கேள்வி அது. இப்போது, இந்த இரவு வேளையில் மீண்டும் முளைத்து, பாடாய் படுத்துகிறது!
    “குட் மார்னிங், மீரா!”
    வழக்கம்போல், காண்டீனில் தனியே அமர்ந்து பசியாறிக் கொண்டிருந்தாள் மீரா. தேங்காய்ப்பாலில் வேக வைத்த சாதத்துடன், தனித்தனியே பொரித்த நிலக்கடலை, உறைப்பான `ஸம்பல்’(sambal) என்ற சட்னியுடன் நஸி லெமாக் (nasi lemak). மலாய்க்காரர்களின் உணவு. சீனக் கடை முதலாளி ஆ சேக் (சீன மொழியில் மாமா) தயாரித்திருந்தார்.
    எதிரில் வந்தமர்ந்த சக ஆசிரியர் மொஹம்மது ஆரிஃபைக் கண்டதும் புன்னகைத்தாள்.
    “சீக்கிரமே வந்திருக்கீங்க?” என்று குசலம் விசாரித்தாள்.
    தனக்குத்தான் வீட்டில் யாருமில்லை. வீட்டில் தானே கறிகாய் நறுக்கி, சமைத்து, சாப்பிட்டபின் பாத்திரம் கழுவும் வேலையாவது மிஞ்சுமே என்று வெளியில் சாப்பிடுகிறோம்.
    குடும்பஸ்தராகிய இவருக்கு என்ன தலையெழுத்து, சீனிப்பாகாய் இனிக்கும் இந்தக் கோப்பியைக் குடித்துத் தொலைக்க வேண்டும் என்று! (ஆ சேக்கிடம் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார், `அதான் சீனிப்பால் போட்டு கலக்கறீங்களே! எதுக்கு ரெண்டு ஸ்பூன் சீனி வேற!’ என்றால். அவர் மனைவி மாக் சிக் (மாமி) மைமூனா கணவருக்குப் பரிவாள்: `கோப்பின்னா இனிப்பாத்தான் இருக்கணும்!’
    (ஆ சேக் மலாய்க்காரியை மணந்து, மதம் மாறி, தன் பெயருடன் பின் அப்துல்லா — கடவுளின் மகன் — என்று இணைத்துக் கொண்டிருந்தார். அதனால், அவர் சமையல் `ஹாலால்’ என்ற உறுதி இருந்தது).
    சற்று மௌனமாக இருந்து, எதையோ யோசித்த அந்த ஆசிரியர், “நேத்து ஒங்க கதையை தமிழ்நேசனில படிச்சேன். என்னென்னமோ எழுதறீங்களே! என்னைப்பத்தியும் எழுதறது!” பாதி உண்மையும், பாதி வேடிக்கையுமாகக் கேட்டவரை உற்சாகமாக நிமிர்ந்து பார்த்தாள் மீரா.
    இருவருக்குமே தமிழ்தான் தாய்மொழி என்பதால், அவருடன் பேசுவதே உற்சாகமாக இருந்தது. “எழுதிட்டாப் போச்சு! இப்பவே ஒங்களை ஒரு பேட்டி எடுத்துடறேன்!”
    எப்போதும் அமரிக்கையாக, வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருக்கும் இவளுக்குக் கண நேரத்தில் எப்படி குழந்தைபோல் இவ்வளவு உற்சாகமாக மாற முடிகிறது! வியப்புடன் அவளை நோக்கியவருக்கு, அந்த அகன்ற விழிகளினின்றும் தெறித்த தீவிரத்தைக் கண்டு பயம் பிடித்துக்கொண்டது.
    “பேட்டியாவது! நீங்க ஒண்ணு! இப்ப போய், பரீட்சைப் பேப்பர் திருத்தியாகணும் நான்!” எழுந்திருப்பதுபோல் பாவனை காட்டினார்.
    “அதெல்லாம் முடியாது. நீங்கதான் இந்தப் பேச்சை ஆரம்பிச்சீங்க! இப்ப விடமாட்டேன்!”
    சூடான பானத்தை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டார். “பேட்டின்னா.. என்ன சொல்லச் சொல்றீங்க?”
    “ஒங்களால மறக்க முடியாதது ஏதாவது!  குறிப்பா, ஒங்க மனைவிகிட்டகூட சொல்ல முடியாதது!” மேல்நாட்டுக் கதாசிரியர் ஒருவர் இந்த உத்தியால் பல கதைகள் கிடைக்கும் என்று கூறியிருந்ததை அவள் படித்திருந்தாள்.
    அவளுடைய அசாதாரணமான கலகலப்பு அவரை மேன்மேலும் கலக்கத்திற்கு உள்ளாக்கியது. `இவளைத் தன் போக்கிற்கே விடக் கூடாது!’ என்று அவரது ஆண்மை முறுக்கேற்றியது. “என் அந்தரங்கத்தை எல்லாம் ஒங்ககிட்ட எதுக்கு சொல்லணும்?” வார்த்தைகளில் இருந்த கடுமை குரலில் இல்லை.
    “என்ன ஸார், நீங்க! ஒங்களைப்பத்தி எழுதச் சொல்லி நீங்கதான் கேட்டீங்க. இந்த அஞ்சு வருஷத்திலே ஒங்க தனிப்பட்ட வாழ்க்கையைப்பத்தி நான் ஏதாவது கேட்டிருப்பேனா? அதோட..,” சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தாள். “யாருக்குள்ளேயுமே ஒரு ரகசியம் இருக்கும். அதை எவர்கிட்டேயாவது சொல்ல மாட்டோமான்னு துடிச்சுக்கிட்டு இருப்போம். இது மனித சுபாவம்!”
    முகம் வெளிறிப்போய், எதிரிலிருந்தவளின் கண்ணில் எதையோ தேடினார். மீராவும் ஒருவித உணர்ச்சியும் காட்டாது, இமைக்கவும் செய்யாது, அப்பார்வையை எதிர்கொண்டாள்.
    சில நிமிடங்கள் இப்படியே கழிந்தன. இறுதியாக, “கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று கேட்டார்.
    தன் காதில் விழுந்ததை நம்ப முடியாது, அவரை வெறித்தாள் மீரா.
    கேள்வியைச் சற்று மாற்றிக் கேட்டார் மறுமுறை. “ஒங்களுக்குத் தெரிஞ்ச பெண் யாராவது.. இல்லே, நீங்களே இப்படி..?”
    தன்னெதிரில் அமர்ந்துகொண்டு, சர்வ உரிமையாக, கேட்கக்கூடாத ஒரு கேள்வி கேட்பவர், அனைவரிடமும் பண்பு குறையாமல், மென்மையுடன் பழகுபவர், பெண்களைக் கேவலமாக எடைபோட்டு நடத்தும் பெரும்பாலான ஆண்களைப்போல் அல்லாதவர் என்ற காரணத்தால் மீரா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
    அவள் முகத்தில் பதித்த நயனங்களை சிறிதும் விலக்கவில்லை மொஹம்மது ஆரிஃப். கண் சிமிட்டவும் மறந்தார்.
    சிறியதாக அரிந்திருந்த வெங்காயத்தை எண்ணையில் பொறிக்கும் வாசனை மூக்கின்வழி வயிற்றிலும் கிளர்ச்சி செய்ததை உணரும் நிலையில் இல்லை அவ்விருவருமே.
    அச்சமயம் தலைமை ஆசிரியர் துவான் ஹாஜி காண்டீனுக்குள் நுழைவதைப் பார்த்துவிட்ட ஆரிஃப், கண்ணால் மீராவிடம் சமிக்ஞை காட்டி, “அப்பப்பா! சகிக்கலே இந்த எண்ணைப் புகை!” என்று தொண்டையைச் செருமியபடி எழுந்தார்.
    காலையில் நடந்த இந்த நாடகத்தை வேலை மும்முரத்தில் அவள் மறந்திருந்தாலும், இரவின் தனிமையில் காதில் விழுந்திருந்த ஒவ்வொரு கேள்வியும் மேலெழுந்து பயமுறுத்தின.
    `கல்யாணமான ஒருத்தன்..?’
    `ஒங்களுக்குத் தெரிஞ்ச பெண் யாராவது.. இல்லே, நீங்களே..?’
    தன்னையும் அறியாது உரக்கக் கூவினாள். “பொறுக்கி!”
    இனி தூங்குவது எங்கே!
    உடல் அயர்ந்திருந்தாலும், உணர்வுகள் ஓய மறுத்தன. அவள் தற்செயலாகக் கவனித்து, சிலவற்றை உடனுக்குடன் மறந்திருந்தாலும், கண்டு, கேட்டு, அனுபவித்திருந்த எல்லாவற்றையுமே அச்சுப்போல் தன்னுள் பதித்து வைத்துக் கொண்டிருந்த ஆழ்மனம் விழித்தெழுந்தது.
    மேசை விளக்கைப் பொருத்தினாள். தயாராக வைத்திருந்த காகிதத்தில் பேனா ஓடியது.
    சிறு வயதிலிருந்து மீரா பார்த்துப் பழகியிருந்த ஆண்கள் — அப்பா, அண்ணா, அக்காளின் கணவர். எல்லாருமே ஆணாதிக்கத்தின் பிரதிநிதிகள்.
    அப்பா — பெண்ணுக்கென தனியாக ஒரு மனம், அதில் உணர்வுகள் இருக்கலாம் என்பதையே மறுப்பவர். பிள்ளை பெறுவதைத் தவிர, வேறு எதற்குமே லாயக்கில்லாதவள் பெண் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.
    ஆறு ஆண்பிள்ளைகளை மனைவியின் கருவாகக் கொடுத்து விட்டதாலேயே தான் தனது ஆண்மைத்தனத்தை நிலைநாட்டிக்கொண்டு விட்டதாகப் பெருமிதம் கொண்டவர். இதைத் தவிர வேறு எந்தப் பெருமையும் இல்லாதவர்.
    அண்ணா– அப்பாவின் சின்ன அச்சு. மனைவி இன்னும் வராத நிலையில், உடன்பிறந்தவளை அடிமையாக நடக்க முயன்று, அவள் எதிர்ப்பைப் புரிந்துகொள்ள முடியாது, ஆத்திரம் அடைந்தவன்.
    மாமா — நாற்பது வயதுக்குமேல் ஆகிவிட்ட அக்காவுக்குக் கவர்ச்சி போய்விட்டதாலோ, அல்லது வளர்ந்துவிட்ட பிள்ளைகள் வீட்டில் இருக்கையில், மூடிய கதவு வழங்கும் அந்தரங்கத்தில் தான் மனைவியுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வது கேவலம் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பின்படியோ, துறவியாக வாழ முயன்றவர்.
    அம்முயற்சியில் தோல்வியுற்று, மனதையையும், உடலிச்சையையும் கட்டுப்படுத்த வழி தெரியாது, உடல் வளர்ந்திருந்தாலும், விவரம் புரியாத இளம்பெண்களைப் பேச்சாலும், பரிசுப் பொருட்களாலும் முதலில் கவர்ந்து, பின்னர் தன் காமத்திற்கு வடிகாலாக்க முயன்றவர். மீரா அவரிடமிருந்து தப்பித்து வந்தவள்.
    ஆண்கள்மீதே தீராத வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மீரா வளர்த்துக்கொள்ள இவர்கள் மூவருமே காரணமானார்கள்.
    ஆண்டாண்டு காலமாக, தன் உணவு, உடைக்குப் பிறரைத்தான் நம்ப வேண்டும் என்ற நிலையில் இருந்து வந்திருப்பதால்தானே பெண்கள் ஆணுக்கு அடிமையாகவே இருந்திருக்கிறார்கள்?
    இந்த உண்மையை அலசி உணர்ந்ததும், அவளுக்குள் உறுதி பிறந்தது.`நான் எவர் கையையும் எதிர்பார்த்து வாழமாட்டேன். ஆணைப் படைத்த கடவுள்தானே என்னையும் படைத்தார்? அப்படியானால், நான் மட்டும் எப்படித் தாழ்ந்தவள் ஆவேன்?’
    இவ்வாசகத்தை ஒரு காகிதத் துண்டில் எழுதி, தன் அறைக்  கதவில் ஒட்டி வைத்தாள். தினந்தோறும் அதையே பார்த்து வந்ததில், அப்பொருள் அவள் மனதில் பதிந்து, நிமிர்ந்த நடையும், நேர்ப்பார்வையும் கொண்டவளாக மாறினாள்.
    ஆயிற்று. சுமார் இருபது ஆண்டுகளாக ஆண்களின் தொடர்பே அதிகமில்லாத ஒரு பாதுகாப்பான உத்தியோகம்.
    அந்த கம்பத்திலிருந்த ஒரே இடைநிலைப் பள்ளியில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படித்தார்கள். (கம்பம் என்ற வார்த்தை kampong  என்பதன் தமிழாக்கம். சட்டப்படி, மலாய்க்காரர்களன்றி வேறு இனத்தவர் அங்கு குடிபுகவோ, நிலம் வாங்கவோ இயலாது).
    பள்ளி நிர்வாகிகள் அந்த இருபாலரின் அருகாமையும் அவர்களுக்குக் கேடு விளைவித்து விடுமே என்ற அச்சத்துடன், ஏதேதோ விதிமுறைகளை வகுத்தார்கள்.
    விளையாட்டு நேரத்தில், மாணவிகள் தனி குழுவாகப் பிரிந்தனர். அவர்களுக்கென பிரத்தியேகமாக ஒரு ஆசிரியை. அவளுக்கு விளையாட்டுகளைப்பற்றி எதுவும் தெரியாது என்றாலும், அவளும் பெண்தான் என்ற தகுதியே முக்கியமாகக் கருதப்பட்டது.
    வகுப்பிலும், ஆண்கள் முன் இருக்கைகளில் அமர்த்தப்பட்டார்கள். ஆசிரியர்களுக்குச் சொல்லப்பட்ட காரணம்: பெண்களின் உருண்டையான பின் பகுதி, அந்த இளம் வயதில் அவர்கள் மனதைச் சலனப்படுத்திவிடும்!
    காரணத்தை அறியாத பையன்களோ, தாம் மிகவும் மேலான பிறவிகள் என்று கர்வம் எழ, பெண்களைத் துச்சமாக நடத்த ஆரம்பித்தார்கள்.
    `கரும்பலகை தெரியவில்லை. உயரமான மாணவர்களின் தலை மறைக்கிறது!’ என்ற மாணவிகளின் முனகல் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள், கேவலம், பெண்கள்தாமே!
    ஆனால், மீரா என்னவோ, பதின்ம வயதுப் பையன்களை குழந்தைகளாகத்தான் பார்த்தாள். அவர்களுடைய களங்கமில்லாத அன்பும், புதிதான எதிலும் அவர்கள் காட்டிய ஆர்வமும் அவளையும் தொற்றிக்கொண்டன.
    நல்லவேளை, கண்டவர் மயங்கும் கட்டழகியாகக் கடவுள் தன்னைப் படைக்கவில்லையே என்ற அற்ப திருப்தி ஏற்படுமே முன்பெல்லாம்! அதுவும் முதல்நாளிலிருந்து குலைந்து போயிற்று.
    தான் இன்னும் இளம்பெண் அல்லவே, தான் சந்தித்திருந்த பிற ஆண்களைவிட வித்தியாசமாக இருக்கிறாரே என்று சமவயதினரான ஆரிஃபுடன் நட்புரிமையுடன் பழகியதை அவர் இப்படி விகற்பமாக எடுத்துக்கொண்டு விட்டாரே!
    நினைக்க, நினைக்க மனம் அடங்கவில்லை மீராவுக்கு.
    ஒரு வேளை, `பெண் என்ற ஒரு உருவம் இருந்தாலே போதும், அழகு, வயது இதையெல்லாம் பற்றி என்ன கவலை!’ என்று நினைக்கும் ஆண்கள்தாம்  அதிகமோ?
    தோன்றியவற்றை எல்லாம் எழுத்து வடிவில் கொண்டு வந்ததில், மனச் சுமை குறைந்து, சிறிது விடுதலை பிறந்தது.
    `இரவு பூராவும் கண்விழித்து எழுதினால், நாளைக்கு வகுப்பில் குரலே எழும்பாது. தலை வேறு கனக்கும்!’ என்று அனுபவம் நினைவுறுத்த, பேனாவைக் கீழே பத்திரமாக வைத்தாள் மீரா.
    தலைக்குமேல் நீட்டிய கைகளைக் கோர்த்துக்கொண்டு, சிரம பரிகாரம் செய்துகொண்டாள். கொட்டாவி வந்தது.
    கண்ணயருமுன், `அது எப்படி என்னைப் பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டீர்கள்?’ என்று அந்த மனிதரை உலுக்கி எடுத்துவிட வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள்.
    மறுநாள் காலையும் சீக்கிரமாகவே வந்து சேர்ந்தார் மொஹம்மது ஆரிஃப்.
    முன்பெல்லாம் மணியடிக்கும்போதுதான் அவரது மலேசிய, புரோட்டான் வீரா காரும் உள்ளே நுழையும் என்பது நினைவிலெழ, கசப்பாக இருந்தது மீராவுக்கு. தன்னைப் பார்த்துப் பேசவே வந்திருப்பாரோ?
    “குட் மார்னிங், மீரா!” நேரே வந்து, அவளெதிரே அமர்ந்துகொண்டார்.
    சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அதற்கு மேலும் பொறுக்க முடியாதவளாய் கேட்டாள்: “நேத்து கேட்டது.. மறைமுகமா ஏதோ செய்யலாம்னு என்னைத் தூண்டவா?”
    `நம் இருவருக்கிடையே நடந்த விஷயம். அது நம்மைத் தவிர, வேறு எந்த நிலையிலும், எவருக்கும் தெரிந்துவிடக்கூடாது’ என்ற எச்சரிக்கை மிக, அவள் குரல் தாழ்ந்திருந்தது.
    அவளை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, தன் பார்வையை நிலத்தில் பதித்தார். முகம் சுருங்கியது. “இல்லே. நான் செய்த தப்பை ஒத்துக்கிடறதுக்கு!” பதிலும் ரகசியக் குரலில் வந்தது, தான் பேசுவது தன் காதுகளுக்கே எட்டிவிடுமோ என்ற பரிதவிப்புடன்.
    மீரா அடைந்த அதிர்ச்சியில், அப்போது புரிந்த உண்மையில், அவளது பார்வை இன்னும் தீர்க்கமாகியது.
    சே! கதைக்கு கரு கிடைக்குமே என்ற என் சிறுபிள்ளைத்தனமான ஆசையில், இந்த நல்ல மனிதரை எவ்வளவு கேவலப்படுத்திவிட்டேன்!’ மீரா பதைபதைத்துப் போனாள். கூடாது. தன்னைப்போல் எப்போதும் நிமிர்ந்த தலையும், நேர்ப்பார்வையும் கொண்டவர் இப்போது தலை கவிழ்ந்து இருக்கக் கூடாது.
    “ஒங்ககிட்ட எது வேணுமானாலும் சொல்லலாம்னு தோணிச்சு. அதான் அப்படியெல்லாம் கேட்டேன் — ஒங்களை மொதல்ல பரீட்சை செய்யறதுக்கு!”
    யாரோ தன் நெஞ்சில் உதைத்ததுபோல் உணர்ந்தாள் மீரா. `நான் போலி!’ உள்ளுக்குள் அழுதாள்.
    `ஒருத்தர் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதுக்கு ஒரு அடிப்படைக் காரணம் இருக்கும். அவங்களோட  நிலையில நம்மை வைச்சுப் பாத்தா, எதையுமே நம்மால ஏத்துக்க முடியும். யாரையுமே கெட்டவங்களா நினைக்கத் தோணாது!’என்று தான் அடிக்கடி பிறரிடம் சொல்லி வந்ததை எப்படி மறந்துபோனோம்!
    தவறு செய்வது மனித இயல்பு. அத்தவற்றை ஒத்துக்கொள்ளும்போதே ஒருவருக்கு மன்னிப்பு கிட்டிவிடாதா? இத்தகைய உத்தமரை எவ்வளவு கேவலமாக எடை போட்டுவிட்டோம்!
    அவர்களிருவரும் தத்தம் எண்ணச் சுழலில் சிக்குண்டு இருக்கையில், காண்டீனில் இருந்த அந்த சிறிய அறைக்குள் நுழைந்தார் தலைமை ஆசிரியர்.
    அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில், அதுவும் அந்தரங்கமாக ஏதோ பேசியதால் ஏற்பட்ட நெருக்கத்துடன் அவர்கள் அமர்ந்திருப்பதை அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் கடுகடுப்பான முகமே காட்டியது.
    “என்கூட கொஞ்சம் வர்றீங்களா?” என்று அடக்கிய குரலில், மலாய் மொழியில் பணித்தவர், தாம் வந்த காரணத்தை மறந்தவராக வெளியே நடந்தார்.
    “இதுவரைக்கும் அவங்களைப்பத்தி ஒருத்தரும் ஒரு வார்த்தை கெட்டதாகப் பேசியதில்லை”. மீராவின் பெயரைக் குறிப்பிட விரும்பாதவராய் பேசினார் தலைமை ஆசிரியர். “நம்ப நடத்தையால மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய நாமே..!” அருவருப்புடன் தன் தலையை இரு பக்கமும் ஆட்டினார்.
    வெளிறிய முகத்துடன்  மொஹம்மது ஆரிஃப் பள்ளி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.
    தனது மென்மையான சுபாவத்தைப் பலகீனமாக எடுத்துக்கொண்டு பழித்த மனைவியிடமிருந்து மனத்தளவில் விலகிப்போன  நிலையில், ஆத்திரத்தையும், சிறுமை உணர்ச்சியையும் அடக்க வழி தெரியாது, வேறு ஒருத்தியோடு சில காலம் தொடர்பு வைத்துக் கொண்டுவிட்டு, `இது தகாத செயல்!’ என்று மனச்சாட்சி இடித்துரைக்க, அந்த உறவைத் துண்டித்துக்கொண்டு இருக்கலாம்.
    ஆனாலும், குற்ற உணர்வை ஏற்கவோ, மறக்கவோ முடியாது, மனோபலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வந்த தருணத்தில்தானே மீரா, கடவுளே மனித உருவில் வந்தமாதிரி, அடிமட்டத்தில் கனன்று கொண்டிருந்த அந்த ரகசியத்தைக் கிளறினாள்?
    அவளுக்கா அவப்பெயர்! அதுவும் தன்னால்?
    ஒரு மாதம் சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொண்டுவிட்டு, அதற்குப்பின், தன்னிடம்கூடச் சொல்லாமல், வேறு பள்ளிக்கு மாற்றிப் போக அந்த நல்லவர் முடிவெடுத்தது மீராவுக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது.
    Share
  • அழகான மண்குதிரை …

    –நிர்மலா ராகவன்.

    நந்தினி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். ஆயிற்று. இன்னும் கால்மணிக்குள் அவள் இறங்குமிடம் வந்துவிடும்.

    அவள்மட்டும் தனியாகப் போய் நின்றால், அம்மா என்ன சொல்வாள்?

    அவர்தான் ஆகட்டும், தலைதீபாவளியும் அதுவுமாய், இப்படியா தன்னை விட்டுக்கொடுப்பது! ஒரு மரியாதைக்காவது…

    ‘நீ கணவருக்கு மரியாதை கொடுத்தது என்ன தட்டுக்கெட்டுப் போயிற்று, அவரிடம் அதை எதிர்பார்க்க?’ அந்தராத்மா இடித்துரைத்தது.

    பழகின தெருக்களிடையே பஸ் நுழைந்து சென்றபோது, இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றியது. இன்னும் ஐந்து நிமிடம்தான். கண் அனிச்சையாகக் கடிகாரத்தில் பதிய, அடிவாயில் கசந்தது.

    ‘முதலில் இந்தக் கடிகாரத்தைத் தொலைத்துத் தலைமுழுக வேண்டும்!’

    அந்த பாழாய்ப்போனவன் கொடுத்த பல பரிசுகளுள் ஒன்று அது. பாவி, புகழ்ச்சியையும், பரிசுப் பொருட்களையும்கொண்டு, எந்தப் பெண்ணையும் வீழ்த்திவிடலாம் என்று நன்கு உணர்ந்தவன்.

    “உன் அழகுக்கு அழகு சாதனங்களே வேண்டாம். இருந்தாலும், கடையிலே இதைப் பாக்கறப்போ, ஒனக்குக் குடுக்கணும்னு தோணிச்சு!” அரைகுறை மலாயில் சொல்லிவிட்டு, லிப்ஸ்டிக், முத்துபதித்த வளையல் இப்படி ஏதாவது கொடுப்பான் அவன்.

    இவ்வளவு அன்பானவர் இப்படி, பங்களா தேஷிலிருந்து நாடு விட்டு நாடு வந்து, இரவு பகலெனப் பாராது உழைக்கிறாரே என்று நந்தினிக்குப் பச்சாதாபம் மேலிடும்.

    ‘இவருடைய அழகுக்குச் சினிமா நடிகராகி இருக்கவேண்டும். எல்லாப் பெண்களும் இவருடைய காலடியில் கிடக்க மாட்டார்களா!’ தன் எண்ணத்தை அவனிடம் தெரிவித்தாள், ஒரு முறை.

    வாய்விட்டுச் சிரித்தான் அவன். “அந்தப் பேராசை எல்லாம் எனக்குக் கிடையாது நந்தா. ஒன்னைமாதிரி அழகான ஒரே பொண்ணோட அன்புதான் எனக்குப் பெரிசு. சில சமயம் நினைச்சுப்பேன், ஒன்னைச் சந்திக்கணும் என்கிறதுக்காகவே பிழைப்பைத் தேடற சாக்கில இப்படி வேற நாட்டுக்கு விதி நம்மை அனுப்பி இருக்குன்னு!”

    நந்தினிக்குப் பெருமையாக இருந்தது. தனக்கு எந்தக் காலத்திலும், எவரும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்தியது கிடையாது என்று பட்டது அவளுக்கு. அவள் சின்னப் பெண்ணாக இருந்தபோது, அப்பாதான் ஓயாது அவளது அழகைப் புகழ்ந்துகொண்டு இருப்பார். அதனால் உண்டான கர்வத்தில் அவளுக்குப் படிப்பில் சுவாரசியம் இல்லாது போயிற்று. பிற பெண்களிடமும் அலட்சியம்.

    அப்பா அகாலமாகப் போனபோதும் அவர் அறியாமல் விதைத்த விஷக்கன்று வாடவில்லை. ‘நான் அழகி!’ என்று தலைநிமிர்ந்து நடப்பாள். பார்ப்பவர்கள் எல்லோருமே சொல்லிவைத்தாற்போல் ஒரு முறைக்கு இரு முறை திரும்பித் திரும்பிப் பார்த்தது நந்தினி தன்னைப்பற்றிக் கொண்டிருந்த கணிப்பை ருசுப்படுத்தியது போலிருந்தது.

    யாருடனும் ஒத்துப்போகாமல், என்னமோ மகாராணியாகத் தன்னைப் பாவித்து நடந்துகொள்ளும் மகளின் போக்கு அவளுடைய தாய்க்குக் கவலையை ஊட்டியது. அப்பா இல்லாத பெண் என்று அருமையாகவேறு வளர்த்துவிட்டோமே! இவளுடன் யாரால் ஒத்துப்போக முடியும்?

    பலவாறாக யோசித்தவள், “ஒனக்கும், கோபாலுக்கும் சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுடணும்னு அத்தை ஆசைப்படறாங்க, நந்தினி. ஒனக்கும் வர்ற பத்தாவது மாசம் பதினேழு முடியப்போகுது,” என்று மெள்ள ஆரம்பித்தாள்.

    நந்தினி சிரித்தாள் — சினிமாவில் வில்லன் சிரிப்பானே, அந்தமாதிரி.

    “என்னடி?” என்றாள் அம்மா, அதிர்ந்துபோய்.

    “பின்னே என்னம்மா? ஆசைக்கும் ஒரு அளவு வேணும். எவ்வளவு சுயநலம் இருந்தா, அந்தக் கறுப்பனை என் தலையில கட்டலாம்னு யோசிச்சிருப்பாங்க அவங்க!”

    தாயின் முகம் வாடியது. “அப்படியெல்லாம் தூக்கி எறிஞ்சு பேசாதே, நந்தினி. அப்பா இருக்கிறபோதே சொல்லிட்டு இருந்ததுதானே! ஒறவும் விட்டுப் போகாது, அப்புறம்… கோபாலும் தங்கமான பிள்ளை!”

    நந்தினி மீண்டும் சிரித்தாள், இளக்காரமாக. “ஏதோ, நிறம்தான் தங்கம் மாதிரி இல்ல. குணமாவது தங்கமா இருந்தா சரி!”

    “ஆனாலும் ஒனக்கு இவ்வளவு மண்டைக்கனம் கூடாது!” அம்மாவின் அதட்டல் அவளைப் பாதிக்கவில்லை.

    “அம்மா! நான் எனக்குப் பிடிச்சவரா, அழகானவரா ஒருத்தரோட பழகிப் பாத்துட்டு, அப்புறமாத்தான் பண்ணிப்பேன். என்னோடது காதல் கல்யாணமாத்தான் இருக்கும். ஒருத்தரோட சேர்ந்து வெளியே போனா, பெருமையா இருக்க வேணாம்?”என்று இரைந்தாள்.

    அவளையும் அறியாது, அத்தான் கோபாலையும், அவளுடைய தொழிற்சாலையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் கிரனையும் ஒப்பிட்டுப் பார்த்தது அவள் மனம். அந்தக் கிரனுடன் இணைந்து நடந்தால் எப்படி இருக்கும்! ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

    “ஓயாம வீடியோ பாத்தா இப்படித்தான்! காதல், கீதலுன்னு பினாத்திக்கிட்டு, கண்டவனை இழுத்துக்கிட்டு வராதே,” என்று அலுத்துக்கொள்ளத்தான் முடிந்தது பெற்றவளால்.

    அதன்பின், தற்செயலாகச் சந்திப்பதுபோல், கிரனைக் கேண்டீனிலும், மாடிப்படிகளிலும் பார்த்துப் பேச முற்பட்டாள் நந்தினி. அவனிடம் மணி கேட்டாள். அவனுடைய மலாயைப் பாராட்டினாள். அவள் எதிர்பார்த்தபடியே, அவனது கவனம் அவள்பால் திரும்பியது. முதலில் சற்றுப் பயந்தவனைப்போல் இருந்தவன், சிரிக்கச் சிரிக்கப் பேசினான்.

    பல நூறு பெண்கள் வேலைபார்க்கையில், அவர்களை ஒரு பொருட்டாகக்கூட மதியாது, தன்னை நாடுகிறார் இந்த அழகர் என்ற நினைப்பில், நந்தினியின் தலை மேலும் அண்ணாந்தது.

    அவனுடன் கைகோர்த்துக்கொண்டு சினிமாவுக்குப் போனாள். கதாநாயகியாகவே தன்னைப் பாவித்துக்கொண்டு, அவனது பரந்த தோளில் சாய்ந்தபடி நடந்தாள். சிறுசிறு பரிசுகளால் அவளை மேலும் திணற அடித்தான் அவன்.

    “ஒனக்கு என்னென்னமோ குடுக்கணும்னு ஆசை அடிச்சிக்குது. ஆனா, நான் ஏழை. இருந்தாலும், ‘ஓவர்டைம்’ பண்ணி வந்த காசில ஆசை ஆசையா இதை வாங்கிட்டு வந்தேன்!” என்று வசனம் பேசியபடி, ஒரு நாள் அந்தக் கடிகாரத்தை அவன் அவளுக்கு அணிவித்தபோது, என்னமோ அவன் கையால் தாலியே கட்டிக்கொண்டதுபோல் பூரித்துப்போனாள் நந்தினி. தனக்காகவே தூக்கம் முழித்து, உடலை வருத்தி வேலை பார்த்திருக்கிறார்! இந்த அன்புக்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாமே என்று நெகிழ்ந்துபோனாள்.

    காய் கனிந்ததைப் புரிந்து கொண்டவனாக, “ரெண்டு நாள் நாம்ப ரெண்டு பேரும் இப்படியே ஜாலியா, எங்கேயாவது வெளியூர் போயிட்டு வரலாமா, டார்லிங்?” என்று கொஞ்சினான். அவள் யோசிப்பதற்கே இடம் கொடாது, இறுக அணைத்தபடி நடந்தபோது, நந்தினி இவ்வுலகில் இல்லை.

    கிரனின் மடியில் உட்காராத குறையாகச் சாய்ந்தபடி அவள் அயலூர் போகும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோதுதான் அது நடந்தது.

    எங்கிருந்தோ வந்தான் கோபால். நேரே கிரனுக்கருகில் வந்தவன், யோசியாமல் அவனது இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான். எதுவும் பேசாது, நந்தினியின் கையைப் பிடித்து இழுத்தபடி நடந்தான்.

    தன்னை மீட்கக் காதலர் ஓடி வருவார் என்று எதிர்பார்த்த நந்தினிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

    வீட்டுக்குள் நுழைந்ததுமே, “நீ இன்னும் மைனர். அதனால அந்த ரௌடியைப் போலீசில பிடிச்சுக் குடுக்க என்னால முடியும். ஆனா, ஒனக்கும் சேர்த்துத்தான் கெட்ட பேரு வரும். அதான் அவனை விடறேன்,” என்று அதட்டியவன், “இனிமே நீ வேலைக்குப் போக வேணாம். ஒழுங்கா, வீட்டில இரு!” என்றான் கண்டிப்புடன்.

    “அதைச் சொல்ல நீ யாரு?” என்று சீறினாள் நந்தினி.

    அவன் எதுவும் பேசவில்லை. அதுவரை பேசியதே அதிகம் என்று நினைத்தவன்போல, வெளியே நடந்தான்.

    உள்ளேயிருந்து வந்த அம்மாதான் அவளுடைய கேள்விக்குப் பதிலளித்தாள். “மரியாதையாப் பேசுடி. ஒன் குணம் தெரிஞ்சும், பெரிய மனசோட, ஒன்னைக் கட்டிக்க ‘சரி’ன்னிருக்கான் கோபால்!”

    “அம்மா!” குரலில் அதிர்ச்சியைவிட அதட்டலே அதிகமிருந்தது.

    “இன்னும் நாலு நாளில கல்யாணம், கோயிலிலே வெச்சு. கண்ட பயலோட நீ… ஒன்னை இப்படியே விட்டா, நான் விஷத்தைத்தான் தேடிப் போகணும்!”

    “நான் கிரனைத்தான் கட்டிப்பேன்!”

    “புரியாம உளறாதே நந்தினி. அவன் வெளிநாட்டுக்காரன். காண்டிராக்டிலே வந்திருக்கிறவன். அப்படியே பேருக்கு ஒன்னைக் கட்டிக்கிட்டாலும், கையில புள்ளையைக் குடுத்தப்புறம், ஒன்னை ‘அம்போ’ன்னு விட்டுட்டுத் திரும்பப் போயிடுவான். ஒன்னையுமா கூட்டிட்டுப் போவான்? அங்கே அவனே சோத்துக்கு வழி இல்லாமதானே இங்க வந்திருக்கான்! “

    “எனக்காக அவர் இங்கேயே இருப்பாரு!” என்றவளின் சுருதி இறங்கிப் போயிருந்தது.

    “அடம் பிடிக்காதே, நந்தினி. ஒன்னை அழ வைக்கணும்னு எனக்குமட்டும் ஆசையா? இந்த நாட்டு ஆம்பளையைக் கட்டிக்கற பொண்ணு அயல்நாடா இருந்தா, அவ இங்கேயே தங்கலாம். ஆனா, நீ ஒருத்தனைக் கட்டிக்கிட்டா, அவனால அது முடியாது. அவன் திரும்பிப் போய்த்தான் ஆகணும்”.

    உண்மை பயங்கரமாக இருந்தது. சொற்ப வருடங்களே கிரனுடன் வாழ்ந்துவிட்டு, பின் அவனுடைய குழந்தைகளுடன் திண்டாடிக்கொண்டு, வாழாவெட்டியாக, எல்லாருடைய இளக்காரத்துக்கும் ஆளாக வேண்டுமா அவள்?

    ஆயினும், கிரன் இல்லாத வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத நிலையில், அழுகை பீறிட்டது. அவருக்கு மட்டும் இதெல்லாம் முன்பே தெரியாமல் இருந்திருக்குமா? பின் ஏன் தன்னிடம் இவ்வளவுதூரம் பழகி, தன்னைப் பைத்தியமாக அடிக்கவேண்டும்?

    அடுத்த சில தினங்கள் அறைக்குள்ளேயே அடைந்துகிடந்து, ஓயாது அழுதாள். இடையிடையே யோசித்தாள். அம்மா அவளுடைய நல்லதுக்குத்தான் சொல்கிறார்கள் என்று விளங்கியது.

    மண் குதிரை அழகாக இருக்கலாம். அதற்காக, அதை நம்பி ஆற்றில் இறங்குவார்களா யாராவது?

    வெறும் அழகுக்காகத் தன்னைப் பலியிட்டுக்கொள்வது அபாயகரமானது, அறிவீனம் என்ற முடிவுக்கு வந்தாள். அந்த முடிவில் மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை.

    பலியாடுபோல் திருமணப் பந்தலிலே கோபாலினருகே உட்கார்ந்திருந்தாள் நந்தினி. கடைசியில், தனக்குக் கொடுத்துவைத்தது இந்தக் கறுப்பருடன் சேர்ந்த வாழ்வுதான் என்ற எண்ணம் உறைக்கையில், துக்கம் பொங்கியது.

    அன்றிரவு.

    “நீ என்னென்னமோ நினைச்சு கனவு கண்டிருப்பே! என்னால எல்லாம் பாழாயிடுச்சு, இல்ல?” என்ற புதுக்கணவனின் தொனி குத்தலா அல்லது கரிசனமா என்று அவளுக்குப் புரியவில்லை. இருந்தாலும், கோபால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களது தனியறையைவிட்டு வெளியேறி, சோபாவில் படுத்துக்கொண்டபோது, நந்தினிக்கு அவன் நாலு வார்த்தை அதட்டியிருந்தால் தேவலை என்று தோன்றியது.

    கோபாலைப் பொறுத்தவரை, குற்றம் சொல்லமுடியாதபடி நடந்துகொண்டான். அவள் கேட்குமுன், வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிப்போட்டான். அதே சமயம், அவள் ஒருத்தி இருப்பதைக்கூட பொருட்படுத்தாதவனாக நடந்துகொண்டான்.

    இப்படி ஒரு உம்மணாமூஞ்சியுடன் வாழ்நாள் பூராவும் எப்படித்தான் தள்ளப்போகிறோமோ என்ற பீதி நந்தினியைப் பிடித்துக்கொண்டது. மௌனம் சாதித்தே தன்னைக் கொல்வதற்குக் கல்யாணமே செய்து கொண்டிருக்க வேண்டாமே என்று ஆத்திரப்பட்டாள். ஆனால், வாய்விட்டு கணவனை எதுவும் கேட்கவும் அவளுடைய சுயகௌரவம் இடங்கொடுக்கவில்லை.

    நந்தினிக்கு அவள் தாயிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

    “தீபாவளிக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு…,” என்று இழுத்தவளைப் பாராமலேயே, “நாளைக் காலையில தயாரா இரு. பஸ்ஸிலே ஏத்தி விடறேன்!” என்று விறைப்பாகப் பதிலளித்தான் கோபால்.

    ‘ஒங்களையும்தான் அழைச்சிருக்காங்க!’ என்று சொல்லவந்ததை அடக்கிக்கொண்டாள்.

    அவர்களுக்குத் தலைதீபாவளி. இதுகூடவா தெரியாது அவனுக்கு?

    “என்ன நந்தினி? இளைச்சு, கறுத்துப் போயிட்டியே! ஏதேனும் ‘விசேஷமா’?” பக்கத்து வீட்டு சரசா கண்ணைச் சிமிட்டியபடி கேட்டபோது, நந்தினிக்கு வாய்விட்டு அழவேண்டும்போல் இருந்தது.

    இருவரும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்தாம். அப்போதெல்லாம் சரசாவுடன் முகம்கொடுத்துக்கூடப் பேசமாட்டாள் நந்தினி, தன் அழகுக்கு சர்வசாதாரணமாக இருந்தவளுடன் என்ன பேச்சு என்று இறுமாந்திருந்தவளாக. ஆனால் அவளோ, அதையெல்லாம் மறந்துவிட்டு, தோழமையுடன் வந்து குசலம் விசாரிக்கிறாள்!

    ‘அழகோ, அழகில்லையோ, எல்லாரும் ஒரு நாள் வளர்ந்து ஆளாகத்தான் போறோம். கடைசியிலே பிடி சாம்பலாத்தான் போகப்போறோம்’. அவளுக்குப் புத்தி புகட்டவென்று அம்மா எப்போதோ சொன்னது காலங்கடந்து இப்போது புரிந்தது.

    யார் தன் அழகை ரசித்துப் பெருமைப்பட வேண்டுமோ, அவரே தன் முகத்தைப் பார்க்கக்கூட வெறுத்து விலகுகிறார்! நந்தினிக்குக் கண்ணீர் ததும்பியது.

    அதற்குத்தானே ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்ட தோழி, ” இன்னுமா அந்த வெளிநாட்டானை மறக்கலே, நீ? விட்டுத்தள்ளுவியா!” என்று சமாதானப்படுத்திவிட்டு, “நம்பகூட வேலை செய்தாளே, குண்டு சுசீலா, அவளை நீ போன கையோட செட்டப் செய்துட்டான்,” என்று தெரிவித்தாள்.

    “யாரு?” தெரிந்தும் தெரியாதவள்போல் கேட்டாள் நந்தினி.

    “எல்லாம் அந்தத் தடியன் கிரன்தான். நாங்க அவளுக்கு எவ்வளவோ புத்தி சொல்லிப்பாத்தோமே! ‘ஒங்களுக்குப் பொறாமை!’ன்னுட்டா. இப்ப வயத்திலே ஒண்ணு. அந்தப் பழிகாரன் அப்புறம் இங்க ஏன் இருக்கான்?”

    சரசா விவரித்துக்கொண்டே போனபோது, தான் எப்படிப்பட்ட கண்டத்திலிருந்து தப்பினோம் என்று அதிர்ந்தாள் நந்தினி. அன்று அத்தான் மட்டும் அவனை அடித்து, தன்னை இழுத்துக்கொண்டு போயிருக்காவிட்டால், தானும் இப்படி… ஐயோ!

    மற்றவள் தன்பாட்டில், “ஒன் கல்யாணத்திலே நாங்க எல்லாம் என்ன பேசிக்கிட்டோம், தெரியுமா? ‘சொந்தம்கிறதாலே இப்படிக் கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாதவருக்கு இவளைக் குடுக்கறாங்களே! இவ கலரென்ன, அவர்…” என்று சொல்லிக்கொண்டேபோனபோது, ஆத்திரத்துடன் இடைமறித்து, “அட்டையைப் பாத்த உடனே, புஸ்தகத்தோட உள்ளே இருக்கிறது என்னன்னு தெரியுமா? வெளித்தோலைப் பாத்து ஆளை எடை போடக்கூடாது!” என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கினாள்.

    அத்தான் தன்னை எப்பேற்பட்ட ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார்! இது புரியாமல், அவர்மேல் ஆத்திரப்பட்டோமே! எவனுடனோ கையைக் கோர்த்துக்கொண்டு தான் சினிமா, கடைத்தெரு என்று சுற்றியதை அறியாதவரில்லை. அப்படி இருக்கையில், வேறு யார் தன்னை மணக்க முன்வந்திருப்பார்கள்?

    இனியும் ஏன் வரட்டுக் கௌரவம் என்று ஏதோ இடித்துரைத்தது. உடனே அத்தானை போனில் கூப்பிடவேண்டும். ‘மாப்பிள்ளை வராம என்ன தலைதீபாவளி?’ன்னு அம்மா சத்தம் போடறாங்க. அடுத்த பஸ்ஸிலேயே வாங்க’என்று.

    ‘அம்மாதானே கூப்பிடறாங்க? நீ கூப்பிடலியே!’ என்று சீண்டுவாரோ? அந்தக் கற்பனையிலேயே நந்தினியின் இதழ்க்கடையில் புன்முறுவல் அரும்பியது.

    இக்கதை  வெளிவந்த தளங்கள்: சூரியன், வலைத்தமிழ்

    Share
  • அடிபட்டவர் கை அணைக்குமா?

    –நிர்மலா ராகவன்.

     

    “பிரபா எங்கடா? இன்னுமா வரலே?”

    அலட்சியமாகப் பதிலளித்தான் மகன், “ரெண்டு பஸ் மாத்தி வர கொஞ்சம் முந்திப் பிந்திதான் ஆகும். அதான் சமைச்சு வெச்சுட்டுப் போயிருக்கா, இல்லே?”

    கிழவருக்கு என்னமோபோல் இருந்தது. ஏதோ கரிசனத்தில் கேட்டதாகத்தான் அவர் நினைத்தார். ஆனால், `தன் பெண்டாட்டியை அப்பா என்ன குறை சொல்வது?’என்ற எரிச்சலுடன் இவன் வக்காலத்து வாங்குகிறானே!

    ஐந்து மணிக்கு வேலை முடிகிறது. இப்படியா ஒருத்தி வீட்டு நினைப்பே இல்லாது, ஏழரை மணிக்குமேல் ஆகியும், ஊர் சுற்றிக்கொண்டிருப்பாள்! ஒரு குடும்பப் பெண் சந்தியா காலத்தில் குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டாம்? பின் எப்படி லட்சுமி வீட்டுக்குள் நுழைவாள்? சே! தன்னோடு வாழ்ந்த நாற்பத்து ஐந்து வருடத் தாம்பத்தியத்தில் என்றாவது இப்படி ஒரு அநியாயம் பண்ணியிருப்பாளா அன்னம்மா? பாவம், ஒரே ஒரு தடவைதான் சின்னத் தப்புப் பண்ணிவிட்டாள்!

    அந்த நிகழ்ச்சியின் ஞாபகம் இப்போது சற்று பெருமையாகவும், இனம் புரியாத தாபத்தையும் உண்டாக்கியது. “அண்ணி முறுக்கு பிழிய வரச் சொன்னாங்க. மத்தியானம் திரும்பி வந்துடுவேங்க. போகட்டுமா?” காலையிலேயே அவருடைய உத்தரவைப் பெற்றுத்தான் சென்றிருந்தாள் அன்னம்மா.

    சாயந்திரம் இவர் வந்தபோது, அவள் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று தெரிந்ததும் ஆத்திரம் பீறிட்டது. மத்தியானம் வந்துவிடுவதாகத்தானே சொல்லிப் போனாள்? அது என்ன, அண்ணன் வீட்டில் சீராடல் வேண்டிக் கிடக்கிறது, வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்குத் தண்ணி கலக்கிக் கொடுக்க வேண்டுமே என்ற அக்கறைகூட இல்லாமல்!

    ஏதோ அனாதரவாக விடப்பட்டதுபோல பயம், கலக்கம். ஒவ்வொரு முறை சுவர்க்கடிகாரத்தில் கண் பதிந்தபோதும், இவருடைய வெப்பம் அதிகரித்தது. ஒரு வழியாக, எட்டு மணிக்கு வாடகைக்காரில் வந்து இறங்கினாள் மனைவி. “எவனோடடி சுத்திட்டு வர்றே?” தெருக்கதவை மறைத்தபடி இவர். எதிர்பாராத அதிர்ச்சியில் அவளுக்கு வாயடைத்துப்போயிற்று.

    எண்ணெய்ப் புகை பொறுக்க முடியாது, வாந்தியும், மயக்கமுமாக இருந்ததை எங்கே சொல்லவிட்டார்! இரவு முழுவதும், வார்த்தைகளாலேயே குதறி எடுத்தார். அவள் எந்தவித எதிர்ப்பும் காட்டாது, எல்லா அவமானங்களையும் ஏற்றது அவருக்குத் திருப்தியாக இருந்தது. இதுபோல பல சம்பவங்கள்.

    “பிரபா வரபோதே பசியோட வருவா, பாவம்! எல்லாத்தையும் சுட வைக்கணும்,” என்றபடி, உள்ளே போனான் பாலு.

    கிழவர் உதட்டைச் சுழித்துக்கொண்டார். அடுப்பின்மேல் சீனிச்சட்டியை (வாணலி) வைத்தவன், பேச்சுக்குரல் கேட்டு, காஸ் அடுப்பைச் சிறியதாக எரியவிட்டு, அவசரமாக வெளியே வந்தான்.

    அவன் பயந்தபடியே, “ஏம்மா? மழையும் சாரலுமா இருக்கில்ல? ஏதாவது கனமான புடவையைக் கட்டிட்டுப் போயிருக்கக் கூடாது?” என்றவாறு மருமகளை வரவேற்றுக் கொண்டிருந்தார் கிழவர். `இப்படி உடல் தெரிய நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு, அதிலும், தலைப்பை ஒற்றையாக விட்டுக்கொண்டு இருக்கிறாயே! எல்லாத் தடியன்களுடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்குமா?’ என்று மனதுக்குள் அவர் திட்டிக்கொண்டது அவளுக்கா புரியாது!

    எதுவும் பேசாது, மாமனாரை முழுவதாக ஏறிட்டுப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, உள்ளே போக யத்தனித்தாள். கணவனைக் கண்டதும், அவளது புன்னகை விரிந்தது. “சாப்பாட்டைச் சுட வைச்சுட்டீங்களா? அப்பாடி! பசி கொல்லுது,” என்றபடி சாப்பாட்டு மேசைமுன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.

    லஞ்ச் டைம்கிழவரின் உணர்ச்சிகள் கொந்தளித்தன. ஆண்பிள்ளையாய் லட்சணமாய், தான் அவனுடைய அம்மாவை `வைக்க வேண்டிய இடத்தில்’ வைத்திருந்ததைப் பார்த்து வளர்ந்திருந்த பிள்ளை! இன்று பெண்டாட்டிக்குக் குடை பிடிக்கிறான்! இந்தக் காலத்துப் பயலுகளே மோசம்! வெட்கம் கெட்டவனுங்க! கிழவரின் கைகள் இறுகி, வலித்தன.

    அப்பா! சாப்பிட வர்றீங்களா?”

    ஏதோ, இப்போதாவது அப்பா ஞாபகம் வந்ததே! எந்தக் காலத்தில் அவர் சாப்பிடுமுன் அவர் மனைவி சாப்பிட்டு இருக்கிறாள்! கல்யாணத்தன்று மட்டும், `சம்பிரதாயம்’ என்ற பெயரில், இருவரையும் ஒன்றாக உட்காரச் சொல்லி, சாப்பிட வைத்தார்கள்.

    ஹூம்! காலம்தான் எவ்வளவு கெட்டுவிட்டது! இன்று, இந்த சின்னப்பெண் முதலில் உட்கார்ந்துகொண்டு, அதிகாரமாய் சாப்பிடுகிறது, வீட்டுக்குப் பெரியவன் நான் — ஒரு ஆண்பிள்ளை — பசியோடு இருப்பேனே என்கிற பயமோ, மரியாதையோ கொஞ்சமும் இல்லாமல்! வேண்டாவெறுப்புடன் உள்ளே போனவருக்கு, கையை மட்டும் கழுவிவிட்டு பிரபா சாப்பிட்டுக்கொண்டிருந்தது கண்ணை உறுத்தியது. அடக்க மாட்டாது, “ஏம்மா, பிரபா! வெளியில அலைஞ்சுட்டு வந்தது கசகசன்னு இல்லே? குளிச்சிருக்கலாமே!” என்று அவளைக் கேட்டபோது, தன்மேலேயே கோபம் எழுந்தது. கேவலம், ஒரு பெண்ணுக்கு மரியாதை கொடுத்துப் பேசவேண்டி வந்துவிட்டதே என்று குன்றிப்போனர்.

    பட்டென்று அவள் புத்தியில் உறைக்கிறமாதிரி, `பொம்பளையா, லட்சணமா, வீட்டுக்கு வந்ததும் புருஷனையும், மாமனாரையும் கவனிச்சுக்கறதை விட்டுட்டு, இப்படி ஊர் சுத்திட்டு, அதிலும் வெக்கமில்லாம, கட்டின புருஷனையே வீட்டு வேலை செய்ய விட்டுட்டு, என்னமோ மகாராணிமாதிரி சாப்பிட ஒக்காந்துட்டியே! எழுந்திருடி, சரிதான்!’ என்று பொரியத் துடித்தார்.

    ஆனால், `மகன்’ என்ற பெயரில் யமன் அல்லவோ அவருக்கு வாய்த்திருந்தான்! கல்யாணம் ஆவதற்கு முன்பே அவருக்கு வாய்ப்பூட்டு போட்டிருந்தான்: `நீங்க ஒங்க காலத்தையே நெனைச்சுக்கிட்டு, வர்றவளையும் விரட்டிக்கிட்டு இருக்காதீங்க. எனக்குப் பிடிக்காது!’ சிறு வயதிலேயே முரடன் அவன். அன்னம்மா சாம்பாரில் அதிகமாக உப்பு போட்டுவிட்ட குற்றத்துக்காக அவளை அடிக்க இவர் கையை ஓங்க, பதினாறு வயதுப் பையனாக இருந்த அவன், ஓங்கிய கையை இறுகப் பிடித்துக்கொண்டு, `அம்மாமேல இன்னொரு தடவை ஒங்க கை பட்டுச்சோ.., அதை வெட்டி எறிஞ்சுடுவேன், ஆமாம்!’ என்று உறுமியவன் ஆயிற்றே!

    வயதான காலத்தில், வருவாயோ, வேறு போக்கிடமோ இல்லாத நிலையில், இவனைப் பகைத்துக்கொண்டால், யாருக்கு நஷ்டம்? தலையை அளவுக்கு மீறி குனிந்தபடி சாப்பிடுவதாகப் பாவனை செய்தாலும், அந்தத் தம்பதியரிடையே உண்டான சங்கேதக் குறிப்புகளும், கண் சிமிட்டலும் அவருக்குத் தெரியாமல் போகவில்லை.

    தன் தாம்பத்தியத்தில் மட்டும் ஏன் இப்படி — நினைத்து, நினைத்து ஆனந்தப்படும்படி — எதுவுமே நிகழவில்லை? அன்னம்மா ஏன் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துழைக்கவில்லை? மற்ற எல்லா விதத்திலும் அனுசரித்துப்போனாளே?

    `உங்களால் என் உணர்ச்சிகளைக் கிளற முடியாது!’ என்ற வீம்பு பிடித்தவள்போல், மரக்கட்டையாய் படுக்கையில் கிடந்த மனைவி அவருடைய ஆண்மைக்கே சவால் விடுவது போலிருந்தது. அவளுடைய அப்போக்கு பொறுக்காதுதானே நொந்த மனதுக்கு ஆறுதல் தேடி, கண்ட பெண்களை நாடிப் போனார்!

    அப்பெண்களும் அவரது ஸ்பரிசத்துக்காக ஏங்கிக் காத்திருந்ததுபோல் நடந்துகொண்டது தான் அள்ளிக் கொடுத்த காசுக்குரிய நடிப்பாக இருக்கும் என்று அவர் நம்பத் தயாராக இல்லை. இதமாகத்தான் இருந்தது. தனக்கு மனைவியாக வாய்த்தது பெண் ஜன்மமே இல்லை என்று குமுறினார். அவள்மேல் விளைந்த இளக்காரமும், அது தோற்றுவித்த பலாத்காரமும் மேலும் வலுப்பட்டன.

    லஞ்ச் டைம்கை கழுவியபடியே பிரபா திரும்பினாள். “இன்னிக்கு ஒரு வேடிக்கை,” என்று கணவனிடம் ஆரம்பித்தாள். “எங்கூட வேலை செய்யற ஜெயா இல்லே, அவ வீட்டுக்குப் போன் பண்ணினா — பிள்ளைகூட பேச. அதுக்கு மூணு வயசு. அம்மாகூட பேசமாட்டேன்னு அது அடம் பிடிக்க, இவ திரும்பத் திரும்ப போன் போட்டுக் கெஞ்ச..!” பிரபாவுக்குச் சிரிப்பு பொங்கி வந்தது.

    “அதிசயமா இருக்கே!” வாயில் போட்டிருந்த கவளத்தை விழுங்காமலே அவளுடைய கதையில் ஆர்வம் காட்டினான் பாலு.

    “ஆமா!” நொடித்தாள். “கண்டிப்பு என்கிற பேரிலே இவ ஓயாம அந்தப் பையனை அடிப்பாளாம். அதை எங்க எல்லார்கிட்டேயும் தினமும் பெருமையா சொல்லிக்கறது இருக்கே! இப்ப இவளுக்கு வேணும்கிறபோது, `ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக்க’ன்னா?”

    கிழவருக்குச் சட்டென்று புரையேறியது.

    இந்தச் சின்ன விஷயம் ஏன் தனக்குப் புரியாமல் போய்விட்டது? பெற்ற குழந்தையாக இருந்தால் என்ன, கட்டிய மனைவியாக இருந்தால்தான் என்ன, அன்பை நாம் முதலில் கொடுத்தால்தானே அதைத் திரும்பப் பெறமுடியும்! மனைவியின் போக்கை நிர்ணயித்ததே தான்தான் என்று புரிந்தபோது, அந்த வேதனை அவ்வயோதிகர் முகத்தில் படர்ந்தது. அடிவயிற்றிலிருந்து இரும ஆரம்பித்தார்.

    மெதுவாச் சாப்பிடுங்க, மாமா,” என்றாள் பிரபா கனிவுடன். “சாப்பிடறபோது நான் பேசியிருக்கக்கூடாது!”

    (நயனம், 1993, மின்னூல் தொகுப்பு)

    படம் உதவி: http://image1.masterfile.com/em_t/06/58/52/6100-06585213er.jpg

    Share
  • பெரிய வாத்தியார்

    நிர்மலா ராகவன்

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தார் சாம்பசிவம்.

    இப்படி ஆரம்பித்தாரானால், உலகின் எந்த மூலையிலோ நடந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும்.
    இதைப் பழக்க தோஷத்தில் அறிந்திருந்த நண்பர் நாதன், “காலம் கெட்டுப் போச்சு!” என்று சொல்லிவைத்தார், பட்டுக்கொள்ளாமல்.

    முன்பு ஒருமுறை, ‘எதைச் சொல்றீங்க?’ என்று தெரியாத்தனமாய் கேட்கப்போய், ‘ஏன்யா? நீங்க தினசரி பேப்பரே படிக்கிறதில்லையா? இல்ல, டி.வி.யிலேயாவது பாத்துத் தெரிஞ்சுக்கிறது! இப்படி ஒங்களைமாதிரி, ‘நாட்டை ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, இல்ல, அந்தக் கொரங்கே ஆண்டால் என்ன’ன்னு கெணத்துத் தவளையா அவனவனும் இருக்கிறதாலேதான் ஒலகம் இப்படி சுயநலம் பிடிச்சு, ஒரேயடியாக் கெட்டுக் கிடக்கு!’ என்று சாம்பசிவத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டது இந்த ஜன்மத்துக்கும் மறக்குமா!

    தான் தினசரி படிக்காததிற்கும், உலகம் கெட்டுப்போவதற்கும் என்ன சம்பந்தம் என்று நாதனுக்குப் புரியத்தான் இல்லை. அதை வாய்திறந்து எப்படிக் கேட்பது? என்ன இருந்தாலும், தான் சாதாரண ஆசிரியராக இருந்தபோது, அதே தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்தவர் ஆயிற்றே! இப்போது இருவருமே ஓய்வு பெற்று, அரசாங்கம் அளித்துவந்த சொற்ப பென்ஷன் பணத்தில் வறுமையின் எல்லைக்கோடு கண்ணில் தெரியும் தூரத்தில் இருந்துவந்தபோதும், சாம்பசிவம் மட்டும் அந்தப் பழைய மிடுக்கைக் குறைத்துக்கொள்ளவே இல்லை.

    ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்புவரை இருந்த அப்பள்ளியில் படித்த சிறுவர், சிறுமியர் அனைவரும் ‘பெரிய வாத்தியார்’ என்று பயபக்தியுடன்ஒதுங்கி வழி விட்டது, வாரம் தவறாது, திங்கள் காலை அவர்கள் எல்லாரையும் பள்ளி வளாகத்தில் இரட்டை மாடிக் கட்டிடத்தின்முன் நிற்கவைத்து, ஒழுக்கம், கடவுள், கலை என்று தனக்குத் தோன்றியதைப்பற்றி எல்லாம் மைக்கே அதிர்ந்துவிடும்படி அலறியது, மற்றும் தான் சொன்னது, செய்தது எதிலாவது குறையோ, மாற்றமோ தெரிவித்த ‘மரியாதை கெட்ட’ ஆசிரியர்களை அவர்களது வேலைப்பளுவை அதிகரிக்கச்செய்து, மரியாதை உள்ளவர்களாக மாற்றியது — இப்படிப் பலவும் சாம்பசிவம் தனக்குத்தானே போட்டுக்கொண்டிருந்த மதிப்பெண்களைக் கூட்டிக்கொள்ள வைத்திருந்தன. மேலும், அவருடைய பெரிய ஆகிருதியும், ரகசியம் பேசினால்கூட எட்டு வீடுகளுக்குக் கேட்கும் சிம்மக்குரலும் அவரது பலம்.

    சாம்பசிவம் ஓய்வு பெற்றதும், அந்தச் சிற்றூரைவிட்டு, டவுனில் இருக்கும் மகனுடனேயே போய் தங்கிவிடவேண்டும் என்று அவருடைய மனைவிக்கு ஆசை. ஆனால் தான் யாரென்றே தெரியாத பலரும் இருக்கும் ஓரிடத்தில் போய், தனது மதிப்பைக் குறைத்துக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை.

    இது பழகிப்போன இடம். ஓரிரண்டு தறுதலைகள் இவரைப் பார்த்தும் பாராதமாதிரி ஒதுங்கிப்போனாலும், ‘பெரிய வாத்தியார்’ என்று மார்க்கெட்டில் முருங்கைக்காய் விற்பவரிலிருந்து தபால்காரர்வரை இவரைத் தெரியாதவர்கள் எவருமில்லை. ‘ஆசிரியர்’ என்றால் எல்லாமே அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற அவர்கள் எண்ணத்திற்கேற்ப இவரும் நடந்துகொண்டார். தனக்குச் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, எல்லா விஷயங்களுக்கும் நியாய அநியாயம் கற்பிப்பார். பெரும்பாலும், இவரது தர்க்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் காதில் இவரது சொற்கள் விழாதது இவருக்குச் சௌகரியமாகப் போயிற்று.

    இவ்வளவு பராக்கிரமம் வாய்ந்த சாம்பசிவம் ஒரே ஒரு தவறுமட்டும் செய்துவிட்டார். கல்யாணமான முதல் இருபது வருடங்கள் மனைவியை ஒரேயடியாக அடக்கி ஆண்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறார், காலங்கடந்து. வீட்டில் அவள் ராஜ்ஜியந்தான்.

    ‘போன ஜன்மத்தில கோயில் தேரா இருந்திருப்பீங்களோ! மழையோ, வெயிலோ, நாள் தவறாம தெருத்தெருவா அசைஞ்சுக்கிட்டுப் போகணும் ஒங்களுக்கு!’ அவர் எது செய்தாலும், அதைப் பழிக்காவிட்டால் அவளுக்கு உணவு செரிக்காது.

    அவள் வாய்க்குப் பயந்தே அவர் கூடுமானவரை வீட்டில் இருப்பதைத் தவிர்க்கிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை.
    அவள் சொல்வதற்கு ஏற்றார்போல், கடைத்தெரு, கோயில் பிரகாரத்துக்கு வெளியே, ‘விளையாட்டு மைதானம்’ என்ற பெயர் தாங்கிய முட்செடிகள் அடர்ந்த புல்வெளி — இப்படி, கால் போன போக்கில் செல்வார் சாம்பசிவம். அந்தச் சிற்றூரைத் தவிர வேறு வெளியுலகமே அறிந்திராத அப்பாவிகள் யாராவது சாம்பசிவத்திடம் மாட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கும்தான் பொழுது போகவேண்டாமா?

    அப்படித்தான் அன்று நாதனும் வசமாகச் சிக்கிக்கொண்டார்.

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்த சாம்பசிவம், “எல்லாம் சட்ட விரோதமா நம்ப நாட்டுக்குள்ள நுழைஞ்சவங்களைத்தான் சொல்றேன்!” என்று பீடிகை போட்டார்.

    “யாரு, இந்தோன்களைச் சொல்றீங்களா?” மரியாதையை உத்தேசித்து, அக்கறை காட்டினார் நாதன்.

    “அது பழைய சமாசாரமில்ல? நான் அதைச் சொல்ல வரல,” என்று மறுத்தாலும், வகுப்பில் பழைய பாடங்களை மீண்டும் மீண்டும் சொல்லி நினைவுபடுத்துவதுபோல, அந்தப் பழைய சமாசாரத்தைப்பற்றியே பேசிக்கொண்டுபோனார். “மலையில வளர்ந்திருக்கற மரத்தையெல்லாம் நெருப்பு வெச்சுக் கொளுத்திட்டு, அங்க கத்தரிக்கா, வெண்டைக்கா செடியெல்லாம் போட்டு, அதில காய்க்கறதை ஒண்ணுக்கு நாலு விலை வெச்சு நம்ப தலையில கட்டறானுங்க. இன்னும், ராவில வீடு பூந்து திருடிட்டு, ‘என்னைப் பிடிங்கடா, பாக்கலாம்!’ அப்படின்னு சவால் விடறமாதிரி, கறுப்புக் கறுப்பா கைரேகையை வீட்டுச் சுவத்தில பதிச்சுட்டுப் போறானுங்களாம். அதான் தெரிஞ்ச கதையாச்சே!”

    “ஓ! அப்போ ‘பங்களா’வைச் சொல்றீங்களா?” என்று கேட்கும்போதே நாதனுக்குப் பெருமை ஓங்கியது, சரியான விடை அளித்துவிட்ட மாணவனைப்போல.

    “அதேதான்!” என்று சாம்பசிவம் ஆமோதிக்கவும், நாதனுக்கு உச்சிகுளிர்ந்து போயிற்று. அந்தச் செய்தியும் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், அது தன் வாயிலிருந்து வருவதைப் பெரிய வாத்தியார் விரும்பமாட்டார் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால், அவருக்கும்தான் அலட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுப்போமே என்று பெருமனது பண்ணி, வாயை மூடிக்கொண்டு, பழைய பணிவு மாறாது நின்றார்.

    “ஏழு வயசுப் பொண்ணு, பாவம்! இப்பத்தான் பல் விழுந்து முளைச்சிருக்கும். அதைப்போய்…! சே! இவனுங்களை எல்லாம் அவன் ஏறி வந்த படகிலேயே திரும்பவும் ஏத்திவிட்டு, நடுக்கடலிலே மூழ்க வைக்கணும்!”

    சாம்பசிவத்துக்குத் திடீர்திடீரென்று யார்மேலாவது கோபம் கிளம்பும்.

    ‘இவன்களை எல்லாம் வரிசையா நிக்கவெச்சு, சுட்டுத்தள்ளணும்!” என்று ஆக்ஞை பிறப்பிப்பார். இல்லாவிடில், ‘நகக்கணுவிலே ஊசியேத்தணும்,’ ‘கொதிக்கற எண்ணையில தூக்கிப் போடணும்’ என்று, நரகத்தில் நடத்தப்படுவதாகப் பெரியவர்கள் கூறித் தான் கேட்டிருந்ததை எல்லாம் சொல்லிச் சபிப்பார்.

    ‘பிரெஞ்சுக்காரன் கடலிலே அணுசக்தி ஆராய்ச்சி செய்யறானே! அதில செத்துப்போற மீனை எல்லாம் அவனையே சமைச்சுச் சாப்பிடச் சொல்லணும்!’ என்று ஏசுவார். எல்லாம், ‘அவன் காதில் விழவா போகிறது!’ என்ற தைரியந்தான்.
    சொல்கிறபோது சிறிது வீரமாக உணர்வார். வீட்டில் நுழையும்வரை அது நிலைக்கும்.

    “காலம் கெட்டுப் போச்சு!” என்று ஒத்துப்பாடினார் நாதன். மனமோ, ‘ஓ! இதுதானா காரணம்!’ என்று எக்காளமிட்டது.

    சாம்பசிவத்தின் கடைசி மகள் கடந்த வருடம் பெட்ரோல் ஸ்டேஷனில் வேலைபார்த்த ஒரு அயல் நாட்டானின் அழகிலோ, வேறு எதிலோ மயங்கி, வீட்டைவிட்டு ஓட இருந்தாள். தக்க சமயத்தில் மூக்கில் வியர்த்து, அதைத் தடுத்து, பெண்ணை உடனடியாக டவுனுக்கு, அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் சாம்பசிவம். அடுத்த வீட்டுக்காரன் யாரென்றே தெரியாது அங்கு ஒவ்வொருவரும் வாழ்ந்தது அவருக்குச் சாதகமாகப் போயிற்று.

    அப்பெண்ணை நிறைமாதக் கர்ப்பிணியாக அங்கு ஆஸ்பத்திரியில் பார்த்ததாக அவர்கள் பள்ளித் தோட்டக்காரன் முருகன் நாதனுடைய காதைக் கடிக்காத குறையாகச் சொன்னதோடு, ‘பெரிய வாத்தியார்கிட்ட இதைப்பத்தி நான் சொன்னதா எதுவும் கேட்டுடாதீங்கைய்யா!’ என்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

    அதன்பின், அப்பெண் தந்தைவீடு வந்து சேர்ந்தாள். அவளைப்பற்றிய ரகசியம் தனக்குத் தெரிந்திருப்பதாலேயே தான் அவரைவிட ஒரு படி மேல் என்று நாதன் பெருமைப்பட்டுக்கொண்டார். அந்த எண்ணத்தில் பிறந்த கருணையுடன், “நாடுவிட்டு நாடு எதுக்காக வந்து, இங்க இருக்கறவங்க பிழைப்பிலே மண்ணைப் போடணும்கிறேன்!” என்றார் அழுத்தமாக.

    தமது மூதாதையர்களும் அதேமாதிரிதான் தாய்நாட்டைவிட்டு இந்த மலேசிய மண்ணில் கால்பதித்தார்கள் என்பதை இருவருமே அப்போது நினைத்துப்பார்க்க விரும்பவில்லை.

    நாதன் சொன்னது தன் காதிலேயே விழாததுபோல் நடந்துகொண்டார் சாம்பசிவம். ஒருநாள்போல் தினமும் இரவில் வீட்டுக்குப் போனால், மனைவியிடம் ‘பாட்டுக் கேட்கவேண்டி வருமே’ என்ற பயமெழ, சாம்பசிவம் அவசரமாகப் பேச்சை முடித்துக்கொள்ளப் பார்த்தார்: “அட, நாம்பளும் இளவட்டங்களா இருந்தவங்கதான். இப்படி ஆயிரக்கணக்கான மைல் தொலைவு — மலைமேலேயும், காட்டுக்குள்ளேயும் நடந்துவந்து, — பிழைப்புத் தேடறது லேசில்ல. ‘பணம்தான் கிடைக்குதில்ல, சன்னியாசிமாதிரி இரு’ன்னு சொல்லிட முடியுமா?”

    பெரிய வாத்தியார் திடீரென்று கட்சி மாறிவிட்டது எதனால் என்று திகைத்தார் நாதன். ஆண்-பெண் விவகாரத்தைப்பற்றிப் பேச்சு திரும்பியதும், சாம்பசிவத்துக்கு மனைவி ஞாபகம் வந்ததை அவர் எப்படி அறிவார்!

    “கோயிலுக்கு வந்தோமா, சாமி கும்பிட்டோமான்னு இல்லாம, கண்டதுங்களைப்பத்தி எல்லாம் என்னா பேச்சுங்கறேன்!” என்னவோ, அடுத்தவர் மூச்சு விடாமல் பேசினாற்போலவும், தான் அதைக் கேட்க நேர்ந்துவிட்டாற்போலவும் நொந்துகொண்டவர், நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “என்னப்பனே, முருகா! எல்லாருக்கும் நல்ல புத்தியைக் குடுடா!” என்று கடவுளை இறைஞ்சியபடி, எதிரில் நின்றிருந்தவரிடம் விடைபெற்றுக் கொள்ளாமலேயே நடையைக் கட்டினார்.

    (இதயம், 1996, வலைத்தமிழ்)

    Share
  • இனம்

    நிர்மலா ராகவன்

    “டீச்சர் என்ன இனம்?”

    தமிழரசி அயர்ந்து போனாள்.

    செல்வம் கொழிக்கும் மலேசிய நாட்டில், பள்ளிக்கூடங்களில் எல்லா முக்கியமான பாடங்களும் மலாய் மொழியில் இருந்ததால், `நீங்கள் எங்கள் மொழியைத்தான் பேச வேண்டியிருக்கிறது!` என்று அலட்டிக் கொள்வதுபோல் சில மாணவர்கள் நடந்து கொண்டார்கள். சீன, இந்திய இன ஆசிரியர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது.

    நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களிடையே மொழி, மதம் மற்றும் பழக்கவழக்கங்களில் பல்வித வேறுபாடுகள் இருந்தாலும், மேலோட்டமாக ஒற்றுமையும் இருந்தது.

    பண்டிகைக் காலங்களில், பிற இன நண்பர்கள் வீட்டுக்குப் போவதன் சிறப்பை அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி, தாமும் அதன்படி நடந்து கொண்டதை ஊடகங்களில் வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த சந்தர்ப்பங்களில், பொங்கலுக்கு குர்த்தா, சீனப் புத்தாண்டுக்கோ சிவப்பு ஸாடின் துணியில், தொளதொளவென்ற முழுக்கையும், கழுத்தை மறைக்கும் `மாண்டரின்` காலரும் கொண்ட சட்டை என்று, இனத்துக்குத் தக்கவாறு உடை அணிந்துகொண்டார்கள். ரம்ஜானுக்கு, அவர்கள் வழக்கப்படி, மலாய் உடை — பட்டு வண்ணத் துணியில் ஸாரோங், அதே நிறத்தில் முழுக்கை சட்டை, இடுப்பில், சரிகை வேலைப்பாடு அமைந்த, அங்கவஸ்திரம் போன்ற ஒன்று, மற்றும் தலையில் குல்லா.

    பண்டிகைகள் போதெல்லாம் குழந்தைகள் பாடு கொண்டாட்டம்தான். எந்தப் பண்டிகையாக இருந்தாலும், `அங் பாவ்` (ANG PAU) என்ற பெயரில், ஒன்று, இரண்டு, ஐந்து அல்லது பத்து ரீங்கிட்கூடக் கையில் கிடைக்கும், கொடுப்பவர்களின் வசதியைப் பொறுத்து. பக்கத்து வீட்டுக் குழந்தைகளைக்கூட கூப்பிட்டுக் கொடுப்பார்கள். சீனப் புத்தாண்டின்போது அவர்கள் வழக்கமாக இருந்தது இப்போது நாட்டின் பொது கலாச்சாரமாகிவிட்டது.

    அவ்வளவு ஏன், இன ஒற்றுமைக்குச் சான்றாக அவளே இல்லையா?

    ஒரு கீறலாக இருந்த கண்கள், மேடான கன்னம், கருத்த, நேராய்த் தொங்கும் நீளமான முடி என்று, தோற்றத்தில்தான் அவள் வேற்றினம். ஆனால், அவள் பெயரிலேயே தமிழ் இருந்தது. வளர்ப்புப் பெற்றோர்களின் உபயம்.

    தமிழரசியைப் பெற்றவள், `ஏற்கெனவே மூணு பொம்பளைப் பிள்ளைன்னு மாமியார் என்னை ஏசிக்கிட்டே இருக்கிறா. இனிமே அடி, உதைதான்!` என்று அஞ்சி, அழுதாளாம். பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று நிச்சயிப்பது தந்தையின் விந்துதான் என்று அந்த பாமரப் பெண்மணிக்குத் தெரியவில்லை.

    அவளுக்குப் பிரசவம் பார்த்த பொன்னம்மா, `எனக்குக் குடுத்துடேன், ஆ ஸௌ (மாமி)! நான் எடுத்துக்கிறேனே!` என்றெல்லாம் கெஞ்சி, வாங்கி வந்தாளாம்.

    அப்போது அவளுக்கு நாற்பது வயது. கல்யாணமாகி `எத்தனையோ` வருடங்கள் கடந்திருந்தும், வயிறு என்னவோ திறக்கவில்லை. புறம்போக்கு நிலத்தில் அந்த `சீனச்சி` வைத்திருந்த சிறு மளிகைக் கடையில் பருப்பு வகைகளைப் புடைத்து, கல் பொறுக்கி, அவள் அறிவுரைப்படி சற்றே குறைத்து அளவிட்டுச் சாமான்களை விற்பதுமாக மாதம் அறுபது வெள்ளிக்கு வேலை செய்துகொண்டிருந்த சமயம் அது. பிறர் வீட்டு வேலைக்குப் போனாலும், இதே சம்பளம்தான் கிடைக்கப் போகிறது! இங்காவது, யார் கண்ணிலும் படாமல் அரிசி, முந்திரி என்று அவ்வப்போது வாயில் போட்டு மெல்லலாமே என்ற திருப்தி அவளுக்கு.

    என்றாவது பெற்றவள் தன் உடைமையை திரும்பக் கேட்டுவிடுவாளோ என்று பயந்து, வேறு ஊருக்கு வந்துவிட்டதையும் பருமனான உடலதிரச் சிரித்தபடி கூறுவாள் பொன்னம்மா. இன்னாரிடம் என்றில்லை. அவள் சுபாவப்படி, நடந்து முடிந்ததை எல்லாம், மாடு அசை போடுவதுபோல், உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவள் பொழுதுபோக்கே அதுதான் — இடைவிடாது பேசிக்கொண்டிருப்பது. எங்காவது ஆரம்பித்து, எதிலாவது கொண்டு முடிப்பாள்.

    அப்படித்தான் தமிழரசி தன் பிறப்பைப் பற்றி அறிந்துகொண்டாள். எத்தனையோ கதைகளுடன் அதுவும் ஒன்றாகிவிட, இயல்பாக ஏற்றுக் கொண்டிருந்தாள்.

    பள்ளத்தாக்கில் அமைந்த புறம்போக்கு நிலத்தில், கோணல்மாணலாக அவரவர்கள் கட்டிக்கொண்டிருந்த, எங்கெங்கோ பொறுக்கிவந்த மரப்பலகைகளும், அலுமினியத் தகரங்களும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்று அவர்களுடையது.

    தந்தை சின்னப்பன் லோரி ஓட்டுநர். பிறரைப்போன்று சிகரெட், சம்சு (மலிவு ரக மது) என்று பணத்தையும், நேரத்தையும் வீணாக்காது, தன் வேலை உண்டு, தொலைகாட்சி உண்டு என்றிருந்தார். பிறரிடமிருந்து அவர் எல்லா விதத்திலும் வித்தியாசமாகத்தான் இருந்தார். `காது செவிடாறதுக்கா டி.வி. போடுவாங்க?` என்று, மறைமுகமாக அக்கம்பக்கத்தினர் தம் இல்லங்களிலும் அந்த விலையுயர்ந்த பொருள் இருக்கிற பெருமையைப் பறைசாற்றுவதைக் கேலி செய்வார். நேரம் கிடைத்தபோதெல்லாம், தமிழ், ஆங்கிலம் என்றில்லை, மாண்டரின், காண்டனீஸ் ஆகிய சீன மொழிகளுடன், கொரியப் படங்களையும், பாடல் நிகழ்ச்சிகளையும்கூட விட்டுவைத்ததில்லை அவர். ஒலி அவர் காதிலாவது விழுமா என்பதே சந்தேகமாக இருக்கும்.

    பள்ளி ஆசிரியைகள் எப்போதும், தம்மையுமறியாது, உரக்கப் பேசுவார்களாம். வகுப்பில் கத்தியே பழகிவிட்டதால் வந்த வினை.
    சின்னப்பனோ, தாம் ஓட்டும்போது கடகட சத்தத்தை ஓயாது கேட்க நேரிட்டதாலோ, என்னவோ, எந்த ஒலியையுமே வெறுப்பவராக நடந்துகொண்டார். அவர் பேசுவதே அபூர்வம். எப்போதாவது வாயைத் திறந்தாலும், `தாமான்` (TAMAN) என்று வழங்கப்பட்ட, ஆயிரக்கணக்கில் விலைமதிப்புள்ள வீடு வாங்குவதைப்பற்றித்தான் இருக்கும்.

    `தாமான் வீடுன்னா செங்கல்லாலும், சிமெண்டாலும் கட்டி இருப்பாங்க. சின்ன தோட்டமும் இருக்கும். மழை வந்தா, இப்படி வீட்டில இருக்கிற மங்கு, பாத்திரங்களை எல்லாம் தரையில வெச்சு, இருக்கிற வேலையையெல்லாம் விட்டுட்டு,கூரையைப் பிய்ச்சுக்கிட்டு ஒழுகற தண்ணியைப் பிடிச்சுப் பிடிச்சுக் கொட்டற பேஜார் பிடிச்ச வேலை இருக்காது,` என்று அடிக்கடி சொல்வார். ஏதோ நல்ல கனவு காண்கிற பாவத்தில் கண்கள் கிறங்கியிருக்கும்.

    சின்னப்பனுடைய கனவு கனவாகவே போய்விட்டது.

    அவளுக்குப் பன்னிரண்டு பிராயமாக இருந்தபோது நடந்தது அது. இரவு முழுவதும் வேலை செய்த களைப்பில், விடியற்காலையில் திரும்பும்போது, பேருந்துக்காகக் காத்து நின்ற ஐந்து பள்ளிச் சிறுமிகள்மேல் சின்னப்பன் மோத, தலத்திலேயே அவர்கள் உயிர் பிரிந்தது. தன் உடலில் ஒரு சிராய்ப்புகூட இல்லாமல் தப்பித்தது அவரது குற்ற உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டது. தூக்கக் கலக்கமோ, அல்லது பிரேக் பிடிக்கவில்லையோ, அது அப்போது முக்கியமாகவில்லை.

    `நான் மகாபாவி! அந்தப் பிஞ்சுகளை அநியாயமா அழிச்சுட்டேனே!` என்று கதறியபடி, மார்பில் ஓங்கி அறைந்துகொண்டார், இதயமே நிற்கும்வரை. விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஒரு நாள்கூட அனுபவிக்காது, அந்த வகையில் குடும்பத்துக்குப் பழி நேராது போய்விட்டார் புண்ணியவான்.

    சரிந்துவிட்ட தங்கள் குடும்ப நிலையைத் தான்தான் நிமிர்த்த வேண்டும் என்று அந்த இளம் வயதிலேயே தமிழரசிக்கு உறுதி ஏற்பட்டது. அவள் பிறந்த இனத்துக்கே உரிய அலாதி சுறுசுறுப்பும், எடுத்துக்கொண்ட எந்த காரியத்தையும் துல்லியமாக முடிக்கும் திறனும் அவளுடைய ரத்தத்திலேயே கலந்து வந்திருந்தன.

    தந்தை இல்லாத குறை தெரியாதிருக்க, தாய் அவளிடம் இன்னும் பாசத்தைக் கொட்டினாள். `நான்தான் படிக்காத முட்டாளாயிட்டேன். நீயாவது நல்லாப் படிக்கணும், கண்ணு!` என்று நாள் தவறாது சொல்லிச் சொல்லி பொன்னம்மா அவளை வளர்த்ததில், இன்று தமிழரசி பட்டதாரி ஆசிரியை. பட்டப்படிப்புக்கு அரசாங்கத்தின் உபகாரச் சம்பளம் பெற்ற ஆயிரத்தில் ஒரு தமிழச்சி.

    `எம்மக கவர்மெண்டு ஸ்கூல்லே படிச்சுக் குடுக்குது!` என்று பூரிப்புடன், அவள் காதுபடவே பொன்னம்மா பார்ப்பவரிடமெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, வேண்டாத நான்காவது மகளாய், எங்கேயோ கிடந்து இடிபட்டிருக்க வேண்டிய தன்னுடன் பிறந்த அக்காமார்களுக்கும் இந்த அதிர்ஷ்டம் இருந்திருக்குமா என்று யோசித்துப் பார்ப்பாள் தமிழரசி.

    அவர்கள் மேற்படிப்பு படித்திருப்பார்களா, அல்லது, `பொம்பளைப் பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?` என்ற தாயின் சொற்களை ஏற்று, கடையில் எடையைக் குறைத்துப் போட்டு, பெருலாபம் பார்த்து, கடையை விரிவுபடுத்தியிருப்பார்களா?

    `பெண்` என்றாலே பலருக்கும் அலட்சியம்.

    கற்காலத்தில் கொடிய வனவிலங்குகளுடன் சண்டை போட்டு, தன் உயிரைப் பணயம் வைத்துக் கானகத்தில் உணவு தேடி வந்ததால், ஆண் வைத்தது சட்டமாக இருக்கலாம். இன்று என்ன வந்தது!

    அவளுடைய பள்ளித்தோழி சியூ வாஹ், எப்போதோ சொன்னது நினைவில் எழும். `மேலே படிக்கணும்னு நான் எவ்வளவோ ஆசைப்பட்டேன். ஆனா, `ஒருத்தரை படிக்கவைக்கத்தான் வசதி இருக்கு. அதனால, ஒங்கண்ணன் படிச்சா போதும்,`னுட்டாங்க எங்கம்மா. அவனுக்கோ படிப்பிலே ஆர்வமே கிடையாது. இதை நான் சுட்டிக் காட்டினதும், `அவன்தானே கடைசிக் காலத்தில் எங்களை வைச்சுக் காப்பாத்தப் போறான்! நீ எப்படியும், கல்யாணமாகி, இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போறவதானே!ன்னு அலட்சியமா சொல்லிட்டாங்க. `அவன் காப்பாத்துவான்னு என்ன நிச்சயம்?` அப்படின்னு நான் சண்டை போட்டுக்கூட பாத்துட்டேன். ஆனா, அவங்க காதிலேயே போட்டுக்கல,` என்று அவள் துக்கம் தொண்டையை அடைக்க சொன்னதை எப்படி மறக்க முடியும்!
    நல்ல வேளை, அவள் குடும்பத்தினரோ, உறவினரோ, `நீ வெறும் பொம்பளைப் பிள்ளைதானே! எங்களைப்போலக்கூட இல்ல. ஒனக்கு மஞ்சத்தோலு. அதோட, பெத்தவங்க தூர வீசிட்ட பிள்ளை நீ!` என்றெல்லாம் ஒரு முறைகூட அவளைப் பழித்ததில்லை.
    இப்போது, அவளுடைய இருபத்தாறாவது வயதில் ஒரு தறுதலை கேட்கிறான், அவள் என்ன இனம் என்று!
    சமாளித்துக்கொண்டு, தமிழரசி பதில் சொல்வதற்குள், இன்னொருவன் உரக்கக் கூறினான், “ஸாரி கட்டி, நெத்தியில புள்ளி வைச்சிருக்காங்களே, தெரியல? கெலிங் (KELING) தான்!” என்று.

    வகுப்பில் ஒரு கணம் மௌனம்.

    `கலிங்கத்திலிருந்து வந்தவர்கள்` என்று பொருள்பட, தமிழர்களை, கெலிங் என்று குறிப்பிடுவார்களாம். முன்பு எப்போதோ. அது இப்போது கெட்ட வார்த்தையாக, ஒரு இனத்தையே கேவலப்படுத்தும் சொல்லாக மறுவிவிட்டது — `ஆப்பிரிக்க அமெரிக்கர்` என்பதுதான் சரி, `நீக்ரோ` என்ற பதம் அவமாரியாதையாகக் குறிப்பது என்பதுபோல்.

    அண்மையில், புதிய அகராதி ஒன்றில் `கெலிங்` என்ற அந்த கெட்ட வார்த்தை இடம் பெற்றபோது, மலேசியாவிலிருந்த எல்லா இந்திய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாகக் கண்டனம் தெரிவித்து, அதை அகற்றச் செய்திருந்தனரே! அதெல்லாம் இந்த மாணவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

    அவள் சிறு வயதில் இருந்ததைப்போன்று, வறுமைக் கோட்டின் கீழ் இருந்தார்கள் அவர்கள். பதினான்கு வயதிலும், எந்த ஒரு எழுத்தையும் படிக்கத் தெரியாது, தம் பெயரைக்கூட எழுதத் தெரியாதிருந்த சிலரும் அவ்வகுப்பில் உண்டு என்பது அவளுக்குத் தெரிந்ததுதான். பெரும்பான்மைச் சமூகத்தினர் ஆனாலும், பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து போனவர்கள். சமூகத்தில் தமக்குக் கிடைக்காத மதிப்பை நிலைநாட்டிக்கொள்ள வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை, பாவம்!

    இப்படியெல்லாம் அறிவு விவாதித்தாலும், தமிழரசிக்கு ஆத்திரமும், வருத்தமும் ஒருங்கே எழுந்தன.
    “டீச்சர் இண்டியா!” என்று அவள் போதிக்கும் மலாய் மொழியில் பதிலளித்தாள். குரலில் ஆக்ரோஷம்.

    மனம் சற்று கிலேசப்படும்போது, வேறு வேண்டாத நினைவுகளும் வந்து, இன்னும் குழப்பும்.

    சமீபத்தில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி — எதிராளியின் தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதுபோல் — அமைந்ததே, அது எப்போது என்று அவள் யோசித்தாள்.

    ஓ! நேற்று மாலை கோலாலம்பூருக்கு அருகில், கெப்போங்கில் சீ ஹாக்குடன் தேநீர் அருந்தியபோது!

    சீ ஹாக் மலாயா பல்கலைக் கழகத்தில்அவளுடன் படித்தவன். அவர்களுடைய தொடர்பை நிரந்தரமாக்கிக் கொள்ளும் உத்தேசத்துடன் இன்னமும் அவளையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான்.

    அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் முறைப்படி லைசன்சுடன் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுக்கடை அது. ஓரடிகூட இடைவெளி இல்லாது, சிவப்பு நிறத்தில் மலிவான பிளாஸ்டிக் நாற்காலிகளும், விரிப்பற்ற மூளி மேசைகளும் (மேடு பள்ளமாக இருந்த சிமெண்டுத் தரையில் ஆடாமல் இருக்க அவற்றில் சிலவற்றின் கால்களுக்குக்கீழ் மடித்து வைக்கப்பட்ட, பழுப்பாக நிறம் மாறிவிட்ட பழைய சீன தினசரிகள்) நிறைந்த ஹாக்கர் ஸ்டால் (HAWKER STALL) அது. பூதாகாரமான மின்விசிறிகளைத் தரையில் வைத்திருந்தும், ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் வெப்பத்தைக் குறைக்க முடியவில்லை.

    வாழ்க்கையை வளப்பமாக ஆக்கிக்கொள்ள இவ்வளவு தூரம் சிரமப்பட்டுவிட்டு, இப்போது ஏன் பின்னோக்கிப் போவதுபோல் இந்த மாதிரி கடைக்குள் நுழைய வேண்டும் என்று அவள் தயங்க, “ஒரு தடவை வந்து சாப்பிட்டுப் பாரு! பெரிய ரெஸ்டாரண்டுகளில செய்யறதுபோல, அஜினோமோடோவை எல்லாத்திலும் போடறதில்ல இங்க. சைனாவில பண்ணறமாதிரியே விதவிதமா சாமான்களை இவங்களே அரைச்சுக்கிறாங்க. விலையும் கொள்ளை மலிவு!” என்று பலமாக சிபாரிசு செய்து, அவளை அங்கு அழைத்து வந்திருந்தான் கல்லூரி நண்பன். “முந்தி எங்க பாட்டி இருந்தப்போ, இப்படித்தான் சமைப்பாங்க!” என்று சேர்த்துக்கொண்டான், பழைய நினைவுகள் கிளப்பிவிட்ட ஏக்கத்துடன்.

    தமிழரசி, `தே ஸீ` என்று, பால் கலந்த டீயைக் கேட்டு, ஏற்கெனவே ஊற்றப்பட்ட சீனிப்பாலுடன், ஓரிரு ஸ்பூன் சீனியும் கேட்டு வாங்கி, அப்படிக் கலந்த டீயை விரும்பிப் பருகினாள்.

    சூப்புடன் கலந்து, வெடுக்கென்றிருந்த `வான் தான் மீ`யை சாப் ஸ்டிக் பாவித்துச் சாப்பிட்டான் சீஹாக். ஒரு பெரிய கிளாஸில் வந்த `சைனீஸ் டீ`யை இடையிடையே குடித்தவனைப் பார்த்து, `இந்தக் கசப்பை எப்படித்தான் குடிக்கிறீங்களோ!` என்று தமிழரசி ஆச்சரியப்பட்டாள். `எனக்கு எல்லாமே இனிப்பா இருக்கணும்!` என்று அதே மூச்சில் தெரிவிக்கவும் செய்தாள்.

    அவன் முகம் இறுகியது. “இண்டியன்!” என்று குற்றம் சாட்டுபவனைப்போல் கூறினான்.

    அவளுடன் பூப்பந்து விளையாடும்போது, எதிராளியைத் தோற்கடிப்பதே குறியாக, `ஸ்மாஷ்` செய்வதைப்போன்று கடுமையாக வந்தது அச்சொல்.

    தமிழரசி அயர்ந்து போனாள். பேச்சுவாக்கில் தான் ஏதோ சொன்னதற்கு இப்படி ஒரு எதிர்ப்பா!
    தன்னை ஏன் எல்லாரும் வித்தியாசமகவே பார்க்கிறார்கள்?

    கனத்த இதயத்துடன் பள்ளியிலிருந்து திரும்பியவளிடம் இருந்த மாறுதல் அன்புத் தாயின் கண்களுக்குத் தப்பவில்லை.”இன்னிக்கு வேலை அதிகமா, பாப்பா? முகமெல்லாம் வாடி இருக்குதே!”

    அவளிடம் சொல்வதா, வேண்டாமா என்று ஒரு வினாடி யோசித்த தமிழரசி, “ஸ்கூல்ல ஒரு பையன் என்னை கெலிங்னு சொன்னாம்மா,” என்று குழந்தைபோல் தெரிவித்தாள். குரல் கம்மியது.

    தான் பட்ட அவமானத்திற்காக தாயும் ஆத்திரப்படுவாள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவளுக்குத் தோல்விதான்.

    “எம்மக பின்னே யாரு?” பொன்னம்மா சிரித்தாள், கடகடவென்று. “ஒனக்குச் சின்னப் பிள்ளையிலிருந்தே கண்ணுக்கு மை பூசி, நெத்தியிலே பெரிய கறுப்புப் பொட்டிட்டு, கடலையெண்ணை வெச்சு தலைமுடியைச் சீவி, பின்னல்ல பூ வெச்சு, கைக்கு காப்பு மாட்டி — எவ்வளவெல்லாம் செஞ்சிருக்கேன்!” பெருமையுடன் நினைவுகூர்ந்தாள். கண்கள் கிறங்கின. அருமை மகளின் கன்னத்தைத் தடவி, நெற்றியின் இருபுறங்களிலும் காய்த்துப்போன விரல்களை வைத்து நெறித்தாள். “நம்பளைத் தவிர வேற யாரு இப்படி எல்லாம் அலங்காரம் செஞ்சுக்கிறாங்க இங்க? ஒன்னைப் பாக்கிறவங்க யாரும் — ஒன்னைப் பெத்த சீனச்சியே வந்தாக்கூட — தமிழவங்க வீட்டுப் பிள்ளைதான்னு சொல்வாங்க!” என்றவள், “போய், தண்ணி குடி, போ! சுடுதண்ணி போத்தல்ல விட்டு வெச்சிருக்கேன்!” என்று அந்தப் பேச்சை முடித்தாள். தினமும் செய்வதுதான். இருந்தாலும், வேண்டாத பேச்சை முடிக்க அது ஒரு நல்ல உபாயமாக இருந்தது.

    கெட்டியாக, இனிப்பாக இருந்தது அம்மா கலக்கி வைத்திருந்த பானம். பெயர் மட்டும் கோப்பித்தண்ணி.
    தமிழரசியின் உதடுகள் புன்னகையில் லேசாக விரிந்தன.
    `பெயரில் என்ன இருக்கிறது!` என்று அவள் நினைப்பு ஓடிற்று.
    நம்மைப் படைத்து, ஆட்டுவிக்கும் தெய்வம் என்னவோ ஒன்றுதான். ஆனால், இடத்துக்கு இடம் அதன் பெயரும், வணங்கும் முறைகளும் வேறுபடுகின்றன.

    எங்காவது இரண்டு மனிதர்கள் ஒன்றுபோல் இருக்கிறார்களா! இருந்தாலும், தம்மைப்போல் அல்லாதவர்களை `மட்டம்` என்று பழித்துக் கேலி செய்வதில் ஒரு ஆனந்தம் பலருக்கு. பிறர் தாழ்ந்தால்தான் தாம் மேலே இருப்பதுபோல் பாவனை காட்ட முடியும் என்று நினைக்கும் அல்பங்கள்!

    ஒற்றுமையை ஆதாரமாகக் கொண்டு, உறவை வலுப்படுத்துவதை விட்டு விட்டு, சிறு சிறு மாறுபாடுகளை எதற்காகப் பெரிது பண்ணுகிறார்கள்?

    `இண்டியன்!` என்று அவளைப் பழிப்பதுபோலக் கூறிய சீ ஹாக்கையும், இனப் பெயரைக் கொச்சைப்படுத்திய மாணவனையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். பரிதாபம்தான் எழுந்தது.

    கல்லூரி நண்பன் மறுநாள் காலை ஆறு மணிக்கே அழைத்தான், தொலைபேசிவழி.”ஹை, டமில்! ஒங்கம்மாகிட்ட சொல்லிட்டியா? நம்ப கல்யாணத்தைப்பத்தி என்ன சொன்னாங்க?” ஆவலுடன் விசாரித்தான்.
    “அது நடக்காது, சீ ஹாக்!” என்றாள் தமிழரசி, உறுதியான குரலில்.

    (மலேசியாவில் தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கப் போட்டியில் பரிசு பெற்றது, சிறுகதைகள்.காம்)

    Share
  • ஒரு விதி — இரு பெண்கள்

     

    நிர்மலா ராகவன்

    “என் கணவர் என்னை நல்லா பாத்துக்கிறார். இவர் எனக்கு மூணாவது!” எண்ணையைத் தடவி, என் உடலைப் பிடித்துவிடும்போது, தன்போக்கில் பேசினாள் அய்னுல்.

    அவள் சொன்னவிதம் எப்படி சாதாரணமாக இருந்ததோ, அதேபோல் நானும் அதை ஏற்றுக்கொண்டேன். அதிர்ச்சியோ, அருவருப்போ ஏற்படவில்லை.

    “மத்த ரெண்டு பேர்?” என்று கேட்டேன். இரண்டு மணி நேரம் போகவேண்டுமே! அத்துடன், மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருந்த எனக்கு ஒரு புதிய உலகத்தைப் பார்ப்பது போலிருந்தது.

    “நம்பர் ஒன் இறந்து போயிட்டார். ரெண்டாவது ப்ளே பாய்! அப்படின்னா ஒங்களுக்குத் தெரியுமா?”

    `இப்படியும் ஒரு அப்பாவியா!’ என்று வியந்துகொண்டு, “உம்” என்றேன்.

    “அவர் ரொம்ப அழகா இருப்பார். மாடல்!”

    “மாடல்மாதிரியா?”

    “மாடலேதான். அழகான பொண்ணுங்க பணக்காரியாவும் இருந்துட்டா, விடமாட்டார். அவங்களை மயக்கிடுவார். அவங்க நிறைய காசு குடுப்பாங்க! அவர் வேற வேலை எதுவும் செய்யல”.

    எனக்குச் சில தமிழ் நடிகர்கள் ஞாபகம் வந்தது.

    _DSC9556“எங்கிட்ட அந்தக் காசைக் குடுப்பார். ஆனா, எனக்கு வாங்கப் பிடிக்கலே. என் கையிலே தொழில் இருக்கு. கெட்ட வழியில வர்ற காசு எதுக்கு! அவரை விவாகரத்து பண்ணலாம்னு பாத்தேன். ஆனா அவர் விடலே”. பேசிக்கொண்டே போனாள். நானும் சுவாரசியமாகக் கேட்டேன்.

    “கல் ரொம்ப சூடா இருந்தா சொல்லுங்க, மாம்!” என்றபடி, கொதிக்கும் நீரில் அமிழ்ந்துகிடந்த எரிமலைக் கற்களை என் கால்களில் மேலிருந்து கீழே தேய்த்தாள். இதமாக இருந்தது.

    கைகள் அவள் போக்கில் பழகிய வேலை செய்ய, தன் கதையைத் தொடர்ந்தாள். “என் ஃப்ரெண்ட் ஒருத்தி, என்னை ஒரு போமோகிட்ட (BOMOH, MALAY VILLAGE MEDICINE MAN) கூட்டிட்டுப் போனா — `ஒன் புருஷனோட நடத்தையை இவரால மாத்த முடியும்’னு! இப்ப அந்த `இந்தோன்’தான் என்னோட மூணாவது புருஷன்!”

    எனக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன்.

    “அவரோ, `நீ கட்டியிருக்கிற ஆளு BLACK MAGIC பயன்படுத்தறான். அவனை மாத்த முடியாது. ஆனா, ஒன்னை மாத்த முடியும்,’னு சொன்னார். அந்த ப்ளே பாய் ஒருவழியா எனக்கு விவாகரத்து குடுத்தார்!”

    “எத்தனை வருஷமாச்சு நீ இந்த..?”

    நான் கேள்வியை முடிப்பதற்குள், “ரெண்டு வருஷம். அவர்தான் முதலில் கேட்டார். நான் ரொம்ப யோசிச்சேன். என் மூத்த மகன் ஹலீம்தான், `இந்தோனீசியரா இருந்தா என்ன? அவரும் மனுசன்தானே!’ன்னு புத்தி சொன்னான். அவனுக்கும் கல்யாணமாகி, ரெண்டு பிள்ளைங்க ஆகிடுச்சு. நாளைக்கே, நாலு பிள்ளைங்களும் தனித் தனியா போயிட்டா, என்னை யாரு பாத்துப்பாங்க? அதான், `சரி’ன்னுட்டேன்”.

    பேச்சு சுவாரசியத்தில் ரொம்ப சூடாக இருந்த கல்லை அய்னுல் என் வயிற்றுப் பகுதியில் வைக்க, “ஆ!” என்று அலறினேன். உணர்ச்சியற்ற குரலில் மன்னிப்பு கேட்டபடி (வழக்கமாகச் செய்வதுதானோ?) தொடர்ந்தாள். “இவர் என்னை நல்லா பாத்துக்கிறார், மாம். சம்பாதிக்கிறதை அப்படியே எங்கிட்ட குடுத்துடறார்! பக்கவாதம் வந்தவங்களுக்கு, அவங்க வீட்டுக்கே போய் சிகிச்சை குடுக்கறார்!” என்றவள், எதையோ பகிர்ந்து கொள்ளலாமா என்று சற்று யோசித்துவிட்டுத் தொடர்ந்தாள்.

    “எங்க மாநில சுல்தானோட அம்மாவுக்கு இவர்தான் மஸாஜ் செய்வார். அவங்க ஸ்ட்ரோக் வந்து, படுத்தபடுக்கையா கிடந்தவங்க. இப்ப நல்லா நடக்கிறாங்க!” என்று பெருமையுடன் தெரிவித்தாள்.

    அவளுடைய பூரிப்பைப் பகிர்ந்துகொண்ட விதத்தில், ஏதேனும் சொல்ல வேண்டும்போல இருந்தது எனக்கு. “நீ இன்னும் அழகா இருக்கியே! அதான் ஒனக்காக போட்டி போட்டுக்கிட்டு வர்றாங்க!” என்றேன். அவளுக்கு ஐம்பது வயதுக்குமேல் என்று தெரியும்.

    “நெசமாவா?” என்றாள். குரலில் அப்படி ஒன்றும் மகிழ்ச்சி இல்லை. பல பேர் புகழ்ந்திருப்பார்கள். அதனால், அதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நினைத்தேன். ஒருவேளை, முக அழகு இயற்கையில் அமைந்ததுதானே, இதில் தான் பெருமைப்பட என்ன இருக்கிறது என்ற் நினைத்திருக்கலாம்.

    மஸாஜ் முடிந்ததும், வாய்வு விலக, துருவிய இஞ்சியை பழுப்புச் சீனியுடன் கொதிநீரில் போட்ட டீ கொடுப்பார்கள். ஊதிக் குடித்தபடி, ஆற அமர உட்கார்ந்து யோசித்தேன்.

    கும்பகோணத்தில் நடந்த அக்கல்யாணத்திற்கு நான் போய் மூன்று வருடங்கள் ஆகியிருக்குமா? கல்யாண சத்திரத்தில், மாப்பிள்ளையின் பெரியம்மா, விசாலி, ஏதோ சாமானை ஒழுங்காக அடுக்கப்போக, மணமகளின் தகப்பனார், “நீங்க தொடாதீங்கோ!” என்று அலறியதை எப்படி மறக்க முடியும்! ஐம்பது பிராயத்தைத் தாண்டியிருந்த விசாலி, தன் கையிலிருந்ததை மெதுவாகக் கீழே போட்டுவிட்டு, உள்ளே போனாள். அவள் முகத்தில் காணப்படாத அதிர்ச்சி அப்போது என் முகத்தில் அப்பி இருந்திருக்கும்.

    முப்பது வயதுக்குள் கணவனை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டவள், பாவம்! எந்தப் புடவை அணிந்தாலும், ரவிக்கை என்னவோ வெள்ளைதான். நெற்றியில் எப்போதும் விபூதி. பிற ஆண்களுடன் இன்னொரு பெண் சிரித்துப் பேசினாலே, இரண்டு சாராருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்பதுபோல் இவள் ஏன் வம்பு பேசுகிறாள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடல் உறவைத் தவிர, வேறு எந்தவிதமான தொடர்பும் இருக்க முடியாது என்று ஆணித்தரமாக விசாலியை நம்பவைத்தது சமூகத்தின் கட்டுப்பாடுகளா? அதனால் உடைந்த உள்ளத்தின் எதிரொலியா?

    பல தலைமுறைகளாகப் பெண்கள் கடைப்பிடித்து வந்தததை எதிர்க்கத் துணிவின்றி, அடங்கிப்போவதுபோல் காட்டிக்கொண்டாலும், உணர்ச்சிகள் அடங்கிவிடுமா, என்ன! இம்மாதிரியான பேச்சுதான் இவளுக்கு வடிகாலோ? பிற சமுதாயங்களில் பெண்கள் எந்த வயதிலும் துணை தேடிக்கொண்டு, எப்படி நிறைவோடு இருக்கிறார்கள் என்பதை அவளுக்குப் புரியவைக்க வேண்டும்.

    அடுத்த முறை அய்னுல்லின் கதையை விசாலியிடம் சொல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். அதை எப்படி ஏற்பாள்? தன் பாடு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று நொந்துகொள்வாளோ?

    ஊகும்!

    `கஷ்டகாலம்! சில பேருக்கு கல்யாணம்னா கத்திரிக்காய் வியாபாரம்!’ என்று தலையில் அடித்துக்கொள்வாள் என்றுதான் தோன்றியது.

     

     

    படம் உதவி: http://www.coppolaresorts.com/blancaneaux/amenities/waterfall-spa

    http://ffcp.s3.amazonaws.com/coppolaresorts/blancaneaux/313_amenities/5_waterfall_spa/_DSC9556.jpg

    Share