உன்னையறிந்தால் …..! புதிய தொடர்
அன்பு நண்பர்களே,
வணக்கம். இன்றிலிருந்து (ஏப்ரல் 20, 2015) பிரதி ஒவ்வொரு திங்களன்றும், ‘உன்னையறிந்தால்…..’ என்ற வாழ்வியல் தொடர் கட்டுரையை நம் நிர்மலா ராகவன் வழங்கப் போகிறார்கள். தன்னையறியும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தரணியில் போற்றப்படும் என்பது நாம் அன்றாடம் காணும் உண்மை. பல மகான்களும் அதற்கு நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். அறிவியலும், ஊடகங்களும் அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ள இக்கால கட்டங்களில், குழந்தை வளர்ப்பு பெரும் சவாலாக உள்ளது. அவர்களின் அறிவு வளர்ச்சியும் அபரிமிதமாகவே உள்ளது. ஆக, இன்றைய குழந்தைகளை அதன் இயல்பு நிலை மாறாமல், அதே சமயம் தீய வழிகளை நாடாமல், ஒழுக்கம் கெடாமல் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு, அல்லதை பாரபட்சம் இல்லாமல் தள்ளும் நிலையை பழக்க வேண்டுமானால் பெற்றோரும் சற்று தெளிவடைய வேண்டியுள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் திருமதி நிர்மலா ராகவன் எழுதும் இத்தொடர் அதற்கான ஒரு முயற்சியாக இருக்கும் என்று நம்புவோம்.
நிர்மலா ராகவன் மதராஸில் பிறந்து, பெங்களூரில் படித்துப் பட்டம் பெற்று, திருமணமானபின் மலேசியா வந்தவர். 1966-லிருந்து கோலாலம்பூரில் வசித்து வருகிறார். மூத்த பௌதிக ஆசிரியையாக மலேசிய அரசாங்கப் பள்ளிகளில் பணிபுரிந்தவர். (அதனால், மலாய், சீன இனத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு). நேரடி சமூகச்சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ், ஆங்கில இருமொழி எழுத்தாளர். ஆங்கிலத்தில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள் சுவீடன் மற்றும் மலேசியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆங்கிலத்தில், கல்வி, சமூக இயல், மனோதத்துவம், இந்திய பாரம்பரியக் கலை விமரிசனம், மருத்துவம் முதலான பொருட்களில் தினசரிகளில் 13 வெவ்வேறு பகுதிகளில் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் ஒலிபரப்பாகி உள்ளன.
தமிழில் சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, வானொலி நாடகம், கலை விமரிசனம் ஆகியவைகளை 1967-லிருந்து எழுதிவருகிறார். பல சிறுகதை, நாடகம், நாவல் போட்டிகளில் பரிசுகளை வென்றிருக்கிறார்.
“சிறுகதைச் செம்மல்” விருது (1991); 1993-ன் சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது (சூரியன் மாதப் பத்திரிகை வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது); சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006)
சிறுகதை, நாடகத்திற்கான பட்டறை நடத்தியுள்ளார். நீதிபதியாகவும் இருந்திருக்கிறார்.
பல மேடைகளிலும், கருத்தரங்குகளிலும் பேசியுள்ளார். அண்மையில் சாகித்ய அகாடமி, இந்திய தூதரகம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலியவை இணைந்து, கோலாலம்பூரில் நடத்திய இலக்கியக் கருத்தரங்கில், `என் படைப்புலகம்’ என்ற பொருளில் உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தார்.
இவரது “ஏணி” என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாட்டுக் கல்லூரி ஒன்றில், இளநிலை பட்டப் படிப்புக்கு பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.
தனது இரு கதைகளை ஆங்கிலத்தில் இவர் மொழிபெயர்க்க, அவை அகில உலக இசுலாமிய பல்கலைக்கழக சஞ்சிகையில் வெளியாகி உள்ளன.
கர்னாடக இசை, பரதநாட்டியம் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றவர். பரதநாட்டியத்திற்கு ஏற்புடையதாக தொண்ணூறுக்கு மேற்பட்ட தமிழ்ப் பாடல்களை எழுதி, கர்னாடக இசை முறைப்படி மெட்டமைத்து, சிலவற்றைப் பாடிப் பதிவு செய்திருக்கிறார்.
தான் கற்றவை இப்பகுதிவழி பிறருக்கும் பயன்படப்போவது நிறைவளிக்கிறது என்கிறார்.
அன்புடன்
பவள சங்கரி
உன்னையறிந்தால் … (1)
தந்தை மகனுக்காற்றும் கடமை
அப்பா கேட்கிறார்: நான் அலுவலகம் போய் அலைந்துவிட்டு, வீடு திரும்பும்போது உடல் ஓய்ந்துவிடுகிறது. இந்த லட்சணத்தில், நான் குழந்தைகளை வளர்ப்பதில் அக்கறை காட்டவில்லை, எல்லா வேலையையும் அவளிடமே விட்டுவிடுகிறேன் என்று என் மனைவி குறைப்படுவது நியாயமா?
பதில்:
`குழந்தை வளர்ப்பு’ என்பது எதிர்காலத்தில் குழந்தை வெளி உலகத்தை அதிக பயமில்லாமல் எதிர்கொண்டு, எந்த வயதிலும் எல்லா விஷயங்களலும் நம்பிக்கையுடன் செயல்பட வழிவகுப்பதாகும். வெளி உலகை ஓரளவு புரிந்து வைத்திருக்கும் தந்தையின் பங்கு இந்த ரீதியில் இன்றியமையாதது.
ஆரம்பத்தில் தன் வாரிசுக்கு குரோமோசோம் வழி உயிரையும், அதனுடன் ஆண், பெண் பாகுபாட்டையும் அளித்து, பின்னர் அதற்குத் தேவையான உணவு, உடை, கல்வி முதலியவைகளுக்கான செலவுகளையும் ஏற்பது மட்டுமே ஒரு தந்தையின் கடமை ஆகிவிடாது.
சமூக இயல் நிபுணரான ஆர்லீ ஹோஷ்சைல்ட் என்பவர் கூறுகிறார்: குழந்தை வளர்ப்பில் மிகுந்த அக்கறை கொண்டு, அதில் ஈடுபாடு கொண்டிருக்கும் தந்தைக்குப் பிறந்த குழந்தைகள் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டு வளர்கிறார்கள். பிறருடன் பழகும்போது மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை.
மாறாக, பொறுப்பற்ற தந்தை வாய்த்தால், மேற்குறிப்பிட்ட நற்பண்புகள் இருப்பதில்லை.
ஆணோ, பெண்ணோ, ஒரு குழந்தை தந்தையுடன் நெருக்கம் கொள்வது அவருடன் சேர்ந்து காரியங்கள் செய்யும்போது. (தாய் தன் குழந்தையுடன் பேசுவதன்மூலம் உறவை வளர்க்கிறாள்). பரம்பரைத் தொழிலில் தந்தையுடன் ஈடுபடும் மகனுக்குப் பெரியவர்கள்மேல் மரியாதை, தன் திறமையில் நம்பிக்கை இரண்டும் எழும்.
மலேசியாவில் ஆங்கில தினசரி ஒன்றில், தந்தையர் தினத்தை ஒட்டி, பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்கள் தந்தையரைப்பற்றி எழுதும்படி கேட்டிருந்தார்கள். சொல்லிவைத்தாற்போல் அனைவரும், `அப்பா ஷாப்பிங் அழைத்துப்போவார். எனக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பபார்,’ என்று மட்டுமே எழுதினார்கள்.
பணங்கொடுக்க மட்டும்தானா அப்பா?
ஆணோ, பெண்ணோ, மூன்றரை வயதுவரை இவர்களுக்குள் அதிக வித்தியாசம் பாராட்டாது, ஒரே மாதிரிதான் நடத்த வேண்டும். ஆண்குழந்தை அழுவது இயல்பானதே. வேறு எப்படி தன் மனம் நொந்திருப்பதையோ, தேவைகள் பூர்த்தியாகாமல் இருப்பதையோ வெளிக்காட்டிக்கொள்ள முடியும்?
சிறு வயதிலேயே, அளவுக்கு மீறிய சுய கட்டுப்பாடுடன் ஓர் ஆண் குழந்தை இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நேர் எதிரான குணத்துக்கு அடிகோலுகிறது. பிறர் அவன் நினைப்பதுபோல் நடக்காவிட்டால், அளவுக்கு மீறிய கோபமும், ஆத்திரமும் கொண்டு வளர்கிறான்.
யாருக்கும் அடங்காமல், படிப்பிலும் நாட்டமில்லாமல் இருந்த என் பதினான்கு வயது (மலாய்) மாணவனிடம், அவனுடைய மனக்குறை என்னவென்று கேட்டேன். (ஒரு மணி நேர வகுப்பில் ஐந்து நிமிடங்களை இப்படிச் செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மகிழ்ச்சியுடன் என்னிடம் பகிர்ந்துகொள்வார்கள்).
`வாரத்தில் ஆறு நாள் நான் ஒரு மகன் இருப்பதே எங்கப்பாவுக்குத் தெரியாது. ஞாயிறு மட்டும், பிரம்புடன் என்னைத் துரத்துவார். நான் வீடு பூராவும் ஓடிவிட்டு, இறுதியில் கழிப்பறையில் தஞ்சம் புகுவேன். அரை மணி கழித்து, நான் வெளியே வரும்போது, அவர் மறந்திருப்பார்!’ என்று சிரித்தான்.
ஒழுக்கம் என்பது ஓயாத வசவுகளாலும், அடி, உதையாலும் வராது. சாதுவான மாணவனை ஆசிரியர் அடித்தால், பயத்தில் அவனுக்கு படித்ததும் மறந்துபோகாதா!
அடிக்கடி, பிள்ளைகளிடம் பள்ளிக்கூடத்தில் நடந்ததைப்பற்றி, அவர்கள் நண்பர்களைப்பற்றி கலந்து பேச வேண்டும்.
பெற்றோர் கல்விமான்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. அக்கறையே போதும். படிப்பறிவு அறவை அற்ற சில பெற்றோர், பிள்ளைகளின் மதிப்பெண்களுக்குக்கீழ் சிவப்புக்கோடு இருந்தால், அது உகந்ததல்ல என்றவரை புரிந்துகொண்டு, அவர்களுடன் கலந்து பேசி, சிறக்கச் செய்கிறார்கள் இங்கு.
சிறு வயதிலிருந்தே இப்படிச் செய்தால், `அப்பா நம்மைச் சந்தேகிக்கிறார்,’ என்ற கலக்கம் அவர்களுக்கு வராது. தாமே வந்து, தம்மைப் பாதித்ததை (உதாரணமாக, ஏழு வயதுப் பையனை, `உனக்கு girl friends இருக்கிறார்கள்’ என்று நண்பர்கள் கேலி செய்தல்) எல்லாம் அழுகைக் குரலில் பகிர்ந்துகொண்டு, ஆலோசனையும் கேட்பார்கள்.
பிள்ளைகளுக்கு நிறைய வசதி அளிக்க வேண்டும் என்று சில தந்தையர் ஒன்றுக்கும் மேற்பட்ட உத்தியோகம் பார்ப்பார்கள். ஆனால், அப்பா தம்மேல் அக்கறை இல்லாமல்தான் வீட்டுக்கே வருவதில்லை என்ற முடிவுக்குப் பிள்ளைகள் வருவதை இவர்கள் அறியமாட்டார்கள்..
`நல்லவனாக இருந்தால் யாரும் கவனிப்பதில்லை. நான் தப்பு செய்தாலாவது, என்னைத் திட்டுகிறார்களே!’ என்று ஒரு மாணவன் ஒத்துக்கொண்டபோது அதிர்ந்துபோனேன்.
தம்மைப்போலவே மனம் புழுங்கி, எப்படி நிலைமையை மாற்றுவது என்று புரியாதவர்களின் நட்பு இத்தகையவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. ஒரு கும்பலில் செயல்படும்போது கிடைக்கும் தைரியத்தில், வன்முறையைக் கையாண்டு, சமூகக் கோட்பாடுகளைத் தகர்த்த முயலுகிறார்கள் பலர். இந்த அவலத்தைத் தவிர்ப்பது தந்தையின் கையில்தான் இருக்கிறது.
முரட்டுத்தனம் மட்டும் ஆணின் தன்மை அல்ல. பரிவும், மென்மையும்கூடத்தான்.
தொடருவோம்